உண்மையான ஷரீஅத் சட்டம் அல்குர்ஆனே!

in 2010 ஜூலை

 உண்மையான ஷரீஅத் சட்டம் அல்குர்ஆனே!
இதனை பின்பற்றியே தீர்ப்பு வழங்க வேண்டும்!

மண்டபம் M. அப்துல் காதர்

அகில உலக மக்களுக்கும் ஒரே இறைவனான வல்ல இறைவன் மனிதனை படைத்து தூய வாழ்க்கைநெறி வாழ்வதற்கு அருள் மறையாம் அல்குர்ஆனையும் அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களையும் இவ்வுலகிற்குத் தந்தான். மனித வர்க்கம் நல்வழியில் வாழ்ந்திட இரண்டைப் பின்பற்றுங்கள், வழி தவற மாட்டீர்கள் என்ற உயர்வான கொள்கையினை முன்னிறுத்தி இஸ்லாமிய மார்க்கம் உலக மெங்கும் சுடர்விட்டு பிரகாசிக்கிறது. இத்தகைய மார்க்கத்தில்தான் குறுகிய காலங்களிலே சட்டவிரோதமாக ஊடுருவிய ஆலிம்-உலமா வர்க்கத்தினர் தங்களின் சுயநலம் காரண மாக இஸ்லாமிய ஷரீஅத் என்ற பெயரால் கற்பனையில் உருவான சட்டங்களை இயற்றி வைத்துக் கொண்டு இதுதான் இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் என்றும் இதுவே மார்க்கத் தீர்ப்பும் என்றும் கூறி கேலிக் கூத்தாக்கி வருவதைக் காண முடிகிறது.

உண்மையான ஷரீஅத் சட்டம் எது என் பதனை அல்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
“”….எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள் தாம். அநியாயக்கரார்கள்தாம், பாவிகள்தாம். (அல்குர்ஆன் 5:44,45,47)

“….அல்லாஹ் அருள் செய்த (சட்டத்தைக்) கொண்டு அவர்களுடையே நீர் தீர்ப்பு செய்வீராக….” (5:48-49)

இவ்வாறு தெளிவுபட அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறியிருந்தும் இவற்றை உதாசீனப் படுத்திவிட்டு இந்தியாவில் ஆண்ட பெயர் தாங்கி முஸ்லிம் ஆட்சியாளர் காலத்திலே உருவாக்கப்பட்ட ஹனபி சட்டப் புத்தகமான துர்ருல் முக்தார்தான் எங்கள் ஷரீஅத் சட்ட புத்தகம் என்று அவற்றைக் கொண்டு தீர்ப்பு வழங்கும் ஆலிம்-உலமாக்களைத்தான் பார்க்கிறோம். முக்கிய பிரச்சினையான தலாக் விஷயத்தில் விளையாடும் விபரீதங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

கணவன் தன் மனைவியை தலாக் கூறி விட எண்ணினால் முதலில் இதற்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் என்ன கூறுகிறது என்பதனை குர்ஆனையும், ஹதீஸையும் புரட்டிப் பார்த்து அவற்றைக் கொண்டே தீர்ப்பு வழங்கிட ஆலிம்கள் முன் வரவேண்டும்.
அதை விடுத்து மனோ இச்சைக்கும் மன்னர் காலத்து துர்ருல் முக்தார் சட்டங்களையும் பயன்படுத்தி மனிதாபிமானமின்றி தலாக் விஷயத்தில் தீர்ப்பு வழங்குவது ஷரீஅத் சட்டத்திற்கே முரணானதாகும். மறுமையில் இறைவனின் முன் குற்றவாளியாக நிற்க நேரிடும் என்பதனையும் உணர வேண்டும்.

ஓர் ஆலிமிடம் ஒரு ஜமாஅத்தினர்கள் தலாக்கை பற்றி விபரம் கேட்கிறார்கள். அதற்கு அந்த ஆலிம் கூறுகிறார் ஒருவன் ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறி விட்டால் அது முத்தலாக் தான் என்று ஃபத்வா வழங்குகிறார். இதனை ஜமாஅத்தினர்களும் அங்கீகரிக்கிறார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையையே முடித்து வைக்கும் கொடுமைகளை அரங்கேற்றுகின்றனர்.

நபி(ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியை ஒரேடியாக தலாக் கூறிவிட்டேன் என்று தெரிவித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதன் மூலம் என்ன கருதினீர்? என்று கேட்டார்கள். ஒரு தலாக்கையே கருதினேன் என்று கூறினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க. அவரும் ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறினார். அப்படியாயின் அது ஒரு தலாக் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ருகானா (ரழி) நூல்:திர்மதி:1187

மேற்கண்ட நபி மொழியை இந்த ஆலிம்கள் படிப்பது இல்லை.
“”மாத விடாய் நேரத்தில் தன் மனைவியை தலாக் கூறினால் என்ன செய்வது? என்று இப்னு உமர்(ரழி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் அப்துல்லாஹ் பின் உமரை உனக்குத் தெரியுமா? அவர் தனது மனைவியை மாதவிடாய் காலத்தில் தலாக் கூறிவிட்டார். உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவர் அவளை மீட்டுக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
அந்த தலாக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுமா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் அவன் முட்டாள்தனமாகவும் கோழைத்தன மாகவும் நடந்து கொண்டால் எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்? என்று விடை \யளித்தார்கள். அறிவிப்பு:யூனுஸ் பின் லுபைர்(ரழி) நூல்:திர்மதி.

இப்னு உமர்(ரழி) அவர்கள் தமது மனைவியை மாதவிடாய் சமயத்தில் தலாக் கூறிவிட்டார். அது பற்றி உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவளை மீட்டிக் கொள்ளட்டும்; பிறகு தூய்மையான நேரத்தில், அல்லது கர்ப்பமான நேரத்தில் அவன் தலாக் கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸாலிம் அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மதி 1186

மனைவி மாதவிடாய் காலங்களில் தலாக் கூறக்கூடாது என்று அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் கூறியிருக்க இந்த ஆலிம்கள் இதனையும் புறக்கணித்து செயல்படுவதை காண முடிகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒரு பிரச்சினை எழுந்து அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது கடினம் என தெரிய வந்தாலும், இந்த சூழ்நிலையிலும் தலாக் சொல்லிவிடும் முடிவை எடுத்து விடக்கூடாது என்றும் இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கின்றது. இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் சமரசம் செய்து வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இதோ அல்குர்ஆன் வசனம்
மேலும் கணவன் மனைவிக்கிடையே உறவு முறியுமோ என நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும் நியமியுங்கள். அவ்விருவரும் உறவை சீர்படுத்த நாடினால் அல்லாஹ் அவ்விருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் நிஸா: 4:35.

இவ்வசனத்தின் மூலம் அறிய முடிகிறது யாதெனில் அல்லாஹ் சமரசத்துக்குண்டான  நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை தெளிவு படுத்துகிறான். சமரசம் பேசுங்கள் என்றும் ஜமாஅத்தினருக்கு அறிவுறுத்துகிறான். இதனையும் மீறி சமரசம் பலனளிக்காமல் போனால் மட்டுமே தலாக் சொல்லும் முடிவிற்கே வரவேண்டும்-அத்தகைய முடிவை மேற்கொள்ளும் போதுகூட இஸ்லாம் கூறியுள்ள  ஷரீஅத் வழிமுறையைப் பின்பற்றி, கவனம் செலுத்தவேண்டும். இதை விடுத்து சில ஜமாஅத்தினர்கள் முல்லாக்கள் கூறும் மனித கற்பனைச் சட்டங்களை பயன்படுத்தவே கூடாது. அது மாபெரும் தவறாகும்.

குர்ஆன் கூறும் தலாக் சட்டம்:
மாத விலக்கு இல்லாத காலங்களில் மனைவி தூய்மையான நிலையில் மனைவி இருக்க வேண்டும் என்பதனை கணவன் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்குர்ஆன் 65:1

நீதமான இரு சாட்சிகளின் முன்னிலையில் முதல் தலாக் என்று ஒரு தடவை தான் கூற வேண்டும். அல்குர்ஆன் 65:2 அவ்வாறு தலாக் கூறப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும். அல்குர்ஆன் 2:228

அந்தக் கால கட்டங்களில் கணவன் சேர்ந்து வாழ விரும்பினால் அவளிடம் சேர்ந்து வாழலாம். அந்தக் கால கட்டத்திற்குள் கணவன் சேர்ந்து வாழவில்லை எனில் முதல் தலாக் அதாவது திரும்ப பெறக்கூடிய ஒரு தலாக் என்றே கருதப்படும். சிறிது காலம் சென்று குழந்தைகள் நலன் கருதி மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணமிருந்தால் மீண்டும் திருமணம், செய்து இருவரையும் இணைத்து வைக்கலாம். இவர்கள் எந்தவித பிரச்சினையுமின்றி சந்தோஷமாக வாழந்தால் ஒன்றுமில்லை. ஆனால் மீண்டும் அவர்களுக்குள் அதாவது முதலாவது தலாக் கூறியவருக்குள் பிணக்குகள் ஏற்பட்டால் அவளுக்கு இரண்டாவது தலாக் சொல்லும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சொல்லப்பட்டால் முதலாவது தலாக்கில் கடைபிடித்த முறைகளையே பின் பற்றப்பட வேண்டும்.

இதனைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.
தலாக் இரு தடவைதான். பின்னர் நேரிய வழியில் அவர்களை (மனைவியாகவே) வைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 2:229)

இரண்டு தலாக் பயன்படுத்திட கணவனுக்கு வாய்ப்பை கொடுத்து இவற்றில் மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழவும் வலியுறுத்துகிறான். இவற்றிற்கெல்லாம் பிறகே இறுதி கட்டமாகவே மூன்றாவது தலாக் கூறிவிட்ட பிறகு மீண்டும் கணவன்-மனைவி உறவுடன் வாழ முடியாது என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

“”(இரண்டு தடைவை சொல்லி) பின்னர் (மூன்றாம் தடவை மீண்டும்) அவளை அவன் தலாக் சொல்லி விட்டால் பிறகு அவள் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல-வேறு ஆணை அவள் மணந்து அவனும் தலாக் சொல்லும் வரை.” 2:230

இவ்வாறு அல்லாஹ் அல்குர்ஆனில் விவாகரத்து தொடர்பான சட்டங்களை தெளிவாக விளக்கியுள்ளான்.

ஆனால் இந்த புரோகித ஆலிம்கள்-அல்லாஹ்வின் ஷரீஅத் சட்டத்தையே மதிக்காமல் அவர்கள் தமது சொந்தக் கற்பனையில் உருவாக்கப்பட்ட மனித சட்டத்தை இதுதான் ஷரீஅத் சட்டம் என்று கூறி ஒரே நேரத்தில் மூன்று முறை கூறினாலே அது முடிந்து போனது என்று கூறி இன்றும் நடைமுறைபடுத்தி வருகின்றனர். நபிமார்களின் வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும் இந்த ஆலிம்-உலமாக்கள், நபி வழியையும், சுன்னாவையும் முற்றிலும் உதாசினப் படுத்தி பெண்களின் வாழ்க்கையை இருள் சூழ வைக்கிறார்கள்.

ஒரு கணவன் அவசரப்பட்டோ, ஆத்திரப் பட்டோ, ஒரே நேரத்தில் தலாக் கூறினாலும் அவன் தன் தவறை உணர்ந்தோ அல்லது குடும்ப நலன் கருதி மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று எண்ணினாலும் இந்த முல்லா வர்க்கம் தங்கள் கற்பனை மனிதச் சட்டத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு விடுவதை காண முடிகிறது. மதரஸாக்களில் கற்றுக் கொடுத்த மன்னர் காலத்து சட்ட புத்தகங்களை ஷரீஅத் சட்டம் என்று இனிமேலும் கருதாமல் தெளிவான குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை படித்து, அறிந்து மார்க்க தீர்ப்பு வழங்க முன்வர வேண்டும்.
இதே சட்டப் புத்தகங்கள்தான் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று எழுதி வைத்து இன்றும் அதே நிலையை மதரஸாக்க ளில் படித்துவிட்டு வருகின்றனர். இதிலிருந்தே தெரிகிறது இவர்களின் கிதாபுகளின் லட்சண ங்கள்.

இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும், உயர்வான அந்தஸ்தும் அளித்துள்ளது. ஏனெனில் பெண் என்பவள் பத்து மாதம் சுமந்து பிள்ளை பெற்று கொடுக்கும் நிலையிலும், கணவனின் சொல்படியும், வீட்டு வேலைகள் செய்து கணவனை கண் குளிர வைக்கும் வேலைக்காரியாகவே செயல்படுப வள். தன் உடலையும் அழகையும் கணவனின் சக கஷ்டங்களில் பங்கெடுத்து கொள்வதால் தன்னையே அழித்துக் கொள்பவள். ஆதலால் தான் அல்லாஹ் பெண்கள் திருமணம் செய்வதெனில் மஹர் தொகையை மனைவிக்குக் கொடுத்து மணமுடியுங்கள் என்று கட்டளையே பிறப்பித்துள்ளான்.

ஆனால் நம் நாடுகளில் அதற்கு மாற்றமாகவே பெண் வீட்டாரிடத்தில் வரதட்சணையாக பல லட்சங்கள் கறாராக பெற்று அதே பெண்களுக்கு அவர்களது பணத்திலிருந்து மஹராக ரூபாய் 500/-என்றும் ஆயிரம் என்றும் கொடுத்து ஏமாற்றுகின்றனர். இத்தகைய தவறான செயல்முறைக்கு நம் ஊர்களில் ஜமாத்தார்கள்-ஆலிம்- உலமாக்கள் துணை போவதைக் காண முடிகிறது. இவையெல்லாம் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தில் துடைத்து எறியப்படக்கூடியவை. உண்மையான இஸ்லாமிய ஷரீஅத் சட்டமான அல்குர்ஆனை பின்பற்றி நடக்க முன்வந்தால் இஸ்லாமிய கொள்கைகள் முழுவதும் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதன் வளர்ச்சிக்கும் பெரும் துணையாக இருக்கும்.

ஆலிம்களும், உலமாக்களும் கண்மூடித்தனமாக கற்பனை கிதாபுகளை தூக்கி வைத்துக் கொண்டு இனிமேலும் மார்க்க தீர்ப்பை வழங்க முன்வர வேண்டாம்.  பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் முகமாக அல்குர்ஆனைப் புரட்டி பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களின்படி மார்க்க தீர்ப்பை வழங்க வேண்டும். தவறான தீர்ப்பில் பெண்கள் பாதிப்படைந்ததால் எழுத நேரிட்டது.

நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரே ஆலிம்கள். அல்குர் ஆன் 35:28) என்ற குர்ஆன் வசனத்தை கவனத்தில் கொண்டு ஆலிம்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! குர்ஆனை பின்பற்றி தீர்ப்பு வழங்குங்கள்!

Previous post:

Next post: