ஜனநாயகம் படும்பாடு!

in 2011 மே,தலையங்கம்

அமெரிக்காவிலிருந்து ஒரு நவீன விசைப் பொறி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட் டால், அந்தப் பொறியை தயாரித்த அமெரிக்க நிறுவனத்தின் வழிகாட்டல்படியே அப்பொறியை இயக்குகிறோம். ரஷ்யாவிலிருந்து பொறி இறக்குமதி செய்யப்பட்டால் ரஷ்ய நிறுவனத்தின் வழிகாட்டல்படியே அதை இயக்குகிறோம். ஆக ஒரு விசைப்பொறி எந்த நாட்டினரால் தயாரிக்கப்படுகிறதோ அந்த நாட்டினரின் வழிகாட்டல்தான் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கப் பொறிக்கு ரஷ்யாவின் வழிகாட்டலோ, ரஷ்யப் பொறிக்கு அமெரிக்க வழிகாட்டலோ பின்பற்றப்படுவதில்லை.

இத்தனைக்கும் அப்பொறிகள் அனைத்தும் நம்மைப் போன்ற மனிதர்களால் தயாரிக்கப்பட்டவையே. முயற்சி செய்தால் அப்பொறிகளை நாமே தயாரித்து விடவும் முடியும். இந்த நிலையில் தயாரித்தவரின் வழிகாட்டலை எதிர்பார்க்கும் நாம், நம்மால் தயாரிக்கவே முடியாத மனிதக் கருவியை நாம் அமைத்த வழி காட்டல்படி இயக்க முற்படுவது அறிவுடைமையா? அல்லது மனிதக் கருவியை படைத்த சர்வ வல்லமை மிக்க இறைவனின் வழிகாட்டல்படி இயக்குவது அறிவுடைமையா? நடுநிலையோடு சிந்தியுங்கள்.
ஆம்! இறைவனின் வழிகாட்டல்படி நடக்க வேண்டிய இறையாட்சியைப் புறந்தள்ளி, மனித வழிகாட்டல்படி அமைக்கப்பட்டதே ஜனநாயக ஆட்சி. அதாவது மக்களில் பெரும் பான்மையினரின் விருப்பப்படி நடப்பதாகச் சொல்லப்படுவதுதான் ஜனநாயக ஆட்சி முறை. பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி நடக்கும் ஆட்சி என்றால் அது முறை கேடான ஆட்சி முறையாக மட்டுமே இருக்கும் என்று மனிதனைப் படைத்த இறைவன் தனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனின் 6:116 இறைவாக்கில் திட்டமாகக் கூறியுள்ளான்.

நமது நாட்டின் ஜனநாயக ஆட்சி முறை இறைவனின் இந்த எச்சரிக்கை நூறு சதவிகிதம் உண்மை என நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆம்! ஜனநாயகத்தின் பெயரால் பண நாயகம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது; பின்னர் அது குண்டர் நாயகமாக உருவெடுத்தது; இப்போது பணநாயகம், குண்டர் நாயகம், வியாபார நாயகமாக உருவெடுத்துள்ளது. ஆம்! இப்போது வேட்பாளர்கள் மக்களின் வாக்கை விலை கொடுத்து வாங்க ஆரம்பித்து விட்டார்கள். சில ஊர்களில் சில வாக்காளர்கள் தேர்தல் அன்று எங்களுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை, எனவே நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி பணம் கொடுத்த பின்னரே வாக்களிக்கச் சென்றுள்ளனர்.

ஆம்! 2000/-, 1000/-, 500/-, 200/- என இடத்திற்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டு வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. விலை மதிக்க முடியாத தங்களின் பொன்னான வாக்குகளை கேவலம் 1000க்கும் 500க்கும் விற்ற வாக்காளர்கள் எப்படிப்பட்ட அறிவீனர்களாக இருப்பார்கள்? இப்படிப்பட்டவர்களிடம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் எப்படிப்பட்டவர்கள் ஆட்சியாளர்களாக வருவார்கள்? நாட்டையே விலை பேசும் அயோக்கியர்களிலும் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்தான் ஆட்சியாளர்களாக வருவார்கள் என்பதில் சந்தேகமுண்டா?

தேர்தல் ஆணையத்தின் பிடியில் சிக்கியதோ வெறும் 45 கோடி மட்டுமே. ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவி மக்களுக்குக் கொடுக்கப்பட்டதோ சில ஆயிரம் கோடி. ஆம்! பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தை அநீதமான வழிகளில் வாரிக் கொண்டவர்கள், அதில் சில ஆயிரம் கோடிகளை மக்களுக்கு லஞ்ச மாகக் கொடுக்கத் தயங்கவா போகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொடுத்ததைப் பன் மடங்காகப் பெருக்கி பல்லாயிரம் கோடியாக பெறப் போகிறார்கள்.

இதிலும் உள்ளடி என்னவென்றால் ஒரு வாக்காளருக்கு 500/- ஒதுக்கப்பட்டால், அதில் 200/- மேலிடத்திலிருந்து மொத்தமாகப் பெற்று வருபவருக்குப் போய்விடும். 100/- வீடுகளில் கொண்டுபோய் சேர்ப்பவருக்குப் போய்விடும். எஞ்சிய 200/- மட்டுமே வாக்காளரிடம் போய் சேரும். இது மட்டுமல்ல, அரசின் இலவசங்கள் அனைத்தின் நிலையும் இதுவே. இவர்கள் தான் இன்றைய அரசியல்வாதிகள்; இல்லை அரசியல் வியாபாரிகள்.

அரசியல் வியாபாரமாகப் போய்விட்ட தால் நான், நீ என்ற போட்டி பொறாமை, அடி, தடி, வெட்டு, குத்து, கொலை என அரசியல் களம் கொலைகாரக் களமாக மாறி வருகிறது. தொண்டு உள்ளத்தோடு, சேவை மனப் பான்மையோடு சுயநலம் இல்லாமல் மக்களுக்காக உண்மையாகவே உழைக்கும் அரசியல்வாதிகளாக இருந்தால் இந்தக் கோரக் காட்சிகள் இடம் பெறுமா? நியாயமாகத் தேர்தல் நடந்தால் 100 கோடி செலவாகும் என்றால், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வாக்குப் பதிவு நாள், அதன் பின் ஒரு மாதம் சென்று வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நாலு அடுக்கு பாதுகாப்பு, ஏழு அடுக்குப் பாதுகாப்பு என்று சுமார் 10,000 கோடி மக்கள் வரிப்பணம் பாழாக்கப்படுகிறது. அதாவது ஒன்றுக்கு நூறாக மக்கள் பணம் வீண் விரயமாக்கப்படுகிறது. இதுவா ஜனநாயகம்?

இப்போது நடைமுறையிலிருக்கும் இந்தப் போலி ஜனநாயகம் தொடருமானால், நாட்டில் இரண்டு கால் மனிதர்களைப் பார்க்க முடியாது. இரண்டு கால் மிருகங்களைத்தான் பார்க்க முடியும். நாடு இடுகாடாக ஆகி விடும். மக்கள் நலம் நாடுவோரே! மனித நேயம் போற்றுவோரே! அறிவு ஜீவிகளே ஆழமாகச் சிந்தியுங்கள். மனிதனே மனிதனுக்குரிய வாழ்க்கை வழிமுறைகளைத் தீட்டி அதன்படி நடப்பது, பரீட்சை எழுதும் மாணவனிடமே கேள்வித்தாள் தயாரிக்கக் கொடுப்பது போல், திருடனிடமே அதற்குரிய தண்டனை வழங்கும் அதிகாரத்தைக் கொடுப்பது போல் பெருந் தீங்குகளே விளையும். எனவே,

மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றிப் பிழைக்கும் மத வியாபாரிகளான மதகுருமார்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வழி காணுங்கள். அரசியலின் பெயரால் மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் இந்த அரசியல் வியாபாரிகளையும் மக்கள் வெறுத்து ஒதுக்க வழிகாணுங்கள். அதற்குள்ள ஒரே வழி மனிதத் திட்டங்களை எல்லாம் குப்பைத் தொட்டியில் கடாசி விட்டு, தன்னந்தனியனான இணை துணை இல்லாத, இடைத்தரகர்களான புரோகித வியாபாரிகளான மத குருமார்களை அனுமதியாத, சர்வ வல்லமை மிக்க ஏகனான இறைவன் கொடுத்தருளியுள்ள இறுதி வாழ்க்கை வழிகாட்டி நெறிநூல் அல்குர் ஆனின் நேரடி போதனைகள்படி மக்களை வழி நடத்த முன் வாருங்கள். அதுவே மனித குலத் திற்கு அமைதியையும், வளத்தையும், சாந்தி சமாதான வாழ்க்கையையும் கொடுக்கும்.

Previous post:

Next post: