குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2018 நவம்பர்,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

ஆய்வுத் தொடர் – 10

அபூ அப்தில்லாஹ்

அக்டோபர் தொடர்ச்சி…..

அடுத்து 3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கணப்படி ஆராய்வோம்.

எந்த மொழியாக இருந்தாலும் இலக்கண அடிப்படையில் ஒரு வாக்கியம் முற்றுப் பெற எழுவாய், பயனிலை இன்றியமையா ததாகும். எனவே நாம் இப்போது 3:7 வசனத்தை எழுவாய், பயனிலை தெரியும் நிலையிலே பிரித்து எழுதுவோம்.

  1. அவன்தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான்.
  2. B. இதில் தீர்க்கமான (தெளிவான) வசனங்கள் இருக்கின்றன.
  3. இவைதான் இந்நெறிநூலின் அடிப்படையாகும்.
  4. மேலும் எஞ்சியவை பல பொருள் பெறத்தக்கவை (தீர்க்கமற்றவை)யாகும்.
  5. எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடி, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத் தேடி அவற்றைப்         பின்பற்றுகின்றனர்.
  6. ஆனால் இவற்றின் உண்மைக் கருத்துக்களை (முடிவு – Final Verdict) அல்லாஹ் வைத் தவிர வேறெவரும் அறியார்.
  7. அறிவில் தேர்ந்தவர்களோ “நாங்கள் இவற்றில் (பூரணமாக) நம்பிக்கை கொண்டோம். இவை அனைத்துமே எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தவை தாம் என்று கூறுவார்கள்.
  8. அறிவுடையோரைத் தவிர வேறெவரும் நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.

3:7 வசனத்தை சிறு வாக்கியங்களாகப் பிரித்து எழுதியிருக்கிறோம். அவற்றில் எழுவாய், பயனிலை தடித்த எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளன. இந்த வாக்கியங்களில் எழுவாய், பயனிலையில் குழப்பமும் இல்லை, கூறு போடப்படவும் இல்லை என்பது தெளிவாகவே புரிகிறது.

இப்போது அவர்கள் கொடுத்திருக்கும் பொருளின் அடிப்படையில் 3:7 வசனத்தை சிறு வாக்கியங்களாகப் பிரித்துப் பார்ப்போம்.

அ. அவன்தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான்.

ஆ. இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன.

இ. இவைதான் இந்நெறிநூலின் அடிப்படையாகும்.

ஈ. மற்றவை (பல அந்தரங்களைக் கொண்ட) முத்தஷாபிஹாத் (என்னும் ஆயத்துக்கள்) ஆகும்.

உ. எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முத்தஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.

ஊ. அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களையும் தவிர வேறு யாரும் அதன் விளக்கத்தை அறியமாட்டார்கள்.

எ. அவர்கள் “இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம்” என்று கூறுவார்கள்.

ஏ. அறிவுடையோரைத் தவிர வேறெவரும் நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.

இந்த 8 சிறு வாக்கியங்களில் ஊ-வாக்கி யத்தையும், எ-வாக்கியத்தையும் உற்று நோக்கவும்.

அவர்களது மொழி பெயர்ப்புப்படி ஊ-வாக்கியத்தில் எழுவாயாக அல்லாஹ் இடம் பெறுவதோடு, ஆழ்ந்த அறிவுடையவர்களும் இடம் பெறுகிறார்கள்.

எ-வாக்கியம் “அவர்கள்” என்ற பன்மைச் சொல்லில் ஆரம்பிக்கிறது. அப்படியானால் இந்த எ-வாக்கியத்தின் அவர்கள் யார் யார்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த மொழியிலும் தொடர் வாக்கியங் களில் முந்திய வாக்கியத்தின் எழுவாயே அதைத் தொடர்ந்து வரும் வாக்கியத்திற்கும் எழுவாயாகும் என்பதில் இலக்கணம் அறிந்தவர்களுக்கிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆக, அரபி இலக்கண அடிப்படையில் எ-வாக்கியத்தில் “அவர்கள்” என்பது அவர்களது மொழி பெயர்ப்புப்படி அல்லாஹ்வும், கல்வி அறிவில் உறுதிப்பாடு உடையவர்களும் ஆகும்.

அவ்வடிப்படையில் இந்த எ-வாக்கியத்தை நிறைவு செய்து பார்ப்போம்.

அல்லாஹ்வும், கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களும் “இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான்; நாங்கள் அதில் நம்பிக்கை கொள்கிறோம்” என்று கூறுவார்கள் என்று பொருள்படும்.

இந்தக் கூற்றை ஏற்க முடியுமா? என்று சிந்தியுங்கள்; ஏற்க முடியாது.

அல்லாஹ்வே “இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான்” என்று சொல்லுவதாக இருந்தால் அந்த இறைவன் யார்? அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் இருக்கின்றானா? இத்தகைய கூற்று நம் ஈமானைப் பாதிக்காதா?

இந்த இடத்தில் “நீங்கள் ஏன் அல்லாஹ் வையும் சேர்த்துச் சொல்லுகிறீர்கள்? கல்வி யில் உறுதிப்பாடுடையவர்களை மட்டும் ஏன் சொல்லக் கூடாது” என்று நம்மிடம் சிலர் கேட்கலாம். ஆம்! இந்த வாக்கியத்தில் அல்லாஹ்வைச் சேர்ப்பதால் எப்படிப்பட்ட விபரீதமான பொருள் ஏற்படுகிறதோ, அதே போல் ஊ-வாக்கியத்தில் கல்வி அறிவில் உறுதிப்பாடுடையவர்களைச் சேர்ப்பதாலும் விபரீதமான பொருள் ஏற்படுகிறதே? அதை ஏன் அவர்கள் உணர மறுக்கிறார்கள் என்பதுதான் நமது கேள்வி. ஊ-வாக்கியத்தில் இருக்கும் எழுவாயே எ-வாக்கியத்திற்கும் எழுவாயாகும் என்பது இலக்கண விதியாகும். எனவே ஊ-வாக்கியத்தின் எழுவாயை, எ-வாக்கியத்திற்காக கூறு போடமுடியாது. அதாவது ஊ-வாக்கியத்திலுள்ள “அல்லாஹ்வையும், கல்வியின் உறுதிப்பாடுடையவர்களையும்” என்ற எழுவாயைக் கூறுபோட்டு, அல்லாஹ்வைப் பிரித்து கல்வியில் ஆழ்ந்தறிபவர்களை மட்டும் எ-வாக்கியத்தின் எழுவாயாக ஆக்க முடியாது. எந்த மொழியின் இலக்கண விதியும் இதற்கு இடம் தராது.

எனவே இலக்கண விதிப்படி ஊ-வாக்கியத்திற்கும் எழுவாயாக அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களையும் அவர்கள் குறிப்பிடுவதால், எ-வாக்கியத்தின் எழுவாயாகவும், அதே அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் என்றே அவர்கள் கூற்றுப்படி அமைய வேண்டும். முன்னைய வாக்கியத்தில் வரும் எழுவாய் பின்னைய வாக்கியத்திற்கு வராது என்றால் பின்னைய வாக்கியத்தின் எழுவாய் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பது தான் இலக்கண மரபாகும். உதாரணமாக,

“தாவூதும், அவரது தோழர்களும் வந்தார்கள், அவர்கள் சாப்பிட்டார்கள்” இந்த இரண்டு வாக்கியங்களில் முதல் வாக்கியத்தில் எழுவாய் இருக்கின்றது.2வது வாக்கியத்தில் எழுவாய் மறைந்து இருக்கிறது. எனவே இலக்கண மரபுப்படி தாவூதும் அவரது தோழர்களும் சாப்பிட்டார்கள் என்று பொருள் கொள்வதுதான் விதியாகும். தாவூதுக்கு வயிற்றுக் கோளாறு இருந்தது. அதனால் அவரது தோழர்கள் தான் சாப்பிட்டார்கள் என்று எவராவது கூறினால், இலக்கண விதிப்படி அது தவறாகும். அப்படியானால் வாசகம் இவ்வாறு அமைந்திருக்க வேண்டும். “தாவூதும், அவரது தோழர்களும் வந்தார்கள், அவரது தோழர்கள் சாப்பிட்டார்கள்” சொல்லுவதைத் தெளிவாகவும், தீர்க்கமாகவும் குறிப்பிடுவதற்கே ஒரு மொழியின் இலக்கணம் அமைந்துள்ளது. வாக்கியத்தில் தெளிவு இல்லை என்றால் அங்கு இலக்கண விதி மீறப்பட்டுள்ளது என்பதே பொருளாகும்.

அவர்களது மொழி பெயர்ப்பு சரி என்றால் அரபி இலக்கணப்படி அந்த வாக்கியம் கீழ்க்கண்டவாறு அமைந்திருத்தல் வேண்டும்.

“வமா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ் வர்ராஸிகூ னஃபில் இல்ம், வர்ராஸி கூனஃபில் இல்மி யகூலூன ஆமன்னாபிஹி” என்று அரபி இலக்கண மரபுப்படி அமைதல் வேண்டும். 3:7 வசனத்தில் இவ்வாறு இல்லை என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் அறிவார்கள். எனவே அவர்க ளது மொழி பெயர்ப்பு தவறு என்பது வெள்ளிடை மலை; அல்லது அல்குர்ஆனில் அரபி இலக்கண விதி மீறப்பட்டுள்ளது என்று அவர்கள் சொல்ல வருகிறார்களா? தங்களின் இந்தத் தவறான கூற்றை 89:22 குர்ஆன் வசனத்தைத் தவறாக மொழிபெயர்த்து நியாயப்படுத்த முன்வரலாம். காரணம், அவ்வாறு சிலர் நியாயப்படுத்தியுள்ளனர். எனவே அதற்கு முன்பே இந்த 89:22 வசனத்தில் அவர்கள் கூறும் தவறான மொழி பெயர்ப்பையும், சரியான மொழி பெயர்ப்பையும் இங்கு விளக்கி, அந்த ஐயத்தையும் போக்கிவிடுகிறோம்.

89:22ன் தவறான மொழிபெயர்ப்பு :

“வஜாஅ ரப்புக வல் மலக்கு ஸஃபான் ஸஃப்பா” (89:22)

இந்த வசனத்திற்கு அவர்கள் தங்கள் கூற்றை நியாயப்படுத்தி, தவறாக மொழி பெயர்ப்பது வருமாறு :

“உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது” இப்படித் தவறாக மொழி பெயர்த்து விட்டு “ஜாஅ” என்ற அரபி பதத்தில் வரும் பயனிலை முன்னைய வாக்கியத்தில் வரும் அல்லாஹ்வுக்கும் பின்னைய வாக்கியத்தில் வரும் மலக்குகளுக்கும் பொருந்தும். அதேசமயம் அணி யணியாக வருவது அல்லாஹ்வுக்குப் பொருந்தாது. எனவே “ஜாஅ” அரபி பதம் இரண்டு வாக்கியங்களையும் கட்டுப்படுத்து கிறது. மாறாக, அணியணியாக வருவது பின் னைய வாக்கியத்திற்கு மட்டுமே பொருந்துகிறது என்று விபரீதமாகக் கூறி, தங்கள் கூற்றை நியாயப்படுத்துகின்றனர். இதே அடிப்படையில் 3:7 வசனத்திலுள்ள நாம் குறிப்பிட்ட ஊ-வாக்கியத்தில் அல்லாஹ்வும், கல்வியில் ஆழந்தறிபவர்களும் இடம் பெற்றாலும் எ-வாக்கியத்தில் அல்லாஹ் இடம் பெற மாட்டான் என்று தவறாக வாதிடுகின்றனர். இவ்வாறு கூறுவதன் மூலம் அரபி இலக்கணத்தை அவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர். அவர்கள் கூறும் குறைபாடு இந்த 89:22 வசனத்திலும் இல்லை. உண்மையில் அவர்கள் மொழி பெயர்ப்பே தவறாகும்.

இந்த 89:22 வசனத்தின் சரியான மொழி பெயர்ப்பு வருமாறு :

“மலக்குகள் அணியணியாயிருக்க உமது ரப்பு வரும்போது” இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும் அதாவது “இராணுவ அணி வகுப்பை ஜனாதிபதி பார்வையிட்டார்” என்று கூறப்படுவது போன்ற கருத்தில் வரும் வசனமாகும் இது. இந்த 89:22 வசனத் திலுள்ள “ஜாஅ” என்ற பதம் அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருந்தும், மலக்குகளுக்குப் பொருந்தாது. மலக்குகளையும் குறிப்பிடும் என்று கூறுவது இவர்களின் தவறான மொழி பெயர்ப்பாகும். மலக்குகளுக்கு ஸஃப்பன் ஸஃப்பா என்ற பயனிலை தனியாக இருக்கிறது.

இவர்களின் இந்த விபரீதமான மொழி பெயர்ப்பின்படி அணியணியாக வரும் அளவிற்குப் பல அல்லாஹ்க்கள் இருப்பது போலும், அந்த அல்லாஹ்க்கள் மலக்கு களோடு அணியணியாக வருவது போன்றும் மிகவும் தவறான ஒரு சிந்தனையை உண்டாக்குகிறது என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது அரபி இலக்கண விதிப்படியும், அவர்களின் கூற்று தவறு என்பதும், இரண்டுவித மொழி பெயர்ப்புக்கும் அரபி இலக்கணம் இடம் கொடுக்கிறது என்று அவர்கள் கூறுவது அரபி இலக்கணத்தில் பழி போடுவதாகும் என்பதும் தெளிவாக விளங்குகிறதல்லவா?

அவர்கள் அல்ஜன்னத் இதழ் செப். 88, பக்கம் 33ல் குறிப்பிட்டுள்ளது வருமாறு :

“தெளிவான அரபி மொழியில் அருளப்பட்ட திருகுர்ஆனின் இந்த வசனத்திற்கு யார் செய்த பொருள் சரி என்று முடிவு செய்திட அரபி மொழி இலக்கணத்தை நாம் ஆராயும்போது இந்த இரண்டு அர்த்தங்களும் இலக்கணத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இலக்கணத்தில் எந்த விதியையும் இரண்டு மொழி பெயர்ப்புகளும் மீறி விடவில்லை. இன்னும் சொல்வதானால் அரபி இலக்கணம் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் இடம் தருவதனால்தான் இந்த சர்ச்சையே தோன்றியுள்ளது. சரியான பொருளை புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இலக்கண விதிகள் சில சமயங்களில் இப்படிக் காலை வாரி விடுவதுண்டு. அரபி மொழி உள்பட எந்த மொழியும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை”

இவர்களின் இந்தக் கூற்று ஏற்கத்தக்கதல்ல. சரியான பொருளைப் புரிந்து கொள்வதற்காக இலக்கண விதிகள் அமைக்கப்பட் டுள்ளன என்று அவர்களே கூறிக்கொண்டு, அதே இலக்கண விதிகளே காலை வாரி விடுவதாகவும் அவர்களே கூறுவது முறையல்ல. அதுவும் குர்ஆனுடைய விசயத்தில் இக் கூற்று பெருந்தவறாகும். மேலும், “இன் னும் சொல்வதானால் அரபி இலக்கணம் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் இடம் தருவதனால்தான் இந்த சர்ச்சையே தோன்றியது” என்ற அவர்களின் கூற்று. நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ, நபித் தோழர்களின் காலத்திலோ இந்த சர்ச்சை தோன்றவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வதை உணர்த்துகிறது. அதாவது அல்லாஹ் சொன்னதை நபி(ஸல்) அவர்கள் அப்படியே எடுத்துரைத்த அரபி இலக்கணமறியாத மக்களிடையே இந்த சர்ச்சை இல்லை. அரபி இலக்கண முறையில் அதனை நபி(ஸல்) அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளாத நபித்தோழர்கள் காலத்திலும் இந்த சர்ச்சை இல்லை என்பதை அல்ஜன்னத் ஆகஸ்ட் 89 இதழ் பக்கம் 9ல் அவர்கள் அளித்துள்ள ஒரு விமர்சன விளக்கமே நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் தங்களது அறிவில் குறை வைத்துக் கொண்டு மொழிகளின் இலக்கண விதிகளில் குறை காண்பது முறையல்ல.

மொழி இலக்கணம் தீர்க்கமாக பொருள் சொல்லும் மொழி இலக்கணம்தான், வழுக்கிச் செல்ல மொழி விளக்கெண்ணெய் இல்லை என்பதை அவர்களும் உணர துஆ செய்கிறோம்.

நபி(ஸல்) அவர்களின் நேரடிப் பார்வையிலேயே அல்குர்ஆனின் அத்தியாயங்களும் வசனங்களும் முறைப்படி தொகுக்கப்பட்டுவிட்டன. அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் பலரிடமிருந்த சில பல வசனங்கள் ஒரே நூலாக சேர்க்கப்பட்டது. உதுமான்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாம் பல நாடுகளுக்கும் பரவிவிட்டது. அந்தச் சமயத்தில் அல்குர்ஆனை பலரும் பலவிதமாக ஓதி வருகிறார்கள் என்று புகார் எழுப்பப்பட்டது. எனவே உதுமான்(ரழி) அவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களது ஆட்சியில் ஒன்று சேர்க்கப்பட்ட குர்ஆனைப் பார்த்து பல பிரதிகள் எடுத்ததோடு, குர்ஆன் ஓதப்பட வேண்டிய முறையையும், நபி(ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆனை பதிவு செய்த ஸைது இப்னு தாபித் (ரழி) இன்னும் இவர்கள் போன்றவர்களின் துணையுடன் ஒழுங்குபடுத்தினார்கள். இப்படி உதுமான்(ரழி) அவர்களின் ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட அல்குர்ஆனைப் பார்த்து அதே முறையில் பதிவாகி சமீபத்தில் அரபு நாடுகளின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அல்குர்ஆனில் “வமாயஃலமு தஃவீலஹூஇல்லல்லாஹ்” என்ற இடத்தில் வக்ஃபுலாசிம் என்ற நிறுத்தல் குறி இருக்கிறது. இந்த வக்ஃபுலாசிம் என்ற இடத்தில் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பொருள் பேதம் ஏற்படும் என்ற விளக்கமும் இருக்கிறது.

தமிழ்மொழி பெயர்ப்புகளிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அது மட்டுமல்ல, இந்த 3:7 வசனத்தைத் தவறாக மொழி பெயர்த்து எழுதும் Uஆக்கள், காதியானிகள் போன்றோர் பதிவு செய்திருக்கும் குர்ஆனிலும், இதே இடத்தில் அரபி ஒரிஜினலில் வக்ஃபு லாசிம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் இந்த அரபி வசனத்தை வேறு மொழிகளில் மொழி பெயர்க்கும்போது இந்த வக்ஃபு லாசிமை பொருட்படுத்தாமல் அதன் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்து மொழி பெயர்ப்பதே அவர்கள் மக்களை ஏமாற்றி வழிகெடுத்து, தாங்கள் சுய ஆதாயம் அடையும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது அல்லவா?

இன்று பிரபல்யமான நடைமுறையில் இருக்கும் ஹஃப்ஸுப்னி சுலைமானிப்னில் முகீரத்தில் அஸதிய்யில் கூஃபி அவர்களின் கிராஅத்தானது ஆஸிமுபின் அபின் நுஜூதில் கூஃபிய்யிதாபியீ அவர்களின் கிராஅத்துக்கு ஒத்த அமைப்பில் இருக்கிறது ஆஸிமுபின் அபின் நுஜூதில் கூஃபி அவர்கள் தமக்கு அபூ அப்திர்ரஹ்மான் அப்தில்லாஹிப்னி ஹபீ பிஸ்ஸுலமீ அவர் அறிவித்ததாகவும், அவர்கள் தமக்கு உஸ்மானு பின் அப்பான், அலிய்யிபின் அபீதாலிப், ஜைசதுபின் ஸாபித், உபையியின் கஃபு(ரழிம்) ஆகியோர் அறிவித்ததாகவும், இந்நான்கு பேர்களும் தங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாகவும் கூறுகின்றனர்.

இது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் தஃப்ஸீரின்523ம் பக்கத்தில் காணப்படும் முடிவுரையில் எழுதப்பட்டுள்ளது. இந்த தஃப்ஸீரில் எழுதப்பட்டுள்ள அல்குர்ஆனின் வசனங்கள் மேற்காணும் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன: இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் இந்த தஃப்ஸீரின் 43ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள “வமாயஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ்” என்ற இடத்தில் வக்ஃபுலாசிம் போடப்பட்டுள்ளது. எனவே ஹஃப்ஸ் அவர்களுடைய கிராஅத்திலும் இந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதனையும் சகோதர, சகோதரிகள் கவனிக்கவும்.

இந்த விளக்கங்களுக்குப் பிறகு அரபி இலக்கண விதிப்படி இந்த 3:7 வசனத்தில் இரு விதமாக மொழி பெயர்க்க இடம் இருக்கிறது என்று கூறுகிறவர்கள் தவறாகக் கூறுகிறார்கள். அரபி இலக்கணத்தில் அநியாயமாக குறை காண்கிறார்கள். அப்படிப்பட்ட குறைபாடு உள்ள நிலையில் அரபி இலக்கணம் இல்லை. அரபி இலக்கணப்படியும் 3:7 வசனம் ஒரே பொருளைத் தரும் தெளிவான நிலையில் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது.

Previous post:

Next post: