64ம் ஆண்டு விடுதலை நாள்!

in 2010 செப்டம்பர்

நமது தாய்த்திருநாட்டின் 64ம் விடுதலை நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. எப்படித் தெரியுமா? பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அவசர, அவசியத் தேவைகளுக்காகப் பிராயணம் செய்பவர்களுக்கும், கோவில், சர்ச், பள்ளிவாசல் செல்லும் மக்களுக்கும் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் பெரும் சிரமங்களைக் கொடுத்து, இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின்னரும் நமது இந்தியப் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டது போல் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று நமது இந்திய தேசியக் கொடியை ஏற்றும் பரிதாப நிலை. இந்த பரிதாப கேலிக் கூத்தான நிலையை நாம் நிதர்சனமாகப் பார்க்கும்போது அன்று வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறிய வாசகங்கள்தான் நினைவுக்கு வருகிறது. அவை வருமாறு:

இந்திய மக்கள் பொறுப்பற்றவர்கள், தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அறிவற்றவர்கள். அவர்களுடைய தலைவர்கள் அரை வேக்காட்டுப் பேர்வழிகள். விசாலமான பார்வையும், பொது நோக்குக்கும் அற்றவர்கள். கடைந்தெடுத்த சுயநல வாதிகள். அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கும் அவர்களிடம் சுதந்திரமும், ஜனநாயகமும் சந்தைக்கு வரும் விற்பனைச் சரக்காக மாறிவிடும். சுதந்திரம் கிடைத்து ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்களது அரசு நிர்வாகம் கேலிக் கூத்தாகிவிடும்.

சர்ச்சில் இந்தியா தங்களிடமிருந்து விடுதலைப் பெற்று சுதந்திர நாடாகப் போகிறதே என்ற ஆத்திரத்தில் இப்படிக் கூறினாரா? அல்லது இங்குள்ள மக்களின், அரசியல்வாதிகளின் நிலை அறிந்து கூறினாரா? என்பதை நாம் அறியோம். ஆயினும் அவர் கூறியுள்ளது இன்று நூற்றுக்கு நூறு அரங்கேறி வருவதை நிதர்சனமாகப் பார்க்கிறோம்.

இந்திய மக்களும் தங்களின் பொன்னான வாக்குச் சீட்டை இன்று 500/-க்கும், 1000/-க்கு விற்கும் அறிவீனர்களாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளும் மக்களுக்கு இப்படி 500/-, 1000/-த்தைக் கொடுத்து அவர்களின் வாக்குச் சீட்டை விலைக்கு வாங்கும் வியாபாரிகளாக ஆகிவிட்டார்கள். ஆம்! சர்ச்சில் சொன்னது போல் ஜனநாயகம் விற்பனைச் சரக்காகிவிட்டது. இப்படி ஆட்சியில் அமர்கிறவர்கள் மக்கள் பணத்தை தவறான வழியில் கோடிகோடியாகக் கொள்ளை அடித்து நூதலை முறைக்குச் சொத்து சேமிப்பதோடு, தங்களின் வாரிசுகளையே ஆட்சியில் அமர்த்தப் பெரும் பாடுபடுகிறார்கள். மக்கள் பணம் பல்லாயிரம் கோடிகளைக் கொள்ள அடித்து அதில் ஒரு சிறுபகுதியை அடுத்த தேர்தலில் வாக்காளர்களுக்கு 500/-க்கும், 1000/-எனக் கொடுத்து விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறாகள்.

நம்மூர் அரசியல்வாதிகளைப் பற்றி அன்று 65 ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சில் சொன்னதை இன்று நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இருட்டில் சுதந்திரம் பெற்றோம். இன்னும் விடியவில்லை என்று ஓர் அறிஞன் கூறினான். இருட்டில் பெற்ற சுதந்திரம் இன்று படுபாதாள இருட்டில் சிக்கிக் கிடக்கிறது என்பதே அனுபவ உண்மை. அன்று வெள்ளையனின் ஆட்சிக் காலத்தில் நடக்காத அட்டூழியங்கள், அராஜகங்கள், பஞ்சமா பாவங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, வஞ்சகம், மோசடி, லஞ்சம், இந்தியாதி, இத்தியாதி அனைத்தும் கொடி கட்டிப் பறக்கின்றன. இவை அனைத்திற்கும் இன்று முன்னணியில் நிற்பவர்களும், திட்டமிட்டுச் செயல்படுகிறவர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடமைப்பட்ட காவல்துறையினரே இம்மாபாதகச் செயல்களுக்குத் துணை போகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். விதிவிலக்காக ஒரு சிலர் இருக்கலாம். அப்படிப் பட்டவர்கள் கட்டம் கட்டப்படுவார்களே அல்லாமல், பாராட்டப்பட மாட்டார்கள். ஆம்! அநீதியும், அக்கிரமும், வன்முறைச் செயல்களும், அதர்மமுமே இன்று கோலோட்சுகின்றன.

ராஜஸ்தானிலிருந்து ம.பிரதேசத்திற்குக் கொண்டு சென்ற 400 டன் வெடிப்பொருட்கள் கொண்ட 61 ட்ரக்குகள் மாயம், 180 இலட்சம் டன் உணவுப் பொருள்கள் சேமிப்புக் கிடங்குகளில் பாழ். இந்த ஆண்டு 100 இலட்சம் டன் பாழ், 65,000 கோடி ரூபாய் உணவுப் பொருள்கள் கால்நடைத் தீவனத்திற்கும் பயனில்லாமல் பாழ், 1997 முதல் 2007 வரை 1.83 லட்சம் டன் கோதுமை, 6.33 லட்சம் டன் அரிசி, 2.2 இலட்சம் டன் நெல், 111 லட்சம் டன் சோளம், 50 லட்சம் டன் இதர தானியங்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசிடம் இருந்து பதில் பெறப்பட்டுள்ளது. (நன்றி: சமரசம் 16-31 ஆகஸ்ட் 2010)  இதிலிருந்து ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் ஏழை விரோத போக்கு குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. எத்தனையோ ஏழை நாடுகள் இருக்க மிச்சப்படும் பால் மற்றும் தானியங்களை அமெரிக்கா கடலில் கொட்டி அழிப்பதாக செய்திகள் வாயிலாக அறிகிறோம். அமெரிக்கா, ஏழைகளுக்கு விரோதமாகச் செல்லும் பாதையில் நமது நாடும் அடியெடுத்து வைத்து வெற்றி நடை(?) போடுகிறது என்பதற்கு வேறு ஆதாரமும் வேண்டுமா?

நல்லவர்கள், வல்லவர்கள், மனிதநேயர்கள் செய்வதறியாது பதைபதைத்து நெஞ்சம் துடித்து இரத்தக் கண்ணீர் வடித்து வாழ்நாட்களை ஓட்டும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள், தங்களுக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தரும் சிறுபான்மை பெரும் செல்வந்தர்களுக்கும், பண முதலைகளுக்கும் சாதகமான சட்டங்களையே தீட்டுகின்றனர். 1000 கோடி செல்வந்தன் 10,000 கோடி செல்வந்தனாக வழி வகுத்துக் கொடுக்கிறார்களே அல்லாமல் பெரும்பான்மை நடுத்தர, ஏழை, வறுமைக் கோட்டிற்கும் கீழ் இருக்கும் பரம ஏழை இவர்களை முன்னுக்குக் கொண்டு வரச் சட்டம் வகுப்பதில்லை. 16.50 அடக்கமாகும் பெட்ரோலை கொடுமையான வரிகள் மூலம் 56/-ஆக்கி இருப்பதே இதேபோல் டீசல் விலையையும் வரிகள் மூலம் கடுமையாக உயர்த்தி இருப்பதே அரசின் பெரும்பான்மை ஏழை, நடுத்தர மக்கள் விரோத போக்கை உணர்த்தப் போதுமானதாகும். அதற்கு மாறாக வாக்கு வங்கியைக் குறிக்கோளாகக் கொண்டு, பெரும்பான்மையினரை மகிழ்வடையச் செய்ய சிறுபான்மையினரின் நியாயமான உரிமைகளைப் பறிக்கிறார்கள். நியாயமற்ற கைதுகள், சிறையடைப்பு, சித்திரவதை என அம்மக்களை தீவிரவாதிகளாக, வன் முறையாளர்களாக வளர்க்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில இலவசங்களைக் கொடுத்து ஏழை மக்கள் சோம்பேறிகளாகவும், ஏழைகளாகவும் நிலைத்திருக்கவே விரும்புகின்றனர். ஆட்சியாளர்கள் மதுபானங்கள் விற்று, மனித பலகீனமான பால் உணர்வைத் தூண்டும் வெள்ளித்திரை, சின்னத்திரை, இன்னும் பல அநீதமான முறைகளில் பணம் குவிய வேண்டும் என்று அரசே எண்ணும்போது மக்களிடம் எப்படி நேர்மையையும், ஒழுக்கத்தையும், மேம்பாட்டையும் எதிர்பார்க்க முடியும்.

ஆம்! ஜனநாயகமோ, சோசலிசமோ, கம்யூனிசமோ, சர்வாதிகாரமோ, மன்னராட்சியோ மனித குலத்திற்கு மேம்பாட்டை ஒருபோதும் தரா. ஜனநாயகம் பணக்காரனுக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படும்; கம்யூனிசம் தொழிலாளர்களுக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படும். சர்வாதிகளும், மன்னர்களும் தங்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள். பெரும்பான்மை பொது மக்களின் நலனில் இவர்களில் யாருக்கும் அக்கறை இருக்காது. மனிதனைப் படைத்து, அவனுக்கு அனைத்து வாழ்க்கை வசதிகளையும் அளித்து வரும் எல்லாம் வல்ல, இணை துணை இல்லாத ஏக இறைவனின் ஆட்சி என்று நிலைநாட்டப்படுமோ அன்றுதான் மனித குலத்திற்கு விடிவு காலம் ஏற்படும். அந்நாள் எந்நாளோ?

Previous post:

Next post: