பெங்களூர்,
M.S. கமாலுத்தீன்
ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந் திருப்பது இறைவனின் அருட்கொடை. அல்லாஹ்வின் அருட்கொடை நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த இயற்கை வளங்களைக் கொண்டு ஏற்படும் வளர்ச்சியும் புதிய தொழில் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வழி வகை செய்யும். இயற்கை வளங்களைச் சரியான முறையில் நம்முடைய தேவைக்குப் பயன்படுத்தியது போக எஞ்சியவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவானியை அபரிமிதமாக அள்ளித் தரும்.
ஏற்றுமதியில் முன்னிலை பெறும் நாடு சகல துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சி பெறும். சீரான வளர்ச்சி சீக்கிரமே வல்லரசாக வழியை ஏற்படுத்தித் தரும். இதில் தெளிவான திட்ட மிடுதல் இல்லை எனில் தவறுகள் ஏற்படும். இந்தத் தவறுகள் தனி மனிதனை மட்டுமே வளப்படுத்தும். இப்படி ஒரு நிலமை இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துத் தந்ததன் மூலம் ஏகத்துக்கு எல்லா வளங்களையும் கணக்கு வழக்கு இல்லாமல் சுரண்டித் தினமும் பல கோடிகளைக் குவித்து வருகிறார்கள். நான்கு பேர் நன்றாக இருப்பதற்காக தினமும் பல லட்சம் பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள் மணல் கொள்ளை மூலம். நமக்கு மிக நெருக்கமாக இருக்கும் வளங்களில் மணலும் ஒன்று. நாடு முழுவதும் ஒரு ஆறு, ஓடை பாக்கி இல்லாமல் மணல் கொள்ளை நடக்கிறது. அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களின் ஆசியோடு, பெயருக்கு அரசின் கட்டுப்பாடு இருந்தாலும், பெரிய அளவில் லாரிகளிலும், டிராக்டர்களிலும், மாட்டு வண்டிகளிலும் இரவு பகல் பாராமல் மணல் திருடப்படுகிறது. இதனால் குடிநீர் ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் பொய்ப்பித்து போவதற்கும், கிராம வாசிகள் நகரங்களை நோக்கி இடம் பெயர்வதற்கும் காரணமாக உள்ளது.
இடப் பெயர்ச்சி என்பது வளர்ச்சி அல்ல, வீக்கம். நகரங்கள் வீங்கி விரிவடைந்து கொண்டிருக்கின்றன. விளை நிலங்கள் வீடுகளாக மாறி வருகின்றன. இந்த மாற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இதில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் எதிர் காலச் சமுதாயம் ஏகப்பட்ட பாதிப்பை எதிர் கொள்ளும். இயற்கை வளங்கள் இல்லாத வாழ்க்கை, நம் நலங்களைப் பாதிக்கும். எச்ச ரிக்கை மணியை இயற்கை நல ஆர்வலர்கள் இடைவிடாது அடித்தாலும் எட்ட வேண்டிய வர்களுக்கு, வெட்ட வேண்டிய கமினை(?) வெட்டி விடுவதால் மணி (Money) ஓசை மட்டுமே கேட்கிறது. இந்தியாவை வழிநடத்தி செல்லும் பொருளாதாரப் புலி மன்மோகன் சிங்கிற்கு நேரமே இல்லை. வாங்கியக் கட னுக்கு வட்டி கட்டவும், புதிதாக கடன் வாங்க ஆள் தேடவும் நாடு நாடாக பறந்து கொண்டிருந்த வரை வரலாறு காணாத ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி (ரூ.63.30 பைசா) விழி பிதுங்க வைத்துள்ளது. ஆனாலும் எதிர்வரும் 2025ல் உலகளவில் கட்டுமானத் துறையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கும் என “”ஆகஸ் போர்ட்” நிறுவனத்தின் சர்வதேச ஆய்வு சொல்கிறது.
இப்போதே மணலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ் நாட்டுக்கு மட்டும் ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தேவைப்படுகிறது. இதை கொண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுகிறது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஏழு ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் 92 மணல் குடோன்கள் உள்ளன. அரசின் அனுமதியோடு 50 மணல் குவாரிகள் செயல்பட்டாலும் அனுமதி இல்லாமல் பல நூறு குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றைச் சில நேர்மையான அதிகாரிகள் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்வது வருடத்திற்கு 5 ஆயிரத்துக்கு மேல் இருந்தாலும், தண்டனை கிடையாது. தண்டனைத் தொகை மட்டும் கட்டித் தப்புவதால் தைரியமாகத் திருடுகிறார்கள்.
மேலும் கேரளா ஆறுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக மணல் வரத்து கிடையாது. அந்த மணலையும் எடுக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்குத் தமிழகத்திலிருந்து தான் பெருமளவு மணல் கடத்தப்படுகிறது. அதில் சரிபாதியை சிங்கப்பூர், மாலத்தீவுகளுக்கு திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்கள். செமத்தியான லாபம் எந்தச் சிரமத்தையும் எதிர் கொள்ள வைக்கிறது. ஒவ்வொரு முறையும் நூதனமான முறையில் கடத்தல் நடக்கிறது.
கட்டுப்பாடும் கண்காணிப்பும் பெயரள வுக்குத் தமிழகத்தில் இருப்பதால் மணல் வளம் அசுரவேகத்தில் அழிக்கப்பட்டு வருகிறது. மேட்டூர், கல்லணை, வைகை, பவானிசாகர் உட்பட 60க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இதில் சுமார் 21 கோடி யூனிட் மணல் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது போக 30 ஆயிரம் ஏரிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 15 கோடி யூனிட் மணல் இருக்கலாம். இவற்றை முறையாக பயன்படுத்த மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் அதிகாரம் பெற்ற குழு அமைக்க வேண்டும். ஊராட்சியளவிலும் உள்ளூர் அளவிலும் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். பசுமை ஆர்வலர்களுக்கு அக்குழுவில் பாதி இடம் தரவேண்டும். இவர்கள் மாதம் ஒருமுறை கூடி எந்த எந்த இடத்தில் மணல் அள்ளலாம் என்பதை முடிவு செய்து, அரசே அவற்றை அள்ளிப் பயனாளிகளுக்கு நேரடியாக விற்பது மூலம் பெருமளவு முறை கேட்டைத் தடுக்கலாம். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும். மணல் கடத்தலால் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை தடுக்க முடியும். கட்டடம் கட்ட அனுமதி வாங்கும்போதே, தேவைக்கு ஏற்ப மணல் ஒதுக்கீட்டையும் தவணை முறையில் பெற வழிவகை செய்வதன் மூலம் அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துவதையும் தடுக்க முடியும். இவை எல்லாம் தற்காலிக வழி தான். இயற்கை வளத்தை நிரந்தரமாக பாதுகாக்க மாற்று மணல் மட்டுமே சாத்தியப்படும்.
கண்ணாடிக் கழிவுகளை அரைத்துத் துகளாக்கி மணலுக்கு மாற்றாக ஹாங்காங்கிலும், பர்னஸ் ஆலைகளில் கழிவாக கிடைக்கும் மணலை அமெரிக்காவிலும், தாமிர ஆலைகளில் தாமிரம் எடுத்தது போக எஞ்சி இருக்கும் மணலை சிங்கப்பூரிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையை நாமும் பின்பற்றலாம். இதுபோக கருங்கற்களை உடைத்து நவீன இயந்திரங்கள் மூலம் செயற்கை முறையில் தகுந்த அளவுகளில் தரமாக தயாரிக்கப்படுகிறது. இந்த கருங்கல் மணலை பூச்சு வேலையை தவிர எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்; குறிப்பாக கான்கிரீட்டின் வலிமையை இம் மணல் கூட்டுகிறது.
இம்மணல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. கிரஷர் தூசு என்ற கிரஷர் மணல், இது ஜல்லி கல் உடைக்கும்போது கிடைக்க கூடியது. இதை வடமாநிலங்களில் 40 வருடங்களாகவே பயன்படுத்தி வருகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் பயன்பாட்டில் உள்ளது. கட்டுமானச் செலவை வெகுவாக குறைக்கக் கூடிய மற்றும் ஒரு மாற்று மணல், மலைகளை ஒட்டியுள்ள கல் குவியல்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மணல் மாவு, வலுவானது, விலையும் மலிவானது. இப்படி பல வகையில் கிடைக்கும் மாற்று மணலைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கை வளங்களை அழித்து விடாமல் நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆற்றுப் படுகைகளை அழிவிலிருந்து காக்கவும் குடி நீர் ஆதாரங்களைத் தக்கவைத்துக் கொள்ள வும் முடியும்.
இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்ற விஷயத்தில் நாளை அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற பொறுப்புணர்வுடன் எல்லா மனிதர்களும் நடந்து கொள்ள வேண்டும். இயற்கையோடு மோதாத இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை கேரளாவில் காணலாம். கிராமப்புற வாழ்வின் நன்மையும் நகர்ப்புற வாழ்வின் நன்மைகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆரோக்கியமான சூழ்நிலையில் ஆண்டு முழுவதும் தேவையான மழையை, இயற்கை வளங்களை வீண் விரயம் செய்யாத விழிப்புணர்வு நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பாடம்.
“”அல்லாஹ்வின் அருட்கொடைகளைச் சிந்தித்துப் பாருங்கள்.” அல்குர்ஆன் : 2:231
“”அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிட்டால் அதை எண்ணி விடமுடியாது”. அல்குர்ஆன் : 16:18