குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2019 ஜனவரி,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

ஆய்வுத் தொடர் – 11

அபூ அப்தில்லாஹ்

2018 டிசம்பர் தொடர்ச்சி…..

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் நிலை :

அடுத்து, முத்தஷாபிஹ் வசனங்களின் உண்மைப் பொருளை “வர்ராஸிகூனஃபில் இல்மி” ஆழ்ந்தறிவுடையோரும் அறிவார்கள் என்ற கருத்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவர்கள் கொடுத்துள்ள பெரிய ஆதாரம் வருமாறு. திருகுர்ஆனின் எந்த ஒரு வசனமும் எங்கே இறங்கியது என்று நான் அறிவேன்; எந்த ஒரு வசனமும் என்ன காரணத்திற்காக இறங்கியது என்பதையும் நிச்சயமாக நான் அறிவேன்” என்று இப்னு மஸ்ஊத்(ரழி) கூறியுள்ளனர். இந்தச் செய்தி புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. (அல்ஜன்னத் அக் 88, பக்கம் 42)

இந்த ஹதீஃதை எடுத்து எழுதி சொந்த விளக்கங்கள் பல கொடுத்து தங்கள் வாதத்தை நியாயப்படுத்தியுள்ளனர். உதாரணமாக, 96ம் அத்தியாயம் எங்கே இறங்கியது? என்ன காரணத்திற்காக இறங் கியது? என்பதை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ப தில் இரண்டு கருத்து இருக்க முடியாது. அப்படியானால் 96வது அத்தியாயத்தில் இரண் டாவது வசனத்தில் வரும் “அலக்” என்ற பதத்திற்குரிய உண்மைப் பொருளை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிந்திருந்தார்களா? நிச்சயமாக, “அலக்” என்பதற்கு இரத்தக்கட்டி என்ற விளக்கத்தையே தெரிந்திருப்பார்கள். உண்மை நிலை என்ன? “அலக்” என்ற பதத்தின் உண்மைப் பொருளை அல்லாஹ்வையன்றி அல்லாஹ்வின் ரசூலும் கூட அறிய மாட்டார்கள் என்பதேயாகும்.

ஒரே ஒரு முத்தஷாபிஹாத் பதத்தின் நிலையே இதுவென்றால் முத்தஷாபிஹ் வசனங்களின் நிலை பற்றி என்ன சொல்லமுடியும்? விஷயம் இவ்வளவு தெள்ளத் தெளிவாக இருக்க இவர்கள் ஏன் இப்படி தடுமாறுகிறார்கள்? இன்னும் பாருங்கள். அலிஃப்லாம்மீம், அலிஃப் லாம்ரா, காஃப்ஹாயா, அய்ன்சாத், யாஸீன், நூன், ஸாத் இப்படித் தொடங்கும் அத்தி யாயங்கள் எங்கே இறங்கின, என்ன காரணத்திற்காக இறங்கின என்பதை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள்.

எனவே அவர்களுக்கு இவற்றின் உண்மைப் பொருள் தெரியும் என்று சொல்ல வருகிறார்களா? ஆக இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் (ரழி-ம்) ஆகிய இரு நபித் தோழர்களும் 3:7 வசனத்தில் இல்லல்லாஹ்வுடன் வர்ராஸி கூனஃபில் இல்மியையும் சேர்த்து ஓத வேண்டும் என்ற கருத்தில் இருந்தார்கள் என்று சொல்லுவது ஹிமாலயத் தவறு. எந்த அளவு பெரிய தவறு என்றால், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் “நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரில் தனது புறக்கண்ணால் பார்த்தார்கள்” என்று சொன்னதாகத் தவறாகச் சொல்லுவதை விட அதே இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவில் 20+3 ரகாஅத்து தொழுதார்கள்” என்று சொன்னதாகத் தவறாகச் சொல்லுவதை விட உமர்(ரழி) அவர்கள் ரமழான் இரவில் 20+2 ரகாஅத்து தொழுதார்கள் என்றோ, தொழ வைக்கச் சொன்னார்கள் என்றோ தவறாகச் சொல்லுவதைவிட பெரிய தவறாகும்.

ஆனால், இந்த வி­யங்களில் உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் 3:7 வசனத்தின் உண்மை நிலையைப் புரிய முடியாமலா இருக்கிறார்கள்? ஆக, நபித் தோழர்களிடையே 3:7 வசனம் பற்றிய மாறுபட்டக் கருத்துக்கள் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஏகோபித்து “முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ்வையன்றி வேறு எவரும் அறியார்” என்ற கருத்திலேயே இருந்தனர் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது 3:7 முஹ்க்கம் வசனத்தில் இரண்டு முரண்பட்ட கருத்துக்கள் பெற முடியும் என்ற தவறான கருத்தில் நபித் தோழர்களில் எவரும் இருக்கவில்லை. திட்டமான, தெளிவான ஒரே ஒரு கருத்தையே பெற முடியும் என்று நபித்தோழர்கள் அனைவரும் ஏகோபித்த முடிவில் இருந்துள்ளனர். பின்னால் வந்தவர்கள் அவர்கள் பெயரால் அப்படி கற்பனை செய்துள்ளனர் என்பதே உண்மையாகும். அதனையும் விரிவாகவே பார்ப்போம்.

தாபியீன்களின் நிலை :

3:7 வசனத்தில் முரண்பட்ட கருத்துக்கள் எப்போது தோன்றின? எப்படித் தோன்றின? அதன் மூலகர்த்தா யார்? என்று அலசும் போது நமக்கு பல தெளிவுகள் கிடைக்கின்றன. இந்த மாறுபட்ட கருத்தை முதலில் சொல்லியவர் இப்னு அப்பாஸ்(ரழி) அவர் களின் மாணவர் முஜாஹிதாகும். தோன்றிய காலம் நபித் தோழர்களுக்குப் பிறகு தாபியீன்களின் காலமாகும். எப்படி அந்த தவறான எண்ணம் ஏற்பட்டது? முஜாஹித் (ரஹ்), இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் குர்ஆனின் அனைத்து வசனங்களையும் ஓதிக்காட்டி அவற்றிற்கு விளக்கம் தனக்குத் தெரியாது என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறாமல் அனைத்திற்கும் விளக்கம் கொடுத்துள்ளார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு குர்ஆனுடைய தஃவீலை(விளக்கம்) அளிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் துஆ செய்ததும் அவருக்குத் தெரியும்.

எனவே 3:7 வசனத்திலுள்ள “”தஃவீலும்” இந்த கருத்தில்தான் உள்ளது என்ற தவறான எண்ணத்தில் அல்லாஹ்வுடன் வர்ராஸி கூனஃபில் இல்மியையும் சேர்த்துவிட்டார். விளக்கம், விரிவுரை என்பது வேறு. அதே சமயம் உண்மைப் பொருள், இறுதி முடிவு என்பது வேறு, ஆயினும் இவை அனைத்திற்கும் “”தஃவீல்” என்ற பதம் 4:59, 7:53, 17:35 போன்ற வசனங்களில் வந்துள்ளதையும் அறியத் தவறிவிட்டார் என்பதை மிக்க வருத்தத்துடன் குறிப்பிட்டேயாக வேண்டும். ஆக, முஜாஹித் அவர்களின் இந்தத் தவறான எண்ணமே பின்னால் வந்த சிலரைத் தடுமாற வைத்துள்ளது. இந்தக் கருத்தை இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (ப.இ.தை.பாகம்:13, பக்கம் 284)

மேலும் இதனை குர்துபீ அவர்கள் தனது தஃப்ஸீரில் மிகத் தெளிவாக அறிவிக்கிறார்கள். அதில் முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்ற கருத்தை உடையவர்களின் பெயர் பட்டியலில் இப்னு உமர், இப்னு அப்பாஸ், ஆயிஷா, உர்வத்துப் னிஜ்ஜுபைர், இப்னு மஸ்வூது, உபை பின் கஃபு(ரழி-ம்) ஆகிய நபித்தோழர்களையும், ஐந்தாம் சீரிய கலீஃபா என்று போற்றப்படும் உமருபின் அப்தில் அஜீஸ்(ரஹ்) அவர்களை யும் இடம்பெறச் செய்துள்ளார். அவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரவாக தவறாகக் கூறும் இப்னுஅப்பாஸ், இப்னுமஸ்வூத் (ரழி-ம்) இருவரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முத்தஷாபிஹ் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ்வும், வர்ராஸிகூனஃ பில் இல்மியும் அறிவார்கள் என்ற கருத்தை முதலில் சொன்னவர் முஜாஹிதாகும் என்று இமாம் குர்துபீ எழுதிவிட்டு, ஒருசிலர் இக்கருத்தை ஏற்றுக் கொண்டபோதிலும் மிகப் பெரும்பான்மையினர் இக்கருத்தை மிக வன்மையாக நிராகரித்துள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் மிகப் பெரும்பான்மையான மார்க்க மேதைகளும், மொழி அறிவு படைத்தோரும் சொல்லும் கருத்து மேலானதா? அல்லது தனித்த நிலையில் கூறும் ஒரு முஜாஹிதுடைய கருத்து மேலானதா? என்று இமாம் குர்துபீ தனது தஃப்ஸீர் பாகம் 4, பக்கம் 17ல் வினா தொடுக்கிறார். இவ்வாறு தெளிவுபடுத்திவிட்டு, 3:7 வசனத்தில் இரண்டு கருத்துகளுக்கு இடமே யில்லை. முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்ற ஒரே கருத்தையே பெற முடியும் என்று இமாம் குர்துபீ உறுதியாகக் கூறுகிறார்கள்.

மேலும், குர்துபீ இந்த 3:7 வசனம் இறக் கப்பட்ட வரலாறு பற்றி இவ்வாறு எழுதி யுள்ளார்கள், ஹய்யிபின் அக்தப் என்பவருடன் ஒரு யூதக் கூட்டம் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களை நோக்கி உம்மீது “அலிஃப் லாம்மீம்” என்று ஒரு வசனம் இறக்கியிருப்பதாக நாங்கள் அறிகிறோம். இவ் விஷயத்தில் நீர் உண்மையுடையவராக இருப்பின் நிச்சயமாக உமது சமுதாயத்தவர் ஆட்சி 71 ஆண்டுகள்தான் இருக்கும். ஏனெ னில் “அலிஃப்” என்பதற்கு 1 என்பதாகவும், “”லாம்” என்பதற்கு 30 ஆகவும், “”மீம்” என்பதற்கு 40 ஆகவும் ஹிஸாபில்ஜமன் அப்ஜத் கணக்குப்படி வருகிறது.

(இந்த அப்ஜத் கணக்கை யூதக் கிறிஸ்தவர்களிடம் இருந்து காப்பி அடித்துத்தான் முகல்லிது மவ்லவிகள் பிஸ்மிக்கு 786 என்று போடுகின்றனர். கவனிக்கவும்) ஆக, 71 இலக்கம் வருவதால் 71 ஆண்டுகள் உமது உம்மத் ஆட்சி செய்யும் என்று கூறினார்கள். அப்போது இவ்வசனம் அருளப்பட்டது. இந்த இறக்கப்பட்ட வரலாற்று அடிப் படையிலும், “அலிஃப்லாம்மீம்” என்ற பதத்திற்கு உண்மைப் பொருளை அல்லாஹ் வன்றி வெறெவரும் அறியார் என்று பொருள் கொள்ளவே முடியும். அல்லாஹ் வும், வர்ராஸிகூனஃபில் இல்மியும் அறிவார்கள் அறிவார்கள் என்று கூறுவது அறிவுடைமையாகாது.

3:7 வசனம் இறக்கிய வரலாறு குறித்து தஃப்ஸீர் தபரீயில் இடம் பெற்றுள்ளதை எடுத்து எழுதி இருந்தார்கள். அது வருமாறு: திருகுர்ஆனில் பல இடங்களில் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி இறைவன் கூறும்போது, கலிமதுல்லாஹ் (இறை வாக்கு) ரூஹுன் மின்ஹு (இறைவன் புறத்திலிருந்து வந்த ஆவி) என்றெல்லாம் குறிப்பிடுகிறான். நபி(ஸல்) காலத்தில் வாழ்ந்த கிறித்தவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “ஈஸாவை இறைவாக்கு என்றும், இறைவனின் ஆவி என்றும் நீர் ஒப்புக் கொள்கிறீரா? என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் “ஆமாம்” என்றனர். அதற்கு அவர்கள் “எங்களுக்கு இது போதும்” என்று கூறிவிட்டுச் சென்றனர். உடனே 3:7 வசனம் இறங்கியது. (தபரீ) என்பதாகும். இந்த வரலாற்றை எடுத்து எழுதிவிட்டு அதன்பின் சில விளக்கங்களைக் கொடுத்தி ருக்கிறார்கள். அவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தோடு வி­யம் முடிந்து விட்டதா? வேறு விளக்கம் கொடுக்க முடியாதா? “ஈஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் 3:49 வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி சில விசேஷ தன்மைகளைக் கொடுத்திருந்தான். வேறு எந்த நபியையும் இறுதி நாளுக்குச் சமீபம் வரை தன்னளவில் உயர்த்தி வைக்காத அல்லாஹ், ஈஸா(அலை) அவர்களை அவ்வாறு உயர்த்தி, வைத்துள்ளதை 4:158 வசனத்தில் குறிப்பிடுகிறான். இவை காரணமாக தன்னுடைய வாக்கு, தன் புறத்திலிருந்து வந்த ஆவி என்று குறிப்பிடுகிறான்” என்று யாரும் வேறு விளக்கம் தந்தால் அது தவறு என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா? இங்கும் “கலிமதுல்லாஹ், ரூஹுன் மின்ஹு” என்ற பதங்களின் விளக்கத்தைப் பலரும் பலவிதமாகத் தந்தாலும் அவற்றின் உண்மைப் பொருளை, இறுதி முடிவை அல்லாஹ்வன்றி வேறு எவரும் அறியார் என்று கூறுவதில் தவறு என்ன இருக்க முடியும்? என்று சிந்தித்துப் பாருங்கள்.

இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் 3:7 வசனத்தில் அல்லாஹ்வுடன் ஆழ்ந்த அறிவு டையவர்களை இணைத்துக் கருத்துச் சொல்லுகிறார் என்று அவர்கள் குறிப்பிட்டி ருப்பதும் (அல்ஜன்னத் ஜூன் 89, பக்கம் 41) பெருந்தவறாகும். இதோ அவர்களின் கூற்று. “முத்தஷாபிஹாத்” பற்றி அல்லாஹ் கூறும் போது அதன் பொருளையோ அல்லது அதன் விளக்கத்தையோ அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறியார்” என்று கூறாமல் “வமாயஃவமுதஃவீலஹூ இல்லல்லாஹ்”-அல்லாஹ்வைத் தவிர மற் றெவரும் அதன் தஃவீலை-உண்மைப் பொருளை-இறுதி முடிவை அறியார் என்றே குறிப்பிட்டுள்ளான்.

ஆகவே “”இல்லல்லாஹ்” எனும் இடத்தில் வஃபு செய்வது – நிறுத்துவது அவசியமாகும். இதற்கே அதிகமான சான்றுகள் இருப்ப தோடு இக்கருத்தையே நபித்தோழர்கள் அனைவரும் (நபித் தோழர்களிடையே 3:7 வசனம் பற்றி கருத்து வேறுபாடு இல்லை என்பதை இப்னு தைமிய்யாவும் ஊர்ஜிதம் செய்துள்ளார்-கவனிக்கவும்) தாபியீன் களில் பெரும்பாலானவர்களும், இச்சமூகத் தில் பெரும்பான்மையினரும் கொண்டுள்ளனர். (ப.இ.தை.பாகம் 13, பக்கம் 275) இதே பாகம் பக்கம் 291ல் தஃவீல் என்ற பதத்திற்கு ஆக்கிபத்து -மஸீர் அதாவது இறுதி முடிவு என்ற பொருள் இருப்பதையும் நிரூபித்துள்ளார். இதனைக் குறிப்பிட்டுவிட்டு முஜாஹித் அவர்களுக்கு எதனால் தடுமாற்றம் ஏற்பட் டது என்ற விபரத்தையும் குறிப்பிடுகிறார். அதனை முன்னால் எழுதியுள்ளோம்.

மேலும், முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்கிக் கொள்ள முடியாது என்று சிலர் கூறும் தவறான கூற்றை மறுத்து விளங்க முடியும் என்று பல சான்றுகளைத் தருகிறார். ஆனால் அவற்றை ஆதாரமாகக் காட்டி 3:7 வசனத்தில் அல்லாஹ்வுடன், ஆழ்ந்தறிவுடையவர்களையும் இணைப்பது தான் பெருந்தவறாகும். இது காலம் வரைத் தோன்றிய அறிஞர் களில்பெரும்பான்மையினர் 3:7 வசனத்தில் இல்லல்லாஹ்வில் நிறுத்த வேண்டும் என்றும், ஒருசிலர் இல்லல்லாஹ்வில் வர்ராஸி கூனஃபில் இல்மியையும் சேர்த்துச் சொல்ல இடம் இருக்கிறதென்றும் சொல்லி வருகிறார்கள். ஆழ்ந்தறிவுடையவர்கள் இல்லல்லாஹ்வில் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். ஆனால் அதன் பொருள் முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்க முடியாது என்பதல்ல. விளங்க முடியும். ஆனால் அவற்றின் பொருளைத் திட்டப்படுத்தி உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்று மிகத் தெளிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அதாவது இவர் கள் அனைவரும் 3:7 வசனத்தை சரியான பொருளில் முஹ்க்கம் வசனம் என்று உறுதிப்படுத்துகின்றனர். ஒருசிலர் 3:7 வசனத்தில் வரும் தஃவீல் என்ற பதத்திற்கு விளக்கம் என்று பொருள் செய்து கொண்டு விளங்க முடியாததை ஏன் அல்லாஹ் இறக்க வேண்டும்? விளங்க முடியாததும் குர்ஆனில் இருக்கிறதா? நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ குர்ஆனின் எந்த வசன்ததிற்காவது இதன் விளக்கம் எங்களுக்குத் தெரியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லி இருக்கிறார்களா? என்று இந்த இடத்திற்கு தேவையில்லாத சந்தேகங்களைக் கிளப்பிக் கொண்டு அல்லாஹ் மட்டுமே அறிவான் என்றுள்ள விஷயங்களில் அல்லாஹ் மட்டுமே என்றும், மற்ற விளக்கங்கள் என்று வரும் இடங்களில் ஆழ்ந்தறிவுடையவர்களும் அறிவார்கள் என்று இரண்டு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். அதாவது அனைத்திலும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று கூறுவதாகவும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலை, பல தஃப்ஸீர்களின் நிலை இதுவாகவே இருக்கிறு. இன்னும் தெளிவாகச் சொல்லுவதாக இருந்தால் 3:7 முஹ்க்கம் வசனத்தை இவர் கள் முத்தஷாபிஹாத் வசனமாக ஆக்கி இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களில் யாருமே 3:7 வசனத்தில் அல்லாஹ்வுடன் ஆழ்ந்தறிவுடையவர்களையும் சேர்த்தே சொல்லவேண்டும். பிரித்துச் சொல்வதற்கு இடம் இல்லை என்று உறுதிபடச் சொன்னதில்லை. அதாவது அவர்களில் யாரும் தவறான பொருளில் 3:7 வசனத்தை முஹ்க்கம் வசனமாக ஆக்கியதில்லை. அந்த வேலையை இவர்கள்தான் இப் போது முதன்முதலாகச் செய்து 3:7 வசனத்தை தவறான பொருளில், முத்தஷா பிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ்வும், ஆழ்ந்தறிவுடையவர்களும் அறிவார்கள் என்று உறுதிபடக் கூறி, 3:7 வசனத்தை தவறான பொருளில் முஹ்க்கம் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, பத்தாயிரம் குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்புப் பிரதிகளில் இந்தத் தவறான மொழி பெயர்ப்பை இடம்பெறச் செய்து தமிழக மக்களிடையே நச்சுக் கருத்தைப் பரப்பி அவர்களைக் குழப் பத்தில் ஆக்கி இருக்கிறார்கள்.

ஆக, 3:7 வசனத்தில் மாறுபட்ட கருத்துகள் நபித் தோழர்களின் காலத்தில் தோன்றி யதல்ல. தாபியீன்கள் காலத்தில் தோன்றி யது என்பதும் உறுதியாகத் தெரிகிறது. தகுதிசால் தஃப்ஸீர் விரிவுரையாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் 3:7 வசனத்தில் இல்லல்லாஹ்வுடன் முதல் வாக்கியத்தை நிறுத்த வேண்டும். வர்ராஸிகூன ஃபில் இல்மி அடுத்த வாக்கியத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகக் கூறுகின்றனர். மிகச் சிறுபான்மையினர் அவ்வாறு சொல்வதை எற்றுக் கொள்வதுடன் இல்லல்லாஹ்வுடன் வர்ராஸிகூனஃபில் இல்மியையும் சேர்த்துக் சொல்லவும் இடம் இருக்கிறது என்று இரண்டும் கெட்டான் நிலையில் எழுதி வைத்துள்ளனர்.

இப்போது இவர்கள்தான் 3:7 வசனத்தில் இல்லல்லாஹ்வுடன் முன்னைய வாக்கியத்தை நிறுத்தக்கூடாது. வர்ராஸிகூனஃபில் இல்மியையும் இணைத்தே ஓதவேண்டும் என்ற புதிய பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பவற்றைத் தெளிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள்.

3:7 வசனத்தில் முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான். அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் உண்மை (இறுதிப்) பொருளை அறிவார்கள் என்று மொழிபெயர்ப்பது தவறு என்பதனை பச்சைப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல் இந்த நிலையில் அரபி இலக்கணம் அறிந்தவர்கள் பார்வையில் இந்த ஆட்சேபனை கால் காசும் பெறாது. இதைப் படித்த மாத்திரத்திலேயே ஆட்சேபனையாளரின் அறியாமையையும் விபரம் கெட்ட நன்மையையும் சட்டென விளங்கிக் கொள்வார்கள் என்று அரபி மொழி அறியாத நம்மைச் சாடியிருப்பது அறிவுபூர்வமானதாக இல்லை.

மொழி இலக்கணத்தின் இலக்கணம் முறையாகக் கற்றிருந்தால் இவ்வாறு எழுதியிருக்க மாட்டார்கள். சொல்லப்படும் கருத்தைத் தெளிவாக, ஆணித்தரமாக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் முறைப்படுத்தப்பட்டதே மொழி இலக்கணமாகும். அவர்களின் வாதம் உண்மை என்றால் தமிழ் மொழியின் இலக்கணம் நிறைவானதாக இருப்பது போல் அரபி மொழியின் இலக்கணம் நிறைவானதல்ல குறையுடையது என்பதே அதன் பொருளாகும்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: