ஐயம் : ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புகாரியின் ஹதீஃத் எண். 4425ல் அபூ பக்கர்(ரழி) அவர்கள் ஜமல் போரில் நாம் கலந்து கொள்ளாததன் காரணத்தைக் கூறுகிறார்கள். அபூபக்கர்(ரழி) அவர்கள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகுதான் ஜமல் போர் நடைபெற்றது. அப்படி இருக்கும் போது, இந்த ஹதீஃத் வரலாற்று செய்தியுடன் நேரடியாக மோதுகிறது. இதில் முரண் பாடு இருக்கிறதா? விளக்கவும்.   ஜாஃபர், திருநெல்வேலி.

தெளிவு : அபூபக்கர்(ரழி) அவர்கள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகுதான் ஜமல் போர் நடைபெற்றது என்பதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். ஆம்! ஜமல் போர் 07-11-656 அன்று நடைபெற்றது. ஆனால், ஜமல் போருக்கு முன்பே 23-8-634 அன்று அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் மரணித்து விட்டார்கள்.

வரலாற்று செய்தியுடன் இது நேரடியாக மோதுகிறது என்று தாங்கள் கூறுவது உண்மைதான். இதனை நாம் சோதித்ததில், பிரசுரித்ததில் தவறு ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது. சரி செய்து கொள்வதற்காக, இதனை ரஹ்மத் பதிப்பகத்தாருக்கு (சகோதரர் அப்துல் ரஜ்ஜாக் என்பவரிடம் தொலைபேசி எண்ணில்(+914424997373) தெரியப்படுத்தியும் விட்டோம்; அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வதாக கூறியுள்ளார்.

ஏற்பட்டிருக்கும் தவறு யாதெனில், ஹதீஃத் எண் 4425ல் அபூபக்ரா(ரழி) என்று பிரசுரித்திருப்பதை, அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரழி) என்று திருத்திக் கொண்டால் சரி செய்யப்பட்டு விடும். ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அதே பதிப்பான புகாரியில் ஹதீஃத் எண். 7099லிருந்து இதை அறிய முடிகிறது. அதனை கீழே பிரசுரித்துள்ளோம்.  ஹதீஃத் 7099 :

ஜமல் போர் சமயத்தில் ஆயிஷா(ரழி) அவர்களின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டு நான் போரிட முற்பட்டபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் மூலம் அல்லாஹ் எனக்கு பயனளித்தான்

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, அவர்கள், “தம் விவகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்து சமுதாயம் ஒருபோதும் வெல்லாது” என்றார்கள். இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல். (நூல்:புகாரி, ஹதீஃத் எண். 7099, பாடம்: 18, துணைப் பாடம்:(ஜமல் போர்) அறிவிப்பாளர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரழி) அவர்கள்)

ஐயம் : தஜ்ஜால் பற்றி விளக்கம் தேவை?  அப்துல் ஜலீல், நெல்லிக்குப்பம்.

தெளிவு: தஜ்ஜால் என்ற வார்த்தை புனித குர்ஆனில் இடம் பெறவில்லை. குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லி ஹதீஃதுகளை ஏற்காதவர்களைப் பொறுத்தவரை, தங்களுக்கு அவர்களால் பதில் தரமுடியாது. தஜ்ஜால் என்ற சொல் குர்ஆனில் இடம் பெறாததால், தஜ்ஜால் எனபவன் வரமாட்டான் என்று கூட அவர்கள் சொல்லலாம். எனவே முதலில் அவர்களுக்கு இறைவனின் சில ஆயத்துக்களை கூறி அவர்களை நேர்வழியின்பால் அழைப்போம்.

“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டு தான்” (சுயமாக ஒன்றும் கூறவில்லை) என்று நீர் கூறும். (அல்குர்ஆன் : 21:45)

எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை. ஒவ்வொரு தவ ணைக்கும் ஒரு ஏடு உள்ளது.
(அல்குர் ஆன்: 13:38)

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிக்கேட்டி லேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 33:36)

எந்தத் தூதருக்கும் அல்லாஹ்வின் அனு மதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு இல்லை. (அல்குர்ஆன்: 40:78)

நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர். (அல்குர்ஆன்: 52:48)

இப்போது நாம் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் ஈமான்(நம் பிக்கை) கொண்டுள்ளதால், தங்களுக்கு விளக்கம் தர மகிழ்வுடன் முன்வருகிறோம். எனவே, கீழ் தரப்பட்டுள்ள 6:158வது இறை வசனத்தை கவனியுங்கள்.

“அவர்களிடம் மலக்குகள் வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி, (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின் றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும் அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொருநன்மையையும் சம்பாதிக்காமலிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அளிக்காது. ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள், நாமும் எதிர்பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும்.  (அல்குர்ஆன்:6:158)

அவர்கள் எதிர்பார்ப்பது :

  1. மலக்குகள் வருவதை அல்லது
  2. இறைவன் நேரில் வருவதை அல்லது
  3. இறைவனின் அத்தாட்சிகளில் சிலதை,

அவர்கள் முன் மலக்குகள் நேரில் வருவதும், இறைவன் நேரில் வருவதும் மறுமையில் நிகழவிருக்கும் நிகழ்வுகள் ஆகும். எனவே, இவ்வுலகில் இறைவனின் அத்தாட்சிகளில் சிலவற்றை எதிர்பார்க்கும்படி அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிடுகிறான்.

இறைவனின் அந்த அத்தாட்சிகள் ஒன்றா, இரண்டா, பலவா? குர்ஆனில் காட்டப்பட்ட அத்தாட்சிகள் எவை என்பதை இப்போது காண்போம். குர்ஆனின் 27:82வது ஆயத்தைப் பாருங்கள்.

“அவர்கள் மீது வாக்கு நெருங்கும் போது அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து (தாப்பத்தன் மினல் அர்ள்) நாம் வெளியாக்குவோம். அது, நிச்சயமாக மனிதர்கள் (யார் யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லை என்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்”  (அல்குர்ஆன்: 27:82)\

“உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அளிக்காது” என்று அல்லாஹ் 6:158 வசனத்தில் கூறியிருப்பதற்கேற்ப, தாப்பத்துல் அர்ள்- பூமியிலிருந்து வெளியாகும் அந்த பிராணி, அல்லாஹ்வின் வசனங்களில் உறுதி கொள்ளாதவர்கள் யார் யார் என்று காட்டிக் கொடுத்து விடும் என்று 27:82 வசனம் விளக்கம் தருகிறது.

உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில் என்று அல்லாஹ் பன்மையில் கூறிவிட்டு (6:158), புனித குர்ஆனில் “தாப்பத்துல் அர்ள்’;’ என்ற ஒரு அத்தாட்சியை மட்டும் 27:82 வசனத்தில் கூறி இருக்கிறான். அப்படியானால் மீதி அத்தாட்சிகள் யாவை என்று பார்ப்போம்.

நம்மில் எவருக்கும் மீதி அத்தாட்சிகள் பற்றி ஒன்றும் தெரியாது. குர்ஆன் மட்டும் போதும் ஹதீஃதுகள் வேண்டாம் என்று சொல்லும் சகோதரர்களுக்கும், அவை யாவை என்பதை குர்ஆனிலிருந்து மட்டும் பெற்று விட முடியாது. அவை யாவை என்பதை எப்படித்தான் தெரிந்து கொள்வது? அதை குர்ஆனே கூறுவதைப் பாருங்கள். அந்த அதிகாரத்தை அல்லாஹ் யாருக்கு கொடுத்து இருக்கிறான் என்பதை கவனிப்போம்.

“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு திருந்திக் கொண்டார்களோ, அவர்களுக்கு அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவு மாட்டார்கள்”. (அல்குர்ஆன்: 7:35)

இந்த இறை வசனம் தரும் தெளிவைப் பாருங்கள். இறைத்தூதர் இறை வசனங்களை விளக்கினால், அதை ஏற்று செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகி றான். ஹதீஃது தேவை இல்லை என்று சொல்லி, குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லிக் கொண்டே குர்ஆன் கூறுவதை நிராகரிக்கும் விந்தை மனிதர்கள் அல்லாஹ் நாடினால் இதிலிருந்து படிப்பினைப் பெற்றிட முடியும்.

சரி! இப்போது இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் 7:35 இறை வசனத்தின்படி 6:158 இறைவசனத்திற்கு தந்துள்ள விளக்கங்களைப் பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி, மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறை நம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரின் நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்” என்று கூறிவிட்டு, “உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில், முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது” எனும் இந்த 6:158 வசனத்தை ஓதினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி: ஹதீஃத் எண்: 4636)

“மூன்று அடையாளங்கள் தோன்றி விட்டால், முன்பே இறை நம்பிக்கை கொண்டிராத அல்லது இறை நம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மை ஏதும் செய் திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறை நம்பிக்கை பயனளிக்காது 1. மேற்கிலிருந்து சூரியன் உதயமாதல், 2.தஜ்ஜால் (வருகை), 3. பூமியிலிருந்து வெளிப்படும் பிராணி(தாப்பத்துல் அர்ள்) என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்:முஸ்லிம், ஹதீஃத் எண். 240)

தஜ்ஜாலைக் குறித்து எண்ணற்ற ஸஹீ ஹான ஹதீஃதுகள், பல ஹதீஃது நூல்களில் இடம் பெற்றுள்ளன. நிறைய ஹதீஃதுகள் திரும்பத் திரும்ப வெவ்வேறு நூல்களில் காணக் கிடைக்கின்றன. தஜ்ஜாலைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ள புகாரி ஹதீஃது நூலில் உள்ள சில ஹதீஃதுகள் போதுமானவைகளாக இருப்பதால், அவற்றில் தஜ்ஜால் சம்பந்தப்பட்டவைகளைப் பற்றி மட்டும், நபி(ஸல்) அவர்கள் கூறிய வைகளை சுருக்கமாக கீழே தந்துள்ளோம். அறிவிப்பாளர் பெயர், ஹதீஃதில் இடம் பெற்ற பிற செய்திகள் முழுமையாகத் தரப்படவில்லை. முழு ஹதீஃதையும் படிக்க விரும்புபவர்களுக்கு ஏதுவாக ரஹ்மத் அறக்கட்டளை வெளியீடான புகாரியின் ஹதீஃது எண் மட்டும் தரப்பட்டுள்ளது.

ஹதீஃத் எண்கள் : 832,833, 4707, 6368, 6375 :
நபி(ஸல்) அவர்கள் தொழுகையில், இறைவா! தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று துஆ செய்வார்கள்.

ஹதீஃது எண்கள் : 922, 1053 :
கப்ருகளில், தஜ்ஜாலின் குழப்பத்துக்கு நிகரான குழப்பத்துக்கு நீங்கள் உள்ளாவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கிரகண தொழுகைக்குப்பின் ஆற்றிய உரையில் கூறினார்கள்.

ஹதீஃது எண்கள் : 1354, 1355, 6173 :
என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன. நான் இறைத்தூதர் என்று நீர் சாட்சி கூறுகிறாயா? என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவிய சிறுவன் இப்னு ஸய்யாத் தஜ்ஜாலாக இருப்பானோ என சந்தேகித்தல்.

ஹதீஃத் எண்கள் : 1555, 5913 :
தஜ்ஜாலின் 2 கண்களுக்கு மத்தியில் காஃபிர் என எழுதப்பட்டிருக்கும்.

ஹதீஃது எண்:  1879 :
தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக் குள் நுழையாது.

ஹதீஃது எண் : 1880 :
மதீனாவுக்குள் கொள்ளை நோயும், தஜ்ஜாலும் நுழைய முடியாது.

ஹதீஃது எண்கள் : 1881, 5731 :
மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது

ஹதீஃது எண்: 1882 :
தஜ்ஜால் வருவான். மதீனாவின் வாசல்களில் நுழைவது தடுக்கப்பட்டு இருந்தது. எனவே மதீனாவின் உவர் நிலத்தில் தங்குவான். மக்களில் சிறந்த ஒருவர் அவனிடம் வந்து “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்” என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களிடம்), நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால், என் விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா? என்று கேட்டான். மக்கள் “கொள்ளமாட்டோம்” என்பார்கள். உடனே அவன் அவரைக் கொன்று பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப்பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்க வில்லை” என்று கூறுவார். தஜ்ஜால், “நான் இவரைக் கொல்வேன்” என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்லமுடியாது. (அனுமதி அளிக்கப்பட்டது ஒருமுறைதான்)

ஹதீஃது எண் : 4366
பனூ தமீம் குலத்தார் தாம் என் சமுதாயத்திலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்வார்கள்.

ஹதீஃதி எண்கள் : 4402, 5902 :
நூஹ் நபியும், அவருக்குப் பின் வந்த இறைத்தூதர்களும் தஜ்ஜாலைக் குறித்து தமது சமுதாயத்தினருக்கு எச்சரித்தனர். என் சமுதாயத்தினராகிய உங்களிடையேதான் அவன் தோன்றுவான். உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்ல, தஜ்ஜால் வலது கண் குருடனாவன். அவனுடைய கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும்.

ஹதீஃது எண் : 6365 :
இம்மையின் சோதனையை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன் இம்மையின் சோதனை எனபது தஜ்ஜாலின் சோதனை என்பதாகும்.

“நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்பார்க்கின்றோம் என்று (நபியே!) நீர் கூறும்” என்ற (6:158) வசனத்திற்கு, “”மேல் திசையிலிருந்து சூரியன் உதயமாதல் என்று நபி(ஸல்) அவர்கள் பொருள் விவரித்தனர்”  (அறிவிப்பாளர்: அபூ ஸயீத்(ரழி), நூல்:திர்மிதி)

உலக முடிவு நாளின் அடையாளங்களில் முந்தியது சூரியன், தான் அஸ்தமனம் ஆகும் இடத்திலிருந்து உதயமாவதும், காலையில் தாப்பத்துல் அர்ள் வெளிப்படுவதும் ஆகும். இந்த இரண்டில் எது முந்தி விடுகிறதோ, அதனை அடுத்து மற்றதும் வெளிப்பட்டுவிடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். (அறிவிப்பாளர்: இப்னு அம்மருப்னுல் ஆஸ்(ரழி) நூல் : முஸ்லிம், திர்மிதி)

தஜ்ஜாலைப் பற்றிய விளக்கம் தங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்!

(குறிப்பு: இடமின்மை காரணமாக, யஃஜூஜு மஃஜூஜு (குர்ஆன்:21:96) கூட்டத்தார் பற்றி தாங்கள் கேட்டுள்ள விளக்கம் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் தரப்படும்).

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: