நபி வழியில் நம் தொழுகை

in 1989 ஜூன்,இறைவணக்கம்,பொதுவானவை

தொடர் :30                                         அபூ அப்திர்ரஹ்மான்

“நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாயிருக்கிறான்.” (3:31)

“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்பின் ஹுவைரிங்(ரழி), முஸ்லிம்)

சென்ற மே “89 இதழில் தொழுகையின் இறுதியில் எவ்வாறு, எத்தனை முறை ஸலாம் கூற வேண்டும்? ஒருமுறை மட்டும் ஸலாம் கூறுவதன் நிலை, ஸலாம் யாருக்கு சொல்லப் படுகிறது? பர்ளூ தொழுது ஸலாம் கொடுத்தவுடன் ஓத வேண்டியவை, பர்ளான தொழுகைக்குப் பின் ஓதப்படும் தஸ்பீஹ்களின் பல்வேறு முறைகள் ஆகியவை பற்றிய விபரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் அதற்கு அடுத்துள்ள நிலைகளைப் பார்ப்போம்.

பர்ளான தொழுகைகளுக்குப் பின் ஓதப்படும் தஸ்பீஹ்களின் பல்வேறு முறைகள் எனும் பகுதியின் தொடர்:

* ஒருமுறை ஏழை சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, செல்வந்தர்கள் தம்மிடமுள்ள செல்வத்தின் பயனாக எங்களால் செய்ய இயலாத பல்வகை நல்ல அமல்களைச் செய்து, அதிகமான நன்மைகளை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். நாங்கள் என்ன செய்வது? என்று கேட்க, அதற்கு நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். நீங்கள் தொழுது விட்டால் “சப்ஹானல்லாஹ்” என்று 33 முறையும், “அல்ஹம்துலில்லாஹ்” என்று 33 முறையும், அல்லாஹு அக்பர்” என்று 34 முறையும், ஓதிவிட்டு (அத்துடன்) “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று 10 முறையும் ஓதுவீர்களாயின், நிச்சயமாக இவற்றின் மூலம் நீங்கள் (நன்மையால்) உங்களை முந்தியவர்களை அடைந்து விடலாம். மேலும் உங்களுக்குப் பின்னுள்ளோர் உங்களை முந்த முடியாது என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (இப்னு அப்பாஸ்(ரழி), திர்மிதீ.

ஸுஜூதுஸ்ஸஹ்வு – மறதிக்கான ஸஜ்தாக்கள்.

ஸுஜூதுஸ்ஸஹ்வு – என்றால் என்ன?

நாம் தொழும்போது, மறதியாக நிகழும் கூடுதல், குறையுதல் முதலியவற்றை நிவர்த்திச் செய்வதற்காக தொழுகையின் இறுதியில் செய்யப்படும் இரு ஸஜ்தாக்களாகும்.

ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்வதற்கு இரு முறைகள் உள்ளன.

1. தொழுகையின் இறுதியில் ஸலாம் கொடுப்பதற்கு முன் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கொடுத்தல்

2. தொழுகையின் இறுதியில் ஒரு ஸலாம் கொடுத்துவிட்டு மின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு மீண்டும் ஸலாம் கொடுத்தல்.

இவ்விரு முறைகளில் எதனையும் எடுத்து அமல் செய்து கொள்ளலாம். ஏனெனில் இவ்விரு முறைகளுக்குமே ஸஹீஹான ஹதீஸ்கள் ஆதாரமாயுள்ளன.

“ஸுஜூதுஸ்ஸஹ்ஷ்” செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள்:

(1)- முதல் இருப்பில் (நடு இருப்பில்) உட்காராமல் எழுந்துவிட்டால் (ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்.

* ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தாம் இரண்டாவது ரகாஅத்திலிருந்து உட்காராமல் எழுந்து விட்டார்கள். அவர்களுடன்  (சேர்த்து) மக்களும் எழும்பி விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் தருவாயில், மக்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்கள் தாம் ஸலாம் கொடுப்பதற்கு முன் தக்பீர் சொல்லி, 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.

(2)    தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு விட்டால்

எது சரியானது என்ற முடிவுக்கு வந்து அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு பின்னர் அதற்காக ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்.

*உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் தோன்றி விட்டால், எது சரியானது என்ற முடிவுக்கு வந்து அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு, பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)

(3) எது சரியானது? என்பதை தம்மால் ஊர்ஜிதம் செய்ய இயலாவிடில்.

சந்தேகத்தை அகற்றிவிட்டு, தமக்கு ஊர்ஜிதமானது எதுவோ அதன்படி அமல் செய்துவிட்டு, பின்னர் “ஸுஜூதுஸ்ஸஹ்வு” செய்து கொள்ள வேண்டும்.

* உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு நாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா? என்பது அவருக்குப் புலப்படவில்லை என்றால், உடனே அவர் சந்தேகத்தை அகற்றிவிட்டு நமக்கு உறுதியானதன்படி, தொழுது முடித்து, பின்னர் தாம் ஸலாம் கொடுக்குமுன், 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக!

அவர் 5 ரகாஅத்து தொழுதவராகிவிட்டால், அவருடைய இவ்விரு ஸஜ்தாக்களும் ஒரு ரகாஅத்துடைய நிலையில் ஆகி(அவருடைய தொழுகை அவருக்கு இரட்டையாகி விடுகிறது) (அவ்வாறின்றி) அவர் முழுமையாக நான்கு ரகாஅத்துக்கள் தொழுதவராகிவிட்டால், (நாம் உபரியாகச் செய்துள்ள) 2 ஸஜ்தாக்களும் ஷைத்தானின் தோல்விககு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்து விடுகின்றன. (அபூ ஸயீதில் குத்ரீ(ரழி), முஸ்லிம், அஹ்மத்)

*உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏ:ற்பட்டு தாம் தொழுதது ஒரு ரகாஅத்தா, அல்லது இரண்டா? என்பது தமக்கு புலப்படாவிடில் (இந்நிலையில் அவர் ஒன்று தொழுதது நமக்கு உறுதியாயிருப்பதால்) அதை ஒன்றுதான் என்று ஊர்ஜிதம் செய்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறே தாம் தொழுதது (இரண்டா, அல்லது மூன்றா? என்பது புரியாவிட்டால், (மேற்கண்டவாறு) 2 தான் என்று ஊர்ஜிதம் செய்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா? என்பது புரியாவிட்டால், மூன்று தான் என்று ஊர்ஜிதம் செய்து அதன்படி அமல் செய்துவிட்டு, பின்னர் தாம் ஸலாம் கொடுப்பதற்கு முன், 3 ஸஜ்தாக்கள் செய்துகொள்ள வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துர்ரஹ்மான்பின் அவ்ஃப்(ரழி), திர்மிதீ)

இவ்வறிவிப்பு இதற்கு முன்னால் உள்ள அறிவிப்புக்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுகிறோம். ஏனெனில் முந்தைய அறிவிப்பில் தமக்கு சந்தேகமானதை விட்டுவிட்டு, உறுதியானதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் அதற்கேற்ப, உறுதியானது இன்னதென்பதை இவ்வாறு தான்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் ஒன்றா, இரண்டா? அல்லது இரண்டா, மூன்றா? அல்லது மூன்றா, நான்ா? என்பனவற்றில் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு சற்று தடுமாறும் நிலை ஏற்பட்டுவிட்டால், அதிகபட்சத்தை விட்டுவிட்டு, குறைந்தபட்சத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.

(4) ஒருவருக்கு சந்தேகம் தமது தொழுகையின் மத்தியில் ஏற்படாமல், குறிப்பாக தொழுகையின் கடைசி இருப்பில் இருக்கும்போது, தாம் எத்தனை ரகாஅத்துக்கள் தொழுதுள்ளோம் என்பதே புரியாதவராகிவிட்டால், அதற்காக அவர் (கடைசி இருப்பில்) தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கொடுக்க வேண்டும்.

* உங்களில் ஒருவர் தாம் தொழ ஆரம்பித்துவிட்டால் ஷைத்தான் (அவரிடம்) வந்து, (பல சிந்தனைகளை உண்டு பண்ணிவிட்டு) அவரைக் குழப்புவான். (அதனால்) அவர் தாம் எவ்வளவு தொழுதுள்ளார் என்பதை புலப்படாதவராகி வார். உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டு விட்டால், உடனே அவர்தானம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ ஹுரைரா(ரழி), பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு, பூகாரீ, முஸ்லிம்)

* உங்களில் ஒருவருக்கு மறதி ஏற்பட்டு, தாம் அதிகமாக தொழுதுள்ளாரா? அல்லது குறைவாக தொழுதுள்ளாரா?  என்பதும் புரியவில்லையாயின், அப்போது அவர் தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கொடுப்பாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (யஹ்யாபின் அப_சுதீர்(ரழி), தாருகுத்னீ).

மேற்காணும் இரண்டு அறிவிப்புளிலும் காணப்படும் பரிகார முறை அனைவருக்கும் பொதுவான முறை அல்ல என்பதை நினைவில் கொள்வோமாக! இது ஒருவருக்கு நமது தொழுகையின் மத்தியில் எல்லாம் ஏற்படாமல், நாம் தொழுது முடிக்கும் தருவாயில், தொழுகையின் கடைசி இருப்பில் உட்கார்ந்திருக்கும்போது திடீரென்று அவருக்குத் தோன்றும் சந்தேகமாகும். அதுவும் இதற்கு முன் உள்ள அறிவிப்புகளில் காணப்பட்டதைப் போன்றுள்ள சாதாரணமான சந்தேகம் அல்ல. அவற்றைப் பார்க்கிலும் கடுமையான வகையில் பொதுவாக நாம் தொழுதவை இத்தனை ரகாஅத்துகள்தான் என்றோ, கூட்டித் தொழுதுள்ளோமா, அல்லது குறைத்துத் தொழுதுள்ளோமா? என்பதே புரியாத நிலையில், அதுவும் கடைசி இருப்பில் ஸலாம் கொடுப்பதற்கு தயார் நிலையில் இருக்கும்போது தோன்றும், மிகச் சிக்கலான சந்தேகமாகும். இத்தகைய சிக்கலான சந்தேகத்தை உடையவர்தான் மேற்காணும் இரண்டு ஹதீஸ்களிலும் கூறப்பட்டவாறு, தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கொடுத்து, தமது தொழுகையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் அன்றி, வேறு எவரும் அவ்வாறு செய்து கொள்ளக் கூடாது.

(5) ஒருவர் தாம் தொழ வேண்டிய ரகாஅத்துகளை விட ஒரு ரகாஅத் அதிகமாக தொழுது விட்டால் அப்போதும் ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்.

* ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரை 5 ரகாஅத்தாக தொழ வைத்துவிட்டார்கள். (அப்போது அவர்களை நோக்கி) தொழுகையில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், அப்படி என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நீங்கள் 6 ரகாஅத்துகள் தொழவைத்து விட்டீர்கள் என்று ஒருவர் கூறினார். உடனே தாம் ஸலாம் கொடுத்துவிட்டு பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கொடுத்தார்கள் என்று இம்ரான்பின் ஹுஸைன்(ரழி) அவர்கள் தமக்கு அறிவித்ததாக கூறினார்க்ள.

ஆகவே, புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் காணப்படும் இந்த ஸஹீஹான ஹதீஸின்படி நபி(ஸல்) அவர்களுக்கு, தாம் தொழுது முடித்த பின்னர், ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, அந்த ஸுஜூதுஸ்ஸஹ்வு அவர்கள் முதலில் ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு செய்வார்களேயானால், அவ்வாறு அவர்கள் 2 ஸஜ்தாக்கள் செய்தவுடன் ஸலாம் கொடுத்துவிடுவார்கள் என்று மட்டுமே உள்ளது.

இவ்வறிவிப்பின்படி, முதலில் ஸலாம் கொடுத்துவிட்டு பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்பவர் அவ்வாறு அவர் ஸஜ்தாக்கள் செய்து விட்டு, எழுந்து உட்கார்ந்தவுடன் ஸலாம் கொடுத்து விடுவது ஆகுமானதாயிருப்பினும், அவர் “அத்தஹிய்யாத்” ஓதிவிட்டு ஸலாம் கொடுப்பதே மேலானதாகும்.

ஏனெனில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்னுமஸ்ஊத்(ரழி), அவர்கள் வாயிலாக அபூதாவூத், நஸயீ ஆகியவற்றிலும், முகீரா(ரழி) வாயிலாக பைஹகீயில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் பலகீனமானவையாயிருப்பினும், “நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்த பின்னர், “அத்தஹிய்யாத்” ஓதிய பின்னரே ஸலாம் கொடுப்பார்கள்” என்பதற்கான ஸஹீஹான அறிவிப்பொன்று இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாகவே “மூஸன்னஃப் இப்னுஷைபா”வில் இடம் பெற்றிருப்பதாக ஹாபிழ் ஸலாஹுத்தீனில் அலாயீ(ரஹ்) அவர்கள் கூறுவதாக ஹாபிழ் இப்னு ஹஜ்ர்(ரஹ்) அவர்கள் தமது ஃபத்ஹுல்பாரீயில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக ஸஹீஹ் முஸ்லிமீல் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் மறதியாக 5 ரகாஅத்து தொழ வைத்துவிட்டபோது, (தாம் கிப்லாவின் பக்கம்) திரும்பி 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கொடுத்தார்கள் என்றும் உள்ளது.

ஆகவே, நபி(ஸல்) அவர்கள் தாம் மறதியாக 5 ரகாஅத்து தொழ வைத்துவிட்ட நிலையில் ஸுஜூதுஸ்ஸஹ்வுக்குரிய இருமுறைகளில் ஒரு முறைப்படி ஒரு சந்தர்ப்பத்திலும், மற்றோர் முறைப்படி மறு சந்தர்ப்பத்திலும் செய்துள்ளார்கள் என்பதிலிருந்து, யாரும் இரு முறைகளில் ஒன்றின்படி அமல் செய்து கொள்ளலாம் என்பதைத் தெளிவாக அறிகிறோம்.

மேற்காணும் ஸஹீஹான அறிவிப்பில் நபி(ஸல்) அவர்களிடத்தில் நீங்கள் 5 ரகாஅத்துகள் தொழுது விட்டீர்கள் என்று கூறியவுடன், உடனே அவர்கள் அதற்காக ஸுஜூதுஸ்ஸஹ்வு மட்டும் செய்தார்கள் என்பதாக காணுகிறோம்.

ஆனால் 5 ரகாஅத்துகள் தொழுதவர் பற்றி, மத்ஹபுவாதிகளிடத்தில் என்ன முடிவு தெரியுமா? 5 ரகாஅத்து தொழுதவர் நான்காவது ரகாஅத்தில் இருக்க வேண்டிய கடைசி இருப்பு இருந்திருந்தால், மேலும் ஒரு ரகாஅத்தை அத்துடுன் இணைத்து 6 ரகாஅத்துகளாக தொழுது முடிக்க வேண்டும். அப்போது 4 பர்ளாகவும், உபரியாகத் தொழுதுள்ள 2 நபிலாகவுமாகிவிடும். அவர் கடைசி இருப்பில் உட்காராது 5 ரகாஅத்து தொழுதிருந்தால் அவர் தமது தொழுகையை மீட்டி தொழுதாக வேண்டும் என்பதாகும். – இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Previous post:

Next post: