ஐயமும், தெளிவும்.

in 1990 மார்ச்,ஐயமும்! தெளிவும்!!

  ஐயமும், தெளிவும்.

ஐயம் :

“மிஃராஜ்” இரவு என்பதாக ரஜபு மாதத்தின் 27-வது இரவையும், “பராஅத்” இரவு என்பதாக ஷஃபான் 15-வது இரவையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு இவ்விரவுகளில் சிலர் தம் இச்சையாக பல வகையான நபில் தொழுகை தொழுகிறார்கள். மிஃராஜ் பரா அத்தை முன்னிட்டு நோன்பு வைக்கிறார்கள். குறிப்பாக ஷஃபான் 15-வது இரவுக்கு “பராஅத்து இரவு” என்பதாக அவர்கள் தாமாகவே பெயர் வைத்துக் கொண்ட அந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் தனியாகவோ கூட்டமாகவோ அமர்ந்து நீண்ட ஆயுளுக்காகவும், இரண விஸ்திரணத்துக்காகவும் பலாமுஸிபத்துக்கள் தம்மை வந்து அணுகாமல் இருப்பதற்காகவும் மும்முறை யாஸின் ஓதி துஆ கேட்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உண்டா?

A.H, முஹம்மது அலி மற்றும் சகோதரர்கள், சிங்கப்பூர்.

தெளிவு :     

“மிஃராஜ்”  ரஜபுப் பிறை 27-ல் தான் நிகழ்ந்துள்ளது என்பற்கான  சரியான ஆதாரம் இல்லை. இமாம் ஜுஹ்ரீ, உர்வா ஆகியோர் ஹிஜ்ரத்துக்கு ஓர் ஆண்டுக்கு முன்  நிகழ்ந்துள்ளது என்கிறார்கள்.  அதாவது ரபீஉல் அவ்வலில் “மிஃராஜ்”  நடந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். இக்கருத்தையே இப்னு குதைபா அவர்களும், இப்னு அப்துல் பர்ரு அவர்களும் சரிகாணுகிறார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர் பாகம்3, பக்கம்22, இமாம் தஹபீ அவர்களின் “ஸீரத்துந் நபவிய்யா” பக்கம் 166)

ஆகவே நாம் நபி(ஸல்) அவர்களுக்கு “மிஃராஜ்”  நடந்துள்ளது என்பதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அது எப்போது நடந்தது, எந்த விதத்தில் நடந்நதது என்பன போன்ற சர்ச்சை நமக்குத் தேவையில்லை. பராஅத் இரவுப் பற்றி குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அலசிப் பார்க்கும் போது அப்படி ஓர் இரவு உண்டு, அது புணிதமிக்க இரவு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்பதற்கான ஓர் ஆதாரமும் இல்லை. குர்ஆனில் சூரத்துல் பராஅத் என்பதாக ஓர் அத்தியாயம் இருக்கின்றது.  அந்த சூராவுக்கும் இவர்கள் கூறும் “பராஅத்” இரவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஸஹீஹான ஹதீஸ்களில் பராஅத் இரவு” என்ற வார்த்தை கூட கிடையாது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

எனவே நபி(ஸல்) இவ்விரு இரவுகள் குறித்து இவை புனிதமான இரவுகள் என்று கூறியதாக ஒரு வாசகமேனும் ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லை. ஒரு ஷஃபானிலிருந்து மறு ஷஃபான் வரை மரணிப்பவர்களின்  பெயர்கள் இவ்விரவில் பதிவு செய்யப்படுவதாக  இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் கூட உண்மையானதல்ல என்பதை அறிகிறோம்.

இவ்வாறே அவ்விரு இரவுகளிலும் விஷேசத் தொழுகை தொழ வேண்டும் என்றோ, வேறு எந்த அமல்களும் செய்ய வேண்டும் என்றோ, அன்றைய தினம் நோன்பு பிடிக்க வேண்டும் என்றோ நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஒரு ஆதாரமும் ஸஹீஹான ஹதீஸின் வாயிலாக காண முடியாது என்பது மட்டுமல்ல, எவராலும் காட்டவும் முடியாது என்பதும் உறுதி. இவ்விரவுகள் புனிதமிக்க இரவுகள், இவற்றில் விழித்திருந்து அமல் செய்ய வேண்டும். அதன் பகல் காலத்தில் நோன்பு பிடிக்க வேண்டும் என்றெல்லாம் செய்யப்படும் பயான்கள் அனைத்தும் வெறும் கப்ஸாக்களும்-கதையளப்புகளுமே தவிர வேறில்லை.

இவ்வாறே ஷஃபான் 15-வது இரவில் மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு நீண்ட ஆயுள், ரிஜ்கு பரக்கத்து முதலியவை கிடைக்கப்பெற்று, பலாமுஸீபத்துக்கள் அணுகாமல் இருப்பதற்காக மும்முறை “யாஸின்” ஓதி துஆ செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

பொதுவாக யாஸீன் ஓதுபவர் அதிகாலையில் பாவம் மன்னிக்கப்பட்டவராக எழுந்திருப்பார். என்பதாகவும், இவ்வாறே “சூரத்துத் துகான்” எனும் அத்தியாயத்தை இரவில் ஓதுபவர் அதிகாலையில் பாவம் மன்னிக்கப்பட்டவராக எழுந்திருப்பர் என்பதாகவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக அபூஹுரைரா(ரழி) அவாகளின் வாயிலாக ஸஹீஹான ஹதீஸ் ஒன்று “முஸ்னது அபூயஃலா” வில் இடம் பெற்றுள்ளது.

ஒரு செயலை இது நல்ல அமல்தான் -நன்மையான காரியம் தான் என்று கருதி நபி(ஸல்) அவர்கள் கூறாமல் நமது இஷ்டத்திற்கு நாம் எதையும் எப்படியும் செய்துக் கொள்ளலாம் என்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

இம்மார்க்கத்தில் இதில் இல்லாததொன்றை ஒருவர் புதிதாக புகுத்தினால் அது மறுக்கப்பட் வேண்டியதாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில் எந்த ஒரு காரியத்தையும் தன்னிச்சையாகச் செய்யாது அவற்றை எப்பொழுது எந்த முறையில் நபி(ஸல்) அவர்கள் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்களோ, அவற்றை அப்பொழுது அம்முறைப்படி செய்வதுதான் மார்க்கமாகும்.

ஆகவே மேற்க்கூறப்பட்டவை அனைத்திற்கும் மார்க்க அடிப்படையில் எவ்வாதாரமும் இல்லாததால் இவற்றைத் தவிர்த்துக் கொள்வதே முறையாகும்.

ஐயம் :

ஒளூ செய்யும் பாத்திரத்தில் கைகளைவிட்டு தண்ணீரை தண்ணீரை அள்ளி ஒளூ செய்வதுக் கூடுமா?

ஏ. ஸாஜிதா, இலங்கை

தெளிவு :

ஒரு முறை உஸ்மான்(ரழி) அவர்கள் ஒளூ செய்வதற்காகத் தண்ணீரைக் கொண்டு வரும்படி செய்து ஒளூ செய்தார்கள். அப்போது அவர்கள் தண்ணீரை மும்முறை கையில் சாய்த்து அவ்விரண்டையும்(மணிக்கட்டுவரைக்) கழுவிக் கொண்டார்கள். பிறகு தமது வலக்கையைப் பாத்திரத்தில் ஒட்டி (தண்ணீரை அள்ளி) வாய் கொப்பளிக்கவும், மூக்கில் செலுத்தி அதை மும்முறை சுத்தம் செய்யவும் செய்தார்கள். மேலும் தமது கைகளை முழங்கை வரை மும்முறைக் கழுவினார்கள். பிறகு தமது தலைக்கு மஸ்ஹு செய்தார்கள். (தண்ணீர் கையால் தமது தலையைக் கழுவினார்கள்.) பிறகு தமது கால்களை கரண்டை மொளி வரை மும்முறைக் கழுவினார்கள்.  பின்னர் எவர் எனது இந்த ஒளுவைப் போல் ஒளூ செய்துவிட்டு பிறகு தமது உள்ளத்தில் (உலக சம்பந்தமானவை எதுவும் கொண்டு வராமல்) இரண்டு ரகா அத்துக்களை தொழுது விடுகிறாரோ, அவருடையப் பாவங்களில் முன் செய்தவை மன்னிக்கப்பட்டு விடுகின்றன. என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக கூறினார்கள்.                 (ஹும்ரான்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

(முஸ்லிம் உடைய அறிவிப்பில் “நான் நபி(ஸல்) அவர்களை இவ்வாறு ஒளூ செய்வதைப் பார்த்துள்ளேன்.” என்று இடம் பெற்றுள்ளது).

ஆகவே மேற்காணும் ஹதீஸின்படி முதலில் பாத்திரத்திலிருந்து தண்ணீரை கையில் சாய்த்து கைகளைக் கழுவிக் கொண்டு பிறகு கைகளைப் பாத்திரத்தில் விட்டு தண்ணீரை அள்ளி ஒளூ செய்வது ஆகும் என்பதை அறிகிறோம். இவ்வாறுப் பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீரை அள்ளும் போது ஏற்கனவே கையில் கையில் உள்ளத் தண்ணீர் பாத்திரத்தில் விழுந்தாலும் அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதனால் அந்த தண்ணீர் ஒளூ செய்வதற்கு ஆகாத தண்ணீராகி விடாது.

ஐயம் :

ஒருவருக்கு தவறான பெயர் வைக்கப்பட்டிருந்தால் அவர் அதை நீக்கிவிட்டு வேறு நல்ல பெயர் வைக்க வேண்டுமா? ஏ.ஸாஜிதா, இலங்கை

தெளிவு :

உமர்(ரழி)  அவர்களுக்கு “தவறு செய்பவள்” எனும் பொருளில் “ஆஸியா” எனப்படும் ஒருமகள் இருந்தாள் நபி(ஸல்) அவர்கள் (அதைச் சரிகாணாமல்) “அழகானவள்” எனும் பொருளில் “ஜமீலா” என்பதாக அப்பெண்ணுக்குப் பெயர் இட்டார்கள். (இப்ணு உமர்(ரழி),முஸ்லிம்)

“ஆசியா” என்பதாக “ஸீன்” உடைய உச்சரிப்பில் உள்ள பெயர் பிர்அவ்னுடைய மனைவியின் பெயராகும். அவ்வாறு பெயரிடுவது தவறில்லை. அதற்கு “அரும் மருந்து, நல்ல மருத்துவர்” என்ற நல்ல பொருள்கள் உள்ளன. மேலும் அம்மையாரை அல்குர்ஆன் சிறந்ததொரு மூமனாகிய பெண்மனி என்பதாக சிலாகித்துக் கூறுகிறது.

ஆணால் “ஆஸியா” என்பதாக “ஸாத்” உடைய உச்சரிப்பில் “தவறு செய்பவள்” என்ற மோசமான பொருளைக் கொண்டதாயிருப்பால் அவ்வாறு பெயரிடுவது கூடாது.

* அப்துல் ஹமீது(ரஹ்) கூறுகிறார்கள்: நான் ஒருமுறை ஸயீதுப்னுல் முஸய்யபு(ரஹ்) அவர்களிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். அதாவது தன் பாட்டனார் “ஹஜ்னு” என்பவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் உமது பெயர் என்ன? என்றார்கள். அதற்கு அவர்கள் “ஹஜ்னு” கடினமானவர் என்றார். அப்போது அவர்கள் “இல்லை நீர் லஹ்லு” இலகுவானர், மிருதுவானவர் என்றார்கள். அதற்கு அவர் “என் தந்தை எனக்கு இட்ட பெயரை நான் மாற்றுவதாக இல்லை.” என்றார். இப்னு முஸய்யபு கூறுகிறார்கள்: அதன் பிறகு எங்கள் குடும்பத்தில் கடினமான நிலையே நீடித்து வந்தது. (அப்துல் ஹமீது(ரஹ்),புகாரீ)

மேற்காணும் அறிவிப்பின் அடிப்படையில் தீய பொருளைக் கொண்டுள்ள பெயர் வைக்கப்பட்டிருப்பின் அதை நல்ல பெயராக அவசியம் மாற்றி வைக்க வேண்டும் என்பதை அறிகிறோம்.

ஐயம் : தம்பதிகளில் ஒருவர் இறந்து விட்டால் குளிப்பாட்டி கபனிட்டு பிறகு கணவரின் உடலை மனைவியோ, மனைவியின் உடலை கணவரோ பார்ப்பதுக் கூடாது என்கிறார்கள். காரணம் கேட்டால் இருவரில் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களுக்கு இடையிலுள்ள விவாஹபந்தம் மரணத்தின் காரணமாக நீங்கி விடுகிறது என்று கூறுகிறார்கள். இதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? ஷேக் முஹ்யுத்தீன், பேட்டை, திருநெல்வேலி.

தெளிவு :

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களை நோக்கி எனக்கு முன் நீ மவ்த்தாகி விட்டால் நான் உம்மைக் கழுவிக் குளிப்பாட்டி, கபனிட்டு உமக்கு ஜனாஸா தொழுகை நடத்தி நானே அடக்கம் செய்வேன் எனக் கூறினார்கள்.

(ஆயிஷா(ரழி), இப்னுமாஜ்ஜா)

இந்த ஸஹீஹான அறிவிப்பின் அடிப்படையில் கவனிக்கும் போது கணவர் தமது மரித்த மனைவியின் உடலைப் பார்ப்பது ஆகுமம் என்பதையும், இருவரில் ஒருவர் மரணடவதால் தமக்கு மத்தியில் உள்ள விவாக பந்தம் துண்டித்து விடுகிறது என்பதாகக் கூறப்படும் கூற்று தவறானது என்பதையும், கணவர் எவ்வாறு மனைவியின் உடலைப் பார்ப்பதுக் கூடுமோ, அவ்வாறே மனைவியும் தமது மரித்த கணவரின் உடலைப் பார்ப்பது கூடும் என்பதையும் அறிகிறோம். இருவரும் ஒருவரின் உடலை மற்றொருவர் பார்ப்பதுக் கூடாது என்று கூறுவோரின் கூற்றுக்கு ஹதீஸ் அடிப்படையில் அறவே ஆதாரம் இல்லை.

ஐயம்:

ஒருவர் பரக்கத்தை நாடி தமது மகனுக்கு “முஹம்மது” என்று பெயரிட்டால் அவரும் அவருடைய மகனும் சுவர்க்கம் புகுவார்கள் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஒருவர் கூறுகிறார். இது ஸஹீஹான ஹதிஸா?

எம்.பி அப்துர் ரஹ்மான், இளங்காங்குறிச்சி

தெளிவு : ஒருவர் சுவர்க்கம் புகுவதற்கு ஈமானும் ஸாலிஹான அமலும் தேவை என்று குர்ஆனும் ஹதீஸும் கூறுகின்றன. ஆணால் இந்த ஹதிஸோ அவற்றைப் பற்றி எல்லாம் எதுவும் கூறாமல் மிக சுலபமாக உங்கள் மகனுக்கு “முஹம்மத்” என்று நீஙகள் பெயர் வைத்துவிட்டு நீங்களும் உங்கள் மகனாரும் சுவர்க்கம் சென்று விடுங்கள் என்பதாகக் கூறுகிறது. இதிலிருந்தே இது யாரோ ஒருவரால் கட்டிவிடப்பட்ட சரடு என்பதை அறிகறோம்.

****************************

“மனிதர்களில் அல்லாஹ்விடம் மிக மோசமான நிலையை உடையவன், பிறருடைய உலக சம்பந்தமான காரியத்திற்காக தனது மறு உலக சம்பந்தமான காரியத்தில் பாதிப்பை உண்டு பண்ணிக் கொள்பவனே ஆவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ உமாமா(ரழி), இப்ணுமாஜ்ஜா)

Previous post:

Next post: