விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 1990 மார்ச்

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

*ஆகஸ்ட்(1989) மாத அந்நஜாத்திலேயே 45வது பக்கத்திலே எம்.எஸ். சலாஹுத்தின் என்பவரால்,”பாங்கிற்கு பதில் சொல்வது  போல் இகாமத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமா?” என்றுக் கேட்கப் பட்ட கேள்விக்கு அபூதாவூதிலே வரும் ஒரு ஹதீஸை மேற்கொள் காட்டி பதில் சொல்ல வேண்டுமென எழுதியிருந்தீர்கள். ஆணால் அந்த ஹதீஸ் பலவழிகளிலும் பலவீனமானதாகவே இருக்கின்றது. அந்த ஹதீஸின் சனதிலே மஜ்ஹுலான நபர்கள் காணப்படுவதோடு பலவீனமானவர்களும் தென்படுகின்றனர். அதிலே வரக்கூடிய ஷஹ்ர் இப்னு ஹவ்ஸிப் என்பவர் பலஹீனமானவர் என இமாம் முன்திப், தஹபி, அஸ்கலானீ போன்றோர் குறிப்பிடுகின்றனர். இதேப் போன்று முஹம்மது இப்னு தாபித் என்பவரும் பலஹீனமானவரே! (பார்க்க : அவ்னுல் மஃபூத் ஷரஹ் அபீதாவூத் பாகம் 1, பக்கம்230, இர்வாஉல் கலீல் (இமாம் நாஸிருத்தீன் அல்பானி) பாகம்1, பக்கம் 258) எனவே அத்தவற்றைத் திருத்தி எதிர்வரும் இதழில் அறியத் தருவீர்கள் என எண்ணுகிறேன்.  ஏ. கலீலுர் ரஹ்மான், இலங்கை,

இதுபோலவே சகோதரர் மல்லவி M. அப்துல் மல்லவி மதனீ அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட இந்த ஹதீஸ் பலஹீனமானது என்பதை ஒப்புக் கொள்கிறோம். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

* அல் ஜன்னத் இதழில் தொழுகையில் பிஸ்மியை சப்தமிட்டு ஓதலாம், அமைதியாகவும் ஓதலாம் என தெளிவான ஆதரங்கள் காட்டி, (தாங்கள் நஜாத்தில் எழுதியதற்கு மாற்றமாக) நிரூபித்திருக்கின்றார்களே? இதுப் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? ஏ. கலீலூர் ரஹ்மான், இலங்கை.

பிஸ்மியை சப்தமின்றி ஓதுவதற்கு தொழுகையில் என்றும், சப்தமின்றி என்றும் தெளிவாக அறிவிக்கும் பல ஹதீஸ்களை நாம் எடுத்து எழுதியிருந்தோம். அவர்களோ தொழுகையில் என்பதற்கும், சப்தமிட்டு ஓதுவதற்கும் என்பதற்கும் தெளிவில்லாத அஃதர்களை ஆதாரமாக எடுத்து எழுதியுள்ளனர். தெளிவாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் அறிவிக்கும் ஓர் ஆதாரப்புர்வமான  ஹதீஸுக்கு முரணாக தெளிவான ஆதாரப்பூர்வமான ஒரு அஃதரையே எடுத்துச் செயல்படுத்த முடியாது என்றிருக்கும் போது தெளிவில்லாத அஃதர்களைக் காட்டி தங்கள் தவறான வாதத்தை நிலைநாட்ட முற்ப்பட்டிருப்பது அறிவுடைமையா? என சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வாதத்தை நிருபிக்கவில்லை. முகல்லிதுகளைப் போல் பொருந்தாததை பொருத்திக் காட்ட முயன்றுள்ளனர். அதாவது தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பியுள்ளார்கள் என்பதை துலாக்கோல் பகுதியில் தெளிவுப்படுத்தி வருகிறோம். இடமின்மைக் காரணமாக இந்த இதழில் அது இடம் பெற வில்லை. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெளிவுப்படுத்துவோம்.

* எமது நாட்டிலே அதாவது இலங்கையிலே ஒரு பிரிவினர் தற்போது தோன்றியுள்ளார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படித் தான் வாழ வேண்டும் என்றுச் சொல்லிக் கொண்டு, அரசுக்குக் கட்டுப்படக் கூடாது இது ஷிர்க் என்றும், இதனை செயல்படுத்திக் கொண்டிருக்கும் அப்பிரிவின் தலைவருக்கு பை அத் செய்யாத அனைவரும் காஃபிர்களே! என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளான். இதில் அத்தலைவருக்கு பைஅத் செய்யாத அனைவரும் காபிர்களே! என்ற தீர்ப்பு இஸ்லாத்தின்  பார்வையிலே சரிதானா? என்பதை தயவு செய்து விளக்கமாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில் எழுதுமாறு வேண்டுகிறேன். இலங்கையைப் பொருத்தமட்டில் இது ஒருப் பெரியப் பிரச்சனையாக இருப்பதால் தயைக் கூர்ந்து எதிர்வரும் நஜாத் இதழிலேயே இதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை வழங்குவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன். ஏ. கலீலூர் ரஹ்மான், இலங்கை.   

இது விஷயமாக அவர்கள் பேசிப் பழகிய கேஸட்டுகளை நாம் போட்டு கேட்டோம். அவர்கள் புதியதொரு வழிக்கேட்டை இந்த உம்மத்தில் உருவாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும். வஹீ மூலம் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டு மார்க்கமாக நபி(ஸல்) அவர்களால் போதிக்கப்பட்டவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும்.  அவற்றில் கூடுதல் குறைவு செய்வது பித் அத்தாகும் என்பதில் இரண்டுக் கருத்து இல்லை. ஆணால் உலகக் காரியங்களில் அப்படி இல்லை என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்று ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்கள் ஆதாரங்களாக இருக்கின்றன. உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் குதிரை, கோவேறு கழுதை, ஒட்டகம் போன்ற பிராணிகளையே வாகனங்களாகப் பயன்படுத்தினார்கள். அவற்றையே நாமும் வாகனங்களாகப் பயன்படுத்த வேண்டும். நவீன வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்ற வாதம் தவறானதாகும்.

வலாதுதியில் காஃபிரின்” என்று நபி(ஸல்) அவர்களுக்கு மக்காவில் வைத்து பல சந்தர்ப்பங்களில் இறங்கிய வசனங்களை ஆதாரப்பூர்வமாகக் காட்டி அரசுக்கு கட்டுப்படக் கூடாது என்ற வாதத்தை இந்தப் புதிய பிரிவினர் எடுத்து வைக்கின்றனர் என்பது அவர்களின் பேச்சு பதவியிலிருந்து தெரிகிறது. ஒரு இறை வசனத்திற்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பொருள் கொண்டு செயல்பட்டார்கள் என்பதை விட்டுவிட்டு, நாமாக சுய விளக்கம் கொடுத்து செயல்பட முற்ப்பட்டால் அத நம்மை வழிகேட்டில் கொண்டு சேர்க்கும்.

இறைவனுக்கு இணை வைக்காதீர்கள், சிலைகளையும், கபுருகளையும் அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையில் தரகர்களாக ஆக்காதீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் போதித்து வரும்போது அதற்கு மாற்றமாக குறைஷ்களுடைய கருத்துகள் இருந்து வந்தன. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அந்த குறைஷ் காபீர்களுக்கு வழிபடாதீர் என்ற கருத்திலேயே மேலே குறிப்பிட்டுள்ள இறை வசனங்கள் இறங்கின. எல்லா விஷயங்களிலும் இவர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்று இவர்கள் கொடுக்கும் விளக்கப்படி செயல்பட்டிருந்தால் நபி(ஸல்) குறைஷ் காபிர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்திருக்க மாட்டார்கள். உலகக் காரியங்களில் அவர்களுடன் இணக்கமாக நடந்துள்ளதற்கே ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் விரும்பும் பொருள்களை சந்தையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்துக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அமானிதமாக வந்துக் கொடுக்கும் பொருட்களை வாங்கிப் பாதுகாத்துக் கொடுத்திருக்கிறார்கள். குறைஷ் காபிர்களுடைய உச்சக் கட்டத்திற்கு வந்து நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா ஹிஜ்ரத் புறப்படும் சமயத்திலும் காஃபிர்களுடைய பல பொருட்கள் அமானிதமாக நபி(ஸல்) அவர்களிடம் இருந்தன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொருப்பை அலி(ரழி) அவர்களிடம் ஒப்படைத்த பின்பே நபி(ஸல்) அவர்கள் மதீனாப் புறப்பட்டார்கள் என்பது சரித்திர முக்கியத்துவமுள்ள சான்றாகும். இதிலிருந்து எல்லா விஷயங்களிலும் காஃபிர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற வாதம் தவறு என்பது புலனாகிறது.

குறைஷ்களின் கொடுமை தாங்காது முஸ்லிம்கள் அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்த சமயம் அந்த நாட்டு அரசுக்குக் கட்டுப்பட்டு நடந்த ஆதாரம் கிடைக்கிறது. அந்த அரசர் முஸ்லிம்களை விசாரணைக்காக அழைத்த சமயம் முஸ்லிம்கள் அவரது கட்டளைக்கு அடிப்பணிந்து அரசரது தர்பாருக்குச் சென்று  அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். திரும்பி வந்தவர்களை மீண்டும் அழைக்க மீண்டும் அரசு தர்பாரக்குச் சென்றுள்ளனர். இந்த புதிய பிரிவினர் சொல்வதுப் போல் “வராதுதியில் காஃபீரின்” என்ற இறைவசனத்திற்கு காஃபிர்களுக்கு எல்லா வகையிலும் மாறு செய்ய வேண்டும் என்பதே  விளக்கமாக இருந்தால் அன்றைய முஸ்லிம்கள் இவ்வாறு நடந்துக் கொள்ள முடியுமா? நபி(ஸல்) அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்திருக்க முடியுமா? என்பதைச் சிந்தித்து விளங்க வேண்டும். இப்படி இந்த இறைவசனங்கள் இறங்கியக் காலக்கட்டத்திலேயே நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் இவ்வாறு செயல்பட்டு நமக்கு அழகிய முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளனர். இன்று நாம் அதற்கு மாற்றமாகப் பொருள் கொண்டு செயல்படுவது நமது மனோ இச்சைக்கு வழிபட்டதாக ஆகுமே அல்லாமல் அல்லாஹ்வுக்கு வழிபட்டதாக ஆகாது.

அல்லாஹ்வுக்கு பொருத்தமான ஒன்றை ஒரு முஸ்லிம் சொல்லி செயல்பட்டாலும் அல்லது ஒரு காஃபிர் சொல்லி செயல்பட்டாலும் அத அல்லாஹ்வுக்கு வழிபட்டதாகவே ஆகும். உதாரணமாக தொழுகையை அல்லாஹ் நம்மீதுக் கடமையாக்கியுள்ளான். இதனை ஒரு காஃபிர் சுட்டிக் காட்டி நம்மைத் தொழும்படி ஏவுகிறான். கூடாது. எனவே நான் தொழமாட்டேன் என்று ஒரு முஸ்லிம் சொல்ல முடியாது. இவ்வாறு கூறி அவன் தொழாமல் இருந்தால் காஃபிருக்கு வழிபடவில்லை என்பதே பொருளாகும். அதேப் போல்  அல்லாஹ்வுக்கு பொருத்தமற்றதை ஒரு காஃபிர் அல்ல, ஒரு முஸ்லிம் ஒரு இமாம் சொல்லி இருக்கிறார் என்று செயல்பட்டாலும் அது அல்லாஹ்வுக்கு இணை வைத்தலேயாகும்.

இது பொதுவான நிலை. அடுத்த நிர்ப்பந்த நிலைகளில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் குர்ஆனும், ஸுன்னாவும் நமக்குத் தெளிவாக வழிக் காட்டுகின்றன.

“ஆணால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி பசிக் கொடுமையினால் நிர்பந்திக்கப்பட்டு விட்டால்(அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்.” (5:3)

இங்கு பசிக் கொடுமையினால் நீங்கள் மரணிக்க நேரிட்டாலும் அவ்வாறு மரணித்து விடுவதே மேல். அதுவே இறைப் பொருத்தத்தைப் பெற்றுத்தரும் என்று அல்லாஹ் சொல்லவில்லை. மாறாக பாவம் செய்யும் நோக்கமின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் அல்லாஹ் ஹராமாக்கிச் சாப்பிடுவதுக் குற்றமில்லை என்பதைத் தெளிவுப்படுத்துகிறான். ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயம் நபி(ஸல்) அவர்களிடம் 1400 நபித்தோழர்கள் இறுதி மூச்சுவரை போராடி ஷஹீதாக தயார் என நபி(ஸல்) அவர்களின் கைப்பிடித்து உறுதியளித்த நிலையிலும், குறைஷ் காஃபீர்கள் விதித்த நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்று சமாதான உடன்படிக்கை செய்கின்றனர். இதனை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான். (பார்க்க 48:1,5) இந்த புதிய பிரிவினரின் கூற்றுப்படி இது ஷிர்க் என சொல்ல விரும்புகிறீர்களா? அவ்வாறல்ல இதிலிருந்து மாற்றாருடன் இணங்கிப் போக வேண்டிய நிர்பந்தக் கட்டங்களில் இணங்கிப் போக அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குப் போதித்திருக்க அதற்கு மாற்றமாகச் செயல்படுவதுக் பெருங்குற்றமாகும் என்பது தெளிவாகவே புலனாகிறது. (ஹுதைபிய்யா உடன்படிக்கை பற்றிய விரிவான விளக்கம் பக்கம் 25-ல் இடம் பெற்றுள்ளது. பார்வையிடவும்)

முஸ்லிம்கள் மாற்றார் அரசுகளின் கீழ் வாழ்ந்து வருவது இன்று நேற்றல்ல நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே நடந்துவரும் ஒரு செயலாகும். அந்த அரசுகளுக்கு மாறு செய்வதே முஸ்லிம்களின் கடமை என்றிருக்குமானால் நபி(ஸல்) அவர்கள் அபிசீனியா சென்ற ஆரம்பக் கால முஸ்லிம்களுக்கு அதனைத் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். மாறாக அந்த அரசின் கட்டளையை ஏற்று செயல்பட்டதற்குரிய ஆதாரமே தெளிவாக இருக்கிறது. இந்த அழகிய நடைமுறை செயல்படுத்தப்பட்டிருக்காவிட்டால் சத்திய இஸ்லாம் மார்க்கம் நம்மளவில் வந்து சேர்ந்திருக்க முடியாது என்பதே உண்மையாகும். இந்தப் புதிர் பிரிவினர் இஸ்லாத்தின் வாடையைக் கூட நுகர்ந்திருக்க முடியாது. சத்திய இஸ்லாத்தை வளர செய்வதற்குப் பதிலாக மடியச் செய்யும் ஷைத்தானின் சூழ்ச்சி வலையில்  நீங்கள் குறிப்பிடும் புதிய பிரிவினர் சிக்கியுள்ளனர் என்பது தெரிகிறது.

அவர்கள் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள் எந்த நாட்டிலும் வாழ முடியாது. தங்களை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் எவற்றைச் சாப்பிடுகின்றனர், எவற்றை உடுக்கின்றனர், எவற்றைப் பயன்படுத்துகின்றனர் என’பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்கள் நாட்டின் கரன்ஸியை அவர்கள் பயன்படுத்தக் கூடாது. அவர்களதுக் கூற்றுப்படி அது வெற்றுக் காகிதமே. இலங்கை அரசின் கட்டளைப் படியே அது வெகுமதிப் பெறுகிறது. அரசின் கட்டளைக்கு அடிப்பணியாதவர்களுக்கு அது வெற்றுக் காகிதமே. வெற்றுக் காகிதத்தைக் கொடுத்து உணவுப் பொருட்கள், உடை, மற்றும் பொருட்கள் வாங்குவது, பிறரை ஏமாற்றுவதும் ஹராமாகும். அவர்கள் கூற்றுப்படி அதுப் பெரும் குற்றமாகும். அந்தக் கரன்ஸியை கொண்டு ஆகும் எதனையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது. உண்ணக் கூடாது உடுத்தக் கூடாது, வீடுகளில் குடியிருக்கக் கூடாது, வீதிகளில் நடக்கக் கூடாது. பள்ளிகளில் தொழக் கூடாது, வீதிகளில் நடக்கக் கூடாது. சுருங்கச் சொல்லின் அந்த மண்ணில் அவர்கள் உயிர் வாழக் கூடாது. அவர்களதுக் கூற்றுப்படி இவையனைத்தும் ஹராமாகும், ஷிர்க்காகும். இது சாத்தியமாகாது என சிந்திக்க வேண்டும். சாத்தியமில்லா ஒன்றை மக்களுக்குப் போதித்து மக்களை குழப்பத்தில் ஆக்குவது பெருங்குற்றமாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும். உங்கள் நாட்டில் மட்டுமல்ல: உலகின் வேறு எந்த நாட்டிலும் அவர்களின் போதனைகளைச் செயல்படுத்த முடியாது என்பதே உண்மையாகும். சாத்தியமில்லாத ஒன்றை அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்கு போதிக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். சூபிஸத்திற்கு இவர்கள் ஒரு வகையில் துணை போகிறார்கள் போலும்!

அடுத்து நேர்வழி நடக்கும் ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றுச் சொல்லிக் கொள்ளும் யாரையும் காஃபிர் என்று சொல்லமாட்டார். இந்த உம்மத்தில் ஒருவரை ஒருவர் காஃபிர் என்று ஃபத்வா(தீர்ப்பு) அளிப்பது, தக்லீது ஏற்ப்பட்டு அதனை நியாயப்படுத்திய பின்பேயாகும். கண்மூடிப் பின்பற்றும் நிலை ஏற்ப்பட்டு விட்டதால் வழிகேடர்களைக் கண்மூடி பின்பற்றி வழிகேட்டில் மக்கள் செல்லக் கூடாது. என்பதற்காக முகல்லிதுகளால் காஃபீர் ஃபத்வா கொடக்கப்படாத எந்தப் பிரிவும் இல்லை. ஒரு பிரிவுமற்றப் பிரிவினருக்கு எளிதாக காஃபிர் பத்ஃவா கொடுத்து விடுகின்றனர்.

குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் பார்க்கும்போது யாரும் யாருக்கும் காஃபிர்ஃபத்வா கொடுப்பது குற்றம் என்பதே புலப்படுகிறது. இதற்குரிய முழு அதிகாரமும் அல்லாஹ் கையில் இருக்கிறது என்பதே உண்மையாகும். (குஃபர் பத்வா பற்றிய விரிவான விளக்கம் பின்வரும் இதழ்களில் இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்) ஒஃருவரின் அல்லது ஒரு பிரிவின் கூற்று குர்ஆன், ஸுன்னாவுக்கு  முரணாக இருந்தால் உண்மை முஸ்லிம் அதனைவிட்டு குர்ஆன், ஸுன்னாவின்படி  செயல்படுவது கடமையாக இருக்கிறது. இப்படிச் செயல்படும்போது அப்படி முரணான கூற்றைக் கூறியவர்களுக்கு எதிராக “கஃபிர் ஃபத்வா” கொடுக்க வேண்டி வராது. எனவே முகல்லிதுகளே “கஃபிர் ஃபத்வா” கொடுப்பார்கள். உண்மை முஸ்லிம் யாருக்கும் “கஃபிர் ஃபத்வா” கொடுக்கவும் மாட்டார். முஸ்லிம் என்ற நிலையில் கஃபாவை நோக்கி தொழுபவர் பின்னால் எந்தக் காரணத்தைக் கூறியும் தொழாமல் இருக்கவும் மாட்டார். உண்மை முஸ்லிம் இந்த உம்மத்தை ஒன்று சேர்க்கப் பாடுபடுவாரே அல்லாமல் பிரிவினைகள் ஏற்பட வழிவகுக்கமாட்டார். அதே சமயம் குர்ஆன் ஹதிஸில் இருப்பதை  உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்வது இந்த உம்மத்தில் குழப்பத்தை உண்டாக்குவதோ, பிரிவினைகளை ஏற்ப்படுத்துவதோ ஆகாது. இது ஷைத்தானின் துர்போதனையாகும். மனித ஒற்றுமைக்காக இறக்கப்பட்ட குர்ஆனில் இருப்பதையும், அந்த குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்துள்ள ஸுன்னாவையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வது எப்படி குழப்பத்தை உண்டாக்கும்? எப்படி பிரிவினைகளை ஏற்ப்படுத்தும்? மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் மக்களிடையே சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது ஆரம்பத்தில் குழப்பநிலை ஏற்ப்பட்டாலும் பின்னால் தெளிவு ஏற்படுவது நிச்சயம். இதுவே நியதியுமாகும். நபி(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் மக்காவில் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது அங்கு பெருங்குழப்பம் ஏற்ப்பட்டது உண்மையே. ஆணால் சத்தியத்தை தயங்காது போதித்துக் கொண்டிருந்த காரணத்தால் அரபிகள் அனைவரும் முஸ்லிம்களாகி விட்டனர். அது போல் குர்ஆனையும், குர்ஆனை நடைமுறைப் படுத்திக் காட்டிய நபி(ஸல்) அவர்களின் ஸுன்னாவையும் அப்படியே கூடுதல் குறைவு இல்லாமல் மார்க்கமாக மக்களுக்குப் போதித்து கொண்டே இருந்தால் மக்கள் அவற்றால் கவரப்பட்டு இஸ்லாத்தைத் தழுவுவார்கள் என்பதில் ஐயமில்லை.

முஸ்லிம்கள் ஒரே அமீரின்கீழ் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் அந்த அமீர் மக்களின் மனோவிருப்பத்திற்கு ஏற்றவாறு சத்தியத்தை திரிக்கவோ, வளைக்கவோ முற்படாமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மக்கள் எதிர்த்தாலும் துணிந்து சத்தியத்தை நிலைநாட்டுபவராக இருக்க வேண்டும். குர்ஆன் ஹதிஸுக்கு மாற்றமான அமீரின் கட்டளைக்கு அடிபணிய வேண்டும். என்பது இஸ்லாத்தில் இல்லை. குர்ஆன், ஹதீஸை செயல்படுத்தும் எந்த அமீரும் தன்னிடம் பைஅத்து “காஃபீர் என்று ஃபத்வா கொடுக்கப்படமாட்டார்.  நீங்கள் குறிப்பிடும் ஒருவர் வழிக்கேட்டில் இருக்கின்றார் என்பதற்கு இது ஒன்றே போதியச் சான்றாகும். இஸ்லாத்தில் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக தோன்றிய தாங்கள் மக்களிடையே செல்வாக்குப் பெறவும், தங்கள் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு  மக்கள் வரவும் கைக்கொள்ளும் ஆயுதமே “காஃபிர் ஃபத்வா” ஆகும். முகல்லிதுகளால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுதத்தை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களும் முகல்லிதுகளைப் போல் நேர்வழியில் இல்லை என்பதேப் பொருளாகும். அதேப் போல் குர்ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டி இன்ன இன்ன செயல்கள் பித்அத்தையும், ஷிர்க்கையும் உண்டாக்கும்: இவற்றால் குஃப்ருடைய நிலை ஏற்படலாம். இன்ன இன்ன காரியங்கள் வழிக்கேட்டில் கொண்டு சேர்க்கும்; இன்னவர்கள் வழிக்கேட்டில் இருக்கிறார்கள் என்று  தெளிவுப்படுத்துவது “காஃபிர் பத்வா” கொடுத்தாாக ஆகாது. அப்படிப்பட்டவர்கள் பின்னால் தொழுவதுக் கூடாது என்று சொல்லாமல் அவர்கள் பின்னால் தொழுது வருவது அவர்களுக்கு “காஃபிர் ஃபத்வா” கொடுக்கவில்லை என்பதற்குரிய ஆதாரமாகும். ஆயினும் அவர்கள் உண்மையை அறிந்து சத்தியத்தின் பக்கம் வரவேண்டும்-அவர்கள் செய்துவரும் தீய செயல்களின் கடுமையான நிலைகளை அவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும் என்ற நல்நென்னத்துடன் அவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதே உண்மையாகும். அவ்வாறு எச்சரிப்பது குர்ஆன் ஹதீஸின் படி அவசியமுமாகும்.

* மார்ச் 90 அல்ஜன்னத் இதழில் “முதஷாபிஹ்” வசனங்களுக்கு இறுதி முடிவெடுக்கும் தன்மை  அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது. மனிதர்களில் அறிவிற் சிறந்தவர்களாலும் கூட அந்தந்த காலத்திற்கு ஏற்ப விளக்கம் பெற முடியுமே தவிர அதன் உண்மை இறுதிப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிய முடியும் என்பதை தவ்ஹீத் முல்லாக்கள் அவர்கள் அறியாமலேயே ஒப்புக்கொண்டு சரியான முறையில் எல்லோரும் விளங்கும் வண்ணம் “விஞ்ஞான ஒளியில்” எனும் கட்டுரையில் பக்கம் 84 கடைசிப் பாராவிலிருந்து 85 ம் பக்கம் இறுதி வரைத் தெள்ள தெளிவாக விளக்கி விட்டார்கள். அல்ல, வல்ல நாயன் அல்லாஹ் விளக்கும் படி வைத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

M.அஹ்மது இப்ராஹிம், புளியங்குடி.

அவர்களைக் கொண்டே உண்மையை வெளிவர வைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும், அந்நஜாத் ஆகஸ்ட் 88 பக்கம் 9ல் முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றி நாம் எழுதியுள்ள விளக்கங்களை அவர்களும் ஒப்புக்கொண்டு எடுத்து எழுதியுள்ளனர். 3:7 இறை வசனத்தில் தங்கள் வரட்டு கெளரவம் காரணமாகவே அவர்கள் உண்மையைத் திரித்து எழுதி வருகிறார்கள் என்பதை இப்போதாவது அவர்களது ஆதரவாளர்கள் உணர்வார்களாக.

* நாகூர் JAQH மாநாட்டில் JAQH-ஐ இயக்கம் என்று சொல்லாதீர்கள் அது ஒரு அமைப்பாகும் என்று அதன் அமைப்பாளர்கள் அடிக்கடிக் குறிப்பிட்டனரே. அதுப் பற்றி என்ன விளக்கம் தருகிறீர்கள்.

M. முஹம்மது காசிம், பொறையாறு.

வட்டியை கமிஷன், லாபம் என்று பெயர் மாற்றி சொல்லி சிலர் நியாயப்படுத்த முற்படுவதுப் போல் இவர்களும் பிரிவு பெயரை அமைப்பு என்று சொல்லி நியாயப்படுத்த முற்ப்பட்டுள்ளனர். அவ்வளவுத்தான். இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. பிரிவுப் பெயர்க்கொண்டு இயக்கம் அமைப்பது தவறு என்பதை JAQH  அமைப்பாளர்கள் உணர முற்ப்பட்டு விட்டனர். தங்கள் தவறை விட்டு பூரணமாக விலகி சத்தியத்தின் பால் வர துவா செய்வோம்.

Previous post:

Next post: