அமல்களின் சிறப்புகள்….

in 2019 ஜனவரி

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு! தொடர் : 41

  1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…

சென்ற மாதம் டிசம்பர் 2018 இதழின் இறுதியில் தெரிவித்திருந்த கருத்து யாதெனில்.. குர்ஆன் ஹதீஃதுகளுக்கு மாற்றமான நச்சுக் கருத்துக்களை வழக்கமாக எழுதி வரும் அமல்களின் சிறப்பு (அசி) புத்தகம், குர்ஆன், ஹதீஃதுகளில் உள்ளதை அப்படியே சமயங்களில் எழுதி நல்ல பிள்ளை வேஷம் போட்டுக் கொண்டிருப்பதால்தான், நச்சுக் கருத்துக்களை மக்கள் பெரிதுபடுத்தாமல் இருக்கிறார்கள் என்ற கருத்தை எழுதி இருந்தோம்.

இது உண்மை என்பதை, பக்கம் 386ல் முதல் பத்தியில் இவர்கள் நடத்தும் பாடத்திலிருந்து இப்போது அறியலாம். அந்தப் பாடத்தில் கூறப்பட்டுள்ள செய்தி :

“சூஃபியாக்கள் எழுதியுள்ளதாவது மனிதர்கள் பார்ப்பார்களே யாராவது பார்த்தால் என்ன சொல்வார்கள் என்பது போன்ற எண்ணங்களை மனதில் போட்டு திக்ர் செய்வதைத் தடுப்பது ஷைத்தானின் ஏமாற்றுதலாகும். எனவே, ஷைத்தானைத் தடுப்பதற்காகச் சப்தமிட்டு திக்ர் செய்தல், ஒரு தனிப்பட்ட முறையும் தந்திரமும் ஆகும். ஆனால் பிறருக்குக் காண்பிப்பதற்காக எந்த அமலையும் செய்யக்கூடாது. யாராவது பார்த்தால் பார்த்துவிட்டுப் போகட்டும். அதற்காக எந்த அமலையும் விட்டு விடவும் கூடாது.

எமது ஆய்வு :

ஷைத்தான் பெரும் பொய்யனாக இருந் தாலும் அவன் உம்மிடம் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் அபூஹுரைரா(ரழி) அவர்களிடம் கூறியதை சென்ற இதழில் நாம் பார்த்த ஹதீஃதின்படி, அமல்களின் சிறப்பு புத்தகம் கூறும் உண்மை என்னவென்றால், “பிறருக்குக் காண்பிப்பதற்காக எந்த அமலையும் செய்யக்கூடாது” என்பதுதான்.

இதுதான் இவர்கள் போடும் நல்ல பிள்ளை வே­ம். இந்த வே­த்தைப் போட்டுக் கொண்டு விதைத்திருக்கும் நச்சுக் கருத்துக்களை இப்போது கவனியுங்கள்.

அகிலங்களைப் படைத்த மேலான அல்லாஹ் அகிலத்தாருக்கு இறக்கி அருள் புரிந்த அல்குர்ஆன் 7:205 ஆயத்தில் “சொல்லில் உரத்த சப்தம் இல்லாமல்” திக்ர் செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டிருக்க, சப்தமாகத்தான் திக்ர் செய்யவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் (அசி) ஆசிரியர்.

“நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றது; அழிந்து போகக் கூடியவனைத் தவிர வேறெ வரும் அதை விட்டு செல்ல மாட்டார்கள்” என்ற ஹதீஃதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தெளிவாக்கி விட்ட பிறகு (அறிவிப்பாளர்: இர்ஃபாழ் இப்னு ஸாரியா(ரழி) அஹமத்) அதற்கு நேர் எதிராக, ஷைத்தானைத் தடுப்பதற்காகச் சப்தமாக திக்ர் செய்வது ஒரு தனிப்பட்ட முறையும் தந்திரமும் ஆகும் என்கிறது இந்த புத்தகம். “சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் அல்லாஹ் தான் மேலானவன்” என்று (அல்குர்ஆன்: 8:30)

தன்னைப் பிகடனப்படுத்திய பிறகும், சப்தமாக ஏன் திக்ர் செய்யவேண்டும் என்று இவர்கள் பாடம் கற்றுக் கொடுப்பதை (நவுதுபில்லாஹ்) கவனித்தீர்களா? அல்லாஹ்வுக்கே தந்திரம் சொல்லிக் கொடுக்கிறது இந்த புத்தகம். இது ஷைத்தானின் வேலை அல்லவா? ஷைத்தானாக இருக்கும் இவர் ஷைத்தானைத் தடுக்க போகிறாராம். அதற்காகத்தான் தந்திரமாக சப்தமிட்டு திக்ர் செய்கிறாராம். இந்த தந்திரம் நல்ல பிள்ளை வே­ம் எல்லாம் எதற்குத் தெரியுமா?

பிறரை மூளைச் சலவை செய்யத்தான். ஷைத்தான், நான் நெருப்பால் படைக்கப்பட்டவன்; ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர் என்று அல்லாஹ்வுக்கே பாடம் சொன்னானே! அதுபோல இவர்களும் “ஷைத்தானைத் தடுப்பதற்காகச் சப்தமிட்டு திக்ர் செய்தால் ஒரு தனிப்பட்ட முறையும் தந்திரமும் ஆகும் என்று அல்லாஹ்வுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். இப்புத்தகம் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்தது மக்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காக வேஷம் போட்டு பாசாங்கு செய்வதை அப்புத்தகம் இன்னும் தொடர்ந்து எழுதி இருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

“பிறருக்குக் காண்பிப்பதற்காக எந்த அமலையும் செய்யக்கூடாது” என்று மார்க்கம் கூறுவதை, நல்ல பிள்ளையைப் போல, தாமும் சொல்லிக் கொள்கிறது இப்புத்தகம் மார்க்கம் சொல்வதைத்தானே சொல்கிறது இப்புத்தகம் என்று நினைத்து விட்டால் போதும். அப்படி நினைப்பவர்களுக்கு அவர்களின் இந்த வேஷம் தூண்டுகோலாகி அவர்களை நல்வர்கள் என்றும், நல்லதைத் தானே சொல்கிறார்கள் என்றும், அவர்களால்தான் மக்களில் பலர் தொழுகையாளி ஆனார்கள் என்றும் கூறிக்கொண்டு திரிகிறார்கள். இப்போது அடுத்து எழுதி இருப்பதைப் படியுங்கள். “யாராவது பார்த்தால் பார்த்து விட்டுப் போகட்டும். அதற்காக எந்த அமலையும் விட்டு விடவும் கூடாது” என்று தொடர்ச்சியாக தைரியமாக எழுதப்பட்டு இருக்கிறது அப்புத்தகத்தில். நன்றாக கவனியுங்கள்.

“எந்த அமலையும் (செய்யாமல்) விட்டுவிடக் கூடாதாம்” என்று எழுதி இருப்பதை நன்றாக கவனியுங்கள். எந்த அமலும் என்றால் என்ன அர்த்தம்?

மார்க்கத்தில் இல்லாததையும் செய்யலாமாம். அதாவது குர்ஆனும் ஹதீஃதும் கூறுவதற்கு மாற்றமாக இருந்தாலும் சரி, செய்யலாமாம். என்ன நெஞ்சழுத்தம்! இதையயல்லாம் படித்துவிட்டு படிக் காத பாமரர்களும், படித்த பரிதாபத்திற்குரியவர்களும், இறுதியாக, இறைக் கட்டளைகளை அமல் செய்வதாக எண்ணிக் கொண்டு, இறைக் கட்டளைக்கு புறம்பான எல்லா அமல்களையும் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். சதிவலை எப்படிப் பின்னப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இப்படியாக மூளைச் சலவை செய்யப்பட்டு இந்த வலையில் மாட்டிக் கொண்டதால் தான். கல்லூரி பேராசிரியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் என பலரும் இந்த ஜமாஅத்தை விட்டு வெளி வரமுடியாத மயக்கத்தில் சுகமாக ஆழ்ந்து கிடக்கின்றனர். இப்படிப்பட்டவர்களே வெளிவர முடியாதபோது, பாவம், பாமரர்கள் எப்படி வெளியே வரமுடியும்? மேற்கண்ட இவர்கள் அனைவரும் குர்ஆனைப் படித்து தெரிந்து கொள்ள துஆ செய்வோமாக.

மேலே கூறியுள்ள கருத்துக்களை அமல் களின் சிறப்புகள் ஆசிரியர், சர்வ சாதாரணமாக துளியும் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் எழுதி விட்டார். அல்லாஹ்வுக்கு எதிராக அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் உட்கார்ந்து கொண்டு, குர்ஆனைப் படிக்காமல் இந்த வீணான புத்தகத்தைப் படிக்கி றார்கள் என்றால் இதற்கு என்ன அர்த்தம்? அல்லாஹ்வும் மற்றும் அவனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் கூறியவற்றைப் பின்பற்றமாட்டார்களாம். இஸ்லாம் கூறுவதற்கு எதிராக இப்புத்தகம் கூறுவதைத் தான் பின்பற்ற வேண்டுமாம். வெட்கக்கேடு! இதனைக் கண்டிக்க வேண்டிய அரபிக் கல்லூரிகளின் நிலை யைப் பாருங்கள்.

முதல்வர் முதற்கொண்டு பல உஸ்தாத்கள் வரை இந்த ஜமாஅத்தின் ஆதரவாளர்கள். அல்லாஹ்வுடைய மஸ்ஜிது களை நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் ஜமாஅத்துக்களில் சிலரும் கூட ஆதரவாளர்கள். குர்ஆனைப் பற்றி எதுவுமே தெரியாமல் மக்களை இருக்கச் செய்யவும், குர்ஆனைப் படித்து தெரிந்துவிட்டால் இஸ்லாத்தில் நுழைந்து கொண்டு இஸ்லாத்தை கேலி செய்யும் எதிரிகள் இவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடுவார்கள் என்பதற்காகவும், (அசி) புத்தகத்தை மட்டும் பள்ளி வாசலில் நடைபெறும் தஃலிம்களிலும் வீடுகளிலும் படிக்கச் சொல்கிறார்கள் என்ற ரகசியத்தை, இப்போதாவது புரிந்து கொண்டு, அந்த புத்தகத்தைப் படிப்பதை இனியாவது தவிர்த்துவிட்டு, அகிலத்தாருக்கு அல்லாஹ் இறக்கி அருளிய குர்ஆனை தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் படித்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் எவ்வளவு அபத்தமானவர் கள், ஆபத்தானவர்கள் என்பதை, மேலே உள்ள இவர்களின் கருத்தை தெரிவிக்க (அசி) புத்தகம் ஆரம்பித்துள்ள வாக்கியத்தைப் பாருங்கள்.

“சூஃபியாக்கள் எழுதுகி றார்களாம்!” அல்லாஹ்வின் தூதர்தான் முன் மாதிரி என்று குர்ஆன் 33:21வது வசனம் கூறிக் கொண்டிருக்க, அமல்களின் சிறப்பு புத்தகமோ, “முன்மாதிரி” என அங்கீ காரம் கிடைக்காத ஷைத்தான்களையும், கண்ட கண்ட கழிசடைகளையும், “சூபியாக்கள் எழுதுகிறார்கள்” என்று டைட்டில் போட்டு விளம்பரப்படுத்துகிறது. உலகோர் பின்பற்றுவதற்காக அல்லாஹ் ஒரு தூதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிறகு, இந்த சூஃபியாக்கள் யார்? மனிதர் கள் அல்லாஹ்வைத் தொழ வேண்டும் என்பது அல்லாஹ்வின் விருப்பம், தொழக் கூடாது என்பது சூஃபியாக்களின் விருப்பம்.

இசை வேண்டாம் என்பது இஸ் லாத்தின் விருப்பம், இசை கூடும் என்பது சூஃபியாக்களின் விருப்பம். ­ரீஅத் இவர் களுக்கு வேண்டாமாம். மஃரிபத் தான் இவர்களுக்கு விருப்பமாம். மனைவி மக்களை அந்தரத்தில் விட்டு விட்டு, கஞ்சா போதையில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் இவர்கள்தான் சூஃபியாக்கள். இவர்கள் ஆன்மீக ஞானிகளாம். திருச்சியில் மிக முக்கிய பகுதியிலுள்ள ஒரு மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றிய இவர்களது பாஷையில் ஆலிம் அல்லது மவ்லவி நபர் ஒருவர், ஒரு ஹராமான மானக்கேடான காரியத்தை செய்து விட்டார். கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்.

விசாரணையில் அந்த நபர் குற்றவாளி என்பதற்கான நேரடி சாட்சியங்கள் கிடைத் தது. லுஹர் தொழுகைக்குப் பின் வசமாக மாட்டிக்கொண்ட அந்த மவ்லவி-ஆலிமிடம், பள்ளி முத்தவல்லி வினவியதற்கு, “அவுலியாக்கள் செய்யாததையா நான் செய்தேன்?” என்று கேட்டானே ஒரு கேள்வி! போட்டானே ஒரு போடு! விட்டாரா முத்தவல்லி? “அஸருக்கு வருவேன்; நீ இங்கே இருக்கக்கூடாது; பெட்டி படுக்கையை எடுத்துக்கிட்டு போயிரு” என்று தெளிவாக தீர்ப்பு கூறி விட்டு, “இந்த ஆளின் கணக்கை செட்டில் செய்து அனுப்பிவிடுங்கள்” என்று பொருளாளரிடம் கூறிவிட்டு ராஜநடையில் சென்று விட்டார் முத்தவல்லி. சபாஷ் முத்தவல்லி! இந்த லட்சணத்தில், “அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்வுக்கு பயப்படுபவர்களே கல்விமான்கள் (உலமாக்கள்)” என்று அல்லாஹ் தெரிவிக்கும் ஆயத்தின் இந்த அர்த்தத்தை தலைகீழாகச் செய்து, “அல்லாஹ்வுடைய அடியார்களில் உலமாக்கள் (கல்விமான்கள்) தான் அல்லாஹ்வை பயப்படுபவர்கள்” என்று துணிச்சலாக தவறான அர்த்தம் செய்து கொண்டு திரிகிறார்கள் சில மவ்லவிகள், மார்க்கம் இவர்களுக்கு விளையாட்டாய் போய்விட்டது.

மறுமையில் பரிதாபத்திற்குரிய இந்த பாவிகளுக்கு! இந்த மவ்லவிகள் கூறுவது உண்மையா னால் மேற்கண்ட இமாமும் அவரைப் போன்று ஹராம் செய்து பிடிபட்டு சீட்டு கிழிக்கப்பட்ட எத்தனையோ இமாம்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர் கள்தான் அல்லாஹ்வுக்கு பயப்படுபவர்களோ? இந்த தருதலைகளை அடையாளம் காண்பிப்பது எமது வேலை அல்ல; அது எமது நோக்கமும் அல்ல. ஏனெனில் தீர்ப்பு நாளில் அதிபதியாகிய அல்லாஹ் மட்டுமே தீர்ப்பு அளிப்பவன் என்பதை நாம் உறுதியாக ஈமான் கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் சம்பவங்களையும், மஹல்லா மற்றும் மஸ்ஜிதின் பெயரும், முத்தவல்லி, இமாம் ஆகியவர்களின் பெயர்களும் தவிர்க்கப்பட்டுள்ளன. அகில உலகிற்கும் அல்லாஹ் இறக்கி அருள் புரிந்திருக்கின்ற மேலான கண்ணியம் வாய்ந்த குர்ஆனையும், அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கொடுத்துள்ள ஹதீஃத்களையும் மட்டும் பின்பற்றி ஈருலகிலும் வெற்றிபெற பாடுபடுங்கள் என்றும், பிறரிடமும் உங்களால் முடிந்த அளவிற்கு நேரிய மார்க்கத்தைக் கூற பாடுபடுங்கள் என்றும் தப்லீக் ஜமாஅத்தினரை அன்புடன் அழைக்கின்றோம்.

Previous post:

Next post: