ஐயமும்! தெளிவும்!!

in 2020 அக்டோபர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : “யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தாரு)க்கு வழி திறக்கப்படும்போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள் என்று அல்குர்ஆன்: 21:96 இறை வசனம் அறிவிக்கிறதே, யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கவும். (அப்துல் ஜலீல் வயது 84, ஒயர்மேன், (ஓய்வு) நெல்லிக்குப்பம்)

தெளிவு : தஜ்ஜாலைப் பற்றியும், யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தார் பற்றியும் விளக்கம் கேட்டிருந்தீர்கள். தஜ்ஜாலைப் பற்றி செப்டம்பர் 2020 இதழில் விளக்கி இருந்தோம். இடமின்மையால் எழுதமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம். எனவே, இந்த இதழில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் பற்றியும் எழு துவதாகக் குறிப்பிட்டிருந்தோம். ஸஹீஹ் முஸ்லிமில் ஹதீஃத் எண்: 5629ல் நவ்வாஸ் பின் சம் ஆன் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஃதில் தஜ்ஜாலைப் பற்றியும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் பற்றியும் செய்திகள் இருப்பதால் இது மிக மிக நீண்ட ஹதீஃதாக இருப்பதால் அந்த ஹதீஃதை முழுமையாக ஐயமும், தெளிவும் பகுதியில் இடம்பெறச் செய்ய முடியவில்லை. எனவே தஜ்ஜால் பற்றிய இன்னும் உள்ள செய்திகளில் சிலவற்றையும், யஃஜூஜ் மஃஜூஜ் பற்றிய செய்திகளையும் இந்த இதழில் “யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்” என்ற தலைப்பில் எழுதியுள்ளதைப் படித்துத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஐயம் : எனக்கு மார்க்கம் தெரியாத நாட்களில் என் தாய் தந்தையர் உயிருடன் இருக்கும் போது, அவர்களை நான் என் சக்திக்கு உட்பட்டு கவனித்து வந்தேன். ஆனால், அவர்களுடன் அன்பாக பேசியது இல்லை. இப்போது ஓரளவாவது மார்க்கம் அறிந்திருக்கிறேன். அவர்கள் இருந்தபோது அவர்களுடன் அன்பாக பேசியது இல்லையே என்று அதிகம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன செய்வது? (பெயர் வெளியிட விரும்பாத வாசகர் )

தெளிவு : இப்போது ஓரளவேனும் மார்க்கம் அறிந்த நிலையில் இருப்பதாக கூறுகிறீர்கள். தாய் தந்தையர் உயிருடன் இருந்த போது அவர்களை கவனித்து வந்த தாங்கள், அவர்களுடன் அன்பாக பேசியது இல்லையே என்று தாங்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது தங்களின் மார்க்க ஈடுபாட்டிற்கான நல்ல அடையாளம் (GOOD SIGN) கீழ்கண்ட இறைவசனங்களைப் பார்த்து, துஆ செய்யுங்கள்.

“அவனையல்லாமல் (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை “சீ’ என்று சொல்லவேண்டாம். அவ்விருவரையும் விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!” (அல்குர்ஆன் : 17:23)

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னை அவ்விருவரும் வளர்த்தது போல, நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன்:17:24)

பெற்றோருடன் அன்பாகப் பேசியதில்லை என்பதற்காக தாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் மரணித்து விட்டார்கள். இதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருங்கள். “யா அல்லாஹ்! என்னுடைய தாய் தந்தையரை என்னை மன்னித்து விடும்படி செய்வாயாக! எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும் முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் நாளில் மன்னிப்பாயாக (14:41), எங்களை மன்னித்து எங்களை நரக நெருப்பிலிருந்தும் பாதுகாத்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற மேலான சொர்க்கத்தை எங்களுக்குக் கொடுத்து அருள் புரிவாயாக” இதுபோன்ற துஆக்களை கேட்டுக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக   அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவன்.

Previous post:

Next post: