நாய்கள் செல்ல பிராணியா?

in 2025 அக்டோபர்

நாய்கள் செல்ல பிராணியா?

M. சையத் முபாரக், நாகை

இப்பிரபஞ்சமும் அதிலுள்ள படைப்புகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதே. அதில் வேறு விதத்தில் பயன்படுகின்ற, நமக்குத் தீங்கு தருகின்ற சிலவற்றை அல்லாஹ் நமக்கு உண்பதற்கும், வளர்ப்பதற்கும் தடை செய்திருக்கின்றான். அதில் ஒன்றுதான் வீடுகளில் நாய் வளர்ப்பதும், அதோடு கொஞ்சி  குலாவி  விளையாடுவதும்.

இஸ்லாம்  என்ன  சொல்கிறது?

நாயும், உருவப்படங்களும் உள்ள வீட்டில் (இறையருளைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்என நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.  (புகாரி: 5949, முஸ்லிம் 4274)

(மேலும் பார்க்க: புகாரி : 3225, 4002, 5960, முஸ்லிம் : 4273,4275,4278)

கால்நடைகளைப் பாதுகாக்கவோ, வேட்டையாடவோ அல்லாமல் எவர் நாய் வைத்திருக் கிறாரோ அவருடைய நற்செயலில் (நன்மையில்) இருந்து ஒவ்வொரு நாளும் இருகீராத்அளவு குறைந்துவிடும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி: 5480, முஸ்லிம்: 3203)

(மேலும் பார்க்க: புகாரி : 2322,5482, முஸ்லிம் : 3205, 3209, 3212)

ஒருவருடைய (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்துவிடுமானால் அவர் அப்பாத்திரத்தை 7 முறை கழுவட்டும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி :172, முஸ்லிம் 470)

7 தடவை கழுவும்போது முதல் தடவை மண்ணால் (முஸ்லிம் 471) என்றும், 7 முறை நீரால் கழுவி 8வது தடவை மண்ணால் கழுவ வேண்டும் (முஸ்லிம் : 473) என்றும் நபி(ஸல்) அவர்கள் சொன்ன அறிவிப்புகளும் இருக்கின்றன.

நாயால்  ஏற்படும்  நோய்கள் :

வீட்டில் நாய் வளர்ப்பதற்கு இஸ்லாம் தடை செய்ய; அதன்மூலம் ஏற்படும் நோய்கள் பரவ காரணமாகும். மேலும் சில காரணங்களும்  உண்டு.

அரை நூற்றாண்டுக்கு முன் வரை வீட்டுக் காவலுக்கு; தோட்டம், துரவு, பயிர் பாதுகாப்பிற்கு, வேட்டையாடுவதற்கு நாய்கள் பயன்படுத்தப்பட்டன. அதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது. அந்த நாய்கள் அனைத்தும் வீட்டிற்கு வெளியில்தான் பராமரிக்கப்பட்டன, வீட்டிற்குள்  வர அனுமதி  கிடையாது.

அல்லாஹ் குகைவாசிகள் பற்றிக் கூறும்போது நாய் வாசலில் இருந்ததாகக் குறிப்பிடுவதையும் (அல்குர்ஆன் 18:18) நாம் இங்கு  கவனத்தில்  கொள்ளலாம்.

அந்தோ பரிதாபம்! இன்றோ நாய்களைச் செல்லப் பிராணியாக்கி வீட்டினுள் வளர்த்து, கொஞ்சி குலாவி முத்தமிட்டு மகிழ்கின்றனர்.

நாய் கடிப்பதாலும், நகத்தால் பிராண்டுவதாலும், உமிழ்நீர் படுவதாலும் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்றுதான் உயிரையே பறிக்கின்ற ரேபீஸ் நோய். இதற்கான மருந்து இதுவரை  கண்டுபிடிக்கப்படவில்லை.

ரேபீஸ் நோயால் பாதிக்கப்படும் ஒருவர் அனுபவிக்கும் கொடுமை (காற்று பட்டால் அச்சம், நீரச்சம், ஒளியைப் பார்த்தால் அச்சம் போன்றவைகள்)படும் மன உளைச்சல் சொல்லி  மாளாது.

நாய் கடியால் சுவாசக் கோளாறு, தசைச் சுருக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குடல் நோய், பசியின்மை, சோம்பல், தொண்டை அழற்சி, அரிப்பு, நாய்ச்சிரங்கு, தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல், மூளைக் காய்ச்சல், கருச்சிதைவு, மஞ்சள் காமாலை, சிறுநீர்ப் பாதைத் தொற்று, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பு போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

2023ல் நம் நாட்டில் 37 இலட்சத்திற்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்திருக்கின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 10,000 நபர்கள் நாய்களால் கடிபடுகின்றனர். வெறி நாய் (ரேபீஸ்) கடித்தால் பிழைப்பது அரிது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 நபர்கள் நாய்க்கடியால் இறக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.    (இந்து தமிழ் 2.9.2025 நாளிதழ்)

நாயால்  ஏற்படும்  பாதிப்புகள் :

நன்றியுள்ள ஜீவன், நல்ல நண்பன், சிறந்த பாதுகாவலன் என்று நாயை கொஞ்சி விளையாடி வீட்டில் வளர்த்தாலும் அதனால் மனித இனத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்து இருக்கவே  செய்கிறது.

மக்கள் உணவளிப்பதால் நன்றியுள்ளதாக, நண்பனாக நாய் தன்னைக் காட்டிக் கொள்கி றது. நாயின் உரிமையாளரை, அவர்தம் குடும்பத்தினரை நாய் தாக்கிய சம்பவங்கள் பலவற்றை நாம்  பார்த்தே  வருகிறோம்.

தெருவில் செல்லும்போது நாம் நாயின் அச்சத்தால் எத்தனை இடங்களை கடந்திருப்போம். நாய்கள் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் பயந்து நடுங்கும் சிறுவர் சிறுமிகளை நாம் பாதுகாப்பான முறையில் சிறிது தொலைவை கடக்கச் செய்திருப்போம். ஃபஜ்ர் தொழுகைக்கு டூவீலரில் வருபவர்கள் கூட நாய்களை விரட்ட கம்பு(தடி)களை எடுத்து வரும் சூழலும் இருக்கின்றது.

நடந்தும், சைக்கிளிலும் டூவிலரிலும் செல்பவர்கள் நாயைப் பார்த்து அச்சப்படுகிறார்களா? இல்லையா? சாலை விபத்துகளில் முக்கிய பங்கு வகிப்பதில் ஒன்றாக நாய்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் 2022ல் 8,83,213, பேர்கள், 2023ல் 4,41,804 பேர்கள், 2024ல் 4,79,000 பேர்கள் பொது  சுகாதாரத்துறை. (தினகரன் 08.09.2025 நாளிதழ்)

ஓரிரு  நாளிதழ்  செய்திகள் :

சென்னை ஜாஃபர்கான் பேட்டையில்பிட்புல்ரக நாய் சங்கிலியை அறுத்துக் கொண்டு அடுத்த வீட்டில் அமர்ந்திருந்த சமையல்காரரை கடித்துக் குதறியதில் அவர் பலி; காப்பாற்ற முயன்ற நாயின் எஜமானியையும் அது கடித்தது. (தினத்தந்தி: 20:08.2025 நாளிதழ்)

கூத்தாநல்லூர் அருகே தாயின் அருகில் வீட்டில் படுத்திருந்த ஒன்றரை வயது குழந்தையை கடித்துக்குதறிய நாய், காப்பாற்ற முயன்ற பாட்டியையும் கடித்தது) (இந்துதமிழ்: 21:8:2025 நாளிதழ்)

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் நாய் அசுத்தம் செய்த உணவைச் சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு தடுப்பூசி போட மாநில நிர்வாகமும், நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.  (இந்து தமிழ்: 22.08.25 நாளிதழ்)

அரசு  நாய்களைக்  கட்டுப்படுத்துமா?

முன்பு நாய்களை அரசுப் பிடித்துக் கட்டுப்படுத்தியதால்நாய்க்கும்பல்இல்லை. ஆனால், இப்போது அரசு நாய்களைக் கட்டுப்படுத்த எந்த அக்கறையும் காட்டுவதில்லை. அது ஏன்? நாய்க்கடிக்கான தடுப்பூசி மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களும் மாஃபியா கும்பல்களும் பல கோடி பணப் புழக்கத்தில் குளிர் காய்ந்து விடுகிறது. மேலும் வருமானத்தைப் பெருக்க நாய் வம்சம் அதிகரிப்பதற்கான வழிவகைகளைச் செய்கிறது. ஆனால், நாய்ப் பெருக்கம் அத்துமீறி, எல்லை மீறிச் செல்வதால், அளவிற்கு அதிகமான பாதிப்புகளை மக்கள் அடைவதால், அரசு இப்போது நாய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது வெறும் கண்துடைப்பா? என்பது போகப் போகத்தான்  தெரியும்.

நம்மைப்  பாதுகாத்துக் கொள்ள பசியால் தவிக்கும் நாய்கள், பயந்திருக்கும் நாய்கள், இணை சேரும்போது ஆக்ரோசத்துடன் இருக்கும் ஆண் நாய்கள், குட்டிகளை காக்க ஆக்ரோசப்படும் பெண் நாய்கள், வெறிபிடித்து அலையும் நாய்கள் போன்றவற்றின் நடத்தைகளை அறிந்து நாம் விலகிக் கொள்ளவேண்டும். நாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது; நாய் துரத்தும் போது ஓடக்கூடாது, நாயை விட நாம் பெரிய விலங்கு என்பதைக் காட்ட உயரமாகத் தெரிய கைகளை உயரே தூக்க வேண்டும்.

ஜீவகாருண்யம் :

முஸ்லிம்கள் நாயை வெறுப்பர்; அதனை கொலை செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருப்பர் என்ற செய்தி பரவலாகப் பார்க்கப்படுறது. நாயினால் ஏற்படும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் நாயை விட்டு ஒதுங்கியிருக்கச்  சொல்கிறது.

பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதில் இஸ்லாத்திற்கு அருகில் கூட எந்த மதமும் வந்துவிட  முடியாது.”(படைப்பினங்கள் மீது) கருணை காட்டாதவர் (அல்லாஹ்வால்) கருணை காட்டப்படமாட்டார்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (புகாரி 6013)

“…அல்லாஹ்வின் தூதரே! பிராணிகளுக்கு உதவும் விசயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிட்டுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது “(ஆம்) உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விசயத்திலும் (அதற்கு) உதவினால் மறுமையில்) அதற்கான நற்பயன் கிடைக்கும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 6009)

இஸ்லாமிய அறிவுறுதலின்படி நாய் வளர்ப்பதை விட்டும் நாம் தவிர்ந்து கொள்வோம்! அருள் சுமந்த வானவர்கள் வந்து செல்லும் இடங்களாக நமது இல்லங்களை அமைத்துக் கொள்வோம்!. அல்ஹம்துலில்லாஹ்.

Previous post:

Next post: