ஏகத்துவம் ஏட்டின் ஏளன நிலை

in 2009 செப்டம்பர்,எதிர் வாதம்,ததஜ,பிறை

ஏகத்துவம் ஏட்டின் ஏளன நிலை
அபூ அப்தில்லாஹ்
ஏகத்துவம் ஆகஸ்ட் 2009 இதழ் பக்கம் 39-ல் “மார்க்கம் மாறாத” என்ற கட்டுரையையும், பக்கம் 53-ல் “பிறை ஒரு விளக்கம்” என்ற அறிவிப்பையும் சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் அவர்களது இரட்டை வேட போக்கைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிப்பார்கள். அதே இதழ் பக்கம் 55-ல் “ஜாக்கின் இரட்டை வேடம்” என ஜாக் பிரிவினரை நையாண்டி செய்திருப்பதை விட நையாண்டிக்கு ஆளாகி நிற்கிறார்கள் இவர்கள்.
மார்க்கம் மாறாது என்று கூறுகிறவர்களுக்கு முதலில் மார்க்கம் எது? மார்க்கம் அல்லாதது எது? என்ற விபரம் கூட தெரியாத விவஸ்தை கெட்ட நிலையில் இருப்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறையை புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்வதை மார்க்கமாக(?)க் கொண்டிருப்பவர்கள் எந்த முகத்தோடு தமிழகத்தில் ஒரு பகுதியில் கண்ட பிறையை வேறு பகுதிகளிலுள்ளவர்கள் ஏற்கலாம் என்கின்றனர்? நபி(ஸல்) காலத்தில் அவ்வாறு நடந்ததாக ஆதாரம் இவர்களால் காட்ட முடியுமா?

அல்லது, நீங்கள் முடிவு செய்யும் நாளில் நோன்பு ஆரம்பம், நோன்புப் பெருநாள், ஹஜ்ஜு பெருநாள் என்ற ஹதீஃதில் காணப்படும் “நீங்கள்” அந்தந்தப் பகுதி மக்களையா? அல்லது மாநில மக்களையா? குறிக்கிறது. இல்லை ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையே குறிக்கிறது. இந்த அற்ப அறிவும் இல்லாதவர்கள் எப்படி தங்களை மெத்தப் படித்த மேதைகளாக எண்ணுகிறார்கள்?

மார்க்கம் மாறாது எனக் கூறிக் கொண்டு மார்க்கத்திற்கு உட்பட்ட சில செயல்களை அடுக்கிக் கொண்டு, பிறையைப் புறக் கண்ணால் பார்ப்பதும் மார்க்கம்தான் என அழுது வடிகிறவர்கள், சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து தொழும் மார்க்கத்தை(?) எந்த முகத்தோடு கைவிட்டு கடிகாரம் பார்;த்து தொழுகிறார்கள்? 22:27-ல் அல்லாஹ் குறிப்பிடும் மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் செல்லும் மார்க் கத்தை(?) எந்த முகத்தோடு கைவிட்டு விமானத்தில் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்கள்.

தூரத்து மரணச் செய்தியை காலம் தாழ்ந்து ஆள் நேரில் வந்து சொன்னதின் பின்னர் ஏற்ற மார்க்கத்தை(?) எந்த முகத்தோடு கைவிட்டு, தொலை தொடர்பு நவீன வசதியை ஏற்று செயல்படுகிறார்கள்? தங்களின் நொண்டி விளக்கங்களைக் கூறாமல், ஏற்கத்தக்க ஆதாரத்தை இவர்களால் தர முடியுமா?

அதிகபட்சம் நீண்ட முழுச் சூரிய கிரகணம் 2 மணி நேரமே நீடித்திருக்கும் நிலையை, சுமார் 708 மணி நேரம் நீடிக்கும் மாதத்திற்கு ஒப்பிட்டுக் கூறி தங்கள் ஆதரவாளர்களை ஏமாற்றியவர்களை கடைந்தெடுத்த மூடர்கள் என்பதா? அல்லது அறிந்த நிலையில் தங்களை நம்பியுள்ள அப்பாவிகளை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ள முற்படுகிறார்கள் என்பதா?

அன்று 1430 ஆண்டுகளுக்கு முன்னர் மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் சென்றது, சூரிய ஓட்டத்தைப் பார்த்து ஐங்கால தொழுகைகளைத் தொழுதது, தூரத்து மரணச் செய்தி காலம் தாழ்ந்து கிடைத்துத் தாமத மாகச் செயல்பட்டது, பிறையைப் புறக் கண்ணால் பார்த்து மாதம் பிறப்பதை அறிந்து கொண்டது இவை அனைத்தும் அன்றிருந்த மாற்று வழியே இல்லாத ஒரே வழிகள்தானே அல்லாமல், அவை மார்க்கத்திற்கு உட்பட்டவை அல்ல என்பதைப் புரிய முடியாத மூடர்களா இவர்கள்?

நாம் அந்நஜாத் ஆகஸ்ட் 2009 இதழ் பக்கம்; 21-ல் “புரோகிதர்களின் கேடுகெட்ட புத்தி!” என்று தெளிவு படுத்தி இருந்தோமே அது உண்மைதான் என ததஜவினர் ஆதாரம் தந்துள்ளனர். மத்ஹபினர் வெள்ளி ஜும்ஆவில், மார்க்கத்திற்கு உட்படாதவற்றை மார்க்கமாகச் சொல்லி கைத்தடி அல்லது வாளை கையில் பிடித்துக் கொண்டு தமிழ் மொழி மட்டுமே அறிந்த மக்களுக்கு அரபி மொழியில் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டு, குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், பிக்ஹ{ சட்டங்களையும் கற் பனை செய்து, 8+3=11 ரகாஅத்துகளைக் கொண்ட ரமழான் இரவுத் தொழுகையை 20+3:=23 என்று அதிகப்படுத்தி தராவீஹ் என இவர்களாகப் பெயரிட்டு அற்ப உலக ஆதாயம் அடைந்து (9:9,34, 31:6) தவறான வழியில் செல்கிறார்கள்.

அதே போல் ததஜ இயக்கத்தினரும் மார்க்கத்திற்கு உட்படாத பிறையைப் புறக் கண்ணால் பார்த்து தீர்மானிப்பதைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாக மத்ஹபுகள், தரீக்காக்கள் போலவே ததஜ இயக்கத்தையும், லாஜிக், பாலிசியையும் சுயமாகக் கற்பனை செய்து கொண்டு தவறான வழியில் செல்வதோடு, அவர்களை நம்பி கண்மூடிச் செல்லும் அவர்களது ஆதரவாளர்களையும் வழி கெடுக்கிறார்கள்.

அவர்கள் வாய் கிழியச் சொல்வது போல் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே மார்க்கமாகக் கொண்டிருந்தால், அவர்களது ததஜவுக்கு குர்ஆன், ஹதீஃதிலிருந்து மட்டுமே ஆதாரம் தரவேண்டும். நாங்கள் கூறும் “முஸ்லிமீன்”, “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” இரண்டிற்கும் 22:78, 41:33 மற்றும் சுமார் 35 இடங்களில் “முஸ்லிம்” என்ற பதப் பிரயோகத்தைக் காட்டியே வலி யுறுத்துகிறோம். இதே போல் ததஜவுக்கு அவர் கள் அல்குர்ஆனிலிருந்து ஆதாரம் காட்டத் தவறினால், அவர்கள் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றுகிறோம், கலீ.ஃபாக்கள், நபிதோழர்களின் சுய கருத்தையும் ஏற்க மாட்டோம் என்று கூறுவதில் ஆகாசப் பொய்யர்கள், அண்டப்புளுகர்கள் என்பதை தங்களின் சுய புத்தியை அவர்களிடம் அடகு வைக்காமல் தன்னம்பிக்கையுடன் சிந்திப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

உண்மையில் 1430 வருடங்களுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலம் பெற்று அறிவித்த மார்க்கத்தைத்தான் மாற்ற முடியாது. மார்க்கம் மாறாது என்பது உண்மையே. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி மூலம் ஏற்படும் மார்க்கத்திற்கு உட்படாதவ ற்றையும் மார்க்கமாகக் கொள்வதைவிட மடமை வாதம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இதஜவைச் சேர்ந்த ஒருவர் விஞ்ஞானப் படியே ரமழான் தலைப்பிறை 21.08.2009 வெள்ளி மாலையே கண்ணுக்குத் தெரியும். எனவே 22.08.2009 சனிக்கிழமை தான் நோன்பு ஆரம்பம் என்று சில வரைவுகளையும் காட்டி, வின் டிவியில் பேசியதாக வெளிநாடுகளி லிருந்தும் உள்நாட்டிலிருந்தும் சில சகோதரர்கள் கைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். இதஜ, ததஜ போன்றவர்களின் எண்ணம் பிறை-சந்திரனின் ஓட்டம் தங்கள் கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சந்திரனின் ரிமோட் கண்ட்ரோல் தங்கள் கண்களே என்ற அறிவீன சிந்தனையேயாகும். அல்லாஹ் அல்குர் ஆனில் சந்திரனின் ஓட்டம் தன் முழுக் கட்டுப் பாட்டில் இருப்பதாகக் கூறுகிறான். (10:5, 36:38,39) அல்லாஹ்வின் உண்மைச் சொல்லை ஏற்பதா? இச் சுயநலவாதிகளின் பொய்க் கூற்றை ஏற்பதா என்பதில் சுய சிந்தனையாளர்களுக்குத் தடுமாற்றம் இருக்காது.

விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் காலம் காட்டும் கருவிகள், துரித வாகனங்கள், தொலைத் தொடர்பு வசதி, கணினி கணக்கீட்டு முறை இவை எதுவும் இல்லாத காலகட்டத்தில், கடமைகளை நிறைவேற்றுவதில் முன்பின் ஆகத்தான் செய்தது. எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி, சோதிப்பதில்லை என அல்லாஹ் பல இடங்களில் வாக்களித்துள்ளான். அன்று தொலைவிலிருந்து சிரமப்பட்டு மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் செல்லவேண்டி இருந்தது (22:27) வெளியூரில் மரணமடைந்த கணவனின் மரணச் செய்தியை காலம் தாழ்ந்து ஆள் நேரில் வந்து சொன்னதன் பின்னரே மனைவி இத்தா இருக்கும் நிலை இருந்தது.

மழைக் காலங்களில் சூரியன் தெரியாததால் அனுமானத்தில் முன் பின்னாக தொழ நேரிட்டது. நோன்பு நோற்க, துறக்க நேரிட்டது. இதோ புகாரியில் 2-ம் பாகம் 1959 ஹதீஃத் கூறுவதைக் கேளுங்கள்.

அஸ்மா பின்த் அபீபக்கர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது.

ஆம்! அன்று காலத்தையும், மாதத்தையும், நேரத்தையும் மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாத நிலை என்பதை இந்த மேதாவிகள் மறுக்க முடியுமா? அல்லது அன்றுபோல் இன்றும் 22:27 இறைக்கட்டளைப் படி ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் சென்றால்தான் ஹஜ்ஜு நிறைவேறும் என இந்த மேதாவிகள் சொல்வார்களா? தொலைதூரத்தில் இடம் பெற்ற மரணச் செய்தி தொலைத் தொடர்பு வசதி மூலம் கிடைப்பதை மறுத்து அன்று போல் இன்றும் ஆள் நேரில் வந்து தகவல் சொன்ன பின்னரே அவரது மனைவி இத்தா இருக்க வேண்டும் என ஃபத்வா கொடுப்பார்களா?

அல்லது அன்று மேகமூட்டமாக இருந்த ஒரு நாளில் நபி(ஸல்) அவர்களும் தோழர் களும் நோன்பைத் துறந்த பின்னர் சூரியன் தென்பட்டிருக்கிறது. எனவே நான் அதே போன்ற மேகமூட்ட நாளில் சூரியன் மறையவில்லை என்பது துல்லியமாக நேரம் காட்டும் கருவி மூலம் அறிந்திருந்தும், சூரியன் மறையுமுன்னரே நோன்பைத் துறந்து விடுவேன். அதுவும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை-சுன்னத் என ஒரு அறிவீனன் சொன்னால் இந்த மேதாவிகள் ஏர்பார்களா?

ஆம்! மிகத் துல்லியமான கணினி கணக் கீட்டின்படி(தோராய கணிப்பின்படி அல்ல) சந்திரன் நேர்கோட்டைத் தாண்டி புதிய மாதம் பிறந்து விட்டது என மிகத் துல்லியமாக அறிந்த நிலையில் நாங்கள் பிறையை எங்கள் மண்டைக் கண்ணால் பார்த்தே நோன்பை ஆரம்பிப்போம் என்று கூறுவது ஒரு மிக மடமையான வாதம் என்பதை நடுநிலையாளர்கள் உணரவே செய்வார்கள்.

காலையில் பிறந்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்துவிட்டு, பிறை பிறந்துவிட்டது- மாதம் பிறந்து விட்டது. நாள் மாலை மஃறிபில் ஆரம்பிக்கிறது என்று அல்குர்ஆன் 2:238க்கு முரணாகக் கூறும் மதீயீனர்கள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே முதல் பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என உளறுவது ஆச்சரியமல்ல. அதனால்தான் 20.8.2009 வியாழன் 10.02 ரUT (12.02 பGMT) இந்திய நேரம் 6.32 ருவுக்குச் சரியான 5.28 க்கு கன்ஜங்ஷன் ஆனாலும் சூரியன் மறைவதற்கு முன்னரே சந்திரன் மறைந்து விடுவதால் அதை மண்டைக் கண்ணால் பார்க்க முடியாது. 21.8.2009 வெள்ளி மாலை தான் பிறையைப் பார்க்க முடியும். அதனால் சனி அன்றுதான் தலைப்பிறை என உளறிக் கொட்டியுள்ளனர்.

அன்று இந்த விபரங்கள் அனைத்தையும் தெரிந்த நிலையில்தான் நபி(ஸல்) அவர்கள் புறக்கண்ணால் பிறையைப் பார்க்கக் காத்தி ருந்தார்களா? அறிவீனர்களே சொல்லுங்கள். கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள உலக மக்கள் அனைவரும் ஒரே நாள் வெள்ளி யன்று 24 மணி நேரத்திற்குள் ஜும்ஆ தொழுது முடிப்பதை ஏற்கும் இவ்வறிவீனர்கள் எந்த முகத்தோடு ஒரே நாளான முதல் பிறை-தலைப் பிறை இரண்டு நாளும் வரலாம், மூன்று நாளும் வரலாம் என பிதற்றுகிறார்கள். அந்த அளவு மர மண்டைகளா இப்புரோகிதர்கள்? சொல்லுங்கள்!

வின் டிவியில் விஞ்ஞானத்தை இழுத்து பல வரைபடங்களைக் காட்டி பிறையை மண்டைக் கண்ணால் காண்பதைக் கூறி இருக்கிறாரே அல்லாமல், கணினியின் மிகமிகத் துல்லிய கணக்கீட்டின்படி ஷஃபான் மாதம் முடிந்து ரமழான் மாதம் ஆரம்பித்ததை அல்ல. உண்மையில் ரமழான் மாதம் 20.08.2009 வியாழனன்று ஆரம்பித்துவிட்டது. 2:185 இறைக் கட்டளைப்படி முஸ்லிம்கள் 20.08.2009 அன்று பிறையை புறக் கண்ணால் பார்க்காவிட்டாலும், அகக் கண்ணால் பார்த்து ரமழான் மாதத்தை அடைந்து விட்டார்கள். எனவே இறையச்ச முடைய முஸ்லிம்கள் 21.08.2009 வெள்ளியிலிருந்து நோன்பு நோற்க ஆரம்பித்திருப்பார்கள். இது உறுதி.

Previous post:

Next post: