33 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ்ரத்ஜீக்கு எழுதப்பட்ட கடிதம் ஹிஜ்ரி 10.2.1398

in 2007 மே,பொதுவானவை

 குறிப்பு : குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்க முற்பட முன்னர் எழுதப்பட்ட கடிதமாகும் இது.

33 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ்ரத்ஜீக்கு எழுதப்பட்ட கடிதம் ஹிஜ்ரி 10.2.1398

பெருமதிப்புக்குரிய ஹஜ்ரத்ஜீ அவர்களின் உயர் சமூகத்திற்கு, ஷாஹுல் ஹமீது (அபூ அப்தில்லாஹ்) பணிவுடன் எழுதியது. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நலம். நலமே நாட்டம்.

கடந்த செப்டம்பர் கடைசியில் டெல்லி வந்திருந்தேன். தங்களின் உடல்நிலை சீராக இல்லாததின் காரணமாக மர்கஸிலுள்ள மௌலவி யூசுப் சிலோனி அவர்களிடம் எனது உள்ளத்து எண்ணங்களை எடுத்து வைத்து, கருத்து பரிமாறிக் கொண்டு திரும்பினேன். சுமார் 2 மாத நீண்ட ஆலோசனைக்குப் பின் சில எண்ணங்களின் பேரில் இப்போது இக்கடிதத்தை அனுப்பியுள்ளேன். சிறு பிரசுரத்தை எழுதி காயல்பட்டினத்தில் நடந்து முடிந்த, அகில உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் விநியோகித்து அவர்களின் கவனத்தைப் புனித தப்லீஃக் பணியின் பக்கம் திருப்பும்படி அழைத்திருக்கிறேன்.

மக்களின் சர்வ பிரச்சனைகளையும் தீர்க்க இப்புனிதப் பணி முறைப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை உள்ளவன் நான். வேலையின் சில பகுதிகளை அல்லது சடங்காக செய்வது கொண்டு நோக்கம் நிறைவேறாது; மாறாக தீனில்(மார்க்கத்தில்) புதிய புதிய பித்அத்துகள் வந்து நுழையும் என்பதே எனது எண்ணம் ஆகும். மௌலானா இல்யாஸ்(ரஹ்) அவர்கள் பணித்துச் சென்ற வேலை முறைகளை விட்டு நாம் வெகுதூரம் விலகி சென்றிருக்கிறோம். வேலையின் அசல் நோக்கம் ஒவ்வொரு ஆணிடமும், பெண்ணிடமும், 24 மணி நேர வாழ்க்கையும் பெருமானார்(ஸல்) அவர்களது வாழ்க்கை முறையாக ஆகிவிட வேண்டும் என்பதாகும்.

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? மக்களைப் புறப்பட வைப்பதே நோக்கமாகக் கொண்டு, அதிக கவனம் செலுத்தப்படும் 3 சில்லா, 3 நாள், கஷ்து, தஃலீம் இவற்றில் ஈடுபடுபவர்கள் ஓரளவாவது செய்யும் அதே வேளை அதிக கவனஞ் செலுத்தப்படாத கொடுக்கல், வாங்கல், தொழில், குடும்பம் ஆகிய தனிப்பட்ட காரியங்களில் அவர்கள் மிகவும் குறையுடையவர்களாக இருப்பதையே பார்க்க முடிகிறது, பெரும்பாலும் இரட்டை வாழ்க்கையாகவே இருக்கிறது. அதிகமான கார்க்கூன்கள் மேலே குறிப்பிட்டுள்ள காரியங்களைச் சடங்குகளாகச் செய்வது கொண்டு, தாங்கள் பெரிய அந்தஸ்தை அடைந்து விட்டதாகவும், இதில் குறையுள்ளவர்கள் அந்தஸ்தில் குறைந்தவர்கள் என்று எண்ணும் அதே வேளை, அவர்களது கொடுக்கல், வாங்கல் வியாபாரம், குடும்ப வாழ்க்கை இவைகளில் தீன் வர வேண்டும் என்ற அக்கறையே அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் பிரசித்தி பெற்ற கார்க்கூன்கள் தங்கள் மனைவிகள் தொழுவது இல்லை. பர்தா இல்லாமல் திரிகிறார்கள். சினிமாவிற்குச் செல்கிறார்கள் என்ற கவலையோ, அவர்களைத் தடுக்க முயற்சிகளோ இன்றி இருப்பதையே பார்க்க முடிகிறது. உலக ஆதாயத்திற்காக வேலையில் ஈடுபடுவதையே பார்க்க முடிகின்றது.

பிரசங்கங்களில் விலாயத்துடைய பேச்சைப் பேசும் அவர்கள், சொந்த வாழ்க்கையில் சாதாரண விஷயங்களைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். தீனுடைய உழைப்பில் ஈடுபட்டால் மனைவி, மக்கள், பெற்றோர், சுற்றத்தார் இவர்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை என்று எண்ணுவார்கள் போலும், கொடுக்கல், வாங்களிலும் இதே எண்ணந்தான். ஆயிரக்கணக்கான ரூபாய்களைப் பல கார்க்கூன்களிடம் கொடுத்து உணர்ந்து கொண்ட விஷயம் இது. பேசும்போது இவர்களைப்போல் பொருட்களின் மீதுள்ள நம்பிக்கைகளை அகற்றி அல்லாஹ்மீது நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டவர்கள் யாரையும் பார்க்க முடியாது என்று எண்ணத் தோன்றும். அந்த பொருட்களை அடைய அவர்கள் செய்யும் தவறான காரியங்களை இறை நம்பிக்கையற்ற நாஸ்திகன் கூட செய்ய மாட்டான் என்ற உண்மையை செயலில் காட்டுவார்கள். மனைவியை, பிள்ளைகளை, வியாபாரத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற முரட்டு நம்பிக்கை ஊட்டி மக்களைப் புறப்பட வைப்பார்கள்.

பள்ளியினுள் செல்லும்போது கேவலம் 2 ரூபாய் செருப்பை எடுத்து பத்திரப்படுத்துவார்கள். ஆக பேச்சளவில் தவ்ஹீது என்ற அடிப்படையில் சபபுகளை இங்காரு(நிராகரிப்பு) செய்துவிட்டுச் செயலளவில் சபபுகளில் மூழ்கி விடுவதைப் பார்க்கலாம். செல்வந்தர்களில் பலர் இந்த வேலையைத் தங்கள் தவறுகளை மறைக்கப் பயன்படுத்துகிறார்கள். நுஸ்ரத்(உதவி) என்ற பெயரால் சில ஏழைக் கார்க்கூன்களைத் தங்களுக்குச் சாதகமாகத் தயார் செய்து கொள்கிறார்கள். வெறும் 80 ரூபாய் வைத்துக் கொண்டு கேரளா, மதராஸ், பம்பாய், குஜராத், மேவாத், தேவ்பந், சஹரன்பூர் இன்னும் பல பகுதிகளில் சுமார் 600 ரூபாய் செலவுடைய பிராயணத்தை 1969ல் செய்து முடித்தேன். நான் யாரிடமும் கேட்கவில்லை. இன்று சில கார்க்கூன்கள் கடனாகக் கேட்டு வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கும் எண்ணமே இல்லாதிருப்பது போல் நான் இருக்கவில்லை. 50 மைல்கள் கார் போட்டுக்கொண்டு எனக்குப் பணம் கொடுக்க வந்தவர்களுண்டு. இதை வளர விட்டிருப்பேனேயானால் இன்று அமெரிக்கா, லண்டன், முதற்கொண்டு, போய் வந்திருக்கலாம். பெரிய தியாகி என்ற பட்டமும் கிடைத்திருக்கும். ஆனால் நிச்சயமாக இறைவனுடைய சந்நிதானத்தில் சாதாரண ஒரு முஸ்லிமுடைய பதவி கூட கிடைத்திருக்காது. இன்று வெளிநாடுகள் வரை சென்று வந்த சில கார்க்கூன்களை நான் பார்க்கும்போது இந்த உண்மைதான் எனக்குத் தெரிய வருகிறது.

யாரிடமிருந்து உதவி கிடைத்தாலும் உடனே அல்லாஹ்(ஜல்) கொடுத்தான் என்று சொல்லுகிறார்கள். திருடனுக்கும், கொள்ளையடிப்பவனுக்கும், கொலைகாரனுக்கும் அல்லாஹ்தான் கொடுக்கிறான் என்ற உண்மை அவர்களுக்குப் புரியாதிருப்பது தான் எனக்கு விந்தையாக இருக்கிறது. எனக்கு மிகவும் உபகாரம் செய்தவர்: என்னைப் பொருத்தமட்டில் அவர் உதவியைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை. ஒரு முறை அவர் தொழில் முறையை பார்க்க நேரிட்டது. அதில் வட்டி கலந்திருந்தது. அதோடு ஹராமான வருமானம் என்ற ஒரே காணத்தால் வேலையை விட்டு பெற்ற ஒரு தொகை பணத்தை கூட்டு வியாபாரம் செய்யலாம் என்று சொல்லி ஒரு கார்க்கூனிடமிருந்து வாங்கிய இவர், அதை தன் வியாபாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டு வட்டி கொடுக்கும் கோரக் காட்சியை கண்டேன். வட்டியை விட்டும் விலகி இருக்கும் செல்வந்தர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. ஜக்காத் கொடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டே ரமலானில் ஜமாஅத்தில் போகும் பலரைக் கேள்விப்படுகிறேன். ஜக்காத் பணத்தை ஜமாஅத்தில் தனக்காகச் செலவழித்து விட்டு ஜக்காத் நிறைவேறுவதாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

நான் சென்ற 1977 ஜூனில் இலங்கை சென்றிருந்த சமயம், ஒரு கார்க்கூன், அதுவும், முக்கியமான கார்க்கூன் என்னோடு இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் வட்டி பற்றி ஆழமாகப் பேச நேரிட்டது. அவர் ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, நான் ஓய்வு பெற்ற சமயத்தில் கிடைத்த பணத்தைப் பேங்கில் போட்டிருக்கிறேன். அதற்கு கிடைக்கும், வட்டி பணத்தைத்தான் ஜமாஅத்தில் செலவழித்து வருகிறேன் என்று சொன்னார். நான் திடுக்கிட்டேன். வட்டி சம்பந்தமாக முறைப்படி அவர் அறிந்திருந்தால் அவர் அதை விட்டும் விலகி இருப்பார் போலும். இப்போது நமது முயற்சிகள் அந்த அடிப்படையில் இல்லை என்பதுதான் எனது வருத்தம். இதே போல் ஒரு பகுதியின் அமீரின் நெருங்கிய நண்பர், அவரும் கார்க்கூன் என்றுதான் சொன்னார்கள, அவர் ஒரே நேரத்தில் அக்காளையும், தங்கையையும் மனைவிகளாக வைத்திருப்பதாக ஒரு மௌலவியும் ஒரு அகம்(முக்கிய) கார்க்கூனும் என்னிடம் வந்து முறையிட்டார்கள். இப்படி தீனுக்கு மாற்றமான பல சம்பவங்கள் கார்க்கூன்களிடம் மிகச் சாதாரணமாகக் காணக் கிடைக்கிறது.

செல்வந்தர்கள் தவறுகள் செய்வது மாத்திரமல்ல. இப்படிப்பட்ட தவறுகள் தீனுடைய பேச்சுகளில் சுட்டிக்காட்டப்படக்கூடாது என்ற விஷயத்திலும் மிகவும் அக்கறை செலுத்துகிறார்கள். இதற்கென்றே செயல் திறன் பெற்ற ஏழை கார்க்கூன்களை நுஸ்ரத் என்ற பெயரால் கைவசப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படி முடியாவிட்டால் அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடிய முறைகளைக் கையாள்கிறார்கள். இந்தியாவிலும், இலங்கை சென்றிருந்த சமயமும் இந்த நிலையை என் சொந்த அனுபவத்திலேயே கண்டேன். சாதாரணமாக கார்க்கூன்கள் கொண்டு செல்லும் பொருட்களைக் கூட கொண்டு செல்லாத எனக்கு, வியாபார விஷயமாக வந்திருப்பதாக மர்கஸ்ஸில் கதை கட்டி விடப்பட்டது. பலர் வந்து என்னிடம் கேட்டார்கள். எனக்குப் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு வேறு சிலர் கேட்டதற்கு, அதை மறுத்து அவர்களுக்கு கொடுத்த விளக்கம் இது. இலங்கையில் வேலை மிக நல்ல முறையில் நடந்து வருவதாக இந்தியாவில் பேசப்பட்டது. வேலையின் அசல் நோக்கம் எடுபடும்போது, புறப்படுவது எளிதாகிவிடும் என்பது என் அநுமானம். அது உண்மை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.

ஏழை கார்க்கூன்கள் பலர் உலக ஆதாயத்தை மனதில் கொண்டு ஈடுபடுகிறார்கள். தொழில் செய்தால் மாதம் டூபாய் 150 கிடைக்கும். ஜமாஅத்தில் சென்றால் நுஸ்ரத்தின் பேரில் ரூபாய் 250 கிடைக்கிறது. அதைவிட இது ஆதாயகரமான வியாபாரம் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது. புறப்பட்டுச் செல்லும் தங்களுக்கு மற்றவர்கள் நுஸ்ரத் செய்வது அவர்கள் கடமை. கடனாக வாங்கினாலும் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்று கருதுகிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டுச் செல்லுகிறவர்களுக்கு உதவி செய்வதின் சிறப்பை விளக்கும் ஒரு குர்ஆன் ஆயத்தையும் அதன் பொருளையும் ஒரு அட்டையில் எழுதி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ஒரு பிரபல கார்க்கூன் ஒரு செல்வந்தரிடம் காட்டுவது எனது பார்வைக்கும் வந்தது. இப்படி இந்த கார்க்கூன்கள் செல்வந்தர்களின் தயவை நாடுவதால், அவர்களுக்காக அவர்களைத் திருப்திப்படுத்த அசல் நோக்கத்தை மறைக்க முற்படுகிறார்கள். இவர்கள் மனைவி மக்களுக்குக் கொடுக்க வேண்டிய ஹக்குகளை கொடுக்காமல், அவர்களைப் பட்டினியிலும் வறுமையிலும் வாடவிட்டு ஜமாஅத்தில் போய் செல்வந்தர்களின் உதவி கொண்டு மூன்று வேளையும்; சாப்பிட்டு மகிழ்கிறார்கள். கேட்டால் அலீ(ரலி) குடும்பத்தை பட்டினியில் வாடவிட்டுச் செல்லவில்லையா? என்று கேட்கிறார்கள். அதே அலீ(ரலி) அவர்கள் அதே பட்டினியோடும், கஷ்டத்தோடும் தான் தீனுடைய வேலை செய்தார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

சிறுவர்கள் மீது பாடுபட்டு அவர்களை ஜமாஅத்தில் புறப்பட வைத்து, சில கார்க்கூன்கள் தங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள அவர்களைப் பயன் படுத்துகிறார்கள். இது குறித்து பலர் வந்து என்னிடம் முறையிட்டு இருக்கிறார்கள். இப்படி எழுத முடியாத பல தவறுகள் இன்று இப்புனித வேலையின் பெயரால் நடந்து வருகின்றன. எந்த இயக்கத்திலும் தவறுகள் காணப்படத்தான் செய்யும். தவறுகள் புரியும் மக்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்லலாம்.

100க்கு 10 காணப்பட்டால் அது சரி, 100க்கு 90 காணப்பட்டால் தவறு எதில் இருக்கிறது? ஒரு பரீட்சையில் 100க்கு 10 பேர் தோவ்வியடைந்தால் அது மாணவர்களது குறையாக இருக்கலாம் 100க்கு 90 பேர் தோல்வி அடைந்தால் பயிற்சியளித்த முறையில்தானே தவறு இருக்கிறது. நான் தவறுகளைப் பார்ப்பதால் தவறுகள் கண்ணுக்கு தெரிகின்றன என்று நினைக்கலாம். 1963லிருந்து 1970 வரை சகலவற்றையும் துறந்து இந்த வேலையே கதி என்று அதிதீவிரமாக ஈடுபட்டவன் நான். எந்தத் தவறுகளையும் பற்றியும் சிந்திக்காமல், கண்களை மூடிக் கொண்டு வேலை செய்தவன் தான். வேலையில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள், மக்களால் விலாயத் பதவியடைந்தவர்கள் என்று போற்றப்பட்டவர்கள், மர்கஸ்ஸிலேயே பொறுப்புடன் இருந்தவர்கள் கூட வழி தவறி படுபாதாளத்தில் விழுந்தபின் தான் திடுக்கிட்டேன். இதன் பின் தீவிரமாகச் சிந்தித்து, அலசி ஆராய்ந்து பார்த்து, ஏழு வருடங்கள் புரட்டிப், புரட்டிப் பார்த்து, பல இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு, அதன் பின் முடிவு செய்திருக்கிறேன். பிறர் சொல்லக்கேட்டு பிறர் செய்வதைப் பார்த்து, அனுபவ வாயிலாக பொதுவாக மக்கள் பெறும் பல விஷயங்களை, சுயமாக அடையும் ஆற்றலை அல்லாஹ்(ஜல்) எனக்களித்திருக்கிறான். இன்று பல துறைகளில் திறமை வாய்ந்த பழுது பார்ப்பவனாக இருக்கிறேன். எல்லாக் கடைகளிலும் செய்ய முடியாது என்று தள்ளப்பட்டவற்றை நான் செய்து கொடுத்துப் பொருளீட்டுகிறேன். இவற்றை எந்தக் குருவிடமும் நான் கற்றக்கொண்டதில்லை. சில காலங்கள் இருந்து பயிற்சிப் பெற்றதில்லை. அல்ஹம்துலில்லாஹ்! தவறுகளைக் கண்டுபிடிக்கும் நோக்கோடு நான் செல்லவில்லை. சாதாரண நிலையிலேயே தவறுகள் என் கண்களுக்குப் புலப்படுகின்றன என்பதைப் புரிய வைக்கத்தான் இதைச் சுட்டிக் காட்டினேன்.

நமது முயற்சிகளின் மூலம் மக்களுக்கு மத்தியில் ஒரு ஆர்வத்தை மாத்திரந்தான் உண்டாக்க முடியும். சகல துறைகளிலும் பக்குவப்பட்டவர்களாக மக்களை நம்மால் ஆக்க முடியாது என்று சொன்னால், இப்புனித பணியை மிக உயர்ந்த பணி என்றும், எல்லோரும் செய்ய வேண்டிய பணி என்றும், இதற்கு ஒப்ப எப்பணியும் இல்லை என்றும் சொல்ல முடியாது. தீனுடைய சில சில பகுதிகளை நிறைவேற்றும் இதர இயக்கங்களைப் போல் இதுவும் ஒரு இயக்கம் என்றுதான் சொல்ல முடியும். மௌலானா இல்யாஸ்(ரஹ்) அவர்களது மல்பூஜாத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொன்றையும்; மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பாக மௌலவி யு.சதக்கத்துல்லாஹ் (பாகவி) தமிழ் பெயர்ப்பு 5-23, 10-26, 19-32, 24-37, 25-38, 28-40, 29-41, 30-42, 31-42, 35-44, 36-46, 38-48, 44-54, 45-55, 56-66, 57-66, 62:70, 73-75, 93-85, 101-90, 109-94, 112-98, 118-105, 129-111, 134-115, 138-119, 182-155 பாகம் பக்கம் இவைகளை நாம் கவனித்தால், அசல் வேலையை விட்டு நாம் எந்த அளவு விலகி இருக்கிறோம் என்பது புரியும். உதாரணமாக 5-23ல் செல்வந்தர்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை தீனுடைய தேவையுடையவர்களாக ஆக்கு என்று மௌலானா குறிப்பிடுகிறார்கள். நாம் இன்று செல்வந்தர்களிடம் உறவு வைத்திருக்கிறோம். தீனை அவர்களது தேவையுடையதாக ஆக்க. 24-37ல் இந்த முயற்சியின் அசல் நோக்கம் பெருமானார்(ஸல்) அவர்களது வாழ்க்கை முறைகள் மக்களிடம் வரவேண்டும் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். புறப்படுவது, கஷ்து நோக்கத்தின் ஆரம்ப வழிகள். நாம் இப்போது ஆரம்ப வழிகளை அசல் நோக்கமாக ஆக்கிக் கொண்டோம்;;. இதையும் மௌலானா ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்கள். இப்படியே இப்புனித வேலையை சில சடங்குகளின் தொகுப்பாக ஆக்கிக் கொண்டோம்.

மக்களுடன் மிகக் கண்டிப்புடன் நடந்து கொண்டால் அவர்கள் வேலையை விட்டு ஒதுங்கி விடுவார்கள். நடக்கும் கொஞ்சம் நஞ்சம் வேலையும் நடக்காது என்று நாம் கருதினால் அது தவறு. பறப்படும் விஷயத்தில் கண்டிப்பு செய்யப்படுகிறது. புறப்படத்தான் செய்கிறார்கள். எந்த அளவு என்றால் நம்மை திருப்திப்படுத்த (அல்லாஹ்வை அல்ல), தங்கள் சொந்த வாழ்க்கையிலுள்ள எத்தனையோ ஹக்குகளை(கடமை) பாழ்படுத்திக் கொண்டுப் பறப்படுவதையும் பார்க்கிறோம்.

ஹஜ்ரத்ஜீயிடமும், இன்னும் பெரியார்களிடமும் நல்ல பேர் வாங்க புறப்பட வைக்கிறோம். முன்னைய அரசாங்கச் சிப்பந்திகள், மேலிடத்தில் நல்ல பேர் வாங்க மனைவியற்றவர்களையும், மலடர்களையும், பிச்சைக்காரர்களையும் பிடித்து எண்ணிக்கைக்காக குடும்பக் கட்டுப்பாடு செய்தது போல், நாமும் எண்ணிக்கைக்காக புறப்பட வைக்கிறோம்.. புறப்படுகிறவர்களின் நாட்கள் முறைப்படி செலவிடப்பட வேண்டுமே என்று கூட நாம் கவலைப்படுவது கிடையாது. நாட்களை எண்ணினால் போதும், இலங்கை சென்றிருந்த சமயம் ஒரு இஜ்திமாவிலிருந்து ஒரு பைதல்(நடை) ஜமாஅத் புறப்பட்டது. புதிதாகப் பேர் கொடுத்துப் புறப்பட்டவர்கள் பலர் இருந்தனர். ஒரு  டாக்டரும் இருந்தார். அந்த ஜமாஅத்திற்கு அமீர் யார் தெரியுமா? விஷயமே தெரியாத ஒருவர், இதுதான் நமது நிலை. புறப்பட வைப்பதின் நோக்கம் மக்களிலுள்ள தீனுக்கு மாற்றமான செயல்கள் அகற்றப்பட வேண்டும் என்பதே. புறப்பட வைப்பது கொண்டு மாற்றமான செயல்கள் இன்னும் அதிகரிப்பதாக இருந்தால், இந்த புறப்படுதலை பற்றி என்ன சொல்ல முடியும்? புறப்படுவதால் லட்சம் லட்சமாக நன்மைகள் குவிகின்றன. (இவைகளை மக்களுக்கு மத்தியில் மிகைப்படுத்தி பேசி வருகிறோம்) தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு தீமைகள் செய்தாலும் நன்மையின் தட்டே கணக்கும். ஆகவே சுவர்க்கம் போய்விடலாம் என்று பலரும் தப்புக் கணக்குப் போடுவது தெரிகிறது. இவர்கள் ஜமாஅத்தில் போவதால் 2 பேர் அரை குறையாக தீனில் வந்தால், இவர்களின் செயல்களைப் பாரத்து 10 பேர் முழுதுமாக தீனிலிருந்து ஒதுங்கி விடுகிறார்கள் என்ற உண்மையை புரிய முடியவில்லை. இப்படிப்பட்டவர்களை நாம் பெரிய முதலாகக் கருதுகிறோம்.

இவர்களைப் பார்க்கிறோமேயல்லாமல், இவர்கள் காரணமாக இவர்களைவிட, திறமையும் ஆற்றலுமுள்ள பல மக்கள் வெளியில் நிற்பதை பார்ப்பதில்லை. முறை தவறி 1000 பேர் செய்வதைவிட, முறைப்படி 10 பேர் செய்வதால் அதிகப் பலனும், அதன் காரணமாக அதிக மக்களின் சுவனங்களும் இவ்வேலையின் பக்கம் திருப்பப்படும் என்பது எனது எண்ணமாகும். தகுதியும் திறமையும் உள்ள பலர் வேலைக்கு விரோத மனப்பான்மையுடன் இருப்பதையே பார்க்கிறேன். தமிழ்நாட்டையே நாஸ்திகம் ஆட்டிப்படைக்கிறது. அந்த நிலையை உருவாக்கியவர் ஈ.வே.ராமசாமி! அவரது மனதை மாற்றியது எது? அவர் தந்தை சிறந்த ஹிந்து பக்தர், தன் மகனை சிறு வயதில் மடாதிபதிகளுக்குப் பணிவிடை செய்ய அனுப்பி வைத்தார். இந்த மடாதிபதிகள் பகலில் உயர்ந்த பக்தர்போல் நடிப்பதையும், இரவில் மனோ இச்சைக்கு வழிப்படுவதையும் கவனித்தார். தன் அறிவுக் கூர்மை காரணமாக  இது பித்தலாட்டம் என்ற முடிவுக்கு வந்தார். நாஸ்திகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். நாடே அவரது வலையில் சிக்கியது. இதேபோல் ஜமாஅத்தில் ஈடுபடுபவர்களில் சிலர் செய்யும் பித்தலாட்டங்கள் காரணமாக, ஈ.வே.ரா. போன்ற கூரிய புத்தி படைத்தவர்கள், அவற்றைக் கவனித்து மக்களை தீனுக்கு மாற்றமாக நடக்கத் தூண்டக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

ஒரு மாகாண அமீரின் வீட்டுக் கல்யாணம். மாப்பிள்ளைக்கு மாலை போட்டு வீதியில் அழைத்து வந்தால் தானே மக்கள் பார்ப்பார்கள். வீட்டிற்குள் வைத்து மாலை போட்டால் யார் பார்ப்பார்கள்;? வீட்டிலே வைத்து மாலை போடப்பட்டது. மாலை போடுவது கொடிய குற்றம் என்று இதை எழுதவில்லை. மக்களுக்கு மறைத்துத் தவறுகள் செய்து கொள்ளலாம் என்ற மனப்பான்மை நமக்கு இருக்கிறது என்பதை புரிய வைக்கத்தான். கூரிய மதி படைத்தவர்களின் கவனத்தை விட்டும் அது மறையாது என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.

ஆக மக்களை புறப்படச் செய்ய எந்த அளவு நாம் பிரயாசை எடுக்கிறோமோ, அதைவிட ஒருபடி அதிகமாகவே அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தம் குறித்தும் நாம் அக்கறை எடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். அதைவிட்டு புறப்பட வைப்பதற்கு மாத்திரம் நாம் பிரயாசை எடுப்பதால், புதிதாக ஈடுபடுபவர்கள் ஆர்வத்துடன், இருப்பார்கள். காலப்போக்கில் ஒன்றில் சடங்காகச் செய்வார்கள். அல்லது உலக ஆதாயத்தை மனதில் கொண்டு ஈடுபடுவார்கள். தெளிவும் நேர்மையுமுள்ளவர்கள் சோர்ந்து விடுவார்கள். இந்தியா, இலங்கை பல பகுதிகளில் நான் சுற்றிப் பார்த்ததில் பெரும்பாலும் மூன்றுவித மக்களைத்தான் பார்க்க முடிந்தது. இரட்டை வாழ்க்கை வாழும் பெரும்பகுதியினர். இவர்கள் தயவில் வாழ்க்கை நடத்தும் ஏழைக் கார்க்கூன்கள். இந்த வேஷதாரிகளின்; முரட்டு தவ்ஹீதுடைய பேச்சைக் கேட்டு ஜமாஅத்தில் செல்வதின் காரணமாக தங்களின் தொழில், குடும்பங்களில் நஷ்டத்தை உண்டாக்கிக் கொண்ட அப்பாவிகள், தெளிவான தீனுடைய கவலையும் சிந்தனையுமுடையவர்கள் செய்வதறியாது திகைத்து இருப்பதையே பார்க்க முடிந்தது.

பல பகுதிகளில் வேலையைத் திறமையோடும் அக்கறையோடும் செய்த சில கார்க்கூன்கள், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்து வந்த தவறுகளை ஆரம்பத்திலேயே திருத்த முயற்சி எடுக்காததின் காரணமாக, அத்தவறுகள் முற்றி பகிரங்கமாகி மேலும் அவர்கள் வேலையில் இருந்தால் பெரும் நஷ்டம் உண்டாகும் என்ற நிலை ஏற்பட்டபின் நிர்பந்தமாக வேலையை விட்டும் ஒதுக்கி வைகக்கப்பட்டிருப்பதையும் கண்டேன்.

அல்லாஹ்வை மறந்து சபபுகளில் மூழ்குவது எப்படி தவ்ஹீதுக்கு மாற்றமோ? அதேபோல் சபபுகளை இங்காரு (புறக்கணிப்பதும்) செய்வதும் தவ்ஹீதுக்கு மாற்றமான செயலே என்பதை நமது பிரசித்தி பெற்ற கார்க்கூன்களும் கூட விளங்கி இருப்பதாகத் தெரியவில்லை. அல்லாஹ்வை மறந்து வியாபாரத்தில் மூழ்கி இருப்பவன், எப்படியும் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று தவறு செய்கிறான். இது அல்லாஹ் மீதுள்ள  நம்பிக்கைக் குறைவால் ஏற்படுகிறது. இதே போல் எப்படியும் மக்களை ஜமாஅத்தில் புறப்பட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தஷ்கீல் செய்யப்பட்டால் (முறைதவறி) இதுவும் அல்லாஹ் மீது நம்பிக்கை இழந்து தங்கள் சொந்த முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதாலேயே ஏற்படுகிறது. முன்னையதைவிட, பின்னையது மிகவும் கெட்டது. இருளுடைய திரையைவிட பிரகாசத்தின் திரை மிகவும் கெட்டியானது என்று மௌலானா இல்யாஸ்(ரஹ்) கூறுகிறார்கள்.

குஜராத்திலிருந்து வந்த மிகவும் பிரசித்தபெற்ற ஒரு கார்க்கூன் திருச்சி பள்ளியில் மக்களை ஜமாஅத்தில் புறப்பட வைக்க செய்த பிரசங்கத்தில், அல்லாஹ்வுடைய பாதையில் புறப்படுவதால் உலக தேவைகள் பூர்த்தியாகும் என்று விளக்கி பேசினார். ஒருவர் கர்ப்பமாக இருந்த தனது மனைவியைத் துணைக்கு யாரும் இல்லாத நிலையில் அல்லாஹ்(ஜல்) பார்த்துக் கொள்வான் என்று தனிமையில் விட்டு விட்டு ஜமாஅத்தில் சென்றதாகவும், பிரசவ நேரத்தில் அவளது வேதனைக் குரலைக் கேட்ட தெருவில் சென்ற ஒருவர் அவளை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்து, குழந்தை பிறந்தபின் தன் வீட்டில் கொண்டு வைத்திருந்து, ஜமாஅத்திலிருந்து திரும்பிய பின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும். இதை அல்லாஹ்வுடைய உதவி என்ற வர்ணித்தார். கொள்ளை அடிக்க,  கொலை செய்யச் சென்ற ஒருவனின் மனைவியாக இருந்தாலும் பார்ப்பவர்கள், இதைத்தான் செய்வார்கள். இதுவும் அல்லாஹ்வுடைய உதவிதான் என்பதை அந்தப் பிரசித்தி பெற்ற கார்க்கூன் விளங்காததுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் தந்தை ஜமாஅத்தில் சென்றதினால் அது தள்ளப்பட்டதாகவும், நோயாளி சென்றதால் நோய் குணமானதாகவும் இந்த மூன்று விஷயங்களையும் விளக்கி 1 1ஃ2 மணி நேர பயான் இருந்தது. மக்களை நாம் புறப்பட வைக்கக் கையாளும் முறைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உலக ஆதாயத்திற்காக மக்கள் எதையும் செய்ய தயாராகி விடுவார்கள் என்ற உண்மையை உணர வேண்டும். மனைவி, மக்கள், சுற்றத்தார் அனைவரையும் பிரிந்து லட்சக்கணக்கான மக்கள் பொருளீட்ட அரபு நாடுகளுக்குச் செல்லவில்லையா? மௌலூது ஓதல், மீலாது நடத்தல், உலக ஆதாயத்திற்காகச் செய்யப்படும் நிலை ஏற்பட்டு வட்டிக்குக் கடன் வாங்கியாவது செய்யும் நிலையை நாம் பார்க்கவில்லையா? அல்லாஹ்வுக்கு என்ற தூய நோக்கத்தோடு புறப்படுவதுதான் மக்களுக்கு மிகவும் சிரமமாக தெரியும். அல்லாஹ்வுக்காக புறப்பட வைக்கத்தான் நாம் முயற்சி எடுக்க வேண்டும். மர்க்ஸிலுள்ளவர்களைத் திருப்திபடுத்த முறை தவறி, மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் கிளப்புகிறோம் என்று செயல்படுவோமேயானால் மாபெரும் தவறை நாம் செய்கிறோம் என்பதை உணர வேண்டும்.

முறைப்படி வேலை நடந்து வருவதாக இருந்தால், வேலையில் ஈடுபடுபவர்கள் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். இதுதான் உண்மை. நாம் சிறிது நோட்டமிட்டுப் பார்க்க வேண்டும். அந்த நிலை காணப்படுகிறதா? மக்களிலும் அந்த நிலை காணப்படவில்லை. இடங்களிலும் காணப்படவில்லை. ஆரம்பத்திலேயே இப்புனித வேலைக்குத் தயாரான இடம் மேவாத். அதன்பின் ஈடுபட்டது குஜராத், முறைப்படி வேலை நடைபெறுதவாக இருந்தால் இப்போது குஜராத்தில் காணப்படும் எழுச்சியையும், சுறுசுறுப்பையும் விட மேவாத்தில் அதிகமாகக் காணப்பட வேண்டுமே? வேகமாக இருந்த இடத்தில் வேகம் குறைந்து விட்டது. புதிய இடத்தில் சூடு பிடித்து இருக்கிறது. புதிதாக ஈடுபடுபவர்கள் மிகுந்த நம்பிக்கையோடும். ஆர்வத்தோடும் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். போகப்போக அவர்களின் நம்பிக்கையும், ஆர்வமும் குறைந்துவிடுகின்றன. ஆம்! உலக வஸ்துக்களை அடைவது கொண்டு நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாடுபட்டு அவற்றை அடைந்தபின் அவர்கள் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்காதது போல், இங்கும் நடைபெறுகிறது. காரணம் முறைப்படி பயிற்சி கொடுத்து அவர்களது உள்ளங்களைப் பக்குவப்படுத்த நாம் தவறிவிட்டோம்.

மக்கள் தொழாதவர்களாகவும், ஹராமான காரியங்களைச் செய்கிறவர்களாகவும் அதாவது “பாஸிக்”களாக இருக்கிறார்கள். அவர்களில் பாடுபட்டு அவர்களை முஸ்லிம்களாக மூமின்களாக அல்லது அதற்கு மேலான ஒரு நிலைக்கு நாம் ஆக்கிவிட்டால் நமது முயற்சி சரியான முயற்சியாகும். அதற்குப் பெரிய வெகுமதியுண்டு. ஆனால் “பாஸிக்”களிடம் பாடுபட்டு அவர்களை “முனாபிக்”களாக நாம் ஆக்குவோமேயானால், அவர்களது நிலையை உயர்த்தவில்லை. மாறாக அவர்களை “காபிர்”களின் நிலைக்கும் கேடு கெட்ட ஒரு நிலைக்குத் தாழ்த்திவிட்டோம். இதற்கு யார் காரணம்? அல்லாஹ்(ஜல்) விடமிருந்து நாம் தப்ப முடியுமா? சிந்தித்துப் பார்;க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இன்று அதிக மக்களும், அதிக நாடுகளும், இப்புனித வேலையில் ஈடுபடுகின்றன என்று நாம் சந்தோஷப்படின் இது நமது அறியாமையே. நாம் கூட்டும் இஜ்திமாக்களில் லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்கள் கூடுவது நமது வெற்றியல்ல. 4 கலீபாக்களுடைய காலங்களில் இருந்த முஸ்லிம் ஜனத்தொகையைவிட, நாடுகளைவிட அதற்குப்பின் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் ஏற்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களின் தரம் இருக்கிறதா? எண்ணிக்கையை வைத்து நாம் சந்தோஷப்பட்டால் நாம் துர்பாக்கியசாலிகளே. இப்படியே எழுதிக் கொண்டு போனால் விஷயங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் கடிதம் புத்தகமாக மாறிவிடும்.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மூன்று மாநிலங்களின் முக்கிய கார்க்கூன்கள், டில்லி வந்திருந்தபோது, இரண்டாவது நாள் பஜ்ருக்குப் பின் புனித திருமறையிலிருந்து 15:2 ஆயத்து ஓதிக் காட்டப்பட்டு, சும்மா இந்த வேலையில் தொடர்பு கொண்டு இருப்பவர்களும் வெற்றியடைந்து விட்டார்கள் என்ற அடிப்படையில் பயான் செய்யப்பட்டது. இந்த ஆயத்தின் உண்மை நிலையை நான் மறுக்கவில்லை. முக்கிய கார்க்கூன்களிடம் பேச வேண்டிய பேச்சுத்தானா என்று நான் சந்தேகப்படுகிறேன். அதற்கு முந்திய இரவு 12 மணி வரை நான் மௌலவி யூசுப் சிலோனியுடன் நமது பணி குறித்து பேசிக் கொண்டிருந்தேன். மருந்தகத்தில் சர்வ மருந்துகளும் இருக்கும். உஷ்ணம் அதிகப்பட்டு அவஸ்தைப்படும் ஒருவருக்கு, உஷ்ணத்தை இன்னும் அதிகப்படுத்தும், மருந்து மருந்தகத்தில் இருக்கிறதென்ற ஒரே காரணத்தால் எடுத்துக் கொடுக்கப்பட்டால், பாவம் இரண்டு நாள் கழித்து இறப்பவன் இன்றே இறந்து விடுவான். இதற்கு மருந்து காரணமல்ல. மருந்தைக் கொடுத்த வைத்தியரே காரணம்.

புனித குர்ஆன் மனிதனின் உடல், ஆன்மா இவற்றிற்குரிய சர்வ மருந்துகளும் நிறைந்த ஒரு மருந்தகமாகும். நிலை அறிந்து தான் அதன் ஆயத்துக்கள் எடுத்து பிரயோகிக்கப்;பட வேண்டும். அதன் காரணமாகத்தான் வெறும் அரபு மொழி மாத்திரம் கற்றுக் கொண்டு குர்ஆனுக்கு விளக்கங்கொடுக்கச் செல்லக் கூடாது என்று நாம் தடுக்கப்பட்டிருக்கிறோம். 15:2 ஆயத்து பெயரளவில் முஸ்லிமாய் இருப்பதைவிட இல்லாமல் இருப்பது நல்லது என்று சொல்கிறவர்களுக்கும், இப்பனித பணியை முறைப்படிச் செய்ய வேண்டும் அல்லது விட்டுவிட வேண்டும். ஈடுபடுவதா? வேண்டாமா? என்ற ஐயத்தில் இருப்பவர்களுக்கும் சொல்லப்பட்டால் அது பொருந்தும். கடந்த 20,25 ஆண்டுகளாக வேலையில் ஈடுபடுபவர்கள் அதுவும் அகம் கார்க்கூன்கள், மூன்று மாகாணங்களிலும் பொறுப்புடன் வேலை செய்யக் கூடியவர்கள், வேலையை முறைப்படிச் செய்யக் கடமைப்பட்டவர்கள், இவர்களுக்கு மத்தியில் பெயரளவில் ஈடுபட்டால் போதும் என்று உபதேசிக்கப்பட்டால் அவர்களது நிலை என்ன ஆகும்? அவர்கள் போலிகளாக ஆக நாமே காரணமாக அமைகிறோமல்லவா? இது எனது தாழ்மையான அபிப்பிராயங்களாகும். எனது எண்ணங்கள் தவறு என்றால் தகுந்த ஆதாரங்களோடு எனக்கு விளக்கம் தந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். இப்புனித வேலையில் தற்போது ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மர்கஸ் மூலமாகவே நிவர்த்தி செய்யப்பட்டால் என்னை விட சந்தோஷப்படக் கூடியவன் யாரும் இருக்க முடியாது.

குறிப்பாக மக்களைப் புறப்பட வைக்க எந்த அளவு முயற்சி எடுக்கப்படுகின்றதோ அதை விட ஒருபடி அதிகமாக மக்களது தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் சீர்படுவது குறித்து முயற்சி எடுக்கப்பட வேண்டும். புறப்படுவதால் மறுமையில் கிடைக்கும் உயர்ந்த அந்தஸ்துகளை மாத்திரம் பிரமாதப்படுத்தி பேசாமல், மறு உலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையின் சர்வ துறைகளிலும் பரிபூரணமாக அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பயான்கள் அடிக்கடி செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள நிலை தொடர்ந்து நீடிக்குமானால் எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்(ஜல்) பணித்த உயர் பணி முறைப்படி நடக்க என்ன செய்யப்பட வேண்டும் என்று அந்த வல்லோன் என் உள்ளத்தில் போடுகிறானோ அதை நிறைவேற்றி வைக்க நான் சித்தமாய் இருக்கிறேன் என்பதை அறியத் தருகிறேன். வஸ்ஸலாம்.

குறிப்பு : குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்க முற்பட முன்னர் எழுதப்பட்ட கடிதமாகும் இது.

இப்படிக்கு,

க.மு.ஹ. ஷாஹுல் ஹமீது

Previous post:

Next post: