கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது ஏன்?

in 2021 நவம்பர்

 

கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது ஏன்?

K.M.H.  அபூ அப்தில்லாஹ்

மிகமிக உயர்ந்த பதவியிலிருந்த அஜா ஜீல் தன்னுடைய ஆணவத்தின் காரணமாக இறைவனால் சபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டான். ஷைத்தான், இப்லீஸ் என மிக மிக இழிவான பெயர்களைப் பெற்றான். மனித குலத் தந்தையான எந்த ஆதம்(அலை) அவர்கள் காரணமாக இந்த இழிநிலைக்கு ஆளானானோ அந்த ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து அவர்களை நரகில் தள்ளி, நரகை நிரப்புவதாக சபதம் செய்தான். எல்லாம் வல்ல இறைவன் அவனுக்கு யுக முடிவு வரை அவகாசமும் கொடுத்து, மனித இனத்தை வழிகெடுத்து நரகில் தள்ள படைபட்டாளங்களையும் கொடுத்து, உன்னுடைய சாகசங்கள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்து. ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பான்மையினர் உன்னுடைய வலையில் சிக்கி நரகில் வீழ்வர். என்னுடைய உண்மையான அடியார்கள் மீது உன்னுடைய முயற்சி ஒருபோதும் பலனளிக்காது என்று உறுதி சொன்னான். ஷைத்தானும் அதை ஒப்புக்கொண்டான்.

ஷைத்தான் தன்னுடைய சபதத்தின்படி ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து நரகில் தள்ளுவதில் மிகமிகக் குறியாக இருக்கிறான். ஆதத்தின் குமாரர்களிடையே பிணக்கை ஏற்படுத்தி ஒருவரை மற்றவர் கொலை செய்யும் அளவிற்குத் தூண்டி வழிகெடுத்தான். (பார்க்க 5:27-31) ஆக அன்றிலிருந்து இன்று வரை ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து நரகில் தள்ளுவதில் ஷைத்தான் மாபெரும் வெற்றி கண்டு வருகிறான். ஷைத்தானுடைய படைபட்டாளங்களில் மிகமிக வலுவான படைபட்டாளமாக இருப்பவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட புரோகிதர்களே.

ஏகன் இறைவன் ஆதத்தின் சந்ததிகள் மீது இரக்கங் கொண்டு வழிகேட்டில் செல்லும் அவர்களை நேர்வழிக்குக் கொண்டுவர காலத்திற்குக் காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அந்த நபிமார்கள் இந்தப் புரோகிதர்களின் பிடியில் சிக்கி இருந்த மக்களை விடுவிக்க பெரும் பாடுபட்டார்கள். சொல்ல முடியாத அளவிற்கு துன்பத்திற்கு ஆளானார்கள்; சில நபிமார்கள் கொலை செய்யவும் பட்டார்கள். ஆயினும் அந்த நபிமார்கள், தங்கள் மீது விதிக்கப்பட்ட மார்க்கப் பணிக்காக மக்களிடமிருந்து கூலியை எதிர்பார்க்கக்கூடாது என்று இறைவன் கடுமையாக கட்டளையிட்டுள்ளதை அல்குர்ஆனில் பார்க்க முடிகிறது. (பார்க்க: 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23)

மேலும் கூலி கேட்காமல் மார்க்கப்பணி செய்கிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும் என்பதை அல்குர்ஆன் 36:21ல் இறைவன் தெள்ளத் தெளிவாகக் கூறி எச்சரிக்கிறான். அதல்லாமல் மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்கிறவர்கள் எப்படிப்பட்ட தில்லுமுல்லுகளை எல்லாம் செய்வார்கள் என்பதையும் ஏகன் இறைவன் தனது இறுதி வழிகாட்டி நூலில் பல இடங்களில் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டி, ஆதத்தின் சந்ததிகளை எச்சரிக்கிறான். (பார்க்க: 2:41,79, 3:78,187,188, 4:44,46, 5:41,63, 6:21,25,26, 9:9,10,34, 11:18,19, 31:6)

மார்க்கப் பணிக்காகக் கூலி வாங்குவது மக்களிடையே மூட நம்பிக்கைகளையும், வழிகேட்டையும் வளர்க்கிறது என்பதை 52:40, 68:46 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. மார்க்கப் பணிக்கு கூலி வாங்குகிறவர்களின் உள்ளங்கள் இறுகிக் கருத்துவிடுகின்றன என்பதை 5:13 இறைவாக்கு உணர்த்துகிறது. அவர்கள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றனர் என்பதை 2:174 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது.

புரோகிதர்கள் கூலிக்காக நன்கு தெரிந்த நிலையில் தான் தில்லுமுல்லுகள் செய்கிறார்கள் என்பதை 2:75,78,79,109,146, 6:20 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. கூலி வாங்கும் நோக்கம் காரணமாக இறைவன் மக்களுக்குத் தெளிவாக விளக்கிய சத்தியத்தை, நேர்வழியை திரித்து, மறைத்து, வளைத்துக் கூறும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் இந்தப் புரோகிதர்கள். அதனால் இறைவன், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபத்திற்கும் ஆளாகிறார்கள் புரோகிதர்கள் என்பதை 2:159, 161,162 இறைவாக்குகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிப்படுத்துகின்றன.

ஆக மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவதின் கேட்டைப் பற்றி இறுதி வழிகாட்டி நூலில் இறைவன் சுமார் 45 இடங்களில் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளான். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட – ஹராமாக்கப்பட்ட வட்டி, பன்றி இறைச்சி, மதுபானம், சூது விபச்சாரம், திருட்டு, கொள்ளை, கொலை, கோள், அவதூறு மற்றும் பல விஷயங்கள் பற்றி எல்லாம் எச்சரித்துள்ளதற்கும் மிகமிக அதிகமாகப் பல இடங்களில் மிகக் கடுமையாக இந்த மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவது கூடாது என்பது குறித்து எச்சரித்துள்ளான்.

ஆனால் இந்தக் கடுமையான எச்சரிக்கைகள் எல்லாம், இந்த மவ்லவி புரோகிதர்களிடம் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது. இந்த 45 இடங்களில் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள மிகக் கடுமையான எச்சரிக்கைகள் எல்லாம் புறக்கணித்து விட்டு, முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு, மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவதில் மிகமிகக் குறியாக இருக்கிறார்கள் இந்த மவ்லவி புரோகிதர்கள்.

இந்த இறைவாக்குகள், மார்க்கப் பணியை நபிமார்கள் கூலிக்காகச் செய்யவில்லை என்பதையும், அதற்கு மாறாக முன்னைய நபிமார்களின் சமுதாயங்களிலுள்ள புரோகிதர்கள் மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்ததின் விளைவாக ஏற்பட்ட சீர்கேடுகளையும், வழிகேட்டையும் தெள்ளத் தெளிவாக நேரடியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் நிலையில், “நபிமார்கள் தான் மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்யக் கூடாது; நாங்கள் கூலி வாங்குவதில் எவ்விதத் தவறும் இல்லை’ என்று இந்த மவ்லவி புரோகிதர்கள் தங்களின் இத்தகைய செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்; வேறு சிலரோ நாங்கள் மார்க்கப் பணிக்கு கூலி வாங்கவில்லை, நாங்கள் அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம், உட்காருகிறோம், எழும்புகிறோம், இந்த வகைக்காகவே கூலி வாங்குகிறோம் என்று கூறி, கூலி வாங்குவதை நியாயப்படுத்து கின்றனர். ஆக எந்தக் காரணத்தைக் கூறியாவது மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதில் இந்தப் புரோகிதர்கள் குறியாக இருக்கிறார்களே அல்லாமல், எல்லாம் வல்ல ஏகன் இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை இந்த புரோகித மவ்லவிகளிடம் காண முடியவில்லை.

பல நொண்டிச் சாக்குகளைச் சொல்லி மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்திய ஆட்சியாளர்களுக்கு (கலீஃபாக்கள்) அரசு கருவூலத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்பட்டதை ஆதாரமாகத் தந்து, இவர்கள் கூலி வாங்குவதை நியாயப்படுத்துகின்றனர்.

அந்த கலீஃபாக்களுக்கு மார்க்கப் பணி செய்ததற்காக கூலி கொடுக்கப்படவில்லை; அப்படி கொடுக்கப்பட்டிருந்தால், அன்று நபி தோழர்கள் அனைவருமே மார்க்கப் பணி புரிந்தார்கள்; எனவே அவர்கள் அனைவருக்கும் அதற்காகக் கூலி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த கலீஃபாக்கள் மக்களுக்கு முன் நின்று தொழுகை நடத்தியதற்காக (இமாம்) கூலி கொடுக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் அன்று இதர பள்ளிகளில் முன் நின்று தொழுகை நடத்திய இமாம்களுக்கும் கூலி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி மார்க்கப் பணி புரிந்த தொழுகை நடத்தியவர்களுக்காகக் கூலி கொடுக்கப்பட்டதாக ஒரே ஒரு ஆதாரத்தையும் இவர்களால் தரமுடியாது. அதற்கு மாறாக ஆட்சிப் பொறுப்புகளிலிருந்த கலீஃபாக்களுக்கும், கவர்னர்களுக்கும் அரசு கருவூலத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையே பார்க்க முடிகிறது.

அடுத்து, மார்க்கப் பணியை முழு நேரப் பணியாகக் கொண்டு செயல்படுவதாகவும், அதனால் தங்களின் குடும்பத் தேவைகளுக்கு பொருளீட்ட அவகாசம் இல்லை எனக் கூறி கூலி வாங்குவதை நியாயப்படுத்துகின்றனர். பள்ளிகளில் முன் நின்று தொழுகை நடத்துகிறவர்கள் ஒரு நேரத் தொழுகைக்கு அதிகபட்சம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாலும் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு வெறும் 2:30 மணி நேரமே செலவிடுகின்றனர். குழந்தைகளுக்குப் பொருள் விளங்காமல் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுப்பதில் தினசரி 2 மணி நேரம் செலவிட்டாலும் ஆக 4:30 மணி நேரம் ஒரு நாளைக்குச் செலவிடுகின்றனர். எஞ்சியுள்ள 19:30 மணி நேரத்தில் 8 மணி நேரம் தூக்கத்தில் செலவிட்டாலும், பாக்கி 11:30 மணி நேரத்தில் என்ன செய்கிறார்கள்? இதேபோல் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்பவர்களும் தினசரி ஒரு 2 மணி நேரத்தை அதற்காக செலவிடுகிறார்கள் என்பதே மிகைப்பட்டதாகும்.

மேலும் மார்க்கப் பணியை முழு நேரம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் மீது கடமையுமல்ல. தங்களது அன்றாட அலுவலுக்கிடையே மார்க்கப் பணியையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்கள் மீது விதிக்கப்பட்டதாகும். முழு நேரப்பணி என்பது இந்த புரோகித மவ்லவிகள் இவர்களாகக் கற்பனை செய்து கொண்டதே அல்லாமல் மார்க்கத்தில் கடமையாக்கப்பட்டதல்ல. நபிமார்கள் மார்க்கப் பிரசாரத்தை தங்களின் முழு நேரப் பணியாகக் கொண்டிருந்தார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தான் அவர்கள் மக்களிடம் கூலியை எதிர்பார்த்துச் செயல்படக் கூடாது என ஏகன் இறைவன் தெளிவாகக் கட்டளையிட்டுள்ளான்.

மத்ஹப்வாதிகள் ஏற்றிப் போற்றும் மரியாதைக்குரிய நான்கு இமாம்களும், இந்த மவ்லவி புரோகிதர்களை விட மிக மிக அதிக நேரத்தை மார்க்கப் பணிக்கு ஓதுக்கி இருந்தார்கள் என இவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றனர். அதற்காக அவர்கள் மக்களிடம் கையேந்தினார்களா? இல்லையே! சுயமாக உழைத்துப் பொருளீட்டி தங்கள் குடும்பத் தேவை போக எஞ்சியதை தாராளமாக ஏழை, எளியவர்களுக்குக் கொடுத்து உதவியதாகத்தானே இவர்களும் சொல்கிறார்கள். அப்படியானால் அந்த இமாம்களை விட குறைந்த நேரமே மார்க்கப் பணிக்கு ஒதுக்கும் இவர்களால் ஏன் சுயமாக உழைத்துப் பொருளீட்ட முடியவில்லை? மக்களிடம் கையேந்துகிறார்கள்!

சிலர் 2:273 வசனத்தை ஓதிக்காட்டி முழு நேர மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவதை நியாயப்படுத்துகின்றனர். அந்த இறைவாக்கு வருமாறு :

பூமியில் நடமாடி(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர் களுக்குத்தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக் காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான், அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்க மாட்டார்கள். (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான்.  அல்குர்ஆன் 2:273

இந்த இறைவாக்கு மார்க்கப் பணிக்குக் கூலி கேட்டு வாங்குவதையோ, கூலியாகத் தரப்படுவதையோ சரிகாணவில்லை. மாறாக மார்க்கப் பணிக்கு கூலி கேட்காமலும், எதிர்பாராமலும் இறைவனிடமே அதற்குரிய கூலியை எதிர்பார்த்து பேணுதலுடன் இருப்பவர்களுக்கு தங்களின் தான தர்மங்களிலிருந்து மனமுவந்து கொடுப்பதையே இந்த இறைவாக்கு வற்புறுத்துகிறது. அவர்களுடைய பேணுதலைக் கண்டு அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணிக் கொள்வான் என்ற பாகமும், அவர்கள் மனிதர்களிடம் எதையும் வருந்தி கேட்கமாட்டார்கள் என்ற பாகமும் எதைக் குறிக்கின்றன? முழு நேர மார்க்கப் பணி என்ற பெயரால் மாதாமாதம் இவ்வளவு தொகை என நிர்ணயித்துக் கொடுக்கப்படும் கூலியை சம்பளத்தை இந்த 2:273 இறைவாக்கு ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்பதே தெளிவான சான்றாகும்.

மார்க்கப் பணிக்கு கூலி ஏன் வாங்கக் கூடாது? ஏகன் இறைவன் அதைக் கடுமை யாகத் தடுத்துள்ளதற்குக் காரணம் என்ன? ஆழ்ந்து நோக்கும்போது, சில உண்மைகள் நமக்குப் பளிச்சென தெரிய வருகின்றன. மக்களில் மிகப் பெரும்பான்மையினர்- சத்தியத்தை, நேர்வழியை அறியமாட்டார்கள், விளங்கமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள் என இறைவன் தனது இறுதி வழிகாட்டல் நூலில் தெள்ளத் தெளிவாக அறிவித்துள்ளான். (பார்க்க: 2:100,243, 5:59,103, 6:37, 111,116, 7:17,102,131,187, 8:34, 9:8, 10:36, 55:60, 11:17, 12:21,38,40,68,103,106, 13:1, 16:75,83,101, 17:89, 21:24, 23:70, 25:44,50, 26:8, 67,103,121,139,174,190,223, 27:61,73, 28:13,57, 29:63, 30:6,30,42, 31:25, 34:28, 36,41, 39:29,49, 40:57,59,61,82, 41:4, 43:78, 44:39, 45:26, 49:4, 52:47)

சுமார் 64 இடங்களில் மிகப் பெரும் பான்மையினர் சத்தியத்தை அறியமாட்டார்கள், விளங்கமாட்டார்கள், நம்பமாட்டார்கள், வழிகேட்டில் போய் நரகில் விழுவார்கள் என்றே, எல்லாம் வல்ல ஏகன் இறைவன் தனது இறுதி வழிகாட்டல் நூலில் அப்பட்டமாக அறிவித்துள்ளான். மிகப் பெரும்பான்மை மக்களைக் கொண்டு நரகை நிரப்புவதாகத் தனது வாக்கு முந்தி விட்டது என்கிறான் இறைவன். அது நிறைவேறியே தீரும்; அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்கிறான் இறைவன்.

கடலிலிருந்து முத்துக் குளித்து வெளியில் அம்பாரமாகக் குவிக்கப்படும் சிப்பிகளை உடைத்துப் பார்க்கும்போது அவற்றில் வெகு சில சிப்பிகளில் மட்டுமே அசலான முத்துகள் இருப்பது போல், கோடானுகோடி மக்களில் நேர் வழி நடந்து சுவர்க்கம் புகும் நல்லடியார்கள் வெகு சிலரே தேர்வார்கள்.

\இப்போது நாம் எடுத்துக் கொண்டிருக்கும் மார்க்கப் பணிக்குக் கூலி என்ற அசலான விஷயத்திற்கு வருவோம். மக்களிடம் கூலியை எதிர்பார்க்கும் இந்த மவ்லவி புரோகிதர்கள் பெருங்கொண்ட கூட்டத்தை எதிர்நோக்குவார்களா? அல்லது மிகமிக சொற்பத் தொகையினரை எதிர் நோக்குவார்களா? பெருங்கொண்ட கூட்டத்தைக் கொண்டுதான் உலக ஆதாயம் அதிகமாகக் கிடைக்கும். அவர்களின் நோக்கம் நிறைவேறும்.

எனவே சத்தியத்தை, நேர்வழியை உள்ளது உள்ளபடி அதாவது அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீதில் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொன்னால் அது அல்குர்ஆன் 51:55ல் இறைவன் கூறி இருப்பது போல் நேர்வழி நடக்கும் மிகமிக சொற்பமானவர்களையே கவர்ந்து இழுக்கமுடியும். வழிகேட்டில் சென்று நரகை அடையும் பெருங் கொண்ட மக்களை அந்த நேர்வழி உபதேசம் கவர்ந்து இழுக்காது. மேலும் நேர்வழி நடக்கும் அந்த சொற்பத் தொகையினரும், ஏகன் இறைவனின் எண்ணற்ற கட்டளைகளுக்கு முரணாக மார்க்கப் பணி செய்கிறவர்களுக்கு கூலி கொடுக்கவும் முன்வரமாட்டார்கள்.

ஆகவே மார்க்கப் பணிக்கு இவ்வுலகில் கூலியை எதிர்பார்த்து செயல்படும் புரோகித மவ்லவிகள் சத்தியத்தை-நேர்வழியை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்ல முன் வர ஒருபோதும் முடியாது. அவர்களின் குறிக்கோள் உலக ஆதாயம்; அதற்குள்ள ஒரே வழி எது? வழிகேட்டில் செல்லும் பெருங்கொண்ட மக்களை கவர்ந்து இழுப்பதே யாகும். அப்படியானால் அவர்கள் சத்தியத்தை-நேர்வழியை போதிக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. வழிகேட்டில் செல்லும் பெருங்கொண்ட மக்கள் ஏற்றுக் கொள்ளும் வழிகேட்டுப் போதனைகளையே நேர்வழியாகப் போதித்து அவர்களின் ஆதரவைப் பெறமுடியும். அந்த வழி கேட்டுப் போதனைகள் தான் மத்ஹபுகள், தரீக்காக்கள், அமைப்பு கள், இயக்கங்கள், கழகங்கள் போன்ற பிரிவுகள். இப்படிப்பட்ட பிரிவுகள் எந்த நிலையிலும் கூடாது என்று அல்குர்ஆன் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 இறைவாக்குகள் நேரடியாக எச்சரித்தாலும், இந்த எச்சரிக்கைகள் அவர்களுக்கு நன்கு தெரிந்தாலும் அறிந்த நிலையில்தான் இந்த இறைக் கட்டளைகளுக்கு முரணாக நடக்கிறார்கள்.  (பார்க்க: 2:75,78, 79,109,146, 6:20)

தங்கள் இயக்கம் வலுப்பெறவும், அதன் மூலம் வளம் பெறவும் அது கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்ளவுமே, கூலியை இவ்வுலகில் எதிர்பார்க்கும் புரோகித மவ்லவிகள் விரும்புகிறார்களே அல்லாமல், இஸ்லாம் வலுப்பெற வேண்டும்; முஸ்லிம்கள் வளம் பெறுவதோடு இவ்வுலகிலும், மறு உலகிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், இவ்வுலகில் கூலியை எதிர்பார்த்து மார்க்கப் பணி புரியும் புரோகித மவ்லவிகளிடம் ஒரு போதும் ஏற்படாது.

இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை; யூகமாகச் சொல்லவில்லை. அவர்களது வாக்குமூலத்தையே எடுத்து எழுதி இருக்கிறோம். ஏகத்துவம், அக்டோபர் 2005, பக்கம் 3, “ஒரு வலுவான இயக்கம் தன் வேர்ப்பிடிப்புகளை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் வேண்டுமாயின் சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களது முக்கடவுள் கொள்கை தவறானது என்பதை எந்த முஸ்லிமும் மறுக்க மாட்டார். ஆயினும் அவர்கள் பல சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுத்து வழிகேட்டில் செல்லும் மக்களைக் கவர்ந்திழுத்து அதன் மூலம் தங்களின் நிலைபாட்டை உறுதிப்படுத்தி வருகின்றனர். அதனால் மறுமையில் அவர்களுக்கு இலாபமுண்டா? இல்லை என்பதே உண்மையாகும். இதுபோல்தான் எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரண்பட்ட பிரிவுகளையும், இயக்கங்களையும் நியாயப்படுத்தவும், வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் அற்ப உலகின் அழிந்துவிடும் போலியாகத் தோற்றம் தரும் சமுதாயப் பிரச்சினைகளை கையில் எடுத்து வழிகேட்டில் செல்லும் முஸ்லிம்களை கவர்ந்திழுத்து அதன்மூலம் தங்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதோடு தங்களையும் வளப்படுத்தி வருகின்றனர்.

எனவே கூலிக்காக, உலக ஆதாயத்திற்காக, பேர் புகழுக்காக செயல்படும் எந்தப் புரோகித மவ்லவியும் மக்களுக்கு சத்தியத்தை-நேர்வழியை குர்ஆன், ஹதீதில் உள்ளது உள்ளபடி எடுத்துப் போதிக்க முன்வர முடியாது. மறுமையில் இறைவனிடம் கூலியை எதிர்பார்த்து தூய எண்ணத்துடன் செயல்படுகிறவர்கள் மட்டுமே சத்தியத்தை-நேர்வழியை உள்ளது உள்ளபடி மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். இதையே ஏகன் இறைவன் அல்குர்ஆன் 36:21ல் “கூலி கேட்காத இவர்களையே பின்பற்றுங்கள்; இவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள்” என்று ஆணித்தரமாக அச்சர சுத்தமாக அறிவித்துள்ளான்.

யார் இம்மை வாழ்க்கையையும், அதன் அழகை (முகஸ்துதி, பெயர், புகழ், பட்டம், பதவி)யும் விரும்புகிறாரோ, அவர்களின் செயல்களுக்குரிய(கூலி)தை இம்மையிலேயே நாம் நிறைவு செய்து விடுகிறோம். அவற்றில் அவர்கள் கொஞ்சமும் குறைவு செய்யப்படமாட்டார்கள் (அவர்கள் யார் தெரியுமா?) அவர்கள்தான் மறுமையில் அவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் அவர்கள் எவற்றைச் செய்தார்களோ அவை அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!  (அல்குர்ஆன் 11:15,16)

Previous post:

Next post: