முஹிப்புல் இஸ்லாம்
- அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விசயத்தில் (அதற்கு மாறாக வேறு) மாற்று அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (எனினும்) நிச்சயமாக, அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். அல்குர்ஆன் : 33:36
- அவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினையை உண்டுபண்ணி(பல) பிரிவுகளாகப் பிரிந்துவிட்டனர். (அந்த) ஒவ்வொரு பிரிவாரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு சந்தோசப்படுகின்றனர். அல்குர்ஆன்:30:32
- எனினும் தங்களது மார்க்கக் காரியங்களில் பல பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ள பிரிவைக் கொண்டு சந்தோமடைகின்றனர். அல்குர்ஆன் : 23:53
மறக்க முடியுமா?
“தவ்ஹீத்” சிந்தனை உடையோர் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் இந்நாளில், அதைவிட கூடுதலாய் “தவ்ஹீத்”வாதிகள் என்று தங்களைத் தம்பட்டம் அடிப்போர் பிளவுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். “தவ்ஹீத்”வாதிகள் இதை அரும் பாடுபட்டு மறைக்க முற்பட்டாலும், இனி அதுவும் இயலாத ஒன்று. முழு பூசணியை இனி எத்தனை நாள் சோற்றுக்குள் மூடி மறைக்க முடியும்?
மத்ஹப்வாதிகளும், கருத்து வேறுபாடுகளும் :
மத்ஹப்வாதிகள் முதலில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றனர். பின்னர் போட்டி பொறாமையால், தங்கள் மத்ஹபே உயர்ந்தது என்று காட்ட தங்கள் இமாம்களை உயர்த்தியும், தங்கள் மத்ஹப் ஃபிக்ஹ்களே சரியானவை என்று வரிந்து கட்டிக்கொண்டு வெறியோடு செயல்படுகின்றனர். விளைவு அடுத்த மத்ஹப் இமாம்களைத் தூ´க்கிறார்கள். அடுத்த மத்ஹப் சட்டங்கள் தவறானவை என்று தங்கள் நாவன்மையாலும், எழுத்து வன்மையாலும், வாதத்திறமையாலும் எடுத்துக்காட்டி வருகின்றனர். கடந்த 1000 ஆண்டுகளாய் மத்ஹப்கள் நின்று நிலைக்க இதுவே பிரதான காரணம்.
முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மத்ஹப்கள்:
வேறுபட்ட அபிப்பிராயங்களால் மத்ஹப்கள் இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தந்து கொண்டிருப்பதையும் இனியும் யாரும் மறைக்க முடியாது. திருநெல்வேலி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் பேரூர்களில் கடையநல்லூரும் ஒன்று. அங்கு ஹனஃபிகள் பேட்டையிலும், ஷாஃபிகளுக்கென்றும், தனித்தனிப் பள்ளிவாயில்கள், தனித்தனி ஜமாஅத்களாக இயங்கி வருகின்றனர். மத்ஹப்கள் இப்படியா முஸ்லிம்களைக் கூறுபோடுகின்றன? என்று அச்சப்படுவோர் கடையநல்லூர் நேரில் சென்று உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.
ஒரே ஃபிக்ஹு பயின்றவர்களில் முரண்பாடு :
முரண்பாடுகள் வேற்றுமையை உருவாக்கும்! ஒற்றுமையை ஒருக்காலும் உருவாக்காது! வேற்றுமைகளை உருவாக்கும் மத்ஹப்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் பல்வேறு உட்பிரிவுகள்! ஒரே விசயத்துக்குப் பலதரப்பட்ட அபிப்ராயங்கள்: ஒரே மத்ஹப் அறிஞர்களுக்குள் முரண்பட்ட கருத்து வேறுபாடுகள்.
உதாரணத்திற்குத் தமிழகத்தில், வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தில் ஓதியவர்கள் அதிதீவிரமாய் தப்லீஃக் இயக்கத்தை எதிர்ப்பர். அதே நேரத்தில் லால்பேட்டையில் ஓதிய “மன்பயீ” தப்லீஃ இயக்கத்தைத் தீவிரமாய் ஆதரிப்பர். எதிர்க்கும் பாகவியும், ஆதரிக்கும் மன்பஈயும் ஹனஃபி ஃபிக்ஹைப் பயின்றவராய் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம். முரண்பட்ட கருத்துடையோர் எப்படி ஒன்றுபட முடியும்? ஒரு மத்ஹப்பிற்குள்ளேயே ஆயிரமாயிரம் கருத்து வேறுபாடுகள் நிலவும்போது, பல மத்ஹப்கள் எப்படி ஒன்று என்று சாதிக்க முடியும்?
ஏமாறுவதும், கண்மூடித்தனமும் :
நான்கு மத்ஹபும் ஒன்றுதான். சில்லரை வேற்றுமைகள் உம்மத்தின் ஒற்றுமையை உருக்குலைக்காது என்று மத்ஹப்வாதிகள் தங்கள் தவறான வாதத்துக்குச் சப்பைக் கட்டுக் கட்டுவர். இதைக் கேட்கும் போதும், படிக்கும்போதும் சரியயனத் தோன்றும். பாமரர் மட்டுமின்றி, படித்தோரும் இதில் ஏமாறுகின்றனர். இதுதான் கண்மூடித்தனம். சிந்தனை சிறையிலடைக்கப்பட்டு, கண் மூடித்தனத்தில் தஞ்சம் அடையும்போது, சத்தியம் அசத்தியமாகிறது. அசத்தியம் சத்தியமாகிறது.
நான்கு மத்ஹப்களும் ஒன்றுபடுவதன் இலட்சணம் :
சுப்ஹ் அதிகாலை பர்ளு தொழுகையில், ஒரு ஹனஃபி இமாமைப் பின்தொடரும் ஷாஃபி முக்ததி, இமாம் இரண்டு ரகாஅத்தை நிறைவு செய்து, சலாம் கொடுக்கும்போது, ஷாஃபி முக்ததி சலாம் கொடுப்பதில்லை. மாறாக, இரண்டு சஜ்தா சஹ்வு செய்து பின் தானாக சலாம் கொடுத்துக் கொள்கிறார். இவரின் இந்த வினோதப் போக்கைக் கண்டு அவரை சூழ்ந்துள்ள பெரும்பான்மையாக இருக்கும் ஹனஃபிகள் முகம் சுளிக்கின்றனர். நான்கு மத்ஹப்களும் ஒன்று என்று பீற்றிக் கொள்பவர்களே! சற்று நிதானித்துச் சிந்தியுங்கள். இதுதான் நான்கு மத்ஹப்களும் ஒன்று என்பதன் இலட்சணமா? பெரும்பான்மை ஹனஃபியாக்களுடன், ஹனஃபி இமாமுக்குப் பின் தொழுத ஷாஃபி மத்ஹப்காரரில் மேற்கண்ட செயல் எதை உணர்த்துகிறது? சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள். ஹனஃபி இமாமின் அதிகாலைத் தொழுகையும், அவரைப் பின்தொடர்ந்த ஹனஃபியாக்களின் தொழுகையும் ஏற்கத்தக்கதல்ல என்பதை அந்த ஷாஃபி மத்ஹப்காரரின் இரண்டு சஜ்தா சஹ்வுகள் துல்லியமாய் எடுத்துக் காட்டுகின்றன.
பானைக்கு ஒரு சோறு பதம், மத்ஹப்கள் ஒருபோதும் முஸ்லிம்களை ஒன்றி ணைக்காது, வேறுபடுவதை ஆதரித்துப் பிளவுபடுத்துவதே மத்ஹப்களின் குறிக்கோள்! என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மத்ஹப்கள், தரீக்காக்கள், இயக்கங்கள், கூட்டமைப்புகள், கழகங்கள், இன்னும் எதிர்காலத்தில் தோன்றப்போகும் அனைத்துப் பிரிவுகளை விட்டும் முற்றாக விலகி இறைக் கட்டளையேற்று (அல்குர்ஆன் 3:103) இறை நெறி நூலோடு ஐக்கியமாகி முஸ்லிம்கள் ஒன்றுபட்ட சமுதாயமாகும் முயற்சிகளை மேற்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் நீங்காக் கடமையாகும். இன்றளவும் முஸ்லிம்களின் பெரும்பான்மையானோர் இதை உணரவில்லை.
எனினும், 1986(ஏப்ரல்) அந்நஜாத் தோற்றத்திற்குப் பின், இந்திய முஸ்லிம்கள் வரலாற்றில், மத்ஹப்கள் தாங்கி நிற்கும், அபத்தங்களை மிகக் கடும் எதிர்ப்பிற்கிடையே, அல்லாஹ்வின் பேரருளால், அசாத்திய துணிச்சலுடன் அந்நஜாத் எடுத்துக்காட்டத் துவங்கியது. அதன்பின் மத்ஹப்கள் கெடுதிகளைச் சிந்தித்து உணர்ந்தோர், மத்ஹப்வாதிகளால் தனிமைப்படுத்தப்பட்டனர். சொல்லொனா இன்னல்களுக்கும் ஆளாயினர். அது மட்டுமல்ல. இவர்கள் பிரமிக்கத்தக்க எண்ணிக்கையில் கூடுதலாவதைக் கண்ட பிரிவினைவாதிகள், சுயலாபம், பெயர், புகழ் போன்ற அற்ப உலக ஆதாயத்திற்காக, மத்ஹப் பிரிவுகளிலி ருந்து விடுபட்டவர்களைத் தம் பங்கிங்கு மீண்டும் துண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மத்ஹப் பிரிவுகளிலிருந்து விடுபட்டோரின் அணி மனப்பான்மையில் உருவான இயக்கங்கள் :
மத்ஹப் பிரிவுகளிலிருந்து விடுபட்டவர்களும் இயக்கங்கள் கவர்ச்சி அமைப்புகள் கவர்ச்சி, கழகங்கள் கவர்ச்சி என்று மீண்டும் அணி மனப்பான்மைக்குள்ளும், குழு மனப்பான்மைக்குள்ளும் மிக லாவகமாக சிக்க வைக்கப்பட்டுள்ளனர். இதை ஆரம்பத்தில் உணர முடியாதவர்கள் தனித்தனி கழகங்களாய், சிறு, சிறு குழுக்களாய், தனித் தனித் தலைமைகளுடன் பிளவுபடுத்தப்பட்டனர். இவர்கள் பிளவுண்டபோது, ஒவ்வொருவரும் அவரவர் தலைமையையும், அவரவர் சார்ந்து நிற்கும் இயக்கங்களையும், அமைப்புகளையும், கழகங்களையும், உயர்த்திப் பிடித்தனர். அடுத்தத் தலைமையையும் அந்தத் தலைமையை சார்ந்துள்ள அணிகளையும், குழுக்களையும் தூசிக்கத் துவங்கினர். மத்ஹப்வாதிகளை விட மிக மோசமாய் கருத்து வேறுபாட்டுக்குள் சிக்கி, மத்ஹப்வாதிகளின் இழிப்பிற்கும், பழிப்பிற்கும், நகைப்பிற்கும் இலக்காகி, இன்று பிரிந்து நிற்பதில் மத்ஹப்வாதிகளை மிஞ்சி நிற்கின்றனர்.
தவிக்கவும் வேண்டாம்! தயக்கமும் வேண்டாம்!!
மத்ஹப்களை விட்டு வெளியேறியவர்களை அணி மனப்பான்மைக்குள்ளும், குழு மனப்பான்மைக்குள்ளும் மீண்டும் சிக்க வைத்த புண்ணியவான்கள் யார்? தவ்ஹீத் புரோகிதர்கள் தான்! ரொம்பவும் காலங் கடந்தாவது, இன்று ஒரு சிலர் இதை உணர்ந்தாலும், அதை விட்டு விடும் வழியறியாது தவிக்கின்றனர். அவர்கள் தவிக்க வேண்டியதில்லை. தயக்கமகின்றி அவர்கள் 3:103 இறைவாக்கைச் சரியாக சிந்தித்து உணர்ந்து இறை நெறிநூலோடு ஐக்கியமாக வேண்டும். அப்போதுதான் பகைமை ஒழியும், பரஸ்பரம் மேலோஙகும், அல்லாஹ்வின் அருள் மாரியும் சொரிந்து கொண்டேயிருக்கும்.
இறை நெறிநூலோடு ஐக்கியமாகுதல் என்றால் என்ன? இறையருளியதை அப்படியே பின்பற்றுவதே! இறை நெறி நூலோடு ஐக்கியமாகுதல் என்பதை 7:3 இறைவாக்கு தெளிவாக உணர்த்துகிறது.
7:3 இறைவாக்கை செயலாக்குவது எப்படி? இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அழகிய முன் உதாரணமாக்கி (33:21) நபி(ஸல்) அவர்களை மட்டும் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பின் பற்றுவதாகும். (3:31)
கருத்து வேறுபாடுகள் மலிவோ மலி வென்று மலிந்துள்ள இக்காலத்தில், கருத்து வேறுபாடுகள் தோன்றினால் என்ன செய்ய வேண்டும்? எந்த வேறுபாடுகள் தோன்றினாலும் அனைத்திற்கும் இறை நெறிநூலே தீர்வைத் தருகிறது. கருத்து வேறுபாடு களுக்கு இறுதி இறைநெறிநூலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலும் தரும் தீர்வையேற்று கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டு ஒன்றுபட வேண்டும் என்று 4:59ல் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
குறுகிய காலத்தில் தவ்ஹீத்வாதிகள்(?) மத்ஹப்வாதிகளைக் காட்டிலும் பெரிய அளவில் பிரிந்து நிற்கக் காரணம் என்ன?
கைப்புண்ணிற்குக் கண்ணாடி தேவையா? தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது கொண்டு பிரிவினை மனப்பான்மையைப் பிரதிபலிப்பவர்கள் எப்படி ஒன்றுபட முடியும்? அதனால், கூடிய வேகத்தைக் காட்டிலும், வேகமாய் பிரிந்து கொண்டிருக்கிறார்கள். 3:103 இறை நெறிநூலுடன் ஐக்கியமாகி, அவர்கள் ஒன்றுபட்ட சமுதாயத்திற்கு உதாரணங்கள் ஆகவேண்டும். ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்) மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க அல்லாஹ்வால் அருளப்பட்டது. இதைக் கீழ்கண்ட இறைவாக்கு திட்டவட்டமாய்த் தெளிவுபடுத்துகிறது.
ஒரே இறைவனை ஏக இறைவனாய் ஏற்று அகத்தாலும், புறத்தாலும் அல்லாஹ்வை அஞ்சுவோர் ஒன்றுபட்ட சமுதாயம் ஆகிவிடுவர்.
“நிச்சயமாக இந்த உம்மத் ஒரே உம்மத்தான் (இதில் எத்தகைய வேற்றுமையும் கிடையாது) நானே உங்களுடைய இறைவன். ஆகவே நீங்கள் இறை உணர்வுடன் (பயபக்தி) நடங்கள்” அல்குர்ஆன் : 23:52
பல்வேறு பிரிவுகளாய், இயக்கங்களாய், கழகங்களாய் பிரிந்து நிற்கும் தவ்ஹீத்வாதிகள் மேற்கண்டஇறைவாக்கை ஆழ்ந்து சிந்தித்து அணி, குழு மனப்பான்மையிலிருந்தும், பிரிவுகள், பிளவுகளிலிருந்தும் விடுபட்டு இறைக் கட்டளைகளோடு முற்றிலும் ஐக்கியமாகி, இறைத் தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில், எப்படி முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு ஒன்றுபட்ட சமுதாயமாய் திகழ்ந்தார்களோ அதை அப்படியே முஸ்லிம்கள் நடைமுறைச் சாத்திய மாக்கிக் காட்ட முன் வர வேண்டும்.
அதன் முதல் கட்டமாய், குறைந்தபட்சம் மத்ஹப்களை விட்டு விலகியோர் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்தால், இன்ஷா அல்லாஹ், அடுத்து மத்ஹப்வாதிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடலாம். “தவ்ஹீத்” வாதிகள் என்று தம்பட்டம் அடிப்போர் தங்களின் குழு அணி, பிரிவு மனப்பான்மையை விட்டு விலகி ஒன்றுபடாதவரை, அவர்கள் மத்ஹபு பிரிவினரை ஏளனம் செய்யவோ, குறை காணவோ ஒற்றுமை பற்றி பேசவோ, எழுதவோ, இதழுக்குப் பெயர் வைத்துக் கொள்ளவோ அருகதை இல்லாதவர்கள் என்பதை நன்கு தங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எனவே “தவ்ஹீத்” வாதிகள் என்று தங்களைத் தப்பட்டம் அடித்துக் கொள்வோர், ஆழ்ந்து சிந்தித்து, அனைத்து இயக்க, அமைப்பு, கழக பிரிவுகளிலிருந்து தங்களை விடுவித்து கொண்டு, ஒன்றுபட்ட சமுதாயமாகும் முயற்சிகளை முதலில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் அன்போடு கேட்டுக் கொண்டு அதற்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாவிக்க துஆ செய்கிறோம். வஸ்ஸலாம்.