உலகளவில் முஸ்லிம்கள்!

in 2018 ஏப்ரல்

ஏப்ரல் 2018

ரஜப் -­ ஷஃபான்-1439

உலகளவில் முஸ்லிம்கள்!

உலகளவில் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும், முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கோடு இஸ்லாத்திற்கு எதிராக உள்ள பல நாடுகள் களம் இறங்கி இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளில் தீர்வு காண அந்நாடுகளின் அரசுகளுக்கு உதவுவதாகவோ அல்லது மக்களுக்கு உதவுவதாகவோ என்று ஏதேனும் சாக்குபோக்குக் கூறி உள்ளே நுழைகின்றனர். பல இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற மற்றொரு மறைமுக நோக்கமும் இவர்களிடம் இருப்பது போல் தோன்றவும் செய்கிறது.

நுழைந்தவுடன் சமாதானம் செய்து வைப் பதாக நாட்டாண்மை செய்கின்றனர். இறுதியில் சிறு பிரச்சனைகளை பெரிதாக்கி போர் சூழலை ஏற்படுத்துகின்றனர். உள்ளே நுழைந்தவர்கள் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் ஆயுதங் களை பரீட்சித்துப் பார்க்கும் உள்நோக்கோடு அவற்றை பயன்படுத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் இலங்கையில், கண்டியில் ஆரம்பித்து பல பகுதிகளிலும் சிங்கள வலது சாரி அமைப்புகள் பல மசூதிகளை தரைமட்டமாக்கி, முஸ்லிம்கள் மீது கட்ட விழ்த்து விடும் கொடுமைகள் இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

மியான்மரில் சொந்த நாட்டினரான லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். ஈரானில், ஈராக்கில், எகிப்தில், ஏமனில், லிபியாவில், சோமாலியாவில், உகாண்டாவில், சூடானில், பாலஸ்தீனத்தில், லெபனானில் என்று அங்கிங்கெனாதபடி முஸ்லிம் நாடுகள் பலவற்றில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஏன் நம் தாய்நாடு இந்தியாவிலும் குறிப் பாக காஷ்மீரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல முஸ்லிம் பெண்களின் கற்பை சூறை யாடிய நிகழ்வுகளையும், குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில், முஸ்லிம்களை எரித்தும் மற்றும் கலவரங்களை ஏற்படுத்தி எண்ணற்ற முஸ்லிம் களை கொன்று குவிக்கப்பட்டதை பத்திரிகைகளில் பார்த்தோம். சிரியாவில் முஸ்லிம்களை அழித்தொழிக்க 2011லிருந்து போரை ஆரம்பித்து எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாமல், இப்போது 2018 வரை போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போர் மேலே கூறியவாறு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

அமெரிக்கப் படை, ரஷ்யப்படை, இஸ்ரேல் படை, துருக்கி பயன்படுத்திய சன்னி படை, ஈரானின் ´ஆ படை, கூலிப்படைகள் பல பங்கேற்றன. ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயன்படுத்திய ஹிஸ்புல் லாஹ் உள்ளிட்ட ´ஆ கூலி படை, வடசிரியாவிலிருந்து அமெரிக்க ஆதரவு குர்து இனப்படை, ஜோர்டான் படை, தனியார் நிறுவனத்திடமி ருந்து ரஷ்யா பெற்ற கஸாக் வீரர்களின் தரைப் படை, ஐஎஸ்ஐஎஸ் படை, அல்கொய்தா படை என எல்லாப் படைகளும் உள் நுழைந்து அட்ட காசமாடித் தீர்த்து விட்டன.

விளைவு சிரியா சின்னாபின்னமானது! 2011லிருந்து இன்று வரை மக்கள் வசிக்கும் வீடுகள், பொது இடங்கள் என பாகுபாடின்றி அனைத்து படையினரும், விமானங்களிலிருந்து குண்டு வீச்சு, வசிக்கும் இருப்பிடங்களை தீக்கிரையாக்குதல், சிரியா அதிபரின் ரசாயன வெடிகுண்டு வீச்சு என அவரவர் வசதிக்கேற்ப சிரியா மக்களின் பச்சிளம் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள், வாலிபர்கள் என ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கொன்று குவித்துக் கொண்டும், ஆற்றொணா ரணகள காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள், சீரமைக்க முடியாத கட்டடங்கள், மீண்டும் புத்துயிர் பெற முடியுமா என்ற ஐயத்துடன் வெறிச்சோடிய கோலத்துடன் சிரியா காட்சி யளிக்கிறது.

உலகில் வேறு எந்த மதத்தினர் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருந்தாலும் அந்த இனம் வாழ்ந்த அடிச்சுவடின்றி அழிந்து ஒழிந்திருக்கும். அல்லது எஞ்சி எவரும் மிஞ்சியிருந்தால், தாம் அந்த மதத்தினர் என்று சொல்ல அஞ்சி வாழ்ந்து கொண்டிருப்பர்.

ஆனால் சிரியாவில் ஆற்ற முடியாத ரணகளகாயங்களுடன் உயிர் பிழைத்த எஞ்சியவர்கள், அடுத்த தாக்குதல் வந்தால் எதிர்த்து போராட தம்மை தயார் செய்து கொண்டு இருக்கின்றனர். புறமுதுகு காட்டி தப்பிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த முஸ்லிம்களால் இவ்வாறு எப்படி தைரியமாக இருக்க முடிகிறது? சாத்தியமா இது? என உலகே வியக்கிறது. சாத்தியமே என சாட்சி பகர்கின்றன அல்லாஹ் அருளிய கீழேயுள்ள குர்ஆன் வசனங்களும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லிச் சென்ற ஹதீஃத் அறிவுரைகளும்! படித்துப் பாருங்கள்! உண்மை விளங்கும்.

பரிசுத்த குர்ஆனில் அல்லாஹ் தெரிவிக்கும் நற் செய்திகளை (இறை வசனங்களை)ப் பாருங்கள்:

அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது, “”நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156

இத்தகையோர் மீதுதான் இறைவனின் அருளும், கிருபையும் உண்டாகின்றன. மேலும், இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்” 2:157

இன்னும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும், அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும் அருளும், அவர்கள் சேர்த்து வைப்பதை விட மிக்க மேலானதாக இருக்கும். 3:157

நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும், அல்லாஹ்விடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள். 3:158 போரில் கொல்லப்பட்டவர்கள் பற்றி அல்குர்ஆன் வசனங்கள் : அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். தம் இறைவனிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள். அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். 3:169

அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் தம்முடன் சேராமல் (உயிரோடு) இருப்பவர்கள் பற்றி, “”அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்றும் மகிழ்வடைகிறார்கள். 3:170

அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருட் கொடையைப் பற்றியும், அருளைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்குரிய கூலியை வீணாக்கி விடுவதில்லை என் பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்”. 3:171

போரில் இறக்காமல் ஆற்றொணா ரணகள காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள் பற்றி அல்குர்ஆன் : அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு காயம் ஏற்பட்ட பின்னரும், அல்லாஹ் மற்றும் தூதருடைய (அடுத்த) அழைப்பை ஏற்றனர். அவர்களில் (அல்லாஹ்வுக்கு) பயந்து நன்மை செய்தோருக்கு மகத்தான கூலி இருக்கிறது. 3:172

எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் பயணம் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகின்றாரே அத்தகையோர் அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை அளிக்கிறான். 22:58

உணவளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ்வே மிக மேலானவன். 22:59

இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் நற்செய்திகள் (ஹதீஃத்கள்)

1.””யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகி றானோ, அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி எண் 5645)

2.””முஸ்லிம்களிடையே இறைவழியில் கொல்லப்படுபவரும் தியாகி (­ஹீது) தான்; இறைவழியில் இறந்து விடுவோரும் தியாகிதான்; கொள்ளை நோயால் இறந்து விடுபவரும் தியாகிதான், வாந்தி பேதியால்(காலரா) இறந்து விடுபவரும் தியாகிதான். தண்ணீரில் மூழ்கி இறந்து விடுபவரும் தியாகிதான்” (நூல்: திர்மிதீ அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி)

3. நசுக்குண்டு (விபத்தில்) இறப்பவரும் தியாகிதான். (நுல் :முஅத்தா, திர்மிதீ)

4. பிள்ளைப் பேற்றின் போது இறக்கும் பெண்ணும் தியாகிதான் (அறிவிப்பாளர் ஜாபிர்(ரழி)

5. தம் பொருளை பாதுகாப்பதில் இறப்ப வரும் தியாகிதான். (அறிவிப்பாளர் : இப்னு அம்ருப்னு ஆஸ்(ரழி)

6. கடலிலோ படகிலோ செல்லும்போது வாந்தியோ, மயக்கமோ ஏற்பட்டால், அவருக்கு ஒரு தியாகியின் பலன் உண்டு. அப்போது நீரில் மூழ்கி இறந்து விட்டால், இரு தியாகி களின் பலன் உண்டு. (நூல் : அபூதாவூது)

எந்த முஸ்லிமும் எவரையும் சந்தித்து கட் டாய மத மாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தத் தில் இல்லை என அல்குர்ஆன் 2:256 தெரிவிக்கின்றது. “”முஸ்லிம்கள் புறக்கணிப்பார்களேயானால், அவர்கள் அல்லாத மற்ற சமூகத்தாரை அல்லாஹ் கொண்டு வருவான்” என அல்குர்ஆன் 47:38. எச்சரிக்கை செய்கிறது.

மரித்து விட்டவர்களுக்கு பதிலாக எவரது தூண்டுதலும் இல்லாமல் வேறு சமூகத்தாரை அல்லாஹ் இஸ்லாத்திற்குள் கொண்டு வருவதைப் பல நாடுகளில் அவ்வப்போது கண் கூடாக அனைவரும் பார்த்துக்கொண்டு தானிருக்கின்றனர்.

(விரிவான செய்திகள் உலகளவில் இன் றைய முஸ்லிம்களின் நிலை! என்ற தலைப்பில் இந்த இதழிலுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ளது பார்வையிடுங்கள்)

Previous post:

Next post: