நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்….

in 2021 மார்ச்

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்….

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

 பிப்ரவரி மாத  தொடர்ச்சி…..

அவர்கள் தண்ணீர் கேட்கும் போதெல்லாம் சீழ் போன்ற தண்ணீர் கொடுக்கப்படும் அதை முகத்துக்கு அருகே கொண்டு செல்லும்போது முகத்தில் சதைகள் கருகி அதில் விழும். அதை அவன் குடித்தால் அவனது குடல்களெல்லாம் துண்டு துண்டாகி அவனது பின் துவாரத்தால் வெளியேறும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி)

அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கிவிடும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் கொடுக்கப்படும். (18:29, 44:45,46) அந்த நெருப்பில் கொதிக்க வைக்கப்பட்ட துர்நாற்றமுள்ள சீழ் பானம் புகட்டப்படும். (14:16,17, 38:57, 69:36, 78:25, 6:70, 10:4, 37:67, 38:57, 47:15, 55:44, 56:42, 54,93, 78:25, 88:5) மேலும்,

அங்கு அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அங்கு கொதிநீரும் சீழும் தவிர வேறெந்தப் பானமும் அவனுக்குக் கிடையாது. இது குறித்து ஓரிடத்தில் “இது கொதி நீரும் சீழும் அதையயாத்த பலவகை கழிவுகளும் ஆகும். இதை அவர்கள் சுவைக்கட் டும். (38:57,58) இத்தொடரில் “சீழ்’ என்பதைக் குறிக்க மூலத்தில் “ஸதீத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இரத்தமும் சீழும் கலந்த திரவத்தை இச்சொல் குறிக்கும் என்று முஜாஹித் (ரஹ்), இக்ரிமா(ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். கத்தாதா(ரஹ்) அவர் கள் “நரகவாசியின் தோலிலிருந்தும் சதையி லிருந்தும் வழிகின்ற ஒருவகைக் கழிவே “ஸதீத்’ ஆகும் என்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நரகத்திலிருக்கும் இறை மறுப்பாளரின் வயிற்றிலிருந்து வெளியேறக்கூடிய இரத்தமும் சீழும் கலந்த ஒரு வகைக் கழிவே “ஸதீத்’ ஆகும். அதன் சுவை நிறம், வாடை, தோற்றம், ஆகியவை மிக மிக மோசமாகவும், தாங்கமுடியாத அளவுக்குச் சூடாகவும், குளிராகவும் இருக்கும் என்று கத்தாதா(ரஹ்) அவர்களே குறிப்பிட் டுள்ளார்கள். (தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர்: 4:948,949) மேலும்,

அஸ்மா பின்த் யஸீத் பின் அஸ்ஸகன் (ரழி) கூறியதாவது நபி(ஸல்) அவர்கள் “குடி காரனுக்கு “தீனத்துல் கபால்’ எனும் கெட்ட திரவம் புகட்டுவது அல்லாஹ்வின் பொறுப் பாகிவிட்டது’ என்று சொன்னார்கள் நான் “அல்லாஹ்வின் தூதரே!’ “தீனத்துல் கபால்’ என்றால் என்ன? என்று கேட்டேன் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அது நரகவாசிகளின் சீழ் (ஸதீத்) என்று பதில் கூறினார்கள். (ஷஹ்ர் பின் ஹஹ்ஷப்(ரஹ்) முஸ்னத் அஹ்மத், இப்னு கஸீர் : 4:948) மற்றுமோர் அறிவிப் பில் தீனதுல் கபால் என்பது நரகவாசிகளின் சீழும் இரத்தமும் “உஸாரத்’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி), திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)

அபூ உமாமா அல்பாஹிலீ(ரழி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் “அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும் அதை அவன் சிரமப்பட்டு மிடறு மிடறாக விழுங்குவான்” (16:17) எனும் இவ்வசனங்களுக்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். அந்தச் சீழை அவனது வாயருகே கொண்டு செல்லப்படும் அதன் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவன் முகம் சுளிப்பான் பின்னர் இன்னும் சற்றுப் பக்கத்தில் கொண்டு செல்லப்படும்போது அது அவனது முகத்தைப் பொசுக்கிவிடும். அதனால் அவனது தலையின் தோல் கழன்று கீழே விழுந்துவிடும். அந்த நீரை அவன் பருகினால் அது அவனுடைய குடல்களைத் துண்டு துண்டாக அறுத்துவிடும். இறுதியில் அது அவனது ஆசனவாயின் வழியாக வெளியேறிவிடும் என்று கூறினார்கள். இது தொடர்பாக அல்லாஹ் குறிப்பிடும்போது “அவர்களுக்குக் கொதிக்கும் நீர் புகட்டப்படும். அது அவர்களுடைய குடல்களைத் துண்டுதுண்டாக அறுத்துவிடும்’ (47:15) என்றும்,

அவர்கள் தண்ணீர் கேட்டு உதவி கோரினால் உருக்கிய செம்பு உலோகம் போன்ற கொதிநீரே அவர்களுக்கு வழங்கப்படும். அது அவர்களின் முகங்களைப் பொசுக்கி விடும். (18:29) என்றும் கூறியுள்ளான். (திர்மிதி, முஸ்னத் அஹ்மத், ஹாகிம், இப்னு கஸீர் 4:948,949) அந்த நரகத்தின் சீழில் ஒரு வாளி இந்த உலகில் கொட்டப்பட்டால் உலகத்தார்கள் அனைவரும் துர் நாற்றமுடையவர்களாக மாறிவிடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஸயீத்(ரழி), திர்மிதி: 2710)

நரகத்தில் கொடிய குளிப்பு நரக நெருப்பில்:

நரகவாசிகளில் சிலருக்கு கரண்டை வரையிலும் நெருப்பு இருக்கும். இன்னும் சிலருக்கு முட்டுக்கால்வரை நெருப்பு இருக் கும். இன்னும் சிலருக்குத் தொப்புள் வரை நெருப்பு இருக்கும், இன்னும் சிலருக்குக் கழுத்துவரை நெருப்பு இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸமூரா (ரழி) முஸ்லிம்)

அவர்களின் தலைக்கு மேலே கொதிநீர் ஊற்றப்படும். அதனால் அவர்களின் வயிறு களில் இருப்பவைகளும் சருமங்களும் உருக்கப்பட்டுவிடும். (22:19,20, 44:48) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நரகவாசிகளின் தலைக்குமேலே கொதிநீர் ஊற்றப்படும். அது அவர்களின் கபாலத்திற்குள் வயிறு வரை சென்று வயிற்றிலுள்ள அனைத்தையும் வழித்துவிடும். இறுதியாக அது அவர்களின் பாதங்கள் வரை அடைந்து அதனூடே வெளியேறிவிடும். இதைத்தான் 22:20 ஆவது வசனத்திலுள்ள “உருக்கப்பட்டுவிடும்” எனும் சொல் குறிக்கிறது. பின்னர் மீண்டும் முன்னிருந்ததைப் போலவே வயிற்றிலுள்ளது மாற்றப்படும் என்று (அபூ ஹுரைரா(ரழி)அறிவிக்கிறார்கள். திர்மிதி, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் தபரீ)

கடுமையாகக் கொதிக்க வைக்கப்பட்ட கொதிநீர், உருக்கப்பட்ட செம்பு போன்று அவர்களது தலையில் ஊற்றப்பட்டால் அது அவர்களின் வயிற்றில் உள்ள கொழுப்பு குடல்கள் ஆகிய அனைத்தையும் உருக்கிவிடும். அவ்வாறே அவர்களின் தோல்களும் உருகிவிடும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் முஜாஹித்(ரஹ்) சயீத் பின் ஜுபைர்(ரஹ்) முதலானோரும் விளக்க மளித்துள்ளனர். (தஃப்சீர் இப்னு கஸீர் 6:41,42) மேலும் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். (40:72) மேலும்,

நரகவாசிகளுக்கு ஒருபோதும் அழிவில்லை:

அங்குள்ள வேதனை தாங்கமுடியாதபோது அவர்கள் நரகத்தின் காவலாளிகளைக் கூப்பிடுங்கள் என்பார்கள். அப்போது நரகத்தின் காவலாளிகள் “உங்களிடம் உங்களுக்கான தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டுவரவில்லையா? என்று கேட்பார்கள். நரகவாசிகள் ஆம் என்பார்கள். அப்படியானால் உங்கள் உதவிக்காக வேறு எவரையேனும் அழையுங்கள் என்று நரகின் காவலர்களான மலக்குகள் கூறுவார்கள். அப்போது நரகவாசிகள் மாலிக்கை அழைப்பார்கள். அவர் வந்ததும் மாலிக்கே உமது இறைவனிடம் எங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தி அழிவைத் தரட்டும் என்று கூறுவார்கள். அவர்களின் கோரிக் ணzகைக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து, “இன்று ஓர் அழிவை மட்டும் அழைக்காதீர்கள் பல அழிவுகளை, பல நாசங்களை, பல கேடுகளை, பல இழப்புகளை, பல சிதைவுகளை, அழையுங்கள். எனினும் நீங்கள் இதிலேயே கிடப்பீர்கள், அழியமாட்டீர்கள் என்று மாலிக் பதிலளிப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (25:13,14, அபூதர்தா (ரழி), அனஸ் பின் மாலிக்(ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), திர்மிதி: 2712, புகாரி:3230,3266,4819, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 6:448-455)

நிச்சயமாக எவன் தனது இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம் இருக்கிறது. அதில் அவன் சாகவும்மாட்டான், வாழவும் மாட்டான். (20:74, 25:13,14, 87:12,13, 35:36, 44:56) ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும் அவனுடைய எலும்பு, நரம்பு, இரத்த நாளம் அவனுடைய ரோமங்களின் நுனிப் பகுதிகள் உட்பட உடலின் அனைத்துப் பகுதிகளிலும் கொடிய வலியயடுக்கும் ஆயினும் அவன் மரணித்து விடுபவனும் அல்லன். மேலும் அவன் முன்னே இன்னும் ஏராளமான கொடிய வேதனையும் உண்டு. (14:17)

நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ் மறுமை நாளில் இறை மறுப்பாளனுக்குக் கொடிய நரக நெருப்பினால் வகைவகையான வேத னைகளை வழங்குவான். அவற்றின் ஒவ்வொரு வகை வேதனையும் அவனைச் சாகடித்துவிடும் அளவுக்குக் கடுமையானதாக இருக்கும். இருப்பினும் அவன் அதனால் ஒருபோதும் சாகமாட்டான். ஏனெனில் “அவர்கள் சாகும்படி தீர்ப்பு வழங்கப்படமாட்டாது. நரகத்தின் வேதனை அவர்களுக்கு எளிதாக்கப்படவும் மாட்டாது” (35:36) என்று ஒரு வசனத்தில் அல்லாஹ் தெரிவித்துள்ளான் என்று (தஃப்சீர் இப்னு அபீஹாத்திம்)

மேலும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் தெரிவித்துள்ள கருத்தின் மற்றுமொரு பொருளாவது நரகத்திலுள்ள வகைவகையான வேதனைகளில் ஒவ்வொரு வேதனையும் அவனைத் தீண்டாமல் விடாது அவன் சாவதாக இருந்தால் அவற்றில் ஒரேயயாரு வேதனையே போதுமானது இருப்பினும் அந்த வேதனையிலும், தண்டனையிலும் அவன் நிரந்தரமாகக் கிடக்க வேண்டும் என்பதால் அவனுக்குச் சாவு ஏற்படாது. இத னால்தான் “எல்லா இடங்களிலிருந்தும் அவனை நோக்கி சாவு வரும் ஆனால் அவன் சாகமாட்டான்” 14:17 என்று கூறுகின்றது. மேலும்,

நகரவாசிகளுக்கு ஒருபோதும் மரணம் இல்லை:

நரகவாசிகள் நரகத்தில் நுழைவார்கள். பிறகு ஒரு அறிவிப்பாளர் அவர்களிடையே எழுந்து நரகவாசிகளே இனி உங்களுக்கு மரணம் இல்லை. இது நிரந்தரம் என்று அறிவிப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். (அபூஹுரைரா(ரழி) இப்னு உமர்(ரழி) புகாரி: 6544, 6548, 4730, முஸ்லிம் 5475)

மறுமை நாளில் கறுப்பு நிறம் கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்பட்டு அறுக்கப்படும் பிறகு அறிவிப்பாளர் ஒருவர் நரகவாசிகளே இனி மரணம் என்பதே கிடையாது என அறிவிப்பார். அப்போது நரகவாசிகளுக்குக் கவலைக்குமேல் கவலையை அதிகமாக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரி: 4730,6544,6545, 6548, முஸ்லிம்: 5478)

நரகவாசிகளின் தோல்கள் வெந்து கருகி விடும் போதெல்லாம் வேதனையைச் சுவைப்பதற்காக புதிய தோல்கள் மாற்றப்படும்.

அந்த நெருப்பு தோலை எரித்து உரிக்கும் (70:16) நமது வசனங்களை மறுப்போரை விரைவில் நாம் நரக நெருப்பில் நுழையச் செய்வோம். அங்கு அவர்கள் வேதனையைச் சுவைத்துக் கொண்டே இருப்பதற்காக அவர்களின் தோல்கள் வெந்து கருகிவிடும்போதெல்லாம் வேறு தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம். (4:56) என்றும்,

இறைவசனங்களை நிராகரித்த இறை மறுப்பாளர்கள் நரகத்தில் நிரந்தரமாக வேதனையையும், தண்டனையையும் அனு பவித்துக் கொண்டே இருப்பார்கள். அவர் கள் வேதனையைத் தொடர்ந்து சுவைத்துக் கொண்டே இருப்பதற்காக வேதனையை உணரும் தோல்கள் வெந்து கருகும் போதெல்லாம் அவர்களுக்கு வேறு தோல் கள் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதா வது: அவர்களின் தோல்கள் கருகிவிடும்போதெல்லாம் காகிதங்களைப் போன்ற வெள்ளை நிறத் தோல்கள் அவர்களுக்குப் புதிது புதிதாக மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும் இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது உமர்(ரழி) அவர்களின் முன்னிலையில் ஒருவர் இந்த 4:56ஆவது வசனத்தை ஓதிக்காட்டினார். “அதைத் திரும்பவும் என்னிடம் ஓதிக்காட்டுங்கள்’ என உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். அவரும் அதைத் திரும்பவும் ஓதினார். அங்கிருந்த முஆத் பின் ஜபல்(ரழி) அவர்கள் “இதற்கு என்னிடம் விளக்கம் உண்டு ஒரு மணி நேரத்தில் நூறு தடவைகள் அவர்களின் தோல்கள் இவ்வாறு மாற்றப்படும்” என்று கூறினார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் இவ்வாறே நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று தெரிவித்தார்கள். (தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் : 2:584)

ஏக இறை நிராகரிப்பாளர்களின் தோலின் தடிப்பம் நாற்பத்திரண்டு முழங்களாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி: 2706, அஹ்மத், ஹாக்கிம், இப்னு ஹிப்பான், தஃப்சீர் இப்னு கஸீர் 2:584) மேலும் அவனுடைய தோலின் தடிப்பம் மூன்று நாள் பயணத் தொலைவாகும்” என மற்றுமோர் அறிவிப்பு தெரிவிக்கிறது. (முஸ்லிம், பத்ஹுல் பாரீ)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நரகத்தில் நரகவாசிகள் மிகவும் அகோரத் தோற்றமுடையவர்களாகக் காட்சியளிப்பார்கள். அவர்களது தோலின் பருமன் எழுபது முழம் இருக்கும் என்று (இப்னு உமர் (ரழி) முஸ்னத் அஹ்மத்) மேலும் நரகத்தில் இறை மறுப்பாளனுக்கு அளிக்கப்படும் வேதனை மிகவும் கடுமையானதாக இருக்கும். அவனது தோள் புஜங்களின் அளவு விரிய விரிய வேதனையும் விரிவடைந்து கொண்டே செல்லும் இவ்வாறு வேதனையைப் பல மடங்குகளாக ஆக்குவதற்காக அவனுடைய உடலுறுப்புக்கள் அனைத்தும் பெரிதாக்கப்படும் அவ்வகையில்,

விகாரமாகத் தெரியும் நரகவாசியின் பல்லின் அளவு :

ரபீஉ பின் அனஸ்(ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நரகத்தில் நரகவாசியின் விகாரமான கோரப்பல் எழுபது முழம் நீளமாக இருக்கும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 2:584)

மறுமை நாளில் விகாரமாகத் தெரியும் நரகவாசிகளின் கோரமான கடைவாயப் பற்கள் உஹத் மலை போன்று பருமனாக இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி: 2703,2706, முஸ்னத் அஹ்மத்) மற்றுமோர் அறிவிப்பில் மறுமையில் நரகவாதியான இறைமறுப்பாளனின் “கடைவாய்ப்பல் உஹத் மலையைவிடப் பெரியதாக இருக்கும்” என்றும் கூறுகிறது. (புகாரி: 6551இன் சிறுகுறிப்பு : 130)

நரகவாசியின் நாக்கின் நீளம் :

நரகவாசி தனது நாவை ஒரு பஃர்ஸக் என்பது சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக) அல்லது இரண்டு பஃர்ஸக் (16 கிலோமீட்டர்) தொலைவுக்கு நீட்டுவான் அதன்மேல் (நரகவாசிகளான பிரமாண்டமான) மக்கள் நடந்து செல்வார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரழி), திர்மிதி: 2705)

நரகவாசியின் இரு உதடுகளின் பெருக்கம்:

நரக நெருப்பு அவர்களுடைய முகங்களை சுட்டுக்கரிக்கும் இன்னும் அதில் அவர்களுடைய உதடுகள் சுரண்டு(ம் கிழிந்தும்) பல் வெளியே தெரியும் வண்ணம் விகாரமானவர்களாக இருப்பார்கள். (23:104, 70:16, 74:28,29, 14:50, 21:39) “அவர்களின் முகங்களை நரக நெருப்பு சுட்டுப் பொசுக்கும்” எனும் தொடருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கையில் நரக நெருப்பு அவர்களைக் கரிக்கும் அத னால் அவர்களின் முகத்திலுள்ள சதைகள் கழன்று கிழிந்து, பின்னங்கால்களின் மீது உருகி ஓடும் என்று கூறினார்கள். (அபூத்தர்தா (ரழி), தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி)

இங்கு கோரமானவர்கள் என்பதைக் குறிக்க மூலத்தில் “காலிஹூன்” எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் விளக்கம் சொல் லும்போது கடுகடுத்தவர்கள், முகம் கறுத்தவர்கள் என்று பொருள் கூறினார்கள். இப்னு மஸ்ஊத்(ரழி), அவர்கள் கூறினார் கள் இரும்புச் சீப்பால் கோதப்பட்ட தலை, வெளியே கோரமாகத் தெரியும் பற்கள், கிழிந்து தொங்கும் உதடுகள் ஆகியவை தான் அந்தக் கோரக்காட்சி (காலிஹூன்) ஆகும். என்றும்,

அவரது முகத்தை நரக நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிடும் அதன் விளைவாக அவரது மேலுதடு இழுத்துக்கொண்டு தலையின் மேலுள்ள மத்தியப் பகுதி வரை போய் விடும் கீழுதடு அவரது தொப்புள் பகுதி வரை நீண்டு வந்து தொங்கிக் கொண்டிருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி), திர்மிதி: 2713, ஹாக்கிம், முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 6:228-233)

நரகவாசியின் இரு காதுகளின் தூர அளவு:

நரகத்தில் நரகவாசிகள் மிகவும் கோரத் தோற்றமுடையவர்களாகக் காணப்படுவார்கள்.

 (இன்ஷா அல்லாஹ் தொடரும்….)

Previous post:

Next post: