அந்நஜாத் –  நவம்பர் 2019 

in 2019 நவம்பர்

அந்நஜாத் –  நவம்பர் 2019

ஸஃபர் – ரபீவுல் அவ்வல் 1441

  1. தலையங்கம்!
  2. புரோகிதத்திற்குக் கூலி நரகமே!
  3. அமல்களின் சிறப்புகள்…
  4. ஆதிகால   வேதங்களும்,  இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்…
  5. அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்!
  6. டெஸ்ட் டியூப் பேபி…
  7. ஐயமும்! தெளிவும்!!
  8. அறிந்து கொள்வோம்…

*****************************************************

தலையங்கம்!

உலக வங்கியின் அறிக்கை!

நடப்பு 2019ஆம் ஆண்டில் தென் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கை ஒன்றை “உலக வங்கி’ தெரிவித்திருக்கிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் மந்தம் ஏற்பட்டிருப்பதன் பிரதிபலிப்பு, தென் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் ஏற்பட்டு இதன் காரணமாக வளர்ச்சி குறைவு ஏற்படும் என்றும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது. அவ்வறிக்கையில், வங்காளம், நேபாளம் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

13.10.2019 அன்று உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையாவது :

உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் தொடர்பாக தென் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.1% குறைந்து 5.9% சரியும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6 சதவீதமாகக் குறையும். நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சியின் வேகம், இந்தியாவை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டுகளில் இந்தியா படிப்படியாக உயர்ந்து 2021ம் ஆண்டில் 6.9 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து 7.2 சதவீதமாகவும் அதிகரிக்கும். உற்பத்தி துறையில் இந்தியாவின் வளர்ச்சி 2வது காலாண்டில் ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதால், பத்து ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையை எட்டியுள்ளது.

நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் 6.5 சதவீதமாக இருக்கும். நேபாளத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சி வளம் பெற்று வருகிறது.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை 2018ம் ஆண்டில் 7.9 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2019ல் 8.1 சதவீதமாக அதிகரித்து எதிர் வரும் 2020ல் 7.2 சதவீதமாகவும், 2021ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா வர்த்தகப் போரின் காரணமாக வங்கதேசத்தின் முக்கிய தொழிலான ஆடை தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தேர்தலுக்கு பின் 2020ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகவும், 2021ம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், அந்நாடு வேளாண் துறையில் நன்கு முன்னேறி வருகிறது.

அதேபோல, பொருளாதார வளர்ச்சி பூடானில் நடப்பு ஆண்டில் 7.4 சதவீதமாகவும், மாலத்தீவில் 5.2 சதவீதமாகவும் இருக்கும்.

நடப்பு ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதமாகும். முதலீட்டாளர்களின் வருகை குறைவு, ஏற்றுமதி குறைவு, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவைகள் வளர்ச்சிக் குறைவுக்கான காரணிகளாகக் கருதப்படுகிறது. 2020ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாகவும், 2021ம் ஆண்டில் 3.7 சதவீத மாகவும் இருக்கும்.

மேலும், தென் ஆசியாவின் இறக்குமதியும் குறைந்துள்ளது. 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை பாகிஸ்தானிலும், இலங்கையிலும் இறக்குமதி குறைந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.4 சதவீதமாகக் குறையும்.

பாகிஸ்தானின் நிதிநிலை மோசமாகி, உள்நாட்டுத் தேவை மோசமாக சுருங்கும். இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டுத் தேவை குறைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 7.3 சதவீதம் இருந்த தனியார் நுகர்வு இப்போது 3.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

இவ்வாறு உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்கும் என்பது மகிழ்வைத் தந்தாலும், நடப்பு ஆண்டின் நிதி நிலை கவலையைத் தருகிறது. சந்தையில் ஏற்படும் பதற்றமான சூழல் உலகளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலை உருவாக்கி இருப்பதும் இதற்கான காரணிகளாக அமைந்து விட்டது.

எனவே, நடப்பு நிதி ஆண்டு நிறைவு பெற இன்னும் கணிசமான மாதங்கள் இருப்பதை நினைவிற் கொண்டு, உலக வங்கியின் தென் ஆசிய மண்டல துணைத் தலைவரின் பரிந்துரையான, “தனியாரின் நுகர்வை அதிகரித்தல், முதலீட்டை அதிகரித்தல், உற்பத்திக் குறைவு, இறக்குமதி குறைவு ஆகியவைகளில் கவனம் செலுத்தல்” ஆகியவைகளை மத்திய மாநில அரசுகள் ஏற்று செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட பரிந்துரை செயலாக்கப்பட்டால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் அதிகரிக்கும் என்பது மகிழ்வைத் தருகிறது.

*****************************************************

புரோகிதத்திற்குக் கூலி நரகமே!

அபூ அப்தில்லாஹ்

எமது பிரசாரத்தின் ஆரம்பத்திலிருந்தே மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்ட ஹஜ்ரத்(?)களை, மவ்லவிகளை, லெப்பைகளை மிகக் கடுமையாகச் சாடி வருவதாக எம்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஏதோ சொந்தக் காரணங் கொண்டு அல்லது பொறாமையினால் அவர்களை நாம் வெறுப்பதாகப் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர். செய்திகள் பரப்பி வருகின்றனர். அல்லாஹ் பாதுகாப்பானாக. அவர்கள் மீது எமக்குச் சொந்த வெறுப்போ, பொறாமையோ அணுவத்தனையும் இல்லை. ஒரு காலத்தில் நாமும் மற்றவர்களைப் போல் அவர்கள் மீது அளவு கடந்த மரியாதை, பக்தி வைத்திருந்தோம் என்பது தான் உண்மையாகும்.

புரோகிதக் கொடுமை :

ஆனால் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் அந்த இடைத்தரகர்களான புரோகிதர்கள் செய்து வரும் கொடுமையின் அளவை, மக்களை கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தங்களின் அற்ப சுயநலங்களுக்காக வழிகெடுக்கும் பாங்கை தெளிவாக அறிந்து கொண்ட பின்னரே, அவர்களை அடையாளம் காட்டத் துணிந்தோம். அதுவும் அவர்களிடமே நேரிடையாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு எச்சரித்தும் அவர்கள் தங்களின் தவறான போக்கை மாற்றிக் கொள்ள முன்வராததாலேயே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கத் துணிந்தோம்.

புரோகிதர்கள் செய்து வரும் கொடுமைகளின் அளவை மக்கள் இன்னும் உணரவில்லை. காரணம் இதுவரை யாரும் அதனை உணர்த்தவில்லை. அதை உணர்த்துவதாக இருந்தாலும் அந்த மவ்லவிகள் தானே உணர்த்த வேண்டும். பொதுமக்களுக்குத்தான் குர்ஆன், ஹதீஸை நேரடியாகத் திறந்து பார்க்கும் தைரியமில்லையே. அந்த அளவு பொது மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்களே. தங்களின் வண்டவாளங்களை மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தானே மக்களை குர்ஆன், ஹதீஸின் பக்கம் நெருங்கவிடாமல் தடுத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் தங்களின் கொடூர முகத்தை, தங்களின் அட்டூழியங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் செய்வதற்கு அவர்கள் பைத்தியக்காரர்களா? விபரம் புரியாதவர்களா? ஏமாளிகளா?

எனவே மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொள்வதின் கெடுதிகள் பற்றியும், அது பற்றிய கடுமையான தடைகளையும் அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில்லை. ஆயினும் அதை விடக் குறைவாகவே கண்டிக்கப்பட்டிருக்கும் பன்றிக்கறி, அநாதைகளின் சொத்து, வட்டி, மற்றும் தடுக்கப்பட்டவற்றைச் சொல்லி யிருப்பதைக் காட்டிலும் கடுமையாகவே எச்சரிக்கின்றனர். உபதேசம் செய்கின்றனர். இவை எல்லாம் இந்த மவ்லவிகளின் கண்ணில் படும்போது மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொள்வது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கைகள் அவர்களின் கண்ணில் எப்படிப் படாமல் இருக்க முடியும்?\

மிகக் கொடிய ஒரு விஷயத்தை-மிகக் கடுமையான ஹறாமை இந்த மவ்லவிகள் தங்களின் அற்ப உலக வாழ்வின் நலன் கருதி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில்லை. உண்மையில் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் ஆராயும் போது மார்க்கத்தைக் கொண்டு சாப்பிடுவதை விடக் கொடிய ஹறாம் வேறொன்று இருப்பதாகத் தெரியவில்லை. அதைப் புள்ளி விபரங்களுடன் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.\

அல்குர்ஆனில் தடை செய்யப்பட்டவை:

அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் தடை செய்யப்பட்ட விஷயங்களை வரிசையாகப் பார்ப்போம். பன்றிக்கறி (அனைத்து உறுப்புக்களும் உட்பட) உண்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை 2:173, 5:3, 6:145, 16:115 ஆகிய நான்கு இடங்களில் பார்க்கலாம். இதிலும் குறிப்பாகப் பன்றிக் கறி பற்றி மட்டும் சொல்லப்படாமல் செத்தது, இரத்தம் போன்றவற்றோடு இதனையும் கூறி, அதிலும் பாவம் செய்யும் நோக்கமில்லாமல் நிர்பந்தத்தால் புசித்துவிட்டால் குற்றமில்லை என்றும் அல்லாஹ் சலுகையும் வழங்கியுள்ளான். ஆனால் இந்த மவ்லவிகளோ பன்றிக்கறியை விடக் கடுமையான ஹறாம் வேறொன்றும் இல்லை என்பது போல் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வைத்துள்ளனர். கிறிஸ்தவ சமுதாயத்தோடு கடும் பகையை வளர்த்து வைத்துள்ளனர்.

பன்றிக்கறி சாப்பிடுவதை விடக் கடுமையான ஹறாமாக அநாதைகளின் சொத்தை அநியாயமாகச் சாப்பிடுவதைக் குறிப்பிட்டு அல்லாஹ் எச்சரித்துள்ளான். இதனை 2:220, 4:2, 6:152, 17″:34 ஆகிய இறைவாக்குகளைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம். இவற்றிற்கு அடுத்து கடுமையான ஹறாமாக வட்டியை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இதை 2:275, 276, 278, 279, 3:130, 4:161, 30:39 ஆகிய இறைவாக்குகளில் பார்க்கலாம். வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய்) எழமாட்டார்கள்; அவர்கள் நரகத்தில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பன்றிக்கறி என்றவுடன் முகம் சுளிப்பவர்களில் பலர், மவ்லவிகளின் இனத்தைச் சார்ந்தவர்களிலும் சிலர் வட்டியின் கடுமையை உணராமல் வட்டியைச் சாப்பிடுவதையும் அறிவோம்.

இவையல்லாமல் திருட்டு பற்றி 5:38, 12:70லும், மது, சூது பற்றி 2:219, 5:90,91லும், விபச்சாரம் பற்றி 4:15,16, 17:32, 24:33, 25:68, 60:12லும், அளத்தல் நிறுத்தல் மோசடி பற்றி 6:152, 7:85, 11:84, 17:35, 55:8,9, 83:1-4லும், கொலை செய்வது பற்றி 2:178, 179, 4:92,93, 5:32, 6:140, 17:33லும் அல்லாஹ் எச்சரித்துத் தடைசெய்துள்ளான்.

புரோகிதர்கள் எச்சரிக்காதது ஏன்?

இவைப் பற்றி எல்லாம் இந்த மவ்லவிகள் மக்களிடம் எச்சரித்துப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொள்வதைத் தடை செய்தும், அவ்வாறு பிழைப்பாக ஆக்கிக் கொள்வதால் எப்படி மார்க்கத்தைத் திரித்து வளைத்து மறைக்கும் நிலை ஏற்படுகிறது என்பதை யூத, கிறிஸ்தவ சமுதாயங்களை உதாரணம் காட்டி விளக்கியும், அவர்களுக்கு மறுமையில் எப்படிப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன என்பது பற்றியும், அல்லாஹ் அல்குர்ஆனில் விளாவாரியாக விளக்கி எச்சரித்திருந்தும், இவை பற்றியயல்லாம் இந்த மவ்லவிகள் பெரும்பாலும் வாயே திறப்பதில்லை. அப்படியே திறந்தாலும் இவை யூத, கிறிஸ்தவர் களுக்குரிய தண்டனைகள்: முஸ்லிம்களுக்கல்ல என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அல்லாஹ் யூத, கிறிஸ்தவர்களுக்கு ஓர் அளவுகோலாகவும் முஸ்லிம்களுக்கு ஓர் அளவுகோலாகவும் நீதத்தில் பாகுபாடு காட்டுவது போல் நாகூசாமல் அல்லாஹ் பற்றி குறை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். யூத, கிறிஸ்தவர்கள் திருடினால், விபச்சாரம் செய்தால் தண்டனையுண்டு! அதே காரியங்களை ஒரு முஸ்லிம் செய்தால் தண்டனை இல்லை என்பது போல் இந்த மவ்லவிகளின் பிரசாரம் இருந்து வருகிறது. என்னே மெளட்டீகம்? இந்த மெளட்டீகத்தை நம்பும் மக்களும் இருக்கிறார்களே? இப்படி, புரோகிதத்திற்குக் கூலி வாங்குவதின் கெடுதிகள் பற்றி இந்த மவ்லவிகள் மக்களுக்குத் தெளிவுபடுத்தாததினால் அவர்களும் இதை உணராமல் இந்தப் போலி முல்லாக்களை-புரோகிதர்களை நம்பி அவர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மார்க்கத்தைப் பிழைப்பாக்குவது கூடாது :

இப்போது நாம் மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொள்வது எவ்வளவு பெரிய ஹறாம், அது எத்தனைப் பெரிய வழிகேடுகளை முஸ்லிம் சமுதாயத்தில் உண்டாக்கி வைத்திருக்கிறது என்பதை அல்குர்ஆனைக் கொண்டே ஆராய்வோம். முதல் மனிதரும் நபியுமான ஆதம்(அலை) அவர்களிலிருந்து இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மானிட சமுதாயத்தின் நேரிய வாழ்க்கை நெறிக்காக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் மார்க்கப் பிரசாரத்தை அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, மறுமையில் கூலியை எதிர்பார்த்துப் பணிபுரியும்படி பணிக்கப்பட்டார்கள்: அது மட்டுமல்ல இது விஷயத்தில் மக்களிடையே சிறிதளவுச் சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இதனைப் பகிரங்கமாக அறிவிப்புச் செய்யக் கட்டளையிட்டான் அல்லாஹ். நபிமார்களும் இறைவனது கட்டளைக்கிணங்க இந்தப் பிரசாரப் பணிக்குரிய கூலி அல்லாஹ்விடமே இருக்கிறது: உங்களிடம் கூலி கேட்க வில்லை என்று பகிரங்கமாகப் பறை சாற்றினார்கள்.

இதனை 6:90, 10:72, 11:29, 51, 25:57, 26:109, 127, 145, 164, 180, 34:47, 38:86, 42:23, ஆகிய 13 இறைவாக்குகளில் பார்க்கலாம்.

கூறுவீராக: “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.”

36:21 இறைவாக்கில் “உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” என்று கூறி இருக்கிறான். இந்த இறை வாக்கிலிருந்து மார்க்கப் பிரச்சாரத்திற்கு எவர் கூலி பெறுகிறாரோ அவர் நேர்வழியிலிருந்து தவறிவிட்டார். வழிகேட்டில் சென்றுவிட்டார் என்பது தெளிவாகிறது. அதல்லாமல் 52:40, 68:46 ஆகிய இறைவாக்குகளில் “அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, அவர்கள் கடன்பட்டு சுமையேற்றப்பட்டிருக் கிறார்களா?” என்று கேட்பதன் மூலம், மார்க்கப் பிரசாரத்திற்குக் கூலி கேட்பது-கொடுப்பது மக்களிடையே தேவையில்லாத சுமைகளையும், அதன் மூலம் மூட நம்பிக்கைகளையும், வழிகேட்டையும் உண்டாக்கும் என்பதை உணர்த்துகின்றது. மார்க்கப் பணிக்கு இந்த முல்லாக்கள் கூலி வாங்குவதால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் வழிகேட்டின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதில் ஐயமுண்டா?

தில்லுமுல்லுகள் :

மார்க்கப் பிரசாரத்திற்கு மக்களிடம் கூலி வாங்கக் கூடாது என்ற இறைவனது தெளிவான கட்டளைக்கு முரணாக, முன்னைய நபிமார்களின் போதனைகளை எடுத்துச் சொல்வதாக நடித்த புரோகிதர்கள், கூலி வாங்கியதன் காரணமாக அவர்கள் மார்க்கத்தில் எப்படி எல்லாம் தில்லுமுல்லு செய்தார்கள் என்பதையும் அல்லாஹ் பல இறை வாக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளான். உதாரணமாக 2:41,79,3:78,187,188, 4:44,46, 5:41,63, 6:21, 25,26, 9:9, 10,34, 11:18,19, 31:6 ஆகிய இறைவாக்குகளை நிதானமாகப் படித்துச் சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும்.

அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள், “இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.

அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள்; இவர்கள்தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன்: 11:18,19)

அது மட்டுமல்ல மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள் தெரிந்த நிலையில்தான் இந்த தில்லுமுல்லுகளைச் செய்கின்றனர் என்பதையும் அல்லாஹ் 2:75,78,79, 109,146, 6:20 ஆகிய இறைவாக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளான்.

மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள் துணிந்து தில்லுமுல்லுகளையும், பொய்ப் பித்தலாட்டங்களையும், சதித் திட்டங்களையும் செய்வதற்கு அல்லாஹ் அவர்களைச் சபித்ததும், அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்ததும்தான் காரணம் என்பதை 2:74, 5:13, 6:43,125, 57:16 இறைவாக்குகள் உறுதிப் படுத்துகின்றன. அவர்கள் தங்கள் வயிறுகளின் நரக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றனர் என்பதை 2:174 இறைவாக்கு உறுதிப்படுத்துகின்றது. மார்க்கத்தை வியாபாரமாக்கிய புரோகிதர்கள் அல்லாஹ்வாலும், சபிப்பதற்கு உரிமை பெற்றவர்களாலும், மலக்குகளாலும், மனிதர்களாலும் சபிக்கப்படுகின்றனர் என்பதை 2:159, 161,162 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படமாட்டாது. மேலும் மன்னிப்புக் கோர அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது என்பதையும் மேற்படி இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

மார்க்கத்தில் ஹறாமாக்கப்பட்ட வேறு எந்த விஷயமாவது இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பற்பல கோணங்களில் பல விதமாக எச்சரித்துக் கண்டிக்கப் பட்டு அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக யாராலும் காட்ட முடியுமா? அப்படியானால் மற்றவை பற்றி எல்லாம் வாய் கிழியப் பேசும் இந்தப் புரோகிதர்கள், தாங்கள் குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு மாற்றமாக வாங்கிக் கொண்டிருக்கும் கூலி பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்? அவர்களின் பக்தர்கள் இந்த கெடுதிகளைப் பற்றி சிறிதளவாவது விளங்கி வைத்திருக்கிறார்களா? இல்லையே?

இன்னொரு வகையிலும் ஹறாம்:

மார்க்கப் பிரசாரத்தை வியாபாரமாக்கக் கூடாது. அதற்குக் கூலி வாங்கக் கூடாது என்பதற்குரிய நேரடித் தடைகளை இறைவாக்குகள் கொண்டு ஆராய்ந்தோம். வேறொரு வகையிலும் இந்தப் புரோகிதர்கள் குற்றவாளியாகிறார்கள். இவர்களது மார்க்கப் பணிக்கு கூலி மறுமையில் அல்லாஹ்விடம் உண்டு என்பது தெளிவான விஷயமாகும். இந்த நிலையில் அதே பணிக்கு மக்களிடம் கூலி வாங்குவது லஞ்சம் வாங்கும் குற்றத்திற்கும் இவர்களை ஆளாக்கி விடுகிறது. 2:188 இறைவாக்கிற்கு எதிராக, மக்களின் பொருளைத் தவறான முறையில் இந்தப் புரோகிதர்கள் சாப்பிடும் குற்றத்திற்கும் ஆளாகிறார்கள். 9:34 இறைவாக்கில் கிறிஸ்தவப் புரோகிதர்கள் செய்த இதே தவறு பற்றி எச்சரித்து அறிவு புகட்டி இருக்கிறான் அல்லாஹ். இந்த போதனையைத் தூக்கி முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டு, முஸ்லிம் புரோகிதர்களும் மக்களின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள். அதற்காகவே அல்லாஹ்வின் பாதையை விட்டு இவர்களும் மக்களைத் தடுக்கவே செய்கிறார்கள். இதனை இன்று நிதர்சனமாகவே பார்க்கிறோம்.

குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி சரியாகப் பிரசாரம் செய்வதற்கு, தொழ வைப்பதற்கு, பாங்கு சொல்வதற்கு, குர்ஆன் ஓதிக் கொடுப்பதற்கு, மார்க்கம் கற்றுக் கொடுப்பதற்கு இவர்கள் வாங்கும் கூலி எதற்கு ஒப்பானது என்றால், அரசாங்க அதிகாரி ஒருவர் தான் அரசால் அமர்த்தப் பட்டிருக்கும் பணியில் செய்ய வேண்டிய வேலையை மக்களுக்குச் செய்து கொடுத்து விட்டு, அதற்கென அரசாங்கத்திடம் முறையாக வாங்கும் சம்பளம் போக, மேலதிக மாக மக்களிடம் முறை தவறி வாங்கும் லஞ்சத்திற்கு ஒப்பாகும். காரணம் இந்தப் பணிகளுக்குரிய கூலியை அல்லாஹ் தருவதாக வாக்களித்துள்ளான். இது சாதாரண அளவிலான லஞ்சமாகும்.

அதே அதிகாரி மக்களுக்குக் கிடைக்க வேண் டிய நியாயமான உரிமைகளை மீறி மேலதிகமாக அரசையும், மேலதிகாரிகளையும் ஏமாற்றி முறைகேடான வழியில் செய்து கொடுத்து விட்டு, அதிகமான லஞ்சத்தை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வது இரண்டாவது வகை. இது முன்னையதை விட கடுமையான லஞ்சமாகும். தனக்குச் செய்து தர சாத்தியமில்லா, தன் அதிகாரத்தை மீறிய காரியத்தைச் செய்து தருவதாகப் பொய்யாக வாக்களித்து மக்களை ஏமாற்றி அவர்களிடம் மோசடியாகப் பணம் பெறுவது, இது கடுமையான லஞ்சம் மட்டுமல்ல, பெரும் மோசடியுமாகும்.

புரோகிதர்களில் பெரும்பாலானோர் இதில் மூன்றாம் வகையான கடுமையான லஞ்சமும், பெரும் மோசடியுமான காரியங் களைத்தான் செய்து வருகின்றனர். முன்னர் குறிப்பிட்டது போல் குர்ஆன், ஹதீஸை சரியாக பிரசாரம் செய்ய, தொழவைக்க, பாங்கு சொல்ல, குர்ஆன் ஓதிக்கொடுக்க, மார்க்கம் கற்றுக் கொடுக்க இவற்றிற்கு மக்களிடம் கூலி வாங்குவது லஞ்சமாகும். அதே சமயம் கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது, ஸலாத்து நாரியா, தர்கா சடங்குகள், பீர், முரீது ஏமாற்று வேலைகள், மத்ஹபு, தரீக்கா, இயக்கங்கள், கழகங்கள், தனித்தனி ஜமாஅத்கள் பெயரால் ஏமாற்று வேலைகள் இவற்றின் பெயரால் வாங்கும் கூலி கடுமையான லஞ்சத்தோடு பெரும் மோசடியுமாகும். காரணம் அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்றிச் சிலர் சாதிப்பது போல் இங்கு அல்லாஹ்வை ஏமாற்றி இவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை.

எனவே இவை அனைத்தும் மோசடிகளிலேயே பெருத்த மோசடியாகும் என்பதை மக்கள் புரிய வேண்டும். இவற்றைக் காலா காலமாகச் செய்து வரும் புரோகிதர்கள்-முல்லாக்கள் எவ்வளவு பெரிய கொடிய ஹறாமில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்துவது கடமையாகும். மக்களும் கூலி கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.

அது மட்டுமல்ல; இன்றைய மக்களில் மிகக் கடுமையான ஹறாம்களில் மூழ்கி, உள்ளம் ஆக மிக மோசமான நிலையில், மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட புரோகிதர்களை விட வேறு யாரும் இருக்க முடியாது. உதாரணமாக வருடம் 365 நாட்களும் ஒருவன் பன்றிக் கறி சாப்பிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் சாப்பிடும் மற்ற உணவுகள் ஹலாலாக இருக்க வாய்ப்புண்டு. அவனது குடிப்பு, உடை, வீடு மற்றவை அனைத்தும் ஹலாலாக இருக்க வாய்ப்புண்டு.

ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர்களின் உணவு, குடிப்பு, உடை, வீடு இப்படி அனைத்தும் ஹறாமாகவே இருக்கும் என்பதில் ஐயமுண்டோ? ஆக வருடம் 365 நாட்களும் பன்றிக்கறி சாப்பிடும் ஒருவனை விட இவர்கள் கேடு கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களை விட ஹறாமில் மூழ்கி இருக்கும் வேறு யாரையாவது இவர்களால் காட்ட முடியுமா? மக்களிடையே கேடு கெட்டவர்கள் என்று யாரை எல்லாம் இவர்கள் அடையாளம் காட்டுகிறார்களோ அவர்கள் அனைவரையும் விட கேடுகெட்ட நிலையில் தான் இவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் உபதேசத்தைக் கேட்டு முஸ்லிம்கள் உணர்வு பெற முடியுமா? மிக உன்னதமான முஸ்லிம் சமுதாயம் இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் மர்மம் இப்பொழுதாவது புரிகிறதா?

ஓர் உதாரணம்:

இவர்கள் ஹறாமிலேயே முழுக்க முழுக்க மூழ்கிவிட்டதால், இவை ஹறாம் என்பதையும் இவர்கள் மறந்து விட்டார்கள். புரோகிதர்களின் நிலையே இதுவென்றால் அவர் களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மக்களின் நிலை எப்படி இருக்கும்? எளிதாகப் புரிய உதாரணம் ஒன்று சொல்லுகிறோம். ரோட்டில் ஒருவர் தமது மகனுடன் சென்று கொண்டிருக்கும்போது ஒரு பயங்கரமான விபத்து, அவரோடு வந்த அவரது மகன் லாரியில் அடிப்பட்டு மண்டையில் பலத்த காயத்தோடு வீழ்ந்து கிடக்கிறான். அவர் அப்படியே அதிர்ந்து விடுகிறார், கை கால்கள் பதறுகின்றன. தடுமாறுகிறார், அவசர அவசரமாக ஒரு வாகனத்தை பிடித்து வேகமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார். போய்ச் சேரும் வரை அவருக்குப் பொறுமை இல்லை. ஒரு வழியாகப் போய் அவசர சிகிச்சைப் பிரிவில் மண்டை உடைந்த மகனைச் சேர்த்தும் விட்டார்.

ஆனால் அங்கு பணி புரிகிறவர்களோ எவ்வித பதட்டமும் இல்லாமல், சர்வ சாதாரணமாக, வெகு அலட்சியமாகச் செயல்படுகிறார்கள். அவர்களைப் பார்த்து அவருக்குத் தான் ஆத்திரம் பீறிட்டு வருகிறது. அவர்களோ அலட்டிக் கொள்வதாக இல்லை. காரணம் என்ன? விபத்து சாதாரண விபத்தா? இல்லை. வேறு என்ன காரணம்? அவர்கள் அன்றாடம் இதைப் போல் இன்னும் இதைவிட கடுமையான நிலையிலுள்ள பல கேஸ்களைப் பார்த்துப் பார்த்து அவர்களது உள்ளம் மரத்துவிட்டது. அவர்களில் இறந்தவர்களை சர்வசாதாரணமாகப் பிணவறைக்கு அனுப்பிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் தினசரி அனுபவம் அவர்களை இவ்வாறு செயல்பட வைக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் சாப்பிடுவது ஹலாலான உழைப்பைக் கொண்டு.

ஆனால் ஹஜ்ரத்துகள் அன்றாடம் ஹறாமான உணவை திரும்ப திரும்ப சாப்பிட்டு அவர்களின் உள்ளமே இறுகி விட்டது; மரத்துவிட்டது. எனவே அவர்கள் செய்வது தவறாகவே அவர்களுக்குப் படுவதில்லை. அவர்கள் அதை தவறாக உணர்ந்தால் அல்லவா மக்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறார்கள். எனவே மக்களும் மார்க்கப் பிரசாரத்தைக் கூலிக்குச் செய்வதன் தீமையை உணராது இருக்கிறார்கள். அதனால் சமுதாயமே அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மவ்லவிகளின் உள்ளம் இறுகிக் கடினமாகி விட்டது-கல்லாகிவிட்டது என்பதற்கு அவர்களிலிருந்தே ஆதாரம் தர முடியும். புரோகிதக் கல்வி கற்கும் மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் அதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் இன்னும் மார்க்கத்தை விற்க ஆரம்பிக்கவில்லை. எனவே அவர்களின் உள்ளங்கள் இறுகவில்லை-கல்லாகவில்லை. எனவே அங்கிருந்து வெளிவரும் இளம் மவ்லவிகளிடையே உண்மையை அறிந்து கொள்ளும் தாகம் இருக்கவே செய்கிறது. ஷிர்க், பித்அத் பற்றிய வெறுப்பும் அவர்களின் உள்ளங்களில் இருக்கவே செய்கிறது. மதரஸாவில் பட்டம் பெற்று வெளியே வந்து பள்ளிகளில் இமாமாகப் பணி புரிய ஆரம்பிக்கும் இந்த இளம் மவ்லவிகள் ஆரம்பத்தில் ஜுமுஆ மேடைகளிலும், மற்றும் பயான்களிலும் ஷிர்க், பித்அத்தைக் கண்டித்துப் பிரசாரம் செய்கின்றனர். அவர்களில் சிலர் இதில் மிகக் கடுமையாகச் செயல்படுவதையும் காணலாம்.

அப்படி ஷிர்க், பித்அத்தை மிகக் கடுமையாகச் சாடிய அந்த மவ்லவிகளே ஒரு சில வருடங்களில் தலைகீழாக மாறி ஷிர்க், பித்அத்தை மிகக் கடுமையாக ஆதரிப்பதைப் பார்க்கலாம். இந்த நிலைக்குக் காரணம் என்ன? அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாக்கி, அதைக் கொண்டு வயிற்றை நிறைத்ததால் அவர்கள் உள்ளம் இறுகி கல்லாகி விட்டது. அல்குர்ஆன் 5:13ல் பனீ இஸ்ரவேல் ஆலிம்களை எச்சரித்துள்ள நிலைக்கு இவர்களும் ஆளாகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட பல மவ்லவிகளை நாம் அறிவோம். உங்களில் பலரும் அறிந்திருக்க முடியும். அவர்கள் பிழைப்பிற்கு வேறு வழியின்றி மனம் உறுத்தும் நிலையிலேயே அந்த ஷிர்க், பித்அத்களை ஆதரிக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. அது உண்மையானால் அவர்களால் சொல்ல முடியாத உண்மைகளைச் சொல்பவர்களை அதாவது ஷிர்க், பித்அத்களை கண்டிப்பவர்களை பகிரங்கமாக ஆதரிக்க முடியாவிட்டாலும் மெளனமாக இருந்துவிட்டுப் போகலாமே. ஆனால் அவர்கள் அதற்கு மாறாக சத்தியத்தைச் சொல்பவர்களை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பவர்களாக அல்லவா இருக்கிறார்கள்? இதுவே அவர்களின் உள்ளங்கள் இறுகி கல்லாகி விட்டன என்பதை நிரூபிக்கவில்லையா?

ஹறாமில் ஊறியவனின் துஆ: ஷ

“ஒரு மனிதன் நீண்ட பிரயாணம் செய்து, புழுதி படிந்தவனாக, பரட்டைத் தலையனாக, இரண்டு கைகளையும் உயர்த்தி இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். ஆனால் அவனது உணவும் ஹறாமானதாக உள்ளது. அவன் அருந்திய பானமும் ஹறாமானதாக உள்ளது. அவன் அணிந்துள்ள ஆடையும் ஹராமானதாக உள்ளது, இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளப்படும்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்:முஸ்லிம்.

இந்தச் சமுதாயத்திற்கு உயர்வும், மதிப்பும் இப்பூமியில் வசதியாக வசிப்பதும் உள்ளது என்று நற்செய்தி கூறுவீராக! அவர்களில் யாரேனும் மறுமைக்குரிய அமலை (செயலை) இவ்வுலகிற்காக (பொருளுக்கா கச்) செய்தால் மறுமையில் அவருக்கு எந்தப் பயனுமில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: உபைபின் கஃபு(ரழி),
நூல்:அஹ்மது,இப்னு ஹிப்பான்,ஹாகிம், பைஹகி.

இந்த இரண்டு ஹதீஸ்களின்படி மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் மவ்லவிகள் மிகவும் இழிவான கேவலமான தரங்கெட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யாரால் மறுக்க முடியும். அவர்களுக்கு எப்படி நேர்வழி கிடைக்கும்? மற்றவர்களுக்கு எப்படி நேர்வழி காட்ட முடியும்? நிதானமாகச் சிந்தியுங்கள்.

அவர்களின் இழி நிலையை வல்ல அல்லாஹ் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதைப் பாரீர்.

“எவர், அல்லாஹ் நெறிநூலில் அருளிய வற்றை மறைத்து, அதற்குக் கிரயமாக சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தமாக்கவுமாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு”.

அவர்கள் தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள், இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?  (அல்குர்ஆன் : 2:174,175)

“அதற்குக் கிரயமாக சொற்பத் தொகையைப் பெறுவது” என்பது குர்ஆனை அச்சடித்து சொற்பத் தொகைக்கு விற்பது என்று விளக்கம் சொல்லும் முல்லாக்களும் இருக்கிறார்கள். உண்மையில் இப்பணிக்கு மறுமையில் மகத்தான கூலி இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிவித்திருக்க, அதை மறைத்து அப்பணிகளுக்கு அற்பமான இவ்வுலகில் கூலி பெறுவதையும், அதற்கென்றே சத்தியத்தை மறைப்பதையுமே அல்லாஹ் இங்கு குறிப்பிட்டுள்ளான்.

“இதற்குக் காரணம் நிச்சயமாக அல்லாஹ் இந்நெறிநூலை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இந்நெறி நூலிலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் 2:176)

இந்த இறைவாக்கு மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டவர்கள் அதாவது பிரசாரம், இமாமத், பாங்கு சொல்லல், குர்ஆன் ஓதிக் கொடுத்தல், மார்க்கம் கற்றுக் கொடுத்தல் போன்ற இவற்றிற்குக் கூலி வாங்குபவர்கள், சத்திய மார்க்கத்தில் பிளவை உண்டாக்குவார்கள்; மத்ஹபு, தரீக்கா, இயக்கங்கள், தனித்தனி ஜமாஅத்கள் என்று மக்களைக் கூறுபோட்டுச் சுரண்டுவார்கள் என்பதையும் தெளிவுப்படுத்துகிறது. மேலும் சிரமத்தைப் பார்க்காமல் 2:79,159, 3:77, 5:13, 9:9 இறைவாக்குகளைத் திறந்து படித்துப் பார்த்து இந்த புரோகிதர்கள் அடையப் போகும் இழிவையும், கேவலத்தையும், நரக வேதனையையும் தெரிந்து கொள்ளுங்கள். இவர்களா முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்ட முடியும்? எண்ணிப் பாருங்கள்.

பெரியதொரு ஆச்சரியம்:

நமக்கு ஆரம்பத்தில் பெரியதொரு ஆச்சரியக்குறி உள்ளத்தில் இருந்து வந்தது. அதாவது தர்கா சடங்குகள், தக்லீது பற்றி-அவற்றின் கெடுதிகள் பற்றி மக்கள் மன்றத்தில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை எடுத்து வைத்தபோது முகல்லிது மவ்லவிகள் துணிந்து எம்மீது பச்சையாக அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். அதே போல இயக் கப் பிரிவுகளின் கெடுதிகளை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் கொண்டு எடுத்து வைத்தபோது தெளஹீது மவ்லவிகள் எம்மீது படு அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். அமானித மோசடி, பிறருக்குச் சொந்த மானதை அபகரித்துக் கொண்டோம் என்றெல்லாம் அவதூறு பரப்பி மக்களை நம்ப வைத்து அவர்களைச் சத்தியத்தை விட்டும் திசை திருப்பி விட்டனர்.

மார்க்கம் கற்ற மவ்லவிகள், குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள், அரபி மொழி கற்று குர்ஆனையும், ஹதீஸையும் அவற்றின் மூல அரபு மொழியில் பார்த்து உணர்ந்த மவ்லவிகள் எப்படி மனம் துணிந்து பொய் சொல்ல முடிகிறது? பொய்ச் சத்தியம் செய்ய முடிகிறது? அதுவும் அல்லாஹ்மீது ஆணையிட்டுப் பொய்ச் சத்தியம் செய்ய முடிகிறது? அவதூறு பரப்ப முடிகிறது? என்ற கேள்விக்குரியே அது.

ஆனால் மேற்படி இறைவாக்குகளை ஆராய்ந்த பின்னரே பிரசார பணிக்கு, இமாமத் செய்ய, பாங்கு சொல்ல, மார்க்கம் கற்றுக் கொடுக்க அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாகக் கூலி வாங்கி அதைச் சாப்பிடுவதால், வயிற்றை நரக நெருப்பால் நிரப்புவதால், அவர்களின் உள்ளம் இறுகிக் கல்லாகி, அதனால் துணிந்து பொய் சொல்லவும், அல்லாஹ் மீது ஆணையிட்டுப் பொய்ச் சத்தியம் செய்யவும், அவ தூறு பரப்பவும் தயாராகி விடுகிறார்கள். ஷைத்தானின் பட்டாளமாகவே செயல்படு கிறார்கள் என்ற உண்மை புலப்பட்டது.

“பொய்யாக்குவதையே நீங்கள் பிழைக்கும் தொழிலாக ஆக்கிக் கொண்டீர்களா? (56:82) என்று அல்லாஹ் கேட்பது இதை உறுதிப்படுத்துகிறது.

“குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள்!” (நபிமொழி) (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னுஅஸாகிர்)

“எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே(கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள்.” (நபிமொழி). திர்மிதி, அஹ்மத்

கசப்பான உண்மை:

இங்கு இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் வெளியிடாமல் இருக்க முடியாது. அதாவது மார்க்கத்தைத் தங்களின் பிழைப்பாக ஆக்கிக் கொண்ட குற்றத்திற்காக முகல்லிது மவ்லவிகளை விட தெளஹீது மவ்லவிகளே, மிகவும் கடுமையாகப் பிடிப்படுவார்கள். காரணம் முகல்லிது மவ்லவிகளின் அச்செயலுக்கு அவர்களின் வறுமையும், கையாலாகாத நிலையும் ஒரு காரணமாக இருக்கிறது. அவர்கள் கல்வி பயின்ற மதரஸாக்களில் குர்ஆன், ஹதீஸுக்கு முரணான மோசடிக் கல்வி கற்றுக் கொடுப்பதால், அவர்கள் சுயமாகத் தொழில் கற்று தன் கையே தனக்குதவி என பிழைக்கத் தெரிந்து விட்டால், அந்த மோசடிக் கல்வியை அடையாளம் தெரிந்து கொள்வார்கள்; அதனைத் தூக்கியயறிந்துவிட்டு குர்ஆன், ஹதீஸ் வழிக்கு வந்துவிடுவார்கள்; புரோகிதக் கல்வி ஒழிந்து விடும் என்ற அச்சத்தில் அவர்களைத் தொழில் கல்வி கற்பதற்கு அனுமதிப்பதில்லை; தொழில் கல்வி கற்றால் அதிலேயே மூழ்கி விடுவார்கள்.

மார்க்கத்தை மறந்து விடுவார்கள் என்று அவர்களின் குருமார்கள் போலிக் காரணம் கூறுகின்றனர். அதுபற்றி விரிவாகப் பின்னால் வேறொரு கட்டுரையில் பார்ப்போம். அதனால் முகல்லிது மவ்லவிகள் வேறு வழியின்றி கையறு நிலையிலுள்ளனர். பிழைப்பிற்குப் புரோகிதத்தை விட்டால் வேறு வழியில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமோ மிக குறைவுதான். துண்டு விழும் தொகையைச் சரி கட்ட கத்தம், ஃபாத்திஹா, மெளலூது, தர்கா சடங்கு என்று ஈமானை (விசுவாசத்தை) அடகு வைக்க வேண்டிய நிர்பந்த நிலை, அப்படியும் அவரது மனைவி மக்கள் வயிறாற சாப்பிடுவது கிடையாது. பசி பட்டினி தான். அவர்களின் நிலை உண்மை யிலேயே பரிதாபத்திற்குரியது தான். அவர்கள் செய்வது தவறு என்பதை அவர்கள் உணர்ந்தாலும் அவற்றை விட்டு விடுபட்டு வரமுடியாத பரிதாப நிலை.

அதிலும் “முஅத்தின்’களாகப் பணி புரிகிறவர்கள், அத்துடன் பள்ளியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது மற்றும் சில வேலைகள் என்று கூலி வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட பணிகளைச் செய்து வருவதால், அவர்கள் தப்புவதற்கு வழி இருக்கிறது என்று நம்பலாம். மேலும் கிராமப் புறத்துப் பள்ளிகளில் இமாமத் செய்பவர்களான லெப்பைமார்கள் (பெரும்பாலும் மவ்லவி அல்லாதவர்கள்) பாங்கு சொல்வதிலிருந்து, பள்ளியைச் சுத்தம் செய்வதிலிருந்து, ஏன்? கக்கூஸ் சுத்தம் செய்வதிலிருந்து, பள்ளி சம்பந்தப்பட்ட கரண்ட் பில் கட்டுதல் மற்றும் வெளி வேலைகள் பார்ப்பதிலிருந்து அனைத்தையும் அவர்களே பார்ப்பதால், அவர்களும் தப்பிவிடலாம். கூலி வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கே அவர்கள் பெறும் சம்பளம் போதாது என்பதே உண்மையாகும். ஆனால் இப்படிப்பட்ட கூலி பெற அனுமதிக்கப்பட்ட எந்த வேலையையும் செய்யாமல் இமாமத் செய்வது, பயான் செய்வது, குர்ஆன் ஓதிக் கொடுப்பது போன்ற கூலி வாங்கக் கூடாத செயல்களுக்குக் கூலி வாங்கும், கற்றறிந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மவ்லவிகளே மறுமையில் வகையாக மாட்டப் போகிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?

*****************************************************

அமல்களின் சிறப்புகள்….

தொடர் : 51
M. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

இன்ஷா அல்லாஹ், இந்த இதழில் அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் 391வது பக்கத்தின் நான்காவது பத்தியில் 17வது எண்ணில் தர்ஃகீப் என்ற ஒரு புத்தகத் தில் இருப்பதாகக் கூறி ஹதீஃத் என்ற பெயரில் ஒரு விடயத்தை பிரசுரித்து விட்டு, அந்த ஹதீஃதுக்கு “விளக்கம்” என்ற பெயரில் குர்ஆனுக்கு எதிராக நச்சுக் கருத்து ஒன்றை 392வது பக்கத்தில் முதல் இரண்டு பத்திகளில் பிரசுரித்திருப்பதை இப்போது ஆய்வு செய்வோம். அப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள “விளக்கம்” என்ன என்பதை கீழே அடுத்த இரண்டு பத்திகளில் மட்டும் தந்துள்ளோம்.

(முதல் பத்தி) : “விளக்கம் : வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்ததைச் சிந்தித்துப் பார்க்கும்போது அல்லாஹு தஆலாவுடைய பேராற்றலின் வெளிப்பாடும். அவனுடைய ஞானங்களின் வியப்பும் மனிதர்களுடைய சிந்தனையில் வருகின்றன. இதனால் அல்லாஹு தலாவைப் பற்றிய ஞானத்தில் அவர்களுக்கு ஒரு வலிமை ஏற்படுகிறது”.

(இரண்டாம் பத்தி) “என் இரட்சகனே இவ் வுலகம் உன்னுடைய பூங்காவாகும் என்று ஓர் உருது கவிதை கூறுகிறது”.

எமது ஆய்வு :

அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத் தின் எமது ஆய்வுகளை தொடர்ந்து படித்து வருபவர்கள் அப்புத்தகத்தின் முதல் பத்தியில் மேலே காட்டிய செய்திகளைப் படித்த வுடன் அசி புத்தகத்தின் அணுகு முறையில் ஒன்றை திடமாக அறிந்திருப்பீர்கள். அதாவது சிந்தனை செய்வதன் சிறப்பு பற்றிக் கூறி, இதன் மூலமாக “நல்ல பிள்ளை” வேஷம் போட்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து இருப்பீர்கள். நல்ல பிள்ளை வேஷம் போடுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதையும் புரிந்து இருப்பீர்கள். அதாவது குர்ஆனுக்கோ, ஹதீஃதுக்கோ மாற்றமாக ஏதோ ஒரு அநியாயத்தை அடுத்ததாக அரங்கேற்றப்போகிறது என்பதையும் கச்சிதமாகப் புரிந்திருப்பீர்கள். அந்த அநி யாயத்தை மேலே காட்டியுள்ள இரண்டாவது பத்தியில் பத்து வார்த்தைகளில் பிரசுரித்திருக்கிறது அப்புத்தகம் குர்ஆனுக்கு எதிராக, அநியாயமாக பிரசுரிக்கப்பட்டுள்ள அந்த செய்தியை மீண்டும் தருகிறோம். படித்துப் பாருங்கள்.

“என் இரட்சகனே இவ்வுலகம் உன்னுடைய பூங்காவாகும் என்று ஓர் உருது கவிதை கூறுகிறது”.

இந்த கருத்தை அசி புத்தகம் எங்கிருந்து பெற்றது? அல்லாஹ் இறக்கி அருளிய குர்ஆனில் இருந்தா? அல்லது இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் நவின்றுள்ள ஹதீஃதுகளிலிருந்தா? குர்ஆனிலும் இல்லாத ஹதீஃதுகளிலும் இல்லாத இவர்களது சொந்த சரக்கு தான் இந்த நச்சுக் கருத்து.

1154 பக்கங்களைக் கொண்டுள்ள தலை யணைசைஸில் உள்ள இந்த முதல் பாகத் தில் ஏதாவது ஒரு மூலையில், போகிற போக்கில் படித்து விட்டு போகும்படியான, இஸ்லாத்தை புரட்டி போடும்படியான இது போன்ற நச்சுக் கருத்துக்களை புகுத்தி விடுவது அசி புத்தகத்தின் வாடிக்கை. எவராலும் இஸ்லாத்தைப் புரட்டி போட்டு விட முடியாது என்பது வேறு விஷயம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த உலகம் அல்லாஹ்வுடைய பூங்கா என்று கூறுகிறது அசி புத்தகம். குர்ஆனில் இவ்வுலகத்தைப் பற்றியும், உலக வாழ்வைப் பற்றியும் அகில உலகங்களையும் படைத்த அல்லாஹு ரப்பில் ஆலமீன் கூறி இருப்பதில் சிலவற்றையேனும் இப்போது காண்போம்.

“இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலகம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.’ (அல்குர்ஆன்: 4:77)

மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்படமாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன்:2:86)

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித் தோற்றத்தையே அறிகிறார்கள். ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
அல்குர்ஆன்: 30:7

இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. இன்னும் இவர்கள் (இதை) அறிந்திருந்தால், நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும். (குர்ஆன் 29:64)

மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது. பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி (கூளங்களாகி) காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய் விடுகிறது. மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.  அல்குர்ஆன்: 18:45

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும். என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத் தக்கவையாகவும் இருக்கின்றன.  அல்குர்ஆன்: 18:46

அல்லாஹ் தான் நாடியவருக்கு செல்வத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை. அல்குர்ஆன்:13:26

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்படமாட்டார்கள்.  அல்குர்ஆன்: 11:15\

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது. அல்குர்ஆன்: 9:38

முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர், முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு “ஸலாம்” சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு “நீ முஃமினல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (போர் முனையில்) நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையயல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். அல்குர்ஆன்: 4:94

இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.  அல்குர்ஆன் : 3:185

நிராகரிப்பவர்கள் நகரங்களில் (ஆடம்பரமாக) சுற்றித் திரிந்து கொண்டிருப்பது உங்களை மயக்கிவிடவேண்டாம். (3:196)

அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும். மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு), மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. அல்குர்ஆன்: 57:20\

எவர் தம் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டி ருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடியவர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன் தன் இச்சையைப் பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறிய தாகிவிட்டது. அல்குர்ஆன்: 18:28

மேற்கண்ட இறை வசனங்கள், இந்த உலகம் அற்பமானது, அழியக்கூடியது, வீணும் விளையாட்டும் கொண்ட வெளித் தோற்றம் கொண்டது, கூளங்களை (பதர்களை)க் கொண்டது என்றெல்லாம் ஏறக்குறைய இந்த உலகத்தை ஒரு குப்பைத் தொட்டியாக நம் கண் முன்னே காண்பித்து, மறுமைதான் சிறந்தது என்று அல்லாஹ் கூறுகிறான். அதுமட்டும் அல்ல, பூங்கா சுவர்க்கங்களில் இருப்பதாகவும் படைத்த ரப்பு கூறுகிறான் பாருங்கள். குர்ஆனின் 42:22 இறைவசனத்தை “எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்கள் சுவனபதிகளில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள்”

இந்த உலகத்தை அல்லாஹ்வின் பூங்கா என்று வீணர்களான கவிஞர்கள் தான் கூறுவர். குர்ஆனை பின்பற்றாமல் குர்ஆனை நிராகரித்து விட்டு கவிதைக்கு வக்காலத்து வாங்குகிறது அசி புத்தகம்.

இறை வசனங்கள் உலகத்தை “கூளம் (குப்பை)” என்கின்றன. ஆனால், அசி புத்தகமோ உலகத்தை “அல்லாஹ்வின் பூங்கா” என்கிறது. என்னே நெஞ்சழுத்தம்!குர் ஆனுக்கு எதிராகவே கருத்துக்களைக் கூறி வரும் அசி புத்தகம், குர்ஆனுக்கு எதிராக செயல்படும் கும்பலின் கைக்கூலி ஏஜண்ட் என்ற சந்தேகம், உண்மை முஸ்லிம்களுக்கு ஏற்படத்தான் செய்யும். அல்லாஹ்வே அறிந்தவன்.

அசி புத்தகத்தின் கேவலமான நிலைப்பாட்டை கூர்ந்து கவனித்து, அதனை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நிச்சயமாக மறுமையில் அவர்கள் அடையப் போகும் இழிநிலை வெட்டவெளிச்சத்திற்கு வந்துவிடும். தயார் நிலையில் இருக்கும் இறை வசனங்கள் இதோ!

“நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ. அல்குர்ஆன்:10:7

அவர்கள் சம்பாதித்த தீமைகளின் காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.  அல்குர்ஆன்: 10:8

அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம். அல்குர்ஆன்: 7:51]

உலக வாழ்க்கையை விரும்பியவர்கள் தங்குமிடம் நரகம்தான் என்றும், இறுதி நாளில் நற்பாக்கியங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதவாறு அல்லாஹ் அவர்களை மறந்து விடுவான் என்றும் அல்லாஹ் எச்சரித்த பின்னும், அசி புத்தகம் வழிகேட்டை துணிந்து அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆக பரிதாபத்திற்குரிய செயல் அல்லவா இது.

இந்த செயலை, நிராகரிப்பிற்குரிய செயலாக அல்லாஹ் எச்சரிக்கை விடுப்பதையும் கீழுள்ள இறை வசனத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.

நிராகரிப்போருக்கு (காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. (இதனால்தான் உலகத்தை அல்லாஹ்வின் பூங்கா என்கிறார்கள்) இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள். ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான். (அல்குர்ஆன்: 2:212)

பரிதாபத்திற்குரிய இவர்கள் அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறவும் முடியாது. நரகத்திலிருந்து வெளியேறும் பாக்கியமும் இவர்களுக்கு நடக்காது என்பதை அல்குர்ஆன் 45:35வது ஆயத்தில் எச்சரித்து இருப்பதைப் பாருங்கள்.

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றிவிட்டதினாலுமே இந்த நிலை இன்றைய தினத்தில் அதிலிருந்து (நரகிலிருந்து) அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கவும் மாட்டார்கள்.  அல்குர்ஆன் : 45:35

ஷைத்தானிடம் மாட்டிக்கொண்ட இவர்களை, ஷைத்தானிடம் ஏமாந்து உலக வாழ்க்கையை நேசித்து விட வேண்டாம் என்று அல்லாஹ் எச்சரிப்பதையும் காணுங்கள்.

“மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றிவிடவேண்டாம். இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன், உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விடவேண்டாம்”. அல்குர்ஆன் : 35:5

மனிதர்களே! உங்கள் இறைவனை யஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதேபோன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிடவேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும். அல்குர்ஆன் : 31:33

எனினும், நீங்கள் இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.  அல்குர்ஆன் : 87:16

ஆனால், மறுமையோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.  அல்குர்ஆன் : 87:17

“வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்படமாட்டாது”  அல்குர்ஆன் : 10:54

“இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள். இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்”.   அல்குர்ஆன் : 4:94

உலக வாழ்க்கையை நேசிப்பதன் மூலம் வழிகேடுதான் என்பதை அல்குர்ஆன் 14:3வது ஆயத்தில் அல்லாஹ் கூறிய அறிவுரையை அசி புத்தகம் நிராகரித்து விட்டது. நிராகரித்ததின் காரணமாக இவர்களின் இறுதி நிலை என்னவென்று இறை நெறிநூல் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

“இவர்களின் நிராகரிப்பின் காரணமாக, மிக்க துன்புறுத்தும் (நரக) வேதனையுடன், கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்”. அல்குர்ஆன்: 6:70

“இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டதனால், தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து, இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்து விடுவோம்”. அல்குர்ஆன்: 7:51

குர்ஆன், ஹதீஃதுகளுக்கு எதிராக, அசி புத்தகம் இஸ்லாத்தில் இல்லாததைக் கூறி மக்களை வழிகெடுக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. எனவே முஸ்லிம்களே! தப்லிக் ஜமாஅத்தில் இணைந்து குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் மாற்றமாக செயல்பட்டு மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறோம்.  இன்ஷா அல்லாஹ் இனியும் வரும்…

*****************************************************

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

M.T.M.  முஜீபுதீன், இலங்கை

2019 அக்டோபர் மாத தொடர்ச்சி…..

“உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங் களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உட மைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். அறிக! அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக்காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க்கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்) முதல் கட்டமாக, நமக்கிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கிறேன். அவன் பனூ சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்து வந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கிறேன்) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற் கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கின்றேன்.

அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெண்கள் விசயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் கைப்பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப்பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில், முறையான உணவும், உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.”

“உங்களிடையே நான் (மிக முக்கிய மான) ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக் கொண்டால் நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் நெறிநூலாகும் (அல்குர்ஆன்)” என்று கூறிவிட்டு, “(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள் அதற்கு மக்கள், “நீங்கள்(இறைச் செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள் (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள். (சமுதாயத்தார் மீது) அக்கறையுடன் நடந்து கொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்து விட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, “இறைவா! இதற்கு நீயே சாட்சி” என்று மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம் : 2334)

முஸ்லிம் 2334ம் ஹதீஃதை கவனிப்பதன் மூலம் நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த இறுதி ஹஜ்ஜின் போதே அல்லாஹ்வின் இறைநெறி நூலான அல்குர்ஆன் நிறைவு பெற்ற செய்தி அல்லாஹ்வினால் இறக்கி அருளப் பெற்றது. ஆகவே இஸ்லாம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப் பணிந்து நடக்க வழிகாட்டும் சத்திய மார்க்கமாகும். அல்லாஹ்வின் மார்க்கத்தினை நம்பிக்கை கொள்ளும் ஒவ்வொரு விசுவாசியும் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ்ஜு ஆகிய கடமைகளை நபி(ஸல்) அவர்கள் காட்டிய அடிப்படையில் வணங்கி வழிபடல் கட்டாய கடமையாகும். அதனை விடுவது பாவமாகும்.

இஸ்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கமல்ல அல்குர்ஆன் அல்லாஹ்வினால் இறுதி இறைநெறி நூலாக, இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதாகும். இந்த அல்லாஹ்வின் இறைநெறி நூல் முன்னைய இறைத்தூதர்களையும், அவர்களுக்கு அல் லாஹ்வினால் அருளப்பட்ட இறைநெறி நூல்களையும் உண்மைப்படுத்துகிறது. ஆகவே ஷைத்தானினால் வழிகாட்டப்பட்ட பல தெய்வக் கொள்கைகளை விட்டு அல்குர்ஆனின் வழியின் பக்கம் வருவதே மனித சமுதாயத்திற்கு விமோசனம் பெற ஒரே வழி ஆகும்.

நிலையான ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு உரியது:

அல்லாஹ்வினால் படைக்கப் பெற்ற உயிரினங்களும், உயிரற்றவைகளும் இந்தப் பூமியில் வாழ்கின்றன. மனிதன் அவதானிக்கின்ற கீழ் வானத்தில் சந்திரன், கோல்கள், சூரியன், நட்சத்திரங்கள், மற்றும் அறிந்த அறியப்படாத படைப்பினங்களும் ஒரு சீரான நியதியில் இயங்கியபடி இருக்கின்றன. அதுபோல் மனித அறிவுக்கு இன்னும் உட்படாத ஜின் இனம், வானவர்கள், ஏழு வானங்களும் படைக்கப்பட்டிருப்பதாக இறுதி இறை நெறிநூலான அல்குர்ஆன் கூறுகின்றது. இது பற்றிய செய்திகள் மனிதர்கள் கைவசம் வைத்துள்ள முன்னைய இறை நெறி தொகுப்புகளிலும் காணப்படுகின்றன.

இவை எல்லாவற்றையும் சீராக படைத்து, ஒரு விதிப்படி அன்றும், இன்றும், என்றும் இயக்கி ஆட்சி செய்பவன் யார்? நாத்திகர்கள் சொல்வது போல் இவை யாவும் தானாக இயங்குகின்றனவா? அல்லது பல தெய்வ கொள்கையுடையவர்கள் நம்புவது போல் இவை மனிதன் தன் கைகளினால் உருவாக் கியுள்ள தெய்வச் சிலைகள், இறந்து போன இறை தூதர்கள் அல்லது பெரியார்கள் அல்லது அரசர்களினால் படைத்து இயக்க வைக்கப்படுகின்றனவா? அல்லது ஆதியும் அந்தமும் இல்லாத, என்றும் துயிலோ, சோர்வோ இல்லாது என்றும் நிலைத்து செயற்படக் கூடிய, சகல வல்லமையும் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வினால் படைத்து பரிபாலித்து ஆட்சி செய்யப்படுகின்றவா? சிந்தியுங்கள்!

அல்லாஹ் காலத்திற்கு காலம் மனிதர்களை நேர்வழிப்படுத்த அனுப்பிய இறைத் தூதர்களான ஆதம்(அலை), நூஹ்(அலை), இப்ராஹீம் (அலை), இஸ்மாயில்(அலை), மூசா(அலை), ஈசா(அலை)போன்ற முன்னைய அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களும் ஏக இறைவனான அல்லாஹ்வே எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்துக் காப்பதாக மக்களுக்கு போதனை செய்தார்கள். இதனை இறுதி இறை நெறிநூலான அல்குர்ஆனும், இறுதி இறைத்தூதரான முஹம்மது(ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அல்குர் ஆன் கூறுவதைப் பாருங்கள்.

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறிய வில்லையா? (அல்குர்ஆன் : 2:107)

ஆகவே இந்த உலகங்கள் யாவற்றினதும் உண்மையான ஆட்சியாளன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே ஆவான். ஆகவே அவனின் கட்டளையின்படியே சகல காரியங்களும் நடைபெறுகின்றன. அத்துடன் மறுமை நாளில் முழு ஆட்சி அதிகாரமும் அவன் கையிலேயே காணப்படும். அவன் இந்தப் பூமியில் மனிதனை தனது பிரதிநிதியாக படைத்துள்ளான். அதில் அவன் விரும்பியவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளான். உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அவர்களின் பொறுப்புக்கள் பற்றி அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். ஆகவே அவனது கட்டளைக்கமைய ஆட்சியை நடத்திச் செல்பவர்களே வெற்றி அடைய முடியும்.

(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய், இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகின்றாய், நீ நாடியோரை கண்ணியப்படுத் துகிறாய், நீ நாடியோரை இழிவுபடுத்தவும் செய்கிறாய், நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கிறாய். (அல்குர்ஆன் : 3:26)

உலகில் மனிதர்கள் பல பெயர்களில் ஆட்சிகளை நிறுவி இருக்கலாம். உதாரண மாக மன்னராட்சி, அல்லது தலைவர் அல்லது ஜனாதிபதி அல்லது பிரதமர் எனப் பல பெயர்களில் பல முறைகளில் ஆட்சிகள் நிறு வப்பட்டிருக்க முடியும். அதாவது அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் பல ஆட்சி முறைகளை உதாரணமாக காட்டியிருக்கிறான். சில இறைத் தூதர்கள் மன்னர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றனர். நபி(ஸல்) அவர்கள் இறக்கும்போது எவரையும் ஆட்சித் தலைவராக நியமித்துவிட்டுச் செல்லவில்லை. ஆனால் ஆட்சித் தலைவராக வருபவரின் தகுதிகளை சாடையாக வெளிப்படுத்திச் சென்றிருக்கிறார்கள். நபித்தோழர்கள் அபூ பக்கர்(ரழி) அவர்களை ஆட்சித் தலைவராக (பைஅத்) சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக் கொண்டார்கள். அதுபோல் அபூபக் கர்(ரழி) உமர் கத்தாப்(ரழி)அவர்களை கலிபாவாக நியமித்துச் சென்றார்கள். ஆனால் உமர்(ரழி) அவர்கள் நபித் தோழர்களில் ஒரு குழுவிலிருந்து ஆட்சியாளரைத் தெரிவு செய்ய வழிகாட்டிச் சென்றார்கள். ஆகவே இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பல வழிகளி லும் மக்களின் அங்கீகாரத்துடன் நியமிக்கப் படலாம்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் எப்படி ஒரு இஸ்லாமிய ஆட்சியாளர் நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டிச் சென்றுள்ளனர் என அறிந்து கொள்வது அவசியமாகும். ஆகவே இஸ்லாமிய ஆட்சி நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் அமைக்கப்பட வேண்டும். அதுபோல் அந்த ஆட்சியில் வாழ்கின்ற மக்களும் அந்த ஆட்சியாளரு டன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அத்துடன் சில நபித்தோழர்களை வேற்று மத ஆட்சியாளர்களின் கீழ் விசுவாசத்துடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு வழிகாட்டப்பட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் ஹதீஃத்களை கவனிப்பதன் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.

அன்றும் இன்றும் ஆட்சி செய்த பல ஆட்சியாளர் மக்களை எவ்வாறு வழி நடத்தினார்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்கள் ஆட்சியில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதையும் வாசித்து அறிய முயற்சியுங்கள் அவ்வாறு அவதானிப்பின் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த நீதி, சமத்துவம், எளிமையான சகோதரத்துவத்தைச் தோற்றுவிக்கும் மனித நேயம் மிக்க நல்லாட்சியை அறிந்து கொள்ள முடியும்.

*****************************************************

அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்!

எஸ்.எம். அமீர், நிந்தாவூர்,  இலங்கை.

2019  அக்டோபர் தொடர்ச்சி…

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் சத்தியம் செய்யும் போது (அறியாமைக் காலத்தில் தெய்வங்களாகக் கருதப்பட்ட) “லாத்”தின் மீது சத்தியமாக என்றோ “உஸ்ஸா”வின் மீது சத்தியமாக என்றோ (தம்மையும் அறியாமல் பழக்கதோசத்தில்) கூறிவிட்டால் உடனே (அதற்குப் பரிகாரமாக) “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லட்டும்.  (அபூ ஹுரைரா(ரழி) புகாரி: 4860, 6107,6301, 6650, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னு மஜா, நஸயீ, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 1:716,717)

அறியாமைக் காலத்திற்கு நெருக்கமாக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய சிலரிடமே நபி(ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள். அறியாமைக் காலத்தில் “லாத்”தின் மீதும் “உஸ்ஸா”வின் மீதும் சத்தியம் செய்து வந்த அவர்களது நாவில் இப்போதும் அதே பெயர் அவர்களையும் அறியாமல் பழக்கவழக்கத்தில் வரத்தொடங்கியது. ஆகவே அதற்குப் பரிகாரமாக அமையட்டும் என்பதற்காக ஏகத்துவ உறுதிமொழியை உடனடியாக ஏகத்துவ உறுதிமொழியை உடனடியாகக் கூறும்படி அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். ஆக இது போன்ற அர்த்தமற்ற சத்தியங்களைச் செய் வதால் அல்லாஹ் தண்டிக்கமாட்டான்.\

ஆயிஷா(ரழி) அவர்கள் “அர்த்தமற்ற சத்தியங்கள்” என்பது குறித்து விளக்கம் அளிக்கையில் மக்கள் தங்களது உரையாடலின் போது ஒருவரை ஒருவர் மறுத்துப் பேசும் போது “லா வல்லாஹி” இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்றும் “பலா வல்லாஹி” ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக என்றம் “கல்லா வல்லாஹி” அவ்வாறில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்றும் சர்வ சாதாரணமாகக் கூறுவர் இவ்வாறு ஒருவரை ஒருவர் மறுத்துப் பேசும் போது பேச்சு வழக்கில் சத்தியம் செய்வார்கள் திட்டமிட்டு மனப்பூர்வமாக அந்தச் சத்தியத்தைச் செய்திருக்க மாட்டார்கள்.

அர்த்தமற்ற சத்தியம் என்பது வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் செய்யப்படும் சத்தியமாகும்.இத்தகைய சத்தியங்களை முறிப்பதால் அதற்காகக் குற்றப் பரிகாரம் செலுத்த வேண்டியதில்லை என்றும்,

மாறாக ஒன்றைச் செய்தே தீருவது என்று முடிவெடுத்து உளப்பூர்வமாக அதற்காகச் சத்தியம் செய்துவிட்டுப் பின்னர் அதைச் செய்யாமல் இருக்கும்போது தான் சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரம் செய்ய வேண்டும். இதையே ஒரு வசனத்தில் “நீங்கள் திட்டமிட்டுச் செய்த சத்தியங்கள் மூலமே உங்களைத் தண்டிப்பான் (5:89) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

மேலும் “கோபம் கொண்ட நிலையில் நீ செய்யும் சத்தியமே அர்த்தமற்ற சத்தியமாகும்” அல்லாஹ் உனக்கு அனுமதித்த ஒன்றை நீயாகத் தடை செய்து கொள்வதற்காகச் செய்யும் சத்தியமும் “அர்த்தமற்ற சத்தியமாகும்” என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் கூறியுள்ளார். (அபூதாவூத், பைஹகீ, ஹாக்கிம், தஃப்சீர் இப்னு கஸீர்: 1:714-719)

அல்லாஹ்வின் அடியார்கள் பதற்றத்திலும், கோபத்திலும் தமது உயிர் பொருள் குழந்தை ஆகியோருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்துவிடுவதுண்டு. அதை அல்லாஹ் ஏற்பதில்லை. அடியார்கள் மனதார அவ்வாறு பிரார்த்திக்கவில்லை என்பதை எல்லாம் வல்ல ஏக இறைவன் அறிவான் எனவேதான் அவர்கள் மீது கொண்ட அன்பாலும், கருணையாலும் இந்நிலையில் அவர்கள் செய்யும் (சாபப்) பிரார்த்தனையை அல்லாஹ் பொருட்படுத்துவதில்லை.

மேலும் மனிதன் அவசரக்காரன் கோபம் தலைக்கேறும்போது கட்டுப் பாட்டை இழந்து விடுகின்றான். தன்னிலையில் மறந்து மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றான். என்ன பேசுகிறோம்? என்ன செய்கிறான். அப்போது, தான் பெற்ற குழந்தைக்கு எதிராகவே சாபம் கொடுப்பான். ஏன் தன்னையே நொந்து கொண்டு தான் அழிந்து போகவேண்டும் என்று கொந்தளிப்பான் இது போன்ற சந்தர்ப்பங்களில் அவன் அல்லாஹ்விடம் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் எதிராகக் கேட்கும் பிரார்த்தனைகளை எல்லாம் அல்லாஹ் ஏற்பதாக இருந்தால் அழிவைத் தவிர மனிதனுக்கு வேறென்ன கிடைக்கும்? ஆத்திரத்தில் மதியிழந்து மனிதன் பேசுகின்றான் என்பது படைத்தவனுக்குத் தெரியாமலா போகும்? எனவே அவனது கொந்தளிப்பான கூக்குரலை அல்லாஹ் அலட்சி யம் செய்துவிடுகின்றான் இதனையே!

மனிதர்கள் நன்மைக்கு அவசரப்படுவதைப் போன்று (அவர்கள் கோரும்) தீமை (களு)க்கு அல்லாஹ்வும் அவசரப்பட்டால் அவர்களின் ஆயுள் (என்றோ) முடிக்கப்பட் டிருக்கும் (10:11) என்பதாக அடியார்களிடம் தான் காட்டும் பொறுமை அவர்களுடன் தான் மென்மையாக நடந்து கொள்ளும் பரிவு குறித்தும் பேசுகின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர் : 4:459-471, 33:5) அதனால் தான்,

பாவங்களைத் தள்ளுபடி செய்வதில் முதன்மையானவன் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்த பனூ இஸ்ரவேளர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரிடம் உயிரைக் கைப்பற்றும் வானவர் அவரது உயிரைக் கைப்பற்றிச் செல்வதற்காக வந்தார். அப்போது அந்த மனிதரிடம் உனது வாழ்நாளில் நீ ஏதாவது நன்மை செய்திருப்பதாக அறிந்திருக்கிறாயா? என்று கேட்டபோது அதற்கு அவர் அப்படி எதுவும் எனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார். நன்மை ஏதாவது செய்திருக்கிறாயா? என்று சிந்தித்துப்பார் என்று மீண்டும் கூறப்பட்டது. அவர், அப்படி நான் எதுவும் நன்மை செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உலக மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன்.

அப்போது அவர்களிடம் நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பேன். அப்போது வசதி உள்ளவருக்குக் கடனை அடைக்க அவகாசம் கொடுப்பேன் வசதி இல்லாது சிரமப்படுபவரைக் கண்டுகொள்ளாது அவரை மன்னித்துக் கடனைத் தள்ளுபடி செய்து விடுமாறு எனது பணியாட்களிடம் சொல்பவராக இருந்தேன். மேலும் அவர்களது கடனை நான் தள்ளுபடி செய்வதால் அல்லாஹ் எனது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்றும் எனது பணியாட்களிடம் சொல்பவராக இருந்தேன் என்று பதி லளித்தார். இதன் காரணமாக அல்லாஹ்வும் இவரை விடத் தள்ளுபடி செய்வதற்கு நானே மிகவும் தகுதி வாய்ந்தவன். எனவே அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் தள்ளுபடி செய்து விடுங்கள் என்று வானவர்களுக்குக் கட்டளையிட்டு அவரது பாவங் களைத் தள்ளுபடி செய்து மன்னித்துவிட்டான். (ஹுதைஃபா(ரழி), அபூமஸ்ஊத் அல் பத்ரீ(ரழி), புகாரி: 2077, 2078, 2391, 3451, (முஸ்லிம்)

பிரேதங்களிலிருந்து “”கஃபன்” துணிகளைக் களவாடி விற்றுப் பிழைப்பு நடத்தி வந்த வரையும் மன்னித்த கருணையாளன் :

மண்ணறைகளில் அடக்கம் செய்யப்படும் பிரேதங்களிலிருந்து அவற்றின் “கஃபன்” துணிகளைக் களவாடி விற்றுப் பிழைப்பு நடத்தி வந்த உங்களுக்கு முன்னால் வாழ்ந்த பனூ இஸ்ராயீல் மக்களில் உள்ள ஒரு மனிதரைப் பற்றிய ஒரு விட யத்தை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அவருக்கு இறப்பு நெருங்கிய போது அவர் தமது மக்களிடம் “நான் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்” என்று கேட்க, அவர்கள் “நல்ல தந்தையாக இருந்தார்கள்” என்றார்கள். ஆனால், அவரோ (தமது மறுமை வாழ்விற்காகப் பாவத்தைத் தவிர வேறு எதையும்) அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் “தயார் செய்திருக்க வில்லை” அல்லது “சேமித்திருக்கவில்லை” தம்மீது அல்லாஹ்வுக்கு சக்தி ஏற்பட்டால் தம்மை அவன் வேதனை செய்வான் என அவர் அஞ்சினார்.

எனவே, (அவர் தமது மக்களிடம்) நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்துவிட்டால் என்னை நெருப்பிலிட்டுப் பொசுக்கிவிடுங்கள். நான் வெந்து கரியாக சாம்பலாக மாறிய பின், எனது சாம்பலை எடுத்துக் “கடலில் தூவி விடுங்கள்” அல்லது சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்” என்றார். நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: இவ்வாறு அம்மனிதர் தமது மக்களிடம் அதற்கான உறுதிமொழிகளைப் பெற்றுக் கொண்டார். என் இறைவன் மீதாணையாக! (அவர் இறந்தவுடன்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். பிறகு அவரின் சாம்பலை சூறா வளிக் காற்று வீசிய ஒரு நாளில் தூவிவிட்டார்கள்.

அப்போது வல்லவனும் உயர்ந்தவனுமான அல்லாஹ் (பழையபடி முழு மனிதராக) ஆகிவிடு என்று சொல்ல (சாம்பலாகிக் காற்றோடு கலந்துவிட்ட) அந்த மனிதர் (உயிர் பெற்று) எழுந்தார்.அல்லாஹ் “என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணமென்ன?” என்று கேட்டான். அம் மனிதர் “உன்மீது கொண்ட அச்சத்தின் காரணத்தால்தான்” என்று பதிலளித்தார். அவரை அந்த நேரத்தில் அல்லாஹ்வின் கருணை தான் காப்பாற்றியது. அவரை அல்லாஹ் மன்னித்தான் என்றார்கள். (அபூ ஹுரைரா(ரழி), ஹுதைஃபா(ரழி), அபூசயீத், அல்குத்ரீ(ரழி), சல்மான் ஃபாரிஸி (ரழி), உக்பா பின் ஆமிர் (ரழி), புகாரி: 3452, 3478,3479,3481,6480, 6481,7506, 7508, ஃபத்ஹுல் பாரி)

நூறு கொலைகள் செய்தவரையும் மன்னித்துவிட்ட கருணையாளன் :

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டிருந்தார். பிறகு அவர் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞர் யார் என விசாரித்தார். அவருக்கு இஸ்ரவேலர்களிலுள்ள ஒரு பாதிரியார் காட்டப்பட்டார். அவர் வணக்கசாலியான அந்தப் பாதிரியாரிடம் சென்று, “நான் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்பு கிடைக்குமா?” என்று கூறவே, அவரையும் அந்த மனிதர் கொன்று, எண்ணிக்கையை நூறாக முழுமையாக்கிவிட்டார். பிறகு மீண்டும் அல்லாஹ்வை அஞ்சியவராக அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞரைப் பற்றி அவர் விசாரித்தார்.

அப்போது சிறந்த அறிஞர் ஒருவர் அவருக்குக் காட்டப்பட்டார். (அவரிடம் சென்று) அந்த மனிதர், “நான் நூறு கொலை கள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “ஆம்(கிடைக்கும்). இறைவனுக்கும், பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ, அங்கு மக்கள் சிலர் இருப் பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும் என்று சொன்னார். அவ்வாறே, அந்த மனிதர் (நல்லோர் வாழும்) அந்த ஊரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பாதி வழியில் இறந்துவிட்டார்.

அப்போது இறையருளைக் கொண்டு வரும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது) என்று சர்ச்சை செய்து கொண்டனர். அப்போது அருளின் வானவர்கள், “இவர் பாவ மன்னிப்புக் கோரி பாவத்திலிருந்து மீண்டு தமது உள்ளத்தால் இறைவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்” என்று கூறினர். அப்போது மற்றொரு வானவர் மனிதத் தோற்றத்தில் அங்கு வந்தார். அவரை அவ்விரு வானவர்களும் நடுவராக வைத்துக் கொண்டனர். அப்போது அந்த வானவர், “இவ்விரு ஊர்களுக்கு இடையி லுள்ள தூரத்தை அளந்து கணக்கெடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்கு உரியவராகவே அவர் இருப்பார்” என்று சொன்னார். அவ்வாறே கணக்கெடுத்த போது,

(அவர் வசித்தது வந்த ஊரைவிட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் நாடி வந்த ஊரே அவருக்கு மிகவும் சமீபமாக இருப்பதைக் கண்டனர். ஆகவே, அவரை அருளின் வானவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இதை அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அவர் (இறக்கும் தருவாயில்) தமது நெஞ்சை (அந்த நல்ல ஊர் இருக்கும் திசை நோக்கி சாய்த்துக் கொண்டே இறந்துவிட்)டார்” என்று எங்களிடம் கூறப்பட்டது என ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:3470, முஸ்லிம்: 5339,5340, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்)

அவனது அருளுக்கு இடையே தடையாக எவருமே இருக்க முடியாது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூஇஸ்ரவேலர்களில் சகோதரர்களாக இருவர் இருந்தனர் அவர்களில் ஒருவர் வணக்கத்தில் முழுமையாகத் திளைத்திருந்தார். இன்னொருவர் தன்னை மீறித் தவறில் வீழ்ந்து கிடந்தார். வணக்கத்தில் திளைத்திருந்தவர், மற்றவரைத் தொடர்ந்தும் பாவம் செய்பவராகவே கண்டு வந்தார். உடனே அவர் “சகோதரா!” நீ பாவங்களை விட்டுக் கட்டுப்பாட்டுடன் இரு என்று கூறினார். அதற்கு மற்றவர் “இது எனக்கும் என் இறைவனுக்கும் உள்ள பிரச்சனை நீ என்ன என் மீது கண்காணிப்பவ னாக அனுப்பப்பட்டுள்ளாயா? என்று கூறினார். அத்துடன் தொடர்ந்தும் அவர் பாவம் செய்து கொண்டே இருந்தார்.

இந்நிலை யில் ஒருநாள் அவர் செய்தது இவருக்கு மிகப் பெரும்பாவமாகத் தெரிந்தபோது நீ நாசமாகப்போக! நீ இவற்றைத் தவிர்த்து கட்டுப்பாட்டுடனேயே இரு! என்று கூறினார். அதற்கு அவர் “இது எனக்கும் என் இறைவனுக்கும் இடையிலுள்ள பிரச்சனை நீ என்ன என் மீது கண்காணிப்பவனாக அனுப்பப்பட்டுள்ளாயா? என்று கேட்டார். அதற்கு இவர் உடனே “அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான்” என்றோ அல்லது “அல்லாஹ் உன்னை ஒருபோதும் சுவனத் தில் நுழைக்கவே மாட்டான்” என்றோ கூறி னார்கள். இவ்வாறு அந்த வணக்கசாலி சொன்ன மாத்திரத்தில் அவ்விருவருடனும் “மலக்குல் மெளத்தை” அனுப்பிவைத்து அவ்விருவரின் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றினான்.

அவ்விருவரும் (அல்லாஹ்வின் முன்னி லையில் நிறுத்தப்பட்டபோது பாவம் செய்தவரைப் பார்த்து அல்லாஹ் “நீ எனது அருளைக் கொண்டு சுவனத்திற்குள் நுழைந்துவிடு” என்று கூறினான். வணக்க சாலியை நோக்கி “நீ என்னைத் தெரிந்தவனா? நீ என் கைக்குக் கீழ் உள்ள காவலனா? என்று கேட்டுவிட்டு (வானவர்களிடம்) “இவரை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்” என்று கட்டளையிட்டான். (அபூ ஹுரைரா(ரழி), அஹ்மத், அபூதாவூத், ஹதீஃத் குத்ஸீ : 35)

அல்லாஹ் அவரை நரகத்திற்கு அனுப்பியது காற்றுவாக்கில் வந்து விழுகின்ற ஒரு நான்காம்தர செய்தியல்ல! மிகப் பெரும் பாடத்திற்கும் படிப்பினைக்கும் உரிய செய் தியாகும். தனது தாராளத்தன்மை, விசாலமான, மன்னிக்கும் மனப்பான்மையைக் குறுக்கிட்டுக் குறைக்கும் விதமாகப் பேசுவோரை அவர் வணக்கசாலியாக இருந்தாலும் அல்லாஹ் வெறுமனே கண்டிப்பதுடன் விடவில்லை. மாறாக அவரை நரகத்தில் தூக்கி வீசிவிடுகின்றான். இதனையே நபி(ஸல்) அவர்களும்,

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்” என்று ஒருவர் கூறினால் அப்போது அல்லாஹ் “இன்னாரை நான் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறி எனது பேரருள் மீது அதிகாரம் செலுத்துபவன் யார்? இதோ! நான் அவரை மன்னித்து விட்டேன். மாறாக (எனது அதிகாரத்தைக் கையில் எடுத்த) உன்னுடைய (சத்தியம் செய்தவருடைய) நற்செயல்களை வீணாக்கி (உன்னையும் நரகத்தில் சேர்த்து) விட்டேன்” என்று கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ்(ரழி), முஸ்லிம்: 2621, ரியாதுஸ்ஸாலி ஹீன்: 1576, ஹதீஃத் குத்ஸீ : 34)\

பலமுறை பாவம் செய்தவரையும் மன்னித்து விட்ட கருணையாளன் :

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் ஒரு பாவம் செய்து விட்டார். பிறகு அவர் இறைவா! நான் ஒரு பாவம் செய்துவிட்டேன். ஆகவே என்னை மன்னித்துவிடுவாயாக! என்று பிரார்த்தித்தார். உடனே அவருடைய இறைவன் “எனது அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும் அவன் பாவங்களை மன்னிப்பான் அல்லது அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? நல்லது நான் எனது அடியானை மன்னித்து விட்டேன்” என்று சொன்னான்.\

பிறகு அந்த அடியார் சிறிது காலம் அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் மீண்டும் முன்பு போலவே “என் இறைவா! நான் மற்றுமொரு பாவத்தைச் செய்துவிட்டேன் ஆகவே என்னை மன்னித்துவிடுவாயாக! என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் இம்முறையும் எனது அடியான் தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும் அவன் பாவங்களை மன்னிப்பான் அல்லது அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிவித்துள்ளானா? அப்படியானால் நான் எனது அடியானை மூன்றாவது முறையாகவும் மன்னித்துவிட்டேன் இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும் என்று சொன்னான்.
(9:104, 4:110,146, புகாரி : 7507)

ஆதமின் மகனே! நிச்சயமாக நீ என்னிடம் பிரார்த்தனை செய்யும் காலமெல்லாம் நீ என்னை நம்பும் காலமெல்லாம் உன்னில் ஏற்படும் குற்றத்தை நான் மன்னிப்பேன். எதையும் நான் பொருட்படுத்த மாட்டேன். ஆதமின் மகனே! வானத்தின் முகட்டை உனது பாவங்கள் அடைந்து பின் என்னிடம் நீ பாவமன்னிப்புக் கோரினால் உன்னை மன்னிப்பேன் எதையும் நான் பொருட்படுத்த மாட்டேன். ஆதமின் மகனே! நீ பூமி நிரம்ப என்னிடம் பாவத்தைக் கொண்டு வந்து பின்பு எனக்கு எதையும் நீ இணை வைக்காதவனாக என்னை நீ சந்தித்தால், அது நிரம்ப உனக்கு நான் மன்னிப்பை தருவேன்” என்று அல்லாஹ் கூறினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரழி), அபூதர்(ரழி), முஸ்லிம்: திர்மிதி: 3540, இப்னு மாஜா முஸ்னத் அஹ்மத், ரி-ஸா:1878)

நீ என் அடிமை நான் உனது எஜமானன் என்று சொன்னவரையும் மன்னித்துவிட்ட கருணையாளன் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அதன் மீதே அவரது உணவும், பான மும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கை இழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார்.

தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில் அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், (“இறைவா! நீ எனது இறைவன், நான் உனது அடிமை” என்று சொல்வதற்குப் பதிலாக) இறைவா! நீ எனது அடிமை நான் உனது இறைவன்” என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த மனிதரை விடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன் னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான். (அனஸ் பின் மாலிக் (ரழி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), புகாரி: 6308, 6309, முஸ்லிம்: 5300)\

இணை கற்பிப்போரில் சிலர் கொலைகள் செய்திருந்தனர். அதனை அதிகமாகவே செய்திருந்தனர். விபச்சாரம் புரிந்திருந்தனர் அவர்கள் ஒருநாள் முஹம்மத்(ஸல்) அவர் களிடம் வந்து நீங்கள் கூறி வருகின்ற, நீங்கள் அழைப்பு விடுக்கின்ற எல்லாமே நல்லவைதான் நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா? என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்து நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோம் என்றனர்.

அப்போது “மேலும் அளவற்ற அருளாளனின் உண்மையான அடியார்களான அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் புனிதப்படுத்திய எந்த உயிரையும் தகுந்த காரணமின்றி கொல்லமாட்டார்கள். விபச்சாரம் செய்யமாட்டார்கள் (25:68) என்ற வசனம் அருளப்பட்டது. மேலும் (நபியே!) அவர்களுக்குக்) கூறுங்கள் வரம்பு மீறித் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! அல் லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும் கருணை காட்டுபவனுமாவான் எனும் (39:53) வசனமும் அருளப்பட்டது. (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி: 4810, முஸ்லிம்:193, தஃப்சீர் இப்னுகஸீர்: 7:941)

மிகவும் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் தமது கைத்தடியின் மீது ஊன்றியவராக நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த சில துரோகங்களும், பாவங்களும் உண்டு. ஆகவே எனக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படுமா?” என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நீர் உறுதி மொழிகிறீரா?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர் ஆம்! உறுதிமொழிகிறேன். அத்துடன் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள் என்றும் உறுதிமொழிகிறேன் என்று பதிலளித்தார். அப்படியாயின் “உம்முடைய துரோகங்களும், பாவங்களும் உமக்கு உறுதியாக மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அம்ர்பின் அபசா (ரழி), முஸ்னத், அஹ்மத்)

99 பாவ ஏடுகளை உடையவரையும் மன் னித்துவிட்ட கருணையாளன் :

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக எனது சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான் அவனுக்கு எதிராக தொண்ணூற்றொன்பது ஏடுகள் (அவன் செய்த பாவங்களாக) விரிக்கப்படும் அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு நீண்டதாக இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் இதோ இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? அல்லது பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள் இதில் உனக்கு ஏதேனும் அநீதி இழைத்துள்ளார்களா? என்று கேட்பான் “இல்லை” என்னுடைய இரட்சகனே இவை அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான் என்று கூறுவான். நீ வேதனையிலிருந்து தப்பிக்க உன்னிடம் ஏதாவது தகுந்த காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான்.

*****************************************************

டெஸ்ட் டியூப் பேபி…

ஜி.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை

கேள்வி : டெஸ்ட் டியூப் வழிக் குழந்தைப் பெற்றுக்கொள்வது மருத்துவ வளர்ச்சியின் புதிய முறையாகும். பரவலாக வெற்றி பெற்றுவரும் இந்த முறையை இஸ்லாம் அனுமதிக்கிறதா? இதனால் சிவில் சட்ட சிக்கல்கள் உருவாகுமா?

பதில் : டெஸ்ட் டியூப் என்றால் என்ன? என்பதை விளக்குவோம்…

அ. கணவன், மனைவி உறவின் மூலம் கருத்தரிக்கும் தன்மை இரு காரணங்களால் தடைபடுகின்றன. ஆணிடம் உள்ள நோய் போன்ற குறைபாடுகள், இயற்கையான முறையில் கருத்தரிக்க செய்ய முடியாத அளவிற்கு உயிரணுக்கள் குறைந்து போய் பலவீனப்பட்டிருத்தல்.

ஆ. பெண்ணின் கருப்பைக்கு பக்கத்தில் உள்ள கரு முட்டையுடன் காத்திருக்கும் பலோப்பியன் குழாய் இரண்டும் அடைபட்டிருப்பது.

இந்த இரு காரணங்களால் குழந்தை பாக்கியம் தடைபட்டு அல்லது தள்ளிப் போகும். இந்தக் காரணிகளை அறியாத மக்கள் கடந்த காலங்களில் சாமியார், மந்திரம், ஜோசியம், சாபக்கேடு என்ற மன உளைச்சலுடன் காலத்தையும் பொருளாதாரத்தையும் வீணடித்துக் கொண்டிருந்தார்கள்.

மருத்துவத்துறை மலட்டுத்தன்மைக்கான காரணிகளை கண்டறிந்து மாற்றுவழி போதித்தது அதுவே டெஸ்ட் டியூப் பேபி எனும் பரிசோதனைக் குழாய் குழந்தை, எண்பதுகளில் இந்த மருத்துவ முறை மேற்குலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பலத்த ஆர்வத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இயற்கை விதிப்படி சட்டப்பூர்வமான கணவன் மனைவிக்கு மட்டும் பயன்பட வேண்டிய இந்த மருத்துவ முறை பல கெடுதிகளுக்கு வழி வகுத்து நிற்கிறது. பாலியல் ஒழுங்கு, வம்சாவழி உறவு, இரத்த தொடர்பு பற்றியயல்லாம் அக்கறை யில்லாத மேற்குலகம் இந்த மருத்துவ முறையையும் தவறாகப் பயன்படுத்துகிறது.

இயற்கையாகக் கருத்தரிக்க முடியாத போது ஆணுடைய உயிரணுவையும் பெண் ணுடைய சினை முட்டையையும் வெளியில் எடுத்து செயற்கையாக அதை இணைத்து கருவறைக்கு ஒத்த இடத்தில் அதை வைத்து வளர்ச்சி நிலை கண்டறியப்பட்டு பின் பெண்ணுடைய கருவறையில் வைத்து விடுவதே பிரபலமான டெஸ்ட் டியூப் முறையாகும்.

நான்கு முறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன :

  1. மருத்துவருக்கு மட்டுமே தெரிந்த ஒருவருடைய விந்தணுவை கணவன் மனைவி சம்மதத்துடன் மனைவியின் கருமுட்டையில் சேர்த்து அவளது கருப்பையில் வைத்து விடுவது. இதில் விந்தணுவை கொடுப்பவரும் அதைப் பெறுபவரும் ஒரு வருக்கொருவர் அறிமுகமில்லாமல் மருத்துவருக்கு மட்டுமே அறிமுகமான நிலையில் இது நடக்கிறது. ரகசியம் பாதுகாக்கும் பொறுப்பு மருத்துவருக்குண்டு. இங்கிலாந்து அமெரிக்காவில் சட்டபூர்வமாக இது அனு மதிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் பிறக்கும் குழந்தையை சொந்த மகனாகக் கருதா மல் வளர்ப்பு மகனாகவே அமெரிக்கா கருதுகிறது.
  2. பல ஆண்களுடைய விந்தணுக்கள் வங்கிகளுக்கு தானமாகக் கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். குழந்தை தேவைப்படும் பெண் வங்கியை அணுகி தேவையான அணுவை தம் கருமுட்டையுடன் இணைத்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். ரோமன் கத்தோலிக்கர்கள் இதை அனுமதிக் கிறார்கள்.
  3. இயற்கையான உறவின் மூலம் கருத் தரிக்காதபோது கணவனின் உயிரணுவை எடுத்து அவன் மனைவியின் கருமுட்டையில் செயற்கையாகப்பொருத்தி குழந்தை பெற வைப்பது.
  4. ஆணின் உயிரணுவை அவன் மனைவியல்லாத வேறொரு பெண்ணின் கருமுட்டையுடன் இணைத்து அதை வேறொரு பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையைப் பெற்றெடுப்பது.

இப்படியாக பரிசோதனைக் குழாய் வழி முறைகள் பல தரப்படுகின்றன. இதில் பிந்திய இரு முறைகளில் மூன்றாவது நிலையை இயல்பாகவும், நான்காவது நிலையை சில நிபந்தனைகளோடும் இஸ்லாம் அனுமதிக்கிறது. முந்தைய இரு நிலைகள் முற்றாக தடுக்கப்பட்டுள்ளன. வம்சாவழி குண நலன்கள், முறையான சந்ததித் தொடர்புகள் போன்றவற்றை தமது குழந்தைகள் மூலம் வளர்த்துக் கொள்ள மனித சமுதாயம் விரும்புகிறது. விபச்சாரம், கள்ளத் தொடர்பு போன்றவை தடுக்கப்பட்டதற்கு இதுவே முதல் காரணம் நோய் போன்ற இதர காரணங்கள் அடுத்தவைதான். டெஸ்ட் டியூபின் முந்தைய இரு நிலைகளை பயன்படுத்தும்போது குடும்ப வம்சாவழி ஒழுங்குமுறை சிதைகிறது.

ஒரு ஆணும், பெண்ணும் திருமண உறவின் மூலம் கணவன் மனைவி என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். உலக முழுவதுமுள்ள சட்டங்கள் சந்தோஷமாக இதை வரவேற்கிறது.

இந்த அனுமதி ஏன்?

வெறும் உடல் இச்சையை தீர்ப்பதற்கு மட்டுமா? நிச்சயமாக இல்லை, உடல் பசி தீரவேண்டும் என்பதோடு அதன் மூலம் சந்ததி பெருக்கம் வேண்டும் என்பதும் நோக்கமாகும். ஒவ்வொரு ஆணும் தம் மனைவி தன் மூலம் கர்ப்பம் தரிப்பதையே விரும்புவான்-விரும்பவேண்டும்.

எவன் மூலமாவது குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றால் திருமணம், கணவன் மனைவி என்ற கோட்பாடுகளே தேவையில்லாமல் போய்விடும். மனைவியை கர்ப்பம் தரிக்க வைக்கும் சக்தி கணவனிடம் குறைந்து காணப்பட்டால் அதாவது உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந் திருந்தால் சோதனைக் குழாயின் மூன்றாவது முறையைப் பயன்படுத்தி தமது உயிர ணுவைக் கொண்டு தன் மனைவியைக் கர்ப்பம் தரிக்க வைத்துவிட முடியும். கணவனிடம் சுத்தமாகவே உயிரணு இல்லையயன்றால் அத்தகைய கணவனோடு சேர்ந்து வாழத்தான் வேண்டும் என்று எந்த சட்டமும் பெண்ணை நிர்ப்பந்திக்க வில்லை. எனவே சோதனைக்குழாயின் முதலிரண்டு வழிமுறைகளை அனுமதிக்க முடியாது – அனுமதிக்கக் கூடாது.

இதன் சிக்கல்களை இன்னும் விளங்குவோம் :

முகம் தெரியாதவனின் விந்தணு கணவனின் அனுமதியுடன் மனைவியிடம் செலுத்தி குழந்தைப் பெற்றெடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கருவை சுமந்து பெற்றதால் தாய் பாசம் இயல்பிலேயே அந்தப் பெண்ணிடம் இருக்கும். தந்தையயன்ற இயல்பு அந்தக் கணவனிடம் இருக்குமா? நிச்சயமாகக் குறைந்திருக்கும் அல்லது இல்லாமலேயே போய்விடும். தந்தை-மகன் என்ற இந்தப் போலி உறவில் இடைவெளி ஏற்படும்போது தந்தையிடமிருந்து மகன் பெறும் கல்வி, பொருளாதா ரத்தில் தேக்கம் ஏற்படும். இதனால் அந்தக் குழந்தையின் உயர் நிலைகள் பாதிக்கப்படும்.

குழந்தை வளர வளர வேறொருவனுடைய வாரிசு இங்கு வளர்கிறது என்ற எண்ணம் கணவனிடம் மேலோங்க வாய்ப்புள்ளது. விந்தணுவை இணைத்த மருத்துவர் பணத்தாசையாலோ இதர காரணங்களாலோ ரகசியத்தை வெளிப்படுத்த, அதனால் பிரச்சனைகள் எழ, இவர் என் தந்தையில்லை என்று குழந்தை அறிய, யார் என் தந்தை என்று மருத்துவரை அணுக, விபரம் அறிந்த பிறகு பெற்ற தாயோடும் உண்மையான தந்தையோடும் தொடர்பை ஏற்படுத்த தந்தை யாரென்று தெரியாவிட்டால் தந்தை பெயர் தெரியாதவன் என்ற அடைமொழியோடு வாழ்க்கை கசந்து போக இப்படி எத்தனையோ விடுவிக்க முடியாத சிக்கல்கள் முதலிரண்டு வழி முறைகளில் உள்ளன.

தந்தையல்லாதவனை சொந்தத் தந்தையாக நினைத்து தந்தையயன்று அழைப்பதை அல்லாஹ்வும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் எச்சரித்துள்ளார்கள்.

“…நீங்கள் (வளர்த்த) எவர்களையும், அவர்களுடைய தந்தைகளின் பெயர்களைக் கூறி அழையுங்கள்…”  (அல்குர்ஆன்:33:5)

“…உங்களுடைய சுவீகாரப் பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக (அல்லாஹ்) ஆக்கி விடமாட்டான்…” (அல்குர்ஆன்: 33:4)

எவனொருவன் தன் தந்தையல்லாத ஒரு வரை (பெற்றெடுத்தவர் என்ற எண்ணத்தில்) தந்தையயன்று அழைக்கிறாரோ அவர் இறை மறுப்பாளராகி விடுவார்.
(ஆதார நூல் : முஸ்லிம்)

அறிவார்ந்த சட்டங்களால் நிறைந்து நிற்கும் இஸ்லாம் மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு தான் எந்த ஒரு சட்டத்தையும் வகுக்கிறது. இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டத்திலும் கால சூழ்நிலை மனித இயல்புகள் எல்லாம் பரிசீலிக்கப்படுகின்றன. இணையில்லா அறிவாளனான இறைவன் ஒருவனால் மட்டும்தான் இத்தகைய சட்டங்களை இயற்ற முடியும் என்பதை ஆழ்ந்த அறிவுள்ளோர் உணர்வர்.

பரிசோதனைக் குழாய் குழந்தையில் அனுமதிக்கப்பட்ட வழிகளைப் பார்ப்போம்.

மூன்றாவது வழிமுறை இயற்கையோடு ஒத்திருக்கும் விஷயமாகும். அதாவது கணவனுடைய விந்தணுவை மனைவியின் கரு முட்டையில் செயற்கையாகச் சேர்த்து கருவறைக்கொப்ப ஒரு பாதுகாப்பான செயற்கைக் கருவறையில் வைத்து மூன்று நாட்களுக்கு கருவுற்ற முட்டையின் தன்மைகளைப் பரிசோதித்து விந்தணுவும் கருமுட் டையும் பொருந்திக் கொண்டது என்று உறுதியானவுடன் அதை மனைவியின் கர்ப்பப்பையில் சேர்த்து குழந்தை பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது. இந்த டெஸ்ட் டியூப் செயற்கைக் கருத்தரிப்பு முறை மிகவும் அக்கரையுள்ள மருத்துவர்களால் பலமுறை முயற்சித்தால் ஏதோ ஒரு முறை பலனளிக்கும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டும். இந்த வழிமுறையில் எவ்வித சட்ட சிக்கலும் இல்லை என்பதால் இதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

கணவனிடம் எக்குறையுமில்லாமல் மனைவியிடம் குறையுள்ளது. அதாவது கரு முட்டை உற்பத்திக் கோளாறு அல்லது கருவை சுமக்க முடியாத அளவிற்கு பலவீனமான கர்பப்பை என்றால் இப்போது என்ன செய்வது?

கணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியிலிருந்து அதில் ஒருத்திக்குக் குறைபாடு என்று வைத்துக் கொள்வோம். ஒருத்திக்கு கருமுட்டை உருவாவதில் பிரச்சனை இருக்கிறது. அதேசமயம் குழந்தை பெறும் ஆவலுடன் அவள் இருக்கிறாள் என்றால் கணவனது மற்ற மனைவியின் கருமுட்டையை அவள் சம்மதத்துடன் எடுத்து கணவனின் உயிரணுவை அதில் இணைத்து கருத்தரிக்க வைத்து குழந்தை பெற வைப்பது. இதுவும் இஸ்லாமிய சட்ட வரையறையில் அனுமதிக்கப்பட்டதாகும்.

இதில் சிற்சில கருத்து வேறுபாடுகள் தென்படுகின்றன. கருமுட்டை தானத்தின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு தந்தை இன்னார் என்று தெளிவானாலும் தாய் யார்? என்பதில் சர்ச்சை எழலாம்.

இதைத்தான் திருக்குர்ஆன் இப்படி அணுகுகிறது :

(குழந்தையைப்) பெற்றேடுத்தவர்களே அவர்களின் தாய்கள் ஆவர். (பார்க்க : 58:2)

(குழந்தையை சுமந்தத்) தாய் பலவீனத்திற்கு மேல் பலவீனப்பட்டு அவனைச் சுமந்து (ப் பெற்றாள்) (பார்க்க: 31:14)

கருமுட்டை மட்டும் ஒரு பெண்ணைத் தாயாக்கி விடாது. மாறாக அவள் கர்ப்பத்தை சுமக்க வேண்டும். அதன் பல வீனத்தை உணரவேண்டும். பெற்றெடுக்க வேண்டும். இதுதான் தாயயன்று அந்தஸ்தைக் கொடுக்குமென இறைவன் கூறுகிறான். இந்த வசனங்களோடு குறிப்பிட்ட சட்ட பிரச்சனையை அணுகும்போது கரு முட்டை தானம் கொடுப்பவள் சொந்ததத் தாயாக முடியாது சுமந்து பெற்றெடுப்பவளே குழந்தையின் தாயாக முடியும் என் பதை விளங்கலாம்.

டெஸ்ட் டியூப் வழிக் குழந்தைப் பெற்றுக்கொள்ள நாடும் முஸ்லிம் தம்பதியர்கள் சில ஒழுங்கு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

  1. இயற்கை உறவினால் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று உறுதியான மருத்துவ முடிவு கிடைத்த பின்னரே ஒரு முஸ்லிம் பெண் இந்த வழிமுறையை நாடவேண்டும். ஏனெனில் நிர்ப்பந்தமான காரணமின்றி அன்னிய ஆண்களிடம் தம் மறை உறுப்புகளை வெளிப்படுத்திக்காட்டுவது இஸ்லாத் தில் வன்மையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
  2. மருத்துவரை அணுகி செயற்கைக் கருத்தரிப்பு முறை செய்யும்போது கவனக் குறைவினால் உயிரணுக்களும் கருமுட்டைகளும் இடம் மாறிவிடாமல் மற்றவர்களின் பரிசோதனையோடு கலந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. கருமுட்டையையும், உயிரணுவையும் பரிசோதனையில் இணைக்கும் தருணங்களில் டாக்டரின் அனுமதியுடன் கணவன் உடனிருப்பது நலம்.
  4. பரிசோதனைக் குழாய்களுக்கு அடையாளமிடுதல் ஒவ்வொரு குழாயையும் தனித்தனியாக வைத்து பாதுகாத்தல் போன்ற பொறுப்புகளில் மருத்துவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
  5. முஸ்லிம் அல்லாத மருத்துவர்கள் செயற்கைக் கருவுறுதல் பரிசோதனையை செய்வது பற்றி ஆட்சேபணையில்லை. ஆனால் அந்த மருத்துவர் இஸ்லாமிய குடும்பச் சட்டங்களை விளங்கியிருப்பது நலம்.
  6. டெஸ்ட் டியூப் வழிக் குழந்தை பெற விரும்பி வரும் ஆணும், பெண்ணும் உண்மையில் கணவன் மனைவிதானா? என்று அறிவது பொறுப்புள்ள டாக்டரின் மீது கடமையாகும்.

பரிசோதனைக்குழாய் குழந்தை வழி முறையை இவ்வளவு விரிவாக இஸ்லாம் அணுகுகிறது.

*****************************************************

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : ஜமாஅத்துல் முஸ்லிமின் வெளியிட்டுள்ள காலண்டரில் முஹர்ரம் முடிவு 29.9.2019 என்றும் அந்நஜாத் அக்டோபர் இதழில் முஹர்ரம் முடிவு 28.9.2019 என்றும் இரண்டு தேதிகளை குறிப்பிட்டுள்ளீர்கள் ஏன் இந்த தடுமாற்றம்? வானர் நதீர்.

தெளிவு : பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறுக்கு வருந்துகிறோம். 1441 வருட காலண்டரில் முஹர்ரம் முடிவு 29.9.2019 என்று இருப்பதே சரியானது ஆகும். அந்நஜாத் அக்டோபர் இதழில் முஹர்ரம் முடிவு 28.9.2019 என்று தவறாக அச்சாகிவிட்டது அதனை 29.9.2019 என்று அனைவரும் திருத்தி கொள்ளவும். அடுத்த இதழ்களில் இதுபோன்ற தவறுகள் நடை பெறாதவாறு இன்ஷா அல்லாஹ் சரிசெய்து கொள்வோம்.

 அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்,

  1. இறுதி நேரம் நெருங்கிவிட்டது. இதுவும் பிறந்து விட்டது அல்லாஹ் எதைக் கூறுகிறான்?
    “சந்திரன்” அல்குர்ஆன் : 54:1
  2. ஃபாஸிக் என்றால் யார் என்று அல்லாஹ் கூறுகிறான்?
    “தீயவன்” (பாவி என்றும் பொருள்) அல்குர்ஆன்: 49:6
  3. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனை என்ன மாதிரி ஆவான் என அல்லாஹ் கூறுகிறான்?
    வானத்தில் இருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் ஆகிவிடுவான். குர்ஆன் : 22:31
  4. ஒரேயயாரு மனிதருக்கு நேர்வழி கிடைப்பது எதற்குச் சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    அரபுகளின் உயரிய சிகப்பு ஒட்டகங்களை தர்மம் செய்வதை விட சிறந்தது. புகாரி : 2942
  5. எந்த வயதில் பிள்ளைகளை அடித்து தொழுக அனுப்புங்கள் என நபி(ஸல்) கூறினார்கள்?
    பத்து வயதில். அபூதாவூத்: 495
  6. தூய்மையை மேற்கொள்பவர்களை அல்லாஹ் என்ன செய்வதாக கூறுகிறான்?
    நேசிப்பதாக கூறுகிறான். குர்ஆன்:9:108
  7. இணை வைப்பவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் எதை செய்வது தகுதியானதல்ல என அல்லாஹ் கூறுகிறான்?
    “பாவமன்னிப்பு கோருவது தகுதியா னது அல்ல” என்று கூறுகிறான்.   குர்ஆன்: 9:113
  8. யாருடைய முயற்சி வீணாகி விடாது என அல்லாஹ் கூறுகிறான்?
    நம்பிக்கையாளர்களின் நல்ல செயல்களுக்கான முயற்சி வீணாகி விடாது.  அல்குர்ஆன்: 21:94
  9. யாருக்கு தான் பாதுகாவலனாக இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
    “நம்பிக்கை கொண்டவர்களுக்கு”  அல்குர்ஆன்: 47:11
  10. “அந்நஸ்ர்” உதவி என்ற அல்குர்ஆனின் அத்தியாயம் எந்த நகரத்தில் இறங்கியது?
    மதீனாவில்.   அல்குர்ஆன் :110
  11. மக்காவில் எத்தனை சூராக்கள் இறங்கியது?
    86 சூராக்கள்.
  12. மதீனாவில் எத்தனை சூராக்கள் இறங்கியது?
    28 சூராக்கள்.
  13. ஷிஐப் (அலை) அவர்களை பொய்யாக்கியவர்களின் நிலை என்ன ஆனது என அல்லாஹ் கூறுகிறான்?
    ஒருபோதும் தம் வீடுகளில் வாழ்ந்திராதவர்களைப் போலாகினர்.  அல்குர்ஆன்: 7:92
  14. யாருக்கு நரக நெருப்பு இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்?
    அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தவர்களுக்கு நரக நெருப்பு இருக்கிறது என்று கூறுகிறான். அல்குர்ஆன் : 9:63
  15. ஸுர்(எக்காளம்) ஊதப்படும் நாளில் எது இருக்காது என அல்லாஹ் கூறுகிறான்?
    உறவுகள் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். அல்குர்ஆன்: 23:101
  16. மூஸா(அலை) அவர்களையும், ஹாருன் (அலை) அவர்களையும், மேலும் இருவரின் சமூகத்தாரையும் எதிலிருந்து இரட்சித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
    அவ்விருவருடைய சமூகத்தாரையும், அவ்விருவரையும் மிகப் பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்ததாக கூறுகிறான். அல்குர்ஆன்: 37:115
  17. அல்மாயிதா என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
    “ஆகாரம்” (உணவுத் தட்டு)   அல்குர்ஆன்: அத்:5
  18. நபி உஜைரை யூதர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
    அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள். அல்குர்ஆன் : 9:30
  19. ஐயூப்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் எப்படி பிரார்த்தித்தார்கள்?
    ஐயூப்(அலை) தம் இறைவனிடம் நிச்சயமாக என்னை துன்பம் தீண்டியிருக்கிறது. கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகப் பெரிய கிருபை செய்பவனாக இருக்கின்றாய் என பிரார்த்தித்தார்கள். அல்குர்ஆன் : 21:83

*****************************************************

Previous post:

Next post: