கண்ணீரற்றத் தமிழகம் எப்போது சாத்தியம்?

in 2010 அக்டோபர்,தலையங்கம்

தமிழகத்தைக் கண்ணீரற்றத் தமிழகமாகக் காண அவாவுறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஆசைப்படுவதாகவும், அதற்காகவே பாடுபடுவதாகவும் அறிவித்துள்ளார். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

ஒரு முயற்சி வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்காகக் கடும் உழைப்பு, அதற்குரிய சரியான முறையான வழியில் அமைய வேண்டும். திருச்சியிலிருந்து சென்னை சென்று சாதிக்கப் போகிறேன் எனக் கூறும் ஒருவன் வடக்கே சென்னை செல்லும் தொடர் வண்டியில் ஏறாமல், தெற்கே நாகர் கோவில் செல்லும் தொடர் வண்டியில் ஏறி பிரயாணித்தால் அவன் தனது இலட்சிய இலக்கை அடைய முடியுமா?

டாஸ்மாக் அனைத்து வகை தீமைகளுக்கும், வன்முறைச் செயல்களுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும், மிகப் பெரும் உயிர்கள் இழப்பிற்கும் தாயாக இருக்கிறது. இன்று தமிழகத்தில் நீக்கமற நிறைந்து காணப்படும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை இவை போதாதென்று குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி எண்ணற்ற விபத்துக்கள்; அதனால் பலர் உயிர் இழப்பு.

குடிபோதையில் கைகலப்பு, அதனால் பலர் உயிர் இழப்பு, குடிப் பழக்கத்தால் பல நோய்களுக்கு ஆளாகி பலர் உயிர் இழப்பு. இப்படி உயிர் இழப்புகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. இதனால் கணக்கற்ற பெண்கள் விதவைகளாகி கண்ணீரில் மிதக்கின்றனர்.

இவை அல்லாமல் குடிகார கணவன்மார்கள் பெருக பெருக அவர்களது மனைவிமார்களும், பிள்ளைகளும் போதையில் அடித்துத் துவைக்கப்படுவதால் சித்திரவதைக்கு ஆளாகி மாலை மாலையாக கண்ணீரைச் சிந்துகிறார்கள். போதைத் தலைக்கேறி நண்பர்களே ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அதனாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படி மதுப்பழக்கத்தால் உயிரிழப்புகள் பல்கிப் பெருகி இளம் பெண்களே கணவனை இழந்து விதவைகளாகிக் கண்ணீர் சிந்துகின்றனர்.

இவை போதாதென்று ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் அல்ல என நிரூபிக்க பெண்களும் இப்போது குடிக்க ஆரம்பித்து போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். பெற்றோர்களே போதையில் மிதக்கும்போது அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் பற்றி கேட்கவா வேண்டும். 10,12 வயதுகளிலேயே சிறு பிராயத்திலேயே குடிப்பழக்கத்தை விளையாட்டாக ஆரம்பித்து அதுவே அவர்களையும் அடிமைப்படுத்தி விடுகிறது. சமுதாயத்தைச் சீரழிக்கும் சினிமா இளஞ் சிரார்களுக்குப் புகைப்பதையும், குடிப்பதையும், அனைத்து ஒழுங்கீனங்களையும் கற்றுக் கொடுத்து அவர்களை அவற்றிற்கு அடிமைப்படுத்தி வருகிறது.

அரசு, ஏழை மக்களின் வறுமையைப் போக்கும் எண்ணத்துடன் அளித்து வரும் இலவசப் பொருள்களையே பாதி விலை, கால் விலை என வந்த விலைக்கே விற்றுவிட்டு அந்தப் பணத்தைக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கிக் குடித்து போதைக்கு ஆளாகி தெரு ஓரங்களில் மயங்கி விழுந்து கிடப்பதைப் பார்த்து வருகிறோம். டாஸ்மாக் விற்பனை அமோகமாக வருடா வருடம் அதிகரித்து வருவதின் இரகசியம் அரசுக்குப் புரிகிறதோ இல்லையோ! அரசின் இலவசங்களே மீண்டும் மது விற்பனையாக மாறி டாஸ்மாக் கருவூலத்தை நிரப்பி வருகிறது என்பது அறிவு ஜீவிகளுக்கு விளங்காத புதிர் அல்ல.

சமுதாயத்தில் வெறும் 15% நபர்கள் கள்ளச் சாராயம் குடிப்பதை விட்டும் காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு டாஸ்மாக் மதுவிற்பனையை அரசே ஆரம்பித்ததின் விளைவு இன்று 85% அப்பாவி மக்கள் போதைக்கு அடிமையாகும் நிலையை ஏற்படுத்தி விட்டது. ஆம்! இன்னும் சில வருடங்களில் தமிழ்நாடு என்ற பெயர் மாறி குடிகார நாடு என்ற பெயரைப் பெற்று கின்னஸ் சாதனை படைக்கப்போகிறது நம் தமிழ்நாடு.

ஆட்சியாளர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கி, அதாவது தண்ணீரில்(?) மிதக்க வைத்து அவர்களின் குடும்பங்களைக் கண்ணீரில் மிதக்க வைப்பதுதான் சாதனையா? இந்த லட்சணத்தில் கண்ணீரற்ற தமிழகத்தை எங்கே போய் தேடுவது?

அரசே! தமிழ்நாடு உருப்பட வேண்டுமா? தமிழர்கள் மேன் மக்களாகத் திகழ வேண்டுமா? தமிழ் நாடு செழிக்க வேண்டுமா? டாஸ்மாக் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை நோக்கமாகக் கொள்ளாமல் உடனடியாக அவற்றை இழுத்து மூடி மதுவிலக்கை அமுலுக்குக் கொண்டு வர வேண்டும். அனைத்துவகைத் தீமைகளுக்கம், ஒழுக்கக் கேடுகளுக்கும், சிறுவர், சிறுமியருக்குப் புகைத்தலையும், குடியையும், இன்னும் அனைத்து ஒழுங்கீனங்களையும் கற்றுக் கொடுக்கும் பாடசாலையாகத் திகழும் சினிமா துறைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

மூட நம்பிக்கைகளையும், அனாச்சாரங்களையும் வளர்ப்பதில் முன்னணியில் இருப்பது சினிமா துறையே. மது வருவாயையும், அது கொண்டு கொடுக்கப்படும் இலவசங்களையும் ஒழித்துக் கட்டினால் மட்டுமே வருங்கால தமிழக மக்கள் வாழ்த்துவார்கள். இதே நிலை நீடித்தால் வருங்கால தமிழக மக்கள் கடுமையாகத் தூற்றும் நிலையே ஏற்படும். இது உறுதி.

Previous post:

Next post: