இதைப் பற்றிய தகவல் உங்களிடம் வந்ததா?

in 2012 ஏப்ரல்

மு.கதிஜத்துல் சாரா M.Sc.,
கிழக்கு தாம்பரம்

அல்லாஹ் கூறுகிறான்
காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான(நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒரு வருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர் கள் நஷ்டத்திலில்லை) அல்குர்ஆன். அத். 103

மேலே உள்ள குர்ஆன் வசனத்தை மேலும் ஒருமுறைப் படித்து அல்லாஹ்விற்காக உங்கள் உள்ளங்களை முதலில் ஒருமைப் படுத்துங்கள். ஏனெனில் நேர்வழி/தகவல்கள் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றது. தான் நாடியோரை அவனே நேரான/சரியானப் பாதையில் செலுத்துகிறான். அல்லாஹ்விடம் உதவி தேடி இதைப் படியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இதனைக் குறித்து தெளிவான சிந்தனைகளை ஏற்படுத்தி நேர்வழி காட்டுவானாக. இறைவா எங்கள் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!

இறை நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய தாக அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். வலிமை மிக்க இறை நம்பிக்கையாளர் பலவீனமான இறை நம்பிக்கையாளனைவிட சிறந்தவராவார்; அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். எனினும் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயன்தரக் கூடியதையே நீ ஆசைப்படுவாயாக! அல்லாஹ்விடம் உதவி தேடுவாயாக! நீ தளர்ந்து விடாதே! உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது “”நான் இப்படிச் செய்திருந்தால் அப்படி ஆகியிருக்கும் என்று கூறாதே. மாறாக அல்லாஹ் விதித்தபடி நடந்துவிட்டது” அவன் நாடியதைச் செய்துவிட்டான் என்று சொல், ஏனெனில் இப்படி செய்திருந்தால் அப்படி ஆகியிருக்கும் என்பதைக் குறிக்கும் சொல் ஷைத்தானின் செயலுக்கு வழி வகுக்கும்.- முஸ்லிம்.

ஓர் இறை நம்பிக்கையாளன் எவ்வாறு மன உறுதியுடன் வாழவேண்டும் என்பதற்கான வழிமுறையை முஹம்மது(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். நமக்கு என்ன நடக்க வேண்டும் என்று அல்லாஹ் விதித்துள்ளானோ அதுதான் நடக்கும். அதற்கு மாற்ற மாக எதுவும் நடக்கப் போவதில்லை என்ப தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட ஒருவன் எந்த துன்பம் ஏற்பட்டாலும் அஞ்சமாட்டான். மாறாக அல்லாஹ் ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டான் என்று எண்ணி எந்தவித பயமுமின்றி அல்லாஹ்வுடைய உதவியை மட்டுமே எதிர் பார்த்துக் கொண்டிருப்பான்.

அல்லாஹ்வின் மீது பலவீனமான நம்பிக்கைக் கொண்ட மனிதனோ அவனுக்கு ஏற்படும் இழப்புகளையும், சோதனைகளையும் பெரிதாகக் கருதுவான். நான் அப்படிச் செய்திருக்கக் கூடாதா? இப்படிச் செய்திருக்கக் கூடாதா? என்றெல்லாம் சொல்லி பதறியும், புலம்பியும் திரிவான். இந்த செயல்களெல் லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடந்து முடிந்துள்ளது என்ற விதியின் மீதுள்ள நம்பிக்கையைப் பலவீனப்படுத்தும் செயல்களாகும். எனவே, நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்துள்ளது (என்று நம்ப வேண்டும்) நமது திறமையாலோ, முயற்சியாலோ அல்ல என்ற நம்பிக்கை ஏற்படும்போது எவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவற்றைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் தானாக வந்துவிடும்.

“”அல்லாஹ்விற்கு விருப்பமான முறையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்!”

அல்லாஹ்விற்கு விருப்பமான வாழ்க்கையை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்வது? அப்படி அமைத்துக் கொள்ளும்போது, சோதனைகள் பல எவ்வாறு ஏற்படும்? அச்சோதனைகள் எவ்வாறெல்லாம் இருக்கும்? அச்சோதனைகளை நாம் எவ்வாறு எதிர் கொள்வது? அதற்கான ஆயுதம் எது? அந்த ஆயுதத்தின் மகிமை என்ன? அது நம்மை படைத்த அல்லாஹ்விடத்தில் எந்த அளவிற்கு மதிப்புமிக்கது? பார்ப்போமா? அல்லாஹ்வின் நெறிநூலிலும், நபி(ஸல்) அவர்களின் உபதேசத்திலும்….
1. யாரை அல்லாஹ் சோதிக்கிறான்?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை அவன் சோதிக்கிறான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) – புகாரீ.

2. மனிதன் எப்போது சோதிக்கப்படுகிறான்?
அல்லாஹ் கூறுகிறான்.
ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படி யிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வது மில்லை; (அதுபற்றி) நினைவு கூர்ந்து நல்லு ணர்ச்சி பெறுவதுமில்லை. – அல்குர்ஆன் 9:126

3. எவற்றைக் கொண்டெல்லாம் சோதிக்கப் படுகிறான்?
அல்லாஹ் கூறுகிறான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தா லும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாரயங் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:155

4. தவறிழைப்பவர்களுக்கு மட்டுமா சோதனை?
அல்லாஹ் கூறுகிறான்.
நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவதனால் மட்டும் அவர்கள் சோதிக் கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சய மாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே – அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம். ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களை யும் அவன் நிச்சயமாக அறிவான்.
அல்குர்ஆன் 29:2.3
“”சோதனையை வெல்லும் ஆயுதம் பொறுமையே!”

5. சோதனையின் போது பொறுமையாளர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்.
(பொறுமை உடையோராகிய)-அவர்க ளுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள். அல்குர்ஆன் 2:156

6. அல்லாஹ்வின் கிருபை யாருக்கு?
அல்லாஹ் கூறுகிறான்.
பொறுமையுடையோர் மீது தான் அவர்க ளுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்.
அல்குர்ஆன் 2:157

7. யாரை அல்லாஹ் மன்னிக்கின்றான்?
அல்லாஹ் கூறுகிறான்.
(துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர் களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு. அல்குர்ஆன் 11:11

8. யாருடன் அல்லாஹ் இருக்கிறான்?
நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ அவர்களுடனும் எவர் நற் செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். அல்குர்ஆன் 16:128

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறு மையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக் கிறான். அல்குர்ஆன் 2:153
அல்லாஹ்வும், அவனது தூதரும் கற்றுத் தந்த அந்த வலிமை பொருந்திய அல்லாஹ்வின் அருள்பார்வை கொண்ட பொறுமை என்னும் ஆயுதத்தை பயன்படுத்தாத காரணத்தால் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தேசமும் இன்று எவ்வாறு சீரழிந்து சின்னா பின்னமாக ஆகி ஷைத்தானின் காலடியில் வீழ்ந்து கிடக் கிறது. சிந்தியுங்கள்!

9. சோதனையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்.
அல்லாஹ் கூறுகிறான்.
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போத னைகளை அவர்கள் மறந்துவிட்டபோது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட் களின் வாயில்களையும் நாம் திறந்து விட் டோம். பின்னர் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சி யடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேத னையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
அல்குர்ஆன் 6:44

10. சோதனையில் நிராசைக் கொள்ளாதீர்!
அல்லாஹ் கூறுகிறான்.
நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும், நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
அல்குர்ஆன் 11:9

11. சோதனையின் போது காலத்தைத் திட்டாதீர்!
நபி(ஸல்) கூறினார்கள்.
காலத்தைத் திட்டாதீர்கள். காலத்தைத் திட்டுகிறவன் என்னைத் துன்பத்துக்கு உள்ளாக்குகிறான். ஏனெனில் காலம் என் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. நானே இரவைப் பகலாக ஆக்குகிறேன் என அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) புகாரீ.

12. சோதனை நீங்கியவுடன் பெருமைக் கொள்ளாதீர்!
அல்லாஹ் கூறுகிறான்.
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் நம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும் படிச் செய்தால், “”என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன” என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் பெரு மகிழ்ச்சி யும், பெருமையும் கொள்பவனாக இருக் கின்றான். அல்குர்ஆன் 11:10

13. சோதனையை நீக்கும் ஆற்றலுடையவன்:
அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்)அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கி விட்டால் (அதை எவரும் தடுக்க முடியாது) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்ற லுடையவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 6:17

14. சோதனைகளை சகித்துக் கொள்பவர் களே வெற்றியாளர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங் கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றி யடைவீர்கள். அல்குர்ஆன் 3:200
நீங்கள் சோதிக்கப்படுகிறீர்களா?

இந்த நபிமொழியை நினைவுக்கு கொண்டு வாருங்கள். “”சுவர்க்கம் சிரமங்களால் சூழப் பட்டுள்ளது. நரகம் மன இச்சைகளால் சூழப் பட்டுள்ளது” அபூஹுரைரா(ரழி), திர்மிதீ.

நாம் நமது உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்வை கண் முன் கொண்டுவாருங்கள். அடுக்கடுக்கான துயரங்கள், சோதனைகள்… சிந்தியுங்கள்…

ஒருமுறை முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி), குர்ஆனாகவே இருந்தது என்று பதில் கூறினார் கள். (அல்ஹம்துலில்லாஹ்!)

இதிலிருந்து என்ன தெளிவாகிறது. அல்லாஹ் தான் விரும்பியோரின் நலம்/நன்மையை நாடியே சோதிக்கிறான்.
15. அல்லாஹ்வின் சோதனை வரவில்லையேல் அஞ்சுங்கள்:
அல்லாஹ் கூறுகிறான்.

இன்னும் அவர்களை (உடனுக்குடன் தன்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) நிராகரிப்பவர்களுக்கு-நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர் களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான்-அவர் களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
அல்குர்ஆன் 3:178

அல்லாஹ்வின் கண்காணிப்பில் உள்ளவர்கள் மட்டுமே சோதிக்கப்படுவார்கள். எனவே, நீங்கள் சோதிக்கப்படும்போது முன்பு அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை எண்ணி அவற் றிற்கு நன்றி செலுத்தி அவனிடம் உதவி தேடுங்கள். இவ்வாறு பிரார்த்தனை புரியுங்கள்.
அல்லாஹ் கூறுகிறான்.

“”எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழி யைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன் னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்”
அல்குர்ஆன் 3:8
அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்து வானாக.

வெற்றியாளர்களுக்கான பரிசு என்ன?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்படுத்தி வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
புகாரி.

எந்தக் கண்களும் பார்த்திராத, எந்த உள்ளமும் கற்பனை செய்திராத சுவர்க்கம் உங்களுக்கு வேண்டுமா? அல்லாஹ்வின் சோதனைகளில் அவநம்பிக்கை கொள்ளாமல் பொறுமையுடன் அவனிடம் உதவி தேடுங்கள்.
அல்லாஹ் கூறுகிறான்.

எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! நிராகரிக்கும் இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக! அல்குர்ஆன் 2:250

Previous post:

Next post: