யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்!

in 2020 அக்டோபர்

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்!

  1. அப்துல் ஹமீத், திருச்சி

உலகில் இஸ்லாத்தின் பெயரால் இனிமேல் நடைபெறவிருக்கின்ற சம்பவங்களை இறைநெறி நூல் புனித குர்ஆனிலிருந்தும், அவற்றிற்கான விளக்கங்களை அல்லாஹ் (ஜல்) அறிவித்தபடி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஸஹீஹான ஹதீஃதுகளிலிருந்தும் அறியும் நோக்கோடு, சென்ற இதழில் தஜ்ஜாலைப் பற்றி ஐயமும், தெளிவும் பகுதியில் எழுதியிருந்தோம். அதன் தொடர்பாக தஜ்ஜாலைப் பற்றிய இன்னும் சில செய்திகளையும், யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தார் பற்றிய செய்திகளையும், இன்ஷா அல்லாஹ். இப்போது அறிந்து கொள்வோம்.

யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தார் பற்றி அறிந்துகொள்ள, துல்கர்னைன் என்பவரைப் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே இறைநெறி நூல் குர்ஆனின், கீழுள்ள வசனங்களிலிருந்து முழு விவரங்களையும் அறியலாம். அல்லாஹ் கூறியபடி இறைத்தூதர்(ஸல்) அவர்கள், இறை வசனங்களுக்கான விளக்கங்கள்  அறிவித்திருப்பதைக் கீழ்க்கண்ட ஹதீஃதுகளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

நபியே! அவர்கள் துல்கர்னனைப் பற்றி உம்மிடம் வினவுகின்றனர். அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன் என்று நீர் கூறுவீராக. (18:83)

நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம். இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்து)  கொடுத்தோம். (18:84)

ஆகவே அவர் ஒரு வழியைப் பின்பற்றினார்.  (18:85)

சூரியன் மறையும் திசை வரை சென்றடைந்தபோது, அது ஒரு சேறு கலந்த நீரில் மறையக் கண்டார். இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரைக் கண்டார். துல்கர்னைனே! நீர் இவர்களை வேதனை செய்யலாம் அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம் என்று நாம் கூறினோம்.  (18:86)

(அவர்) கூறினார் : எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம். பின்னர் அவன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.  (18:87)

ஆனால் எவன் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது. இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.  (18:88)

பின்னர் அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.  (18:89)

அவர், சூரியன் உதயமாகி கிழக்குத் திசையை அடைந்தபோது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.  (18:90)

(வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது. இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.  (18:91)

பின்னர் அவர்(வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.  (18:92)

இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவர்களாக இருக்கவில்லை.  (18:93)

(அங்கிருந்த மக்களாகிய) அவர்கள்: துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் குழப்பம் செய்கிறார்கள். ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா? என்று கேட்டார்கள்.  (18:94)

அதற்கவர் என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதை விட) மேலானது. ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன் என்று கூறினார்.  (18:95)

நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள் என்றார். அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள். அதன் மேல் ஊற்றுகிறேன் என்றார்.  (18:96)

எனவே, (யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை. அதில் துவாரம் இடவும் சக்தி பெறவில்லை.  (18:97)

இது என்னுடைய இறைவனிடமிருந்து வந்த கிருபையே ஆகும். ஆனால் என்னுடைய இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும் என் இறைவனுடைய வாக்குறுதி உண்மையானதே என்று அவர் கூறினார்.  (18:98)

ஆனால் இன்னும் அந்நாளில் அவர்களை சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம். பின்னர் சூர் ஊதப்படும், பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம். (18:99)

காபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை ஒரே பரப்பாக பரப்பி வைப்போம்.   (18:100)

அவர்கள் எத்தகையோர் என்றால் என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப்பட்டிருந்தன. (18:101)மேற்கண்ட வசனங்களிலிருந்து இரு மலைகளுக்கிடையே வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே யஃஜூஜும், மஃஜூஜும் இருந்து கொண்டு குழப்பம் செய்து கொண்டிருந்ததாக அறிய முடிகிறது. எனவே குழப்பத்திலிருந்து தப்பிக்க அந்த மக்கள் துல்கர்னனை ஒரு தடுப்பு ஏற்படுத்தித் தருமாறு கோருகின்றனர். அம்மக்களின் உதவியுடன், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் தடுப்பில் ஏறியோ அல்லது தடுப்பில் துவாரமிட்டோ தப்பித்து மக்களை அணுக முடியாதவாறு இறைவனின் கிருபையைக் கொண்டு ஒரு உறுதியான தடுப்பை ஏற்படுத்தித் தருகின்றார்.

மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு இன்றளவும் அந்த தடுப்பிற்குள் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வாழ்ந்து வருகின்றனர். எதை சாப்பிட்டு அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கவலை எல்லாம் நமக்கு வேண்டாம். ஏனெனில் அவர்களுக்கு உணவளிப்பது, அதை எவ்வளவு கொடுப்பது, எதைக் கொடுப்பது என்பதெல்லாம் படைத்தவனின் வேலை. “உணவளிப்பவர்களில் மேலானவன் அல்லாஹ்’ என்று இறை நூலில் 62:11வது வசனத்தில் அல்லாஹ்வே கூறுகிறான்.

மக்களுடன் தொடர்பற்ற நிலையில் அந்த தடுப்புக்குள் எவ்வளவு காலம் அவர்கள் வாழவேண்டி இருக்கும் என்பதை, இது என்னுடைய இறைவனிடமிருந்து வந்த கிருபையே ஆகும். ஆனால் என்னுடைய இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும் என் இறைவனுடைய வாக்குறுதி உண்மையானதே என்றும் அவர் கூறினார். (18:98) என்ற வசனம் விவரிக்கிறது.

கீழே  உள்ள   ஹதீஃதின்  விளக்கத்தையும்  கவனியுங்கள் :

நபி(ஸல்) அவர்கள் இருந்த அறையின் கீழே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். உலக முடிவு நாளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று மக்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், நீங்கள் பத்து அடையளங்களைக் காணாத வரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது என்று கூறிவிட்டு அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்.

1.புகை, 2.தஜ்ஜால், 3.பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் பிராணி, 4.மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 5. மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் இறங்குதல், 6.யஃஜூஜ், மஃஜூஜ், 7,8,9 மூன்று நிலநடுக்கங்கள், ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், 10.இறுதியாக (யமன் நாட்டிலுள்ள) அதன் பகுதியின் கடைக்கோடியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக் கொண்டு வாகனங்களில் ஏறி பயணம் புறப்படச் செய்து ஓரிடத்தில் ஒன்று கூட்டும். இந்த ஹதீஃத் மூன்று அறிவிப்பாளர்கள் தொடரில் வந்துள்ள சஹீஹான ஹதீஃதாகும். (முஸ்லிம்: ஹதீஃத் எண். 5558, 5559) அபூ சரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரழி).

எனவே, யுக முடிவு நாள் ஏற்படும் போதுதான் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளிப்படுவார்கள் என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஃதிலிருந்து அறிய முடிகிறது.
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் எப்படி வெளிப்படுவார்கள்? குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

என் இறைவனுடைய வாக்குறுதி உண்மையானதே என்று அவர் கூறினார். (18:98)

யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தாரு)க்கு வழி திறக்கப்படும்போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். (21:96)

உண்மையான வாக்குறுதி நெருங்கினால், காபிர்களின் கண்கள் நிலைகுத்தி நின்று விடும். நிச்சயமாக எங்களுக்கு கேடுதான், நாங்கள் இதை உதாசீனப் படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம், அது மட்டும் இல்லை, நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம் என்று அவர்கள் கூறுவார்கள். (21:97)

நபி(ஸல்) அவர்கள், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரை தடுப்பிலிருந்து, அல்லாஹ் இதைப்போல் திறந்துவிட்டான் என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) மடித்துக் காட்டினார்கள். (புகாரி, அபூஹுரைரா (ரழி), எண். 3347)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவை) சுற்றி வந்தார்கள். அந்த (ஹஜ்ருல் அஸ்வத் கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம், அதனை நோக்கி (தம் கையிலுள்ள ஒரு பொருளில் முத்தமிடுவது போல்) சைகை செய்தபடி “அல்லாஹு அக்பர்’ என்று சொல்வார்கள் என்று ஜைனப்(ரழி) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இதைப் போல (சிறிது) திறக்கப்பட்டது என்று கூறி தம் கையால் 90 என்ற (அரபி எண்ணைப் போல்) மடித்துக் காட்டினார்கள். (புகாரி: 5293, அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி))

நபி(ஸல்) அவர்கள் என்னிடம் நடுங்கியபடி வந்து, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு காரணத்தால் அரபுகளுக்குப் பேரழிவு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்பிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு, தமது பெருவிரலாலும் அதற்கு அடுத்துள்ள விரலாலும் வளையமிட்டுக் காட்டினார்கள். உடனே நான், “இறைத் தூதர் அவர்களே! எங்களில் நல்லவர்கள் இருக்க, நாங்கள் அழிந்து போவோமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்! பாவங்கள் அதிகரித்து விட்டால் என்று பதில் கூறினார்கள். (புகாரி: 3346, 3598, ஜைனப் பின்த் ஜஹ்க்ஷ்(ரழி))

“ஆனால் இன்னும் அந்நாளில் அவர்களை சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டுவிடுவோம். பின்னர் சூர் ஊதப்படும் பிறகு நாம் அவர்களை ஒன்றுசேர்ப்போம்’ என்று கூறப்பட்ட 18:99 மற்றும் “காபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை ஒரே பரப்பாக பரப்பி வைப்போம்’ என்று கூறப்பட்ட 18:100 இறைவசனத்திற்கு நபி(ஸல்) அவர்கள் அறிவித்த விளக்கங்களை கண்ணுறுங்கள்.

நவ்வாஸ் பின் சம்ஆன்(ரழி) அவர்கள் கூறியதாவது :  (முஸ்லிம் / ஹதீஃத் எண்.5629

ஒருநாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாக(ப் பேசியபோது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும், (சில சமயம்) உயர்த்தவும் செய்தார்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்சமரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.

பின்னர் நாங்கள் (மறுபடியும்) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டு, “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் (இன்று) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். (அப்போது) அவனைப் பற்றி (க் குரலை)த் தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்சமரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள் (அதுதான் எங்கள் அச்சத்திற்குக் காரணம்)” என்று கூறினோம்.

அப்போது நபியவர்கள், “நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல, நான் உங்களிடையே (உயிருடன்) இருக்கும் போது அவன் தோன்றினால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன். நான் உங்களிடையே இல்லாதபோது அவன் வெளிப்பட்டால், அப்போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும் தமக்காக வாதாடிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான்.

தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான், அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான்.

உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக “அல்கஹ்ஃப்” அத்தியாயத்தின் எண். 18, ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும். அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து, வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவான், அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள்” என்றார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்?” என்று கேட்டோம். அதற்கு, “நாற்பது நாட்கள்” என்று பதிலளித்த நபியவர்கள், “அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும்” என்று குறிப்பிட்டார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே!” ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில், வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், “இல்லை (போதாது), அந்த (நீண்ட) நாளை, அதற்கேற்ப மதிப்பிட்டு(த் தொழுது) கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அவன் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்?” என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், “பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் மேகம் போன்று (அவன் வேகமாக பூமியைச் சுற்றி வருவான்)” என்றார்கள். மேலும், நபியவர்கள் கூறினார்கள்.

அவன் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவன் என்று ஏற்றுக் கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான். அவர்களும் அவன்மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள். உடனே வானத்திற்கு (மழை பொழியுமாறு) அவன் கட்டளையிட, மழை பொழியும், பூமிக்கு(த்தாவரங்களை முளைக்கச் செய்யுமாறு) கட்டளையிட, அது முளையவைக்கும் (அவற்றை மேய்ந்து) அவர்களின் கால்நடைகள் ஏற்கெனவே இருந்ததைவிட நீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியவையாகவும் மாலையில் (வீடு) திரும்பும்.

பின்னர், அவன் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து, (தன்னை இறைவன் என்று ஏற்றுக் கொள்ளுமாறு) அவர்களுக்கும் அழைப்பு விடுப்பான். ஆனால், அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்றுவிடுவான். அதனால், அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப் பொழுதை அடைவார்கள். அவர்களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (எஞ்சி) இராது.

அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான். அதைப் பார்த்து “உன்னிடம் இறுக்கின்ற புதையல்களை வெளிப்படுத்து” என்று கூறுவான். அப்போது (வெளிப்படும்) அந்தப் புதையல்கள், இராணித் தேனீக்களை (பின்பற்றிச் செல்லும் தேனீக்களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.

பின்னர், அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து, அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி, அம் பெய்யும் தூரத்திற்கு இடைவெளி விட்டு (அவ் விரண்டையும் போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக் கொண்டே எழுந்து வருவார்.

இதற்கிடையே மர்யமின் மைந்தர் ஈசா(அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலை நகர்) “திமஷ்க்” (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள் மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார்.

அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரு ஆடைகளை அணிந்திருப்பார். அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும், தலையை உயர்த்தினாலோ வெண் முகத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் (அதாவது அவரை நெருங்கும்) எந்தவோர் இறை மறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான். அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும்.

பின்னர் ஈசா(அலை) அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள். இறுதியில், (பாலஸ்தீனத் தீனத்திலுள்ள) “லூத்து’ எனும் நகரத்தின் தலை வாயிலருகே அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈசா(அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை (ப் பரிவோடு) அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித் தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார்.

இதற்கிடையே ஈசா(அலை) அவர்களுக்கு அல்லாஹ், “நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை (சினாயிலுள்ள) “தூர்” மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்” என்று (வஹீ) அறிவிப்பான்.

பின்னர், அல்லாஹ் “யஃஜூஜ்”, மஃஜூஜ்” கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) “தபரிய்யா” ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது, “முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்” என்று பேசிக் கொள்வார்கள்.

பின்னர் இறைத்தூதர் ஈசா(அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (“தூர்” மலையில்) முற்றுகையிடப்படுவார்கள். அப்போது (ஏற்படும் பட்டினியால்) அவர்களில் ஒருவருக்கு காளை மாட்டின் தலை கிடைப்பது, இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதை விடச் சிறந்ததாக இருக்கும்.

பின்னர் இறைத்தூதர் ஈசா(அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவோர்கள். அப்போது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். பின்னர் இறைத்தூதர் ஈசா(அலை) அவர்களும், அவர்களுடன் இருப்போரும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள்.

அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும், துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே காண்பார்கள். உடனே இறைத் தூதர் ஈசா(அலை) அவர்களும், அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றைக் கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியயறியும்.

பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த மூடிய வீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கிவிடும். பின்னர் பூமிக்கு, “நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக, உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக” என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயயாரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும், அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போது மானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்.

இந்நிலையில் அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக் குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக் கொள்ளும். இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள் மீது தான் உலக முடிவு நாள் ஏற்படும்.

இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம்: 5629,  அத்தியாயம்: 52, குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்.

அடுத்து, நபி(ஸல்) அவர்களின் உம்மத்திற்கும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் வெளியாகும் தீர்ப்புப் பற்றியும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஃதுகள் தெரிவிக்கின்றன. விரிவஞ்சி ஹதீஃதின் சுருக்கம் தரப்பட்டுள்ளது.

“நற்செய்தி பெறுங்கள்! யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகம் செல்லும் குழுவில்) என்றால், உங்களில் ஒருவர் (நரகம் செல்ல பிரிக்கப்பட்டு) இருப்பார். நீங்கள், மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றுதான், அல்லது கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போன்றுதான் (குறைவாக) இருப்பீர்கள்’ என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 3348,4741, 6530, அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி),

மற்றச் சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் நிலை “கறுப்புக் காளைமாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று அல்லது கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்றுதான்” என்று கூறினார்கள் என்றும் பதிவாகியுள்ளது. (முஸ்லிம் : ஹதீஃத் எண். 379)

Previous post:

Next post: