ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2013 மே

MTM. முஜீபுதீன், இலங்கை

பிப்ரவரி 2013 தொடர்ச்சி …
அபூஹுரைரா(ரழி) கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும்போது, “”நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் குப்ரின்(இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்” என்று சத்தியம் செய்த இடம் என்றார்கள். “”பனூ ஹாஸிமுக்கும் பனூ முத்தலிபுக்கும் எதிராக “”நபி(ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்ய மாட்டோம்” என குறைஷி குலத்தாரும் கினானா குலத்தாரும் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது” என ஸுஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்” (புகாரி: 1590)
இவ்வாறு பல கொடுமைகளைச் செய்ததுடன், இஸ்லாத்தை ஏற்றவர்களுக்குப் பெற்றோரின் சொத்திலும் பங்கு கொடுக்கப்படவில்லை. முஸ்லிம்களும் அச்சொத்துக்களை ஏற்கவுமில்லை.
(ஆதாரம்: புகாரி: 1588)

குறைஷிகள் முஸ்லிம்களைத் துன்புறுத்தும் போக்கில் முஸ்லிம்களுக்கெதிராக பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்து ஏழாம் ஆண்டிலும் இது தொடர்ந்தது. இது இரண்டு அல்லது மூன்றாண்டுகள் நீடித்தது. இவ்வாறான பகிஷ்கரிப்புக் காலத்தில் நபி(ஸல்) அவர்களும், தம் உறவினர்களும் பெரும் சிரமங்களை அனுபவித்தார்கள். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுக்கு மிக உறுதுணையாக இருந்த கதீஜா(ரழி) அவர்கள் வபாத்தாகிறார்கள். அதன் பின் நபி(ஸல்) அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்த அவரின் பெரிய தந்தை அபூத்தாலிப் அவர்கள் இறக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வின் உடன் பிறப்பான அபூத்தாலிபிடம் தான் அநாதைச் சிறுவராக இருந்த நபி(ஸல்) அவர்களை வளர்க்கும் பொறுப்பினை பாட்டனார் அப்துல் முத்தலிப் ஒப்படைத்துவிட்டு இறந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் பெரியவராகும் வரைப் பராமரித்து வந்த அபூத்தாலிப், நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட பிறகும் தமது உதவிகளைத் தொடர்ந்து அளித்து வந்தார்கள். தாம் உயிரோடு இருக்கும் வரை நபியவர்களுக்கு உறு துணையாகவும் பாதுகாப்பு வலயமாகவும் அபூதாலிப் இருந்து வந்தார்கள். ஆனால் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அபூத்தாலிபின் கடைசி வேளையிலும் நபி(ஸல்) அவர்கள் உபதேசிப்பதை நிறுத்த வில்லை. அவதானியுங்கள்.

முஸய்யப் பின் ஹஸ்ன் பழன் அபீ வஹ்ப்(ரழி) அவர்கள் கூறியதாவது:
அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கி விட்டபோது நபி(ஸல்) அவர்கள், “”என் பெரிய தந்தையே! “”லாஇலாஹ இல்லல்லாஹ்” “”அடிபணிவதற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை” என்று சொல்லுங்கள். (நீங்கள் சொல்லி விட்டால்) அதை வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமையாவும், “”அபூதாலியே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், “”(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)” என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி(ஸல்) அவர்கள், “”நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன் (அவ்விதம் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும் வரை” என்று சொன்னார்கள். அப்போது தான், “”இணை வைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை” என்னும் (அல்குர்ஆன் 9:113) வசனமும், (நபியே!) நீங்கள் விரும்பிய வரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது” என்னும் (28:56) அல்குர் ஆன் வசனமும் அருளப்பட்டன. (புகாரி: 3884)

இந்த ஹதீஸ் மூலம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மனிதர்களை நரக வேதனையிலிருந்து மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சியினை அறிய முடியும். நபியின் நெருங்கிய உறவினராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களுக்கு நரகமே இடம் என்பது உறுதியளிக்கின்றது. இஸ்லாத்தை ஏற்காத, நபி(ஸல்) அவர்களுக்கு பல வழிகளிலும் உதவி செய்த நபியின் பெரிய தந்தைக்கு நரகில் கிடைக்கும் வேதனையை பின்வரும் ஹதீஸ் எவ் வாறு விளக்குகின்றது என்பதை அவதானியுங்கள்.

அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப்(ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம், “”உங்கள் பெரிய தந்தை(அபூத்தாலிபு)க்கு (அவர் செய்த உதவிகளுக்குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரிகளின் தாக்குதலிலிருந்து) பாதுகாப்பவராகவும் உங்களுக்காக (உங்கள் எதிரிகளிடம்) கோபப்படுபவராகவும் இருந்தாரே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “”அவர் இப்போது(கணுக்கால் வரை தீண்டும்) சிறியளவு நரக நெருப்பில் தான் இருக்கின்றார். நான் மட்டும் இல்லையென்றால் அவர் நரகத்தின் அடித் தட்டில் இருந்திருப்பார்” என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3883)

(ஷிஆ, சுன்னத் வல் ஜமாஅத்தினர், மத்ஹபினர், தரீக்காவினர், மஸ்லக்கினர், முஜாஹிதினர், இயக்கத்தினர், ஸலஃபியினர், காதியானியினர் மற்றும் இவை போல் எண்ணற்றப் பிரிவினர் மார்க்கத்தை நிலை நாட்டப் பெரும் பெரும் முயற்சிகள் செய்பவர்கள் குர்ஆன், ஹதீஃதை 3:103 இறைக்கட்டளைப்படி பற்றிப் பிடித்து முஹ்க்கமாத் வசனங்களிலுள்ள நேரடிக் கருத்துக்களை கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே ஏற்று நடக்காமல், ஸலஃபிகள், இமாம்கள், அவுலியாக்கள், பொய் நபி போன்ற முன்னோர்களதும், இக்காலத்து மதகுருமார்களான மவ்லவிகள தும் வழிகாட்டல்படி தான் நடக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருக்கும் வரை அவர்களுக்கு ஒருபோதும் ஹிதாயத்-நேர்வழி கிடைக் காது என்பதற்கு அபூதாலிபின் இறுதி முடிவும், 28:56 இறைவாக்கின் தெளிவான எச்சரிக்கையும் உறுதி யான சான்றுமாகும். 6:153 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் கொடுத்த நேர்வழியை விட, மேலே சொன்ன முன்னோர்கள் காட்டியதுதான் நேர்வழி என நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்” ஆ-ர்)

உலகில் வாழ்ந்த எல்லா இறைத்தூதரும் அல்லாஹ்வின் இறைநெறி நூல் மூலமாகவே மக்களை நேர் வழியின் பக்கம் அழைத்தனர். வாளைக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பரப்பப்படவில்லை. அதே போல் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தான் என்பது முன்னைய நெறிநூல்களிலும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது. ஆகவே இறுதி இறைத் தூதரும், முன்னைய இறைத்தூதர்களைப் போல் இறுதி இறைநெறி நூலான அல்குர் ஆன் மூலமே அல்லாஹ்வின் நேர்வழியைப் போதித்தார்கள். ஆகவே இஸ்லாம் வாளினால் பரப்பப்பட்டது என்பது ஒரு பிழையான வாதமாகும். அன்று இஸ்லாம் மார்க்கம் போதிக்கப்பட்ட போது பல துன்பங்ளுக்கும் நபி(ஸல்) அவர்கள் உட்பட்டார்கள். கடைசியாக அவர்களைக் கொலை செய்வதற்கும் குறைஷி நிராகரிப்பாளர்கள் தீர்மானித்தார்கள். அதை அல்லாஹ் நபிக்கு அறிவித்து மதீனாவுக்குச் செல்ல அனுமதியளித்தான். தொடர்ந்து அவதானியுங்கள்.

அன்று குறைஷிகளினால் மதிக்கப்பட்ட ஒருவர் அபூபக்கர்(ரழி) அவர்களாவர். அவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றபோது பல துன்பங்களை அடைந்தார்கள். இதனால் தான் பிறந்த மக்கா நகரை விட்டு இடம் பெயர முற்பட்ட சம்பவத்தினை பின்வரும் ஹதீஸ் விவரிப்பதை அவதானியுங்கள்.

மதீனாவை நோக்கிய நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்!
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:
என் பெற்றோர் (அபூபக்கரும், உம்மு ரூமானும்) எனக்கு விபரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்த நாளும் கழிவதில்லை. (மக்கா நகரில் வாழ்ந்த) முஸ்லிம்கள் (இணை வைப்பவர்களால் பல்வேறு துன்பங்கள்) சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது, அபூபக்கர்(ரழி) அவர்கள் அபிசீனிய நாட்டை நோக்கி, நாடு துறந்து(ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் (யமன் செல்லும் வழியில்) “”பர்குல் கிமாத்” என்னும் இடத்தை அடைந்தபோது இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் “”அல்காரா” எனும் (பிரபல) குலத்தின் தலைவராவார். அவர் “”அபூபக்ரே எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். “”என் சமுதாயத்தினர் என்னை (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்குத் தள்ளி விட்டனர். ஆகவே, நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து (நிம்மதியாக) என் இறைவனை வணங்கப் போகிறேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது இப்னு தஃகினா, “”அபூபக்ரே! தாங்களைப் போன்றவர்கள் (தாமாகவும்) வெளியேறக் கூடாது. (பிறரால்) வெளியேற்றப்படவும் கூடாது. (ஏனெனில்) நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். இரத்தப் பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்று (அவர்களது அறச் சேவைகளைப் புகழ்ந்து) கூறிவிட்டு, தங்களுக்கு நான் அடைக்கலம் தருகிறேன். நீங்கள் (மக்கா விற்கே) திரும்பிச் சென்று உங்கள் (அந்த) ஊரிலேயே உங்கள் இறைவனை வணங்குங்கள்” என்று கூறினார். அபூபக்ர் (அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்துட்டு மக்காவுக்கு) திரும்பினார்கள். அவர்க ளுடன் இப்னு தஃகினாவும் பயணமா(கித் திரும்பி)னார்.

மாலையில் இப்னு தஃகினா குறைஷி குல பிரமுகர்களைப் போய்ச் சந்தித்து அவர்களிடம் (நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்) அபூபக்கரைப் போன்றவர்கள் (நாட்டிலிருந்து தாமாக) வெளியேறுவதோ, (பிறரால்) வெளியேற்றப்படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கும், உறவுகளைப் பேணி வாழும், (சிரமப்படுவோரின்) பாரஞ் சுமந்து வரும், விருந்தினர்களை உபசரித்து வரும், சத்திய சோதனைகளில் (ஆட்படுத்தப்பட்டோருக்கு) உதவி வரும் ஒரு (ஒப்பற்ற) மனிதரையா (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்குகின்றீர்கள்?” என்று கேட்டார். (அபூபக்ர் (ரழி) அவர்களுக்குத் தான் அடைக்கலம் தரப்போவதாகக் கோரிய) இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை குறைஷிகள் மறுப்பதில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, “”அபூபக்ர், இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்புவதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாடு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறி விடுங்கள்” என்று சொன்னார்கள்.

அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃகினா அபூபக்ர் (ரழி) அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி அபூ பக்ர்(ரழி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வணங்கியும், தமது தொழுகையைப் பகிரங்கப்படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (அல்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார் கள். பிறகு அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் அல்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணை வைப்பவர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர்(ரழி) அவர்கள் அல்குர்ஆன் ஓதும் போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடிய வராக இருந்தார்கள். (அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களது இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணை வைப்பவர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது. அதனால் அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆளனுப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார்.

அப்போது அவர்கள், “”அபூபக்ர்(ரழி) அவர்கள் தமது இல்லத்திற்குளளேயே தமது இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவர்களுக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறிவிட்டுத் தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுது கொண்டும் (குர்ஆனை) ஓதிக்கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்துக்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகின்றோம். எனவே அபூபக்ரை தடுத்து வையுங்கள். அவர் அவரது இறைவனை தமது இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை” என்று கூறினர். ஆயிஷா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

இப்னு தஃகினா அபூபக்ர் அவர்களிடம் வந்து, “”நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திருப்பித் தந்துவிட வேண்டும். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்ப மாட்டேன்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர்(ரழி) அவர்கள், “”உமது அடைக்கலத்தை உம்மிடமே திருப்பித் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணியமிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திப்படுகிறேன்” என்று கூறினார்கள். அன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து, “”இரு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த (மதீனா) பகுதியை நீங்கள் ஹிஜ்ரத் செல்கின்ற நாடாக நான் (கனவில்) காட்டப்பட்டேன்” என்று கூறினார்கள்.

எனவே, மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றவர்கள் சென்றார்கள். (ஏற்கனவே) அபினீசீய நாட்டுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் பலர் (முஸ்லிம்கள் மதீனாவில் குடியேறுவதைக் கேள்விப்பட்டு) மதீனாவுக்குத் திரும்பினார்கள். (மக்காவிலிருந்து) அபூபக்ர் அவர்களும் மதீனா நோக்கி (ஹிஜ்ரத் புறப்பட) ஆயத்தமானார்கள். அப்போது அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள், “”சற்றுப் பொறுங்கள். எனக்கு (ஹிஜ்ரத்திற்கு) அனுமதி வழங்கப்படுவதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று (அபூபக்ர் அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு அபூபக்ர்(ரழி) அவர்கள், “”என் தந்தை தங்களுக்கு அர்ப்பணம்; அனுமதியை(த் தான்) எதிர் பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு “”ஆம் (எதிர் பார்க்கிறேன்)” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஆகவே அபூபக்ர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஹிஜ்ரத்) செய்வதற்காகத் தன் (பயணத்தி)னை நிறுத்தினார்கள். மேலும் அபூபக்ர் அவர்கள் (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரு வாகன(ஒட்டக)ங்களுக்கு நான்கு மாதம் கருவேலந்தளையைத் தீனி போட்டு (வளர்த்து) வந்தார்கள். ஆயிஷா(ரழி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: