இஸ்லாத்தின் எச்சரிக்கை

in 1992 ஏப்ரல்,பொதுவானவை

அபூஅஹ்மத். பொட்டல் புதூர். (கேம்ப் K.S.A)

முகல்லிது முல்லாக்கள்
இட்டுக்கட்டப்பட்ட-பலவீனமான செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் சுய சிந்தனை இல்லாமல்
அவைகளை நபிமொழி என்று நம்பியும் ஆதாரப்புர்வமான நபிவழிச் செய்திகளுக்கு அர்த்தம்
என்ற பெயரில் பல அனாத்தங்களைச் சொல்லியும் மத்ஹபை நியாயப்படுத்தி மக்களை ஏமாற்றி
வந்தார்கள்! வருகிறார்கள்!!

அல்முபீன் மாத இதழ் “இன்னும் எங்கள்
கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (யாஸீன்:17) இந்த இறைவசனத்தை சொல்லி தன்னை மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு நபிவழியில்
நவீன கால இடைச்செருகலை செய்யத் தொடங்கியுள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான
கதை போய் சமீப காலமாக அல்முபீன் பின் நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
அல்முபீன் போக்குக்கு முகல்லிது முல்லாக்கள் எவ்வளவோ பரவாயில்லை எனலாம்.
முகல்லிதுகள் ஹதீஸ்களில் இட்டுக்கட்டி எதையும் சேர்த்துக் கொள்ளவில்லை. அல்முபீன்
ஆசிரியர் முல்லாக்களையெல்லாம் மிஞ்சி, பிப்ரவரி 92 அல்முபீன் இதழில் நபிமொழியில்
இடைச்செருகல் செய்து தன் கைவரிசையைக் காட்டியுள்ளார்!


நவீன கால நபிமொழி இடைச்செருகல்:

பிப். இதழில் “அனாச்சாரங்களிலிருந்து எச்சரிக்கை” என்ற அப்துல் அஸீஸின் அரபி மூலத்தைத் தமிழாக்கம் செய்த கட்டுரையில்
14-ம் பக்கம் கடைசி வரி 15ம் பக்கம் முதல் வரியில் எனக்குப் பின் நேர்வழியும்
நல்வழியும் பெற்ற நான்கு கலீபாக்களின் சுன்னத்-வழிமுறையையும் என்று ஹதீஸில் இல்லாத
நான்கு என்ற வார்த்தையை திட்டமிட்டுத் திணிக்கப்பட்டிருக்கிறது. நபிமொழியின்
வாசகத்தைப் பார்ப்போம்! “வ ஸுன்னத்தில் குலஃபாயிர்ராஷிதீனல் மஹ்தியின தமஸ்ஸகூபிஹா”
(நூல்கள்!-அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ. இப்னுமாஜ்ஜா, இன்னும் மிஷ்காத்) இதில்
நான்கு என்ற வார்த்தையை (இர்பாழ் பின் ஸாரியா(ரழி) சொல்லும் நபிவழியை) எந்த
நூலிலிருந்து பெற்றார் என்பதை ஆதாரப்புர்வமான செய்தியாளர்களின் வரிசையுடன்
தெளிவுபடுத்துமாறு அல்முபீன் ஆசிரியரைக் கேட்டுக் கொள்கிறோம்!


“திட்டமிட்ட திணிப்பு”

மேலும் அந்த ஹதீஸில் வார்த்தையில் வித்தைகள் காட்டி மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இர்பாழ் பின்
ஸாரியா(ரழி) அறிவிக்கும் செய்தியை பாதியை சொல்லிவிட்டு ஹதீஸில் இல்லாத நான்கு
என்ற வார்த்தையை வலுப்படுத்துவதற்காக “ஈண்டு நான்கு கலீபாக்கள் என்று கூறப்படும்
நால்வரின் பெயர்கள் வருமாறு” என்று கூறி நான்கு கலிஃபாக்களின் பெயர் பட்டியலை இடையில்
நுழைத்து அதன்பின் ஹதீஸின் பிற்பகுதியை சொல்லப்பட்டிருக்கிறது. புதிதாகப் படிக்கும்
வாசகர்களுக்கு கலீஃபாக்களின் பட்டியலும் ஹதீஸில் அடங்கும் என்று காட்டவே இந்த
சொல்படி வித்தை செய்யப்பட்டிருக்கிறது!

“இன்னும் கேளுங்கள்”

ஹஜ்ரத், ஹஸரத் இது போன்ற பட்டங்களை
தாமாகவே வலிய நபிமார்களுக்கும், நபித்தோழர்களுக்கும், இன்னும் தாங்கள் மதிக்கின்ற
மனிதர்களுக்கும் அல்முபீன் சூட்டி வந்தது. இப்போது அந்தப் பட்டங்கள் ஹதீஸில் உள்ளவை
தான் என்று சொல்ல முன்வந்திருக்கிறது. 14-ம் பக்கத்தில் “இன்னும் ஸஹீஹ் முஸ்லிமில்
ஜாபிர்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்” ஜும்ஆத் தினத்தன்று ஹளரத் ரசூலுல்லாஹி(ஸல்)
அவர்கள் தங்கள் குத்பா பேருரையில் கீழ்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று
நபித்தோழர் ஜாபிர்(ரழி) அவர்கள் ஹளரத் ரசூலல்லாஹி(ஸல்) என்று சொன்னதாக நபித்தோழர்
மீது ஒரு பொய்!

நேர்வழிகளில் மிக்க மேலானது ஹளரத்
முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியே என்று தம்மைத்தாமே ஹளரத் முஹம்மது(ஸல்) அவர்கள்
சொன்னதாக நபி(ஸல்) அவர்கள் மீதே துணிந்து மற்றொரு பொய்! (தெளிவுக்கு பார்க்க.
I.A.C. வெளியீடு முஸ்லிம். ஹதீஸ் எண் 410)

“எவன் என் மீது வேண்டுமென்றே பொய்யைக்
கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை புகலிடமாக்கிக் கொள்ளட்டும்” இந்நபி
மொழியை எத்திவைக்கும் நபித்தோழர்கள் அனஸ், அலி, ஜுபைர், ஸலமா, அபூஹுரைரா(ரழி-அம்)
நூல். புகாரீ. ஹதீஸ் எண்கள் 106-110)

மேற்கண்ட நபியின் செய்திக்கு
நபித்தோழர்கள் எப்படி அஞ்சினார்கள்? என்பதைப் பார்ப்போம்.

இப்னு ஜுபைர்(ரழி) தனது தந்தையிடம்
நபி(ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை மற்ற நபித்தோழர்கள் அறிவிப்பது போல் தாங்கள்
அறிவிப்பதில்லையே என்று கேட்க நான் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்தே இல்லை என்றாலும்
என்மீது யார் பொய் சொல்கிறானோ அவன் ஒதுங்குமிடம் நரகம் தான் என நபி(ஸல்) அவர்கள்
சொல்ல நான் அஞ்சுகிறேன் என்று ஜுபைர்(ரழி) கூறினார்கள் (கருத்து) புகாரீ, ஹதீஸ் எண்.
107)


ஸைதுபின் அர்கம்(ரழி) அவர்களிடத்தில் எங்களுக்கு நபி(ஸல்)
அவர்கள் பற்றிய செய்திகளைச் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது “எங்களுக்கு வயதாகிவிட்டது மறந்து விட்டோம். நபி(ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளை அறிவிப்பது சாதாரண
விஷயமல்ல” என்று சொன்னார்கள். நூல்: ஜாமிஉப்னு அப்துல்பர்.


அனஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பற்றிய செய்திகளைக்
கூறிவிட்டு “அல்லது நபி(ஸல்) அவர்கள் சொன்னது போன்று” என்ற வார்த்தைகளையும்
சொல்வார்கள். நபி(ஸல்) அவர்கள் மீது பொய்யாக ஏதாவது சொற்கள் தம் நாவிலிருந்து
வந்துவிடுமோ என்ற அச்சத்தால் தான் அவ்வாறு சொல்வதாகச் சொன்னார்கள். நூல்: அஸ்ஸுன்னத் வமகானத்துஹா.

ஆக “மன் தஅம்மத அலய்ய கஃதிபன் ஃபல் யத
பவ்வஃ மக்அதஹு மினன்னார்” என்ற நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கு அஞ்சி ஹதீஸ்களில்
கூடக் குறைய வார்த்தைகள் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.


நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன்
கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (2:42)


குதிலல் ஃகர்ராஸுன்-பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். (51:10)

அல்லாஹ்வின், அவனது தூதரின்
எச்சரிக்கைகளை அல்முபீனுக்கு நினைவூட்டுகிறோம்.


“ஏனிந்த சரடு திரித்தல்”?

ஸலஃபுஸ்ஸாலிஹீன்-முன் சென்ற
நல்லடியார்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்ற முரண்பட்ட அகீதா- கொள்கையில்
அல்முபீன் பிடிவாதமாக இருக்கிறது.

இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தஹீம்-(இறைவா) நீ எங்களை
நேர்வழியில் நடத்துவாயக.

(1:5)


ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம்-நீ எவர்களுக்கு
அருள்புரிந்தாயோ அவ்வழி.  (1:6)

கைரில் மக்ஃதூபி அலைஹிம் வலஃதால்லீன்-உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறிதவறியோர் வழியுமல்ல.  (1:7)

தோற்றுவாய் அத்தியாயத்தின் இறுதி
மூன்று வசனங்களிலும் நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ அந்த நேரான வழியில்-நெறி தவறி
நடந்து உன் கோபத்துக்கு ஆளாகியோரின் வழியில்லாத நேரான வழியில் எங்களை நடத்துவாயாக
என்றே பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு தான் பிரார்த்தனை செய்யுமாறு நமக்கு
அல்லாஹ் சொல்லித் தந்திருக்கின்றான். இதில் எவ்வழி கேட்கிறோமோ அந்த
நேர்வழியைத்தான் குர்ஆன் முழுவதிலும் நமக்கு இறைவன் தெளிவுபடுத்துகிறான். நீ
எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவர்களை எங்களுக்குக் காட்டு என்று இறைவன் நமக்குச்
சொல்லித்தரவில்லை. நெறி தவறி நடந்து உன் கோபத்துக்கு ஆளாகியவர்களை எங்களுக்குக்
காட்டிவிடாதே என்றும் அல்லாஹ் நமக்குச் சொல்லித்தரவில்லை. இப்படி இறைவன்
சொல்லியிருந்தால் ஸலஃபுஸாலிஹீன்களிலிருந்து இப்போது உள்ள நல்லடியார்கள் வரை நாம்
பின்பற்ற ஆதாரம் கொள்ளலாம். அல்லாஹ் அருள் புரிந்தவர்களின் நேரான வழியை
எங்களுக்குக் காட்டுவாயாக! என்றே கேட்கச் சொல்லுகிறான். திருமறை நெடுங்கிலும்
அந்த நேரான வழியைத்தான் மைல்கல் போன்று நாம் அடையாளமும் காட்டுகிறான்.
நபிமார்களைத் தவிர வேறு எந்த நல்லடியார்களையும் நமக்கு நேரிவழியின் அடையாளமாகக்
கொண்டு அவர்களைப் பின்பற்றினால் ஃபாத்திஹா அத்தியாயத்தில் “நீ எங்களை நேரான வழியில்
நடத்துவாயாக!” என்று இறைவன் நமக்குச் சொல்லித் தந்ததில் அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.


குல் இன்ன ஹுதல்லாஹி ஹுவல்ஹுதா-நிச்சயமாக அல்லாஹ்வின்
வழி-(இஸ்லாம்தான்) அதுவே நேர்வழி என்று (நபியே) சொல்வீராக. (2:120, 3:73)

1:5 வசனத்தில் நேர்வழியைக்
காட்டுவாயாக என்று நமக்குச் சொல்லித் தந்த இறைவன் “நிச்சயமாக நேர்வழியென்பது
அல்லாஹ்வின் வழியே ஆகும் என்றும் என்னுடைய வழிதான் நேரான வழி என்றும் பதிலையும்
சொல்கிறான். இங்கேயும் ஸலஃபுஸ்ஸாயி ஹீன்கள் தான் நேரான வழி என்று அடையாளம்
காட்டவில்லை. அப்படியானால் 1:5  வசனத்திற்கு முரண்படும்.

துஆ!   நீ எங்களை நேரான வழியில்
நடத்துவாயாக! (1:5)

பதில் : நிச்சயமாக அல்லாஹ்வின் வழியே
நேர்வழியாகும்!(2:120)

இதில் அல்லாஹ்தான் நேர்வழியாகும் என்று சொல்லாமல் அல்லாஹ் காட்டிய வழியே நேர்வழியாகும் என்றே
சொல்கிறான்.

வஃதஸிமூபிஹப்லில்லாஹி ஜமீஅன்-இன்னும்
நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
(3:103) என்றே அனைவருக்கும் கட்டளையிடுகிறான் இறைவன், ஏற்கனவே அல்லாஹ்வின் கயிற்றைப்
பிடித்தவர்களைத்தான் நாங்கள் பிடிப்போம் என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு
செய்வதேயாகும். அல்லாஹ்வின் கயிற்றைப் பிடித்த ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் அல்லாஹ்வின்
கயிற்றோடு அவர்கள் தொடர்புக் கொண்டிருப்பதால் அவர்களைப் பிடித்துத் தொங்கினால்
அல்லாஹ்வின் கயிற்றைப் பிடிப்பது போல்தான் என்ற முரண்பட்ட கொள்கையை
நம்புகிறார்கள். வலாதஃபர்ரகூ-நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் (3:103) தொடர்ந்து
நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் என்றும் இறைவன் எச்சரிக்கின்றான். அல்லாஹ்வின்
கயிற்றைப் பிடிக்காமல் அதைப்பிடித்து “கனெக்ஷன்” உள்ளவர்களை நாம் பிடித்தால் “நீங்கள்
பிரிந்து விடாதீர்கள்” என்ற எச்சரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை என்ற
முடிவுக்குத்தான் நாம் வரமுடியும். அல்லாஹ்வின் கயிற்றைத் தவிர வேறு எதைப் பற்றிப்
பிடித்தாலும் பிரிந்து சென்றதுக்கு சமம்.

“அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை)
நினைத்துப் பாருங்கள்” நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால்
பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்! இன்னும் நீங்கள் (நரக)
நெருப்புக்குழியின் கரைமீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான். (3:103)

மேற்கண்ட இறைவசனத்தை சற்று சிந்தித்துப் பார்த்தால் தெளிவடையலாம். பகைவர்களாய் இருந்தவர்கள் அன்பினால் இணைந்து
சகோதரர்களானது எதனால்? அல்லாஹ்வின் கயற்றைப் பற்றிப் பிடித்ததால்! நரக நெருப்பின்
விளிம்பில் இருந்தவர்கள் நரகில் விழாமல் மீண்டது எதனால்? அல்லாஹ்வின் கயிற்றைப்
பற்றிப் பிடித்ததால்!


(இறைவா!) நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக” (1:5) நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத்
தெளிவுப்படுத்துகிறான். (3:103).


ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் எதைப்பற்றிப் பிடித்துக் கொண்டதால் பகை நீங்கி அன்பினால்
பிணைத்து நரகத்திலிருந்தும் தப்பினார்களோ அந்த அல்லாஹ்வின் கயிறாகிய-அல்குர்ஆனையும் அதன் விளக்கவுரையாகிய அல்லாஹ்வின் தூதரையும் மட்டுமே நாம் பற்றிப்
பிடிக்க வேண்டும். (இது பற்றி விரிவான விளக்கம் “மீண்டும் ஓர் ஆய்வு” கட்டுரையில்
இடம் பெறுவதால் சுருக்கியுள்ளோம்) நாம் சொல்ல வருவது: ஸலஃபுஸ்ஸாலிஹீன்-முன்
சென்ற நல்லடியார்களைப் பின்பற்றலாம் என்பதற்கு தெளிவான இறைவசனத்தை எடுத்து வைக்க
முடியாமல் ஆதாரப்பூர்வமான நபிமொழி ஒன்றைக் கூட சமர்ப்பிக்க முடியாமல்
தர்க்கரீதியான வாதங்களுக்கும் தகுந்த பதில் தர முடியாமல் போகவே அல்முபீன் ஆசிரியர்
நபிமொழியில் சரடு திரிக்க ஆரம்பித்துள்ளார்!


(நபியே) கூறுவீராக சத்தியம் வந்துவிட்டது. அன்றியும்
பொய் எதையும் புதிதாக செய்வதுமில்லை இனிச் செய்யப் போவதும் இல்லை! (34:49)

பொய்யால் எதையும் சாதித்து விட
முடியாது என்று இறைவன் கூறுகிறான்! வெறும் அரசியல் நோக்கத்திற்காக ஹிஜ்ரி 40-ம் ஆண்டிற்குப் பின்தான் நபிமொழியில் இடைச்செருகலைக் கலந்தனர். இதன் சக்தி இஸ்லாத்தின்
அடிப்படை வரை ஊடுருவி அதனால் முஸ்லிம்கள் பிளவுபட்டனர் என்பது உண்மைதான். ஆனால்
இறைவன் அப்படியே விட்டு விடவில்லை. நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும்
இருக்கின்றோம். (15:9) என்றூ கூறி அல்லாஹ் சத்திய
நெறிநூலின் விளக்கவுரையாகிய
நபி(ஸல்) பொன்மொழிகளில் அசத்தியத்தைக் கலக்க அனுமதிப்பானா? இல்லை!

அந்தந்தக் காலக் கட்டத்தில் இறைவன் தான் நாடிய அடியார்களைக் கொண்டு பொய் மொழிகளை களையெடுக்காமல் விட்டு வைக்கவில்லை.
தாய் தன் பிள்ளையை அடையாளம் கண்டு கொள்வது போல் உண்மை நபிமொழிகளை ஒரு உண்மையான-இஸ்லாத்தின் அடிப்படையைத் தெரிந்து கொண்ட முஸ்லிம் தெளிவாக அடையாளம் கண்டு
கொள்வான். அந்த அளவுக்கு நபிமொழிகள் அசத்தியத்திலிருந்து பிரித்து ஹதீஸ்
பெட்டகங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காலத்திலும் இடைச்செருகல்
செய்வார்கள் எந்த ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் ஹதீஸை புனைந்து கூறுகிறார்களோ?

இர்பாழ்பின் ஸாரியா(ரழி) அறிவிக்கும் ஹதீஸின் பொருள் இதுதான். எனது வழிமுறையையும் எனக்குப்பின் எனது ஸுன்னத்தைக்
கடவாய்ப்பற்களால் கவ்விப்பிடித்து நேர்வழி சென்ற கலீஃபாக்களின் வழி முறையையும்…..
இந்த ரஸூலுல்லாஹ்வின் கட்டளைப்படி நேர்வழி சென்ற எல்லா கலீஃபாக்களும் அடங்குவர்.
அல்முபீன் ஆசிரியரின் நான்கு என்று கலீஃபாக்களின் பட்டியல் படி பார்த்தால் அதன்
பின் வந்த கலீபாக்கள் நேர்வழி பெறவில்லை என்று சொல்ல வருகிறாரா, நபி(ஸல்)
அவர்களுக்குப் பின் இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றை சொல்ல நேர்ந்தால் முதல் நான்கு
கலீஃபாக்களைப் பற்றிச் சொல்லாமல் எந்தச் சரித்திரமும் எழுத முடியாது. இன்னும்
நபி(ஸல்) அவர்களால் சுவனத்தைக் கொண்டு வாழ்த்துக் கூறப்பட்ட 10 பேரில் நான்கு
கலீபாக்கள் முதன்முறையாக இடம் பெறுகிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம். அதன்
பின் வந்த கலீபாக்கள் நேர்வழி பெறவில்லை அல்லது நேர்வழி பெற்றார்கள் என்ற ஞானம்
இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. நபி(ஸல்) அவர்கள் பொதுவாக நேர்வழிச் சென்ற
கலீஃபாக்களின் வழிமுறையையும் என்று எல்லா கலீஃபாக்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதில் நான்கு என்று அளவு படுத்த யாருக்கும் உரிமை இல்லை! நமக்கு அளவுகோல் “நேர்வழி
ஒன்று தான், தவிர கலீஃபாக்கள் அல்ல! அதே ஹதீஸில் “கருப்பு இனத்தைச் சேர்ந்த அடிமை
ஒருவர் உங்களுக்கு தலைவனாக வந்தாலும் அவருக்குக் கீழ்படியுங்கள்” என்றும் நபி(ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்! இங்கேயும் நமக்கு “நேர்வழி” தான் அளவுகோல். இதை மற்றொரு
ஹதீஸ் மூலம் தெளிவு பெறலாம்!


“பாவத்தைக் கொண்டு ஏவப்படாதவரை தன் விருப்பு வெறுப்புக்கு
இடம் கொடாமல் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும். பாவத்தைக் கொண்டு ஏவப்பட்டால்
செவிசாய்க்க வேண்டாம்.


(கருத்து நூல் : புகாரீ, பாடம் :தலைமைத்தனம்)

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவிக்கும் மேற்கண்ட செய்தியின் மூலம் கட்டுப்பட வேண்டுமென்பது நேர்வழிக்கு
மட்டுமேயல்லாது கலீஃபாக்களுக்கோ தலைவர்களுக்கோ அல்ல என்பதை வெள்ளிடை மலையாக
அறிந்து கொள்ளலாம். முகல்லிதுகளின் தவறான கருத்தை அப்படியே வாந்தி எடுத்துள்ளார்
அல்முபீன் ஆசிரியர்.


“வாஸிதா”

அல்முபீன் ஆசிரியர் அரபியில்
உள்ளதை அப்படியே தமிழில் சொல்லும் வெறும் “வாஸிதா” தான் என்பதை மேலும் நிரூபிக்க
அரபு நாட்டு அறிஞர் அப்துல் அஸீஸின் அரபு மூலத்தை மொழியாக்கம் செய்து
தந்திருக்கின்றார். ஹளரத் என்ற சொல்லை அப்துல் அஸீஸ் நிச்சயமாக ஜாபிர்(ரழி)
அறிவிக்கும் ஹதீஸில் சொல்லியிருக்க மாட்டார்கள். ஹளரத் என்ற வாாத்தையை அல்முபீன்
ஆசிரியர் நுழைத்து தான் வாஸிதாவுக்கும் லாயக்கில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

நாளை இறைவனின் சந்நிதானத்தில் “நான்
வெறும் வாஸிதாவாகத்தானிருந்தேன்” என்று
சொன்னால் இறைவன் விட்டுவிட மாட்டான். அதுவும் கற்றறிந்த மதனி இவ்வாறு சொன்னால்
லேசில் விட்டுவிட மாட்டான் என்பதை உணர்ந்து இனியேனும் ஒலிவாங்கி ஒலிப்பெருக்கியாக
இருக்காமல் சுயசிந்தனையை இயக்க அல்முபீன் பரிசீலனைக்குழு மவ்லவிகளும், ஆசிரியர்
முயலுக்கு மூன்று கால் என்று சொன்னால் இல்லை முயலுக்கு நான்கு கால்கள் என்று
உண்மையை எடுத்துச் சொல்ல உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும். விழிப்பார்களா?
பொறுத்திருந்துப் பார்ப்போம்! அல்லாஹ்வே நேர்வழி காட்டவேண்டும்.

Previous post:

Next post: