ஐயமும்! தெளிவும்!!

in 2019 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : டிசம்பர் மாத தலையங்கம் பார்த்தேன். இணைவைக்கும் காஃபிர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்த தாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பிறருக்கு அனுப்பலாமா? ஜாகிர் உசைன்,  திருவொற்றியூர், சென்னை-19.

தெளிவு : தங்கள் ஐயத்திற்கான தெளிவை பிறகு பார்ப்போம். இணை வைக்கும் காஃபிர்களில் உள்ள ஒரு ஆணும் முஸ்லிம் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள லாமா? முஸ்லிம் ஆண் ஒருவர் காஃபிர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா? என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

இறை வசனம் :

“கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும் நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கும், நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கும் தகுதியானவர்கள். அவர்கள் கூறுவதை விட்டும் இவர்கள் தூய்மையானவர்கள், இவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவுமுண்டு”
(அல்குர்ஆன் : 24:26)

தாங்கள் கூறியுள்ளபடி திருமணம் செய்து கொள்ள இஸ்லாம், முஃமின்களுக்கு அனுமதி அளிக்கவில்லை, இத்திருமணம் ஹராம் (விலக்கப்பட்டது) என தடை செய்கிறது என்பதை குர்ஆன் வசனம் 24:3 எச்சரிக்கிறது. இதோ இறை வசனம் : 24:3 “விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைப்பவளையோ அல்லாமல் (வேறு எந்தப் பெண்ணையும்) திருமணம் செய்யமாட்டான். (அவ்வாறே) விபச்சாரி விபச்சாரனையோ அல்லது இணை வைப்பவனையோ அல்லாமல் வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டாள். இது நம்பிக்கையாளர்களுக்கு (முஃமின்களுக்கு) விலக்கப்பட்டிருக்கிறது” ஆக, தாங்கள் கூறும் திருமணம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஹராமான வையாகும் என்பதை முதலில் அறிந்து கொள்வோமாக. தங்கள் கேள்விக்கான பதிலை இப்பொழுது பார்ப்போம்.

திருமணம் செய்ததாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பிறருக்கு அனுப்பலாமா? என்பது தங்களின் வினா? இது போன்ற செய்திகள் பெரும்பாலும் பொய் செய்திகள் என்பதை சென்ற தலையங்கத்தில் விளக்கியுள்ளோம். பொய் செய்திகளை பிறருக்கு அனுப்புவதால் அந்த பாவத்தில் பங்கு அனுப்புபவர்களுக்கும் உண்டு அல்லவா? எனவே, அவற்றை தவிர்த்துக் கொள்வோம். ஒருக்கால், அச்செய்தி உண்மையாக இருந்து அச்சம்பவம் நம் குடும்பத்தில் அல்லது நம் உறவுகளிடம் நடந்திருந்தால் நாம் அதைப் பதிவிடுவோமா? மாட்டோம் அல்லவா?

பிறர் பதிவிட்டிருந்தாலும் நாம் அச்செய்தியை பிறருக்கு ஃபார்வர்டு செய்வோமா? செய்யமாட்டோம் அல்லவா? ஏன் பதிவிடுவதில்லை? ஏன் ஃபார்வர்டு செய்வதில்லை? இது நமது குடும்பத்தின், நமது உறவுகளின் தன்மானப் பிரச்சினை. அதுமட்டும் அல்ல முஸ்லிம்களுக்கு இது ஒரு அவமானம், அப்படி என்றால் வேறு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் நடத்திருப்பதை யோசிக்காமல் ஏன் ஃபார்வர்டு செய்கிறோம்.

இஸ்லாம் நம்முடையது அல்லவா? அந்த முஸ்லிம் உறவுகள் நம் உறவல்லவா? திருமணம் செய்து கொண்டது பெண்ணோ அல்லது ஆணோ அது முஸ்லிம்களுக்கு அவமானம் அல்லவா? அவமானத்தை யாரேனும் விளம்பரப்படுத்துவார்களா? சமூக வலைதள பகிர்வின் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்கள் என ஒரு நப்பாசையும் சிலருள் ஒட்டிக்கொண்டிருக்கும். நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்! அவர்கள் திருமணம் செய்து முடித்து விட்டார்கள். விரும்பினால் அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு ஏகன் இறைவனிடம் இறைஞ்சுங்கள். யாரோ ஒருவர், முஸ்லிம்களை இழிவுபடுத்த திட்டமிட்டு செயல்படுவதில் நாம் ஏன் பங்கேற்க வேண்டும்?

எனவே, சமூக வலைதளங்களில் இது போன்ற செய்திகளை பதிவிட வேண்டாம், உங்கள் குருப்புக்கு வரும் செய்திகளை ஃபார்வர்டு செய்யவும் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஐயம் : 1. தொழுகையில் சஜ்தா செய்ய நேரும்போது என்ன ஓதவேண்டும்? இரண்டு சஜ்தாக்களிலும் அதையே ஓத வேண்டுமா?
2. ஒவ்வொரு தொழுகையின் கடைசியில் நாம் கொடுக்கும் சலாம் நமக்கு நாமே கூறிக்கொள்வதா? ஆதாரத்துடன் தெரிவிக்கவும்.  ஜஃபருல்லாஹ், மதுரை. 20

தெளிவு : சஜ்தா சஹ்வு செய்ய நேரும்போது இரண்டு சஜ்தாக்களிலும் என்ன ஓத வேண்டும்? என்று நபி(ஸல்) அவர்கள் அறிவிக்காததால் வழமையாக சஜ்தாவில் என்ன ஓதினார்களோ, அவைகளில் ஏதேனும் ஒன்றை ஓதிக்கொள்ளளாம் என்ற முடிவுக்கே வரமுடிகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ருகூவிலும் சஜ்தாவிலும் நபி(ஸல்) அவர்கள் ஓதியவை : A.   நபி(ஸல்) அவர்கள் தமது ருகூவில் “சுப்ஹான ரப்பியல் அழீம்” (கண்ணியமிக்க எனது இறைவன் பரிசுத்தமானவன்) என்றும், தமது சுஜூதில் சுப்ஹான ரப்பியல் அஃலா (மேலான எனது இறைவன் பரிசுத்தமானவன்) என்றும் ஓதினார்கள்” அறிவிப்பாளர் : ஹுதைஃபா(ரழி), நூல்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னு மாஜ்ஜா.

மற்றொரு ஹதீஃத் : B.நபி(ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், சஜ்தாவிலும் “சுப்ஹானக்க அல்லாஹும்ம! (அல்லாஹ்வே நீ பரிசுத்தமானவன்!) ரப்பனா வபிஹம்திக்க! (எங்கள் இறைவா நீ புகழுக்குரியவன்!) “அல்லாஹும் மஃபிர்லி! (அல்லாஹ்வே என்னை மன்னித்து விடு!” என்று அதிகம் அதிகம் கூறுவார்கள். இதன் மூலம் குர்ஆனின் கட்டளையை நிறைவேற்றுவார்கள்” அன்னை ஆயிஷா(ரழி), நூல்: புகாரி, பாகம்1, ஹதீஃத் எண் : 817

(மேலே கூறப்பட்டுள்ள இருவகை ஹதீஃத்களிலும் ஏதேனும் விரும்பும் ஒன்றை ஓதிக்கொள்ளலாம்) தொழுகையின் கடைசியில் யாருக்கு சலாம் கொடுக்கிறோம் என்கின்ற தங்களின் அடுத்த கேள்விக்கான பதில் : “தொழுகையின் இறுதியில் நாங்கள் (தொழுகை நடத்திய) எங்கள் இமாம்களுக்கும், (தொழுகையில் கலந்து கொண்டவர் களுக்கும்) சலாம் கூறவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் இந்த சலாமை அல்லாஹ் வுக்கு நெருக்கமான மலக்குகளுக்கும் மற்றும் முஃமின்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூறுவார்கள்” அறிவிப்பாளர் : ஸமூரத்து பின் ஜூன்துப்(ரழி), நூல் : அஹ்மத், ஹாகிம்.

 

Previous post:

Next post: