மீண்டும் மதீனமா நகர்!

in 2011 ஏப்ரல்

முஸ்லிம் சமுதாயம் இன்று இவ்வுலக விவகாரங்களிலும், மறு உலக விவகாரங்களிலும் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் போதிய அறிவின்மையே. சில நல்லுள்ளங்களின் நன் முயற்சியால் தற்போது உலகியல் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் மார்க்கக் கல்வியில் முன்னேற்றம் பூஜ்யம்.

அதற்கு முக்கியக் காரணம் முஸ்லிம்கள் மார்க்கம் பற்றிய விஷயங்களில் முழுமையாக மதகுருமார்கள் என்ற மவ்லவிகளை நம்பி இருப்பதேயாகும். இம்மை, மறுமை இரண்டுக்கும் உரிய அனைத்து வகைக் கல்வியையும் அல்லாஹ் மார்க்கமாக்கி இருக்கும் நிலையில், இந்த மவ்லவிகளோ மார்க்கக் கல்வி, உலகக் கல்வி எனப் பிரித்து வேறுபடுத்தி இருக்கிறார்கள். மேலும் அவர்கள் உலகியல் கல்வியைப் புறக்கணிப்பதோடு, மார்க்கக் கல்வியின் பெயரால் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அவர்களது முன்னோர்கள் கற்பனை செய்த குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணான பிக்ஹு சட்டங்களையே மார்க்கமாகக் கற்றுத் தேறி வருகிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஞானம் அவர்களிடமும் இல்லை.

மக்களை நேர்வழியை விட்டு எண்ணற்ற கோணல் வழிகளில் வழிநடத்திச் செல்லும் மற்ற அனைத்து மதங்களிலும் நடைமுறையிலிருக்கும் குருகுலக் கல்வியையே அதாவது புரோகிதக் கல்வியையே முஸ்லிம்கள் நடத்தும் மதரஸாக்களிலும் போதிக்கிறார்கள்.

உண்மையை வெளிப்படையாகச் சொன்னால் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கடுமையாக மறுத்துரைக்கும் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொள்ளும் புரோகிதக் கல்வியே இன்றைய அரபி மதரஸாக்களில் கற்பிக்கப்படுகிறது.

மவ்லவிகள் தங்களின் வாழ்வாதாரமாக இப்புரோகிதக் கல்வியைக் கொண்டிருப்பதால், அதற்கு எந்த வகையிலும் ஆபத்து வந்து விடக்கூடாது என அஞ்சுகிறார்கள். அதனால் பொது மக்களாகிய முஸ்லிம்கள் கல்வியில் மேம்பட்டு சுய சிந்தனையாளர்களாகக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதனால் தான் இந்த மவ்லவிகள் உலகக் கல்வியை இரண்டாம் பட்சமாக ஆக்கி அதில் ஆர்வக் குறைவை ஏற்படுத்துகிறார்கள்.

அது மட்டுமல்ல; தூய மார்க்கத்தைத் துல்லியமாக, தெளிவாக விளக்கும் அல்குர்ஆனை விட்டும் ஹதீஸ்களை விட்டும் முஸ்லிம்களை தூரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒளூ இல்லாமல் அல்குர்ஆனை தொடக் கூடாது; புரோகித மதரஸாக்களில் புரோகிதக் கல்வி கற்ற மவ்லவி அல்லாதவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் விளங்காது. அலிஃபுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு வசனத்திற்கும் அந்தரங்கமான (பாத்தின்) அர்த்தமும் உண்டு, வெளிரங்கமான (ழாஹிர்) அர்த்தமும் உண்டு என்று அப்பட்டமான பொய்களைக் கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான முஸ்லிம்களும் இந்த மவ்லவிகளின் பொய்க் கூற்றுக்களை வேதவாக்காகக் கொண்டு, அவர்கள் கூறுவது தான் மார்க்கம் எனக் கறிக்கடைக்காரர் பின்னால் செல்லும் செம்மறி ஆட்டு மந்தை போல் குருட்டுத்தனமாக நம்பிச் செயல்படுகிறார்கள்.
இந்த மவ்லவிகள் இப்படி அப்பட்டமான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வழி கெடுப்பதற்குள்ள ஒரே காரணம் அவர்கள் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதுதான்.

முதுகில் அடித்தால் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் வயிற்றில் அடித்தால் தாங்க முடியுமா? என்று சொல்வார்கள். மவ்லவிகளின் பயம் நியாயமானதுதான். வறுமை குஃப்ரை-நிராகரிப்பை ஏற்படுத்தும்! அதனால் பெரும்பான்மை முஸ்லிம்கள் நேரடியாக குர்ஆன், ஹதீஸை படித்து விளங்க ஆரம்பித்து விட்டால், அவை கூறும் உண்மைகளை அறிந்து கொண்டால், தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும். முஸ்லிம்கள் தங்களைப் புறக்கணித்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே முஸ்லிம்களை பல பொய்க் காரணங்களைக் கூறி குர்ஆன், ஹதீஸை விட்டுத் தூரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மேலும் உலகியல் கல்வி கற்க வைத்து பல உயர் பதவிகள் பெற்று வாழ்வை வளமாக நடத்த வாய்ப்பு இல்லாத ஏழைகளின் பிள்ளைகளே வேறு வழியின்றி படிப்புக்கோ, உணவுக்கோ, உறைவிடத்திற்கோ கட்டணமின்றி இலவசமாக இவை கிடைக்கும் மதரஸாக்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். பிழைப்புக்கு அவர்களுக்கு இதைத் தவிர வேறு போக்கே இல்லை.

இன்றைய முஸ்லிம்களில் மிகப் பெரும் பான்மையினரின் எதார்த்த நிலையை மறைக்காமல் உள்ளபடி சொல்வதாக இருந்தால், 1450 வருடங்களுக்கு முன்னால் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் நேரிய மார்க்கத்தைப் பின் பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, அல்லாஹ் வையும் நபி இப்றாஹீம்(அலை) அவர்களை யும் முழுமையாக நம்பிய நிலையில், அல்குர் ஆனின் நேரடி தெளிவான இறைவாக்குகளை முன்னோர்களை நம்பி நிராகரித்த குறைஷ்கள், தங்கள் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டிருந்த முன்னோர்களின் வழிகாட்டல் என குருட்டுத்தனமாக நம்பி அன்றைய மதகுருமார்களான அபூ ஜஹீல் போன்ற வழிகேடன் போன்றோரின் வழிகாட்டல்படி தொழுதார்கள், நோன்பு நோற்றார்கள், ஜகாத் கொடுத்தார்கள், ஹஜ் செய்தார்களோ அதேபோல், இன்றைய முஸ்லிம் பெரும்பான்மையினர் அல்லாஹ்வையும் அவனது இறுதித் தூதரையும் பரிபூரணமாக நம்புவதாகச் சொல்லிக் கொண்டு, நேரடியாகத் தெள்ளத் தெளிவாகக் கூறும் அல்குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வ மான ஹதீஸ்களையும் மெளலவிகளாகிய இன்றைய மதகுருமார்களை நம்பி நிராகரித்து விட்டு, தங்கள் வழிகாட்டிகளாக ஏற்றிருக்கும் இமாம்களான முன்னோர்கள் வழிகாட்டியது என்ற குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு, இந்த மதகுருமார்களின் வழி காட்டல்படி தொழுகிறார்கள், நோன்பு நோற்கிறார்கள், ஜகாத் கொடுக்கிறார்கள், ஹஜ் செய்கிறார்கள்.
ஆக அன்று குறைஷ்கள் நரகின் விளிம்பில் நிற்பதாக 3:103 இறைவாக்கு சொல்வது போல் இன்றைய முஸ்லிம்களில் மிகப் பெரும்பான் மையினர் நரக விளிம்பில் நின்று கொண்டி ருக்கிறார்கள்.

எனவே முஸ்லிம் சமுதாயம் இன்று கடை பிடித்துவரும் மதரஸா கல்வி முறை அந்த மவ்லவிகளுக்கோ, முஸ்லிம் சமுதாயத்திற்கோ வெற்றியையும் ஈடேற்றத்தையும் ஒருபோதும் தரவே தராது. எனவே இந்த மதரஸா கல்வி முறையை மாற்றி அமைப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதற்கு மாற்றுத் திட்டமாகத்தான் நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றவுடன் அங்கு அமைத்தது போன்ற ஒரு மாதிரி நகரையும், வேறு போக்கெதுவும் இல்லாமல் புரோகித மதரஸாக்களை நோக்கிச் செல்லும் பஞ்சை பராரி ஏழை, அனாதை மாணவர்களுக்காகத் தொழில் கல்வியுடன் கூடிய உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்வித் திட்டத்தை 1986லேயே அமைத்துச் செயல்படுத்த முற்பட்டோம். அன்று மதீனா நகரில் முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், காஃபிர்கள் வாழ்ந்தது போல் இப்போது நாம் அமைக்கும் புதிய மாதிரி நகரிலும் அனைத்துக் கொள்கையுடைய மக்களும் குடியேற அனுமதிக்கப்படுவார்கள்.

அக்கல்வித் திட்டம் வருமாறு:
அந்த மாதிரி நகரில் குடியேறுகிறவர்கள் மார்க்க அக்கறையுடன் ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுது வருவதுடன், அவர்களுக்கு வசதியான ஒரு வேளை தொழுகைக்குப் பின் தினசரி குர்ஆனிலிருந்து சில இறைவாக்குகளைப் படித்துச் சிந்தித்து விளங்கி மனதில் இருத்திக் கொள்வது. இந்த முயற்சியில் நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது போல் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என ஏழை, செல்வர் என எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் ஈடுபடுவது. அதே போல் இன்னொரு வேளைத் தொழுகைக்குப் பின் ஆதார பூர்வமான நபிமொழிகளைப் படித்து சிந்தித்து விளங்கி மனதில் இருத்திக் கொள்வது.

ஒரு நாளைக்கு ஐந்து குர்ஆன் வசனங்கள், ஐந்து நபி மொழிகள் எனக் கற்றாலும் எவ்வித சிரமமோ, பணச் செலவோ இல்லாமல் மிக எளிதாக ஒரு மாதத்தில் 150 இறைவாக்குகள், 150 நபிமொழிகள் என வருடத்தில் 1800 இறை வாக்குகள், 1800 நபிமொழிகள் எனக் கற்றுத் தெளிவு பெற முடியும். இப்படி அந்த நகரில் உள்ள அனைவரும் இதே பயிற்சி முறைக்கு நான்கு ஆண்டுகளே செலவிட்டால் முழு குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அவற்றை அடுத்தடுத்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் மீட்டிக் கொண்டிருந்தால், அங்குள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் அனைவரும் மாபெரும் மார்க்க அறிஞர்களாக மாறி விடுவார்கள். நபி காலத்தில் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள், ஏழை, செல்வர் அனைவரும் இப்படித்தான் மார்க்க அறிவையும் இவ்வுலக அறி வையும் ஒருங்கே முழுமையாகப் பெற்றார்கள்.

ஒரு குழந்தைக்கு 7 வயதிலிருந்து இந்தப் பயிற்சியைக் கொடுத்தால் அது 15 வயதை அடையும்போது குர்ஆனையும், ஹதீஸையும் இரண்டு முறை முழுமையாகப் படித்து தனது நெஞ்சில் இருத்திக் கொள்வதால் எளிதாக குர்ஆன் முழுமையும் மனனமிட்ட ஹாபிழாகவும், குர்ஆன், ஹதீஸை முழுமையாக விளங்கிய ஆலிமாகவும் ஆகி விடமுடியும். இந்த எளிய முறைதான் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்குக் காட்டித் தந்ததாகும்.

“”இளமையில் கல்வி பசுமரத்தாணி” என்ப தும், சிறு குழந்தைகள் பயிற்சி மூலம் அல்குர் ஆனை அழகாக மனப்பாடமாக ஓதுவதும் நாம் அறியும் செய்தியாகும். முழுச் சமுதாயமும் மார்க்க அறிவை முழுமையாகப் பெற நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய மிக எளிய முறையை இப்புரோகிதர்கள் மாற்றிச் சமுதாயத்தில் 5% ஏழைகள் மட்டுமே புரோகிதக் கல்வியை மார்க்கக் கல்வியின் பெயரால் கற்றுக்கொண்டு அது கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் முன்னைய நபிமார்களின் சமுதாயத்தினரின் மதகுருமார்கள் கடைபிடிக்கும் ஒரு ஏமாற்றுக் கல்வி முறையையே முஸ்லிம் சமுதாய மதகுருமார்களும் கடைபிடித்து வருகிறார்கள். மார்க்கக் கல்வியை ஒரு நாளின் ஐவேளைத் தொழுகைகளில் இரு வேளைத் தொழுகைகளில் மட்டும் மிக எளிதாக அனைவரும் கற்றுக் கொள்வதோடு, அங்குள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆரம்பக் கல்வியிலிருந்து இளங் கலை, முதுகலை பட்டப் படிப்புகளோடு மருத்து வராக, பொறிஞராக, மற்றும் கைநிறைய வருவாயை ஈட்டித்தரும் உலகியல் கல்வியையும் முறையாக ஊட்ட முடியும்.

இப்படிப்பட்ட அனைத்து வகைக் கல்விக் கூடங்களையும், நமது மாதிரி நகரிலேயே உருவாக்க முடியும். ஆக நமது மாதிரி நகரம் இம்மை மறுமைக்குரிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கே நிறைவாகப் பெற்றதாக அமைய முழுமையாகப் பாடுபட வேண்டும். இந்த முயற்சி உலக மக்களுக்கு முழுமை யாக வழிகாட்டும் முன்மாதிரி முஸ்லிம்களைக் கொண்ட ஒரு முன்மாதிரி நகரமாக அமைய வழி பிறக்கும்; அல்லாஹ் அருள்புரிவானாக.

அடுத்து அனாதைகள் மற்றும், பரம ஏழைகள், பஞ்சைப் பராரிகள் இவர்களது மக்கள்தானே தங்களின் வயிற்றுப் பிழைப்பை ஆகுமான வழியில் ஆக்கிக் கொள்ள வேறு வழி தெரியாமல் புரோகித மதரஸாக்கள் நோக்கிச் செல்கிறார்கள். இவர்களின் மேம்பாட்டிற்கு என்ன வழி? அவர்களுக்கும் நமது திட்டத்தில் வழி இருக்கிறது.

ஏழை, அனாதைகளுக்குரிய கல்வி!
அவர்களுக்காக அந்த மாதிரி நகரில் அனாதை இல்லங்கள் அமைக்கிறோம். அந்த ஏழை மாணவர்கள் அந்த இல்லங்களில் தங்கிக் கொண்டு, ஐங்கால தொழுகைகளைப் பேணித் தொழுவதோடு, மார்க்கக் கல்வியை அதாவது குர்ஆன், ஹதீஸ் கல்வியை அந்த மாதிரி நகரிலுள்ள முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளிலேயே மிக எளிய முறையில் எப்படிக் கற்றுக் கொள்கிறார்களோ அதேபோல் இவர்களும் கற்றுக் கொள்ள முடியும். பின்னர் அவர்கள் தங்கள் காலைக் கடன், காலை உணவு முடித்த பின்னர் சுமார் 7 மணி அளவில் அவர்களுக்கு அரபி, தாய்மொழி, ஆங்கிலம் அல்லது அவர்கள் விரும்பும் ஒரு அந்நிய மொழி என மும்மொழிகளைக் கற்றுக் கொடுக்கிறோம்.

அத்துடன் புவியியல், வானவியல், வரலாறு இயல், வேதியல், இயற்பியல் போன்ற அறிவியல், கணிதம், கணக்கீடு என அனைத்துத் துறைகளிலும் முறையாக பயிற்சி கொடுக்கிறோம். நாமே பாடத் திட்டம் அமைத்து அதன்படி பயிற்சி கொடுக்கிறோம். 10 ஆண்டுகள் கல்வித் திட்டம். இப்பயிற்சிகள் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை இடம் பெறும். பின்னர் ளுஹர் தொழுகை மதிய உணவு. அதன் பின்னர் அம்மாணவர்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் தொழில் பயிற்சியில் ஈடுபடுத்துகிறோம்.

இன்று பொதுவாக வீடுகளில், அலுவலகங்களில் பயன்படும் அனைத்து வகை நவீன கருவிகளையும் செப்பணிடும் பயிற்சி அளிக்கிறோம். கடிகாரம், வானொலி, தொலைக் காட்சி, தொலைத் தொடர்பு, செல்போன், கிரைண்டர், மிக்ஸி, எலக்ட்ரிக் குக்கர், அடுப்புகள், மின் விசிறி, மோட்டார், கணினி மற்றும் இவைபோல் வீட்டு, அலுவலக உபயோக நவீன கருவிகள், இவை அல்லாமல் தையல், பாய் நெய்தல் போன்ற கைத் தொழில்களில் பயிற்சி கொடுக்கிறோம். ஆரம்ப ஓரிரு வருடங்கள் மட்டுமே இம்மாணவர்களின் உணவு மற்றும் தேவைகளை நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏழைகள், அனாதைகள் என்பதால் இதைத் தவிர்க்க முடியாது; ஆயினும் காலம் முழுவதும் அவர்கள் கையேந்தும் நிலை ஏற்படாது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் ஓரளவு பயிற்சி பெற்ற தொழிலில் ஈடுபட்டு நிறுவனத்திற்குப் பணம் ஈட்டிக் கொடுப்பார்கள். அதில் ஒரு பகுதியை சேமிப்பதோடு, எஞ்சியதை அவர்களது செலவு வகைக்குப் பயன்படுத்தலாம்.

இப்படி 10 வயதிலோ, 15 வயதிலோ நம்மிடம் வந்து சேரும் அந்த அனாதை, ஏழைப் பிள்ளைகள் 10 ஆண்டுகளில் அதவது 20 அல்லது 25 வயதில் அரபி உட்பட மூன்று மொழிகளில் முழுத் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். உலகியல் அறிவும் மார்க்க அறிவும் நிறையவே பெற்றவர்களாகத் திகழ்வார்கள். சுமார் 7 வருடங்களில் அவர்களது சேமிப்பும் கணிசமாக இருக்கும். ஆக 10 ஆண்டு பயிற்சியில் மும்மொழிகளில் முழுமையான பாண்டித்யம், மார்க்கத்தில் முழுமையான குர்ஆன், ஹதீஸ் தெளிவு, உலகியல் அறிவிலும் ஆற்றல், ஈமானின் உறுதி யோடு கூலியோ-சம்பளத்தையோ எதிர்பாராமல் இமாமத் மற்றும் மார்க்கப்பணி செய்யும் உள்ள உறுதி, பணம் பண்ண ஒரு கைத் தொழில், சேமித்து வைத்த பொருள் இவற்றுடன் வெளியேறுவார்கள். மணமுடிக்க பக்குவமான வயது. அதாவது 20லிருந்து 25 வயது. நல்லொழுக்கமுள்ள விரும்பும் பெண்ணை கைக்கூலி, சீர் செனத்தி வாங்காமல் மஹர் கொடுத்து மணமுடிக்கும் மார்க்கத் தெளிவும், உறுதிப்பாடும் இருக்கும்.

நபி வழியில் திருமணம் முடிப்பதோடு தான் இருக்கும் பகுதியிலேயே தான் கற்றுத் தேர்ந்த தொழிலைச் செய்து கைநிறைய சம்பாதிக்கும் ஆற்றல், ஒழுக்கப் பண்பாலும், சீரிய குணத்தாலும் அங்குள்ள மக்களை ஈர்ப்பதோடு, தொழிலில் சிறந்து முன்னேற்றம், நபிமார்கள் செய்ததுபோல் மக்களிடம் கூலியோ, சம்பளமோ கேட்காமல், எஜமானனான அல்லாஹ்விடமே கூலியை எதிர்பார்த்து அழகிய முறையில் மார்க்கப் பணி செய்யும் அபார ஆர்வம் இவற்றை நமது பயிற்சி மூலம் ஊட்டலாம்.

புரோகிதக் கல்வி கற்ற 5% மவ்லவிகள் காசுக்காக மார்க்கத்தின் பெயரால் மதச் சடங்குகளைச் சொல்லும், செய்யும் தீய நிலை மாறி 100% மக்களும் அல்லாஹ் 103 அத்தியாயம் மற்றும் 9:71ல் கட்டளையிடுவதுபோல் தூய மார்க்கப் பணி செய்யும் சூழ்நிலை உருவாகும். முஸ்லிம் சமுதாயம் உலகிற்கே முன்மாதிரியாகத் தேறி, இதர சமுதாயங்களுக்கு வழிகாட்டவும், வழி நடத்தவும் தயாராக முடியும்.

ஆனால் இந்த நமது முயற்சியை முறியடிக்க ஷைத்தான் கடுமையாகப் போராடுவான். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளும் கடுமையாக எதிர்ப்பார்கள். கடுமையான அவதூறுகளைப் பரப்புவார்கள். காரணம் இந்த முயற்சி அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு-அதாவது புரோகித தொழிலுக்கு ஆப்பு வைக்கும் ஒரு முயற்சியாகும்.

அதனால் 1985-86ல் நாம் திட்டமிட்ட இந்தக் கல்வித் திட்டத்தை இப்புரோகிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்து விட்டார்கள். மாதிரி நகருக்கு நிலம் வாங்க அட்வான்ஸ் கொடுத்த நிலையில் அதை வாங்க முடியாமல் அட்வான்சையும் இழக்க நேரிட்டது. அந்த வகைச் செலவிற்காக நஜாத் பஜார் டிரஸ்ட் பெயரால் பின்னால் உள்ள ¾ பங்கு நிலத்தை வாங்கிய பின் முன்னாலுள்ள ¼ பங்கு நிலத்தை வாங்க முடியாமல் திட்டத்தை அவ தூறுகள் மூலம் பாழ்படுத்திவிட்டார்கள். அந்த இடத்திற்குப் பாதை இல்லாமல் பெறுமதியற்றுக் கிடக்கிறது. அதற்காகப் பணம் போட்டவர்களில் ஓரிருவர் என்னைக் குற்றப்படுத்தி 9 பேரில் அறுவர் அவர்கள் போட்ட பணத்தை லாபத்துடன் என்னிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆக எமது முயற்சி இந்த மதகுருமார்களின் அவதூறுகளாலும், துர்பிரச்சாரத்தாலும் ஈடேறவில்லை. இவற்றை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இந்த முயற்சி ஷைத்தானுக்கும், மத குருமார்களுக்கும் ஆத்திரத்தை உண்டாக்கும் ஒரு முயற்சியாகும். எனவே கடுமையான எதிர்ப்புகளையும், முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்துவார்கள், பெரும் அவதூறுகளைப் பரப்புவார்கள். இவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் நமது முயற்சிகள் இருக்க வேண்டும். சமுதாய நலனையும், முன்னேற்றத்தையும் நாடும், மறுமைப் பேற்றைப் பெரிதும் விரும்பும் உண்மையான நம்பிக்கையாளர்கள் இதற்காகப் பொருளாதார உதவி செய்ய, நிலம் இருந்தால் கொடுத்துதவ, உடல் உழைப்பைத் தர முன் வருவதோடு, மீண்டுமொரு மதீனமா நகர் உருவாக எல்லாம் வல்ல ஏகன் இறைவனைத் தங்களின் அனைத்துத் தொழுகைகளிலும், இதர சந்தர்ப்பங்களிலும் நெஞ்சு நெகிழ இறைஞ்சுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Previous post:

Next post: