ஆதார்!

ஆதார் அட்டை சம்பந்தமாக இத்திட்டத்திற்கு நாட்டில் பல எதிர் கருத்துக்கள் வெளிப்பட்டன. இத்திட்டம் அமலுக்கு வந்தால், குடிமக்கள் ஒவ்வொருவரைப் பற்றிய உண்மைகள் அவை ரகசியங்களாக இருந்தாலும், அந்த ரகசியங்களைப் பெற நினைப்பவர் பெற்றுவிட முடியும் என்று சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகளின் ஒரு அமர்வில், ஒவ்வொருவரின் அந்தரங்கமும் மனிதனின் அடிப்படை உரிமை என 2017ல் தீர்ப்பு வழங்கியது. திட்டம் நீடிக்காது என் றெண்ணி மக்கள் நிம்மதியாயினர். இது அரசு ஏற்படுத்திய நாடகம் என்பதை எவரும் அறிந்திலர். அது இப்போது தான் தெரிய வந்திருக்கிறது.

இத்திட்டத்தை சட்டமாக்க, மாநிலங்கள் அவையில் ஒப்புதல் கிடைக்காததால் நினைத்ததை நடத்தியே முடிக்கும் பிஜேபி அரசு மெல்ல தன் முகத்தைக் காட்ட ஆரம்பித்தது. பிஜேபி அரசு செய்த “மாஸ்டர் பிளான்” என்னவென்றால், இதை பண மசோதா என்ற பெயரில் மக்களவையில் நிறைவேற்றியது. பிறகு இதை சட்டமாக்கிக் கொள்ள, நீதிபதிகளின் அமர்வு ஆரம்பித்தது.

இடைத்தரகர்கள் இன்றி, மக்கள் நேரடியாக அரசின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசு கருத்து கூறியதை கவனத்தில் எடுத்தனர் நீதிபதிகள். 120 கோடி பேர் இத்திட்டத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருப்பது பெரும்பான்மை நீதிபதிகளின் கவனத்தை ஈர்த்தது. இறுதியாக, “தனி மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று கூறி ஆதார் அட்டை செல்லும்” என்ற தீர்ப்பை ஒரு நிபந்தனையுடன் தந்தது உச்சநீதிமன்றம். நிபந்தனை யாதெனில் தனியார் நிறுவனங்களிடம் ஆதார் அட்டையை பரிமாறக் கூடாது என்பதேயாகும். ஆக இறுதியில் இத்திட்டம் சட்டமாகிவிட்டது.

பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டதை, பெரும்பான்மை நீதிபதிகள் நியாயப்படுத்தி இருப்பதுதான் ஆச்சர்யத்தைத் தருகிறது. ஆனால், எதிர் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி சந்திரசூட் அவர்கள். “மாநிலங்களவையில் இத்திட்டம் மறுக்கப்பட்ட நிலையில் பண மசோதா என்று கூறி, ஆதார் திட்டத்தைக் கொண்டு வந்தது அரசியல் சட்ட மோசடி” என்று கூறியிருப்பது அநேகரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அரசின் திட்டம், ஆதார் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. வாக்களித்தபடி, அரசு உதவிகள் அறிவிக்கப்பட வேண்டும். அவை மக்களை சென்றடைய வேண்டும். நடக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்து ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பீதி அடைந்த மக்களின் அச்சத்தை நீக்க வேண்டும்.

மக்களை இன்னும் அதிகமாக அச்சமடைய செய்கின்றது. சமீபத்திய அறிக்கை ஒன்று.

சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனமான கெமல்டோ, நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நூறு கோடி ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை தந்திருக்கிறது. இவற்றில் தனி நபருடைய பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களும் அடங்கி இருக்கின்றனவாம்.

கசிந்துள்ள தகவல்களில் “தரவு” மூலம் பாதுகாக்கப்பட்ட தகவல்கள் பன்னிரெண்டில் ஒரு தகவல் மட்டும்தான் என்றும் உலக அளவில் 2017ல் இதே காலகட்டத்தில் கசிந்த தகவல்களைக் காட்டிலும் 133 சதவீதம் இந்த ஆண்டில் உயர்ந்திருப்பதாகவும், அதாவது 2018ல் 945 தகவல் அத்துமீறல்களும் அதன் மூலம் 450 கோடி தகவல் கசிந்துள்ளதாகவும் கெமல்டோ தெரிவித்திருப்பதாக “தி ஹிந்து (தமிழ்)’ 01.10.2018 அன்று வெளியிட்டிருக்கிறது.

(“தரவு” என்பது, புள்ளி விவரங்களை-DATAS ரகசிய பாஷைக்கு மாற்றுவது ENCRYPTION)

Previous post:

Next post: