3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45  ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த தஃவீல்களின் விளக்கத்தை ஆதாரமாகக் கொண்டு 3:7 வசனத்தில் இறுதி நிலை அல்லாத பொதுவிளக்கம் என்று பொருள் கொள்ளலாமே? நீங்கள் ஏன் இறுதி முடிவிலேயே நிற்கிறீர்கள்? பரங்கிப்பேட்டை, கு.நிஜாமுத்தீன் கே.எஸ்.ஏ.இ

நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் “தஃவீல்” என்ற அரபி பதத்திற்கு இறுதி முடிவு, விளக்கம் என்ற பொருள்கள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. ஒவ்வொரு மொழியிலும் சில பதங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருப்பதைப் பார்க்கத்தான் செய்கிறோம். அவ்வாறு இருப்பதால் அப்பதம் இடம் பெறும் வாக்கியங்களிலெல்லாம் எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுவது தவறாகும்.

உதாரணமாக “சட்டம்” என்ற தமிழ் பதத்திற்கு பாராளுமன்றத்தில் அல்லது சட்டசபையில் இயற்றப்படும் கட்டளைத் திட்டம் என்ற பொருளும் பெறலாம். தச்சர் செதுக்கும் மரச்சட்டம் என்ற பொருளும் பெறலாம். “சட்டம்” என்ற பதத்திற்கு இரண்டு பொருளும் இருக்க பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்திற்கு கட்டளைத் திட்டம் என்று மட்டும் ஏன் பொருள் கொள்கிறீர்கள். பாராளுமன்றத்தில் “மரச்சட்டம்” இயற்றப்பட்டது என்று ஏன் பொருள் கொள்ளக்கூடாது என்று கேட்க முடியாது. இந்தப் பதத்திற்கு இப்படிப் பொருள் இருந்தாலும் இந்த இடத்திற்குப் பொருத்தமான பொருள் அல்ல என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். மீறி அப்படிப்பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தமாக ஆகும் என்பதே உண்மையாகும்.

அதேபோல் 3:7 வசனத்திலுள்ள “தஃவீல்” என்ற பதத்திற்கு அந்த இடத்தில் பொருந்தாத “விளக்கம்” என்ற பொருளைக் கொடுத்தால் அர்த்தம் அனர்த்தமாகி விடும். “இறுதி முடிவு” என்ற இடத்தில் விளக்கம் என்று பொருள் கொடுத்துக் கொண்டு மனமுரணாகக் கொடுத்த பொருளை வைத்து, விளங்க முடியாததை அல்லாஹ் ஏன் இறக்கி வைக்க வேண்டும்? என்று கேள்வியையும் எழுப்பிக் கொண்டு குர்ஆனின் “முத்தஷாபிஹாத்” வசனங்களை எல்லாம் “முஹ்க்கம்” வசனங்களாக மாற்றும் நிலையும், 3:7 “முஹ்க்கம்” வசனத்தை “முத்தஷாபிஹாத்” வசனமாக மாற்றும் நிலையும் ஏற்படுகிறது. இறுதி முடிவெடுக்கும் அல்லாஹ்வின் தனித்தன்மையில் அறிவில் தேர்ந்தவர்களையும் இணையாக்கும் பெருங்குற்றத்திற்கு ஆளாக நேரிடுகிறது. அறிவில் தேர்ந்தவர்களில் மிகச் சிறப்புக்குரிய இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களே சில “முத்தஷாபிஹாத்” வசனங்களுக்குக் கொண்ட பொருள் இன்று விஞ்ஞான வளர்ச்சி மூலம் தவறு என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.

உதாரணம் – அலக் – இரத்தக்கட்டி – தொங்கிக் கொண்டும் உறிஞ்சும்  ஒன்று. எனவே கால நிலைக்கேற்றவாறு விளங்க முடியும் என்பதாகும். அதன் பொருள் இதுதான் என்று இறுதிப்படுத்திச் சொல்லுவதற்கும் உள்ள வேறுபாட்டை அறிய முடியாமல் திணற நேரிடுகிறது. எனவே 12:6, 21:36, 44,45 ஆகிய வசனங்களில் வரும் “தஃவீல்” பதத்திற்கு கொடுக்கும் “விளக்கம்” என்ற பொருளை 3:7 வசனத்தில் வரும் “தஃவீல்” பதத்திற்குக் கொடுக்கக் கூடாது. இந்த இடத்தில் “இறுதி முடிவு” என்ற பொருளே கொடுக்கப்படவேண்டும். அப்போதுதான் 3:7 வசனத்தில் அர்த்தம் அர்த்தமாக இருக்கும். “விளக்கம்” என்ற பொருள் கொடுத்தால் அர்த்தம் அனர்த்தமாக ஆகிவிடும் என்பதை உணரவும்.

—————————————————-

மார்ச் ’90 இதழில் 40ம் பக்கத்தில், எவர் தமது வருவாயும், வாழ்நாளும் அதிகரிக்க விரும்புகிறாரோ அவர் தமது சொந்த பந்துக்களை பற்றிப் பிடிப்பாராக என்ற ஹதீஸை வெளியிட்டிருந்தீர்கள். இது ஸஹீஹான ஹதீஸ்தானா?  குர்ஆனில் 30:37, 34:39 ஆகிய வசனங்களில் நாம் விரும்பியவர்களுக்கு ஆகாரத்தையும், பொருட்களையும் விரிவாக்குவதாக கூறும் இறைவன் 35:11 வசனத்தில் இறைவன் குறிப்பு புத்தகத்தில் குறித்துவிட்ட பிறகு எவனுடைய ஆயுளும் (வாழ்நாளும்) கூட்டவோ, குறைக்கவோபடாது என்று கூறுகிறான். இவ்வசனம் மேற்காணும் ஹதீஸோடு முரண்படுகிறதே! தெளிவுபடுத்தவும். பரங்கிப்பேட்டை கு.நிஜாமுத்தீன், கே.எஸ்.ஏ.,

குறிப்பிட்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்தான். அது நீங்கள் குறிப்பிடும் 30:37, 34:39, 35:11 வசனங்களுக்கு முரணாக இல்லை. 35:11 வசனத்தின் பொருள் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இல்லை. “ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைக்கப்படுவதும் ஏட்டில் இல்லாமலில்லை” என்றே உள்ளது. அதாவது அல்லாஹ்வின் ஞானத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் அல்ல என்றே உள்ளது. எஜமானனாகிய அல்லாஹ்வை அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து திருப்திப்படுத்துவதால் அவன் தாராளமாக அள்ளித் தருவதை யாரால் தடுத்து விடமுடியும்.

————————————————–

அல்குர்ஆன் 114வது வசனத்திற்கு உன்னை ஒருவனென்று உறுதியாக நம்பி உனது வணக்கத்திற்கு உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதே சரியான பொருள். இதை இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இக்ரிமா(ரழி) அறிவிப்பதாக வவிராஜில்ஹிதாயா 77ம் பக்கத்திலும் மதாரிக் ஆகிய நூல்களிலும் உள்ளதாக ஒரு புத்தகத்தில் படித்தேன். மேலேயுள்ள பொருளுக்கு மாற்றமாக “உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று தர்ஜுமா செய்யப்பட்டுள்ளதே! எது சரியான பொருள்? பரங்கிப்பேட்டை கு.நிஜாமுத்தீன், பல்ஜூராசி.

“உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்பதற்குரிய விளக்கமாக அதனைக் கொள்ள முடியுமே அல்லாமல் மாற்றமாகக் கொள்ள முடியாது. அல்லாஹ்வுக்கு இணை, துணை இல்லை. யாருடைய ஒத்தாசையோ, உதவியோ தேவையற்றவன் அவன் ஒருவனே என்று உறுதியாக நம்பி, அன்பியாக்களையோ, அவ்லியாக்களையோ பொருட்டாகவோ, உதவியாளர்களாகவோ ஆக்காமல் அல்லாஹ்விடமே உதவி தேடுவது. அல்லாஹ்வை மட்டும் எப்படி வணங்க வேண்டுமோ அப்படி வணங்குவதற்கு அவனது உதவி இல்லாமல் முடியாது. எனவே அதற்காக அவனது உதவியைக் கோருவதும் நேரடிப் பொருளுக்கு முரணானதல்ல.

——————————————————–

இஸ்லாத்தில் துறவறம் இல்லை என்று நீங்களும் தவ்ஹீதை நிலை நாட்டுவோரும் எழுதி வருகிறீர்கள். ஆனால் அல்லாஹ் துறவறத்தை அனுமதிக்கின்றானே! துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும் அல்லாஹ்வின் திருபொருத்தத்தை  அடைய விரும்பி அதனை உண்டு பண்ணி கொண்டார்கள். எனினும் அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்கவில்லை. (பார்க்க அல்குர்ஆன் 57:27) இவ்வசனத்திலிருந்து அனுசரிக்க வேண்டிய முறைப்படி அனுசரித்தால் துறவறம் கூறும் என்ற சட்டத்தை பெறலாம் அல்லவா? பிறகு ஏன் துறவறம் கூடாது என்று கூறுகிறீர்கள். விளக்கம் கொடுக்க முடியுமா, பரங்கிப்பேட்டை கு.நிஜாமுத்தீன்,

குர்ஆனுக்கு நாமாக விளக்கம் கொடுக்க முற்படுவது தவறாகும்.குர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கே இறக்கப்பட்டது. குர்ஆனை மக்களுக்கு விளக்கும்படி நபி(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான். (பார்க்க 16:44) 57:27ல் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் “அனுசரிக்க வேண்டிய முறைப்படி அனுசரித்தால் துறவறம் கூடும்” என்ற சட்டத்தைப் பெறலாம் என்றால் நபி(ஸல்) அவர்கள் அதனை நமக்குச் செயல்படுத்திக் காட்டித் தந்திருப்பார்கள். அனுசரிக்க வேண்டிய முறைகளையும் கற்றுத் தந்திருப்பார்கள். “அனுசரிக்க வேண்டிய முறைகளை” அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தராத நிலையில் நீங்கள் எங்கிருந்து கற்றுக் கொள்ளப்போகிறீர்கள்? எனவே 57:27 வசனத்தில் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளதை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும். இதே போல் தான் 2:170 வசனத்தில் அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா (அவர்களைப் பின்பற்றுவார்கள்)? என்ற வசனத்தைக் காட்டி நேர்வழி நடந்த மூதாதைகளைப் பின்பற்றலாம் என இவர்களாக யூகம் செய்து கொண்டு, நேர்வழி நடந்தவர்களாக இவர்கள் நம்பும் சூஃபிகளை கண்மூடிப் பின்பற்ற முனைகின்றனர் முகல்லிதுகள். ஸலபுஸ்ஸாலிஹீன்களின் செயல்கள் அனைத்தையும் கண்மூடிப் பின்பற்ற முனைகின்றனர். தங்களை “ஸலபிகள்” என்று கூறிக் கொள்வோர். இந்த இரண்டு நிலைகளும் தவறேயாகும்.

——————————————————-

ஜூலை, ஆகஸ்ட் “90 இதழில் 16ம் பக்கம் இடம்பெற்ற “வழழ்ழாள்ளீன்” என்று ஓதியவுடன் ஆமின் சொல்ல இடம் கொடாமல் – உடனே பிஸ்மி கூட ஓதாமல் அடுத்த சூராவை ஓதிவிடுகிறார்” என்ற வாக்கியம், பிஸ்மியை சப்தமாய் ஓதலாம் என்ற ஐயத்தை உண்டாக்குகிறதே? முஹிப்புல் இஸ்லாம், துபை.

சூரத்துல் ஃபாத்திஹாவுக்கு முன்பு பிஸ்மி ஓதப்பட்டது என்ற இதைப் போன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டே ஒரு சாரார் பிஸ்மியை சப்தமிட்டும் ஓதலாம் என்று பொருள் கொள்கின்றனர். பிஸ்மி ஓதப்பட்டது என்று இருப்பதை ஆதாரமாக வைத்து பிஸ்மியை சப்தமிட்டு ஓத சட்டம் எடுக்க முடியாது. பிஸ்மி சப்தமிட்டு ஓதப்பட்டாலும், பிஸ்மி மெதுவாக ஓதப்பட்டாலும் பிஸ்மி ஓதப்பட்டது என்று தாராளமாகச் சொல்லலாம். பிஸ்மி ஓதாமல் விடப்பட்டதில்லை. ஓதப்பட்டது என்பதையே இது தெளிவாகக் கூறுகிறது. பிஸ்மி மெதுவாக ஓதப்படுவதை, அதற்காக மெளனமாக நிற்கும் நிலை, தாடி அசைவு போன்றவை தெளிவுபடுத்துகின்றன. 

நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையில் சம்பந்தப்பட்ட இமாம் “வழழ்ழாள்ளீன்” என்று சப்தமிட்டு ஓதியதற்குப் பிறகு “ஆமீன்” என்று சப்தமிட்டு முக்ததிகள் சொல்லுவதற்கு அவகாசம் கொடுக்காமலும், தான் மெதுவாக, பிஸ்மி சொல்லாமலும் அடுத்த சூராவை ஆரம்பித்து விடுகிறார் என்றே எழுதப்பட்டுள்ளது. இதனை (உதாரணத்திற்கு) வழழ்ழாள்ளின் சூல் ஹுவல்லாஹு அஹது என்று அந்த இமாம் இடைவெளியே கொடாமல் ஓத ஆரம்பித்தால் பின்னால் தொழுபவர்கள் தெளிவாக அறியமுடியும்.

———————————————–

ஏப்ரல் மாத இதழில் “ஹதீஸ் பெட்டகம்” கட்டுரையில் 14ம் பக்கத்தில் “பெண்களை அத்தொழுகையில் கலந்துக் கொள்ளவும் முஸ்லிம்களின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பபட்டோம் என்றுள்ளது. பிரார்த்தனை என்ற இடத்தில் மொழி பெயர்ப்பு தவறு. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் எந்த பெருநாளைக்கும் மக்கள் கூடியுள்ள இடத்தில்  பிரார்த்தனை செய்ததாக காண முடியவில்லை. எனவே அந்த இடத்தில் வரும் “தஃவதல் முஸ்லிமீன் என்ற பதத்திற்கு “மார்க்கப் பிரச்சாரம்” என்ற பொருளே வரவேண்டும். நபி(ஸல்) அவர்கள் பெண்களிடம் மார்க்கப் பிரச்சாரம் செய்ததை (புகாரீ) ஹதீஸ் மூலம் அறிகிறோம். எனவே திருத்தி வெளியிடவும். பரங்கிப் பேட்டை கு.நிஜாமுத்தீன்,

நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல் “தஃவத்” என்ற அரபிப் பதம் அழைத்தல் என்ற பொருளைத் தருகிறது. இது இறைவனிடம் கேட்கும் துஆவிற்கும் (பிரார்த்தனை) பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சார பணியில் ஈடுபடுவதையும் குறிக்கிறது. விருந்தில் பங்கேற்க அழைப்பதையும் குறிக்கிறது. இதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட ஹதீஸில் முதலில் நாம் குறிப்பிட்டுள்ள பொருளான “முஸ்லிம்களின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும்” என்பதே பொருத்தமாகும். ஈத்காவில் நபி(ஸல்) அவர்களின் குத்பாவையே (பிரசங்கம்) அதில் கலந்து கொண்டோர் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் பொதுவாக இந்த உம்மத்துக்காகக் கேட்ட துஆவில் மற்றவர்கள் பங்கேற்றதை மறுப்பவர்கள் மார்க்கப் பிரச்சாரத்தில் பங்கேற்றனர் என்பதை மட்டும் எப்படி சரி காண்கின்றனர்? அவர்களது வாதம் சரியாக இருந்தால் இரண்டையும் மறுத்தல் வேண்டும். நபி(ஸல்) அவர்களின் துஆவிற்கு மற்றவர்கள் “ஆமீன்” சொன்னதற்கு ஆதாரமில்லை என்ற ஒரே காரணத்தை வைத்து மற்றவர்கள் துஆவில் பங்கேற்கவில்லை என்று வாதிடுகின்றனர். அதேபோல் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே குத்பா(பிரசங்கம்) செய்தனர். கலந்து கொண்டவர்கள் யாரும் குத்பா(பிரசங்கம்) செய்யவில்லை. பிரசங்கத்தை மெளனமாகக் கேட்டவர்கள் “மார்க்கப் பிரச்சாரத்தில்” பங்கேற்றனர் என்று ஒப்புக்கொள்கிறவர்கள் நபி(ஸல்) அவர்கள், உம்மத்தினர் அனைவருக்கும் கேட்ட துஆக்களை மெளனமாக செவிமடுத்துக் கொண்டிருந்தவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை என்று சொல்வது உங்களுக்கு விந்தையாகத் தெரியவில்லையா?

இந்த அவர்களின் தடுமாற்றத்திற்குக் காரணம் கூட்டு துஆவுக்கு “ஆமீனை” அவர்கள் ஷர்த்தாக(விதியாக) ஆக்கியதே. இதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஒரே ஒரு ஆதாரத்தையும் அவர்களால் தர முடியாது. ஆனால் கூட்டு துஆவுக்கு ஆமீன் ஷர்த்தல்ல(விதியல்ல) என்பதற்கு நாம் முன்பு 10:88,89 இரு குர்ஆன் வசனங்களை ஆதாரமாக எடுத்து வைத்திருந்தோம். 10:88 வசனத்தில் மூஸா(அலை) அவர்கள் மட்டும் பொதுவாக பன்மையில் கேட்ட துஆவுக்கு அல்லாஹ் 10:89 வசனத்தில் “உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது” என்று பதில் அளிக்கிறான். கூட்டு துஆவுக்கு “ஆமீன்” ஷர்த்தல்ல என்பதற்கு இவ்வளவு தெளிவான ஆதாரம் கொடுத்த பின்பும் ஏன் இந்த தடுமாற்றம்? இது மூஸா(அலை) அவர்களின் கெளமுக்கு எங்களுக்கல்ல என்று முகல்லிதுகளைப்போல் எண்ணுகிறார்களோ? அப்படி நியாயப்படுத்துவதற்கும், கூட்டு துஆவுக்கு “ஆமீன்” ஷர்த்தாகும் என்பதை குர்ஆன் வசனங்களைக் கொண்டோ, அல்லது ஹதீஸைக் கொண்டோ நிலைநாட்ட வேண்டுமேயல்லாது மனித ஊகங்களை எடுத்து வைக்கக்கூடாது. இதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. பர்ழான தொழுகைக்குப் பின் ஓதுவதற்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள் அனைத்தையும் பாருங்கள். அவை அனைத்தும் ஒருமையிலேயே கற்றுக் தரப்பட்டுள்ளன. மேலும் நபி(ஸல்) அவர்கள் அவற்றை மற்றவர்கள் கேட்கும் வகையில் வழமையாக ஓதிக் கொண்டிருக்கவுமில்லை.

ஆனால் ஜும்ஆ குத்பா(பிரசங்கம்) ஈத் குத்பா(பிரசங்கம்) இவற்றில் கேட்கும் துஆக்களை பன்மையிலும், அமர்ந்திருப்பவர்கள் தெளிவாகக் கேட்கும் வகையில் சப்தமிட்டும் வழமையாக ஓதிக் கொண்டிருந்ததற்குரிய ஆதாரங்களை யாரும் மறுக்க முடியாது.

எனவே பர்ழான தொழுகைக்குப் பின் கூட்டு துஆ இல்லை என்பதை ஆதாரமாக வைத்தோ, அல்லது பொதுவாக பன்மையில்  உம்மத்துக்காகக் கேட்கப்பட்ட துஆக்களுக்கு மற்றவர்கள் “ஆமீன்” சொன்னதற்கு ஆதாரமில்லை என்பதை ஆதாரமாக வைத்தோ, ஜும்ஆ, ஈத் குத்பாக்களில் பொதுவாக உம்மத்தினர் அனைவரின் நலனுக்காகவும் கேட்கப்பட்டவை கூட்டு துஆ இல்லை என வாதம் புரிவது தவறாகும். ஈத் குத்பாவின் சமயத்தில் பெண்கள் முஸ்லிம்களின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவில்லை. ஆயினும் முஸ்லிம்களின் மார்க்கப் பிரச்சாரத்தில்” பங்கேற்றனர் என்று கூறுவது அதைவிடத் தவறாகும்.

Previous post:

Next post: