புரோகிதரிசம்!

in 2003 ஜனவரி

அபூ அப்தில்லாஹ்

கம்யூனிசம், கேப்பிடலிசம், செக்யூரலிசம் போன்ற சொற்றொடர்களை அடிக்கடி நாம் கேட்டு வருகிறோம். ஆனால் “”புரோகிதரிசம்” என்று புதிதாக ஒன்றைக் கூறுகிறீர்களே? என்று சில சகோதரர்களின் உள்ளங்களில் ஐயம் எழலாம். ஆம்! உண்மைதான், இப்போது “புரோகிதரிசம்’ பற்றி மக் களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எப்படி கம்யூனிசம்-பொதுவுடைமைக் கொள்கை, கேட்பிட்டலிசம் முதலாளித்துவக் கொள்கை, செக் யூரலிசம்-சமய சார்பிலாக் கொள்கை என ஒவ்வொன்றும் தனித்தனிக் கொள்கை கோட்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கின்றனவோ அவை போலவே இந்த புரோகிதரிசம் -புரோகிதக் கொள்கையும் ஒரு தனிக்கொள்கைக் கோட்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தப் புரோகிதக் கொள்கை கோட்பாடுகள் மதத்திற்கு மதம் வேறுபடுவதாக இல்லை. யூத மதம், கிறிஸ்தவ மதம், ஹிந்து மதம், புத்த மதம், இஸ்லாமிய மதம் (மார்க்கம் அல்ல) போன்ற எல்லா மதங்களிலுமுள்ள புரோகிதர்களும் ஒரே கொள்கை கோட்பாடுகளை உடையவர்கள்தான். அவர்களில் வேறுபாட்டைக் காண முடியாது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

இறைவனின் இறுதி நெறிநூலான அல்குர்ஆன் இந்தப் புரோகிதர்களின் கொள்கை கோட்பாடுகள் பற்றிக் கூறுவதை வரிசைப்படுத்திப் பார்த்தால், அவர்களின் கொள்கை கோட்பாடுகள். உள்ளங்கை நெல்லிக்கனி போல் வெட்ட வெளிச்சமாகிவிடும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

“”அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் மதகுருமார்களையும், தம் துறவிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்……..” அல்குர்ஆன் 9:31

நபி(ஸல்) அவர்கள், புரோகிதர்களாகிய மதகுருமார்களும், துறவிகளும், அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கியதையும் அல்லாஹ் ஹராமாக்கியதை, ஹலாலாக்கியதையும் மக்கள் இப்படியே கண்ணை மூடிக்கொண்டு எடுத்து நடந்ததையே இந்த 9:31 வசனத்தில் அவர்களை வணங்குவதாக அல்லாஹ் கண்டிக்கிறான் என்று விளக்கம் தந்ததாக அத்திய்யுப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் அறிவித்து திர்மிதியில் இடம் பெற்றுள்ளது.

ஆம்! புரோகிதர்களின் அடிப்படைக் கொள்கைக் கோட்பாடு மக்களை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாக நடக்க வைப்பதுதான். அதாவது ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுவதுதான் புரோகிதர்களின் அடிப்படைக் கொள்கையாகும். இதையும் அல்லாஹ் 9:34ல் தெளிவு படுத்துகிறான். அது வருமாறு:

“”… நிச்சயமாக மதகுருமார்களிலும், துறவிகளிலும் பெரும்பாலோர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்……” அல்குர்ஆன் 9:34

புரோகிதர்கள் அனைவருமே மக்களின் சொத்துக்களை ஹராமான வழியில் அதாவது தவறான வழியில் சாப்பிடுகிறவர்களே என்பதும் இந்த 9:34 வசனத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்து அல்லாஹ்வின்மீது பொய்யான கற்பனைகளைச் சொல்வதில் மன்னர்கள் இந்தப் புரோகிதர்கள்; இதையும் அல்லாஹ் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறான்; அது வருமாறு:

“”அல்லாஹ்மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். “”இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள். இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.

அவர்கள்தான் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும் அதில் கோணலையும் உண்டு பண்ண விரும்புகிறார்கள். இவர்கள்தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்”. அல்குர்ஆன் 11:18,19
மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள் என்றும், மறுமையை நிராகரிப்பவர்கள் என்றும் அல்லாஹ் கடுமையாகக் கண்டித்துள்ளான். புரோகிதர்கள் பொய்யாகக் கற்பனை செய்து மக்களை வழி கெடுக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஆதாரம் பாருங்கள்.

“”…..மேலும் அவர்கள் கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை….” அல்குர்ஆன் 2:78

கேவலம் அற்ப உலக வாழ்க்கைச் சுகத்தை நோக்கமாகக் கொண்டு, பொய்யாகக் கற்பனை செய்து நூல்களை எழுதி வைத்துக் கொண்டு, அவை அல்லாஹ்விடமிருந்து வந்தவைதான் என்று மக்களை ஏமாற்றுவார்கள் இந்தப் புரோகிதர்கள்; அதுபற்றிச் சொல்லும் இறைவாக்கைப் பாருங்கள்:

“”அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலேயே நூலை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்”   அல்குர்ஆன் : 2:79

தஃப்சீர், பிக்ஹு நூல்கள் இத்தரத்தவையே!
மேலும் இந்தப் புரோகிதர்கள் சத்தியத்தை தங்களின் குழந்தைகளை அறிவது போல் அறிந்து கொண்டுதான் அதற்கு மாறாக மக்களை வழி கெடுத்து ஷைத்தானுக்குத் துணை போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வசனங்கள் இதோ:

“”எவர்களுக்கு நாம் நெறிநூல்களைக் கொடுத் தோமோ அவர்கள் தம் (சொந்த) குழந்தைகளை அறிவது போல் (சத்தியத்தை) அறிவார்கள். ஆனால் அவர்களின் ஒரு சாரார், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்”  அல்குர்ஆன் : 2:146

“”எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல்) அறிவதைப் போல் (சத்தியத்தை நன்கறிவார்கள்…”
அல்குர்ஆன் 6:20, மேலும் பார்க்க: 2:75,78,109

இந்தப் புரோகிதர்களை விட கேடுகெட்ட அநியாயக்காரர்கள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வசனம் பாருங்கள்.

“”அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிற வனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். அல்குர்ஆன் 6:21

4:59,157,158, 6:159, 7:3,55,205, 18:102 முதல் 106, 30:32, 33:36,66,67,68 போன்ற வசனங்களின் தெளிவான கட்டளைகளுக்கு மாறாக சொந்த விளக்கங்கள் கொடுத்து, மக்களை வழிகெடுக்கும் இந்தப் புரோகிதர்கள் இறைவனது வசனங்களைப் பொய்யாக்கும் சண்டாளர்கள், அநியாயக்காரர்கள் என்பதில் சந்தேகமுண்டா?

சத்தியத்தை உள்ளது உள்ளபடிச் சொல்லும் உண்மையாளர்களின் பேச்சை மக்கள் கேட்கவிடாமல் தடுப்பதில் இந்தப் புரோகிதர்கள் மிக மிகக் குறியாக இருப்பதற்கும், அதைக் கொள்கை கோட்பாடுகளில் ஒன்றாகவும் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இதோ:

“”மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (சத்தியத் தைக் கேட்க விடாது) தடுக்கிறார்கள். இவர்களும் அதை (சத்தியத்தை) விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் (இந்த உண்மையைப்) புரிந்து கொள்வதில்லை”. அல்குர்ஆன் 6:26

ஆனால் மறுமையில் இந்தப் புரோகிதர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இவ்வாறு கதறுவார்கள்.

“”நரக நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “”எங்கள் கேடே! நாங்கள் திரும்ப(உலகத்திற்கு) அனுப்பப்பட்டால் (நலமாக இருக்குமே); அப்பொழுது நாங்கள் எங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கதறுவதைக் காண்பீர்” (அல்குர்ஆன் 6:27)

அல்லாஹ்வின் கட்டளைகளை அற்பமாக நினைப்பதிலும், அவற்றை மறுப்பதிலும், அவற்றைச் சொற்ப காசுக்காக மறைப்பதிலும், வளைப்பதிலும் இந்தப் புரோகிதர்களை யாருமே மிஞ்ச முடியாது. இதோ குர்ஆன் கூறுகிறது.

“அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்) வழியிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் மிகவும் கெட்டவை” அல்குர்ஆன்9:9

வீணான யூகங்களையும் கற்பனைகளையும் புனைந்து மக்களை வழிகெடுத்து, நரகில் சேர்க்கும் கைங்கரியத்திற்கு இந்தப் புரோகிதர்கள் ஷைத்தானுக்குத் துணை போகிறார்கள் என்பதைச் சொல்லும் குர்ஆன் வசனம்:

“”மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல் கிறார்கள்), இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு” அல்குர்ஆன் 31:6

இறைநெறிநூலை மக்களிடமிருந்து மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியும், இந்தப் புரோகிதர்கள் அதற்கு மாறாகச் செயல் பட்டு உலக ஆதாயம் அடைகிறார்கள் என்று கூறும் குர்ஆன் வசனம் பாருங்கள்.

“”தவிர இறை நெறிநூல் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக), அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக் குப் பின்னால் எறிந்து விட்டு, அதற்கு (பதிலாக)ச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள், அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும். அல்குர்ஆன்: 3:187

முஸ்லிம் மதப் புரோகிதர்களும் அல்குர்ஆனின் தெளிவான வசனங்களைத் தங்களின் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு, மக்களிடம் அற்ப மான இவ்வுலக ஆதாயங்களைப் பெறுகிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா?

(4:59,157,158, 8:159, 7:3,55,205, 18:102 முதல் 106, 30:32, 33:36,66,67,68 போன்ற வசனங்களைப் பார்க்க) இந்தப் புரோகிதர்கள் தாங்கள் செய்யும் அற்பமான செயல்களையும் மக்களிடம் மிகப் பெரிதாக விளம்பரப்படுத்தி, அதன் மூலம் உலக ஆதாயம் அடைய முற்படுவதைக் கண் கூடாகப் பார்த்து வருகிறோம். நடந்து முடிந்த தொண்டு நிகழ்ச்சிகளை பெரிதும் விளம்பரப்படுத்தி, ஏழைகளுக்குரிய ஜகாத், ஃபித்ரா போன்றவற்றை கொடுப்பதைப் பெரிதாகப் படம் பிடித்துப் பத்திரிகைகளில் பல பக்கங்கள் போட்டு விளம்பரம் தேடுகிறார்கள். ஜும்ஆ சிற்றுரைகளையும் பெரிதாக விளம்பரப் படுத்தி உலக ஆதாயம் தேடுகிறார்கள். அப்படிப் பட்ட புரோகிதர்களின் நிலைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

“”எவர் தாம் செய்த (சொற்பமான)தைப் பற்றி மகிழ்ச்சி கொண்டும், தாம் செய்யாததை (செய்த தாகக் காட்டிக்) கொண்டும் புகழப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்களென்று (நபியே!) நீர் ஒருபோதும் எண்ணாதீர்; அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.” அல்குர்ஆன் 3:188

இந்தப் புரிகோதர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டது மட்டுமில்லாமல், மக்களையும் வழிகேட்டிலாக்கவே பெரிதும் விரும்புகின்றனர் என்று கூறும் குர்ஆன் வசனம் பாருங்கள்:

“”(நபியே!) நெறிநூலிலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்; நீங்களும் வழிகெட்டு விட வேண்டும் என்று அவர் கள் விரும்புகின்றனர்”. அல்குர்ஆன் : 4:44

இந்தப் புரோகிதர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாக ஹராமான வழிகளில் தங்களின் உடலை வளர்ப்பதால், அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகி, அவர்களது இருதயங்களும் கல்லாக ஆகிவிட்டன. அதனால்தான் முஸ்லிம் புரோகிதர்கள் தங்களை ஹஜ்ரத்-ஹஜர்-கல் என்று அழைக்கப்படுவதை விரும்புகின்றனர். அதனால் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக அவர்கள் நடப்பதோடு மக்களையும் அந்த வழிகேட்டிலேயே அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் மோசடியாளர்களே என்று கூறும் குர்ஆன் வசனம் பாரீர்:

அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம், அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம். (இறை) வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்க ளிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின்(பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்…” அல்குர்ஆன் 5:13

இந்தப் புரோகிதர்கள் தங்களின் வயிறுகளில் ஹராமான வழியில் ஈட்டிய உணவை உட்கொள்வதால், தங்கள் வயிறுகளில் நரக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றனர் என்று மிகக் கடுமையாக எச்சரிக்கும் குர்ஆன் வசனம் பாரீர்:

எவர், அல்லாஹ் நெறிநூலில் அருளியவற்றை மறைத்து, அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.  அல்குர்ஆன் 2:174

இந்தப் புரோகிதர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். மலக்குகளும் சபிக்கிறார்கள், மனிதர்களும் சபிக்கிறார்கள். மேலும் அந்தச் சாபத்திலேயே அவர்கள் நிலைத்திருக்கிறார்கள் என்று கூறும் குர் ஆன் வசனங்களைப் பாரீர்:

“”நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளை யும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”.  அல்குர்ஆன் 2:159

யார்(நெறிநூல் உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிப்பவர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ நிச்சயமாக அவர்கள்மீது அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.  அல்குர்ஆன் 2:161

அவர்கள் அ(ச்சாபத்தி)லேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படாது; மேலும் (மன்னிப்புக்கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.   அல்குர்ஆன் : 2:162

நெறிநூல் வசனங்களை மக்களிடம் ஓதிக் காட்டத்தானே செய்கிறோம்! எங்கே மக்களிட மிருந்து மறைக்கிறோம்? அவற்றை நிராகரிக்கிறோம்? என்று இந்தப் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றலாம். நெறிநூல் வசனங்களில் உள்ளது உள்ளபடி இவர்கள் மக்களுக்குக் கூறுவதும் இல்லை. அதன்படி அவர்கள் நடப்பதும் இல்லை. மக்களை நடக்கத் தூண்டுவதும் இல்லை. அதற்கு மாறாக நெறிநூல் வசனங்களுக்கு உள்விளக்கம் வெளி விளக்கம் என்று இருக்கிறது. அலிஃபுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. அரபி மொழி கற்றவர்களுக்கு மட்டுமே அது விளங்கும் என்று மக்களை ஏமாற்றி, அந்த நெறிநூல் வசனங்கள் கூறும் கருத்துக்கு நேர் முரணாக கருத்தைக் கூறி மக்களை வழிகெடுப்பார்கள்.

உதாரணமாக 7:3 வசனம் யாரையும் பாதுகாவ லர்களாகக் கொண்டு அவர்களைப் பின்பற்றக் கூடாது; அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை நேரடியாக விளங்கிப் பின்பற்ற வேண்டும் என்று கட் டளையிடுகிறது. அக்கட்டளைக்கு மாறாக இமாம்களைப் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்க ளைப் பின்பற்றச் (தக்லீது) சொல்வார்கள். 7:55 வச னம் துஆ பணியாகவும் அந்தரங்கமாகவும் இருக்க வேண்டும்; வரம்பு மீறக்கூடாது என்று கட்டளையிடுகிறது. அதற்கு முரணாக கூட்டாகச் சப்தமிட்டு ஆமீன் கோரஸாகக் கூறி கூட்டு துஆ செய்ய வேண்டும் என்று மக்களை வரம்பு மீறச்செய்து வழி கெடுப்பார்கள். 7:205 இறைக் கட்டளை திக்ரு மனதிற்குள்ளும், மிக்க பணிவோடும், அச்சத்தோடும் உரத்த சப்தமின்றியும் செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது. அதற்கு முரணாக சப்தமிட்டு, காட்டுக் கூச்சல் போட்டு கூட்டாக திக்ரு செய்யச் செய்து மக்களை வழி கெடுப்பார்கள்.

33:36 இறைக்கட்டளை அல்லாஹ்வும், அவனது தூதரும் கட்டளையிட்டு விட்டால் அதில் வேறு கருத்துக் கொள்ள உண்மையான விசுவாசிகளுக்கு அணுவத்தனையும் அனுமதி இல்லை. அது பகிரங்கமான வழிகேடு என்று தெளிவாகக் கூறுகிறது. இக் கட்டளைக்கு முரணாக இந்தப் புரோகிதர்கள் வண்டி வண்டியாக வேறு கருத்துக்களைக் கூறி மக்களை வழி கெடுக்கிறார்கள்.

6:159, 30:32 இறைக்கட்டளைகள் முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவினை இல்லவே இல்லை. பிரிவினையை ஏற்படுத்துகிறவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறார்கள் என்று நெற்றிப் பொட்டில் அடித்தால் போல் கூறுகிறது. இப்புரோகிதப் பண்டாரங்களோ இறைவனது இக்கட்டளைக்கு முரணாக முஸ்லிம் சமுதாயத்தை மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம், குழு என்று பலவாறாகப் பிரித்து இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதோடு, மக்களை பகிரங்கமான வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள்.

இப்படி இந்தப் புரோகிதர்கள் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கவும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்கவும் செய்கிறார்களே அல்லாமல் (பார்க்க 16:116) நெறிநூல் வசனங்கள் கூறும் உண்மைக் கருத்தைக் கூறுவதில்லை. இந்தப் புரோகிதர்கள் மக்களிடம் தங்களை ரப்புகளாக ஆக்கிக் கொள்கின்றனர். இதையே அல்லாஹ் 9:31 வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான். ஹிந்துப் புரோகிதர்கள் தங்களை கடவுளின் அவதாரங்களாகவும், சந்நிதானங்களாகவும், கிறிஸ்தவப் புரோகிதர்கள் பாவமன்னிப்பு அளித்து இரட்சிக்கும் இரட்சகர்களாகவும் முஸ்லிம் புரோகிதர்கள் தங்களை ஹழரத்-சந்நிதானம் என்றும் மவ்லவி-அல்லாஹ்வைச் சார்ந்தவர் அதாவது இறைத் தன்மை உள்ளவர் என்றம் மெளலானா-பாதுகாவலர்-இரட்சகர் என்றெல்லாம் தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டும் அழைத்துக் கொண்டும் மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள்.

2:159 வசனத்தில் அல்லாஹ்வே மனிதர்களுக்காக நெறிநூல் வசனங்களை விளக்கி விட்டதாக உறுதியாகக் கூறுகிறான். அவனது இறுதித் தூதர் அந்த நெறிநூல் வசனங்களை நடைமுறைப்படுத்திக் காட்டிச் செயல் முறையிலேயே விளக்கிக்காட்டி விட்டார்கள். அதற்குப் பிறகும் இந்தப் புரோகிதப் பண்டாரங்களின் விளக்கங்கள் மக்களுக்குத் தேவையா? ஆக அவர்களின் விளக்கங்கள் உண்மை விளக்கங்கள் அல்ல; மக்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று அவர்களை நரகில் தள்ளும் ஷைத்தானுக்குத் துணை போகும் ஷைத்தானின் பிரதான ஏஜண்டாகச் செயல்படும் பரம அயோக்கியத்தனமே அல்லாமல் வேறில்லை.

அரபி மொழி கற்றவர்களே மார்க்கத்தைச் சரியாக விளங்க முடியும் என்று பிதற்றும் புரோகித வர்க்கம் அபூஜஹீலின் வாரிசுகளாக இருக்க முடியுமே அல்லாமல் நபிமார்களின் வாரிசுகளாக ஒருபோதும் இருக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக உறுதியாகக் கூறி மக்களை விழிப்படையச் செய்துள்ளார்கள். அதாவது

“உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்; நபிமார்கள் தீனாரையோ, திர்ஹத்தையோ விட்டுச் செல்லவில்லை” என்று கூறி இருக்கிறார்கள் என்பது பலவீனமான ஹதீஃத் என்பது ஒரு பக்கம் இருக்க, இந்த ஹதீஃதின் பிற்பகுதியை இந்தப் புரோகிதப் பண்டாரங்கள் மறைத்து விடுவார்கள். காரணம் இந்த ஹதீஃதுக்கு முரணாக அவர்கள் தொண்டைத் தொழிலாக்கித் தங்களின் தொப்பையை நரக நெருப்பைக் கொண்டு நிரப்புவதால் தான் ஹதீஃதின் பிற்பகுதியை மறைக்கிறார்கள்.

தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நரக நெருப்பால் நிரப்புகிறவர்கள் எப்படி நபிமார்களின் வாரிசாக இருக்க முடியும்? எந்த நபியாவது தமது தூய பணியைத் தொழிலாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தியதாக ஆதாரம் உண்டா? தொண்டைத் தொழிலாக்கிக் கொண்டவர்கள் புரோகிதத் தலைவன் அபூஜஹீலின் வாரிசாக மட்டுமே இருக்க முடியும். வழிகேட்டின் தலைவன் ஷைத்தானின் வாரிசாக மட்டுமே இருக்க முடியும். அதனால் தான் இந்தப் புரோகிதப் பண்டாரங்களிடமும் அபூஜஹீலுக்கு இருந்த அரபி படித்த தலைக்கணம் -ஆணவம் அப்படியே நிறைந்து காணப்படுகிறது. ஆகப் புரோகிதப் பண்டாரங்கள் அபூஜஹீலின்-ஷைத்தானின் வாரிசுகளே அல்லாமல், நபிமார்களின் வாரிசுகள் அல்லவே அல்ல. இந்தப் புரோகிதப் பண்டாரங்கள் அடையப் போகும் இழிவையும் கேவலத்தையும், நரக வேதனையையும் 2:79, 159,161,162, 3:77, 5:13,9:9 குர்ஆன் வசனங்களை படித்து விளங்குகிறவர்கள் கண்டிப்பாக அறிய முடியும்.

புரோகிதர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் என்பதையும், அதற்குக் காரணம் அவர்கள் உண்மையுடன் இறக்கப்பட்ட நெறிநூலில், இவர்கள் தங்கள் சொந்தக் கற்பனையைப் புகுத்தி கருத்து வேறுபாடு கொண்டு பெரும் பிளவிலேயே நிலைத்திருப்பதாகும் என்பதையும் கூறும் குர்ஆன் வசனங்கள் பாரீர்.

அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்; இவர்களை நரக நெருப்பை சகித்துக் கொள்ளச் செய்தது எது? அல்குர்ஆன் 2:175

இதற்குக் காரணம் நிச்சயமாக அல்லாஹ் இந் நெறிநூலை உண்மையுடன் அருள்செய்தான்; நிச்சயமாக இன்னும் இதில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர். அல்குர்ஆன் 2:176

இந்தப் புரோகிதர்களுக்கு இன்னொரு தலைக் கணமும் உண்டு. அவர்கள் தங்களை அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று பகல் கனவு காண்கின்றனர். அதனால்தான் தங்களை அவதாரம், சந்நிதானம், பாதிரி, ஹழரத், மவ்லவி, மவ்லானா என்று அழைத்துக் கொள்வதுடன், இறைவன் தங்களைக் கடுமையாகத் தண்டிக்க மாட்டான் என்றும் இறுமாந்து இருக்கின்றனர். அவர்களின் இந்த மேலெண்ணம் தவறு என்று கூறும் குர்ஆன் வசனம் பாரீர்.

“”ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இறைவனிடமிருந்து அப்படி ஏதேனும் உறுதி மொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் இறைவன் தன் உறுதிமொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா? என்று (நபியே!) நீர் கேளும்”.   அல்குர்ஆன் 2:80 (பார்க்க: 2:79,80)

இந்தப் புரோகிதர்களின் கொள்கை கோட்பாடுகள் ஒன்றாக இருந்தாலும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாக இருந்து மக்களை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்ப்பதாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் போட்டி, பொறாமையும் ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாகத் தாக்கி விமர்சித்துக் கொள்வதும் சர்வசாதாரணம். இந்தப் புரோகிதர்கள் அற்ப இவ்வுலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், இவ்வாறு போட்டிப் பொறாமையுடன் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மதத்து புரோகிதர்களும் தாங்கள்தான் நேர்வழியில் இருப்பதாகக் கூறிக்கொண்டு தங்களை நம்பி கண் மூடிப்பின்பற்றும் மக்களை சுவர்க்கத்தில் கொண்டு சேர்ப்பதாக, மோட்சம் அடையச் செய்வதாக மார் தட்டிக் கொள்வார்கள். தங்களையும், தங்களைப் பின் பற்றுகிறவர்களையும் தவிர எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் வழிகேடர்கள்; நரகம் புகுவார்கள் என்று இவ்வுலகிலேயே தீர்ப்பும் அளிப்பார்கள். இவ்வாறு வழிகேடர்கள் என்று தீர்ப்பு அளிக்கப்படாத எந்த ஒரு புரோகித வர்க்கமும் இவ்வுலகில் இல்லை.

ஆனால் அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறி இருப்பது போல் இறைப் பணியை தொண்டைத் தொழிலாக்கித் தொப்பையை நிரப்பும் புரோகிதர்கள் அனைவரும் வழிகேடர்களே! நரகிற்கு விறகுக் கட்டைகளாக ஆகக் கூடியவர்களே. முஸ்லிம் புரோகிதர்களிலும் ஒவ்வொரு பிரிவினரும் மற்றப் பிரிவினர்களை காஃபிர்கள், இறை நிராகரிப்பாளர்கள், அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று மதத் தீர்ப்பு அளிப்பவர்களாகவவே உள்ளனர். “”அவன் கிடக்கிறான் குடிகாரன்; எனக்கு இரண்டு மொந்தை ஊற்று” என்ற குடிகாரனின் பேச்சு போலவே இந்தப் புரோகிதர்களின் இந்தத் தீர்ப்புகளும் உள்ளன.

முஸ்லிம் புரோகிதர்கள் சமுதாயத்தை மவ்லவிகள் அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் என்றும், அவாம்கள்-பகுத்தறிவற்ற ஆடு, மாடுகளைப் போன்ற சிந்தனைக் குருடர்கள் என்றும் இரு பிரிவினர்களாகப் பிரித்து வைத்துக் கொண்டு, சமுதாயத்தின் 2 சதவீத புரோகிதக் கூட்டம் மார்க்கத்தைச் சொல்லும் வர்க்கம் என்றும், எஞ்சிய 98 சதவீத அவாம்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த புரோகித மவ்லவி வர்க்கம் கூறுவதை அப்படியே வேதவாக்காக எடுத்து நடக்க வேண்டும் என்றும் துர்போதனை செய்கின்றனர். கொயபல்ஸ் தத்துவப்படி குர்ஆனை அவாம்களால் விளங்க முடியாது என்று தொடர்ந்து கூறி, அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, அல்லாஹ்வின் தெளிவான நேரடியான போதனைகளை எடுத்து நடக்கவிடாமல் ஆக்கியுள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் முரணான இவர்களின் சுய ஊகங்களை எடுத்து நடக்க வைத்துள்ளனர். மக்களிடம் இன உணர்வுகளையும், மத உணர்வுகளையும் (மார்க்க உணர்வு அல்ல) தூண்டி விட்டு முஸ்லிம்களில் மாற்றுப் பிரி வினர்களுடனும், மாற்று மதத்தினர்களுடனும் சதா சண்டையிட்டு, குழப்பத்தையும், அமைதி இன்மையையும் ஏற்படுத்துவதே இப்புரோகிதர் களின் குறிக்கோள். “”ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பது போல் இப் புரோகிதக் கூத்தாடிகளும் ஊர் இரண்டு படுவதையே பெரிதும் விரும்புகின்றனர்.

ஹிந்துப் புரோகிதர்கள் எப்படி அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஹிந்துத்துவா மத வெறியைத் தூண்டி பெரும் கலவரங்களையும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீச் செயல்களையும் செய்ய வைக்கின்றனரோ, அதே போல் முஸ்லிம் மதப் புரோகிதர்களும் அப்பாவி அவாம்களை-மவ்லவி அல்லாதவர்களைத் தூண்டி விட்டு குர்ஆன், ஹதீஃத் போதனைகளுக்கு முற்றிலும் முரணான பல தீச் செயல்களைச் செய்ய வைக்கின்றனர். தூண்டிவிடுவதும் இப்புரோகிதர்களே!  விஷயம் முற்றி ஆபத்து வரும் போது அந்த அப்பாவிகளை தங்களை விட்டுக் கழற்றி விடுவதோடு காட்டிக் கொடுத்து விட்டு தப்பி விடுவதும் இப் புரோகிதர்களே!

1992க்குப் பிறகு அதற்கு முன்னால் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தின் பல வன்முறைச் சம்பவங்கள், குண்டு வெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள் போன்ற சமூகக் கொடுமைகள் வளர்ந்து வர ஹிந்துப் புரோகிதர்கள் எந்த அளவு காரணகர்த்தாக்களாக இருந்தார்களோ, இருக்கிறார்களோ அந்த அளவு முஸ்லிம் தவ்ஹீத் புரோகிதர்களும் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். ஆபத்து வரும்போது இவர்களால் தூண்டிவிடப்பட்டு மத உணர்வுக்கும், இன உணர்வுக்கும் ஆள்பட்டு செயல்பட்டவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டு, இவர்கள் தப்பிக் கொள்வதும் இந்தப் புரோகிதர்களின் கொள்கை கோட்பாடுகளில் உள்ளது தான். காட்டிக் கொடுப்பது என்ன? அதைவிட கேவலமான இழி செயல்களிலும் தங்களின் அற்ப உலக சுகத்திற்காக ஈடுபடவும் இப்புரோகிதர்கள் தயங்கமாட்டார்கள்.

அப்பாவி மக்கள் இந்தப் புரோகிதர்களின் சுய நலப்போக்கை அறியாமல் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதுதான் வேதனை மிக்க நிகழ்ச்சியாகும். அறுப்பதற்கு இட்டுச் செல்லும் கசாப்புக் கடைக்காரர் பின்னால் செல்லும் செம்மறி ஆடுகள் போல், மக்கள் கூட்டம் நரகிற்கு இட்டுச் செல்லும் இந்தப் புரோகிதர்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறார்கள். ஆட்டிற்காவது ஆறாவது அறிவான பகுத்தறிவு இல்லை. எனவே ஆறாவது அறிவைப் பெற்றுள்ள மனிதன் ஐயறிவு மிருகத்தைத் தன் பின்னால் அறுபட வர வைக்க முடிகிறது. ஆனால் ஆறறிவு படைத்த மக்கள் கூட்டம், அதே ஆறறவு படைத்த புரோகிதர்கள், தங்களை நரகிற்கு இட்டுச் செல்லும் பரிதாப நிலையை உணர முடியாமல், அவர்கள் பின்னால் செல்லுவது வேதனையிலும், வேதனை மிக்க நிகழ்ச்சியாகும். அப்படிப்பட்ட மக்களைத் தான் “”அவர்கள் ஆடு, மாடுகளைப் போன்றவர்கள்; இல்லை! அதைவிட கேடு கெட்டவர்கள்” என்று அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான் போலும் (பார்க்க : 7:179, 25:44). ஆக ஷைத்தானுக்கு வழிபட்டுத் தங்களையும், தங்களை நம்பி தங்கள் பின்னால் வரும் மக்கள் கூட்டத்தையும் நரகிற்கு இட்டுச் செல்லும் புரோகிதர்களும், அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறும் மிருகங்களை விட கேடுகெட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.

அல்குர்ஆனில் பெரும்பாலும் யூத, கிறிஸ்தவ மதப் புரோகிதர்கள் செய்து வரும் இறைவனது கட்டளைகளுக்கு முரண்பட்ட குற்றச் செயல்கள் தான் விவரிக்கப்பட்டுள்ளன. எனவே, முஸ்லிம் மதப் புரோகிதர்கள், அவை எங்களைக் கட்டுப் படுத்தாது என்று கூறுவதுண்டு. குற்றச் செயல் எனக் குறிப்பிடப்படும் போது, அதை யார் செய்தாலும் குற்றம்தான். யூத, கிறிஸ்தவர்கள் செய்தால் குற்றம்; அதையே முஸ்லிம்கள் செய்தால் குற்றமில்லை என்ற வாதம் முட்டாள்த்தனமான வாதமாகும். லூத் (அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்டதாக அல்லாஹ் அல்குர்ஆன் 29:29ல் குறிப்பிடுகிறான். முஸ்லிம் புரோகிதர்கள் அக்குற்றத்தைச் செய்து கொண்டு அது லூத்(அலை) அவர்களது சமூகம் செய்தால்தான் குற்றம்; நாங்கள் செய்தால் குற்றமில்லை என்று வாதிட்டால் அவர்களை வடிகட்டிய முட்டாள்கள் என்றே கூற முடியும். எனவே அல்குர்ஆனில் ஒரு குற்றச் செயல் எந்த சமூகம் செய்தக் குற்றச் செயலாக அல்குர்ஆனில் குறிப்பிட்டிருந்தாலும், அதே குற்றச் செயலை ஆதத்தின் சந்ததிகளில் யாருமே செய்யக் கூடாது. அதிலும் குறிப்பாக அல்குர்ஆனை இறுதி நெறி நூலாக ஒப்புக் கொண்டுள்ள முஸ்லிம்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. அதிலும் முஸ்லிம் புரோகிதர்கள் மிக மிகக் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. ஆனால் அதற்கு மாறாக முஸ்லிம் புரோகிதர்கள் செயல்பட்டு, அல்லாஹ்வுக்கு எதிரியாகவும், ஷைத்தானுக்கு துணைவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

அதிலும் மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்களை விட முஸ்லிம் மதப் புரோகிதர்கள் கேடிலும் மிகக் கேடு கெட்டவர்கள் என்று உறுதியாகக் கூறலாம். காரணம் மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்களும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகிறவர்களும் தங்களின் செயல்பாடுகளின் நல்லது கெட்டதை அலசி ஆராய-உரைத்துப் பார்க்க உரை கல்லான கலப்படமில்லாத, மனித அபிப்பிராயங்கள் கல வாத தூய்மையான நெறி நூல்கள் அவர்களிடம் இல்லை. ஹிந்து, யூத, கிறிஸ்தவ மதங்களிலுள்ள வேதப் புத்தகங்கள் மனிதக் கரம் பட்டுக் கரை படிந்து விட்டன. அவற்றின் தூய நிலையை இழந்து விட்டன. அவற்றிலுள்ளவைகளில் எவை எல்லாம் இறைவனால் அருளப்பட்ட உண்மையான நெறி நூல் கருத்துக்கள்? எவை எல்லாம் இப்புரோகிதர்களின் முன்னோர்களால் கற்பனையாகப் புகுத்தப் பட்டவை? என்பதை அறிய முடியாத பரிதாப நிலையில் சகல மதத்தினரும் இருக்கின்றனர். எனவே அவர்களின் வழிகேட்டிற்கு ஓரளவு நியாயமான காரணம் இருக்கிறது.

ஆனால் முஸ்லிம் மதப்புரோகிதர்களுக்கு என்ன கேடு வந்தது? அல்லாஹ்வால் இறுதி நெறிநூலாக அருளப்பட்ட அல்குர்ஆன், ஒரு புள்ளி கூட இந்தப் புரோகிதர்களின் முன்னோர்களாலும், இவர்களாலும் மாற்றப்பட முடியாத அதி அற்புத நிலையில் இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும் வரை பாதுகாக்கப்படும். மேலும் இறை வனது அறிவிப்புகள் தெள்ளத் தெளிவாகவும், நேரடியாகவும் இருக்கின்றன. அது போதாதென்று தமது 23 வருட வாழ்க்கையை அல்குர்ஆனாகவே ஆக்கிக் கொண்ட நபி(ஸல்) அவர்களின் நடை முறைகள் தெளிவாகப்பதிந்து பாதுகாக்கப்பட் டுள்ள நிலையில், ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் இருக்கின்றன. முஸ்லிம்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டின் உண்மை நிலையை, அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையை, இறுதி நெறிநூலான அல்குர்ஆனைக் கொண்டும், மிகச் சரியான ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் அல்குர்ஆனின் நேரடிப் போதனைக்கும், நபி(ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நடைமுறைக்கும் முரணாக வழிகேட்டில் இட்டுச் செல்லும் தவறான போதனைகளை இந்தப் புரோகிதர்கள் விடாப்பிடியாக ஏன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? இதிலிருந்தே அவர்களின் புரோகிதப் புத்தி குன்றிலிட்ட தீபம் போல் ஒளி விடுகிறதே!

அவர்கள் ஏன் மக்களை குர்ஆன் உங்களுக்கு விளங்காது; அவற்றை விளங்க அரபி மொழி ஞானம் வேண்டும்; குர்ஆன், ஹதீஃத் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து அவற்றை விளங்க முடியாது என்று, கொயபல்ஸ் தத்துவப்படி மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் தெரியுமா? அந்த இரகசியத்தை விளங்கிக் கொள்ளுங்கள். மக்கள் குர்ஆன், ஹதீஃத் மொழி பெயர்ப்புகளை நேரடியாகப் பார்த்து சிந்திக்க ஆரம்பித்து விட்டால், இந்தப் புரோகிதப் பண்டாரங்களின் தில்லு முல்லுகளும், எத்துவாலித்தனமும், மக்களை நரகிற்கு இட்டுச் செல்லும் ஷைத்தானின் ஏஜண்டாகச் செயல்பட்டு வயிறு வளர்ப்பதும் எளிதாகப் புரிந்துவிடும். மக்கள் இப்புரோகிதர்களைப் புறக்கணித்து விடுவார்கள். சத்தியத்தை, நேர்வழியை மிக எளிதாக விளங்கிச் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு முட்டுக்கட்டையாகத்தான் இப்புரோகிதர்கள் குர்ஆன், ஹதீஃத் உங்களுக்கு விளங்காது; அரபி படித்த மவ்லவிகளுக்கே விளங்கும் என்று கீரல் விழுந்த இசைத்தட்டுப் போல் கோரஸ் பாடுகிறார்கள். மக்களிடமிருந்து சத்தியத்தை மறைப்பது புரோகிதர்களின் கொள்கை கோட்பாடுகளில் மிக மிக முக்கிய ஒன்றாகும்.

எனவே முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இந்த மவ்லவி புரோகிதர்களின் வசீகர வலையிலிருந்து விடுபடாதவரை அவர்களுக்கு ஈடேற்றமோ, விமோசனமோ இல்லவே இல்லை. இவ்வுலகிலும் இழிவும், கேவலமும், நீங்காத துன்பத்துயரப் படலம் தான்; மறுமையிலோ அதை விட இழிவும் கேவலமும் அடைவதோடு மீட்சியே இல்லாத நரகை அடைய நேரிடும். முஸ்லிம்களே விழித்தெழுங்கள். ஈமானுடைய உணர்வு (இன உணர்வோ, மத உணர்வோ அல்ல) பெறுங்கள். மவ்லவி புரோகிதப் பண்டாரங்களை முற்றிலுமாக ஓரங்கட்டுங்கள். இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெறுங்கள். அல்லாஹ் அருள்புரிவானாக.

Previous post:

Next post: