அந்நஜாத்தின் நோக்கம் என்ன?

in 2011 ஆகஸ்ட்,தலையங்கம்

குர்ஆன் ஹதீஸில் அதாவது மார்க்கத்தில் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்க அந்நஜாத் எப்போது பார்த்தாலும் இடைத்தரகர்கள் என்றும் புரோகிதர்கள் என்றும், மதகுருமார்கள் என்றும், பூசாரிகள் என்றும் மவ்லவிகளையும், ஆலிம்களையும், மார்க்க அறிஞர்களையும் இழித்துப் பழித்து விமர்சிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

1986ல் அந்நஜாத்தை ஆரம்பிக்கும் போதே நாம் தெளிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்த முக்கிய அறிவிப்பு என்னவென்றால், குர்ஆன், ஹதீஸை அவற்றிலுள்ள மார்க்கச் சட்டங்களை எடுத்துச் சொல்ல அந்நஜாத்தை நாம் ஆரம்பிக்கவில்லை.

தங்களுக்குத் தெரிந்த மொழிகளிலுள்ள குர்ஆன் மொழியாக்கத்தையும், ஹதீஸ் மொழியாக்கங்களையும் தன்னம்பிக்கையோடு, சுய சிந்தனையோடு நேரடியாகப் படித்து அறிய முற்படுகிறவர்கள் நிச்சயமாக அவற்றை விளங்கிக் கொள்ள முடியும். அவற்றிற்கு மேலதிக விளக்கம் வேறு யாரும் கொடுக்க வேண்டியதில்லை.

ஆனால் மதகுருமார்கள் தங்களின் இவ்வுலக அற்ப ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு ஆதத்தின் சந்ததிகளை-மனித குலத்தை குர் ஆனையும், ஹதீஸ்களையும் நேரடியாகப் படித்து விளங்க முடியாமல் பலவிதமான தடைகளை முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மதகுருமார்கள் கற்பனையாக உண்டாக்கியுள்ள சுயநலத் தடைகளை விளக்கி, குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் அவர்கள் கொடுத்துள்ள தவறான மேல் விளக்கங்களைப் புரிய வைத்து மக்களை இம்மதகுருமார்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்கும் மிகமிகக் கடின முயற்சியையே அந்நஜாத் செய்து வருகிறது.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத் தூதர்கள் அனைவரும் கல்லில் நார் உரிக்கும் இக்கடின முயற்சியையே செய்து வந்தனர். ஆனால் அவர்களுக்கும், அந்நஜாத் செய்வரும் இப்பணிக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இறுதித் தூதருக்கு முன்னர் அருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல்கள், தவ்றாத் இன்ஜீல் போன்றவை முழுமை பெறாததால் அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. எனவே ஒவ்வொரு இறைத் தூதரும் நேர்வழியை அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலம் பெறும் கட்டாயம் இருந்தது. எனவே அவர்கள் அனைவரும் நபிமார்களாக இருந்தார்கள்.

அதற்கு மாறாக இறுதித் தூதருக்கு அருளப்பட்ட அல்குர்ஆன் முழுமைப் பெற்றதாகவும், அதில் மாறுதலுக்கு இடமே இல்லாத நிலையில் யுகம் அழியும் வரை அல்குர்ஆனே இறுதி வாழ்க்கை வழிகாட்டி நெறிநூல் என்று உறுதி செய்யப்பட்டுப் பதிந்து பாதுகாக்கப்பட்டதோடு, எந்த இறைவன் அல்குர்ஆனை அருளினானோ அந்த இறைவனாலேயே அது பாதுகாக்கப்பட்டு வருவதாலும் (பார்க்க 5:3, 3:19,85, 15:9) நபிமார்களின் வருகை முற்றுப் பெற்று, முன்பு நபிமார்கள் செய்த அதே பணியை முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் செய்யக் கடமைப்பட்ட அதே பணியையே (பார்க்க. 3:104,110, 9:71, 103:1-3) அந்நஜாத் செய்து வருகிறது.

இந்த 15ம் நூற்றாண்டில் எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் அந்நஜாத்தின் இத்தூய பணியை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தாஃகூத்களான இம்மதகுருமார்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கையுடன், சுய சிந்தனையுடன் 3:103 இறைக்கட்டளைப்படி ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதிலுள்ள முஹ்க்கமாத் வசனங்களில் நேரடியாகக் கூறப்பட்டவற்றிற்கு எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடக்க முன் வந்தால், அதிசயிக்கத்தக்க முறையில் 21:92, 23:52 இறைவாக்குகள் கூறும் சமுதாய ஒற்றுமையும் ஏற்பட்டுவிடும், 3:139 இறை வாக்குக் கூறுவது போல் தைரியத்தை இழக்காமலும், கவலை கொள்ளாமலும் உன்னதமான சமுதாயமாக அமைவதற்குரிய முஃமின்களாக ஆகும் வாய்ப்பு எளிதாக அமையும்.

அதுமட்டுமல்ல, அப்படி முழுமையாக ஈமான் கொண்டு, 2:186ல் அல்லாஹ் சொல்வது போல் அல்லாஹ் இந்த மவ்லவி, ஆலிம், அல்லாமா என பெருமை பேசுகிறவர்களை விட நமக்கு மிகமிக நெருக்கமாக இருக்கிறான், எனவே அவனையே முற்றிலுமாக நம்பி எஜமானனாகிய அவனுக்கும் அடிமைகளாகிய நமக்கும் இடையில் 50:16, 56:85 இறைக் கட்டளைகளை நிராகரித்து இந்த மதகுருமார்களை இடைத்தரகர்களாகப் புகுத்தாமல், அல்லாஹ் கட்டளையிட்டபடி, அல்லாஹ் ஏற்கும் நற்செயல்களில் ஈடுபட்டால் 24:55ல் அல்லாஹ் உறுதி கூறுவதுபோல், இஸ்லாமிய சமுதாயம் மீண்டும் எழுச்சி பெறும், இறையாட்சி மீண்டும் அமையும்.

எனவே 1986லிருந்து அந்நஜாத் தாஃகூத்களான மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்கம் கற்ற மேதைகள் என பெருமை பேசும் மதகுருமார்களிடமிருந்து மனித குலத்தை மீட்டெடுக்கவே அயராது பாடுபட்டு வருகிறது. இப்புனிதப் பணியை அந்நஜாத் விடாது தொடர்ந்து செய்யும் கட்டாயத்தில் இருக்கிறது.

எனவே அந்நஜாத் எவரது தூற்றலையும், போற்றலையும் பொருட்படுத்தாது. இறைவனது கட்டளைப்படி, நபிமார்களின் வழி முறைப்படி மதகுருமார்களான புரோகிதர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து மனித குலத்தை அவர்களின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்கவே தொடர்ந்து பாடுபடும் என உறுதியாக அறிவிக்கிறோம்.

இத்தூயப் பணியின் அத்தியாவசியத்தை உணர்ந்துள்ள சகோதரரர்கள் சகோதரிகள் அந்நஜாத்தின் நிலைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் தங்களால் முடிந்த நிதி உதவி முதற்கொண்டு அனைத்து வகை ஒத்துழைப்பைத் தர அன்புடன் வேண்டுகிறோம். அந்நஜாத் எடுத்து வைக்கும் குர்ஆன், ஹதீஸ் கருத்துக்களை மக்களிடையே பரப்ப முன்வர வேண்டுகிறோம்.

அடுத்து, மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில், குர்ஆன், ஹதீஸுக்கு முரணில்லாத நிலையில் மக்கள் சேவையையும் 1986லிருந்து பத்திரிகை விளம்பரம் இல்லாமல், பேர் புகழை நோக்கமாகக் கொள்ளாமல், அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்து வருகிறோம்.

ஏழை எளிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, கல்வி, மருத்துவம், தொழில், கடன், திருமணம் போன்றவற்றிற்கு மனவளமும், பொருள் வளமும் நிறைந்த செல்வந்தர்களிடமிருந்து ஜகாத்தாக, சதக்காவாகப் பெற்று அளித்து வருகிறோம்; வருடா வருடம் வரவு, செலவு கணக்கை நிதி அளித்த வர்களுக்கு அனுப்புவதோடு, தர்கா, தரீக்கா, மத்ஹபு, இயக்கம் என பாகுபாடு பார்க்காமல், தமிழகமெங்கும் உண்மையான தேவையுடையோரைக் கண்டறிந்து அவர்களுக்கு அந்தியிலி ருந்து வழங்குகிறோம். “”வல் முஅல்லஃபதிகுலூப்” என்ற அடிப்படையில் ஒரு பகுதியை முஸ்லிம் அல்லாத ஏழைகளுக்கும் அளித்து வருகிறோம். மக்கள் அளிக்கும் நிதியிலிருந்து எங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள சல்லிக் காசும் செலவிட மாட்டோம். பணம் பெறுவோரைப் படம் பிடித்துப் போட்டு அவர்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்க மாட்டோம்.

இந்த எமது செயல்பாடுகள் மார்க்கத்திற்கு உட்பட்டவை, முறையானவை சரியானவை என ஏற்பவர்கள் தங்கள் ஜகாத், சதக்கா நிதியிலிருந்து தாராளமாகத் தந்து ஏழை எளிய மக்களின் துயர் போக்கி அல்லாஹ்வின் பொருத்தம் பெற அன்புடன் அழைக்கிறோம். அல்லாஹ் அனைத்தையும் பார்ப்பவனாக இருக்கிறான். வஸ்ஸலாம்.

Previous post:

Next post: