இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கை-சபே பராஅத்

in 2010 ஆகஸ்ட்,மூடநம்பிக்கை

 அபூயாசிர்,உடன்குடி

அறிவுக்குப் பொருத்தமான நடைமுறைக்குச் சாத்தியமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் ஆகும். ஆயினும் இஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.

இவ்வுலகில் ஏராளமான மதங்கள் இருக்கின்றன. அம்மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வித்தியாசத்தின் அடிப்படையிலேயே தனிச் சிறந்த மார்க்கமாக இஸ்லாம் கருதப்படுகிறது. உண்மை இவ்வாறிருக்க இன்று எவ்வளவோ மூட நம்பிக்கைகள் புகுந்து முஸ்லிம் மக்களை ஆட்டிப்படைப்பதைப் பார்க்கின்றோம். தூய இஸ்லாமிய மார்க்கத்தைப் பெரும்பாலோர் முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்துத் தான் கணக்கிடுகிறார்கள். நெறிநூலாகிய குர்ஆன், நபிமொழி, நபி(ஸல்) அவர்களின் கொள்கை முழக்கம் இவை மட்டும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கவில்லை; மாறாக அவர்களின் பழக்க வழக்கங்கள் நடைமுறைகள் ஆகியவையும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது.

இன்றுள்ள முஸ்லிம்களிடையே மூடநம்பிக்கைகள் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றன. மூடநம்பிக்கையில் மாற்றாரோடு போட்டி போடும் அளவிற்கு ஏன்? அவர்களையே மிஞ்சும் அளவிற்கு அதல பாதாளத்தில் இருக்கின்றார்கள். இவை நம்மை மறுமையில் நரகத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை அவர்கள் சிந்திப்பது கிடையாது. முஸ்லிம் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ­ஃபான் மாதம் 15ம் நாள் அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் 3 யாசீன் ஓதி இரவு முழுதும் நின்று வணங்கி மறு நாள் ஒரு நோன்பையும் நோற்பது வழக்கம். இந்த வழிகேட்டிற்கு பெயர் தான் சபே பராஅத்.

சபே பராஅத்திற்கு அவர்களின் விளக்கம் யாதெனில், அல்குர்ஆன் 44வது அத்தியாயம் 3ம் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். “நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம். இந்த வசனத்தில் இடம் பெற்று உள்ள மூலச் சொல்லான முபாரகதன் என்ற அரபு சொல்லுக்கு பரக்கத் என்று பொருள் எடுத்துக் கொண்டு சபே என்றால் பார்ஸி மொழியில் இரவு என்ற பொருளையும் இணைத்து சபே பராஅத் என்ற வாசகத்தை புரோகித மெளலவிகள் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்தி, அறியாமையில் உள்ள மக்களிடம் வழிக் கேட்டை வழிபாடாக  செயல்படுத்திக் கொண்டு வருகின்றனர். சபே பராஅத் என்ற வார்த்தை குர்ஆனிலோ, நபிமொழியிலோ இடம் பெற வில்லை என்பது தான் நிதர்சனம்.

மேலும் மூன்று யாசீன் ஓதுவதற்கு உண்டான விளக்கமானதும் குர்ஆனிலோ, நபி வழியிலோ இடம் பெறவில்லை என்பதும் சுயமாகச் சிந்திப்பவர்களுக்குப் புலப்படும். அன்று இரவு ஒரு யாசீன் ஓதினால் 1 வருடத்திற்கு எந்த முஸீபத்தும் வராது, இரண்டாவது யாசீன் ஓதினால் பரகத்(பணம்) செல்வம் கொழிக்கும், ஆயுள் அதிகரிக்கும் 3வது யாசீன் ஓதினால் அவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு கப்ரின் வேதனையை நீக்கி விடும் என்ற மூடநம்பிக்கை யில் இந்த வழிகேட்டை வழிபாடாக புரோகித முல்லாக்கள் தங்களின் வயிற்று பிழைப்புக்கு என்றே மார்க்கத்தில் புகுத்திவிட்டனர் என்பது தான் உண்மை என்பது குர்ஆனையும் நபிவழியையும் சுயசிந்தனை செய்யும் போது சாதாரண அறிவுபடைத்தவனுக்குக் கூட புலப்படும்.

புரோகித முல்லாக்கள் தவறான உபதேசம் மூலம் பாமரமக்களின் அறியாமையை நன்கு பயன் படுத்திக்கொள்வார்கள். அப்படியயனில் 44வது அத்தியாயத்தின் உண்மை நிலைதான் என்ன? என்பதை சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். “நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம்’ என்ற வசனத்தின் விளக்கம் குர்ஆனில் 97வது அத்தியாயத்தின் 1வது வசனமே போதுமானது. “நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத் துல் கத்ர்) என்ற நாளில் இறக்கினோம் என்று அல்லாஹுத்தஆலா குர்ஆனிலேயே விளக்கத்தை இடம் பெற செய்து உள்ளான்.

அல்லாஹ்வின் நெறிநூலாகிய குர்ஆனை அதன் தமிழ் மொழியாக்கத்தை சுயமாக ஒவ்வொரு முஸ்லிமான ஆண்களும், பெண்களும் படித்து சிந்தித்தாலே இந்த புரோகிதர்களின் வழிகேட்டில் இருந்து ஈடேற்றம் பெறலாம். (இன்ஷா அல்லாஹ்) இறைவனின் நெறிநூலா கிய குர்ஆனைப் படித்துச் சிந்திக்க மறந்த இந்த மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு புரோகிதத் தொழிலை மூடநம்பிக்கையின் பெயரால் நிறைவேற்றி வருகின்றனர். இவர்களின் இந்த செயல்பாடு, இஸ்லாத்தின் மீது கொஞ்ச நஞ்சம் வைத்திருக்கும் நடுநிலையாளர்களின் நல்லெண்ணமும் தவிடுபொடியாகிவிடும் அளவிற்குத்தான் இவர்களின் செயல்கள் அமல்கள் என்ற பெயரில் இருக்கிறது. பகுத்தறிவாளர்கள் பின்பற்றும் பகுத்தறிவுள்ள மார்க்கம் என்று சொல்லும் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் மூடர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

இந்த மூடநம்பிக்கையின் வாயிலாக தீமையை சம்பாதிப்பதுடன் தன்னம்பிக்கையை இழந்து நிம்மதியின்றி மொத்தத்தில் தன் வாழ்வையே சீரழித்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி மனிதனை மனிதனாக வாழச் செய்திடும் பகுத்தறிவுக் கொள்கைகளை தான் இஸ்லாம் போதிக்கிறதே தவிர மடத்தனமான கொள்கையை இஸ்லாம் ஒருபோதும் போதிப்பதில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும். மூடநம்பிக்கைகளை விட்டு விலகி அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொன்ன வழியில் நடந்தால் தான் வெற்றியடைய முடியும், இல்லையயன்றால் தோல்வி யைத்தான் அடைய வேண்டியது வரும். இதனையே இறைவன் தனது நெறிநூலாகிய குர்ஆனில் கூறுகிறான்.

“நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள். வேறு வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டு பிரித்துவிடும். நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப் பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (அல்குர்ஆன் 6:153)

“யார் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்விற்கு பயந்து கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்’ (24:52)

“என் வழிமுறையை புறக்கணித்தவன் என்னைச் சார்ந்தவன் அல்ல’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம்.

“நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்:புகாரி, முஸ்லிம்.

எனவே இஸ்லாத்தில் சபே பராஅத் என்று ஒரு நாளே கிடையாது. இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத செயலாகும். பெரிய வேடிக்கை என்னவென்றால் குர்ஆன் ஹதீஸை கற்றுணர்ந்த அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு புரோகித கூட்டம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காசு சம்பாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட கோமாளிகளிடம் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தந்த வழியில் ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களும், பெண்களும் நடந்தால் வெற்றி கிடைக்கும். அல்லாஹ் போதுமானவன்.

Previous post:

Next post: