நபிதோழர்களை விமர்சனம் செய்தால் இழிவு உண்டாகும்!

in 2019 பிப்ரவரி

ஈரோடு சலீம்

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் நபிதோழர்கள் இந்த நபிதோழர்கள் எந்த அளவிற்கு சிறந்தவர்கள் என்றால் அவர்கள் குறித்து அல்லாஹ் முந்தைய புத்தகங்களிலும் கூட ஆச்சரியப்படுத்தி கூறியுள்ளான். இது குறித்து குர்ஆன் கூறுவதைப் பாருங்கள். முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவ ருடன் இருப்போர் (சஹாபாக்கள்) காஃபிர்கள் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவும், ஸஜ்தா செய்வோராக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் சஜ்தாவின் தளும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணமாகும். இன்ஜிலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது முலையைக் கிளப்பி அதை வெளிப் படுத்துகிறது. பின்னர் அதை பலப்படுத்துகின்றது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப் பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறான் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டும், நல்லமல்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களிக்கிறான். (48:29)

நபிதோழர்களின் சிறப்புகள் குறித்து நபி மொழி நூல்களிலும் ஏராளமான செய்திகள் காணப்படுகிறது. அதில் ஒன்றைப் பாருங்கள்.

நட்சத்திரங்கள் வானத்திற்கு பாதுகாப் பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். நான் என் தோழர்களுக்கு பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமுதாயத்தவருக்கு பாதுகாப்பாவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தவருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ மூஸா(ரழி) நூல்: முஸ்லிம் : 4953

சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று நபியின் நாவினால் சிறப்பித்து சொல்லப்பட்ட இந்த நபித் தோழர்களை பகிரங்கமாக விமர்சிக்கும் பழக்கம் முஸ்லிம்களில் சிலரிடையே சர்வசாதாரணமாக நடைமுறை யாகிவிட்டது. எவரொருவர் நபிதோழரை குறிப்பிட்டு இவர் இந்த குற்றத்தை செய்தவர் என்று விமர்சிப்பாரோ விமர்சனம் செய்யும் அந்த நபர் அந்த குற்றத்தை செய்தவரா கத்தான் இருப்பார். உதாரணத்திற்கு ஒருவர் நபிதோழர் ஒருவரைக் குறிப்பிட்டு இவர் இணை வைத்தவர் என்று விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்யும் அந்த நபர் நிச்சயமாக இணைவைக்கும் செயலை செய்து கொண்டிருப்பார். அல்லது வருங்காலத்தில் இணை வைக்கக்கூடிய நபராக மாறப்போகிறார். இதைப் போன்று நபி தோழர் ஒருவரைக் குறிப்பிட்டு இவர் கிரிமினல் என்று யாரேனும் விமர்சித்தால் விமர்சிப்பவர் கிரிமினலாக இருப்பார் அல்லது வருங்காலத்தில் கிரிமினலாக மாறப் போகிறார்.

இன்னும் யாரேனும் ஒருவர் நபி தோழரை பார்த்து இவர் விபச்சாரம் செய்ப வர் என்று விமர்சித்தால் விமர்சனம் செய்யும் அந்த நபர் விபச்சாரம் செய்பவராக இருப்பார். அல்லது கூடிய விரைவில் விபச்சாரம் செய்யப்போகிறார். இதைப் போன்று பொய்சாட்சியம் சொல்பவர், பொருளாசைப் பிடித்தவர், நிர்வாகத் திறமை இல்லாதவர், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கியவர், மார்க்க சட்டங்களில் தவறு இழைப்பவர்கள் என்று இதைப் போன்று பற்பல விமர்சனங்களை நபி தோழர்களை நோக்கி சிலர் செய்து வருகிறார்கள். இவர்கள் அனை வரும் எந்தக் குற்றத்தை குறித்து பேசுகிறார் களோ, அந்தக் குற்றத்தை அவர்களே செய்து கொண்டுதான் இவ்வாறு பேசுகிறார்கள். நபி தோழர்கள் குறித்து விமர்சனம் செய்பவர்கள், விமர்சனத்திற்கு உள்ளாவார்கள் என்று நாம் கூறுவதற்கு என்ன ஆதாரம்? இதோ குர்ஆன் கூறுவதை பாருங்கள்.

மேலும் அவர்களை நோக்கி (மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள் என்று கூறினால் (அதற்கு) அவர்கள் அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா? என்று கூறினார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் மூடர்கள். ஆனால் (தாங்கள்தான் முட்டாள்கள்) என்பதை அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். குர்ஆன் :2:13

நபி தோழர்களை முட்டாள்கள் என்று விமர்சனம் செய்த நயவஞ்சகர்கள்தான் உண்மையில் முட்டாள்கள். முட்டாள்கள் என்று அல்லாஹ் கூறுவது வெறுமனே விமர்சனத்திற்காக பதில் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது அல்லாஹ்வின் வார்த்தை உண்மையானது, நடக்கக்கூடியது. நடக்க கூடியதைத்தான் அல்லாஹ் கூறுவான் என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும். நபிதோழர்களை முட்டாள்கள் என்று சொன்ன காரணத்தினால் நயவஞ்சகர்கள் உண்மையான முட்டாள்களாக மாறினார்கள். இதனால் உண்மையை அறிந்து கொள்ள முடியாத குருடர்களாக மாறி தட்டழிந்து, தடுமாறி திரிந்தனர். இதைப் போன்றே நபிதோழர்களை குறித்து யாரேனும் விமர்சனம் செய்தால் அந்த விமர்சனம் அவரை சூழ்ந்து கொண்டு, அவரை நாசப்டுத்தி அவரது மறுமை வாழ்வையும் பாழாக்கிவிடும். இந்த உண்மையை உணர முடியாத அளவிற்கு நயவஞ்சகத் தன்மை அவரிடம் மேலோங்கி விடும் என்பதே இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் மேற்கண்ட வசனம் இறை நம்பிக்கையாளர்களை எச்சரிக்கை செய்கிறது.

மற்றொரு ஆதாரத்தைப் பாருங்கள் :

உமாரா பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

உபைதுல்லாஹ் பின் ஸியாத் மற்றும் அவரது தோழர்களின் தலைகள் கொண்டு வரப்பட்டு ரஹபா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசலில் அடுக்கிவைக்கப் பட்டன. அந்நிலையில் நான் அங்கு சென்றேன். அப்போது அங்கிருந்தோர் வந்துவிட்டது வந்துவிட்டது என்று கூறினர் அப்போது திடீரென பாம்பு ஒன்று அந்த தலைகளுக்கிடையே இருந்து வந்தது. உபைதுல்லாஹ் பின் ஸியாத்தின் மூக்குத் துவாரங்களில் நுழைந்து சிறிது நேரம் தங்கியது, பிறகு புறப்பட்டு சென்றது, மறைந்தது, பிறகு அங்கிருந்த மக்கள் வந்து விட்டது, வந்துவிட்டது என்று கூறினார்கள் இவ்விதம் இரண்டு அல்லது மூன்று முறை நிகழ்ந்தது. நூல் : திர்மிதி : 3703

ஹிஜ்ரி 66ல் இப்ராஹீம் பின் அத்த என்ப வரால் கொலை செய்யப்பட்ட உபைதுல்லாஹ் பின் ஸியாத்திற்கு ஏன் இந்த இழி நிலை? அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். நான் உபைதுல்லாஹ் பின் இப்னு, ஸியாத்திடம் இருந்தேன் அந்நிலையில் (கர்பலாவில் கொல்லப்பட்ட) ஹுசைன்(ரழி) அவர்களின் தலை கொண்டுவரப்பட்டது. அப்போது இப்னு ஸியாத் அதன் மூக்கில் குச்சியால் குத்திவிட்டு இவர் போன்ற அழகரை நான் பார்த்ததில்லை (என்று கிண்டலாக) கூறினார். அப்போது நான் அறிக. இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உருவ அமைப்பில்) மிகவும் ஒப்பானவராக இருந்தார் என்று கூறினேன். அறிவிப்பாளர்: அப்ஸா பின்த் சீரின்(ரஹ்) நூல்கள்: திர்மிதி : 3701 புகாரி : 3748

ஹுசைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்ட பிறகு அவரது தலையை அவமானப் படுத்தியதற்கு தண்டனையாகத்தான் உபைதுல்லாஹ் பின் ஸியாத் கொல்லப்பட்ட பிறகு இவனது மூக்கினுல் பாம்பு நுழைந்தது. இறந்து போன ஒரு நபித் தோழரை அவமானப்படுத்தியதால் அவன் இறந்த பிறகு அவமானப்படுத்தப்பட்டான் என்பதை இந்த சம்பவம் தெளிவான பாடமாகவும், படிப்பினையாகவும் உள்ளது.

வரலாற்றைக் கூறுகிறோம் என்ற பெயரில் நபிதோழர்களின் மரியாதையை கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் பேசும் பேச்சாளர்கள், தங்களது நாவை அடக்கிப் பேசவேண்டும் இல்லையென்றால் உபைதுல்லாஹ் பின் ஸியாத் போன்ற கொடியவர்கள் அவமானப்படுத்தப்பட்டது போன்ற தான்தோன்றித்தனமாக பேசும் பேச்சாளர்களும், அல்லாஹ்வால் அவமானப்படுத்தப்படுவார்கள் என்பதை எச்சரிக்கையாகக் கூறிக்கொள்கிறோம்.

குறிப்பு : நபித்தோழர்களை விமர்சனம் செய்வது தொடர்பாக 15 சிறு வீடியோக்களை “முஸ்லிம் உம்மத்” (MUSLIM UMMATH) என்ற சேனலில் வெளியிட்டுள்ளோம். அதையும் பார்த்து தெளிவடையும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Previous post:

Next post: