கேட்கும் செவிப்புலனின் சிறப்பு

in 2017 அக்டோபர்

Post image for கேட்கும் செவிப்புலனின் சிறப்பு

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.

அல்லாஹ் இப்பூமியில், மிருகங்களுக்கும்,மனிதர்களுக்கும் ஐம்புலன்களை கொடுத்து அதன்மூலம் வாழ வழி செய்துள்ளான்,ஆயினும் மிருகங்களையும் மனிதர்களையும் பிரித்து அறிந்து கொள்வதற்காக, மனிதர்களுக்கு மட்டும் ஆறாவது அறிவாகிய, நன்மை தீமையை பிரித்தரிவிக்கும் பகுத்தறிவை கொடுத்து கண்ணியப்படுத்தியுள்ளான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் பகுத்தறிவை தம் மன இச்சைக்குப் பயன்படுத்தி படைத்த இறைவனை அறிந்து கொள்ளாமல் மிருகத்தைவிட கீழ் நிலையிலேயே இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.

மனிதர்களுக்கும்,மிருகங்களுக்கும் பொதுவான ஐந்து புலன்களும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று இணைந்தே செயல்படுவதாக நவீன அறிவியல் ஆய்வு கூறுகிறது. ஒலியுணர்வு, தொடு உணர்வு, காண் உணர்வு, சுவை உணர்வு, நுகர் உணர்வு ஆகிய ஐந்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரே அறிவின் பிரிவுகள் என்றே ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஐந்து புலன்களிலும் தலையாய புலன் கண் என்றே அனைவரும் கூறுவார்கள். இம்மாபெரும் ஒளிமயமான உலகை காண கண் வேண்டும். கண் இல்லையேல் உலகமே இருள்.

ஆயினும் திருவள்ளுவர், செல்வங்களில் சிறந்த செல்வமாக கண்ணை சொல்லாமல் செவியை சொல்கிறார்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் ஏன்?

செவிச் செல்வமாகிய செவியுணவின் அருமையை அறியாது நாவினால் சுவைக்கும் உணைவை மட்டும் நயந்திருப்போர் மனிதர்களேயல்ல…. விலங்குகள் என்று கடிந்துரைப்பதுடன், அத்தகையோர் இருந்தாலென்ன இறந்தாலென்ன! என்று கேட்கிறார்.

அல் குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்.

அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றையும் விடத் தாழ்ந்தவர்கள். அல் குர்ஆன்.7:179.

நமது நீதி நூலும் “ கற்றலின் கேட்டல் நன்று “ என்றே கூறுகிறது. அறிவை இரு வாசல்களின் வழியாக நாம் அனைவரும் பெற வேண்டும். அவை கற்பதும், கேட்பதுமே! நல்ல செய்திகளை கேட்காததன் காரணமாகவே நரகில் கிடப்பதாக அல்குர்ஆன் கூறுகிறது.

நாங்கள் செவி தாழ்த்தி கேட்டிருந்தாலோ, அவற்றைப் புரிந்து கொண்டிருந்தாலோ (இன்று) நரகவாசிகளாய் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என்று நிராகரிப்பாளர்கள் மறுமையில் கூறுவார்கள்.” – அல் குர்ஆன்.67:10.

ஐம்புலன்களிலேயே செவிப்புலனுக்குள்ள சிறப்பு என்னவென்றால், மனித, ஜின்கள் நேர் வழி நடக்க இறக்கியருளப்பட்ட குர்ஆனை, எவரும் கண்களால் பார்த்து விசுவாசம் கொள்ளவில்லை. செவியால் கேட்டே ஈமான் கொண்டனர்.

“செவியுற்றோம்,கீழ்ப்படிந்தோம்!”-அல்குர்ஆன்.5:7.

ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாக கேட்டனர்; பின்னர் தம் சமுக மக்களிடம் சென்று கூறினர், நாங்கள் மிகவும் அற்புதமானதொரு குர் ஆனை செவியுற்றோம்.” – அல்குர்ஆன்.72:1.

கண்களுக்கு இமை என்னும் கதவுகளையும், கண்டபடி பேசிவிடாதே! என்பதற்காக வாய்க்கு உதடுகளையும் தந்துள்ள இறைவன், நல்ல செய்திகள் எத்திசையிலிருந்தும் உன் செவியில் கேற்கட்டும் என்பதற்காகத்தான் கதவின்றி காதுகளைப் படைத்துள்ளான்.” எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்”.செவியை அல்லாஹ் சிறப்பித்துள்ளான்.

கொடுக்கப்பட்ட ஐந்து புலன்களில், மண்ணில் குழந்தை பிறந்த பிறகே நான்கு புலன்களும் செயல்படுகின்றன. ஆனால் செவிப்புலன் மட்டுமே கருவறையிலிருந்து மண்ணறை வரையிலும், பின்பு மண்ணறையிலிருந்து மஹ்ஷர் வரை தொடர்ந்து பணி செய்கிறது. கருத்தரித்த 14 வது வாரம் செவியானது கேட்கும் திறனைப் பெறுகிறது. வெளியே பேசுவது கூட கர்ப்பத்தில் உள்ள சிசு கேட்கிறது. பிறந்ததிலிருந்து செயல்படும் செவியானது மரணித்த பின்னும் அதன் சேவை நிற்பதில்லை.

மரணித்த மனிதனை அடக்கம் செய்து திரும்பும் மனிதர்களின் காலடி ஓசையையும் செவிமடுப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒரு அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான்.  புஹாரி.1374.

ஆகவே (யுக முடிவின் நாளின்போது) காதைச் செவிடாக்கும் பெருஞ்சப்தம் வரும்போது, அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான்….. – அல்குர்ஆன்.80:33,34.

(ஸூர் ஊதப்பட்டதும்)…உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு..”எங்களுடைய துக்கமே!எங்கள் தூங்குமிடங்களிளிருந்து எங்களை எழுப்பியவர் யார்?”என்று அவர்கள் கேட்பார்கள்.  அல் குர்ஆன்.36:51,52.

எந்நாளில் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி எழுப்புவதன் ஓசையை மிகச்சரியாக செவியுற்றுக்கொண்டிருப்பார்களோ அந்நாள்தான் பூமிலிருந்து இறந்தவர்கள் வெளிப்படும் நாளாகும்.  அல் குர்ஆன்.50:42.

நமது காதுகள் ஓசையை கேட்பதற்காக மட்டும் அல்லாஹ் படைத்துவிடவில்லை. மனிதனின் உடலை சீராக சமநிலையில் வைத்திருக்கும் பெரும் பங்கும் செவிக்குரியது. எது வலது, எது இடது, எது மேற்பக்கம், எது கீழ்பக்கம், என்று தீர்மானிப்பதுடன் உடலின் அசைவுகள் அத்துணைக்கும் பொறுப்பாளியாக நமது செவியுள்ளது. நாம் நடக்கும் போதும், ஓடும் போதும்,விளையாடும் போதும், தடுக்கி கீழே விழுந்துவிடாமல் இருக்கவும், எது வாசல் எது வழி என்ற புரிதலைக் கொடுப்பதும் காதுகளே!

சிறப்பான கண்களை விட, நம் காதுகளுக்கே அல்லாஹ் முதலிடம் கொடுத்து அல்குர்ஆனில் பல இடங்களில் செவியை முற்படுத்துகின்றான். உதாரணமாக,

இறைநெறியை பின்பற்ற மறுப்பவர்களின் உவமையானது கால்நடைகளைப் போன்றதாகும். சப்தமிடும் இடையனின் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர அவை வேறு எதையும் கேட்பதில்லை. அவர்கள், செவிடர்களாய், ஊமையராய், குருடர்களாய் இருக்கின்றனர்; எனவே எதனையும் அவர்கள் அறியமாட்டார்கள். அல் குர்ஆன்.2:171.

இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களில் அல்லாஹ் செவியையே முற்படுத்திக் கூறுவதை பார்க்கலாம். ( 2:7, 2:18, 2:16, 6:39, 8:22, 11:24, 16:78, 16:108, 43:30, 47:23, 76:42, 80:33) இது மட்டுமின்றி, அல்லாஹ் தன்னை குறித்து பேசும்போதும் செவிக்கே முன்னுரிமை கொடுத்து கூறுவது, செவியின் சிறப்பை விளக்கப்போதுமானதாகும்.உதாரணமாக,

நிச்சயமாக, அல்லாஹ் யாவற்றையும்,செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அல் குர்ஆன்.31:28,42:11.

கண் பார்க்கும் காட்சிக்கும், செவி கேட்கும் சப்தங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? பார்க்கும், கேட்கும் செய்திகளை மூளைக்கு அனுப்பும் செயலில் எந்த அவயம் முன் நிற்கிறது என்ற கேள்விக்கு, கடந்த மாதம் (ஜூலை, 29-2017) அமெரிக்கா டியுக் பல்கலைகழகத்தில் நடத்திய நவீன அறிவியல் ஆய்வில்……

ஒரு பொருளின் காட்சியை கண் பார்ப்பதற்கு முன்னதாகவே அந்தப் பொருளை நோக்கி காதின் டிரம், செவிப்பறை திருப்பப்படுவதை ஆய்வின் மூலம் அறிந்தனர். ஏன் இப்படி திரும்புகிறது என்பதன் காரணம் தெரியவில்லை. ஆனால் கண் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒலியை அறிவதற்கு இது உதவுகிறது. ஆய்வுக்காக 16 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் நடுக்காதுக்குள் மைக்ரோ போன் ஒலிவாங்கியை பொருத்தி சோதனை செய்தனர்.

அவர்களின் பார்வை எந்தப்பக்கம் செல்கிறதோ அந்தப் பக்கம் உள்ள காதின் செவிப்பறை அந்த காட்சி உள்ள திசை நோக்கி அழுத்தப்படுவதை அறிந்தனர். உதாரணமாக நமது கண்ணானது இடது புறம் நோக்கும்போது, இடது புற செவிப்பறை இழுக்கப்படுகிறது. அதே சமயம் வலது புற செவிப்பறை சிறிது தள்ளப்படுகிறது. ஆக இரு செவிப்பறைகளும் இடது, வலதாக அழுத்தத்தால் முன்பின் தள்ளப்பட்டு ஒலியை கிரகிக்க தயார் நிலையை அடைகின்றன. இதில் கவனிக்க வேண்டிய அதிசய நிகழ்ச்சி என்ன தெரியுமா?

 கண்ணானது அந்தப்பொருளை நோக்கி திரும்புவதற்கு 10 மில்லி செகண்ட் நேரத்திற்கு முன்பே, காதின் செவிப்பறை அந்தப் பொருளிலிருந்து வரும் ஒலியை கிரகிக்க தயார் நிலையில் வைக்கப்படுகிறது. காரணம் மூளையானது பத்து மில்லி செகண்ட் நொடிகளுக்கு முன்பே காதிற்கு கட்டளை பிறப்பித்து விடுவதுதான். என்ன கட்டளை?,” கண்களை 12 டிகிரி கோணத்தில் பார்க்க கட்டளை இடப்போகிறேன்; ஆகவே செவியே நீ அதன் பக்கம் திரும்பி தயாராக இரு!”

இத்துடன் இது முடியவில்லை.கண்களானது ஒரு பொருளைப் பார்த்து விட்ட பின்பு வேறு பக்கம் திரும்பினாலும், காதின் செவிப்பறை அத்திசையிலேயே சில பத்து மில்லி நொடிகள் தாமதித்தே பின்பே வேறு திசை நோக்கி திரும்புகின்றன. கண்கள் ஒரு காட்சியை பார்ப்பதற்குப் முன்பே செவியானது அந்த திசையை நோக்கி பார்வைக்கு பத்து மில்லி நொடிக்கு முன்பாக முந்திக்கொள்வது ஆச்சரியமே!

படைத்த இறைவன் அல்குர்ஆனில் தொடர்ந்து, கண்களை விட செவியை முதன்மைப்படுத்துவதன் காரணம் இதுதானோ? அல்லாஹ் அறிந்தவன்.இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் அல்லாஹ்வின் அறிவியல் மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரிய துளியிலிருந்து படைத்தோம்;நாம் அவனை சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும் இந்நோக்கத்திற்காக நாம் அவனை செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம்!  அல்குர்ஆன்.76:2.

Previous post:

Next post: