இறைவழியைப் பற்றிப் பிடித்து ஒழுகும் மக்கள் வாழும் இடங்களில் அமைதியும் பாதுகாப்பும் நிலவும்.

in 2008 மார்ச்

இறைவழியைப் பற்றிப் பிடித்து ஒழுகும் மக்கள் வாழும் இடங்களில் அமைதியும் பாதுகாப்பும் நிலவும்.

அமைதியும் பாதுகாப்பும் நிலவும் இடத்தில் வாழும்படி மனிதனுக்கு இறைவன் அறிவுறுத்துகிறான். அத்தகைய இடத்தில் கோபமும் சீற்றமும் மற்றும் தீய நடவடிக்கைகளும் அருகி விடும்; காரணம் அவை இறைவனால் தடை செய்யப்பட்டவை.

அவர்கள் வளமான நிலையிலும் வறுமையிலும் பிறருக்கு ஈந்து கொண்டிருப்பார்கள்; கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; (குற்றம் இழைத்த) பிற மனிதரை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் நன்னடத்தையுடையவர்களை நேசிக்கின்றான்.

(3:134)

அவர்கள் தவறானவையும் மானக்கேடானவையும் ஆன செயல்களைத் தவிர்ப்பார்கள். கோபமூட்டப்பட்டாலும் மன்னித்து விடுவார்கள். (42:37)

நபி முஹம்மது(ஸல்) அவர்களும், இறை நம்பிக்கையாளர்களைக் கோபத்தை அடக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்கள். தன் பலத்தால் பிறரை வெற்றிக் கொள்பவன் அல்ல உண்மையில் பலவான்; தான் கோபமூட்டப்படும் போது கோபத்தை அடக்கிக் கொள்பவனே உண்மையில் பலவான். (புஹாரி)

இறை நம்பிக்கையாளர்களை இறைவன் குர்ஆனில் இவ்வாறு வர்ணிக்கிறான். இறை நம்பிக்கையாளர்கள் இதற்கு மாறாக நடந்துக் கொள்ளாமல் இருக்க மிகுந்த கவனம் செலுத்துவார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்கு முயலுவதே இதற்கு காரணமாகும். தாங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் மனப்பான்மையிலும் மேற்க்கொள்ளும் ஒவ்வொர் நடவடிக்கையிலும் இறைவனைத் திருப்திப்படுத்தவே நாடுவார்கள். வெறும் நல்லொழுக்கங்களுக்கும் மேலான மிகச் சிறந்ததையே இறைவன் கோருகிறான். குர்ஆனில் பல வசனங்களில் இது வலியுறுத்தப்படுகிறது.

மிகச் சிறந்ததையே பேசும்படி என்னுடைய அடியார்களிடம் கூறுவீராக. (17:53)

தீமையை மிகச் சிறந்ததைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். (23:96)

நற்செயலும் தீயச் செயலும் சமமாகி விடா: (தீமையை) மிகச் சிறந்ததைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கொடிய எதிரியும் கூட உங்களுடைய நெருங்கிய நன்பராகி விடுவாார்.

(41:34)

எல்லோரும் குர்ஆனின் கொள்கையைப் பின்பற்றுகின்ற சூழ்நிலையில் ஒவ்வொருவரும் மிகச் சிறந்தவற்றையே நடைமுறைப்படுத்த முயல்வார்கள். அங்கே அமைதியும் நிம்மதியும் வாழ்க்கையின் இயல்பாகவே அமைந்துவிடும். கோபம் சண்டைகள், சச்சரவுகள் மற்றும் சீற்றம் யாவும் மறைந்து விடும். இறை நம்பிக்கையாளர்கள் இத்தகைய கொடூரங்களை மேற்க்கொள்ளத் துணியமாட்டார்கள். குடும்ப வாழ்க்கையிலோ, வணிகப் பறிமாற்றத்திலோ பிரயாணத்தின் போது நேரிடும் போக்குவரத்து நெருக்கடியிலோ பாதகமான செயல் விளைவுகள் அவர்களிடமிருந்து எழா; மற்ற மக்களிடம் காணப்பெறும் இத்தகையக் குறைபாடுகளை இறைநம்பிக்கையாளர்கள் வெறுத்துத் தவிர்த்துக் கொள்வார்கள்.

இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்படும்; சமுதாயத்தில் அமைதியான சூழ்நிலை இயல்பாக நிலவி வரும். இதற்கு முரணான சமுதாயத்தில் பதற்றமும் தொல்லைகளும் நிறைந்துக் காணப்பெறும் மார்க்கக் கோட்பாடுகளைப் பேணி வாழாத சமுதாயத்தில் பாதகம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்பரைத் தடுத்து நிறுத்த எவ்வித வழிவகையும் இல்லை. இத்தகையவர்கள் மாறுபடும் பல்வேறு மனநிலைக்கு ஆளாவார். தன்னுடைய ஆபாசங்களுக்கு உட்பட்டு அவற்றிற்கு ஏற்ப நடப்பார்கள். எதிர்பாராத வகையில் கோபமடைவார்கள். மற்றவரோடு தகாத முறையில் நடந்துக் கொள்வார். வன்முறையிலும் ஈடுபடுவார். யதார்த்தத்தில் சீற்றம் அடைவது தனி மனிதனின் அல்லது சமுதாயத்தின் மன உணர்வின் அல்லது அமைதியின்மையின் வெளிப்பான அடையாளமே ஆகும்.

முன்னர் கூறியதுப் போல் இத்தகைய மனநிலை தம்பதியரிடையே, நண்பர்களுக்கிடையே குடும்ப வாழ்க்கையிலும் வணிகப் பரிமாற்றத்திலும் அடிக்கடி எழுவதுண்டு. தான் விரும்பியவாறு யாவும் நிகழாத போதும், மனஅழுத்தம் அல்லது பதற்றம் எழும்போது தங்களின் நலன் பாதிக்கப்படும்போதும், எரிச்சல் ஊட்டப்பட்டு நிதானம் இழக்காதவர் வெகு சிலரே. இத்தகையோர் நிறைந்த சமுதாயத்தில் அமைதியாக வாழ்வது கடினமே. இத்தகைய சமுதாயத்தினர் மற்றவர்களின் உணர்வைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தாங்கள் கோபம் கொண்டு அதட்டியவர் சோர்வடைந்து, உறக்கம் கெட்டு, நோய்வாய்ப்பட்டு துன்புறுவார். எண்ணிப் பார்ப்பவர்கள் அதிகமில்லை. மக்கள் யாவரும் மனிதப் பிறவிகளே; தவறிழைப்பது இயல்பே. சின்னஞ்சிறு தவறுகளுக்காக அவர்கள் மீது சீற்றம் கொண்டு அவர்ளை அவமதிப்பது அவர்களோடு சண்டையிடுவதும் விவேகமுடைய செயல் அன்று. இறை நம்பிக்கையும் வழிபாடும் இல்லாத சமுதாயத்தில், அளவுக்கு மீறி வெந்துப் போன உணவும், கறைப்படிந்து விட்ட மேலாடையும் உணவகத்தில் உணவு பறிமாறத் தாமதாமாவதும் எல்லாம் சச்சரவில் ஈடுபட போதுமான முகாந்திரங்களாகும். இவற்றிற்க்கெல்லாம் நேர்மாறாக இத்தகைய சமுதாய மக்கள் அக்கிரமச் செயல்கள் தங்களைப் பாதிக்கவில்லையெனின் அவற்றைக் கண்டுக் கொள்வதே இலலை.

இஸ்லாமிய ஒழுக்க நெறி நிலை தடுமாறாத மனநிலையைத் தரும்:

மார்க்க நெறிகளைப் பற்றிப் பிடிப்பவர்கள் நிகழுபவை எல்லாம் இறைவனின் கட்டுப்பாட்டிற்க்குள்ளேயே நிகழ்கின்றன என நம்புகிறார்கள்; எனவே இறைவனுக்கு முற்றிலும் அடிப்பணிகிறார்கள். இந்த நம்பிக்கையூட்டும் உணர்வு அவர்களுக்கு ஆன்மீக உறுபாட்டைத் தருகிறது. நல்லதாயினும் கெட்டதாயினும் எந்த நிகழ்வும் அவர்களை நிதானம் இழக்கச் செய்வதில்லை. திடீரென எதிர்ப்பாராத எதிர்ச்செயல்களை மேற்க்கொள்ள மாட்டார்கள். உணர்ச்சி வசப்படுவதில்லை; எந்த சூழ்நிலையிலும் நிதானமாக விவேகமுடன் நடந்துக் கொள்வார்கள். எனவே அவர்கள் எப்போதும் அவர்கள் நம்பத்தகுந்தவர்களாகத் திகழ்கின்றார்கள். குறிப்பாக இடர்ப்பாடுகளும் தொல்லைகளும் நேரும்போது விவேகமுடன் எச்சரிக்கையுடன் நடந்துத் தங்களுக்கும் தங்களைச் சூழ்ந்திருப்பவர்களுக்கும் நேரவிருக்கும் இழப்புகளைக் குறைக்க முயல்கின்றனர். இறைவன் மனித வர்க்கத்திற்கு வழங்கிய வழிகாட்டியாக குர்ஆனால் அறிவுறுத்தப்பட்ட இறைநம்பிக்கையாளர்கள் தங்கள் நடத்தையிலும் மனப்பான்மையிலும் குர்ஆனின் ஒழுக்க நெறிகளே பிரதிபலிக்கச் செய்வார்கள். இறைவனின் ஆணைகளுக்கு மிகவும் கவனத்துடன் அடிப்பணிவதாலும் இறைவனுக்கு அஞ்சி நடப்பதாலும் அவர்களுடைய விழிப்புணர்வும் புரிந்துக் கொள்ளும் திறனும் சிறப்படைகின்றன. எனவே இவர்கள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கும் திறன் உடையவர்களாகின்றனர். மிகச் சிறந்த நடத்தையும் சரியான நேரான தீர்வு காணும் வாய்ப்பும் உடையவர்களாகின்றனர்.

இத்தகைய பண்புகள் எல்லாம் அருளப் பெற்ற இறைநம்பிக்கையாளர் பீதியோ, துக்கமோ, தளர்வோ, சோர்வோ அடைவதில்லை. தனக்குப் பாதகமாகத் தோன்றும் நிகழ்வுகளால் நிலை தடுமாறாமல் விவேகமுடன் நடந்துக் கொள்கிறார். இன்னல்களையும் தொல்லைகளையும் நம்பிக்கை இழக்காமல் எதிர்க் கொள்வார். மிகுந்த இடர்ப்பாடு நிகழ்ந்த சூழ்நிலையிலும் மக்களுடன் நயமாக பேசி பொறுமையுடன் நடந்துக் கொள்வார். இது நிச்சயம் பக்குவம் மிகுந்த நம்பகமான நடத்தையின் அடையாளமாகும். நிகழ்பவை அனைத்தும் இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டே நிகழ்கின்றன எனும் உள நம்பிகையின் காரணமாக இறை நம்பிக்கையாளர் கீழ்வரும் குர்ஆன் வசனத்தை எப்போதும் நினைவில் இறுத்தியவராக விளங்குகிறார்.

“பூமியில் அல்லது உங்களுக்கு நேரக்கூடிய எந்தத் தொல்லையும் அல்லது எந்த இடர்ப்பாடும் அது நிகழ்வதற்கு முன்பே ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. இது நிச்சயமாக இறைவனுக்கு மிக எளிதானது. உங்களுக்கு நேருவதைப் பற்றி நீங்கள் துக்கம் கொள்ளாமலிருக்கவும் உங்களுக்கு அருளப்பட்டதைப் பற்றிப் பெருமிதம் கொள்ளாதிருக்கவுமே (இந்த ஏற்பாடு) பெருமிதம் கொள்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை. (57:22,23)

மார்க்க நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகாதவர்கள் இந்த உண்மைகளை உணராமல் எப்பொழுதும் கவலையும் பயமும் நிம்மதியின்மையும் அடைந்து துன்புறுகிறார்கள். பதற்ற நிலை காரணமாக மனநிலை தடுமாறி உணர்விளந்து விடுகிறார்கள். புறத்திலிருந்தே நோக்குபவர்க்கு இவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாகத் தோன்றும். இத்தகைய மக்கள் எப்பொழுதும் தங்கள் மனநிலையில் துன்புறுத்தும் மாற்றங்களை அனுபவிப்பார்கள். மகிழ்ச்சியடையும் போது கண்ணீர் விட்டு அழுவார்கள். அவர்களை மகிழ்ச்சியூட்டுவது எது? துன்பத்தில் ஆழ்த்துவது எது? என்பதை ஊகிக்க முடியாது. வெகு எளிதில் மனந்தளர்ந்து விடுவார்கள். பெரும் சோர்வுக்குள்ளாகி இருப்பதாக வெளிப்படையாக சொல்லத் தயங்கவும் மாட்டார்கள். அவ்வபோது தற்கொலை செய்துக் கொள்ள நினைப்பார்கள். முயற்சியும் மேற்கொள்வார்கள். இவர்கள் தங்களுடைய நடத்தையை மட்டுப்படுத்த மாட்டார்கள். எது சரி எது தவறு என அறியமாட்டார்கள். எது அறிவுப்பூர்வமானது எது விவேகமற்றது என்றும் தெரியாது. நேரான மார்க்கம் வரையறுத்துள்ளவை பற்றி இவர்களுக்கு தெரியாததே இதற்கு காரணம்.

மார்க்கம் பற்றி அறிவிக்கப்படாததால் இவர்கள் எதையும் இறைவனிடம் நம்பகமாய் ஒப்படைப்பதில்லை. இறைவனே அனைத்தையும் படைத்தான். யாவும் இறைவனின் நாட்டப்படியே நடந்தேறுகின்றன. அவை நல்லவை ஆயினும் சரி அல்லது கெட்டவை ஆயினும் சரியே. யாவும் மனிதனை சோதிப்பதற்காகவே நிகழ்கின்றன. என்பவை எல்லாம் இறை நம்பிக்கையில் உட்படுபவை. மார்க்கக் கோட்பாடுகளைப் பற்றி அறியாமலிருப்பதன் காரணமாக, அவர்களுக்கு நேருபவை பற்றிய உண்மை நோக்கத்தை அவர்களால் உணர முடியவில்லை. எனவே அவற்றை எப்படிக் கணிக்க வேண்டுமோ அப்படி கணிக்க அவர்களுக்கு இயலவில்லை. எல்லா நிகழ்வுகளும் தற்செயலாக நேர்கின்றன ன நினைப்பதால் கவலைக்கும் பீதிக்கும் உள்ளாகி மனம் சோர்ந்து விடுகின்றனர். அதனால் தவறான முடிவுகள் எடுத்து பொருத்தமற்ற எதிர்ச் செயல்களை மேற்க் கொள்கின்றனர். தாங்கள் மேற்க்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்காகவும் வருந்துகின்றனர்.

எந்தக் காரியத்திற்கும் நல்ல முகாந்திரத்தை நிர்ணயிக்க ஆற்றில் அற்றவர்கள்; அவர்கள் விருப்பப்படி எல்லாம் நடந்தேறும் போது மட்டற்ற மகிழ்ச்சிக்கும் திடீர் உணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள். திடீரென திமிருடனும் ஆணவத்துடனும் நடந்துக் கொள்கின்றனர். மகிழ்ச்சியில் திழைக்கும் போது தன் கட்டுப்பாட்டை இழந்து இழிவாகவும் கொடுரமாகவும் நடந்துக் கொள்கிறார்கள். எதிர்பாராத செயல்களில் ஈடுபடுகிறார்கள். திடீரென்று கத்துவார்கள். அல்லது மகிழ்ச்சிப் பொங்க கூச்சலிடுவார்கள். கோபம் வந்தால் மனதில் தோன்றியதை மறைக்காது சொல்வார்கள். வன்முறை செயலும் மேற்க்கொள்வார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளும் பழக்க வழக்கங்களும் எல்லாம் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட மட்டத்திலுள்ள மக்களை மட்டும் சார்ந்தவை அல்ல. மார்க்க ஒழுக்க நெறிகள் கடைப்பிடிக்கப் படாத சமுதாயங்களில் முதிர்ந்த அனுபவமிக்கவர்களும், கல்வியாளர்களும், விவேகமுடையவர்களும் கூட கட்டுப்பதடு இழந்து தங்கள் ஆற்றலை துர்ப்பிரோகம் செய்து தீய நோக்கங்களுக்குப் பயன்படுத்துவார்கள். இத்தகையவர்கள் தாங்கள் விரும்பியவை நிறைவேறாத போதும் இழிவாகச் செயல்படுவது அல்லது வன்முறை செயலில் இறங்குவது சாதாரணமாக காணப்பெறும் நிகழ்வுகள் தாம்.

மூலம் : ஹாரூன் யஹ்யா

தமிழாக்கம்: H. அப்துல் ஸமது, இன்ஜினியர்.

Previous post:

Next post: