நாளின் ஆரம்பம்…

in 2019 ஜனவரி,பிறை

நாளின் ஆரம்பம்…

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

“நேற்று என்பதும், இன்று என்பதும், நாளை என்பதும், ஒருபோதும் ஒன்றல்ல”

அதுபோலவே கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய இவை மூன்றும் ஒருபோதும் ஒன்றல்ல வெவ்வேறானவை தான்.

எம்மை விட்டும் கடந்து சென்ற நேற்றைய தினம் என்பது வேறு, பொழுது புலர்ந்துள்ள எமது இன்றைய தினம் என்பது வேறு. நாம் எதிர்பார்த்திருக்கும் நாளைய தினம் என்பது வேறு என்பதாகவே அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகளை நிறையவே எம்மால் குர்ஆனிலும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களிலும் காண முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உலகில் வருகையால் நமது சமுதாயமே பிந்தியதாகும். எனினும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் முன்பே வேதம் கொடுக்கப்பட்டவர்களாவர். ஆயினும் மறுமையில் தகுதியிலும், சிறப்பிலும் அந்தஸ்திலும் நாமே முந்தியவர்கள் ஆவோம். சிறப்பு வழிபாட்டிற்கான வாரத்தில் ஒரு நாளாகிய இன்று வெள்ளிக்கிழமை நமக்கு ஜும் ஆவுடைய சிறப்பான நாளாகும் நாளை சனிக்கிழமை யூதர்களுக்குரிய சிறப்பான நாளாகும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களுக்குரிய சிறப்பான நாளாகும். இதிலும் நாமே முந்தியவர்களா வோம்.(புகாரி : 876, 896, 3486,முஸ்லிம் 1550, முஸ்னத் அஹ்மத், நஸயி)

ஜுவைரியா(ரழி) அவர்கள் கூறியதாவது:

நான் வெள்ளிக்கிழமையாகிய இன்று நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள் நேற்று நோன்பு நோற்றிருந்தாயா? என்று கேட்டார்கள் நான் “இல்லை” என்றேன்.

நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா? என்று கேட்டார்கள் அதற்கும் “இல்லை” என்றேன் (இதைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் “அப்படியானால் (இன்று நோற்றுள்ள) நோன்பை முறித்துவிடு!” என்று கூறினார்கள். (புகாரி : 1986)

அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின்னர் ஒரு நாளைச் சேர்க்காமல் வெள்ளிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்க வேண்டாம்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 1984,1985) என்பதிலிருந்து நேற்று, இன்று, நாளை என்பது வெவ்வேறானவை தான். அவை மூன்றும் ஒருபோதும் ஒன்றல்ல என்பதனைத் தனித்தனியாகப் பார்ப்போம்.

ஒரு நாளின் ஆரம்பம், முடிவு இரண்டையும் நிர்ணயிப்பது சூரியனைக் கொண்டு தான் ஒவ்வொரு நாளும் “கறுப்புக் கயிறு” எனும் இரவின் இருள் ரேகை விலகி “வெள்ளைக் கயிறு” எனும் விடியலின் வெளிச்ச ரேகை தெரிய பொழுது புலர்ந்து விட்டால் (2:187) அன்றைய நாளும் தேதியும் சூரியன் உதித்தவுடன் (6:96)

இயல்பாகவே மாறிவிடுகிறது. இதுவே தொன்றுதொட்டு மனிதகுலம் பயன்படுத்தி வரும் இயற்கையானதும், இலகுவானதுமான நாட்காட்டிக்கான (9:96) வழிமுறையாகும். இதனையே பரிசுத்த குர்ஆன் வசனங்களும் நபி(ஸல்) அவர்களின் சொல்லும் செயல் முறைகளும் நமக்கு நிரூபிக்கின்றன. ஓர் ஆண்டைக் கணக்கிட வேண்டுமானால் அதன் மாதங்களையும், வாரங்களையும், நாட்களையும் சரியாகக் கணக்கிட வேண்டும்.

ஒரு நாளை முதலில் எதிலிருந்து கணக்கிட வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலாகத்தான் அல்லாஹ் (பொழுது புலரும் போது) உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கையும், (மாதங்களின், வாரங்களின், நாட்களின்) கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் (17:12) என்றும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும் சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான் (10:5) என்றும் குறிப்பிடுகின்றான்.

மேலும், பொழுது புலரும் அதிகாலை நேரமென்பது மாற்றத்தின் நேரமாகும் உலகின் பல மாற்றங்களை எல்லாம் அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே ஏற்படுத்தி உள்ளான்.

* அவனே பொழுதை விடியச் செய்பவன். (6:96)

* (பொழுது புலரும்) விடியற்காலை மீது சத்தியமாக! (89:1)

* பொழுது புலர்ந்து வெளிச்சம் தரும் அதிகாலை மீது சத்தியமாக! (74:34)

* இரவின் இருள் ரேகை எனும் “கறுப்பு கயிறு” விலகி பொழுது புலர்ந்து விடியலின் வெளிச்ச ரேகை எனும் “வெள்ளைக் கயிறு” தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்! (2:187)

உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட கேடுகெட்ட சமுதாயத்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பொழுது புலரும் அதிகாலை நேரத்திலேதான் அழித்து ஒழிக்கப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.

* (பிர்அவ்னுடைய கூட்டத்தினரான) அவர்கள் சூரியன் உதயமாகும் வேளையில் இவர்களைப் பின்தொடர்ந்தார்கள். (19:60)

* நிச்சயமாக அவர்கள் அனைவரும் பொழுது புலரும் அதிகாலை வேளையில் வேரறுக்கப்பட்டிருப்பார்கள் என்ற அந்தத் தீர்ப்பை நாம் (லூத் நபியாகிய) அவருக்கு அறிவித்து விட்டோம். (15:66) * எனினும் (ஸமூது கூட்டத்தாரான) அவர்கள் அனைவரையும் பொழுது புலர்ந்து அதிகாலையை அடைந்தபோது பெரிய பேரிடி முழக்கத்தின் சத்தம் பிடித்துக் கொண்டது. (15:83)

* அது தனது இரட்சகனின் கட்டளைப் பிரகாரம் அனைத்துப் பொருட்களையும் அழித்துவிடும் அவர்களது குடி யிருப்புகளைத் தவிர (வேறெதுவும்) காணப்படாதவாறு அவர்கள் பொழுது புலர்ந்த காலையை அடைந்தனர். குற்றவாளிகளான இக்கூட்டத்தாருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (46:25)

* இன்னும் பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் நிலையான வேதனை நிச்சயமாக (லூத்துடைய சமூகத்தாராகிய) அவர்களை வந்தடைந்தது. (54:38)

* லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர மற்றவர்கள் மீது நாம் நிச்சயமாகவே கல்மாரியை அனுப்பினோம். பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் நாம் அவர் குடும்பத்தார்களைப் பாதுகாத்துக் கொண்டோம். (54:34)

* தோட்டவாசிகளை நாம் சோதித்தது போல் இவர்களையும் நிச்சயமாக நாம் சோதித்தோம் இவர்களை அதை அறுவடை செய்வதற்காக பொழுது புலரும் அதிகாலை வேளையில் செல்வதாக சத்தியம் செய்தபோது அல்லாஹ் நாடினால் என அவர்கள் கூறவில்லை. (68:17,18)

* அவர்களின் அழிவுக்குரிய நேரம் பொழுது புலரும் அதிகாலை நேரமாகும் பொழுது புலரும் அதிகாலை (நேரம்) சமீபமானதாக இல்லையா? (11:81)

* எமது கட்டளை வந்தபோது ஷிஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டோ ரையும் எம்மிடமிருந்துள்ள அருளால் நாம் பாதுகாத்தோம், அநியாயம் செய் தோரைப் பெரும் பேரிடி சப்தம் பிடித் துக்கொண்டது அதனால் அவர்கள் வீடுகளில் பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் சடலங்களாக முகம் குப்புறக் கிடந்தார்கள். (11:94)

* (ஷிஐபாகிய) அவரை அவர்கள் பொய்ப்பித்தனர். எனவே அவர்களைப் பெரிய நிலநடுக்கம் பிடித்துக் கொண்டது. அத னால் அவர்கள் தங்கள் வீடுகளில் பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் சடலங்களாக முகம் குப்புரக் கிடந்தனர். (29:37, 7:91)

* (அல்லாஹ்வின்) வேதனை (மக்காவாசிகளான) அவர்களது முற்றத்தில் இறங்கி விடுமானால் எச்சரிக்கப்பட்டோரின் பொழுது புலர்ந்த அதிகாலை வேளை மிகக் கெட்டதாகிவிடும். (37:177)

* பொழுது புலர்ந்த அதிகாலையிலும் இரவிலும் நீங்கள் அவர்கள் அழிந்து போன இடத்தின் மீதே செல்கின்றீர்கள் நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர் களா? (37:137:138)

* அவர்கள் பொழுது புலர்ந்த அதிகாலை வேளையை அடைந்தவுடன் நிங்கள் அறுவடை செய்பவர்களாக இருந்தால் உங்கள் விளைநிலங்களுக்கு பொழுது புலரும் அதிகாலை வேளையிலேயே செல்லுங்கள் என ஒருவரையயாருவர் அழைத்துக் கொண்டனர். (68:21,22)

* ஏழைகளைத் தடுக்க ஆற்றலுடையவர்களாகவே அவர்கள் பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் சென்றனர். (68:25) புனித ரமழானில் நபி(ஸல்) அவர்கள் புனித லைலதுல் கத்ரைத் தேடி பள்ளிவாசலில் தரித்திருக்க நாடினால் இரவு பகல் 24 மணி நேரங்களைக் கொண்ட ஒரு சுப்ஹுத் தொழுகையிலிருந்து மறு சுப்ஹுத் தொழுகை வரை எடுத்துக் கொள்வார்கள்.

* நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹ் தொழுதுவிட்டுப் பொழுது புலரும் அதிகாலை வேளையில் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் சென்றுவிடுவார்கள் (ஆயிஷா(ரழி) புகாரி, பாகம்:2, பக்கம்:689, பாடம்: 14, 2041, 2033, முஸ்லிம் : 2007, அபூதாவூத்: 2107, நஸயி:702, திர்மிதி:721, இப்னு மாஜா: 1761, முஸ்னத் அஹ்மத்: 24710)

* நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்து விட்டுப் பொழுது புலரும்போது அதி காலை வேளையில் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள். (ஆயிஷா(ரழி) புகாரி : பாகம் 2, பக்கம் 684, பாடம் 9 எனும் தலைப்பிலும் பக்கம் 688, பாடம் 13 என்ற தலைப்பிலும் மேலும் பார்க்க: 2027, 2036, 2040, 2045)

* நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பிறை “எட்டில்” இஹ்ராம் அணிந்து வாகனத்தில் ஏறி மினா சென்று லுஹர், அஸர் தொழுகைகளை அங்கு தொழுதார்கள். (அனஸ் பின் மாலிக்(ரழி) ஜாபிர்(ரழி) இப்னு உமர்(ரழி), அதஃ(ரஹ்) அபுஸ் ஸுபைர்(ரஹ்) உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அப்துல் அஸிர் பின் ருஃபை(ரஹ்) புகாரி : பாகம் 2, பக்கம் 379, பாடம் 82, பக்கம் 380, பாடம் 83, 1653, 1654, 1763, 1764)

* ஹஜ்ஜுப் பெருநாளன்று நபி(ஸல்) பகீஃ என்னும் இடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள் பின்னர் அவர்கள் எங்களை நோக்கி உரை நிகழ்த்தினார்கள் அவ்வுரையில் இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்யவேண்டியது பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதாகும் பிறகு திரும்பிச் சென்று அறுத்துப் பலியிடுவதாகும் என்று (பராஃபின் ஆஸிப்(ரழி) அனஸ் பின் மாலிக்(ரழி) ஜுன்தப்) (ரழி) புகாரி : 968, 976, 983, 984, 985)

* நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை அவர்களுடன் பிலால் (ரழி) அவர்களும் சென்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி : 989)

* இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பெரு நாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் வேறு தொழுகைகள் தொழுவதை வெறுப்பவர்களாக இருந்தார்கள் (ஸயீத்(ரஹ்) புகாரி : பாகம் :1, பக்கம்:746, பாடம் 26 பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் தொழலாமா? என்பது பற்றிய பாடம்)

* பெருநாள் தொழுகைக்குக் காலையிலேயே செல்வது பற்றிய பாடம் (ளுஹா எனும்) உபரித் தொழுகை நேரத்தில் இந்நேரம் நாங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் பெருநாள் தொழுகையைத் தொழுது முடித்துவிடுவோம். (அப்துல்லாஹ் பின் புஸ்ர்(ரழி) புகாரி:1, பக்கம் 730, பாடம் 10)

* இரண்டு ஈட்டி அவை சூரியன் உயர்ந்த பின்னர் நோன்புப் பெருநாள் தொழுகையையும் ஒரு ஈட்டி அளவு சூரியன் உயர்ந்த பின்னர் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். (ஹஸன் பின் அஹ்மத்) இப்னு ஹஜர்)

* ஏக இறைவனின் பேரருளால் நமது வாழ்நாளில் நாம் அடைந்திருக்கின்ற இன்று என்பது எதுவரையயனில் அதி காலை சுபஹ் நேரம் சூரியன் உதித்ததிலிருந்து முழுப் பகலையும் முடித்து மஃரிபு நேரம் அது மறைந்து தொடரும் இரவையும் முடித்து மறுபடியும் சுபஹ் நேரம் அது உதிப்பதற்கு முன்னர் வரையுள்ள நேரமாகும் என்பதாகவே குர் ஆனும், ஹதீஃதும் நமக்குச் சான்று பகர் கின்றன. ஆக ஒரு நாளின் ஆரம்பம் முடிவு இரண்டையும் நிர்ணயிப்பது சூரியனின் சுழற்சியை வைத்துத்தான் அவ்வாறே பிரபஞ்ச நியதி ஒழுங்குபடுத் தப்பட்டுள்ளது அதனை நாம் இன்று என்போம்.

* (அரஃபாவுடைய நாளாகிய) இன்றைய தினத்தில் உங்களது மார்க்கத்தைப் பூர்த்தியாக்கிவிட்டேன்; எனது அருட்கொடையைமுழுமையாக்கி விட்டேன் இஸ்லாத்தை உங்களது மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன் (5:3) என்ற இறைவசனம் குறித்து துல்ஹஜ் பிறை ஒன்பதாவது அரஃபாவுடைய வெள்ளிக்கிழமை நாளில் அருளப்பட்டது என்று உமர்(ரழி) அவர்களும் (புகாரி: 47, 4407, 6726, 7268, முஸ்லிம் 5332, 5334, நஸாயீ 4926, திர்மிதி 2929, அஹ்மது 261,183) துல்ஹஜ் ஒன்பதாவது நாள் மாலையில் அரஃபாவில் நின்று கொண்டிருக்கும் போது அருளப்பட்டது என்று அலி(ரழி) அவர்களும் (தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர் : 3:43)

* அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் (இஹ்ராம் அணிந்து) மினாவுக்குப் புறப்பட்டேன் அப்போது கழுதையில் அமர்ந்து சென்று கொண்டிருந்த அனஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தேன். நான் அவரிடம் இன்றைய தினம் நபி(ஸல்) அவர்கள் எங்கு லுஹர் தொழுதார்கள்? என்று கேட்டேன். (புகாரி : 1654)

* ஹஜ்ஜுப் பெருநாளன்று நபி(ஸல்) பகீஃ என்னும் இடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள் பின்னர் அவர்கள் எங்களை நோக்கி உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்யவேண்டியது பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதாகும். பிறகு திரும்பிச்சென்றுஅறுத்துப் பலியிடுவதாகும் என்று (பராஃபின் ஆஸிப்(ரழி) ஜுன்தப்(ரழி) அனஸ் பின் மாலிக்(ரழி) புகாரி : 968,976ஸ983,984,985)

* ஹஜ்ஜுப் பெருநாளுடைய அன்றைய தினத்தில் முதன் முதலாவதாகச் செய்ய வேண்டியது ஒரு ஈட்டி அளவு உயரத்திற்கு சூரியன் உயர்ந்தவுடன் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதாகும் என்ற அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ஆதாரப்பூர்வ மான முன்மாதிரியில்இருந்து எவ்வித சந்தேகமும் இன்றி நாம் புரிந்து கொள் வது அன்றைய நாளின் ஆரம்பம் அதி காலை நேரம் என்பதாகத்தான்.

* நேற்று நான் கலீபா உமர்(ரழி) அவர்களிடம் வந்து மூன்று முறை ஸலாம் சொல்லி அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை திரும்பிச் சென்றுவிட்டேன் என்று கூறினேன். (அபூமூஸா(ரழி), முஸ்லிம் : 4352)

* இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள் தமது கடைசி காலத்தில் ஒருநாள் இஷா தொழுகையைத் தொழுதுவிட்டு எழுந்து நின்று இன்றைய இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்று பூமியில் இருக்கும் எவரும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எஞ்சியிருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள். (புகாரி : 601)

* ஜுவைரியா(ரழி) அவர்கள் கூறியதாவது: நான் வெள்ளிக்கிழமையாகிய இன்று நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றிருந்தாயா? என்று கேட்டார்கள் நான் “இல்லை!” என்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் “அப்படியானால் (இன்று நேற்றுள்ள) நோன்பை முறித்துவிடு” என்று கூறினார்கள். (புகாரி : 1986)

* கறுப்புக் கயிறு எனும் இரவின் இருள் ரேகை விலகி “வெள்ளைக் கயிறு” எனும் விடியலின் வெளிச்ச ரேகை தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) என்பதானது அதிகாலை பொழுது புலர்ந்து சூரியன்உதயமாகும் வரை உண்ணலாம், பருகலாம், உறவு கொள்ளலாம் என்பதாகும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 1:576-592)

* நபித்தோழர்களில் சிலர் நோன்பு நோற்க நாடினால் தமது கால்களில் வெள்ளைக் கயிற்றையும், கறுப்புக் கயிற்றையும் எடுத்துக் கட்டிக்கொள்வார்கள் மற்றும் சிலர் ஒரு கறுப்புக் கயிற்றையும், வெள்ளைக் கயிற்றையும் எடுத்துத் தனது தலையணைக்கடியில் வைத்துக் கொண்டு உற்றுப் பார்த்துக் கொண்டே கறுப்பையும், வெள்ளையையும் வித்தியாசம் காணும் அளவிற்கு அதிகாலை வெளிச்சம் தென்படும் வரை உணவு உண்டு வந்தார்கள் (சஹ்ல் பின் சஅத்(ரழி), அதீபின் ஹாத்திம் (ரழி) அனஸ் பின் மாலிக் (ரழி) அமர் பின் அல்ஆஸ்(ரழி) புகாரி :4511, 1916, 1921, 4509, 4510, 1918, 1923, 1931, 1932, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தராமீ, அபூதாவூத்)

* இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது விடைபெறும் ஹஜ்ஜின்போது துல்ஹஜ் பிறை ஒன்பதாவது நாள் இரவு அப்துல் முத்தலிப் குடும்பத்தாரின் சிறுவர்களான நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்பே எங்களுக்குரிய கழுதைகளில் ஏறி முஜ்தலிபா விலிருந்து மினாவுக்குச் செல்லத் தயாரானோம். அப்போது நபியவர்கள் எங்கள் தொடைகளை இலேசாகக் கிள்ளி “என் அருமை மக்களே!” சூரியன் உதயமாகாதவரை ஜும்ரா (எனும் அகபா)வில் நீங்கள் கல்லெரிய வேண்டாம் என்று கூறினார்கள் (நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னத் அஹமத், தஃப்சீர் இப்னு கஸீர் 7:258,259) இதிலிருந்து ஜும்ராவில் கல் எறிய வேண்டிய துல்ஹஜ் பிறை பத்தாவது நாள் சூரியன் உதயமாகிய பின்னரே ஆரம்பமாகிறது என்பது தெளிவாகிறது. மாறாக மஃரிப் நேரம் சூரியன் மறைந்தவுடன் அல்ல.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: