ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2013 ஜூன்

MTM. முஜீபுதீன், இலங்கை
மே 2013 தொடர்ச்சி …

நாங்கள் ஒரு நாள் அபூபக்ர்(ரழி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூபக்ர் அவர்களிடம் “”அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது தலையை மூடியவண்ணம், நம்மிடம் வருகை தராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். அதற்கு அபூபக்ர்(ரழி) அவர்கள், “”என் தந்தையும் என் தாயும்(நபி) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச் செய்திருக்கிறது” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து (இல்லத்திற்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டவுடன் அவர்கள் உள்ளே நுழைந்து, அபூபக்ர்(ரழி) அவர்களிடம், “”உங்களுடன் இருப்பவர்களை வெளியே போகச் சொல்லுங்கள். (உங்களிடம்) ஒரு ரகசியம் பேச வேண்டும்.” என்று கூறினார்கள். அதற்கு, அபூபக்கர் அவர்கள் (இல்லத்திற்குள் இருக்கும்) இவர்கள் உங்களுடைய (துணைவியின்) குடும்பத்தினர் தான். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “”(ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது” என்று கூறினார்கள்.

அப்போது அபூபக்கர் அவர்கள், “”தங்களுடன் நானும் வர விரும்புகின்றேன்! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். “”சரி(நீங்களும் வாருங்கள்)” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். “”அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த எனது இரு வாகன(ஒட்டக)ங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “”விலைக்குத் தான் (இதை நான் எடுத்துக் கொள்வேன்)” என்று கூறினார்கள். ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்.

அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளை வெகு விரைவாக நாங்கள் செய்து முடித்தோம். ஒரு தோல் பையில் பயண உணவை நாங்கள் தயார் செய்து வைத்தோம். அப்போது அபூ பக்ரின் மகள்(என் சகோதரி) அஸ்மா தனது இடுப்புக் கச்சையிலிருந்து ஒரு துண்டை(க் கிழித்து) அதனை அந்தப் பையின் வாய் மீது வைத்துக் கட்டினார்கள். இதனால் தான் அவர்களுக்கு “”கச்சுடையாள்” என்று பெயர் வந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அபூபக்கர்(ரழி) அவர்களும் (பயணம் புறப்பட்டு) “”ஃதவ்ர்” மலையில் உள்ள ஒரு குகைக்கு வந்து சேர்ந்து அதில் மூன்று நாட்கள் ஒளித்திருந்தார்கள். (அந்த மூன்று நாட்களில்) அவர்கள் இருவருடன் அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் வந்து தங்கியிருப்பார்.

அவர் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். பின்னிரவு (சஹர்) நேரத்தில் அவர்கள் இருவரையும் விட்டுப் புறப்பட்டு மக்கா குறைஷிகளுடன் இரவு தங்கியிருந்தவர் போல அவர்களுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவரைப் பற்றி (குறைஷிகளால் செய்யப்படும்) சூழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு இருள் சேரும் நேரத்தில் அவர்கள் இருவரிடமும் அந்தச் செய்தியைக் கொண்டு வந்து விடுவார்.

அவர்கள் இருவருக்காக அபூபக்ர்(ரழி) அவர்களின் (முன்னாள்) அடிமை அமீர் பின் ஃபுஹைரா (அபூபக்ர் அவர்களின்) மந்தையிலிருந்து ஒரு பால் தரும் ஆட்டை மேய்த்து வருவார். இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிட மும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழித்து விடுவார்கள். அது புத்தம் புதிய, அடர்த்தி அகட்டப்பட்டப் பாலாகும். அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருட்டு இருக்கும் போதே விரட்டிச் சென்று விடுவார். இதை (அவர்கள் இருவரும் அந்தக் குகையில் தங்கி யிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார்.

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும், அபூபக்ர்(ரழி) அவர்களும் பனூ அப்து பின் அதீ குலத்தில் “”பனூ அத்தீல்” என்னும் கிளையைச் சேர்ந்த கை தேர்ந்த ஒருவரை பயண வழிகாட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினர். அவர் ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்னும் குலத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். (ஆனாலும்) அவர் குறஷி´ இறை மறுப்பாளர்களின் மத்தியில் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர்(ரழி) அவர்களும் அவரை நம்பி, தங்களது இரு வாகன(ஒட்டக)ங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப் பின் “”ஃதவ்ர்” குகைக்கு வந்து விடுமாறு வாக்குறுதி வாங்கியிருந்தனர். மூன்றாம் (நாள்) அதிகாலையில் அந்த இரு வாகனங்களுடன் (அவர் ஃதவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார்) இவர்கள் இருவருடன் ஆமிர் பின் ஃபுஹைராவும் பயண வழிகாட்டியாகச் சென்றனர். பயண வழிகாட்டி அவர்களைக் கடற்கரைப் பாதையில் அழைத்துச் சென்றார். (புகாரி:3905)

தான் பிறந்த நாட்டைத் துறந்து ஹிஜ்ரத் செய்த வேளையிலும் குறைஷி நிராகரிப்பாளர்கள் அவர்களைச் சும்மா விடவில்லை. அவர்களைக் கொலை செய்வதற்குத் துரத்தி வந்தனர். அவர்களின் உயிருக்கு விலை பேசினர். அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்து அல்லாஹ்வின் மார்க்கத்தை இறுதித்தூதர் முஹம் மது நபி(ஸல்) அவர்கள் மூலாக நிறைவு செய்தான். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மூலம் மதீனாவை அடையும் வரை நிகழ்ந்த சோதனைகளையும், சம்பவங்களையும் அவதானியுங்கள்.

ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி(ஸல்) அவர்களும் “”ஃதவ்ர்” என்னும் குகையில் மூன்று நாள் ஒளிந்திருந்தார்கள். அவர்கள் இருவரையும் தேடி வந்த எதிரிகள் அவர்கள் நிற்கும் இடத்தையும் அடைந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரழி) அவர்கள் கூறிய தாவது:

நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஃதவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், “”(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “”எந்த இரு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி நீங்ள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!” என்று கேட்டார்கள். (புகாரி: 3653)

அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் உதவியுடன் பயணிக்கும்போது நிகழ்ந்த இன்னும் ஒரு நிகழ்ச்சியை அவதானியுங்கள். சுராகா பின் (மாலிக் பின்) ஜுஃஸும்(ரழி) அவர்கள் கூறியதாவது:

குறைஷி´ குலத்தின் தூதுவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களையும், அபூபக்ர்(ரழி) அவர்களையும் கொலை செய்பவருக்கு, அல்லது கைது செய்து வருபவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் (நூறு ஒட்டகம் என்று) பரிசை நிர்ணயம் செய்தவர்ளாக எங்களிடம் வந்தனர்.” (புகாரி: 3906)
இந்த ஹதீஸ் பின்வருமாறு சுருக்கமாக இடம் பெறுகின்றது.

பராஉ(ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராகா பின் மாலிக் பின் ஜுஃஷிம் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின் தொடர்ந்து சென்றார். நபி(ஸல்) அவருக்கெதிராக (அவரைச் செயழலிழக்கச் செய்யும்படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரது குதிரை அவருட னேயே பூமியில் அழுந்தி விட்டது. சுராகா (நபியவர்களிடமே), “”எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னார். அவ்வாறே நபி(ஸல்) அவருக்காக பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் தாகத்துடன் இருக்க, ஓர் ஆட்டிடையன் அவ்வழியே சென்றான். உடனே, அபூபக்கர்(ரழி) அவர்கள் ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிது பாலை அதில் கறந்து அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அபூபக்கர் அவர்கள் திருப்தி அடையும் வரை நபி(ஸல்) அவர்கள் (அதிலிருந்து) அருந்தினார்கள். ( புகாரி: 3908)

இதே ஹதீஃத் மிக விரிவாக புகாரி: 2439, 3615, 3652, 3906ம் காணப்படுகின்றது. 3906ம் ஹதீஸின் தொடர்ச்சியாக உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ´ரோம் நாட்டிலிருந்து (வியாபாரத்தை முடித்துக் கொண்டு) திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம்களின் வணிகக் குழுவி லிருந்த ஸுபைர் பின் அவ்வாம்(ரழி) அவர்களை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது ஸுபைர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கும், அபூபக்ர்(ரழி) அவர்களுக்கும் வெண்ணிற ஆடைகளைப் போர்த்தினார்கள். மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் (மதீனாவின் புறநகர்ப் பகுதியிலிருந்த கருங்கற்கள் நிறைந்த) “”ஹர்ரா” என்னும் இடத்திற்கு வந்து நண்பகலின் வெப்பம் அவர்களைத் திருப்பியனுப்பும் வரையில் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு நாள் நீண்ட நேரம் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்து விட்டு (ஊருக்குள்) அவர்கள் திரும்பி தமது வீட்டுக்குள் ஒதுங்கிய போது யூதர்களில் ஒருவர் அவர்களின் கோட்டைகளில் ஒன் றின் மீது எதையோ பார்ப்பதற்காக ஏறியிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் வெண்ணிற ஆடையில், கானல் நீர் விலக வருவதைப் பார்த்தார். இந்த யூதரால்(தம்மைக்) கட்டுப்படுத்த இயலாமல் உரத்த குரலில், “”அரபுக் குழாமே! இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய நாயகர்” என்று கூவினார்.

உடனே, முஸ்லிம்கள் (நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்புடன் வரவேற்பதற்காக) ஆயுதங்களை நோக்கி கிளர்ந்தெழுந்தனர். அந்த (கருங்கற்கள் நிறைந்த) ஹர்ராவின் பரப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி (“”குபா”வில் உள்ள) பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத் தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கியிருந்தார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூபக்ர்(ரழி) அவர்கள் எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மெளனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது. அங்கு வந்திருந்த நபி(ஸல்) அவர்களைப் பார்த்திராத, அன்ஸாரிகளில் சிலர் (அபூபக்ர் ரழி அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீது வெயில் பட்டபோது உடனே அபூ பக்ர்(ரழி) அவர்கள் சென்று தமது துண்டினால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீது நிழலிட்டார்கள். அப்போது தான் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து “”இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை” நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாட்களில்) அந்தப் பள்ளியில் தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தனது வாகனத்திலேறிப் பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக(அவர்களது) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டுப் படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது சஅத் பின் ஸுராரா(ரழி) அவர்களின் பொறுப்பிலிருந்த சஹ்ல், சுஹைல் என்ற அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்த மான பேரீச்சம்பழம் (உலரவைக்கப்படும் களமாக) இருந்தது. அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “”இன்ஷா அல்லாஹ் இதுதான் (நமது) தங்குமிடம்” என்று கூறினார்கள்.

பிறகு அந்த இரு சிறுவர்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து அந்தக் களத்தைப் பள்ளி வாயில் கட்டுவதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், “”இல்லை, அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடம் இருந்து அதை அன்பளிப்பாக பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள். (அப்போது) “”இந்தச் சுமை கைபரின் சுமையல்ல. இது எங்களது இறைவனிடம் (சேமித்து வைக்கப் படும்) நீடித்த நன்மையும் (கைபரின் சுமையை விடப்) பரிசுத்தமானதுமாகும்” என்று (“”ரஜ்ஸ்” எனும் யாப்பு வகைப் பாடலைப் பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள். மேலும், “”இறைவா (உண் மையான) பலன் மறுமையின் பலனே, ஆகவே (மறுமைப் பலனுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் கருணையன்பு காட்டுவாயாக” என்று கூறினார்கள்.

அப்போது முஸ்லிம்களில் ஒருவரின் கவிதையை நபியவர்கள் பாடிக் காட்டினார்கள். அவரது பெயர் என்னிடம் கூறப்படவில்லை (என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ´ஹாப்(ரஹ்) அவர்கள் கூறிவிட்டுத் தொடர்ந்து இப்னு ´ஹாப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இப்பாடல் (வரி)களைத் தவிர ஒரு முழுமையான கவிதையின் பாடலைப் பாடிய தாக எனக்கு ஹதீஃத்களில் (செய்தி) எட்டவில்லை. (புகாரி: 3906)

இதே ஹதீஸ் புகாரி : 3911ல் விரிவாகக் காணப்படுகிறது. அவதானியுங்கள்.

நபி(ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையும் சோதனைகளும் !
ஒவ்வொரு இறைத் தூதர்களும் இறைநெறி நூலை முன்வைத்து, “”எல்லா உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவன் ஒருவனே” என்றே போதித்தனர். ஏக இறைவனின் இறை நெறி நூலை விசுவாசித்து அதன்படி நடப்பதன் மூலமே இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற முடியும் என்றனர். பல தெய்வக் கோட்பாடுகளை முற்றாக மறுத்தனர். அவ்வழிகள் மறுமையில் நரகத்தை அடையவே வழிகாட்டும் என்றனர். உலகில் தோன்றிய ஆதம் நபி முதல் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை ஏக இறைவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் எனப் போதித்தனர். மனித சமுதாயத்தை நரகத்திற்கு இட்டுச் செல்ல வழிகாட்டும் எதிரிகள் ஷைத்தான்களே ஆவர். பல தெய்வக் கொள்கைகளும், இறைவன் இல்லை என்ற நாத்தீகக் கொள்கைகளும் மனிதனை நரகிற்குக் கொண்டு செல்லவே வழி காட்டும். மூடக் கொள்கைகளும், மடமைகளும், மனிதனை மனிதன் இழிவுப்படுத்தும்; பெருமை பிடித்த மனிதனை அடிமைப்படுத்தும் கொள்கைகளும், தீமையையும், நரகையுமே தேடித்தரும். இவற்றிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவே இறைவன் காலத்திற்குக் காலம் தொடர்ந்து இறைத் தூதர்களை அனுப்பி வைத்தான்.

அன்று மனிதனை நரகிற்குக் கொண்டு செல்லும் இருளில் இருந்து மீட்ட அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி இறைத் தூதராக அனுப்பி வைத்தான். அவர் சத்திய இறைநெறி நூலையே போதித்தார்கள். இறைத் தூதர்களையும், பெரியார்களையும், தலைவர்களையும் இறைவனாக வணங்குவது பாவமான செயல்கள் என போதனை செய்தார்கள். இறைத் தூதர்களின் உண்மை வரலாறுகளை அல்குர்ஆன் மூலம் வெளிப்படுத்தினார்கள். இதன் காரணமாகவே நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் துன்புறுத்தப்பட்டனர். ஆனால் அல்குர்ஆனின் ஒளி மக்காவிலும் அதைச் சூழ்ந்த பிரதேசங்களிலும் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஆரம்ப முஸ்லிம்கள் துன்பங்களைத் தமது சத்திய மார்க்கத்திற்காக சகித்துக் கொண்டனர். முஹம்மது(ஸல்) அவர்கள் தமது பிறந்த மக்கா நகரில் இருந்து துரத்தப்படுவார்கள் என முன்னைய வேதங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைநெறி நூல் செய்திகள் வழங்கப்பட்டச் செய்தியை கிறித்தவ வேதங்களை அறிந்த “”வரகா”விடம் சொன்ன போது அவர் சொன்னதை அவதானியுங்கள். “”உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளி யேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திர மான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே” என்றும் அங்கலாய்த்துக் கொண்டார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், “”மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “”ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். ஆதாரம் (புகாரி : 03)

அன்று மக்காவில் வாழ்ந்த “”வரகா” என்ற கிறித்தவ வேத ஞானம் பெற்ற அறிஞர் கூறுவது போல் முஹம்மது(ஸல்) அவர்கள் குறைஷி´ நிராகரிப்பாளர்களினால் துன்புறுத்தப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் போதனை செய்த “”அல்லாஹ் ஒருவனையே வணங்கி வழிபடவேண்டும்” என்ற காரணத்தினால் துன்புறுத்தப்பட்டார்கள். கடைசியாக வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொலை செய்துவிடத் துரத்தினர். அல்லாஹ்வின் கட்டளையால் இதை அறிந்த முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மக்காவை விட்டு மதீனா வுக்கு ஹிஜ்ரத் செய்த சம்பவம் தீர்க்க தரிசனமாக முன்னைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப் பட்டுள்ளது. அப்போது அவரை இறைத் தூதராக ஏற்று அவருக்கு உதவி செய்யும்படி பணிக்கப்பட்டது. இதன் காரணமாகவே “”வரகா” என்ற அறிஞர் முஹம்மது நபிக்கு உதவ தான் இளைஞராக இருக்க வேண்டுமே என ஆதங்கப்படுகிறார். மேலும் பைபிள் இது பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.

அரேபியாவின் பாரம்! தீ தானியராகிய ஓ பயணக் கூட்டங்களே! நீங்கள் அரேபியாவின் காடுகளில் தங்குவீர்கள். தேமா தேசத்தின் குடிகளே! தாகமாக இருக்கின்றவர்களுக்குத் தண்ணீரும், தப்பி ஓடுகிறவர்களுக்கு உணவும் கொடுப்பதற்காக எதிர் கொண்டு போங்கள், அவர்கள் பட்டையங்களும், உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகின்றார்கள். (ஏசாயா : 21:13-15)

நபி(ஸல்) அவர்களும், அவரை விசுவாசித்த தோழர்களும் மதீனா பயணித்த சம்பவம் இதுவாகும். அவர்களுக்கு உதவுமாறு தேமா தேசத்தின் குடிகளுக்கு பணிக்கப்பட்டது. வேதம் வழங்கப் பட்டோரே! நீங்கள் எதிர்பார்த்துள்ள இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களாவார்கள்! சிந்தியுங்கள்.

அன்று நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள். அதன் பின் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் தமது பிற தேசங்களிலிருந்து மதீனா நோக்கி இடம் பெயர்ந்து வந்தனர். இதன் பின் இஸ்லாம் நாலா பக்கங்களுக்கும் வேகமாக, பரவ ஆரம்பித்தது. அன்று நபி(ஸல்) மதீனா வந்தபோது இடம் பெற்ற சில சம்பவங்களை அவதானியுங்கள்.

Previous post:

Next post: