குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2018 மே,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

ஆய்வுத் தொடர் -4

அபூ அப்தில்லாஹ்

நிச்சயமாக நாம் உமக்கு வஹி மூலம் அறிவித்ததை (விட்டு) விட்டு, நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி, உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மை அவர்கள் (தங்கள்) உற்ற நண்பராக வும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உம்மை நாம் ஸ்திரப்படுத்தி வைக்காவிடில், நீர் ஒரு சிறிதேனும், அவர்களின் பால் சாய்ந்து விடக்கூடுமாயிருந்தது. அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால், நீர் ஜீவித்திருக்கும் பொழுதும், நீர் மரித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுகிக்கும்படி செய்திருப்போம். அதன் பின்னர் நமக்கெதி ராக, உமக்கு உதவி செய்வோர் ஒருவரை யும் நீர் காணமாட்டீர். (17:73-75)

மக்கள் எதிர்க்கிறார்கள்-மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் அவர்கள் தயவு நமக்கில்லா மல் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக, குர்ஆனில் உள்ளதை, உண்மை ஹதீது களிலுள்ளவற்றை, சத்தியம் என்று நன்கு அறிந்து கொண்டதைப் பகிரங்கமாகச் சொல்லத் தயங்கும் அறிஞர்கள், இயக்கங்கள் மேற்கண்ட வசனங்களை நன்கு சிந்தித் துப் படிப்பினை பெறுவார்களாக. “உமக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்ட வற்றில் சிலவற்றை விட்டுவிடுவீரோ?” 11:12

“தூதரே! உம் இறைவனிடமிருந்து, உம் மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத் துக் கூறிவிடும். அவ்வாறு நீர் செய்யாவிட் டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றி யவராக மாட்டீர். அல்லாஹ் மனிதர்களி (ன் தீங்கி)லிருந்து உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்” (5:67)

அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள எந்த ஆதாரமும் இல்லாமல் இறை வசனங்களைப் பற்றி விவாதம் செய்வது பெருங்குற்றம், அதில் சம்பந்தப்படாதீர் என்று இறைத் தூதரையே அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கிறான். “(நபியே!) நம் வசனங்கள் பற்றி வீண் விவாதங்களில் ஆழ்ந்திருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில், நீர் அவர்களைப் புறக்கணித்துவிடும். (இக் கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட் டால், அது நினைவுக்கு வந்த பின்னர், அவ்வக்ரமக்கார மக்களுடன் உட்கார்ந்து இருக்க வேண்டாம்” (6:68)

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோரை, அக்கிரமக்காரர்கள் என்றே அல்லாஹ் வர்ணிக்கிறான். அப்படித் தர்க்கம் செய்வதாய் இருந்தால், அதற்கும் இறைவனிடமிருந்தே ஆதாரம் இருக்க வேண்டும். “”(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதொரு ஆதாரமுமின்றியே அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிப் பது. அல்லாஹ்விடத்திலும், விசுவாசிகளிடத்திலும் மிக்க அருவருப்பானது. இவ்வாறே பெருமையும் கர்வமும் கொண்ட ஒவ்வோர் இதயத்திலும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.” (40:35)

அல்லாஹ் சொல்லியுள்ளதற்கு மேல் விளக்கம் தேட முயல்வது. யூகம் செய்வது, அறியாமையும், குற்றமுமாகும் என்பதை 18:22 வசனமும் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வின் வசனங்களை அப்படியே ஏற்றுச் செயல்பட வேண்டும். பேசுவதாக இருந்தால் வேறு இறை வசனமோ உண்மை ஹதீதோ ஆதாரமாக வைத்துப் பேச வேண் டும். இவர்கள் சொந்தக் கருத்துப்படி இப்படிப் பொருள் செய்யலாம். அப்படிப் பொருள் செய்யலாம் என்று தர்க்கிக்க முற்பட்டால், அவர்கள் பெருமையும் கர்வமும் கொண்டவர்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். மேலும் அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விடுவதாகவும் எச்சரிக்கிறான். அப்படியானால் அவன் வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு வரவே முடியாது. இது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் என்பதைச் சிந்திக்கவும்.

“உங்களுக்குச் சிறிது ஞானமிருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள். (அப்படி யிருக்க) உங்களுக்கு சிறிது கூட ஞானமில்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (3:66)

இந்த இறைவசனம் பட்டவர்த்தனமாக மனிதனின் நிலையை வர்ணிக்கிறது. மறுமையில் இதைக் கொண்டு நன்மை கிடைக்கும். இதைக் கொண்டு தீமை ஏற்படும் என்று மனிதன் எப்படி அறிவான்? எனவே இது விஷயத்தில் அவனது அபிப்பிராயங்களையும், யூகங்களையும் நுழைக்க முற்படுவது பெருங்குற்றமாகும். மரணத்திற்குப் பின் நன்மை கிடைக்கும் அல்லது தீமை கிடைக்கும் என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கு அறிவான். எனவே மார்க்கக் காரியங்களில் அல்லாஹ்வின் அறிவிப்பின்றி, மனிதர்களின் அபிப்பிராயங்களும், யூகங்களும் செல்லவே செல்லாது. இதை இன்னும் தெளிவாக ஊர்ஜிதப்படுத்துகின்றது. இன்னொரு இறை வசனம்.

“அல்லாஹ்வும் அவனது தூதரும், யாதொரு விஷயத்தைப் பற்றி கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதற்கு மாறாக வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள், பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (33:36) இவ்வளவு ஆதாரங்களுக்குப் பிறகும், இது விஷயத்தில் விவாதம் செய்வோர் இந்த இறை வசனத்தைக் கவனிக்கவும்.

“நாம் அருளியவற்றை மனிதர்களுக்காக, நெறிநூலில் தெளிவுபடுத்திய பின்னும், எவர்கள் மறைக்கின்றார்களோ, அவர்களை, நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கின்றான், சபிப்போரும் சபிக்கின்றனர்.” (2:159)

இப்படிப்பட்டவர்கள் இறை வசனங்களை மறைப்பவர்களாகவும், புரட்டுகிறவர்களாகவும் மட்டுமே இருக்க முடியும். நன்கு அறிந்து கொண்டே, இவ்வாறு செய்கின்றனர். “நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள், எவரும் தங்கள் குழந்தைகளை அறிவது போல், (உண்மையை) அறிவார்கள்”. (6:20) அவர்கள் அறிந்து கொண்டே, சத்தியத்தை மறைக்கவும், புரட்டவும் முற்படுகின்றனர்.

“அல்லாஹ் மீது பொய்யான கற்பனை யைச் சொல்பவனை விட அநியாயக்காரர் கள் யார்? அத்தகையோர் மறுமையில், தங் கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்” “”இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது, பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறும் மலக்குகள் சொல்வார்கள். இத்தகைய அநி யாயக்காரர்கள் மீது, அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். அவர்கள் மனிதர்களை, அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கி றார்கள். மேலும் கோணலையும் உண்டு பண்ண விரும்புகிறார்கள். இவர்கள் தாம், மறுமையை நிராகரிப்பவர்கள்”. (11:18,19)

உண்மையில் நபிகளாரைப் பின்பற்றி நடப்பவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இட்டுள்ள கட்டளையை தாங்களும் எடுத்து நடப்பார்கள். “”அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. அவர்களுடைய விருப்பங்களை, நீர் பின் பற்றாதீர், அன்றி உமக்கு அல்லாஹ் அருளி யவற்றில், எதிரிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி, எச்சரிக்கையாக இரும்; (உம்மு டைய) தீர்ப்பை, அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்து கொள்ளும், அவர்களின் சில பாவங்களுக்காக, அல்லாஹ் அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகி றான். நிச்சயமாக மனிதர்களில் பெரும்பா லோர், பாவிகளாகவே இருக்கின்றனர்” (5:49)

இவ்வளவு தெளிவான ஆதாரங்களுக்குப் பிறகும், மார்க்க காரியங்களில் மனித அபிப் பிராயங்களையும், யூகங்களையும் புகுத்த முற்படுகிறவர்கள், உண்மையில் மார்க்கம் பற்றி அல்லாஹ்வுக்குக் கற்றுத் தர முற்படு கின்றனர். “”மார்க்கம் பற்றி அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கிறீர்களா?” (49:16)

இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சிந்திப்பவர்கள் “முஹ்க்கமாத்’ வசனங்களில், நபி(ஸல்) அவர்கள் தவிர, வேறு மனிதர்களின் ஆராய்ச்சியோ, தெளிவோ, விளக்கமோ, வழிகாட்டலோ அவசியமே இல்லை; தப்ஃஸீர் என்ற பெயரில் மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும், இஸ்ரவேலர்களின் கற்பனைக் கட்டுக்கதைகளையும் எழுதி வைத்திருப்பவர்களை, எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற அடிப்படையில் தங்கள் உள்ளங்களில் மாறுபட்ட எண்ணத்துடன் தாங் களும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட தஃப்ஸீர்களை, நெறிநூல் புத்தகங்களாக மதித்து, நம்பி, எடுத்து நடப்பவர்கள், நிச்சயமாக வெற்றி பெறமுடியாது. நாளை மறுமையில் அல்லாஹ்வின் கோபத்திற்கும் பயங்கர நரக வேதனைக்கும் ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கிறோம். அடுத்து இந்த “முஹ்க்கமாத்” வசனங்களை அறிந்து கொள்ள, அரபி இலக்கண, இலக்கிய திறமை அவசியமா? என்று சிறிது பார்த்து விட்டு, “”முத்தஷாபிஹாத்” வசனங்களைப் பற்றி ஆராய்வோம்.

இந்த மவ்லவிகள் இப்படி அரபி பாஷையைக் கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாலும், படித்த சிந்தனையாளர்களும், பொதுவாக இது விஷயத்தில் நிலை தடு மாறுவதாலும், இதைப் பற்றி விரிவாகவே பார்ப்போம். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நூல் என்ற அடிப்படையில், இவர்கள் சொல்லும் அத்தனைக் காரணங்களும் முற்றிலும் உண்மையே. ஒரு அறிஞன் ஒரு நூலை உருவாக்குகிறான் என்றால், அதை முழுமையாக நிறைவு செய்து, முழுமையான நிலையில் மக்களிடம் ஒப்படைக்கிறான். அந்த நூலி லுள்ள அனைத்து விஷயங்களும் அந்த அறிஞனாலேயே செயல்படுத்திக் காட்டப்படும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது.

அப்படி ஒருக்கால் விளக்கினாலும் அந்த அறிஞனது சிந்தனைத் திறனிலேயே கோளாறு இருக்கவும் வாய்ப்புண்டு. அவனே அவன் எழுதியதற்குத் தவறான விளக்கம் கொடுக்கவும் வாய்ப்புண்டு. அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை வைத்தே விளக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது அவரவர்களுக்குரிய மொழியறிவு ஆற்றல், திறமை இவற்றை அடிப்படையாக வைத்தே ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறார்கள். ஒரு வார்த்தைக்கு பல பொருள் வரும் இடங்களில் மாறுபட்ட கருத்துக்களை எடுக்கவும் இடம் ஏற்படுகின்றது. சுருங்கச் சொல்லின் மனிதனால் உருவாக்கப்பட்ட நூல்களைக் கொண்டு கருத்து மோதல்கள் தீர எப்படி வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அதேபோல் புதிய கருத்து மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக் கின்றனர். இதை விட்டும் மனிதனால் உரு வாக்கப்படும் எந்த நூலும் விதிவிலக்கு பெற முடியாது. இதைத்தான் அல்லாஹ் தெளிவாக இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான். “”இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 4:82

ஆனால் இப்போது நாம் செய்யும் பெரிய தவறு, ஹிமாலயத் தவறு மனிதனால் உருவாக்கப்பட்ட நூல்களை எந்தக் கண்ணோட்டத்தோடு நாம் அணுகுகிறோமோ, அதே கண்ணோட்டத்தோடு, குர்ஆனை யும் நாம் அணுகுவதேயாகும். குர்ஆன் ஒரு நூல் அல்ல; அதனால் தான் எடுத்த எடுப்பிலேயே அல்லாஹ் தன் திருமறையில் “இது நெறிநூல், இதில் சந்தேகமே இல்லை (2:2)” என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான்.

இறைவனால் கொடுக்கப்பட்ட நெறி நூலிற்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட நூலுக்கும், மலைக்கும், மடுவுக்கும், இல்லை அதை விட பாராதூரமான வித்தி யாசம் உண்டு. மனித நூல் கருத்துமோதலை உண்டாக்கவும் கூடும். நெறிநூல் கருத்து மோதலை தீர்க்குமேயல்லாது. ஒருபோதும் கருத்து மோதலை உண்டாக்காது. கருத்து மோதலை தீர்ப்பதற்காகவே நெறிநூலை இறக்கியதாக அல்லாஹ் உறுதி கூறுகிறான். “அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் விகற்பங்களை தீர்த்து வைப்பதற்காக அவர் களுடன் உண்மையுடைய நெறிநூலையும் இறக்கி வைத்தான்” (2:213)

“(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ்வி­ யத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ, அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இந்நெறிநூலை இறக்கினோம்” (16:64)

இவ்வளவு தெளிவாக அல்லாஹ் சொன் னதற்குப் பிறகு, தங்களின் இலக்கண, இலக்கிய திறமைகளைக் கொண்டு முஹ்க்கமாத் வசனங்களில், இப்படியும் பொருள் எடுக்க லாம். அப்படியும் பொருள் எடுக்கலாம் என்று கூறி கருத்து மோதல்களை உண்டாக் குகிறவர்கள் குர்ஆனை நெறிநூல் என்று ஒப்புக்கொள்ளவில்லையோ, என சந்தே கிக்க வேண்டியுள்ளது. நெறிநூல்களைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும் என்ற வி­யத்தில் இவர்கள் நிலை தடுமாறுகிறார்களா? அல்லாஹ்(ஜல்) அல்குர்ஆனில் 6666 வசனங்களையும், ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் இறக்கி, இதிலுள்ளபடி பார்த்து, நடந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டிருந்தாலாவது, இவர்களாக ஆராய்ந்து பார்த்து எடுப்பதில் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அந்த நிலையிலும் கருத்து மோதல்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அல்லாஹ் (ஜல்) 23 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படும் சந்தர்ப்பங்களில், தேவையான ஆயத்துக்களை இறக்கி, நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் அவற்றைச் செயல்படுத்திக் காட்டவும் செய்திருக்கிறான்.

இதை கீழ்க்காணும் இறை வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இன்னும் “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழு தும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப் போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு நாம் உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற் காக (கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி) மேலும் நாம் இதை ஒழுங்கான முறையில் அமைத்துள்ளோம். (25:32)

தெளிவான அத்தாட்சிகளையும், நெறி நூல்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத் தனுப்பினோம்; நபியே!) அவ்வாறே இந்த நெறிநூலையும் உம்பால் அருளினோம்; மனிதர்களுக்காக (உம்பால்) அருளப்பட்ட இ(ந்நெறிநூ)லை அவர்கள் சிந்திக்கும் பொருட்டுத் தெளிவாக அவர்களுக்கு நீர் விளங்குவீராக. (16:44)

ஆக, தத்துவ ரீதியிலும் (Theoritically) நடைமுறை நீதியிலும் (Practically), தெளிவுபடுத்தப்பட்டுவிட்ட “முஹ்க்கமாத்” வசனங்களில், இவர்கள் தங்கள் இலக்கண, இலக்கிய ஞானங்களைக் கொண்டு குழப்பு கிறார்கள். புதிய புதிய கருத்துகளைக் கொண்டு, தெளிவுபடுத்தப்பட்டவற்றை, மீண்டும் தெளிவுபடுத்த முனைபவர்களை நாம் என்னவென்பது? எனவே “ஆயத்தும் முஹ்க்கமாத்” என்ற குர்ஆனின் வசனங்களைப் பொறுத்தமட்டில் அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமே இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிடலாம். அவர்களின் இந்த வாதம் உண்மையானால் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தாருந்நத்வாவைச் சேர்ந்த அரபி இலக்கண, இலக்கிய பண்டிதர்களையே அல்லாஹ் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவர்களை புறக்கணித்துவிட்டு, எழுதப் படிக்கத் தெரியாத, இலக்கண, இலக்கிய திறமை இல்லாத சாதாரண மக்களையே தேர்ந்தெடுத்தான்.

இதிலிருந்து சுயகருத்துக்களைப் புகுத்தும் இலக்கண, இலக்கிய ஞானமுள்ள பண்டிதர்களை விட சுய கருத்துக்களைப் புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடிய சாதாரண நிலை உடையவர்களே மார்க்க சேவைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பது மிகத் தெளிவாகப் புரிகின்றது. இதனைத் தெளிவாக கீழ்வரும் வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டவும் செய்கிறான். “அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர் களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை, அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டி லேயே இருந்தனர்” (62:2)

அவர்கள் அரபி பேசக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற வாதமும், வீண் வாதமாகும் எந்த மொழியைப் பேசக்கூடிய வர்களாக இருந்தாலும், எழுதப் படிக்கத் தெரியாத நிலையில், பேச்சு வழக்கிலுள்ள கொச்சைப் பேச்சை பேசக்கூடியவர்களா கத்தான் இருப்பார்களே அல்லாமல், இவர் கள் இலக்கண, இலக்கிய திறமை உடைய வர்களாக இருப்பார்கள் என்பது எதிர் பார்க்க முடியாத ஒன்றாகும். “மாரீஸ் புகைல்” போன்ற பெரும் அறி ஞர்கள், “அரபிமொழி கற்றுக்கொண்ட பின்தான் குர்ஆனை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது” என்று சொல்கிறார்களே என்று சிலர் ஐயத்தைக் கிளப்பலாம்.

இந்த அவரது கூற்று விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட “முத்தஷாபிஹாத்” வசனங்களைப் பற்றிய வி­யமாகும் என்ற விபரங்களை முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றி ஆய்வு செய்யும்போது விரிவாகப் பார்ப்போம். இதுவரை நபி(ஸல்) அவர்களின் 23 வருட நபித்துவ காலத்திலேயே குர்ஆனின் “முஹ்க்கமாத்” வசனங்கள் தத்துவ ரீதியாகவும் (Theoritically) நடைமுறை ரீதியாகவும் (Practically) தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்தப்பட்டு விட்டன.

முடிந்து போன விஷயத்தில் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம் என்று மனிதர்கள் புகுந்து தங்கள் மனித அபிப்பிராயங்களை மார்க்கத்தில் நுழைப்பது பெருங்குற்றமாகும். அந்த அடிப்படையில் தங்கள் அரபி ஞானத்தைக் கொண்டும், இலக்கண, இலக்கிய திறமைகளைக் கொண்டும் மார்க்கத்தில் பெருமை பேசக்கூடாது. மார்க்கத்தை உபதேசிக்கும் தகுதி தங்களுக்கு மட்டுமே உண்டு என்று மார்தட்டக்கூடாது.

உண்மையில் அரபி மொழி இலக்கண இலக்கிய ஞானம் இவை காரணமாக மார்க்கத்தில் தங்கள் சுயகருத்துக்களைப் புகுத்தும் பண்டிர்களை விட, சுய கருத்துக்களைப் புகுத்தாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் சாதாரண மக்களே, மார்க்க சேவைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பதைக் குர்ஆனின் 62:2 வசனம் தெளிவுபடுத்துகின்றது என்பதை விரிவாகப் பார்த்தோம்.

Previous post:

Next post: