ஐயமும் தெளிவும்

in 1987 மார்ச்,ஐயமும்! தெளிவும்!!

  ஐயம் : “நல்லடியார்களான ஆண்களுக்கு மறுமையில் ‘ஹுருல் ஈன்கள்’ கொடுக்கப்படுவார்கள்” என்பது உண்மையா?உண்மையென்றால் நல்லடியார்களான பெண்களுக்கும் ‘ஆண் ஹுருல் ஈன்கள்’ உண்டா? கணவனும், மனைவியும் சுவர்க்க வாசியாக இருக்கும் போது, கணவன் மட்டும் ஹுருல் ஈன்களிடம் உல்லாசமாக இருந்தால் மனைவி என்ன நினைக்க கூடும்? இம்மையில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களை மறுமையிலும் அல்லாஹ் சேர்த்து வைப்பானா?

S.N. பஷீர் அஹமது, திண்டிவனம்.

M. தவ்லத் முஹம்மது, திருப்பூண்டி.

K.P. ரஷீது, U.A.E.

தெளிவு : ‘ஹுருல் ஈன்கள்’ பிரச்சனை திருக்குர்ஆனைக் கொண்டு நிரூபணமான ஒன்று. திருக்குர்ஆனின் 44 : 45, 52 : 20, 55 : 72, 56 : 22 வசனங்கள் இதைத் தெளிவாக்குகின்றன. பெண்கள் நல்லவர்களாக இருந்து அவர்களின் கணவர்களும் நல்லவர்களாகவே இருந்தால் அவ்விருவரும் கணவன் மனைவியாகவே நீடிப்பார்கள்.

“இவ்வுலகிலும், மறுமையிலும் இவர்கள் தான் உங்கள் மனைவி என்றும் அன்னை ஆயிஷா(ரழி) யைப்பற்றி ஜிப்ரில் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நூல் : திர்மிதீ.

மனைவி நல்லவளாகவும், கணவன் நரக வாசியாகவும் இருந்தால், அவளுக்கு நல்ல கணவனை அல்லாஹ் ஏற்படுத்தி தரலாம். அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் “இவரது இப்போதைய குடும்பத்தை விட நல்ல குடும்பத்தை இவருக்கு கொடுப்பாயாக! இப்போதைய துணையை விட நல்ல துணையைக் கொடுப்பாயாக!” என்று இறந்தவருக்கு பிரார்த்தனை செய்துள்ளனர். நூல் : முஸ்லிம், நஸயீ

பெண்கள் இயல்பிலேயே பல கணவர்களை பெற விரும்ப மாட்டார்கள். அதனால் ஆண் ஹுருல் ஈன்கள் அடைய அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

தனக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமை, வசதி வாய்ப்பை சக்களத்தி பகிர்ந்து கொள்ளக் கூடும் என்ற அச்சத்திலேயே பெண்கள் தம் கணவர் மறுமணம் செய்வதை விரும்புவதில்லை. அந்த காரணங்கள் சுவர்க்கத்தில் இராது. அதனால் பொறாமையும் கிடையாது.

ஐயம் : தனியாக குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கலாமா?

இம்தாஜ் அலிகான், சேலம் -1.

தெளிவு : “உமது மர்ம உறுப்புகளை, உன் மனைவியிடமும், உன் அடிமை பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் பாதுகாத்துக்கொள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, “ஒரு மனிதன் தனிமையில் இருக்கிறான்; (அப்போதுமா மறைக்க வேண்டும்?) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “மனிதர்களுக்கு வெட்கப்படுவதை விட அல்லாஹ் அதிகம் வெட்கப்படத் தகுதியானவன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : பஹ்ல், இப்னு ஹகீம் (ரழி) நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ

இந்த ஹதீஸின் அடிப்படையில், நிர்வாணமாக குளிக்கக் கூடாது. அல்லாஹ்வின் திருத்தூதர் அனுமதித்த மனைவியிடம் தவிர மற்ற இடங்களில் நாம் அல்லாஹ்வுக்கு அதிகம் வெட்கப்பட கடமைப்பட்டுள்ளோம்.

ஐயம் : என் தந்தையின் உடன் பிறந்த அண்ணன் அல்லது தம்பி மகளையோ அல்லது என் தாயின் சகோதரியின் மகளையோ நான் நிக்காஹ் செய்து கொள்ளலாமா?

மு. யூசுப் ரஹ்மத்துல்லா, நாகூர்.

தெளிவு : தாராளமாகச் செய்யலாம். குர்ஆன் (அன்னிஸா அத்தியாயத்தில்) 4:23 ல் யார் யாரை மணமுடிக்கக் கூடாது என்று அல்லாஹ் வரையறுத்து விட்டான். அந்த உறவுகளில் நீங்கள் குறிப்பிட்டது இல்லை.

ஹதீதுகளிலும் தடையில்லை. இதுபோன்ற திருமணங்கள் சர்வ சாதாரணமாக நபித் தோழர்கள் வாழ்வில் நடந்துள்ளன.

ஐயம் : “யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்! அப்படிச் செய்பவர்கள் அவர்களில் ஒருவராக ஆகி விடுகிறார்” என்று அல்குர்ஆன் 5 : 51 வது வசனம் குறிப்பிடுகின்றது? மதச்சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு இதைக் கடைப்பிடிப்பது?

K. H. முஹம்மது முபாரக், ஜித்தா.

தெளிவு : இந்த குர்ஆன் வசனத்திற்கு விளக்கமாக இன்னும் சில வசனங்கள் இருக்கின்றன. இதைக் கவனிக்காததால் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் தவறாக எண்ணுகின்றனர்.

“மார்க்க விஷயத்தில் உங்களுடன் போருக்கு வராத, உங்கள் ஊர்களிலிருந்து உங்களை (விரட்டி) அப்புறப்படுத்தாதவர்களுக்கு நல்லுதவி செய்வதையும், அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்கு தடுக்கவில்லை”. (அல்குர்ஆன் 60 : 89, 90)

இந்த இறை வசனம் மிகத் தெளிவாக இஸ்லாத்தில் நிலையை விளக்குகின்றது. நம்முடன் வலிய மார்க்க விஷயத்தில் போர் புரிபவர்களையும் நமது சொந்த இல்லங்களிலிருந்து விரட்டி அடிப்பவர்களையும் தான் பகைவர்களாகக் கருதுகிறது.

“உனது பெற்றோர் இருவரும், எனக்கு இணைவைக்கும் படி வற்புறுத்தினால், அந்த விஷயத்தில் அவர்களுக்கு நீ கட்டுப்படாதே! இந்த உலகில் அவ்விருவருடனும் நல்ல தோழமையுடன் நடந்து கொள்! (அல்குர்ஆன் 31 : 15) என்ற வசனமும் நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்திற்கு சரியான விளக்கமாகும்.

அவர்களுடன் நாம் கொள்கின்ற நட்பு, நமது கொள்கையை விட்டுக் கொடுப்பதாக அமையக் கூடாது.

ஐயம் : திருமணம் ஆகி (கணவருடன் உள்ள) பெண் தலையில் பூ வைத்துக் கொண்டு தொழலாமா?

M. ஹைதர் அலிகான், நம்புதாளை.

தெளிவு : பள்ளிவாசலுக்கோ, வெளியிடங்களுக்கோ புறப்பட்டுச் செல்லும் போது தான் இதற்குத் தடை உள்ளது. வீட்டில் நறுமணப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள தடை எதுவுமில்லை.

“உங்களில் எவரேனும் பள்ளிக்குச் சென்றால் நறுமணத்தின் பக்கம் நெருங்க வேண்டாம்! என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : ஜைனப்(ரழி)

நூல்கள் : முஸ்லிம், அபூதாவுது, நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ

(விரிவான விளக்கம், ‘இஸ்லாத்தில் புறத்தோற்றம் கட்டுரைத் தொடரில் இன்ஷா அல்லாஹ் இடம் பெறும்’)

சாப்பிடும் போது சோறு வீணடிக்கப்பட்டால் அன்ன முஹம்மதை வீணாக்காதே என்கிறார்களே! அன்ன முஹம்மது என்பதற்கும் சாப்பாட்டிற்கும் என்ன பொருத்தம்?

M. ஹாலுதீன் சார்ஜா, U.A.E.

ஆமாம்! அப்படித்தான் பல பகுதிகளில் சொல்கிறார்கள். சாப்பாட்டையோ, மற்ற பொருட்களையோ வீணாக்க கூடாது; என்பது உண்மை. சாப்பாட்டுக்கு ‘அன்ன முஹம்மது’ என்பது தான் ஏனென்று புரியவில்லை. ‘அன்ன முஹம்மது’ அரபிச் சொல்லாக இருந்தால் “நிச்சயமாக முஹம்மது” என்று பொருள். அன்னம் முஹம்மது என்பது தழிழ் என்றால் சோறு_ முஹம்மது என்பது பொருள். ஒன்றும் பொருத்தமாகப் படவில்லை. பேசாமசல் “சோற்றை வீணாக்க வேண்டாம்” என்று கூறி விடலாம்.

ஐயம் : மனைவி வாழ்க்கைக்கு தகுதி இல்லாமல் இருக்கும் போது அவளை தலாக் சொல்லாமல் அவளது சகோதரியை மணமுடிக்கலாமா? M. யூசுப் ரஹ்மத்துல்லா, நாகூர்.

தெளிவு : மணமுடிக்கக் கூடாது. திருக்குர்ஆன் மிகத் தெளிவாக இதை கூறுகின்றது. “இரண்டு சகோதரிகளை ஒரே நேரத்தில் மனைவியாக ஆக்குவதும் “ஹராம்” என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி திருக்குர்ஆன் கூறுகிறது. (அல் குர்ஆன் 4:23)

ஐயம் : கோபத்தில் அல்லாஹ், ரசூல் மேல் ஆணையாக “இன்னாருக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன்” என்று சொல்லி விட்டேன். இதன் பரிகாரம் என்ன?

A.M. அப்துல் காதிர், K.K. நகர், மதுரை.

தெளிவு : நீங்கள் இரண்டு தவறுகள் செய்து விட்டீர்கள்! அல்லாஹ்வின் மீது மட்டும் சத்தியம் செய்ய வேண்டும். ரஸுலின் மீதோ மற்ற எவர் மீதோ சத்தியம் செய்யக் கூடாது.

“எவன் அல்லாஹ் அல்லாத மற்றவரைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ, அவன் இணை வைத்து விட்டான் என்பது நபிமொழி. நூல் : திர்மிதீ

முதலில் இந்தத் தவறுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பக் தேடிக் கொள்ளுங்கள்.

உங்களில் (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையோரும், தங்கள் பந்துக்களுக்கோ,ஏழைகளுக்கோ அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். அதனை மன்னித்து பொருட் படுத்தாது விட்டு விடவும்!

அல்குர்ஆன் 2 : 22

“நீங்கள் நற்கருமங்கள் செய்வதற்கோ, இறையச்சம் உடையவர்களாக ஆவதற்கோ. மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கோ, உங்களின் சத்தியங்களில் அல்லாஹ்வை தடையாக ஆக்காதீர்கள்!”

அல்குர்ஆன் 2 : 224

அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக “ஒருவருக்கு உதவி செய்வதற்கு தடையாக அல்லாஹ்வை ஆக்கி விட்டீர்கள்! அல்லாஹ் அப்படிச் செய்யக் கூடாது என்று நமக்கு போதனை செய்கிறான். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் திருத்தூதர் அதனை தெளிவாக விளக்குகின்றார்கள்.

“அப்துர் ரஹ்மானே! நீ ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, அதை விட வேறொரு காரியத்தை சிறந்ததாகக் கருதினால், அந்தச் சிறந்ததையே செய்! (உன் சத்தியத்தை செயல் படுத்தாதே) எனினும் சத்தியத்தை முறித்து விட்டதற்காக பரிகாரம் செய்துவிடு!” என்ற நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா (ரழி) நூல் : புகாரி, முஸ்லிம்.

இந்த நபிமொழியின் அடிப்படையில் நீங்கள் உங்கள் சத்தியத்தை செயல்படுத்தக் கூடாது, மாறாக எவருக்கு உதவி செய்வதில்லை என்று சத்தியம் செய்தீாகளோ அவருக்கு ஏதேனும் ஒரு உதவி செய்து விடுங்கள்! உங்கள் சத்தியத்தை, இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் முறித்து விட வேண்டும். அவ்வாறு முறித்ததற்கான பரிகாரத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். அதை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

“சத்தியத்தின் பரிகாரமாவது” நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும்! அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்! (இதற்கான வசதியை) ஒருவன் பெற்றிருக்காவிட்டால் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இதுதான் நீங்கள் சத்தியம் செய்து (அதை முறிக்கும் போது) சத்தியத்தின் பரிகாரமாகும். அல்குர்ஆன் 5 : 89

இந்த இறைக் கட்டளைப்படி உங்கள் சத்தியத்தை முறிக்கும் போது பரிகாரம் காண வேண்டும்.

இதுவரை கூறியதன் விளக்கம் :

1. அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.

2. நல்ல காரியங்கள் செய்வதாக சத்தியம் செய்தால் அதை நிறைவேற்ற வேண்டும்.

3. ‘நல்ல காரியங்கள் செய்வதில்லை’ என்று சத்தியம் செய்தால் அந்த சத்தியத்தை செயல் படுத்தக் கூடாது. முறிக்க வேண்டும். அதற்குரிய பரிகாரத்தையும் செலுத்த வேண்டும்.

4. பத்து ஏழைகளுக்கு நடுத்தரமான உணவு அளிக்க வேண்டும் அல்லது பத்து ஏழைகளுக்கு நடுத்தரமான உடையளிக்க வேண்டும். (அடிமை முறை இப்பொது இல்லாததால்) இவ்விரண்டக்கும் வசதியற்றவர்கள் மூன்று நோன்பு நோற்க வேண்டும்.

ஐயம் : எனது எண்ணம் நிறைவேறினால் 30 நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்தேன். எண்ணம் நிறைவேறியது. இதுபற்றி ஆலிம் ஒருவரிடம் கேட்டேன். நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்தால் 3 நோன்பு தான் வைக்க வேண்டும்! அதற்கு மேல் வைக்க அனுமதி இல்லை என்று அவர் கூறி விட்டார். அவர் கூற்றுப்படி 27 நோன்புகளை நான் நோற்கவில்லை. நான் குற்றவாளியா?

கொற்று நதீம் அஹமது, ஆம்பூர்.

தெளிவு : “யாரேனும் அல்லாஹ்வுக்கு வழிப்படுகின்ற விஷயங்களில் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றட்டும்!” என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி)

நூல்கள் : புகாரி, அபூதாவூது, திர்மிதீ. இப்னுமாஜா, தஸயீ, அஹ்மத்

அல்லாஹ்வுக்கு விருப்பமான நோன்பை நோற்பதற்காக நேர்ச்சை செய்துள்ளீர்கள்! அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் 30 நோன்பையும் நீங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும்.

நேர்ச்சையை நிறைவேற்ற இயலாமல் போனால் – அதாவது 30 நோன்பு நோற்க உங்களுக்கு சக்தி இல்லாது போனால் – அந்த நேர்ச்சைக்கு வேறு பரிகாரம் காண வேண்டும்.

” நேர்ச்சை(யை நிறைவேற்ற இயலாத போது) அதன் பரிகாரம், சத்தியத்தை முறிக்கும் போது உள்ள பரிகாரமாகும்” என்பது நபிமொமி (நூல் : முஸ்லிம்) உங்களால் உண்மையிலே 10 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது 10 ஏழைகளுக்கு ஆடை அளிக்க வேண்டும். இவ்விரண்டிற்கும் இயலாவிட்டால் மூன்று நோன்பு நோற்க வேண்டும்.

உங்களுக்கு சக்தி இருக்குமானால் நீங்கள் நேர்ச்சை செய்து கொண்டபடி 30 நோன்பையும் நோற்க வேண்டும், இயலாவிட்டால் பத்து ஏழைகளுக்கு உணவோ, உடையோ அளிக்க வேண்டுமு். அதற்கும் இயலாவிட்டால் தான் கடைசி பட்சமாக நோன்பை நோற்க வேண்டும். பாவமான காரியங்கள் செய்வதாகவோ, அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கோ நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது. அதற்கு பரிகாரமும் செய்ய வேண்டியது இல்லை.

ஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா? முடியுமா?

S.M. நாசர், தேங்கா பட்டிணம்.

தெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

“குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்” என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.

“மூமின்களே! நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்!” (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)

இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்.

அவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

ஐயம் : நல்லடியார்கள், கியாம நாளில் தம் உறிவினர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுமா?

தெளிவு : நல்லடியார்கள், தம் உறவினர்களைப் பார்க்க விரும்பினால் அனுமதிக்கப்படுவார்கள்;

“சுவனத்தில் அவர்களின் உள்ளங்கள் விரும்பக் கூடியவை உண்டு” (அல்குர்ஆன் 41 : 71)

“உங்கள் உள்ளங்கள் விரும்பக் கூடியதெல்லாம் அதில் உங்களுக்கு உண்டு” (அல்குர்ஆன் 41 : 31)

இந்த இரண்டு வசனங்களும், சுவன வாசிகளின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று உத்திரவாதம் தருகின்றன. மற்ற நரகவாசிகளை சுவனத்தில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினால், அது நிச்சயம் ஏற்கப்படும் என்று உத்திரவாதம் இல்லை. தங்கள் விஷயத்தில் விரும்பக் கூடிய அனைத்தும் சுவனவாசிகளுக்குக் கிடைக்கும்.

ஐயம் : தொழில் செய்ய யாரும் கடன் தர மறுக்கின்ற நிர்ப்பந்தமான நிலையில் பேங்கில் வட்டி வாங்கலாமா!

A. ஸையத் இப்றாஹீம், உத்தம பாளையம்.

தெளிவு : கூடாது. தொழில் செய்ய யாரும் கடன் தர மறுத்தால் தொழில் செய்யாதீர்கள்! வேறு வழியில்லையா? ஏதேனும் ஸ்தாபனத்திலோ கடையிலோ பணிபுரியலாம். தொழில் செய்ய வாய்ப்பு இல்லை என்பது நிர்பந்தம் ஆகாது. ஹலாலான முறையில் வாழ்வதற்கு வேறு வழியே இல்லை. வட்டி வாங்கினால் தான் உயிர் வாழலாம் என்ற நிலை ஏற்படுமானால் அதை நிர்ப்பந்தம் எனலாம். யாரும் உங்களுக்கு கடன் தர மறுப்பதால் நீங்கள் முதலாளியாக முடியாது. அவ்வளவு தான்; வாழ முடியாது என்பதில்லை.

ஐயம் : வெள்ளிக் கிழமை பெருநாள் வந்து, பள்ளியில் இரண்டு குத்பா நிகழ்ந்தால், தலைவர்கள் மரணமடைவார்கள் என்று கூறுகிறார்களே! அது உண்மையா?

A. அஷ்ரப் அலி , நிரவி.

தெளிவ : உண்மையில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே வெள்ளிக்கிழமை பெருநாள் தொழுகை வந்துள்ளது. இரண்டு குத்பாவும் நடத்தியுள்ளனர்.

“இன்று உங்களுக்கு இரு பெருநாட்கள் வந்துள்ளன. (அதாவது ஜும்ஆவும், பெருநாளும் ஒரே தினத்தில் வந்துள்ளது) யாரேனும் ஜும்ஆ தொழாமல் இருக்க விரும்பினால், ஜும்ஆவுக்கும் சேர்த்து இந்தப் பெருநாள் தொழுகை போதுமானது, நான் ஜும்ஆவையும் தொழ இருக்கிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : அபூதாவூத்

ஐயம் : மனைவியிடம் பால் அருந்தினால் அவன் மனைவி தாயாக ஆகிவிடுகிறாள் என்றும் திருமண உறவு முடிந்து விடுகிறது என்றுறம் ஒரு மெளலவி கூறுகிறார். மார்க்கம் என்ன சொல்கிறது?

“அம்சா” கபீர் , ஆம்பூர்.

தெளிவு : ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அந்தப் பெண் தாயாகி விடுவாள் என்பது பொதுவானது அல்ல. மாறாக அதில் விலக்குகளும் உண்டு. ஒரு பெண்ணிடம் பால் அருந்துபவனின் வயது இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் தான் அந்தப் பெண் அவனுக்குத் தாய் ஆவாள், இரண்டு வயதைத் தாண்டியவன் ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அவள் தாயாக மாட்டாள் . அதற்கு ஆதாரம்:

இரண்டு வயதிற்குட்பட்ட பால்குடியினால் தவிர ஹராம் ஏற்படாது (நபிமொழி)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : தார குத்னீ

இதை வலுப்படுத்தக்கூடிய இன்னொரு நிகழ்ச்சியை ஹதீஸிலிருந்து பார்ப்போம்.

ஒரு மனிதர் அபூமூஸா (ரழி) என்ற சஹாபியிடம் வந்து “நான் என் மனைவியின் மார்பகத்திலிருந்து பால் அருந்தி விட்டேன். அது என் வயிற்றுக்குள்ளும் சென்று விட்டது” என்று சொன்னார். ‘அவள் நிச்சயமாக ஹராமாகி விட்டாள் என்றே நான் கருதுகிறேன்’ என்று அபூமூஸா(ரழி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது (அருகே இருந்த) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் “இவர் என்ன தீர்ப்பளிக்கிறார் என்று பாருங்கள்!” என்ற ஆட்சேபித்தார்கள். உடனே அபூமூஸா(ரழி) அவர்கள் “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு “அப்துல்லா இப்னு மஸ்வூது (ரழி) “இரண்டு வயதிற்குட்பட்டு இருந்தால் மட்டுமே பால் குடி சட்டம் (அமுலாகும்) ” என்றனர்.

அறிவிப்பவர் : யஹ்யா இப்னு சயீத் (ரழி) நூல் : முஅத்தா

குறிப்பு : இப்னு மஹ்தூத் பீவி, (சென்னை) அவர்களின் கேள்விக்கும் இதுவே பதிலாகும்.

ஐயம் : குழந்தையில்லாத முஸ்லிம் தம்பதியினர், அனாதை இல்லங்களிலிருந்து , குழந்தையை எடுத்து வளர்க்கலாமா? தத்து எடுக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது என்று தெரியாத போது, வளர்க்கும் தம்பதியின் நிலை என்ன? R. ஹபீப் முஹம்மது , P.O. 854, துபை.

தெளிவு : “நானும், அனாதைகளக்குப் பொறுப்பேற்பவனும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம்” என்று சொல்லி நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் (‘V’ வடிவத்தில்) உயர்த்திக் காட்டினார்கள்.

நூல் : புகாரி, அபூதாவுது, திர்மிதீ
  இந்த நபிமொழியிலிருந்து, அனாதைகளை வளர்க்கலாம் என்றும், அது அண்ணலாரின் அருகாமையைப் பெற்றுத் தரக்கூடிய மிகச் சிறந்து செயல் என்றும் தெரிகின்றது, ஆனால் எடுத்து வளர்த்த காரணத்தால் அவன் மகனாகி விட முடியாது, அதாவது பெற்ற மகனுக்குக் கிடைக்கக் கூடிய சொத்துரிமை வளர்ப்புத் தந்தையின் சொத்திலிருந்து இவனுக்குக் கிடைக்காது.

பெற்ற மகனாக இருந்தால், பெற்றோர் வழி உறவு முறையில் யாரையெல்லாம் மணமுடிப்பது தடுக்கப்பட்டுள்ளதோ அந்தத் தடை, வளர்ப்பு மகனுக்கு இல்லை. இதைப் பின்வரும் திருமறை வசனங்கள் தெளிவாக்குகின்றன.

உங்களுடைய வளர்ப்புத் பிள்ளைகளை உங்களின் புதல்வர்களாக (அல்லாஹ்) ஆக்கவில்லை. இவை யாவும் உங்கள் வாய்களால் சொல்லும் வார்த்தைகளேயாகும். (அல்குர்ஆன் 33 : 4)

விசுவாசிகளால் வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்துவிட்டால் அவர் (களை வளர்த்தவர்)கள், அப்பெண்களை மணந்து கொள்ள யாதொரு குற்றமும் இல்லை என்பதற்காக , ஸைத் (என்ற உமது வளர்ப்பு மகன்) அவளிடமிருந்து தன் தேவையை முடித்துக் கொண்ட போது (அதாவது விவாகரத்துச் செய்த போது ) அவளை நாம் உமக்கு மணமுடித்து வைத்தோம்.

(அல்குர்ஆன் 33 : 37)

இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களால் வளாக்கப்பட்ட ஸைத் (ரழி) என்பவர் அரவது மனைவியை விவாகரத்துச் செய்த பின்னர், அந்தப் பெண்ணை , நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வே மனைவி ஆக்குகிறான். இதிலிருந்து பெற்ற மகன் மூலம் ஏற்படும் திருமணத் தடைகள் வளர்ப்பு மகன்களுக்கு இல்லை என்று கூறலாம்.

மேலும், உண்மையில் அவனைப் பெற்ற தந்தை, யாரோ, அவரது மகன் என்றே குறிப்பிடவும் வேண்டும். வளர்ப்புத் தந்தையின் மகன் என்று குறிப்பிடவும் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

“அவர்கள் (வளர்ப்புத் பிள்ளைகள்) அவர்களின் (பெற்ற) தந்தையின் பெயராலேஆய குறிப்பிடுங்கள்!” என்ற குர்ஆன் வசனம் (33 : 5) இறங்கும் வரை, “முஹம்மதின் மகன் ஸைது” என்றே நாங்கள் குறிப்பிட்டு வந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : புகாரீ.

அடுத்து எல்லா மக்களையும் இஸ்லாத்தின் பால் அழைக்கும் கடமை நமக்கு உண்டு. அந்த அடிப்படையில் நாம் எடுத்து வளர்க்கும் குழந்தையை இஸ்லாத்தின் அடிப்படையிலேயே வளர்க்க வேண்டும்.

ஐயம் : ‘ஹஜருல் அஸ்வத்’ கருப்புக் கல் ஆதம்(அலை) கொண்டு வந்ததா?

தெளிவு : ்ஹஜருல் அஸ்வத்’ சுவர்க்கத்திலிருந்து உலகுக்குக் கொண்டு வரப்பட்ட

பொருள் என்று மட்டுமே அறிய முடிகின்றது. யார் கொண்டு வந்தார்கள் என்று இல்லை.

ஐயம் : சிலர் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர். இது போன்றவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி இருக்கும்? A.G.M. ரபீக், மதுக்கூர்.

தெளிவு: அல்லாஹ்வின் ஆற்றலை அவனது வல்லமையை அறிந்து கொண்டவர்கள், இதிலெல்லாம் ஆச்சரியப்பட மாட்டார்கள். உங்கள் கேள்விக்குப் பின்வரும் ஒரு குர்ஆன் வசனமே போதுமானது.

“எலும்புகள் மக்கிப் போய்விட்டபின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்? என்று (மனிதன்) கேட்கிறான். முதல் முறையில்அவற்றை உண்டு பண்ணியவனே, (மீண்டும்) அவற்றிற்கு உயிர் கொடுப்பான் எல்லா வகை படைப்புகளையும் அவன் நன்கு அறிந்தவன் என்று (நபியே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 36 : 78, 79)

அந்நஜாத்: மார்ச், 1987 – ரஜப், 1407

Previous post:

Next post: