திருமறை வசனங்கள் யாருக்கு பயனளிக்கும்?

in 2014 ஏப்ரல்

மங்களம் மைந்தன்

தித்திக்கும் திருமறையாக இருக்கும் திருகுர்ஆனின் இரத்தினக் கருத்துக்களால் கவரப்பட்டு தினந்தோறும் கணக்கில்லா மக்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். சத்தியத்திற்கு சாட்சியளிக்கும் சபையில் சங்கமித்து, சத்தியக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மறுபக்கம் சமுதாய சமுத்திரத்தில் பலர், தங்களின் தவறான கருத்தோட்டத்தில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான கருத்துக் குருடர்களாக நாடுகள் தோறும் நிறைந்திருக்கிறார்கள். திருகுர்ஆனைப் படித்தப் பிறகும் இஸ்லாத்தை விட்டும் தூரமாக ஒதுங்கியே நிற்கிறார்கள். சத்தியத்தின் ஒளியில் பயணத்தைத் தொடர்வதற்குத் தயங்குகிறார்கள். படைத்தவனுக்கு மட்டும் பணிந்து வாழவேண்டும் என்ற ஏகத்துவ மந்திரத்தை முன்மொழிய மறுக்கிறார்கள். குர்ஆன் இறங்கிய காலகட்டம் முதல் காலங்காலமாக இத்தகைய இரு சாராரும் இருக்கவே செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம், திருகுர்ஆனைப் படித்து அதன் தூய கருத்துக்களின் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகும் பலர், மறுமையில் கடுகளவும் பயனளிக்காத பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் குர்ஆனை ஏற்றுக் கொண்டாலும் நம்பினாலும் குர்ஆனுக்கும் அவர்களின் செயல்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வ தெனில் அவர்கள் பெயரளவிற்கு முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன? திருகுர்ஆனைப் படித்தவர்கள், படிப்பவர்கள் நேர்வழி பெறுவார்கள் என்று சொல்வதெல்லாம் உண்மையா? உண்மை யயனில், திருகுர்ஆனை தெரிந்தும் மக்கள் திருந்தாதது ஏன்? இவ்வாறு யாரேனும் கேள்வி கேட்டால் இதற்கு சரியான பதில் நம்மிடத்தில் இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு திருகுர்ஆனிலேயே தெளிவான பதில் இருக்கிறது.
நம்பிக்கை கொண்டவர்கள்:

சத்தியத்தை தெரிந்து கொள்ள வேண்டும், அதையறிந்து அடுத்த கணமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேட்டத்தில் தேசம் தேசமாக வலம் வருபவர்கள் இருக்கிறார்கள். சத்தியத்தைத் தெரிந்திருந்தும் அதை அலட்சியப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இந்த இரு சாராரில் நாம் எந்த வகையினரின் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்? சத்தியத்தை தெரிந்து கொள்ளும்போது தயங்காமல் ஏற்றுக் கொள்பவர்களாகவே நாம் இருக்க வேண்டும். அதை அழகிய முறையில் நம்பிக்கை கொள்பவர்களாக மாற வேண்டும். இவ்வாறு உண்மையைத் தெரிந்து கொண்ட பிறகு உதாசினப்படுத்தாமல் உறுதியாக, உண்மையாக நம்பிக்கைக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருந்தால்தான் திருமறை வசனங்கள் நமக்கு நல்ல முறையில் பயனளிக்கும். இதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களின் வெளிச்சத்தில் விளங்கிக் கொள்ளலாம்.

அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கைக் கொண்டோருக்குப் பயன் தரும். (அல்குர்ஆன் 51:55)

இவை மனிதர்களுக்குத் தெளிவான சான்றுகள், உறுதியாக நம்பும் சமுதாயத்திற்கு நேர்வழியும் அருளுமாகும். (அல்குர்ஆன் 45:20)

இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவு படுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும் (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே?” என்று கூறுவார்கள். இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், நோய் நிவாரணமுமாகும் என்று கூறுவீராக! நம்பிக்கை கொள்ளாதவர்களின் காதுகளில் அடைப்பு உள்ளது. இது அவர்களுக்குக் குருட்டுத்தனமாகவும் தெரிகிறது. அவர்கள் தொலை வான இடத்திலிருந்து அழைக்கப்படுகின்றனர்.
(அல்குர்ஆன் 41:44)

“”வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! சான்றுகளும், எச்சரிக்கைகளும் நம்பிக்கை கொள்ளாத கூட்டத்துக்குப் பயனளிக்காது. (அல்குர்ஆன் 10:101)

நீர் குர்ஆனை ஓதும்போது உமக்கும் மறுமையை நம்பாதோருக்கும் இடையே மறைக்கப்பட்ட ஒரு திரையை ஏற்படுத்துகிறோம். அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும் செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும்போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.
(அல்குர்ஆன் 17:45,46)

அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் சொன்ன விதத்தில் சரியான முறையில் நமது இறை நம்பிக்கை நம்மிடம் இருந்தால் மட்டுமே நாம் ஏற்றிருக்கும் திருமறையின் வசனங்கள் நமக்கு வழிகாட்டக்கூடியதாக இருக்கும். எதை நம்பிக்கை கொள்ள வேண்டும்? எவ்வாறு நம்பி நம்பிக்கை கொள்ள வேண்டும்? எதை நம்பிக்கை கொள்ளக் கூடாது? என்று இஸ்லாம் சொல்கிறதோ அதன்படி அழகிய முறையில் நமது நம்பிக்கை இருக்க வேண் டும். அவ்வாறு நம்பாமல் பெயரளவிற்கு நம்பியவர்களாக நாம் இருந்தால் திருமறை வசனத்தின் பயன் கிடைக்கவே கிடைக்காது. உதாரணமாக ஒருவர் மறுமையை நம்பிக்கை கொள்ளாமல் இஸ்லாம் சொல்லும் மற்ற விஷயங்களை அப்படியே நம்பு வராக இருந்தாலும் அவருக்கு திருமறை வசனத்தின் போதனைகள் பயன் தராது.

நன்மையைச் செய்பவர்கள்:
மனித சமுதாயத்திற்கு நன்மை தரும் காரியங்களைப் போதித்து தீமையான காரியங்களை எச்சரிக்கும் பொதுநலம் பேணும் கொள்கையே இஸ்லாம். இத்தகைய இஸ்லாத்தை ஏற்றிருக்கும் மக்கள் தங்களுக்கும் தங்களைச் சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கும் நன்மையான காரியங்கள் செய்வதற்கு ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நன்மை செய்வதற்கான வாய்ப்புகள் வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு தீமையை துடைத் தெறிந்து நல்ல செயல்களை செய்வதற்கு ஈடுபாடு கொண்டவர்களாக நாம் இருக்கும்போது மட்டுமே திருகுர்ஆன் தரும் அழகிய பயனை அனுபவிப்பவர் களின் பட்டியலில் இடம்பெற முடியும். நல்லதோ கெட்டதோ எதையும் செய்யலாம். எப்படியும் வாழலாம் என்று நன்மையான காரியங்களை செய்யாமல் அநீதம் செய்வதில் அக்கறைக் கொண்டவர்களுக் கும் அதிலே அமிழ்ந்து ஆனந்தம் அடைபவர்களுக் கும் அருள்மறை வசனங்கள் துரும்பளவும் பயனளிக்காது. இந்தப் பேருண்மையைப் புரிந்து கொள்வதற்குரிய சான்றுகள் இதோ.

இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்கள்; நன்மை செய்வோருக்கு நேர்வழியும், அருளுமாகும். அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள் ஸகாத் தையும் கொடுப்பார்கள். அவர்கள் தாம் மறுமையை உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் 31:3,4)

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகின்றோம். அநீதி இழைத்தோருக்கு அது நஷ்டத்தையே அதிகப்படுத்தும். (அல்குர்ஆன் 17:82)

மனம் திருந்தி வாழ்பவர்கள்:
ஒருபோதும் தவறு செய்யாதவர், தவறு செய்யும் பண்புக்கு அப்பாற்பட்டவர் என்று மனிதர்களுள் எவரையும் சொல்ல இயலாது. இறைத்தூதர்களும் கூட மனிதர்கள் என்ற அடிப்படையில் சின்னஞ்சிறிய தவறுகளை செய்துள்ளார்கள். இன்றைய காலத் திலோ நாம் தினந்தோறும் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ அநேகமான தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு இருக்கும் நிலையில் திருமறை வசனங்கள் நமக்கு சுட்டிக் காட்டப்பட்டு அவற்றின் மூலம் எச்சரிக்கப்படும் போது அவற்றை கவனமாகக் கேட்க வேண்டும்.

அதில் சொன்ன செய்திகளை மனதில் வைத்துக் கொள்வதோடு நமது தன்மையை திருத்திக் கொள்ள வேண்டும். திருமறையின் போதனையை உயிர்ப் பிக்கும் விதமாக நமது காரியங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு சத்தியத்தை கவனமாக கேட்டு மனம் திருந்தி வாழும் குணம் கொண்டவர்களுக்கு திருமறை வசனங்கள் பலன் தரும் களஞ்சியமாக இருக்கும். இதற்குரிய சான்று களைக் காண்போம்.

பூமியை நீட்டினோம். அதில் முளைகளை நிறுவினோம். அதில் கவர்கின்ற ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம். திருந்தும் ஒவ்வொரு அடியாருக்கும் இது பாடமும், படிப்பினையுமாகும். (அல்குர்ஆன் : 50:7,8)

மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வேண்டி பூமியில் செய்த ஏற்பாடுகளை கூறும் இறைவன். இந்தச் செய்தி யாருக்குப் பயனளிக்கும் என்பதையும் குறிப்பிடுகிறான். அதாவது அளவற்ற அருளாள னின் அருட்கொடையை பிரதிபலிக்கும் அருள்மறை வசனத்தின் மகத்தான செய்தி தவறுகளிலிருந்து திருந்தும் அடியவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும். மாறாக, இந்த வசனத்தைப் படிப்பவர்கள் எல்லோரும் இந்த வசனத்தின் மூலம் படிப்பினையை பாடத்தைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இறையச்சமுள்ளவர்கள்:
நம்மைப் படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அவன் கொடுத்த அருட்கொடை களை நல்ல முறையில் நல்ல வி­யங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையயனில் மறுமை நாளில் இறைவன் முன்னால் குற்றவாளி யாக நிற்கவேண்டிய நிலை வந்துவிடும். அவன் அளிக்கும் தண்டனை கடுமையானதாக இருக்கும். இந்த உலகத்தில் தப்பிப்பது போன்று எந்தவிதத் திலும் நரகத்திலிருந்து தப்பிக்க முடியாது. எதற்கு ஈடாகவும் சொர்க்கத்தை அடைய முடியாது. நிலையான மறுமை வாழ்க்கையில் தோல்வியை நஷ்டத்தை சந்தித்துவிடக் கூடாது என்று எவரெல் லாம் பயப்படுகிறார்களோ, படைத்தவனுக்கு பயந்து பயணிக்கிறார்களோ அவர்களுக்கு குர்ஆன் வசனங்கள் உரிய முறையில் பயனளிக்கும். அல்லாஹ்வின் ஆற்றல்களை அதிகாரங்களை அறிந்தும் அவனுக்கு அஞ்சாமல் இருப்பவர்களுக்கு திருமறை குர்ஆன் சிறிதளவும் பயனளிக்காது என்பதே உண்மை.

(முஹம்மதே!) நீர் துர்பாக்கியசாலியாக ஆவதற் காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை. (நம்மை) அஞ்சுபவருக்கு அறிவுரையாகவே (அருளினோம்) (அல்குர்ஆன் : 20:2,3)

(முஹம்மதே! நம்மை) அஞ்சுவோருக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும். பிடிவாதம் பிடிக்கும் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்வதற்காக வுமே உமது மொழியில் இதை எளிதாக்கியுள்ளோம்.
(அல்குர்ஆன் : 19:97)

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்தவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்படமாட்டாது. தனிமையில் இருக்கும்போது தமது இறைவனை அஞ்சி தொழுகையை நிலை நாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்த மாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கி றார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.
(அல்குர்ஆன் : 35:18)

இந்த அறிவுரையைப் பின்பற்றி தனிமையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக் குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக!  (அல்குர்ஆன்: 36:11)

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அவை திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றை யயான்று ஒத்ததாகவும் உள்ளன. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின் றன. பின்னர் அவர்களின் தோல்களும் உள்ளங் களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மை யடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன்மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை. (அல்குர்ஆன் : 39:23)

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். நீர் அவர்கள் மீது அடக்குமுறை செய்பவர் அல்லர். எனது எச்சரிக்கையை அஞ்சுபவனுக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக!  (அல்குர்ஆன் 50:45)

கட்டுப்பட்டு பணிந்து நடப்பவர்கள்:
திருகுர்ஆன் என்பது இறைவேதம்தான், முஹம்மது நபியவர்களால் சுயமாக எழுதப்பட்ட தல்ல என்பதற்கு ஏராளமான சான்றுகள் திருகுர் ஆனிலும் திருத்தூதரின் வாழ்விலும் பொதிந்துள் ளன. திருகுர்ஆன் விளக்கும் வி­யங்கள், விடுக்கும் சவால்கள், சமுதாயத்திற்கு தரும் தகவல்கள், பிரச்சனைகளுக்கு தரும் தீர்வுகள் அனைத்தும் அது ஓர் ஒப்பற்ற இறைவேதம் என்பதை நிரூபிக்கின்றன. இதையறிந்தும் அதன் போதனைகளை அலட்சியப் படுத்துபவர்களுக்கு அத்திருமறை வசனம் கடுகளவும் பயனளிக்காது. அதன் அறிவுரையை எச்சரிக்கையை அறிந்ததோடு மட்டுமில்லாமல் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தும் துடிக்கும் அடியவர்களுக்கு அந்தத் திருமறையின் வசனங்கள் பயனளிக்கும். இதை அல்லாஹ் திருமறை வசனத்திலே சொல்லியிருக்கிறான்.

இவர்களை விட வலிமை மிக்க எத்தனையோ தலைமுறையினரை இவர்களுக்கு முன் அழித்துள் ளோம். அவர்கள் ஊர்களில் இவர்கள் சுற்றித் திரிந்தனர். தப்பிக்கும் இடம் இருந்ததா? யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாகச் செவியுறு கிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது.
(அல்குர்ஆன் :50:37)

சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங் கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே; அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந் தோருக்கு நற்செய்தி கூறுவீராக! அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கிவிடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலைநாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர். (அல்குர்ஆன்: 22:34,35)

அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? அவர்களின் உள்ளங்கள் புரிந்து கொள்ளா தவாறு அவற்றின் மீது மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் நாம் ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 18:57)

மாத்திரை சத்துள்ளதாக இருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தும் நோயாளிகள் சரியாக இருக்க வேண்டும். அவர்கள் அதைக் கையாளும் விதத்தை அறிந்திருக்க வேண்டும். அப் போதுதான் மாத்திரையின் பயனை பரிபூரணமாகப் பெறமுடியும். இதுபோல, உன்னதமான வாழ்க்கை வழிகாட்டியான திருகுர்ஆனின் கருத்துக்கள் ஆழமானவை, அழகானவை, அர்த்தமுள்ளவை. இதில் நம்மில் எவருக்கும் எள் முனையளவுகூட சந்தேகமில்லை.

அதேசமயம் அதன் பயனை அடைவதற்கு சில தன்மைகள் நம்மிடம் இருக்கவேண்டும். நம்மைப் பற்றிப் பிடித்திருக்கும் சில தன்மைகளைக் கழற்றி எறிந்திட வேண்டும். அப்போது தான் அதன் உண்மையான தாக்கத்தை சந்திக்க முடியும். அது காட்டும் ஒளிமிக்கப் பாதையில் பயணிக்க முடியும். அதை விடுத்து, திருக்குர்ஆனைப் படிப்பவர்களெல் லாம் அதன் பயனை அடைந்துவிடமுடியாது. அதன் கருத்துக்களை தெரிந்து கொள்பவர்கள் அனை வரும் அசத்தியப் பாதைகளில் இருந்து விலகி சத்திய பாதையான இஸ்லாமிய வழியில் வாழ்பவர்களாக மாறிவிடமாட்டார்கள்.

எனவே திருமறையின் வசனங்கள் எத்தகைய மக்களுக்குப் பயனளிக்கும்? பயனளிக்காது? என்பதை கவனமாக அறிந்து அதற்கேற்ப நம்மை அமைத்து கொள்ளும்போது மட்டுமே நாம் திருமறையின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியும். நன்றி: தீன்குலப்பெண்மணி
அதில் உள்ளதை அப்படியே எழுதியுள்ளோம்.

ஆசிரியர் குறிப்பு :
இக்கட்டுரை ததஜவினரின் இதழான தீன்குலப் பெண்மணியில் வந்ததாகும். இக்கட்டுரையைப் படித்த மாத்திரத்தல் 4:112, 61:2,3, 49:11,12 போன்ற இறைவாக்குகளே எமது நினைவுக்கு வந்தன.

ததஜ தலைவரும், தாயிகளும், தொண்டர்களும் அவர்களே வெளியிட்ட இந்தக் கட்டுரையில் எடுத்து எழுதியிருக்கும் குர்ஆன் வசனங்கள் கூறும் அறிவுரைகளின்படி நடக்கிறார்களா? ஐங்காலத் தொழுகைகளை, விடாது ஜமாஅத்துடன் தொழுது நிலை நிறுத்துகிறார்களா? மற்றவர்கள் மீது இல்லாத பொல்லாத அவதூறுகளை தலைவரின் வழிகாட்டலை ஏற்றுக் கண்மூடித்தனமாக வாரி இறைக்காமல் இருக்கிறார்களா? 4:49, 53:32 இறைக்கட்டளைகளை நிராகரித்து நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம். தவ்ஹீத்வாதி எனப் பீற்றாமல் இருக்கிறார் களா? இறையச்சமோ, மறுமை பயமோ இன்றி பொய் கூறாமல் இருக்கிறார்களா? பொய் சத்தியம், அல்லாஹ் மீது ஆணையிட்டே பொய் சத்தியம் செய்யாமல் இருக்கிறார்களா? 3:103,105, 6:153, 159, 30:32, 42:13,14 இறைவாக்குகளை நிராக ரித்துப் பிரிவுகளை, பிளவுகளை, இயக்கங்களைப் தூக்கிப் பிடிக்காமல் இருக்கிறார்களா? இல்லையே! அப்படியானால் ததஜவினர் அவர்களே பிறருக்கு உபதேசித்துள்ளது போல் குர்ஆன் வசனங்கள் பயன ளிக்கும் நிலையில் இருக்கிறார்களா? பயனளிக்காத வர்களின் பட்டியலிலிருக்கிறார்களா? அவர்களே முடிவு செய்யட்டும். அல்லாஹ் நேர்வழி காட்ட துஆ செய்கிறோம்.

Previous post:

Next post: