நேற்றைய கார்டூனும் இன்றைய திரைப்படமும்!

in 2012 அக்டோபர்,தலையங்கம்

அல்குர்ஆனைப் புறக்கணிக்கும் சமுதாயம்! (பார்க்க 25:30)

இறுதித் தூதர்(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு:
ஒரு காலம் வரும், இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது; குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மை தவறியவர்களைக் கொண்டே நிரம்பியிருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழிகள் குஞ்சுகளைப் பொரிப்பது போல்) பொரிச்சி வெளிவரும். (பைஹகி 1908, மிஷ்காத் பாகம்1, பக்கம் 91)

இன்றைய முஸ்லிம் மதகுருமார்களின், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் முஸ்லிம்களின் எதார்த்த நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இறுதித் தூதரின் இந்த முன் அறிவிப்பு.

இப்போது விஷயத்திற்கு வருவோம். அமெரிக்காவில் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை மிகமிக இழிவுப்படுத்தி, அவர்களைப் பெண்லோலர், காமவெறி கொண்டலைபவர், பல பெண்களுடன் சிற்றின்பத்தில் திழைத்தவர் என்பது போன்ற காட்சிகளைக் கொண்டு குறும்படம் எடுத்து உலகம் முழுவதும் பரப்பியுள்ளான் ஒரு திரைப்படக் கூத்தாடி. திரைக் கூத்தாடிகளிடம் என்னென்ன ஒழுங்கீனங்கள், இழிகுனங்கள், காமவெறியாட்டங்கள், கற்பழிப்புகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் இறைவாக்கு 4:112 கூறுவது போல் இறுதி இறைத் தூதர் மீது சுமத்தியுள்ளான்.

இஸ்லாம் அனுமதிக்காத செயல்கள்!
அப்படம் உலக முஸ்லிம்களைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் என மக்களின் இயல்பு வாழ்க்கையை பல மணிநேரம் ஸ்தம் பிக்கச் செய்துள்ளது. ஆங்காங்கே சில வன்முறைச் செயல்களும், சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள். இவை அனைத்தும் உண்மை முஸ்லிம்கள் செய்யக் கூடாத தீச் செயல்கள் என்ப தில் சந்தேகமில்லை. 7:86, 29:29 இறைவாக்குகளும், மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் மறுக்கும் செயல்களாகும்.

நபிமார்கள் அனைவரும் அவமானப்படுத்தப் பட்டார்கள்!
உலக வரலாற்றை உற்றுநோக்குபவர்கள் ஓர் உண்மையை அறியமுடியும். இறைத் தூதர்கள் அனைவருமே அந்தந்தக் காலத்து மதகுருமார்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள், இழித் துரைக்கப்பட்டார்கள், அவதூறுகளால் அர்ச்சிக்கப் பட்டார்கள். இறைத்தூதர்களை விட கடுமையாக மக்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் அடி உதைக்கும், அவதூறுகளுக்கும் ஆளானவர்கள் வேறு யாரும் இல்லை; அடுத்து நேர்வழியை-சத்தியத்தைச் சொன்ன நன்மக்களும் அதே நிலைக்கு ஆளானார்கள் என்பது உண்மை வரலாறு.

முன்னைய நபிமார்களுக்கு இறைவன் இறக்கியருளிய நெறிநூல்கள் இம்மதகுருமார்களின் கரம் பட்டு சீரழிந்த நிலையில் வேதங்களின் பெயரால், முன்னைய சமூகங்களிடையே பக்திசிரத்தையுடன் போற்றப்படுபவற்றில், இறைத் தூதர்கள் இப்படிப் பட்டக் காமக் களியாட்டங்களில் ஈடுபட்டதாகப் புனைந்து வைத்துள்ளனர்.

யூதர்களின் சூழ்ச்சி!
மூஸா(அலை) அவர்களைப் பின்பற்றுவதாக வாயளவில் சொல்லிக்கொண்டு, செயல் அளவில் அவர்களின் போதனைக்கு முற்றிலும் முரணாகச் செயல்படும் யூதர்கள், அடுத்துச் சில காலத்திற்குப் பின் வந்த இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களை ஏற்கவில்லை. ஈசா(அலை) அவர்களை வேசி மகன், தவறான வழியில் பிறந்தவர் என இழித்துரைத்தார்கள். கடுந் துன்பங்களைக் கொடுத்தார்கள், இறுதியில் அவர்களை சிலுவையில் அறைந்து, தாகித்துப் பட்டினி கிடந்து உடனே சாகாமல் பல நாட்கள் சித்திரவதை அனுபவித்துச் சாகவேண்டும் எனத் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்தனர். அல்லாஹ் அவனது வல்லமையையும், ஞானத்தையும் கொண்டு இறுதிகால அத்தாட்சியாக (43:61) மீண்டும் அனுப்பத் தன் வசத்தில் அவர்களை உயர்த்திக் கொண்டான். (4:156-159)

யூதர்களும், கிறித்தவர்களும் கீரியும், பாம்பும் போல் கடும் பகைவர்களாக இருந்தவர்கள், முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதித் தூதராக வந்தவுடன் தங்கள் பகைமையை மறந்து இரு சாராரும், குறைஷ் காஃபிர்களுடன் சேர்ந்து இறுதித் தூதருக்குக் கடுந்துன்பங்கள் கொடுக்க முற்பட்டனர். அவ தூறுகள் பரப்பினர், நயவஞ்சகமாக முஸ்லிம்களாக நடித்துப் பெரும் சதிச் செயல்கள் செய்து சத்திய போதனையை முறியடிக்க முற்பட்டார்கள். அன்றிலிருந்து இன்று வரை யூத கிறித்தவர்கள் தங்களின் இந்த இழிச் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதன் உச்சக்கட்டமாக நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையிலேயே இடம் பெற்ற பல சம்பவங்களில் ஒரு சம்பவத்தை உன்னிப்பாகப் பாருங்கள்! யூதர்கள், கிறித்தவர்கள், குறைஷ் காஃபிர்கள், முஸ்லிம்களாக நடித்த நயவஞ்சகர்கள், மூன்று உண்மை முஸ்லிம்கள் இவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களையே நிலை தடுமாற வைக்கும் அளவில் அவர்களது அருமை மனைவிஆயிஷா(ரழி) அவர்கள் சோரம் போய் விட்டதாக அவதூறு பரப்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக புழுவாகத் துடித்தார்கள். நம்பிக்கைக்குரிய சிலரிடம் அது பற்றிக் கருத்துக் கேட்டார்கள். அப்போது அலீ(ரழி) அவர்கள் சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே அவருக்கும் ஆயிஷா(ரழி) அவர்களுக்குமிடையில் கடும் மனத்தாங்கல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம், போராட்டம் இல்லை!
நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியை அவர் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அந்தக் கால கட்டத்தில் எந்த அளவு வேதனையில் துடித்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். ஆட்சி அதிகாரம் தன் கையில் இருந்தும் அவதூறு பரப்புவோர் மீது சுயமாக கடும் நடவடிக்கை எடுக்க வில்லை. இன்றைய முஸ்லிம்களைப் போல் அரசியல்வாதிகளைப் போல் ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், முற்றுகை, சாலை மறியல் என்று எதிலும் ஈடுபடவில்லை. தமது தோழர்களையும் அப்படித் தூண்ட வில்லை. ஆயிஷா(ரழி) அவர்கள் குற்றமற்றவர் என்று அல்லாஹ் 24:11 முதல் 21 வரையுள்ள 11 இறைவாக்குகளை இறக்கி அவர்களின் பரிசுத்த நிலையை உறுதிப்படுத்தினான். அவதூறு பரப்பிய வர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் தண்டனை உண்டு என்று 24:19ல் அறிவித்த பின்னரும், நபி (ஸல்) அவர்கள் உண்மையான முஸ்லிம்களான மிஸ்தஹ், ஹஸ்ஸான்பின் ஃதாபித் என்ற இரண்டு ஆண்களுக்கும், ஹம்னா என்ற ஒரு பெண்மணிக்கும் மட்டுமே கசையடி தண்டனை கொடுத்தார்கள். அவதூறு பரப்புவதில் பெரும் பங்காற்றிய முனாஃபிக் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் உட்பட்ட முனாஃபிக்கள், குறைஷ் காஃபிர்கள், கிறித்தவர்கள், யூதர்கள் முதல் எண்ணற்றோருக்குரிய கடும் தண்டனையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.

இந்த உண்மையை குர்ஆன் 24:11-21 மற்றும் ஹதீஃத்கள் புகாரீ 4749 முதல் 4757 வரையும், 4141 முதல் 4146, மற்றும் 2661 போன்ற ஹதீஃத்கள் அனைத்தையும் படித்துப் பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும். மேலும் 41:34,35, 13:22, 16:125, 28:54, 29:46 இறைவாக்குகள் என்ன கூறுகின்றன என்பதைப் படித்து உணர்கிறவர்கள் மவுன்ட் ரோடு ஸ்தம்பித்தது என்று ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டார்கள், காரணம் குறிப்பிட்ட சம்பவத்திற்குச் சம்பந்தமே இல்லாத மக்களின் அன்றாட அலுவல்களை முடக்குவது உண்மையான முஸ்லிம்கள் செய்யக்கூடாத செயலாகும். கொலை செய்வது மிகமிக கொடிய செயலாகும்.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை!
இவர்கள் மவுண்ட் ரோடை ஸ்தம்பிக்க வைத்ததால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை இவர்கள் சிந்தித்தார்களா? மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்த நோயாளிகள் எத்தனை? கர்ப்பினி பெண்கள் எத்தனை? உரிய காலத்தில் சிகிச்சை கிடைக்காமல் மரித்தவர்கள் எத்தனை? உற்றார் உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தவர்கள் எத்தனை? அன்றாடம் காய்ச்சிகள் ஒருவேளை அரைகுறையாகச் சாப்பிடுகிறவர்கள் அன்று அந்த ஒரு வேளையும் கிடைக்காமல் கொலைப் பட்டினிக் கிடந்தவர்கள் எத்தனை? இப்படி பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படிப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இவர்கள் சாதித்தது என்ன?

மனிதக் கற்பனையில் உருவான கம்யூனிசம், சோஸலிசம், செக்யூரலிசம் போன்ற இஸங்கள், ஜனநாயகம், சர்வாதிகாரம் போன்றவற்றைத் தூக்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், மதகுருமார்கள் இப்பாதகச் செயலைச் சரிகாணலாம். இவர்களின் வாழ்வாதாரமே இப்படிப்பட்ட இழிசெயல்களில் தான் இருக்கிறது. 12:106 கூறும் தொழுகையற்ற பெயர்தாங்கி முஸ்லிம்கள் சரிகாணலாம். 33:21 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்பி அல்லாஹ்வை அதிக மதிகம் திக்ர் செய்து, ஐங்காலத் தொழுகைகளை முறைப்படி பேணித் தொழுபவர்கள், அல்லாஹ்வை உண்மையிலேயே அஞ்சி நடப்பவர்கள் இப்பாதகச் செயலைச் செய்ய முடியுமா? சிந்தியுங்கள்!

அல்லாஹ் மீதும் மறுமை மீதும் உறுதியான நம்பிக்கையுடன் இறையச்சத்தை நெஞ்சத்தில் சுமந்தவர்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

9:31 இறைவாக்குக் கூறுவது போல் மதகுருமார்களான மவ்லவிகளை ரப்பாகக் கொண்டு 12:106 இறைவாக்குக் கூறுவது போல் இணை வைத்த நிலையில் ஈமான் கொண்டவர்கள், 33:21 இறைவாக்குக் கூறும் இறுதித் தூதரின் அழகிய முன்மாதிரியை நிராகரித்து, 25:30 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனையே நிராகரித்துப் புறக் கணிப்பவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் முற்றிலும் முரணான செயல்பாடுகளை பெருமையுடன் செயல்படுத்த முடியும். இறுதித் தூதரை இழிவுபடுத்தி படம் எடுத்தவனுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவன் யூத மத இன வெறி கொண்டு அலைகிறான். இவர்களோ முஸ்லிம் மத இன வெறி கொண்டு அலைகிறார்கள். இதுதான் வேறுபாடு. ஈமானுடைய உணர்வுள்ளவர்கள் ஒருபோதும் இப்படி நடக்க முடியாது.

எத்தனை பேர் ஐங்கால தொழுகையாளிகள்?
இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேர் 2:186 இறைக்கட்டளைப்படி மவ்லவி மதகுருமார்களை 50:16 இறைக் கட்ட ளையை நிராகரித்து இடைத்தரகர்களாகக் கொள்ளாமல் அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பிச் செயல்படுகிறவர்கள்? ஐங்காலத் தொழுகைகளையும் விடாது முறையாக உள்ளூரிலிருக்கும் போது ஜமாஅத்துடன் அல்லாஹ்வுக்காக மட்டுமே கூலிக்காக அல்ல நிலை நாட்டுகிறவர்கள்? தங்களுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் இறையச்சத்துடன் ஹலால், ஹராம் பேணி நடப்பவர்கள்? பிறரது “உயிர், பொருள், மானம் இவற்றிற்குப் பங்கம் விளைவிக்காமல் இறையச்சத்துடன் செயல்படுகிறவர்கள்? என்று கணக்கெடுத்துப் பாருங்கள். ஒரு நபர்கூட தேறமாட்டார். அப்படிப் பேணுதலாக நடப்பவர்கள் யாரும் இந்த ஈனச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

“”நிச்சயமாகத் தொழுகையானது மானக்கேடான வற்றையும், தீயவற்றையும் விட்டுத் தடுக்கிறது” என்பது அல்லாஹ்வின் உறுதி மொழியாகும். தொழுகையற்றவர்களை நாளை முஸ்லிம்களாக அல்லாஹ் ஏற்கமாட்டான்.

நம்மூர் திருவள்ளுவரும்
“”இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நான நன்னயம் செய்து விடல்”

என்று அறிவுரை கூறியுள்ளார். இதுதான் பண்பட்டவர்கள் செயல் என்பதில் சந்தேகமுண்டோ? பழிக்குப் பழி வாங்குவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது என்று நியாயப்படுத்தினாலும், சம்பந்தப் பட்டவனிடம் மட்டுமே அதே அளவு அது போன்று மட்டுமே பழிவாங்க மார்க்கம் அனுமதிக்கிறது. வரம்பு மீறக்கூடாது என்று உறுதியாக மார்க்கம் எச்சரிக்கிறது. (பார்க்க: 2:194, 5:45, 16:126)

இது தொழுகையாளிகளுக்கும், தக்வா உள்ளவர்களுக்கும், பொறுமையாளர்களுக்கும் மட்டுமே சாத்தியப்படும். காரணம் அவர்களுடனேயே அல்லாஹ் இருக்கிறான். (பார்க்க: 2:153,194,249, 8:46,66, 9:36,123, 16:128)
எப்படிப்பட்டத் தண்டனைகள் காத்திருக்கின்றன?

இத்தனை இறைவாக்குகளில் இவ்வளவு தெளிவாக நேரடியாக அல்லாஹ் சொல்லியிருந்தும், இந்த இறைவாக்குகள் அனைத்தையும் துச்சமாகத் தூக்கி எறிந்துவிட்டு, ஷைத்தானுக்கும், மனித ஷைத்தான்களான தாஃகூத் என்ற மதகுருமார்களுக்கும் அடிமைப்பட்டு இப்படிப்பட்ட மார்க்க முரணான செயல்களில் ஈடுபடுகிறவர்களை நாளை மறுமையில் அல்லாஹ் எப்படி எல்லாம் தண்டிப்பான் என்பதையும் பல குர்ஆன் வசனங்களும், ஆதாரபூர்வ மான ஹதீஃத்களும் எச்சரிக்கின்றன. ஆனால் இவை கொண்டு உணர்வு பெற்று திருந்தி தவ்பா செய்து மீள்பவர்கள் மிகமிகச் சொற்பமே!

ஆத்திரம் யாரிடம் ஏற்படவேண்டும்?
இவர்கள் முறையான ஈமானுடையவர்களாகவும், மார்க்கத்தை முறையாக அறிந்தவர்களாகவும் இருந்தால், இவர்களின் இந்த ஆத்திரம், ஆக்கிரோசம் அனைத்தும் யார்மீது ஏற்பட்டிருக்க வேண்டும் தெரியுமா? இவர்களை வழிநடத்திச் செல்லும் யூதக் கைக்கூலிகளான, தாஃகூத்களான முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளிடமே ஏற்பட்டிருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் மீது இப்படிப்பட்ட வீண் பழிகள் ஏற்பட இவர்களே காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். எப்படி என்று பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் தமது 53வது வயதில் 6 வயதே நிரம்பிய விளையாட்டுச் சிறுமியை மணமுடித்தார்கள் என்றும் ஆயிஷா(ரழி) அவர்கள் தமது விளையாட்டுப் பொம்மைகளுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அந்த பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்றும் அப்பட்ட மான பொய்ச் செய்தியைப் பரப்பி வருகிறார்களா? இல்லையா? அல்லாஹ் அல்குர்ஆன் அன்னிசா-பெண்கள்: 4:21 இறைவாக்கில் “”உங்களிடமிருந்து அவர்கள் கடுமையான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்ட நிலையில் அதனை எப்படி எடுப்பீர்கள்” என்று தெளிவாகக் கூறி இருக்க, அதாவது மண முடிக்கும் பெண் தான் மண முடிக்கப் போகும் ஆணிடம் உறுதியான வாக்குறுதி பெற்று வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமாகக் கூறி இருக்க, அப்படியொரு உறுதியான ஒப்பந்தம் செய்து கொள்ளும் பக்குவம் பெறாத பருவம் அடையாத ஒரு சிறுமியை எந்த முஸ்லிமும் திருமணம் முடிக்கக் கூடாது என்று அல்லாஹ் திட்டமாகக் கட்டளை யிட்டிருக்க, அல்லாஹ்வின் இறுதித் தூதரே அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு முரணாக ஆயிஷா (ரழி) அவர்களை 6வயது விளையாட்டுச் சிறுமியாக இருக்கும் நிலையில் மணமுடித்தார்கள் என இம் மவ்லவிகளே அவதூறு பரப்பும் போது, யூத, கிறித்தவர்கள் அவதூறு பரப்ப கேட்கவா வேண்டும்!

அடுக்கடுக்கான ஆதாரங்கள்!
நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களை மணமுடிக்கும்போது அவர்கள் பருவமடைந்து பக்குவப்பட்ட கன்னிப் பெண் என்பதற்கு எண்ணற்ற வரலாற்று ஆதாரங்கள் இருக்க அவற்றை எல்லாம் நிராகரித்துவிட்டு உர்வா என்ற தாபியீயின் மக னான ஹிசாம் இப்னு உர்வாவின் பெயரால் ´ஷிஆக்கள் கட்டிவிட்டக் கற்பனையைத் தூக்கிப் பிடித்து “”ஹதீஃத்” என்று ஆடுகிறவர்கள் ஆலிம்களா? ஜாஹில்களா? நபியின் வாரிசுகளா? அபூஜஹீலின் வாரிசுகளா? இன்னும் பாருங்கள். இம்மதகுருமார்ளின் இழி குணத்தை. அல்குர்ஆன் அல்அஹ்சாப் 33:37 இறைவாக்கில் “”அல்லாஹ்வும் அருள்புரிந்து, நீரும் அருள்புரிந்தீரே அவரிடம், “”அல்லாஹ்வை அஞ்சி உம்முடைய மனைவியை(விவாகரத்துச் செய்யாமல்) உம்மிடமே நிறுத்திக் கொள்ளும்” என நீர் கூறியபோது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்கு அஞ்சி உம் மனதில் மறைத்து வைத்திருந்தீர். நீர் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ்வே!” என்று கூறி இருக்கிறான் அல்லாஹ்.

குறைஷ்களின் இழி குணம்!
அன்றைய குறைஷ்களின் வழக்கில் வளர்ப்பு மகன் பெற்ற மகனாகவே கருதப்பட்டான். பெற்ற மகனுக்குள்ள உரிமைகள் அனைத்தும் அவனுக்கும் உண்டு. தந்தை இறந்தவுடன், தன் தாய் அல்லாத தந்தையின் மற்ற மனைவிகளை மகன்கள் மண முடித்துக் கொள்ளும் இழி நிலையில், வளர்ப்பு மகன் தனது மனைவியை தலாக் செய்தால், வளர்ப்புத் தந்தை அவளை மணமுடிப்பதில்லை. இது அன்றைய நிலை. ஜைத்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன். அவருக்கும் அவரது மனைவிக்கும் ஒத்துவரவில்லை. பிரிந்துவிடும் நிலையில் இருக்கிறார்கள். வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற மகன் ஆக மாட்டான். வாரிசுரிமை அவனுக்குக் கிடையாது. அவனது மனைவியை தலாக் செய்தால் வளர்ப்புத் தந்தை அப்பெண்ணை மணமுடிக்க எவ்விதத் தடையுமில்லை என்பதை உலகிற்கு அறிவிக்க நாடி ஜைதின் முன்னாள் மனைவியை நபி(ஸல்) அவர்களுக்கு மணமுடிக்க அல்லாஹ் நாடினான்.

ஆனால் நபி(ஸல்) அவர்களோ வளர்ப்பு மகனின் முன்னாள் மனைவியை மணமுடித்தால் ஊர் வழக்கப்படி அதை இழிவாகவும் கேவலமாகவும் பேசுவார்களே, தமது பணிக்கு அது இடையூறாகுமே என்று பயந்தார்கள். இந்தப் பயத்தையே அல்லாஹ் இந்த 33:37 இறைவாக்கில் குறிப்பிடுகிறான். இதுதான் எதார்த்த நிலை. யூதக் கைக்கூலிகளான இம்மதகுருமார்களின் முன்னோர்களான ஆபாக்கள் “”தஃப்ஸீர்” என்ற பெயரால் என்ன கற்பனை செய்துள்ளார்கள் தெரியுமா?

தஃப்சீர்களில் காமரசம்!
இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜைதின் மனைவியான அப்பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது அரைகுறை ஆடையில் அவளைப் பார்த்து அவளது அழகில் மயங்கி விட்டார்கள் என்று இந்த வசனத்திற்கு விரிவுரை என்ற பெயரால் அபத்தமான கருத்தை எழுதி வைத்துள்ளார்கள். வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு “”குர்ஆன் தஃப்ஸீர்” என்ற பெயரால் எழுதி வைத்திருக்கும் குப்பைகளில், ஹிந்து வேதங்களில் காணப்படும், கிறித்தவர்களின் பைபிளில், இதுபோல் அனைத்து மதங்களின் வேதப் புத்தகங்களில் காணப்படும் காம உணர்வைத் தூண்டும் ஆபாசச் செய்திகள் போல், குறிப்பாக இறைத் தூதர்களையே சம்பந்தப்படுத்தி எழுதி வைத்துள்ள கற்பனை ஆபாசச் செய்திகள் போல் இவர்களின் தஃப்சீர்களிலும் மலிந்து கிடப்பதைப் பார்க்கலாம்.

சல்மான்ருஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்ரீனுக்கும் அவர்களின் அசிங்கம் புடித்த கற்பனைக் காவியங்களுக்கு இந்த முஸ்லிம் மதகுருமார்களான யூதக் கைக் கூலிகள் தஃப்ஸீர் என்ற பெயரால் எழுதி வைத்துள்ள அசிங்கங்களே கருப்பொருள் என்பது இந்தப் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்குத் தெரியுமா?

சமீபத்தில் ததஜ(?) தலைமை இமாம்(?) பீ.ஜை. கிறித்தவர்களுக்குத் தூய இஸ்லாத்தை விளக்குகிறேன் பேர்வழி என்ற மமதையுடன் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களை எடுத்து வைக்காமல், அவர்களின் பைபிளிலுள்ள அதுவும் நபிமார்கள் பற்றிய ஆபாசக் களஞ்சியங்களை வெளியாக்கி பகிரங்கப்படுத்தி கிறித்தவர்களுக்கு வெறியேற்றினார். அப்போதே அவர்கள் தங்கள் வலைதளங்களில் நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்திச் செய்திகள் வெளியிட்டனர். இவர் தூண்டிவிட்ட வெறியாட்டத்தின் உச்ச கட்டம்தான் மேற்படி குறும் படம். இதை அவரது பக்தர்கள் அறிவார்களா?

பெயர்தாங்கி முஸ்லிம்கள் மூடத்தனமாக ஆரம்பித்த பித்அத்தான மீலாது ஊர்வலத்தைப் பார்த்துத்தான் காவியினர் பிள்ளையார் ஊர்வலம் ஆரம்பித்தனர்.

ஆம்! இம்மூடமுல்லாக்கள் அசிங்கங்களுக்கும், ஆபாசங்களுக்கும், காமக்களியாட்டங்களுக்கும் கோடு போட்டுக் கொடுத்துள்ளார்கள். யூதர்களும், கிறித்தவர்களும், காவியினரும் ரோடு போட்டு இஸ்லாத்தையும், இறுதித் தூதரையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்துகிறார்கள். இன்னொரு உண்மையையும் இங்கு நாம் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. எமது 71 வயது அனுபவத்தில் எமது 21 வயதிலிருந்தே 50 வருடங்களாக இந்த மவ்லவிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தோம். இவர்களில் பெரும்பாலோரிடம், ஏன்? அவுலியா எனப் போற்றப்பட்டவர்களிடமும் சகலவிதமான ஒழுக்கக் கேடுகள், ஓரினப் புணர்ச்சி, விபச்சாரம், மாற்றான் மனைவியுடன் கூடல் போன்ற அனைத்து இழி செயல்களிலும் ஈடுபட்ட பல மவ்லவிகளை நாம் அறிவோம்.

இறைத் தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்த அகில உலக மக்களுக்கும் உரிய இறைத் தூதரை முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான இறைத்தூதர் என்று குறுகிய வட்டமாக்கியுள்ளனர் இம்மவ்லவிகள்!

குர்ஆன், தஃப்சீர்களை ஏன் மறைக்கிறார்கள்?
இம்மதகுருமார்கள் எழுதி வைத்துள்ள இப்படிப்பட்டக் கற்பனைக் காமரசக் காவியங்களை முஸ்லிம்கள் அறியும் வாய்ப்பு ஏற்பட்டால், அவர்களின் ஆத்திரம் இம்முஸ்லிம் மதகுருமார்களின் பக்கமே திரும்பும், அதனால் இந்த வஞ்சக முஸ்லிம் மதகுருமார்களான இம்மவ்லவிகள் குர்ஆனை விட்டும், அதற்கு அவர்கள் எழுதி வைத் துள்ள தஃப்ஸீர்களை விட்டும் “”ஹராம்”என்ற கடுமையான ஃபத்வா கொடுத்து அவற்றை நெருங்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்.

யாருக்கும் அஞ்சாமல் உண்மையைச் சொல்வதாக இருந்தால் யூத, கிறித்தவ, ஹிந்து மதகுருமார்களை விட முஸ்லிம் மதகுருமார்களும், பெரும்பான்மை முஸ்லிம்களுமே நபி(ஸல்) அவர்களை மிகமிக இழிவுபடுத்துகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளது போல் அனைத்துத் தீச் செயல்களும் மூட முல்லாக்களான, யூதக் கைக்கூலிகளான இம்மத குருமார்களின் மூளையில் உதிப்பவையே என்பதைக் கண்டறிந்து பெயர் தாங்கி முஸ்லிம்கள் இம்மதகுருமார்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, நேரடியாக அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் என்று பற்றிப் பிடித்து அவற்றின்படி நடந்து உண்மை முஸ்லிம்களாக மாறுகிறார்களோ அன்றுதான் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஆதத்தின் சந்ததிகளான அகில உலக மக்களுக்கும் விமோசனம் பிறக்கும். அல்லாஹ் அருள்புரிவானாக.

இவை எதுவும் எமது சுயவிளக்கம் அல்ல!
எமது சுய கருத்தைப் புகுத்தாமல் அனைத்திற்கும் நேரடியான குர்ஆன் வசனங்களையே எடுத்து வைத்திருக்கிறோம். மவ்லவிகள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறீர்களா? ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். அதற்கு மாறாக அவர்கள் யூதக் கைக்கூலிகளாக இருந்து கொண்டு 4:112 இறை வாக்குக் கூறுவது போல் அப்பழியை எம்மீது போட்டு யூதக் கைக்கூலி, அமெரிக்க ஏஜண்ட் என்று பெயர் தாங்கி முஸ்லிம்களான அவர்களின் பக்தர்களைக் கொண்டு அவதூறு பரப்ப முற்படுவார்களே அல்லாமல் உண்மையை ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவர்களின் புரோகிதத் தொழில் அவர்கள் நேர்வழியை ஒப்புக் கொள்ள இடம் தராது.

சத்தியத்தை-நேர்வழியை ஏற்கும் உயர் குணம் இந்த மவ்லவிகளுக்கு இல்லை என்பதற்கு இதோ ஆதாரம்.
பாபரி மஸ்ஜித் இடிபடுவதற்கு முன்னர். அந்நஜாத் 1990 மார்ச் இதழ் பக்கம் 27-ல், ஹுதைபிய்யா உடன்படிக்கையை ஆதாரமாகக் காட்டி “”விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர் விட்டுக் கொடுப்பதில்லை” என்ற நியதிப்படி காவியினர் சொல்வது போல் வேறு இடத்தில் புதிதாக ஒரு புதிய பள்ளி கட்டி வாங்கிக் கொண்டு பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுப்பதே நபிவழி. அதனால் நீண்ட காலமாக ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்து வரும் பகை நீங்கி சுமூக உறவு ஏற்பட வழி பிறக்கும். வேறு பள்ளிகளில் உரிமை கொண்டாட மாட்டோம் என்றும் கூறுகிறார்கள் என்று விளக்கமாக எழுதி இருந்தோம்.
முஸ்லிம் மதகுருமார்களும் பெயர் தாங்கி முஸ்லிம்களும் இதை ஏற்றார்களா? இல்லையே!

அதற்கு மாறாக எம்மை ஆர்.எஸ்.எஸ். கைக் கூலி என்று அவதூறு பரப்பினார்கள். விளைவு. 1992-ல் பாபரி மஸ்ஜித் இடிபட்டது. அதன் காரணமாக இன்றுவரை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்புகளைக் கணக்கிட்டுப் பாருங்கள். பாபரி மஸ்ஜித் இடப் பெறுமதியை விட ஆயிரம் கோடிக்கு மேல் பொருள் இழப்பு; பல்லாயிரம் உயிர் இழப்பு. பல்லாயிரம் பெண்களின் கற்பு இழப்பு, பல்லாயிரம் பேர் கைகால் இழந்து ஊன முற்றவர்களாகச் சித்திரவதைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்றோர் தம் இளமையைத் தொலைத்து சிறையில் சித்திரவதைப் படுகின்றனர். இதற்கெல்லாம் மேலாக முஸ்லிம் சமுதாயமே தீவிரவாத சமுதாயமாகச் சித்தரிக்கப்பட்டு பெரும் கேடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கு எந்தக் கேடு நிகழ்ந்தாலும், அதைக் காவிச் சிந்தனை கொண்டோர் நிகழ்த்தினாலும், பழி முஸ்லிம்கள் மேல் வருகிறது. ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. அப்பாவி பொதுமக்கள் அதை அப்படியே நம்புகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு கிடைத்ததா? இல்லையே!

ஆக முஸ்லிம் சமுதாயம் இழப்புகளிலெல்லாம் பேரிழப்புகளைச் சந்தித்து வருகிறது. அதற்கு மாறாக பாபரி மஸ்ஜிதைத் தூக்கிப் பிடித்தவர்கள் உலகியல் வசதி வாய்ப்புகளோடு, பெயர் தாங்கி முஸ்லிம்களிடையே பெரும் செல்வாக்கோடு, பதவி சுகங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக இந்த மதகுருமார்களும், அவர்களின் பக்தர்களான பெயர்தாங்கி முஸ்லிம்களும் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடவில்லை. உலகியல் ஆதாயமே நோக்கமாகக் கொண்டு, தங்களின் சொந்த ஆதாயம், நலனுக்காகவே இப்படி நடிக்கிறார்கள் என்பதை என்று முஸ்லிம் உலகம் உணர்ந்து அவர்களின் பிடியிலிருந்து விடுபடுகிறர்களோ அன்று தான் முஸ்லிம்கள் ஈருலகிலும் வெற்றிவாகை சூட முடியும். அல்லாஹ் அருள்புரிவானாக.

நடைபெற்று வரும் இந்த திரைப்படம் சம்பந்த மாகப் பலரும் “”இஸ்லாமிய எழுச்சி” என்று வர்ணிக்கின்றார்கள். அப்படிச் சொல்பவர்கள் ஏதாவது இயக்கம், அமைப்பை சார்ந்தவர்களாக இருப்பார்கள்; அல்லது “”மார்க்க அறிஞர்” என்று தம்மை தாமே சொல்லிக் கொள்பவர்களாக இருப்பார்கள். தங்களின், தங்கள் அமைப்புகளின் வளர்ச்சியைத் தான் இஸ்லாமிய எழுச்சி என்று கூறி மக்களை வஞ்சிக்கிறார்கள் போலும். நபி(ஸல்) அவர்கள் மீது எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்று இந்த இரு சாராரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். அதாவது அறிவு பூர்வமாக இஸ்லாத்தை சொல்லிக் கொடுக்காமல், உணர்வு ரீதியாக சொல்லிக் கொடுக்கின்றார்கள். அதனால் தான் போராட்டம் வெடித்தது, சென்னை ஸ்தம்பித்தது என்றெல்லாம் கூறுகிறார்கள். இப்படி எல்லாம் சொல்லி மக்களைக் கூட்டினால்தான் அவர்களால் அரசியல், பொது வாழ்க்கையில் நீடிக்க முடியும். இது இவர்களாகத் தேடிக் கொண்ட தவறான பாதை. மாறாக நபி(ஸல்) அவர்கள் மீது முஹப்பத் வைத்து, சலவாத் ஓதி, அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று இந்த கட்டுரை வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

ஹிஜ்ரத்தைப் பற்றியும் ஹுதைபியாவைப் பற்றியும் கருத்தரங்கங்களை நடத்தினால் நல்ல தெளிவு வரும் என நம்புகிறோம். அரசியல், சமுதாய அமைப்புகள் நடத்தி வருவதாக சொல்லும் அன்பர்களே, வெள்ளிக்கிழமை பயான்களை வீணடிக்கும் மார்க்க அறிஞர்களே, கடந்த காலம் கடந்ததாக இருக்கட்டும்… இனி வரும் காலத்திலாவது நபி (ஸல்) அவர்களை எப்படிப் புரிவது? எப்படிப் பின் பற்றுவது என்று சொல்லிக் கொடுங்கள். முன்னதாக நீங்களும் அறிய முயலுங்கள். வஸ்ஸலாம்!

Previous post:

Next post: