ஹதீஸ் பெட்டகம்

in 1996 ஏப்ரல்

Dr.A.முஹம்மது அலி, Ph.D.,

  1. நிச்சயமாக அல்லாஹ் தூய்மையுடையோரை நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222)
2. தொழுமிடத்திலுள்ள மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 9:108)

3. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை; ஆனால் அவன் உங்களை தூய்மைப் படுத்தவும், இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 5:6)

4. இறைநம்பிக்கையாளர் (முஃமின்)களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முதலில்)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; உங்களது தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்). (அல்குர்ஆன்5:6)

ஒளூவை பூரணமாக செய்யுங்கள்:
ரசூல்(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்: “”(ஒளூ செய்கையில்) குதிக்கால்களை முழுமையாகக் கழுவாதவர்களுக்கு நரகமே!”
இந்நபிமொழியை இதே சொற்களிலோ, அல்லது இதன் மையக் கருத்து குன்றாது வேறு சொற்களிலோ விளக்கமாகவோ, சுருக்கமாகவோ கீழ்க்கண்ட நபித் தோழர்கள் அறிவிக்கிறார்கள். பலர் இந்த எச்சரிக்கை எப்போது எந்நிலையில் நபி(ஸல்) அவர்களால் கூறப்பட்டது என்ற வரலாற்று நிகழ்ச்சிகளுடன் உரைக்கின்றனர்.

1. அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) மரணம் 65 ஹி
2. ஆயிஷாபின் அபீபக்ர்(ரழி) மரணம்57/58 ஹி
3. அபூஹுரைரா(ரழி) மரணம்58 ஹி
4. ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) மரணம் 70 ஹி
5. அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) மரணம் 73 ஹி

இந்நபிமொழி இடம் பெறும் ஹதீஸ் நூல்களையும், பாடங்க ளையும், (வால்யூம்) தொகுப்பு/ ஹதீஸ் எண்களையும் கீழ்க்காணும் பட்டியலில் காணலாம். முஅத்தா மாலிகி, ஸஹீஹைன் புகாரி, முஸ்லிம், அபூதாவூத் போன்ற நூல்களின் ஆங்கில மொழிப் பெயர்ப்புகளைப் பாருங்கள். அரபு நூல்களில் காண விரும்புவோர் அதனதன் பாடங்களில் பார்வையிடுங்கள். அறிவிப்பாளர்களின் பெயருக்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள வரிசை எண்களைக் குறிப்பிடுகிறோம்.

ஆதார நூல்கள் பாடங்கள் அறிவிப்பாளர்
1.முஅத்தா மாலிகி ஹதீஸ் எண் :34 2
2.ஸஹீஹ் புகாரி இல்ம்:கல்வி 1/57, 96 1
3.ஸஹீஹ் முஸ்லிம் தஹாரா=சுத்தம்:
464 முதல் 467 2
468 முதல் 470 1
471முதல் 473 3
4.சுனன் அபூதாவூத் தஹாரா: சுத்தம்: 1/97 1
5.சுனன்நஸயீ தஹாரா:சுத்தம் 87 1,3
6.சுனன்தாரமி ஒளூ:35 1,3
7.சுனன் திர்மிதி தஹாரா:31 3,2,4
8.இப்னுமாஜ்ஜா தஹாரா:455 1
451,452 2
453,454 3
450 5

9.இப்னு ஹிப்பான் ஹதீஸ் எண் 2/1085 3
10.இப்னு குசைமா ஹதீஸ் 161, 162 3
11. முஸ்னத் தயாலிஸி ஹதீஸ் எண்: 2486 3
12.முஸ்னமத் அஹ்மத் முஸ்னத் இப்னு உமர்
பாகம் 2ல் பக்கங்கள் 113,
201, 205, 211,226,228, 5
முஸ்னத் அபீஹுரை
பாகம் 2ல் பக்கங்கள்:
282,284,389,406,407,
409,430,467, 3
பாகம் 3ல் பக்கங்கள்:
316, 390,426. 3

அல்லாஹுவின் பேரருளால் நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்நபிமொழிகள் ஏறத்தாழ (12) பன்னிரண்டு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் ஏறக்குறைய (50) ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் சரிசையில் இடம் பெற்றுள்ளன. அதில் நாம் மேலே குறிப்பிட்டுள்ள அப்துல்லாஹ் பின் அம்ர், ஆயிஷா, அபூஹூரைரா, ஜாபிர், இப்னு உமர்(ரழி-அன்கும்)போன்ற நபித் தோழர்களும் நம்பிக்கைக்குரிய பற்பல தாபிஈன்கள் சரியான அறிவிப்பாளர்கள் வரிசைகளில் இதனைத் தெரிவிக்கிறார்கள் என்பதும் கவனிக்கதக்க விஷயமாகும்.

அன்றாட தொழுகைக்காகவும், தூய்மையைப் பேணியும் பெரும்பாலான ஆண், பெண் முஸ்லிம்கள் ஒளூ செய்கிறார்கள். அவ்விதம் ஒளூ செய்யும்போது பெரும்பாலோர் பொழுதுபோக்காக ஒளூ செய்கின்றனர் வேக வேகமாக தொழுகைக்கு வரும் தொழுகையாளிகள் இமாமத் ஆரம்பித்துவிட்டதே என்று ஒளூவை முழுமையாக – பரிபூரணமாக – செய்யாமல் ஏனோ தானோ வென்று தண்ணீரை அள்ளி ஒளூவை செய்து இமாமத்தில் கலந்து கொள்கின்றனர். தங்களது முகம் ஒழுங்காக கழுவப்பட்டதா? முழங்கை முடிய கழுவியுள்ளோமா? குதிக்கால் கழுவப்பட்டதா? என்றெல்லாம் கவனிப்பதில்லை. இமாமத்தில் சேரவேண்டுமென்ற பேரவாவில் ஒளூவை முழுமையாகச் செய்யாதவர் களாக தொழுகையின் பலனையும் இழக்கிறார்கள். பூரணமாக ஒளூவின்றி தொழுகையில்லை. ஒளூ தொழுகையின் திறவு கோல் என்பதும் நபி மொழியாகும்.

தொழுகை பரிபூரணமாக ஏற்கப்பட ஒளூவை பரிபூரணமாக செய்ய வேண்டும் மென்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிதல் அவசியம். அதில் அலட்சியமோ, அவசரமோ காட்டக் கூடாது என்பதை விளக்கும் நபி மொழிகள்தான் இவை. அலட்சியம் காட்டி ஒளூ செய்வதால் நரகத்திற்குச் செல்லும் வாய்ப்புண்டு என்று எச்சரிக்கிறது இந்நபிமொழிகள்.

இந்நபிமொழிகளை ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது ஒன்று மற்றொன்றிற்கு விளக்கமாகவும், விபரமாகவும் அமைவதைக் காணலாம. நபி(ஸல்) அவர்களது வாழ்வுநெறி, தங்களது தோழர்களை உன்னிப்பாகக் கவனித்து தவறுகளை தக்கச்சயமத்தில் திருத்திய முறைகள் நமக்கு தெளிவாகின்றன. ஒவ்வொரு முஸ்லிமும் இம்முறைகளை தங்களது அன்றாட வாழ்வில் செயல்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அதனை சிறிது விபரமாகப் பார்ப்போம்.

ரசூல்(ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் ஒரு தடவை மக்காவிலிருந்து மதீனாவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பயணத்தில் ரசூல்(ஸல்) அவர்கள் சிறிது பின் தங்கித் தாமதமாக வந்தார்கள். முன் சென்ற நபித்தோழர்கள் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும நேரம் கடந்து விடுமே என்று அஸர் தொழுகைக்காக ஒளூ செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் ஒளூ செய்து கொண்டிருக்கையில் ரசூல்(ஸல்) அவர்கள் அங்கு வந்து சேருகிறார்கள். நபித் தோழர்கள் ஒளூ செய்கையில் கால்களை ஒழுங்காகக் கழுவாமல் கால்களின் மீது நீரைத் தடவிக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட ரசூல்(ஸல்) அவர்கள் உரத்தக் குரலில் இரண்டு, மூன்று தடவைகள் அனைவருக்கும் கேட்கும் விதமாக “”குதிக்கால்களை முழுமையாகக் கழுவாதவர்களுக்கு நரகமே” என எச்சரித்து ஒளூவை பரிபூரண மாகச் செய்ய ஆணையிட்டார்கள். இந்நபிமொழியை அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) அவர்கள் அறிவிக்க புகாரி (1/57, 96,164); முஸ்லிம் (1/470) இப்னு குசைமா (1/61) முஸ்னத் அஹமத் போன்ற நூல்களில் பதிவாகியுள்ளன.

ஓரிடத்தில் மக்கள் பாத்திரத்திடில் நீரெடுத்து ஒளூ செய்து கொண்டிருந்தார்கள். அவ்வழியே ரசூல்(ஸல்) அவர்கள் வந்தார்கள். மக்கள் பூரணமாகக் கால்களைக் கழுவாததைக் கண்டு உங்களது குதிக்கால்களை பூரணமாகக் கழுவுங்கள் “” குதிக்கால்களை பூரணமாக கழுவாதவர்களுக்கு நரகமே” என எச்சரித்துள்ளார்கள். இந்நபிமொழியை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்க புகாரி (1/166) முஸ்னத் தயாலிஸி, இப்னு ஹிப்பான் (1085) முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.

முஸ்லிமில் இடம் பெறும் அபூஹுரைரா(ரழி) அவர்களின் அறிவிப் பில் ஒரு தனி மனிதர் ஒளூ செய்ததாகவும், அவருக்கு இந்த எச்சரிக்கை செய்ததாகவும் இடம் பெற்றுள்ளது. அபுல் காஸிம் என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் ரசூல்(ஸல்) அவர்கள் இந்த எச்சரிக்கையை தந்ததகாவும் அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதனை புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத் அறிவிப்புக்களில் காணலாம்.
ஒளூ செய்திருந்த நபித் தோழர்களில் சிலரின் குதிக்கால்கள் பூரணமாக கழுவப்படாமல் – ஈரமின்றி – இருப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே “”குதிக்கால்களை முழுமையாக கழுவாதவர் களுக்கு நரகம்தான்” என ஆணையிட்டார்கள். இந்நபிமொழியை அபூதாவூத் (1/97) தராமி, நஸயீ, நூல்களில் அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) அறிவிக்க பதிவாகியுள்ளது.

இவ்விதமாக இந்நபிமொழியை ரசூல்(ஸல்) அவர்களின் அருமை மனைவி ஆயிஷா(ரழி) அவர்களும் நன்றாக தெரிந்து வைத்திருந்தார் கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் – ஒரு- தடவை- நபித் தோழர் ஸஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் இறந்தபோது ஆயிஷா(ரழி) அவர்களைக் காண வந்தார்கள். அப்துர்ரஹ்மான்(ரழி) அவர்களுக்கு ஒளூ செய்ய ஆயிஷா(ரழி) அவர்கள் தண்ணீர் கொடுத்தார்கள். சகோதர் ஒளூ செய்தார்கள். அப்போது அவர் தனது கால்களை ஒழுங்காகக் கழுவவில்லை போலும். இதனைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் தனது சகோதரைப் பார்த்து, “”ஓ அப்தர்ரஹ்மானே! ஒளூவை முழுமையாக -பரிபூரணமாகச் செய்வீராக! ஏனெனில் குதிக்கால்களை முழுமையாக கழுவாதவர்களுக்கு நரகம் தான் கிடைக்குமென! நபி(ஸல்) அவர்கள் கூற நான் கிடைக்குமென” நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என எச்சரித்தார்கள். இந்நபிமொழி முஅத்தாமாலிகி(34) முஸ்லிம் (1/464-467) திர்மிதி, இப்னுமாஜ்ஜா (451,452) நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர்(ரழி -அன்ஹுமா) அறிவிக்கும் பெரும்பாலான அறிவிப்புக்களில் எவ்வித விளக்கமுமின்றி ஒளூவை முழுமையாக செய்யவேண்டுமென்ற கருத்தில்””குதிக் கால்களை முழுமையாக கழுவாதவர்களுக்கு நரகமே!” என்ற எச்சரிக்கை மட்டும் இடம் பெற்றுள்ளன.

ஏன் குதிக்காலைக் குறிப்பிட்டு ரசூல்(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள் என்ற விபரத்தையும் அறிதல் அவசியமாகும். குதிக்கால் காலின் பின் புறமாக இருப்பதால் அது நமது கவனத்திலிருந்து இலகுவாக தப்பித்து விடும் வாய்ப்புகளுள்ளன. வேக வேகமாக கால் கழுவுபவர்கள் முன்புறத்தில் நீரை ஊற்றி கழுவுவதில் அதிகமாக கவனம் செலுத்துவார் களேயன்றி பின்புறமும் ஊற்றி குதிக்கால்களை கழுவ மறந்து விடுவார்கள். எனவேத்தான் குதிக்கால்களைக் குறிப்பிட்டு ரசூல்(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். இதே நிலை முழங்கைகளின் பின்புறத்தையும் குறிக்கும். இதே நிலை முழங்கைகளின் பின்புறத்தையும் குறிக்கும். இது எமது சொந்த கருத்தல்ல.

அல்லாஹ் தனது அருள் மறையில் ஒளூ செய்யும் முறையைப் பற்றி 6:6 வசனத்தில் விளக்கும் போது இருகைகளின் முழுங்கை வரையிலும், கால்களின் இரு கணுக்கால் வரையிலும் வரையறை யளித்துள்ளதைக் காணலாம். முகங்களின் வரையறையை ரசூல்(ஸல்) அவர்கள் செயல்முறையில் விளக்கிக் காட்டினார்கள். நெற்றியின் ரோம வரை யிலிருந்து தாவாங்கொட்டையின் அடிபாகம்வரை நீட்டளவிலும், ஒரு காதின் சோனையிலிருந்து மறுகாது சோனை வரையிலும் அகலத்திலும் கழுவக் கற்றுக் தந்தார்கள். இம்முறையில் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ஒளூ செய்து இவ்விதமே ரசூல்(ஸல்) அவர்கள் கற்து தந்ததாக அறிவிக்கிறார்கள். இதனை புகாரி, முஸ்லிம் நூல்களில் காணலாம்.
எனவே அன்றாட கடமையான ஐவேளைத் தொழுகைக்கும், தூய்மையைப் பேணியும் ஒளூ செய்பவர்கள் சிறிது சிரத்தை எடுத்து பொறுமையுடன் கழுவ வேண்டிய பாகங்களை முழுமையாகச் சரியாக கழுவ வேண்டும். இதில் அலட்சியமோ, அசிரத்தையோ காட்டலாகாது. அது நம்மை நரகத்தில் இட்டுச் செல்லும் என்பதை அனைவரும் அறிதல் அவசியமாகும். நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள், தோழர், தோழிகள் எவராவது அலட்சியமாக, பொழுதுபோக்காக, ஒளூ செய்வார்க ளேயானால், அல்லது அவர்கள் செய்த ஒளூ சரியாக, பூரணமானதாக இல்லை என்பதை அறிந்தால் அதனை உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து அவர்களைத் திருத்துவதும் நபிவழி(சுன்னத்) ஆகும் என்பதை உணர்வோமாக!

அல்லாஹ் நம்மனைவரையும் பரிபூரண முஸ்லிம்களாக நினைவிலும் சொல்லிலும், செயலிலும், வாழ்விலும், மரணத்திலும், மறுமையிலும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்.

Previous post:

Next post: