உலக பட்டினி குறியீடு…

in 2021 நவம்பர்

தலையங்கம்!

உலக பட்டினி குறியீடு…

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக பட்டினி குறியீடு குறித்த அறிக்கையை ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. இந்த அறிக்கை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான 1. ஊட்டச்சத்து குறைபாடு, 2. வயதுக்கேற்ற எடை இல்லாமல் இருத் தல், 3. உயரம் இல்லாமல் இருத்தல் மற்றும், 4.குழந்தைகளின் உயிரிழப்பு ஆகிய முக்கிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா, 2021ஆம் ஆண்டு 116 நாடுகளுக்கான பட்டியலில் 101வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது. மத்திய ஆப்பிரிக்கா குடியரசு, ஏமன், சோமாலியா என இன்னும் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

முக்கிய காரணங்களுள் தலையாயதாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடுதான். மியான்மர், நேபாளம், வங்காளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில்தான் பட்டினியால் வாடுவோரின் நிலை அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் பட்டினி யின் அளவு அபாயக் கட்டத்தில் இருப்பதாக இது சம்பந்தமான ஜெர்மனி அமைப்பு ஒன்றும், அயர்லாந்து அமைப்பு ஒன்றும் எச்சரிக்கை செய்துள்ளன.

இந்தியாவில் சத்துணவு, சரிவிகித உணவு கிடைப்பதில் சிக்கல்கள் இருந்து வருவதைத் தொடர்ந்து, உணவு வழங்குவதிலும் மந்தத் தன்மை நிலவி வருகிறது.

பொருளாதார சிக்கல், ஸ்திரமற்ற முடிவு, அரசியல் குழப்பம், கொரோனா என்ற பெயரால் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனை ஆகியவைகளால் நம் நாட்டின் பட்டினி குறியீட்டின் அளவு அதிகரித்து இருக்கிறது. இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு அதிக அளவில் குறைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டு மண்ணின் மகிமை இது என்று நினைக்கத் தோன்றுகிறது!

உயரத்திற்கேற்ற எடை இல்லை என்ற காரணியால் 1998-2000ல் 17.1 சதவிகிதமாக இருந்த நிலை, 2016-2020ல் 17.3 சதவிகிதத்திற்கு அதிகரித்து இருக்கிறது.

இறுதியாக, கவலை அளிக்கும் இந்த விசயத்தில் அரசை கேலி கிண்டல் செய்வதற்கு பதிலாக, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசுக்கு அளிக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் தார்மீக பொறுப்பாகும். சரியான ஆலோசனைகளை ஆளும் அரசு நிராகரித்தால், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆலோசித்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர் நிலை அடைய ஆக்கபூர்வ செயல்பாடுகளில் இறங்க வேண்டும்.

Previous post:

Next post: