மத்ஹப் மதரஸா கல்விமுறை வழிகேடு…

in 2018 ஜூன்

அபூகனீபா, புளியங்குடி

பொதுமக்களின் ஜகாத் நன்கொடை பணத்தில் 7 வருடம் உழைக்காமல் உண்டு, மார்க்கம் பயிலும் மதரஸா கல்வியை மத்ஹப்கல்வியை எனது இஸ்லாம் படிக்க சொல்லவில்லை. எங்கள் இறைத்தூதர் முகம்மது(ஸல்) அவர்களும் அப்படிப்பட்ட மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கவில்லை

இறைக்கல்வியை வைத்து எந்த இறைத் தூதரும் பிழைப்பு நடத்தவில்லை. அப்படி பிழைப்பு நடத்தும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்கவில்லை. இன்று மதரஸா என்ற பெயரிலே இஸ்லாம் காட்டித்தராத முறையில் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த கல்வி நிலையங்களில் இஸ்லாமிய கல்வியை கற்றுக்கொடுக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

மனிதர்கள் தங்கள் கைகளால் உருவாக்கிய மத்ஹப் கொள்கைகளால் உருவான பிகு சட்டங்களை நான்கு மத்ஹப்களின் அடிப்படையில் உருவான பிகு சட்டங்களை கற்றுக் கொடுக்கிறார்கள்.மேலும் உலக கல்வி வாழ்வாதாரத்தை கொடுக்கக் கூடிய சுயமாக சம்பாதிக்கக்கூடிய தொழில் கல்வி என்பது அறவே கிடையாது. மதரஸாக்களில் படிக்கக்கூடிய மாணவர் களின் வருங்காலம் எப்படி இருக்கிறது என்றால் அவர்கள் மார்க்கத்தையே தங்களின் பிழைப்பாக கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மேலும் அங்கு படிப்பவர்கள் உழைப்பின் அருமை தெரியாமல், பசியின் கொடுமை தெரியாமல் மூன்று வேலையும் உழைக்காமல் உண்டு வளர்கிறார்கள். 7 வருடங்கள் உணவிற்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும் பஞ்சமில்லாமல் இருந்தவர்கள் 7 வருடங்களுக்கு பின்னால் அனைத்து வசதிகளும் இல்லாமல் தெருவில் விடப்பட்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள் சுயமாக உழைத்து உண்ண எந்த தொழிலும் தெரியாது.

தனக்கு இதுநாள் வரை கிடைத்த அனைத்து வசதிகளும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தில் கை வைத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை அப்போது தான் உணர்கிறார்கள். அதனாலே மவ்லவி பட்டம் பெற்றவர்கள் தங்களுக்கு என்று ஒரு இயக்கத்தை மிகவும் எளிதாக உருவாக்கிவிடுகிறார்கள் எந்த உழைப்பும் இன்றி விரைவிலே செல்வந்தர்கள் ஆகிவிடுகிறார்கள். மக்களும் மவ்லவி சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் பின்னால் செல்கின்றனர்.

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை களை தகர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது தான். இந்த மதரஸா கல்வி. இங்கே பயின்ற வர்கள் தான் மார்க்க அறிஞர்கள் என்ற மாய தோற்றத்தை மக்களிடம் உருவாக்கி வைத்துள்ளனர். மவ்லவி சொன்னால் தான் மார்க்கம் மதரஸாவில் பயிலாதவன் சொல்வது வழிகேடு. குழப்பவாதி என்ற எண்ணத்தை முஸ்லிம்கள் மனதில் விதையாக விதைத்து விட்டார்கள், அது மரமாக இன்று வளர்ந்து நிற்கிறது. அதனால்தான் அல்லாஹ் என்ன சொல்கிறான், அல்லாஹ்வின் தூதர் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்பதை விட்டும் கேட்பதை விட்டும் திசை திருப்பப்பட்டு ஆலிம்கள் என்ன சொல்கிறார்கள். மவ்லவிகள் என்ன சொல்கிறார்கள் என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி ஆலிம்கள் பின்னாலும், மவ்லவிகள் பின்னாலும் செல்லவா இஸ்லாம் சொல்கிறது? இல்லை மதரஸாக்களின் மூலம் அப்பாவி முஸ்லிம்களை சொல்ல வைத்தார்கள், நம்பவைத்தார்கள்.

படிப்பறிவு இல்லாத ஸஹாபாக்கள் பலரும் ஆலிம்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் எந்த மதரஸாக்களிலும் படிக்க வில்லை. அரபி மொழி மார்க்கம் இல்லை என்பதை உணர்த்தவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அரபி மொழிக் கல்வி யில் தேர்ச்சி பெற்ற முஸ்ரிக்குகளை போர் கைதிகளாக பெற்றபோது அவர்களுக்கு தண்டனையாக படிப்பறிவு இல்லாத முஸ் லிம்களுக்கு உலக கல்வியான அரபி மொழியை கற்றுக் கொடுக்க உத்தரவிட்டார்கள். முஸ்ரிக்குகள் அரபி மொழியை முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்ததின் மூலம் அரபி மொழி என்றும் மார்க்கம் ஆகாது. அது ஒரு மொழி என்பதை உலகம் அறிய செய்திருக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்.

அரபி மொழியை யாரிடம் வேண்டுமானாலும் சென்று படிக்கலாம். அது தான் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை அதற்கு மாறாக மதரஸாவில் சென்றுதான் படிக்க வேண்டும் என்று சொல்பவர்கள்தான் வழிகேடர்கள் மத்ஹப் என்ற புதிய மார்க்கத்தை உருவாக்கியவர்கள்.

ஸஹாபாக்கள் யாரும் உழைக்காமல் உண்டு மார்க்கம் பயிலவில்லை தான் உழைத்து அதன் மூலம் தனது குடும்பத்தை பராமரித்து பிறருக்கு உதவியும் செய்து மார்க்கம் பயின்றார்கள். எதற்காக மறுமைக்காக மறுமை வெற்றிக்காக அவர்கள் கற்ற மார்க்க கல்வியை இறைவனுக்கு பயந்து எந்த கூலியும் பெறாமல் சுயவிளக்கமும் இல்லாமல் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள் அதனால் இஸ்லாம் குழப்பங்கள், பிரிவுகள் இல்லாமல் இந்த உலகம் முழுவதும் பரவியது. ஆனால் இன்று மார்க்க கல்வி என்ற பெயரிலே மத்ஹப் கொள்கைகளை, பித்னாக்களை முஸ்லிம்களிடையே பரப்பு வதற்காகவும், முஸ்லிம்களை நேர்வழியில் இருந்து முற்றிலும் வெளியேற்றி நரகத்திற்கு கொண்டு செல்லவும் மதரஸா கல்வியை உருவாக்கி இருக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய கல்வி முறை முஸ்லிம்கள் அனைவரையும், ஆலிம்களாக ஆக்கியது, மவ்லவிகளாக ஆக்கியது, உலமாக்களாக ஆக்கியது, முஸ்லிம்கள் அனைவரும் மார்க்க கல்வியை பெற்றிருந்தனர். தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் சொல்லிக் கொடுத்தனர். மார்க்கக் கல்வியை முஸ்லிம் அனைவரும் படித்தனர்.

ஆனால் இன்று ஒருசிலரே மார்க்க கல்வியை கற்கும் கடினமான சூழ்நிலையை மதரஸாக்களின் மூலம் உருவாக்கியிருக் கிறார்கள்.

மார்க்க கல்வி மதரஸா கல்வி என்றாலே மக்கள் விரண்டு ஓடும் சூழ்நிலை இன்று உருவாக்கி இருக்கிறார்கள். 7 வருடம் தியாகம் செய்தால் தான் மார்க்க கல்வி கிடைக்கும் என்ற அவல நிலையை மதரஸாக்களின் மூலமாக உருவாக்கி இருக்கிறார்கள். அன்றாடம் உழைத்து வாழக் கூடிய யாவரும் இஸ்லாமிய மார்க்கத்தை கற்க முடியாது என்ற மனநிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

குருகுல கல்வியைப் போன்று பல வருடம் தியாகம் செய்தால் தான் இஸ்லா மிய மார்க்கக் கல்வி கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த மதரஸா கல்வி ஒருபோதும் முஸ்லிம்களை மார்க்க அறிஞர்களாக ஆக்காது. அது விரைவிலே நாத்திக சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் காரணம் மார்க்கம் பிழைப்பாக ஆக்கப்படுகிறது. மார்க்க அறிஞர்கள் இறை வனுக்கு ஒப்பாக ஆக்கப்படுகிறார்கள், அழைக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக மவ்லானா, மவ்லவி, இது அல்லாஹ் விற்கு இணை வைக்கக்கூடிய நிலைக்கு முஸ்லிம்களை ஆக்குகிறது.

கூலிக்காக மார்க்க பணி செய்யக்கூடிய மவ்லவிகள் பல இன்னல்களுக்கு ஆளாகு கிறார்கள். வாழ்க்கையை நடத்த சரியான ஊதியம் கிடைப்பது இல்லை. அப்படி கிடைக்கிறது என்றால் அவர்களின் தந்திரங் களாலே கிடைக்கிறது. அதுவும் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை, மனிதர்களை மூளை சலவை செய்து ஏமாற்றத் தெரிந்த மவ்லவிகளால் மட்டுமே அதுவும் முடியும். இஸ்லாம் காட்டித்தராத நிலையில் மார்க்க பணி செய்யும் மவ்லவிகள் விரைவில் இறை வனுடைய சோதனைகளுக்கும், வேதனை களுக்கும் ஆளாகிறார்கள். தொழுகை வைப்பதற்கு கூச்சம் இன்றி கையேந்தி கூலி வாங்கிய காரணத்தால் பலரும் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூச்சம் இல்லாமல் பிறரிடம் கை ஏந்தக்கூடிய நிலைக்கு ஆளாகிறார்கள் அந்த நிலையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல மவ்லவிகள் கையேந்தும் சம்பவங்கள் நம் கண்முன் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாம் காட்டித்தராத முறையில் வாழ்நாள் முழுவதும் பள்ளியில் இமாமாக பணி செய்துவிட்டு உழைக்காமல் பொருள் ஈட்டி சேமிக்காமல் காலத்தை ஓட்டிய நிலையில், வயதான நிலையில் மருத்துவ செலவுக்காக பள்ளிவாசல்களிலே பிறரிடம் கையேந்தக்கூடிய நிலைக்கு ஆளாகிறார்கள் இந்த மதரஸா கல்வி அவர்களை அவ்வாறு ஆக்கியிருக்கிறது. இதற்கு யார் காரணம் இஸ்லாமிய மார்க்க கல்வியா? அல்லது மனிதர்கள் உருவாக்கிய மதரஸா கல்வியா?

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த மார்க்க கல்வி ஸஹாபாக்கள் மதிப்பு மிக்க கவுருவமாக வாழ செய்தது. ஆனால் மதரஸா கல்வி மார்க்க அறிஞர்களை கேவலப்படுத்துகிறது. முஸ்லிம்களே எந்த கல்வி முறை வேண்டும்? நம்மை உலகத்தில் சிறந்தவர்களாக, மறுமையில் நற்பாக்கியம் உடையவர்களாக ஆக்கக்கூடிய மார்க்க கல்வி வேண்டுமா? அல்லது இம்மையிலும், வாழ்வாதாரத்தில் தோல்வி, பிறரிடம் கையேந்தும் நிலை மறுமையிலே மக்களை வழிகெடுத்த காரணத்திற்காக நிரந்தர நரகம் எது வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

வீட்டிற்கு ஒரு ஆலிமை உருவாக்க வேண்டும் என்று ஜும்மா உரைகளில் பொய்யாக சொல்லப் போகிறீர்களா? அல்லது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆலிம்களாக ஆகப்போகிறீர்களா? உண்மையான இஸ்லாமிய மார்க்க கல்வியே முஸ்லிம்கள் அனைவரையும் ஆலிம்கள் ஆக்கும் எது வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் தான் நேர்வழியையும், வழிகேட்டையும் உருவாக்கி இருக்கிறான். நீங்கள் எதை பின்பற்ற நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மரணம் உறுதி, மறுமை நிரந்தரமானது, நிரந்தரமான வாழ்வுக்கு மார்க்க கல்வி அவசியம். அந்த மார்க்க கல்வியை அனைத்து முஸ்லிம்களும் பெற வேண்டும்.

முஸ்லிம்கள் அனைவரும் நேர்வழி அடைய வேண்டும் என்ற நோக்கத்தாலே இந்த பதிவை பதிவிடுகிறேன். வழிகேட்டை விட்டு நேர்வழி கிடைக்க அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக.

புகழுக்கு உரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.

Previous post:

Next post: