நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

in 2011 பிப்ரவரி,பகுத்தறிவாளர்களே!

  அபூ அப்தில்லாஹ்

2010 அக்டோர் தொடர் : 13
உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே, “”உண்மை” என்று வாயளவில் சொல்வதாலோ, ஏட்டளவில் எழுதுவதாலோ “”உண்மை” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் வெளியிடுவதாலோ அது ஒருபோதும் உண்மையாகிவிடாது.

உண்மையை-சத்தியத்தை-நேர்வழியை உள்ளது உள்ளபடி மிகமிகச் சரியாக விளங்கி அறிந்து அதன்படி நடப்பதோடு அதையே மக்களுக்குப் போதிப்பவர்கள் மட்டுமே உண்மையாளர்களாக இருப்பதோடு, இறுதி வெற்றியாளர்களாகவும் இருக்கிறார்கள். இறுதி வெற்றி அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என நல் வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன்.

இதோ உண்மை இதழின் வாதம்!
கீறல் விழுந்த கிராம்போன் இசைத்தட்டு:
காலம் காலமாக, சொல்லப்பட்டு வரும் இன்னொரு வாதத்தையும் கட்டுரையாளர்கள் முன் வைக்கிறார்.
“”மனிதனின் அய்ம்புலன்களுக்குள் கட்டுப்படும் ஒன்று கடவுளாக ஒருபோதும் இருக்க முடியாது!
அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவனாக பகுத்தறிவுக்கும் அப்பாற்ப்பட்டவனாக மட்டுமே, மனிதனையும் மற்ற அனைத்தையும் படைத்த ஒரே இறைவனாக இருக்க முடியும்!”

கீறல் விழுந்த கிராம்போன் பதிவு இசைத் தட்டில் ஒலிப்பது போல, “அய்ம்புலன்களுக்கு எட்டாதவன்; மனதிற்குக் கிட்டாதவன்; அறிவிற்கு அப்பாற்பட்டவன்’ என்றெல்லாம் காலம் காலமாக, கடவுள் நம்பிக்கையாளர்கள் கரைந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனையேதான் “அந்நஜாத்’ கட்டுரையாளர் அறிவாளி இப்பொழுது வழிமொழிந்து ஒத்திசை பாடுகிறார். இதற்கு, பகுத்தறிவாளர்களும் காலம் காலமாகப் பதில் சொல்லி வருகிறார்கள்.

அவர்களுள் பகுத்தறிவின் சிகரம் பெரியார் அவர்களின் விளக்கம் தரும் வினாக்களை இங்கே எடுத்துரைத்தாலே போதும்! என்று கருதுகிறோம்.

என் கேள்விக்கென்ன பதில்?
“”கடவுள் எப்படிப்பட்ட மனதிற்கும் எட்டாதது; எப்படிப்பட்ட அறிவுக்கும் அறியக்கூடாதது;
ஆதலால், உனக்குப் புரியவும் புரியாது! உன் மனதிற்கு எட்டவும் எட்டாது!
அதனை நீ அறியவும் முடியாது; புத்திக்கும் எட்டாதவன்; இந்திரியங்(அய்ம் பொறி)களுக்கும் எட்டாதவன்’ என்று சொல்லப்படுகிறது என்றால், இப்படிப் புரியாதவர்; எட்டாதவர்; அறியப்படாதவர் உனக்கு மாத்திரம் எப்படி புரிய, எட்ட, அறிய, தெரிய முடிந்தது?
இந்த வினாவிற்கு கட்டுரையாளர் என்ன விடை விளம்பப் போகிறார்?
எதிர்பார்க்கிறோம்!

மண்டையில் உறைக்க மறுக்கிறதே!
அய்ம்புலனுக்கும் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவுக்கும் எட்டாதவன் கடவுள் என்கிறாரே இவர்?
அப்படி எட்டாத ஓர் இறைவன் இருக்கின்றான் என்று இவர் எந்தப் புலன் கொண்டு தெரிந்து கொண்டார்?
அல்லது உணர்ந்து கொண்டார்?

இல்லாத 7ஆவது 8ஆவது அல்லது வேறு எத்தனையாவது அறிவைக் கொண்டு அறிந்து கொண்டார்?
பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத எட்டாத ஒரு விஷயம் பொருள், நடப்பு எதுவாயினும் அது முழுமையான பொய் என்றுதானே பகுத்தறிவாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள். அது ஏன் இவரனைவரின் மண்டையில் உறைக்க மறுக்கிறது?
விளக்கத்தை மட்டும்தான் நாம் கூற முடியும்!

அதனைப் புரிந்து கொள்ளக்கூடிய விவேகத்தை நுண்ணறிவை நாம் கொடுக்க முடியுமா?
முடியாதே!

படைப்பல்ல; பரிணாமம்
அடுத்து, பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு கருத்தினை இவர் எழுதுகிறார் இப்படி;
“”அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன் மட்டுமே மனிதனையும் மற்ற அனைத்தையும் படைத்த ஒரே இறைவன் ஆக இருக்க முடியுமா?”

மனிதனும் மற்றைய பொருளனைத்தும் ஓர் “இறைவன்’ எனப்படும் கடவுளால் படைக்கப்பட்டவை என்கிறார் கட்டுரையாளர்.
உலகின் பொருள் அனைத்தும் அணுக்களாலானவை; அணுவும் நுண்மையான ஆற்றலானது.
ஆக, பொருள் சக்தி இரண்டின் (Matter-Energy) உருமலர்ச்சியே அனைத்துப் பொருள்களும்.
இவை இயல்பாகத் தோன்றியவை; எவருடைய படைப்பும் அல்ல; பரிணாம முறையில் உருமலர்ச்சி பெற்றவை (No creation, but evolution).
ஆற்றலின் அழிவின்மைக் கோட்பாட்டின் (Laws of conservation of Energy)  அடிப்படையில் என்றும் இருப்பவை; என்றும் அழிவற்றவை  (Eternal and Everlasting), தோற்றமும், முடிவும் அற்றவை  (No beginning and so no ending)

இல்லாத ஒன்றைப் புதிதாகப் படைக்கத்தான் ஒரு படைப்பாளி  (creator) தேவை.
என்றும் இருப்பதனைப் படைக்க ஒருவன் தேவையில்லை.
ஒற்றை உயிரணுவின் உருமலர்ச்சி
இதுபோலவே,மனிதன் என்பவன் உயிரற்ற நுண்பொருளிலிருந்து வளர்ச்சி பெற்ற ஒற்றை உயிரணு  (Mono cell)  சரலிருந்து உருவேர்ச்சி பெற்று காலப் போக்கில் குரங்கு, மனிதக் குரங்கு, மனிதன் எனப்படும் பாலூட்டிக் குடும்பத்திலிருந்து அதாவது பிரைமேட் (primate) குழுவிலிருந்து ஒரு கிளையாகக் கிளைத்து உருமலர்ச்சி (Evolution) பெற்ற இனமே மனித இனம்.
எனவே, மனிதனும் பரிணாம முறையில் உருலேர்ச்சி பெற்றவனே! படைக்கப் பட்டவன் அல்லன்.

எனவே, மனிதனும் மற்றைய அனைத்துப் பொருள்களும் இறைவன் என்பவனால் படைக்கப்பட்டவன் என்ற கட்டுரையாளரின் கருத்து, பகுத்தறிவிற்கும் அறிவியலுக்கும் மாறானது; வேறானது; முரணானது.
மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியையே பாடிக் கொண்டிருப்பதை இவரனையார் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
கேளுங்கள் கொடுக்கப்படும்!
அடுத்து, கட்டுரையாளர் பின்வருமாறு எழுதுகிறார்;
“”தங்களைப் பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி எடுத்துப் பக்குவப் படுத்தப்பட்டவர்கள் எனப் பெருமைப்படப் பேசிக் கொள்ளும் பகுத்தறிவாளர்களிடம் சில வினாக்களைத் தொடுக்கிறோம்.”

தந்தை பெரியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்று, தெளிவு பெற்று, முதிர்ச்சி எனப்படும் பக்குவப்படுத்தப் பெற்ற பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதில் பறைசாற்றிக் கொள்வதில் உலகிற்கு அடையாளம் காட்டிக் கொள்வதில் எம் போன்ற பகுத்தறிவாளர்களுக்குப் பெருமை தான்!
பெருமிதம்தான்!

இதில் என்ன அய்யம்?
இதில் என்ன குற்றம்?

நெஞ்சு நிமிர்த்தி, அஞ்சாமையோடு, வெளிப்படையாக வீறு கொண்டு இன்று மட்டுமல்ல, என்றும் கூறுவோம்!
நீங்களும், உங்கள் போன்றாரும், “”நாங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தாதவர்கள்; ஏன் பகுத்தறிவு அற்றவர்கள்! என்று கூச்சமில்லாமல் சொல்லிக் கொள்ளுங்களேன்! யார் வேண்டாம் என்றது?

சில வினாக்களைத் தொடுக்கப் போகிறோம் என்கிறார். தொடுத்துப் பாருங்களேன்.
அஞ்சாது அயராது முறையான தெளிவான விடைகளையும், விளக்கங்களையும் கொடுப்பவர்கள்தான் பகுத்தறிவாளர்களாகிய நாங்கள்! பதிலளிக்கப் பயந்து விட மாட்டோம்!

வினாக்களைக் கேளுங்கள்! கொடுக்கப்படும் விடைகள்!! உண்மை : மார்ச் 16-31, 2008 பக்.28,29.
அந்நஜாத் மாத இதழின் விளக்கம்:
கீரல் விழுந்த கிராம்போன் இசைத்தட்டின் முழக்கம் யாருடையது?
“”மனிதனின் அய்ம்புலன்களுக்குள் கட்டுப்படும் ஒன்று கடவுளாக ஒருபோதும் இருக்க முடியாது!” அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவனாக, பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டவனாக, மட்டுமே, மனிதனையும் மற்ற அனைத்தையும் படைத்த ஒரே இறைவனாக இருக்க முடியும்” என்று கூறு வது கீரல் விழுந்த இசைத்தட்டின் முழக்கமாம். இது ஐயறிவு நாத்திகர்களின் முழக்கம். அதே சமயம் “”கடவுளை கற்பிப்பவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி; கடவுளை மற, மனிதனை நினை” இவை கீரல் விழுந்த கிராம்போன் இசைத் தட்டின் முழக்கம் இல்லையாம்!

இப்போது இக்கூற்றை நாத்திகர்கள் பெரிதும் மதிக்கும் பகுத்தறிவு கொண்டே ஆராய்வோம்.
“”ஐம்புலன்களைக் கொண்டு அடையும் பகுத்தறிவு கொண்டு கடவுளை அறிய முடியாது; ஆயினும்” நாங்கள் அந்த இறைவனால் அனுப்பப் பட்ட இறைத் தூதர்களாக இருக்கிறோம். நாங்கள் அவனது அடிமைகளாகவும், அவனது தூதர்களாகவும் இருக்கிறோம்.
மனிதர்களே, நீங்கள் உங்களைப் படைத்த அந்த ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனால் படைக்கப்பட்ட படைப்பினங்களையோ குறிப்பாக வானவர்களையோ, ஜின் இனத்தையோ, மனிதர்களில் இறந்து போனவர்களையோ, உயிரோடிருப்பவர்களையோ ஒரு போதும் வணங்கக் கூடாது. அது இறைவன் மன்னிக்காத இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய குற்றம்” என இறை அறிவிப்பைப் (வஹீ) பெற்று அதனையே போதித்த ஆதி இறைத் தூதர் ஆதம் முதல் நோவா, ஏப்ரஹேம், எஸ்மவேல், ஈசாக்கு, யாகூப், யூசுஃப், டேவிட், சோலமன், மூஸா, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மது போன்ற சொன்னதையே செய்து காட்டிய பல்லாயிரம் இறைவனோடு வஹீ என்ற இறைச் செய்தி மூலம் தொடர்புடனிருந்த இறைத்தூதர்களை நம்பி ஐயறிவுக்குள் அடைபடாத இறைவனை ஏற்று நடப்பது உண்மையான பகுத்தறிவா? முறையான உண்மை முழக்கமா? அல்லது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பட்டு வாழ்ந்த ஐயறிவின் மூலம் பெறும் பகுத்தறிவையே மெய்யறிவாக (Metaphsics) ஏற்று கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்ற மூதுரைப் படி, அற்ப அறிவைக் கொண்ட, அந்த பல்லாயிரம் இறைத் தூதர்களின் கால் தூசு பெறுமதியும் பெறாத மனிதர்களின் கூற்றை ஏற்று “”ஐயறிவுக்குள் அடைபடுபவை மட்டுமே உள் பொருள்; ஐம்புலன்களுக்குள் அடைபடாதவை இல் பொருள்” என்று நாத்திகர்கள் முழங்கி வரு வது கீரல் விழுந்த கிராம்போன் இசைத் தட்டின் முழக்கமா?

மேலும் “”கடவுளை கற்பிப்பவன் முட்டாள்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என முழங்கி வருவது கீரல் விழுந்த கிராம்போன் இசைத் தட்டின் முழக்கம் அல்லாமல் வேறு என்னவாம்?

தரணியில் வாழ்ந்த மனிதர்களிலேயே மிக மிகச் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் எனப் போற்றப்படும் ஆதம் முதல் முஹம்மது வரை பல்லாயிரம் இறைத் தூதர்கள், இணை, துணை இல்லாத தன்னந்தனியனான ஓரிறைவனைக் கற்பித்தவர்கள் முட்டாள்களாம்; அவர்களது உண்மையான சொல்லை ஏற்று அந்த ஓரிறைவனை மட்டும் வணங்கி வழிபடுகிறவர்கள் காட்டுமிராண்டிகளாம். இப்படிக் கரையும் நாத்திகர்கள் பகுத்தறிவாளர்களாம்.

அந்த பல்லாயிரம் இறைத் தூதர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த பெரும் செல்வாக்கை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திய மதகுருமார்கள், தங்களின் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு அந்த இறைத் தூதர்களை கடவுள் அவதாரங்களாகவும், இறை மகன்களாகவும், இறைத் தன்மை வாய்ந்தவர்களாகவும் தவறாகப் போதித்து, எண்ணற்ற பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து, மக்களை நம்பவைத்து, அது கொண்டு தங்களின் வயிறுகளை நரக நெருப்பால் நிரப்பி வரும் (அல்குர்ஆன் 2:174) இஸ்லாம் முதல் அனைத்து மதங்களிலுமுள்ள மதப்புரோகிதர்களை அடையாளம் காட்டி, அவர்களின் முகத் திரையே கிழித்தெறிந்து மக்களை இந்த மத குருமார்களின் உடும்புப் பிடியிலிருந்து மீட்டெடுக்க வக்கற்றவர்கள் மட்டுமே அண்ட சராசரங்களையும் அவற்றிலுள்ளவற்றையும் மனித குலத்தையும் படைத்த அந்த ஓரிறை வனை மறுக்க முடியும்.

மனித குலத்திற்கு எவை அத்தியாவசியமாகத் தேவையோ அவற்றை நிறைவு செய்வதாகச் சொல்லியே இடைத்தரகர்கள் புகுந்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பார்கள்; தங்கள் உலக வாழ்க்கையை சொகுசு வாழ்க்கையாக ஆக்கிக் கொள்ள பஞ்சமா பாவங்களையும் துணிந்து செய்வார்கள்; அந்த அத்தியாவசிய தேவைகளில் மிகப் பிரதானமானது கடவுள் நம்பிக்கை. இதை நாத்திகர்களால் பேரறிஞராகப் போற்றப்படும் அண்ணாவும் “”கடவுள் நம்பிக்கைக்கு அடுத்து மனிதனை ஆட்டிப் படைப்பது அரசியல்” என்று கூறியிருப்பது உண்மைப் படுத்துகிறது.

இந்த சாதாரண அறிவும் இல்லாதவர்கள் எப்படித் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என பீற்றிக் கொள்கிறார்கள். இறைத் தொடர்புடன் இருந்த, இயற்கையாக மனிதர்களில் ஏற்படும் தவறு களையும் இறைச் செய்திகள் மூலம் திருத்தப்பட்ட, சொல்லும் செயலும் ஒன்றாகவே திகழ்ந்த மனிதப் புனிதர்கள் “அண்ட சராசரங்களையும், மனித குலத்தையும் படைத்த இணை துணை இல்லாத தன்னந்தனியனான ஓரிறைவன் இருக்கிறான், அவனுக்கு மட்டுமே நீங்கள் முற்றிலும் அடிபணிய வேண்டும்” என்று அறிவுரை கூறியது பொய்; முட்டாள்தனம். அதற்கு மாறாக மிகமிக அற்ப அறிவைக் கொண்ட, தன்னைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள முடியாத தன் மன இச்சைக்கு அடிமைப்பட்டு, சொல்லொன்று, செயலொன்று என்று முரண்பட்டுச் செயல்பட்ட “”பகுத்தறிவின் சிகரம் பெரியார்” என நாத்திகர்கள் போற்றி வருகிறவர்கள் போன்றோர் “”கட வுளை கற்பிப்பவன் முட்டாள்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” எனக் கூறியது மெய்; அறிவார்த்தம் என தம்பட்டம் அடிக்கும் நாத்திகர்கள் எதார்த்தத்தில் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியுமா?

மதகுருமார்களின் கற்பனையில் உருவான “”பொய்க் கடவுள்களை நம்புகிறவன் முட்டாள்; அப்பொய்க் கடவுள்களை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்று முழக்கமிட்டாலாவது அதில் பொருள் உண்டு. நாமும் அவர்களுடன் இணைந்து முழக்கமிடுவோம். அதை விட்டு சர்வத்தையும் படைத்து நிர்வகித்து வரும் ஓரிறைவனை மறுக்கும் இந்த நாத்திகர்கள் மிருகத்தைப் போன்ற ஐயறிவாளர்களா? ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொண்டு மெய்யறிவை அறியும் மேன்மக்களா? சொல்லுங்கள்.

தன்னைப் பெற்றெடுத்த தாயையும், தந்தையையும் தனது பகுத்தறிவைக் கொண்டு அறிய முடியாத இந்த நாத்திகர்கள் அண்ட சராசரங்களைப் படைத்த அந்த ஓரிறைவனை அந்த அற்ப பகுத்தறிவைக் கொண்டு அறிய முற்படு வதைவிட மடமை வேறொன்று இருக்க முடியுமா?  DNA சோதனை மூலம் தங்களைப் பெற்றெடுத்த தாயையும், தந்தையையும் அறிந்து கொள்ள முடியும் என நாத்திகர்கள் பீற்றலாம். யாருக்குப் பெற்றோம் என்பது தெரியாத பெண்ணொருத்தியால் விபச்சாரத்தின் மூலம் பெற்றெடுத்த குழந்தையை, ஊருக்குப் பயந்து குப்பைத் தொட்டியில் வீசப் பட்டவனை, பிள்ளையில்லா ஒரு தம்பதியினர் எடுத்து தங்கள் குழந்தை எனச் சொல்லி வளர்த்து வாலிபனாக்கினார்கள். தன்னை வளர்த்தவர்களைத்தான் பெற்றெடுத்த பெற்றோர் என நம்புகிறான் அவன். ஊரார் சொன்னதின் பேரின் DNA சோதனை செய்கிறான். வளர்த்தவர்கள் உண்மைப் பெற்றோர்கள் இல்லை என்று மட்டுமே பகுத்தறிவு கொண்டு உறுதிப்படுத்த முடியும். மற்றபடி தனது அற்ப பகுத்தறிவு கொண்டு தனது உண்மைப் பெற்றோரைக் கண்டறிய முடியுமா? முடியாதே!

இதுதான் பகுத்தறிவின் லட்சணம்; பகுத்தறிவாளர்கள் என தம்பட்டம் அடிக்கும் நாத்திகர்களின் லட்சணமும் கூட. இவர்கள் போய் சர்வ வல்லமை மிக்க, அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த அந்த ஒரே இறைவனை தங்களின் அற்ப பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அறியப் போகிறார்களாம். நகைக் கடைகளில் தங்கம் நிறுக்கும் நோக்கோடு இருக்கும் மிகக் குறைந்த எடைகளை மட்டுமே நிறுக்கும் தராசில், பல டன் கொண்ட இரும்பை நிறுக்க முற்படும் ஒருவனைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? ஆம்! அவனை விட தரம் தாழ்ந்த நிலையில் நாத்திகப் பகுத்தறிவாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அது தவறா?
ஆம்! அவர்களின் பகுத்தறிவு பிதற்றலைப் பாருங்கள்; “”

உலகின் பொருள் அனைத்தும் அணுக்களாலானவை; அணுவும் நுண்மையான ஆற்றலானது.
ஆக, பொருள் சக்தி இரண்டின் (Matter-Energy) உருமலர்ச்சியே அனைத்துப் பொருள்களும்.
இவை இயல்பாகத் தோன்றியவை; எவருடைய படைப்பும் அல்ல; பரிணாம முறையில் உருமலர்ச்சி பெற்றவை (No creation, but evolution).
ஆற்றலின் அழிவின்மைக் கோட்பாட்டின் (Laws of conservation of Energy)  அடிப்படையில் என்றும் இருப்பவை; என்றும் அழிவற்றவை  (Eternal and Everlasting), தோற்றமும், முடிவும் அற்றவை  (No beginning and so no ending)

இல்லாத ஒன்றைப் புதிதாகப் படைக்கத்தான் ஒரு படைப்பாளி  (creator) தேவை.
என்றும் இருப்பதனைப் படைக்க ஒருவன் தேவையில்லை.
ஒற்றை உயிரணுவின் உருமலர்ச்சி
இதுபோலவே,மனிதன் என்பவன் உயிரற்ற நுண்பொருளிலிருந்து வளர்ச்சி பெற்ற ஒற்றை உயிரணு  (Mono cell)  சரலிருந்து உருவேர்ச்சி பெற்று காலப் போக்கில் குரங்கு, மனிதக் குரங்கு, மனிதன் எனப்படும் பாலூட்டிக் குடும்பத்திலிருந்து அதாவது பிரைமேட் (primate) குழுவிலிருந்து ஒரு கிளையாகக் கிளைத்து உருமலர்ச்சி (Evolution) பெற்ற இனமே மனித இனம்.
எனவே, மனிதனும் பரிணாம முறையில் உருலேர்ச்சி பெற்றவனே! படைக்கப் பட்டவன் அல்லன்.

எனவே, மனிதனும் மற்றைய அனைத்துப் பொருள்களும் இறைவன் என்பவனால் படைக்கப்பட்டவன் என்ற கட்டுரையாளரின் கருத்து, பகுத்தறிவிற்கும் அறிவியலுக்கும் மாறானது; வேறானது; முரணானது.(உண்மை: மார்ச் 16-31, 2008)
நாத்திகர்களின் அறிவின்மையின் ஆழத்தை இக் கூற்று வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. படைக்கப்பட்ட பொருள்கள் என்றும் இருப்பதாகவும்; இல்லாத ஒன்றைப் புதிதாகப் படைக்கத்தான் ஒரு படைப்பாளி (ளீreழிமிலிr) தேவை என்றும் இருப்பதனை படைக்க ஒருவன் தேவையில்லை என்றும் உளறியிருக்கிறார்களே! இப்படி உளறி இருக்கும் இவர்கள் என்றும் இருக்கும் நித்தியனான இறைவனைப் படைத்தது யார்? படைக்கப்படாமல் அவன் எப்படி வந்தான்? என்று அறிவீனமாகக் கேட்கும் இந்நாத்திகர்கள் தங்கள் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்துகிறவர்கள் என்று ஏற்க முடியுமா?

படைக்கப்பட்டவை என்றும் இருக்கின்றவையாம், அழிவற்றவையாம், (Eternal and Everiasting) தோற்றமும், முடிவும் அற்றவையாம் (No beginning and so ne ending). ஆனால் இப்படிக் கூறும் நாத்திகர்கள் இவற்றைப் படைத்த ஏகன் இறைவனைப் படைத்தது யார்? எப்போது படைக்கப்பட்டான் என்று கேள்வி எழுப்புகிறார்கள்! இவர்கள், தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என வீண் பிடிவாதம்-விதண்டாவாதம் செய்கிறார்கள் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியுமா? யாருடைய மண்டையில் “”உண்மை” உறைக்க மறுக்கிறது? ஆம்! உண்மையை-விவேகத்தை- நுண்ணறிவை மனிதனுக்கு மனிதன் கொடுக்க முடியாது தான். அந்தப் பேரறிவாளன் ஏகன் இறைவன் மட்டுமே கொடுக்க முடியும்.

“”படைக்கப்பட்டவற்றை” என்றும் இருப்பவை; படைப்பாளி தேவையில்லை” என்று அறிவீனமாகக் கூறுகிறவர்கள், சர்வ வல்லமை மிக்க, சர்வ ஞானம் நிறைந்த, முக்காலமும் அறிந்த இணை துணை இல்லாத, எவரையும் பெறவுமில்லை; எவராலும் பெறப்படவுமில்லை என்ற இலக்கணத்திற்குச் சொந்தக்காரனான இறைவனைப் படைத்தது யார்? என்று கேட்கிறார்கள் என்றால் நாத்திகர்கள் 6வது அறிவையுடைய பகுத்தறிவாளர்களா? ஐயறிவையுடைய மிருக அறிவுடையவர்களா? சொல்லுங்கள். அது மட்டுமா? பத்தாம் பசலி பழங்கதைகளை அவிழ்த்து விடுவதில் ஆரியர்களுக்கு இந்த நாத்திகர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இப்பாரா உண்மைப் படுத்துகிறது.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த டார்வின் விஞ்ஞான ஆய்வின் மூலம் அல்ல, புறத் தோற்றத்தை வைத்து கற்பனை செய்து யூகமாக குரங்கிலிருந்து தோன்றினான் மனிதன் என்ற மூடத்தனமான கருத்தை வெளியிட்டான். இன்றோ, விஞ்ஞான ஆய்வின் மூலம் குரங்கின் உறுப்புகள் மனித உறுப்புகளுடன் ஒத்துப் போகவில்லை; பன்றியின் உறுப்புகளே மனித உறுப்புகளுடன் ஓரளவு ஒத்திருக்கிறது எனக் கண்டறிந்துள்ளார்கள். இப்போது நாத்திகர்கள் ”குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று டார்வின் அனுமானத்தில் சொன்னது தவறு; விஞ்ஞானம் ஆய்வில் மனித உறுப்புகள் பன்றியின் உறுப்புகளுடன் ஒத்திருக்கிறது. எனவே மனிதன் பன்றியிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் என்று கூறினாலாவது அதுவும் பெருந்தவறு என்றாலும், நாத்திகர்கள் கொஞ்சத்திற்குக் கொஞ்சமாவது பகுத்தறிவாளர்கள் என்று ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் 1953ல் (20ம் நூற்றாண்டு) மரபணு சோதனை மூலம் (DNA) மனித குலமே ஒரு பெண்ணிலிருந்தே உற்பத்தியாகி இருக்கிறது என்பதை அதாவது 1450 வருடங்களுக்கு முன்னர் அல்குர்ஆன் கூறியுள்ளதை (4:1) விஞ்ஞானம் இன்று நிரூபித்திருக்கிறது. இந்த உண்மையை புறக்கணித்துவிட்டு இந்த நாத்திகர்கள் பத்தாம் பசலி பழங்கதையை இன்றும் கீறல் விழுந்த கிராம்போன் இசைத்தட்டு போல் கரைந்து கொண்டிருக்கிறார்கள். மண்டையில் உரைக்க மறுக்கிறது யாருக்கு?

இன்னும் கேளுங்கள் நாத்திகர்களின் அறிவீனத்தை. அனைத்துப் பொருள்களும் என்றும் இருப்பவை. எனவே இருப்பவற்றைப் படைக்க ஒருவன் தேவையில்லை என்று உளறி இருக்கிறார்கள். ஆனால் 1973ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த “”பெருவெடிப்பு” எனும் பிரபஞ்சக் கோட்பாட்டை 21:30 அல்குர்ஆனும் உறுதிப் படுத்துகிறது. அது வருமாறு.

இறை மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்) சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன; நாம்தான் அதை வெடித்துச் சிதற வைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் அன்பியா 21:30)

அதேபோல், இறைக் கட்டளைகளைப் புறக்கணித்து நிராகரித்து நடந்த ஒரு மனிதக் கூட்டத்தை இறைவன் குரங்குகளாக மாற்றினான் என்றே அல்குர்ஆன் (7:163,166,168) மனித குலத்திற்கு எடுத்துக் கூறி எச்சரிக்கிறது.
20ம், 21ம் நூற்றாண்டுகளின் ஆய்வுகளையும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் கண்டு கொள்ளாமல், இந்தக் காலத்திலும் 19ம் (1809-1882) நூற்றாண்டில் டார்வின் அவிழ்த்துவிட்ட கற்பனை கட்டுக் கதைகளை நம்பி, அவற்றை கீறல் விழுந்த கிராம்போன் இசைத்தட்டு போல் மீண்டும், மீண்டும் கரைந்து கொண்டிருக்கும் நாத்திகர்கள் ஆறு அறிவுடைய பகுத்தறிவாளர்களா? அல்லது ஐயறிவுடைய மிருகப் புத்தியுள்ளவர்களா? ஆரிய மாயையில் சிக்கி இருக்கும் மத குருமார்களுக்கும், நாத்திக மாயையில் சிக்கி இருக்கும் இறை மறுப்பாளர்கள் பின்பற்றும் நாத்திக மத குருமார்களுக்கும் வேறுபாடு உண்டா?

நாத்திக மத குருமார்கள் என்று நாம் குறிப்பிடுவது நாத்திகர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கலாம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு; ஆத்திரப் படாமல் அமைதியாக சிந்திக்க வேண்டுகிறோம். பகுத்தறிவுத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன், பகுத்தறிவின் சிகரம் என்றெல்லாம் போற்றிப் புகழும் பெரியாரின் சமாதியை வணக்கத்திற்குரிய ஒரு இடமாக ஆக்கி இருப்பதோடு, பெரியாருக்கு கண்ட கண்ட இடங்களில், “”மிதிக்கும் படியும் கல்லுதான், வணங்கும் சிலையும் கல்லுதான்” என்ற அவர்களின் பொன் மொழிக்கு அவர்களே முரண்பட்டு பெரியார் சிலைகளை வடித்து அவற்றிற்கு மாலை மரியாதை செய்து, அவர் பிறந்த இறந்த நாட்களை நினைவு படுத்தி மரியாதை செய்து வணங்கி வருவது, பெரியாரையும் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் பல கோடி பொய்க் கடவுள்களில் ஒன்றாக இணைத்து விடும் என்பதை விளங்க முடியாதவர்கள் பகுத்தறிவாளர்களா?

எப்படி இறைத் தூதர்களின், சீர்திருத்த வாதிகளின் புகழ்பாடி அவர்களை அவதாரங்களாக்கி, இறைக் குமாரர்களாக்கி வணங்கி வழிபடும் தெய்வங்களாகி பல மதங்களைத் தோற்றுவித்து மத குருமார்கள் அவை கொண்டு வயிறு வளர்த்து வருகிறார்களோ, அது போல்தான் நாத்திகர்களும் பெரியார் புகழ்பாடி, வானளாவப் புகழ்ந்து அவரது சமாதிக்கும், சிலைகளுக்கும் மாலை மரியாதை செய்து, வணங்கி வழிபட்டு நாத்திகக் கொள்கையை அதாவது நாத்திக மதத்தை நிலை நாட்டி நாத்திக மதகுருமார்களாக திரு.கீ.வீரமணி, திரு. வெற்றியழகன் போன்றோரும் செயல் பட்டு வயிறு வளர்த்து வருகிறார்கள் என்று நாம் குற்றம் சாட்டினால் அது தவறா? ஆத்திக மதகுருமார்களுக்கும், நாத்திக மத குருமார்களுக்கும் பெரிய வேறுபாடு எதுவுமே இல்லை. இரு சாராரும் மக்களை வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளும் பெரும் பாவிகள் என்பதே “”உண்மை”யாகும். இருசாராரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

கிறித்தவ மதகுருமார்கள் ஏசுவை இறைக் குமாரன் என மிகைப்படப் புகழ்ந்து வயிறு வளர்த்து வருவதுபோல், முஸ்லிம் மத குரு மார்கள் மீலாது, மவ்லூது என முஹம்மதை மிகைப்படப் புகழ்ந்து வயிறு வளர்ப்பது போல், இந்த நாத்திக மதகுருமார்கள் பெரியார் போன்றோரை மிகைப்படப் புகழ்ந்து வயிறு வளர்த்து வருகிறார்கள் என்று கூறினால் அது பொய்க் கூற்றாகுமா? அவர்களின் அய்ம்புலன் கொண்டு அடையும் ஐயறிவு கொண்டு எடுத்து வைக்கும் அறிவீனமான வாதங்களை மேலும் பார்ப்போம்

Previous post:

Next post: