ஏழை எளியவர்களின் பங்கை முறையாக முழுமையாகக் கொடுங்கள்!

in 2013 ஜூலை,தலையங்கம்

இன்றைய முஸ்லிம்கள் ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கட்டாயக் கடமைகளில் பெரிதும் பின்தங்கி இருந்தாலும் அவர்களில் சிலருக்கு அல்லாஹ் பெரும் செல்வத்தைக் கொடுத்துத்தான் இருக்கிறான். ஆயினும் அச் செல்வந்தர்கள், தங்கள் செல்வத்தில் ஏழை எளியவர்களுக்குரிய பங்கைக் கணக்கிட்டுக் கொடுப்பதில்லை. முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களின் ஜகாத்தை முறையாக முழுமையாகக் கணக்கிட்டுக் கொடுத்தால், முஸ்லிம் சமுதாயத்தில் ஏழைகளோ, தேவையுடையவர்களோ இல்லை என்ற நிலையே உருவாகும்.

ஆனால் அச்செல்வந்தர்களோ ஏழைகளின் பங்கான ஜகாத்தைக் கொடுக்காமல் தடுப்பதோடு, அவற்றையும் சேர்த்துப் பெருமைக்காக வீண் அனாச்சார ஆடம்பரச் செலவுகளில் கரியாக்கி இறைவனின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இத்தீயச் செயல்களுக்குப் பெரும் பாலான மதகுருமார்களும் துணை போகிறார்கள். அவர்களின் எதார்த்த நிலையைப் பிரிதொரு கட்டுரையில் விவரித்துள்ளோம். அதிலுள்ள குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்துப் பார்த்து உணர்வு பெற்றுத் திருந்தி நேர்வழி வர எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துஆ செய்கிறோம்.

ஜகாத் கடமையின் அத்தியாவசியத்தையும், ஏழை எளியவர்களின் நியாயமான தேவைகளையும் உணர்ந்த சகோதரர்கள், சகோதரிகள் தங்களின் ஜகாத் தொகையை அந்நஜாத் ஆரம்ப காலத்திலிருந்து அனுப்பி வைக்கிறார்கள். ஏழை எளியவர்களின் தேவையறிந்து அவர்களின் படிப்பு, மருத்துவம், திருமணம், பெருநாள் செலவு, உடை, கடன் போன்றவற்றை நிறைவு செய்ய அவர்கள் கொடுக்கும் ஜகாத் நிதியை முழுமையாகப் பயன் படுத்துகிறோம். கூட்டத்தைக் கூட்டி பெரிதும் விளம்பரப்படுத்தி, உதவி பெறுகிறவர்களைப் படம் பிடித்துப் பத்திரிகைகளில் போட்டு, அவர்களை அவமானப்படுத்தும் செயல்களைச் செய்வதில்லை. இயக்கவாதிகள், தங்கள் இயக்கத்தை வளர்த்துப் பேர், புகழ், பட்டம், பதவி, உலகியல் ஆதாயங்கள், அந்தஸ்து இவற்றை அடைய, செய்யும் எச்செயல்களையும் நாங்கள் செய்வதில்லை.

இதில் இன்னும் வேதனைக்குரிய விசயம், இந்த இயக்கங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தியும், தங்கள் இயக்கங்களில் உறுப்பினர்களாகச் சந்தா கட்டும் குடும்பத்தினருக்கே உதவி அளிக்கப்படும். இயக்கங்கள் நடத்தும் பரிசுப் போட்டிகளில் கூட தங்கள் இயக்கத்தின் உறுப் பினர்களின் குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றெல்லாம் நிபந்தனையிட்டுச் செயல்படுபவர்கள், தங்கள் இயக்க உறுப்பினர்களின் தேவைகளையே கொடுத்து நிறைவு செய்வதில்லை என்பதே.

அப்படிப்பட்ட இயக்கங்களின் உறுப்பினர்கள் எங்களிடம் உதவி கேட்டு வருகிறார்கள். நாங்களோ மத்ஹபு, தரீக்கா, ஹனஃபி, ஷாஃபி, ஜாக், ததஜ, இதஜ, தமுமுக, மற்றும் எங்களைக் கடுமையாகச் சாடும் பிரிவுகளின் மவ்லவிகள் என வேறுபாடு காட்டாமல், அவர்கள் உண்மையான தேவையுடையவர்களா எனக் கண்ட றிந்து ஜகாத் நிதியிலிருந்து கொடுத்து உதவுகிறோம். ஜகாத் தொகையில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுவதற்காகப் பங்கு இருக்கிறது என்ற அடிப்படையில் ஹிந்து, கிறித்தவ, நாத்திகக் குடும்பத்திலுள்ள தேவையுடைய ஏழை எளியவர்களுக்கும் அந்நிதியிலிருந்து கொடுத்து உதவுகிறோம்.

அதே சமயம் ஜகாத் நிதியிலிருந்து எங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளச் சல்லிக் காசும் எடுப்பதில்லை. ஜகாத்தை வசூலித்து அதை உரியவர்களிடம் சேர்க்கும் பணியைச் செய்பவர்களுக்கும் அதில் ஒரு பங்கு உண்டுதானே என்றாலும், அன்று போல் இன்று நேரம் ஒதுக்கி ஊர் ஊராகச் சென்று ஜகாத்தை நாம் வசூலிக்கவில்லை. நம்மைத் தேடிக் கொண்டு வந்து தருகிறார்கள். அல்லது வங்கிகள் மூலமோ, காசோலை, கட்டளை ஓலை, M.O. மூலமோ அனுப்புகிறார்கள். எனவே அந்தக் காரணம் கூறியும் சிலர் பிதற்றித் திரிவதுபோல் நாம் எடுப்பதில்லை. அந்நஜாத் வகைச் செலவினங்களுக்கும் ஜகாத் நிதியிலிருந்து எடுப்பதில்லை. ஜகாத், சதக்கா, நஜாத் வளர்ச்சி நிதி, குர்பானி போன்றவற்றிற்காக அனுப்பியவர்களுக்கு வருட இறுதியில் அனுப்பி வைக்கப்படும் வரவு செலவு கணக்கு அச்சடிக்கும் செலவைக் கூட ஜகாத் நிதியிலிருந்து எடுப்பதில்லை. ஜகாத்தாக, சதக்காவாக வரும் தொகை முழுவதுமாக ஏழை எளியவர்களுக்கே பங்கிடப்படுகிறது.

இந்த விபரங்கள், சிலர் பொறாமையினால் பொய்யான அவதூறுப் பிரசாரங்களைப் பரப்புவதால் கொடுக்கப்படுகிறது. சகோதர, சகோதரிகளே ஜகாத் சதகா வகைக்கு வரும் பணம் முழுக்க முழுக்க அவற்றிற்கு உரிமையாளர்க ளுக்கே முழுமையாக வழங்கப்படுகிறது. அவற்றிற்குரிய வரவு செலவு கணக்கும் அவற்றை அனுப்பிவைத்த சகோதர சகோதரிகளுக்கு வருட இறுதியில் அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்நஜாத் மாத இதழும் கடுமையான நிதி நெருக்கடியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. 25 பைசா முத்திரை ஒட்டி அனுப்பும் 1986ய பதிவை பத்திரிகைப் பதிவு அலுவலகம் சமீப காலத்தில் அனைத்துப் பதிவுப் பத்திரிகைகளையும் அவர்களது “rni.nic.in” வலைதளத்தில் பதிவேற்றம் செய்தபோது பல பத்திரிகைகள் விடுபட்டுள்ளன. அவற்றில் நமது பத்திரிகையும் ஒன்று. அநீதமாக பதிவை இரத்து செய்து விட்ட னர். பதிவு செய்யப்படாத மாத இதழ் என 2 ரூபாய் முத்திரை ஒட்ட அனுமதி இருக்கும் நிலையில், ஜூன் மாத இதழை RMSக்குக் கொண்டு சென்று தபாலில் சேர்க்க முற்பட்டபோது, புதிதாக ஆர்டர் வந்திருக்கிறது. 4 ரூபாய் முத்திரை ஒட்ட வேண்டும் என நிர்பந்தப் படுத்தி மேலும் 2 ரூபாய் முத்திரை ஒட்ட வைத்தார் அங்கிருந்த மேல் அதிகாரி.

அந்நஜாத் போய்ச் சேர்வதில் தாமதம் ஏற் படக்கூடாது என்பதால் பொறுப்பிலுள்ள அதிகாரி சரியாகத்தான் சொல்வார் என்ற நம்பிக்கையில் அவர் கூறியபடி மேலும் 2 ரூபாய் முத்திரை அங்கேயே வாங்கி ஒட்டி அனுப்ப நேரிட்டது. நமது அலுவலகத்திற்கு வந்து தபால்த்துறை வலைதளத்தில் பார்த்தபோது பதிவு செய்யப்படாத வார, மாத இதழ்களுக்கு 100கிராமுக்குள் ரூ.20/= விலைக்குள் இருந்தால் ரூ. 2/= முத்திரை மட்டுமே ஒட்ட வேண்டும்; எவ்வித மாறுதலும் இல்லை என்று தெளிவாக இருக்கிறது. அடுத்த நாள் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் அதைக் காட்டி, பத்திரிகையாளர்களுக்கு இப்படிப்பட்ட தவறான தகவல் தந்து அவர்களை ஏமாற்றாதீர்கள் என்று எச்சரித்தோம்.

ஆக அரசுத் துறைகளில் அவர்கள் சார்ந்த துறைகள் பற்றிய அறிவோ, தகுதியோ இல்லாதவர்கள்தான் பணியாற்றுகிறார்கள். பெருந் தொகைகளை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அரசுப் பணிகளில் அமர்த்துவதால் தகுதியற்ற வர்கள் அப்பதவிகளை அடைய பெரிதும் வாய்ப்புக் கிடைக்கிறது. நாடு சுடுகாடாக ஆகிக் கொண்டிருக்கிறது.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இப்படிப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் அந்நஜாத் மாத இதழை மாதா மாதம் தவறாமல் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். மத வியாபாரிகள், அரசியல் வியாபாரிகள் எப்படியும் அந்நஜாத்தை முடக்கி விட வேண்டும். அந்நஜாத் எடுத்து வைக்கும் நேரடி குர்ஆன், ஹதீஃத் போதனைகள் மக்க ளைச் சென்றடைந்து விடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.  சத்தியத்தை யார் மூடி மறைக்க முற்பட்டாலும் நிச்சயம் சத்தியம்-அல்லாஹ்வின் ஒளி வெற்றிப் பெற்றே தீரும். (பார்க்க. 61:8) இது இறைவனின் உத்திரவாதம். அந்நஜாத் நேர் வழியை-சத்தியத்தை மட்டுமே சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வே அதைப் பாதுகாக்கப் போதுமானவன். அந்நஜாத் பணியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ள சகோதர சகோதரிகள் ஏழைகளின் பங்கான ஜகாத்தை அதிகமாக அனுப்புவதோடு, அந்நஜாத் தொய்வின்றி தொடர அந்நஜாத் வளர்ச்சி நிதியாகவும் தாராளமாக அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம். துஆ செய்கிறோம்!

AL MUSLIMEEN CHARITABLE TRUST
A/C. NO. 440300 0101024016
ANNAJAATH MONTHLY
A/C.NO. 440300 2100003973
PUNJAB NATIONAL BANK
BRANCH ID 440300
W.B.ROAD, TRICHY-2

Previous post:

Next post: