விமர்சனம் : கோட்டாறு முனாழராவில் தங்களை ஆலிம் இல்லை என்று கூறி வெளியேற்றி விட்ட கோபத்தில்தான் ஆலிம்களை வெறுக்க ஆரம்பித்ததாக அல்ஜன்னத் நவம்பர் 2014 பக்கம் 35ல் எழுதி இருக்கிறார்களே?
விளக்கம் : “”தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி” என்ற நூலை அவர்கள் வெளியிட்ட ஆரம்பத்திலேயே இப்படியொரு விமர்சனம் வந்து நாம் அப்போதே அவர்களின் அபத்தங்களை அம்பலப்படுத்தி இருந்தோம். பொதுவாக ஆணவம், அகங்காரம்,வீண் பெருமை கொண்ட இந்த மவ்லவிகள் 7:146 இறை வாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களையே நேரடியாக எடுத்துக் காட்டினாலும், அவற்றை நம்ப மாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று குர்ஆன் கூறுவதையே எடுத்துக் காட்டினாலும், 25:30 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனை நிராகரித்து அவர்கள் சொல்லுவதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அரைத்த மாவையே அரைப்பார்கள். அந்த அடிப்படையில் மீண்டும் அதே பல்லவியைப் பாடியுள்ளனர்.
அனைத்து மதகுருமார்களும் தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் பண்ணுகிறவர்கள் என்று 61:2,3 இறைவாக்குகள் கூறுவதை நிராகரித்து ஊருக்கு உபதேசம் செய்வார்கள். 4:112 இறைவாக்குக் கூறுவது போல் அவர்கள் செய்யும் பாவங்களையும் மற்றவர்கள் மீது துணிந்து சுமத்தி விடுவார்கள். அல்ஜன்னத் டிசம்பர் 2014 இதழ் தலையங்கத்தில் கபட நாடகம் என்ற தலைப்பில் எழுதியுள்ளனர். அரசியலில் ஆர்வப்பட்டு 1997ல் அவர்களிடமிருந்தும் வழமை போல் வெளியேறிய பீ.ஜை. மற்றும் ததஜவினரை எப்படி விமர்சித்துள்ளார்களோ, அதில் சிறிதும் குறையாமல் செயல்படுகிறவர்கள் தான் ஜாக்கினர். இரு சாராருக்கும் இடையில் பெருத்த வேறுபாடு இல்லை. கழுதை விட்டையில் எப்படி முன் விட்டை, பின் விட்டை என்று வேறுபாடு இல்லையோ அதேபோல் ஜாக்கிக்கும், ததஜவிக்கும் பெருத்த வேறுபாடு இல்லை. இரு சாராரும் புரோகித வர்க்கமே. மதகுருமார்கள் என்ற வேஷதாரிகளே. அவர்களின் வாயிலிருந்து வருபவை பெரும்பாலும் பொய்களே! குர்ஆன் சுமார் 164 இடங்களில் பொய்யர்கள், பொய்ப்பிப்பவர்கள் என்று கூறும் பெரும்பாலான இடங்களைப் படித்துப் பாருங்கள். ஒரே நேர்வழி மார்க்கத்தை பல கோணல் வழி மதமாக்கிப் பிழைப்பு நடத்தும் இம்மதகுருமார்கள் பற்றியவையே அவை என்பதை அறியலாம்.
ஜாக்கினர் மிகச் சரியான, துல்லிய மான கணக்கீட்டுப் பிறையை ஏற்றவர்கள், அல்ஜன்னத்தில் எழுதியவர்கள், பின்னர் அந்தர் பல்டி அடித்துக் கண்ணால் பார்க்கும் சர்வதேசப் பிறைக்குத் தாவியதே கேவலம் சவுதியிலிருந்து கிடைக்கும் அற்ப வருமானமே காரணம்.
அப்படிப்பட்டப் பொய்யர்கள் எம்மைப் பற்றிப் பொய் கூறச் சொல்லியா கொடுக்க வேண்டும்! கோட்டாறு முனாழராவில் நாம் மேடையில் ஏறவுமில்லை. அவர்கள் நம்மை வெளியேற்றவும் இல்லை.
உண்மையில் நடந்த சம்பவம் இதுதான். 30.10.1984ல் திருச்சி சின்னப்பர் இறையியல் கல்லூரியில் சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் என்ற தலைப்பில் பேசினோம். அப்போது நாம் திருச்சி எலக்ட்ரிக், எலக்ட்ரோனிக், என்ஜினியரிங் வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்ததால், அந்த சங்கச் சார்பில், 5000 பிரதிகள் அடித்து தமிழகம் முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதி எஸ்.கே.மதனிக்கும் கிடைத்துள்ளது. அப்போதைய அவரதும், பீ.ஜை.யினதும் நிலை தர்கா, தரீக்கா சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்ப்பதுதான் “தவ்ஹீத்’ என்றே விளங்கிப் பிரசாரம் செய்தனர். மத்ஹபுகளும் வழிகேடுதான், குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் மட்டுமே நேர்வழி என்ற தெளிவு அவர்களிடம் இருக்கவில்லை.
எனவே எஸ்கே.மதனி “பல்சமய சிந்தனை’ என்ற அந்தச் சிறிய நூலைப் படித்துப் பரவசப்பட்டு, எமக்கு அன்புள்ள “சீர்திருத்த பெரியார்’ என்று அடைமொழியிட்டு, தங்கள் ஊர் கோட்டார் மவ்லவிகள் நிறைந்த ஊர்; அவர்களிடையே இக் கருத்துக்களை எடுத்து வைக்க அழைப்பு விடுத்தார். நாமும் அவ்வழைப்பை ஏற்று 1985 ஆரம்பத்தில் அங்கு சென்று மவ்லவிகளுக்கு மத்தியில் அக்கருத்துககளை எடுத்து வைத்தோம். அப்போது அங்கிருந்த அரபி மதரஸாவின் தலைமை ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி மிகக் கடுமையாக எதிர்த்துக் கேள்வி கேட்டு எம்மைத் திணரடித்தார். அனைத்திற்கு அல்குர்ஆனிலிருந்தே ஆதாரம் கொடுத்தோம். அதன் விளைவு அவர் தலைமையாசிரியர் பதவியையும், சுன்னத் ஜமாஅத் கொள்கையையும் உதறித் தள்ளிவிட்டு, குர்ஆன், ஹதீஃத் மட்டுமே நேர்வழி என்ற உயர் நிலைக்கு வந்துவிட்டார்.
அவருக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்து குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்ற நான்கின் அடிப்படையில் விவாதிக்க ஒப்புக் கொள்ள வைத்து, ஒப்பந்தத்தில் கையயழுத்தும் வாங்கிக் கொண்டனர். இதை எஸ்.கே.யும், பீ.ஜையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்விதம் விவாதம் செய்ய முடியாது என்று மறுத்தளித்தனர். நாம், புதிதாக நம்பக்கம் வந்துள்ள ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி விளக்கக் குறைவால் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்ற நான்கின் அடிப்படையில் விவாதிக்க ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டார். இந்த நிலையில் விவாதிக்க மறுத்துப் பின்வாங்கினால், அதுவே அவர்களுக்கு வெற்றியாக அமைந்துவிடும். சு.ஜ.வினருக்கு இருக்கும் பிரசார பலத்தால் நாடு முழுவதும் நம்மை நாறடித்து விடுவார்கள். குர்ஆன், ஹதீஃத் பிரசாரத்துக்கு பெருத்த பின்னடைவு ஏற்படும்.
எனவே குர்ஆன், ஹதீஃதை அடுத்து நீங்கள் இஜ்மா என்றாலும், கியாஸ் என்றாலும், இன்னும் எதைச் சொன்னாலும் அவை குர்ஆன், ஹதீஃதுக்கு ஒத்து இருந்தால் மறுப்பில்லை. குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்க முடியாது என்று சொன்னால் அவர்களாலும் மறுக்க முடியாது. ஏற்றுக் கொள்வார்கள் என்று சொன்னோம். அதன்படி அவர்களும் ஒப்புக் கொண்டு விவாதத்திற்கு நாள் குறித்து ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.
திருச்சி திரும்பிய நாம் விவாததினத்திற்கு இரண்டு நாள் இருக்கும் நிலையில் நாகர்கோவில் சென்று, அப்போது சு.ஜ.வினரிடமிருந்து முஸ்லிம் ஜமாஅத்தினரிடம் வந்திருந்த கலாச்சார பள்ளியில் வைத்து ஆலோசனை செய்து, எப்படி விவாதத்தை முறையாக எதிர்கொள்வது என்று முடிவு செய்தோம். அப்போது நாம் மவ்லவி இல்லை, அதனால் விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்ற விவகாரமே இல்லை. நல்ல முறையில் ஆலோசனையை முன்னின்று நடத்தி எடுத்த அழகிய முடிவுடன், மறு நாள் ஓய்வாக இருப்பதால், காயல்பட்டினம் சென்று அங்கு தப்லீஃகில் நம்முடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த செய்யது இப்ராஹீம் ஆலிம் சாஹிப், மவ்லவி ஜதுரூஸ் ஆலிம் போன்றோரிடம் நம்முடைய குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்ற நேர்வழிக் கருத்தை அவர்களிடம் எடுத்துக் கூறி சிந்திக்க வைப்போம் என்ற எண்ணத்துடன் புறப்பட்டுச் சென்றோம்.
இந்த நடப்புகளை எல்லாம் தங்களின் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட சுன்னத் ஜமாஅத்தினரின் மூளை படுவேகமாகச் சுழல ஆரம்பித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர்தான் எஸ்.கேயின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அவர்களிடையே குர்ஆன், ஹதீஃத் மட்டுமே நேர்வழி-ஒரே மார்க்கம் என்று விளக்கியதன் விளைவு, அவர்களின் குருகுல புரோகித மதரஸாவின் தலைமையாசிரியரே நேர் வழியின் பக்கம் வந்து விட்டார். அதன் விளைவே இந்த விவாத ஒப்பந்தம். இந்த நிலையில் நாம் விவாதத்தில் கலந்து கொண்டால் அவர்களின் நோக்கம் நிறைவேறாது. தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற அச்சத்தில் எம்மைத் தடுக்க வழி என்ன என ஆலோசித்து, மவ்லவிகள் மட்டுமே விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்தனர். இவர்களும் அதே புரோகிதக் குட்டையில் ஊறிய மட்டைகள் தானே. புரோகித புத்தி கொண்டவர்கள்தானே. அதனால் அவர்கள் விதித்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள்.
நாம் காயல்பட்டினத்திலிருந்து அடுத்த நாள் திரும்பியவுடன் இந்தப் புதிய சுயநல நிபந்தனையை எம்மிடம் சொன்னார்கள். நாம் ஒன்றும் கவலைப்படவில்லை. பேர், புகழை நாடி இருந்தால் தானே வாய்ப்பு நழுவிவிட்டதே என்று கவலை ஏற்படும். பீ.ஜை.யும் 1985 இறுதியில் நாம் நடத்திய மாநாட்டில் வருவதாக எம்மிடம் ஒப்புக் கொண்டு விட்டு வாக்குமாறி வரவில்லை. அவரது நெருங்கிய தோழர் ஒருவர் ஒப்புக் கொண்டு விட்டு ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, அது மத்ஹபுகளை எதிர்க்கும் கூட்டம். அதனால் வரவில்லை என்று சொன்னவர்தானே! அதனால் மத்ஹபுக ளைப் பற்றிய தடுமாற்றத்தில்தான் இருந்தார். எனவே அன்று இரவு நடுநிசி வரை பழைய ஜமியாவின் உயரமான இடத்தில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு, எதிர் தரப்பினர் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு எப்படிப் பதில் சொல்லவேண்டும் என்று துளைத்துத் துளைத்துக் கேட்டு மனதில் இருத்திக் கொண்டும், விவாதத்தில் சரியான பதில்களைத் தரவில்லை.
எனவே விவாத மேடைக்கு வெளியே ஓரிடத்தில் இருந்து கொண்டு சு.ஜ.வினரின் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட ஆயத்துகள், ஹதீஃத்கள் இவற்றை ஒரு தாளில் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தோம். இதைப் பார்த்த எதிர் தரப்பினர் அதையும் தடுத்து நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் எதிர் தரப்பினர், நீங்கள் இந்த மேடையில் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்ற நான்கின் அடிப்படையில் தான் விவாதித்து வருகிறீர்கள். உங்களின் எதிர்கால பிரசாரங்களும் இந்த நான்கின் அடிப்படையில்தான் இருக்குமா? என்ற குதர்க்க மான கேள்வியை முன் வைத்தனர். இதற்கு நாம் முன்னர் விவாதம் தடைபடாமல் நடைபெற சொல்லிக் கொடுத்த யுக்தியான குர்ஆன், ஹதீஃ துக்கு முரணில்லாதவற்றை இஜ்மா என்றாலும், கியாஸ் என்றாலும் நாங்கள் மறுக்கமாட்டோம். குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்டவற்றையே நாங்கள் மறுக்கிறோம் என்று சொல்லி இருந்தால் கலவரமே ஏற்பட்டிருக்காது. அதற்கு மாறாக பீ.ஜை. அவசரப்பட்டு அது இந்த மேடைக்கு மட்டும்தான் பொருந்தும் என்று தவறாக நயவஞ்சகத்தனமாகச் சொல்லிவிட்டார். அதன் விளைவு? அதை வைத்துப் பெரும் கலவரத்தையே உண்டாக்கி விட்டனர். 1986ன் ஆரம்ப நிலையில் நாம் இருந்ததால் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே நேர்வழி என்ற தெளிவான சிந்தனையில் இருந்தவர்கள் மிகமிகச் சொற்பமே. குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்ற நான்கின் அடிப்படையில் இருந்தவர்களே பெருங் கூட்டம்.
இந்த நிலையில் எதிர் தரப்பினர் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட னர். பார்த்தீர்களா இவர்களின் இரட்டை வேடத்தை-முனாஃபிக் தனத்தை. மேடைக்கு ஒரு பேச்சாம். வெளியே வேறு பேச்சாம். இவர்களை விடக்கூடாது என்று கூடி இருந்த பெருங்கூட்டத்தை இவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். பெருங்கலகம் ஏற்பட்டது. மேடை ஏறி இவர்களைத் தாக்க முற்பட்டு விட்டனர். இவர்களைக் காப்பாற்றி பக்கத்திலுள்ள பள்ளியின் உள்ளே மிஹ்ராபுக்குச் சமீபமாக கொண்டு போய் வைத்து இவர்களை அவர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது பெரும் பிரச்சினையாக ஆகிவிட்டது.
இதுதான் உண்மை நடப்பு. நாம் விவாத மேடையில் ஏறவுமில்லை. மவ்லவி இல்லை என்று நம்மை அவர்கள் வெளியேற்றவும் இல்லை. அதனால் வெறிகொண்டு ஆலிம்களைப் பகைக்கவுமில்லை. அல்ஜன்னத்தில் எழுதி இருப்பது தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய். துணிந்து அப்பட்டமான பொய்களை வாரி வாரி இறைப்பது மவ்லவிகளுக்குக் கைவந்த கலை. இந்த உண்மையை அறிந்து கொள்ள நீங்கள் வேறு எங்கும் போகவேண்டாம். எந்தப் பல்சமயச் சிந்தனை நூலைப் படித்துப் பரவசப்பட்டு எம்மை கோட்டாறுக்கு மவ்லவிகளுக்கு மத்தியில் அக்கருத்துக்களை எடுத்து வைக்க எஸ்.கே. அழைப்பு விடுத்தாரோ அந்த நூலையே படித்துப் பாருங்கள். குறிப்பாக அதன் 4ம் பதிப்பு 57ம் பக்கத்திலிருந்து 63ம் பக்கம் வரை படித்துப் பாருங்கள்.
ஆலிம்கள் என்று பெருமை பேசும் இந்த மவ்லவிகளை விட எழுதப் படிக்கத் தெரியாத ஆடு மேய்ப்பவர்கள்தான் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்று தெளிவாகவே கூறி இருக்கிறோம். இதை அல் குர்ஆனும் அல்ஜுமுஆ 62:2 இறைவாக்கில் நெற்றிப் பொட்டில் சம்மட்டியடியாக எடுத்துரைக்கிறது. இவ்வசனத்தைப் படித்துணராதவர்கள் ஆலிம்களா? ஜாஹில்களா? நபி(ஸல்) அவர்களின் வாரிசுகளா? அபூ ஜஹீலின் வாரிசுகளா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
இன்னொரு சம்பவமும் எமது நினைவுக்கு வருகிறது. எஸ்.கே., பீ.ஜை.யுடன் எமக்கு தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே மார்க்கத்தில் ஆலிம-அவாம் என்ற வேறுபாடு இல்லை என்று எஸ்.கே.க்கு நாம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும் போது பீ.ஜை. சுயமாகக் குறுக்கிட்டு அபூஅப்தில்லாஹ் நான் எஸ்.கே.க்குத் தெளிவு படுத்துகிறேன் என்று சொல்லி விட்டு, மிக அழகாக ஆலிம்-அவாம் வேறுபாடு மார்க்கத்தில் இல்லை தான் என்று அற்புதமாக விளக்கத்தான் செய்தார். அன்று பீ.ஜை. அப்படித் தெளிவாகப் பேசியது எமக்கு ஐஸ் வைக்கவா? அல்லது ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லை என்ற உண்மையை உணர்ந்தா? அல்லாஹ்வே அறிவான். இன்று அவர் ஆலிம்-அவாம் வேறுபாட்டைத் தூக்கிப் பிடிப்பதே நமக்கு வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். 7:146 இறைவாக்குச் சொல்வது போல் ஆலிம்கள் எனப் பெருமை பேசி, மற்றவர்களை அவாம்கள் என இழிவுபடுத்தும் இம்மவ்லவிகளை அல்லாஹ்வே குர்ஆனை விட்டும் திருப்பி விடுகிறான். குர்ஆன் வசனங்களைக் காட்டினாலும் நம்பமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகக் கொள்வார்கள். இந்த உண்மையை நாம் சொல்லவில்லை. 7:146 இறைவாக்கில் அல்லாஹ்வே கூறுகிறான். மீண்டும் மீண்டும் மீண்டும் படித்து மனதில் இறுத்திக் கொள்பவர்கள் இந்த மவ்லவிகளின் இழி குணத்தை (பார்க்க 7:175-179, 45:23, 47:25) நிச்சயமாக அறிய முடியும்.
எந்த அல்லாஹ்வின் கையில் எனது உயிர் இருக்கிறதோ, அவன்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். கோட்டாறு விவாத நிகழ்வின் போது உண்மையில் இடம் பெற்ற சம்பவங்களையே எடுத்து எழுதியுள்ளேன். மேலும் அப்பட்டமான பொய்களை எஸ்.கே. பீ.ஜை. வகையராக்கள் மக்களிடையே பரப்பி வருவதால் நடந்த சம்பவத்தை உள்ளது உள்ளபடி மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் கட்டாயம், நிர்பந்தம் ஏற்பட்டதே இவற்றை அம்பலப் படுத்தக் காரணம் என்பதை அறியவும்.