நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்! (10)

in பகுத்தறிவாளர்களே!,பொதுவானவை

இஸ்லாமிய இறை நம்பிக்கை!

 இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்க நெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம்.

இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் கொள்கிறானா? என்பதை ஆராய்வோம்.

தொழுகை :
ஒரே இறைவனை மட்டும் ஏற்று முஸ்லிமாகி விட்ட ஒருவரின் முன்னுள்ள அடுத்த பிரதான கடமை தொழுகையாகும். ஐங்கால தொழுகையில்லாத ஒருவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் உரிமையை இழக்கிறான். முஸ்லிம் என்றால் அதற்குரிய பிரதான அடையாளமே தொழுகைதான். ஆயினும் எப்படியோ இஸ்லாமிய சமுதாயத்திற்குள்ளும் புகுந்து கொண்டுள்ள புரோகிதர்கள், அந்தத் தொழுகையில் இவர்களாக பல வீணான விதிகளை அமைத்துக் கொண்டு செயல்படுத்தி வருவதால் எளிதாக உள்ள தொழுகை மிகக் கஷ்டமான ஒரு செயலாக உருமாற்றப்பட்டுள்ளது. அது ஒரு வெறும் சடங்காக ஆக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பான்மையினர் அந்த ஐங்கால தொழுகையை விட்டுவிட்டு தங்களை முஸ்லிம்கள் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். தொழுகை இல்லாதவர்களை அல்லாஹ் முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் போதிய சான்றுகளாக இருக்கின்றன.

நபி வழியில் அமைந்துள்ள  தொழுகை நிறைவேற்றுவதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு, அது மனிதனின் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களை அகற்றி, மானக் கேடான – பாவகரமான செயல்களை விட்டும் அவனைப் பாதுகாக்கிறது. இவ்வுலகில் மனிதன் மனிதனாக வாழ ஐங்கால தொழுகை அவனைப் பக்குவப்டுத்துகிறது. இன்று முஸ்லிம் சமுதாயத்திலுள்ள பெரும்பான்மையினர் மூட நம்பிக்கைகளிலும், பாவகரமான செயல்களிலும், மனித சமுதாயத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் காரியங்களிலும் மூழ்கியுள்ளதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் ஐங்கால தொழுகையை நிறைவேற்றாமல், அதில் பொடு போக்காக இருந்து வருவதுதான். மற்ற மதவாதிகளைப் போல முஸ்லிம்களிலுள்ள பெரும்பான்மையினரும் மதவெறி கொண்டு மனித அமைதிக்குப் பங்கம் விளைவிக்கத் துணிவதற்குக் காரணம் ஐங்கால தொழுகையைக் கடைபிடிப்பது கொண்டு அவர்கள் அடைந்து கொள்ள வேண்டிய மனித அந்தஸ்தை அடைந்து கொள்ளத் தவறியதுதான்.

மனிதன் மனிதனாக வாழும் பக்குவத்தை ஐங்காலத் தொழுகை தரவேண்டுமென்றால் அது இறைவனால் வழிகாட்டப்பட்டு நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்ட முறையில் கண்டிப்பாக அமைந்திருக்க வேண்டும். மனித அபிப்பிராயங்கள் நுழைக்கப்பட்டு மனிதர்களாக உண்டாக்கிக் கொண்ட தொழுகை முறைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டா, மனிதப் பக்குவத்தையும் தரமாட்டா. இந்த மறுக்க முடியாத உண்மைகளை- மனித நேயத்தை வளர்க்கும் பண்பாடுகளை ஒருகால் நாஸ்திகர்கள் ஏற்க மறுக்கலாம். எனவே அவர்களும் மறுக்கமுடியாத ஐங்கால தொழுகைகளின் உலக ஆதாயங்களை மட்டும் அறியத் தருகிறோம். சிந்தித்துப் பார்க்கட்டும்.

ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு முன் நீரினால் ஒளூ செய்வது கொண்டு ஒரு தொழுகையாளி தனது உறுப்புகளில் அசுத்தம் சேர வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொள்கிறார். இது அவரது ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுப்பதை நிச்சயமாக நாஸ்திகர்கள் மறுக்க முடியாது. அதல்லாமல் தொழுகையில் கடைப்பிடிக்கப் படும் செயல் முறைகள் மனித உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் தேகப்பயிற்சி முறையில் அமைந்திருப்பதையும் நாஸ்திகர்களால் மறுக்க முடியாது. மதவாதிகளால் உருவாக்கப் பட்டுள்ள  உடல் அசைவின்றி அமைதியாக  ஓரிடத்தில் அமர்ந்து நிஷ்டையில் மூழ்குவதை இஸ்லாம் வழிபாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐங்கால தொழுகைகள் மனித உள்ளத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும், வலுவையும் தருகின்றன என்பதை நடுநிலையாளர்கள் மறுக்க முடியாது.

தமிழகத்தில் நாஸ்திகம் பரவக் காரணம்
தமிழகத்தில் நாஸ்திக வாதம் பரவுவதற்கு அடிப்படைக் காரணமே மக்களிடையே காணப்படும் ஜாதி வேற்றுமைகளும், தீண்டாமையுமேயாகும். கடவுளின் பெயரால் மக்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி ஹரிஜனங்களை உயர் ஜாதிக்காரர்கள் (மனிதனை மனிதனே இழிவுபடுத்தும் சாதி வேற்றுமை) கொடுமைப்படுத்தும் மனித நேயத்திற்கு முரண்பட்ட கொடுஞ்செயலை சகிக்க முடியாமைதான் தமிழகத்தில் நாஸ்திகம் வளரக் காரணமாயிற்று. ஹரிஜன மக்கள் கோவில் பூசாரிகளாக ஆவது ஆகாத செயல் என்பது ஒரு புறமிருக்க அவர்கள் கோவிலுக்குள்ளே நுழைவதும் அனுமதிக்கப்படாத செயலாக இருந்து வருகிறது. ஆனால் அந்த ஹரிஜனங்களில் ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டால், ஹரிஜன் என்ற (கீழ் சாதிக்காரன்) நிலைமாறி பள்ளியினுள் நுழைந்து மற்ற முஸ்லிம்களோடு தோளோடு தோள், காலோடு கால் இணைந்து நின்று தொழும் சம அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கிறார். அவர் முன் வரிசையில் நின்று தொழும் நிலையில் சுஜூது செய்யும்போது அவரது கால்கள் இருந்த இடத்தில் பின் வரிசையில் நின்று தொழும் ஒரு செல்வாக்குள்ள பெரும் பணக்கார பரம்பரை முஸ்லிமீன் நெற்றி படும் நிலையைக் காண முடியும்.

அதாவது தொழுகை மனித உள்ளங்களை ஒன்றுபடுத்தும் ஓர் உன்னத சாதனமாக அமைந்துள்ளது. அந்த ஐங்கால தொழுகைகளை தொழாமல் இருப்பதால் தான் இன்று பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயத்தவர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் பிளவுபட்டு சீரழிந்து வருகின்றனர். மற்றவர்களால் இவர்கள் மீது குதிரை சவாரி செய்ய முடிகிறது. பட்டும் புத்தி வராத முஸ்லிம்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

வேறு எங்கும் பார்க்க முடியுமா?
இன்னும் ஒரு அதிசயத்தையும் நாஸ்திகர்கள் சிந்தித்து உணர வேண்டும். இஸ்லாத்தைத் தழுவிய ஒரு ஹரிஜன வகுப்பைச் சார்ந்தவர் மற்றவர்களுக்கு இமாமாக நின்று தொழவைக்கும் முறைகளை முறையாகக் கற்று கொள்வாரேயானால், அவர் பரம்பரை முஸ்லிம்களுக்கு முன் நின்று இமாமாக தொழுகை நடத்தும் வாய்ப்பையும் அடைந்து கொள்கிறார். அவர் அல்குர்ஆனைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொண்டதைச் செயல்படுத்துவதற்கும், தகுதி இருந்தால் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் இஸ்லாத்தில் தடையேதும் இல்லை. இந்த வகையில் மனிதர்களிடையே மதவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள  ஜாதி வேற்றுமைகளையும், ஏற்றத் தாழ்வையும் அகற்றி மனித சமுதாயமே சமத்துவ நிலையில் செயல்படும் அரிய வாய்ப்பை இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் பிரதான கடமையாக அமைந்துள்ள ஐங்கால தொழுகை பெற்றுத் தருகிறது என்பதை நாஸ்திகர்கள் மறுக்க முடியுமா?

ஆள்பவன் – ஆளப்படுபவன், ஏழை- பணக்காரன், கருப்பன்- வெள்ளையன், படித்தவன்- படிக்காதவன், உயர் ஜாதியான்- தாழ்ந்த ஜாதியான் போன்ற ஏற்றத் தாழ்வுகளையும், இன, மொழி, பிரதேசம், நாடு போன்ற பாகுபாடுகளையும் ஒழித்து மனிதன் என்றாலே ஓரினம், ஓரிறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டவன் என்ற சிந்தனையை வளர்த்து, சமத்துவ சமுதாயம் அமைய, ஒற்றுமை ஓங்க, சாந்தி நிலவ, தரணி சிறக்க இத்தொழுகை முறை வழிவகுக்கிறது என்பதையும் நாஸ்திகர்கள் சிந்திக்கக் கடமை பட்டவர்களாக இருக்கிறார்கள்.

பார்க்குமிடமெல்லாம் பட்டாளங்கள்
முஸ்லிம்கள் அனைவரும் ஐங்காலத் தொழுகைகளைத் தவறாது தங்கள் மஹல்லா (ஊர்) மஸ்ஜிதுகளுக்கு வந்து ஜமாஅத்தாக தொழுது வரும்போது, அந்தப் பகுதியில் ஒரு தளபதிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு சிறந்த படையே இருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்? இப்படி நாடு முழுவதும் ஆங்காங்கே படைகள் இருந்தால் எதிரிகளால் அவர்களை முறியடிக்க முடியுமா? எதிரிகள் தாக்கும் அபாயம் இருக்கிறது. எனவே படைவீரர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையோ, படைவீரர்களில் யாரும் விடுப்பில் செல்லக்கூடாது. விடுப்பில் சென்றுள்ளவர்கள் அனைவரும் உடன் படைக்கு வந்து சேரவேண்டும் என்ற அறிவிப்போ இன்றி எப்போதும் தயாராக இருக்கும் இப்படை போன்று வேறொரு படையை யாரால் காட்ட முடியும்? தினசரி ஐங்கால தொழுகைகளிலும் ஆஜராவது எவ்வித முன்அறிவிப்புமின்றி தயாராக இருக்கும் வாய்ப்பை அளிக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

ஆண்டுக்கொரு முறை பித்அத்தான மீலாது ஊர்வலம் நடத்தி மாற்றாரின் உள்ளங்களில் வீண் சந்தேகங்களையும், குரோத உணர்வையும் வளர்க்காமல், அன்றாட அனுஷ்டானத்தின் மூலம் விரோதிகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாமல், அதே சமயம் எதிரிகளின் தாக்குதல்களை எந்தச் சமயத்திலும் முறியடிக்கும் தயார் நிலையிலும் இருக்கும் வாய்ப்பை இத்தொழுகை முறை அளிக்கிறது. அதல்லாமல் அன்றாட நாட்டு நடப்பையும், மஹல்லா(ஊர்) நிலைகளையும் அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறியத் தரும் நல்ல சந்தர்ப்பத்தையும் அளிக்கிறது. இப்படி எண்ணற்ற உலகப் பலன்களையே தொழுகை மூலம் முஸ்லிம்கள் அடைந்து கொள்கிறார்கள். அதல்லாமல் தங்கள் எஜமானன் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனுக்கு அடிபணிந்து நடந்ததற்காக மறுமையில் அவர்கள் அடையப்போகும் பாக்கியங்களை ஏட்டில் எழுதி முடிக்க முடியாது.

அவர்கள் வீணர்களே!
இப்படி எண்ணற்ற பலன்களைத் தரும் தொழுகையை நிறைவேற்றுவதில், முஸ்லிம்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று யாரும் சொன்னால் அவர்களை வக்கிர புத்திக்காரர்கள் என்றே சொல்ல முடியும். மனித உடல் ஆரோக்கியத்திற்காக, குறைந்தது ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தூங்கியாக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறவர்கள், உள்ள ஆரோக்கியத்திற்காக சில மணி நேரங்கள் விளையாட்டுக்களிலும் பொழுது போக்குகளிலும் செலவழிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறவர்கள் உடல் ஆரோக்கியத்தையும், உள்ள ஆரோக்கியத்தையும் ஒருங்கே தரும் தொழுகையில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து வேளையும் சேர்த்து 1 மணி நேரம் செலவழிப்பதை வீண் முயற்சி என்பார்களேயானால் அவர்கள் வீணர்களே அன்றி வேறு யாராக இருக்க முடியும்.

நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதியை செலவிடுவதை நியாயபபடத்துகிறவர்கள், எவ்வித செலவுமின்றி அதைப் போன்றதொரு பயிற்சியை அளிக்கும் தொழுகையை கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் அறிவீனர்களாக மட்டுமே இருக்கமுடியும்.

ஆக முஸ்லிம்கள் தொழுகையைக் கொண்டும் நாஸ்திகர்கள் பெரிதாக நினைக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் பெறற்கரிய பேறுகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்கிறார்கள் என்பதே உண்மையாகும். நாஸ்திகர்கள் எண்ணுவதுபோல் முஸ்லிம்கள் ஏக இறை நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டாயக் கடமையான ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றுவதால் இவ்வுலகில் எவ்வித நஷ்டமும் அடைவதில்லை. மாறாக நாஸ்திகர்கள் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அழிந்துபோகும் இவ்வுலக வாழ்க்கையிலும் பெறற்கரிய பேருகளையே பெற்று வருகின்றனர் என்பதை விரிவாகப் பார்த்தோம். அதேபோல் இஸ்லாம் முஸ்லிம்கள் மீது விதித்துள்ள கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கொண்டு இணையில்லாத ஒரே இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதோடு இவ்வுலகையும் முறையாக அனுபவித்தே வருகின்றனர்.

ஜகாத்:
இஸ்லாம் விதித்துள்ள அடுத்த பெருங்கடமை ஜகாத்தாகும். செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை வருடாவருடம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. செல்வம் ஓரிடத்தில் மிதமிஞ்சி குவிந்து விடாமலிருக்க இஸ்லாம் வழி வகுத்திருக்கிறது. ஜகாத்தை முறையாக நிறைவேற்றும் ஒரு முஸ்லிம் இவ்வுலகில் தனக்குரியதை இழப்பதாக எண்ண முடியாது. தனக்குரியதை முறையாக அனுபவித்துக் கொண்டு இல்லாத ஏழைகளுக்குத் தனது செல்வத்திலிருந்து பகிர்ந்தளித்து ஆனந்தமடைகிறான். உலகில் ஒரு சாரார் வறுமையிலேயே வாடுவதும் பிரிதொரு சாரார் மிதமிஞ்சிய செல்வத்தால் ஆடம்பர வாழ்வு வாழ்வதும் நாஸ்திகம் பிறக்க ஒரு காரணமாகும். எனவே ஏழைகளுக்கு உதவும் எந்த முயற்சியையும் வீண் முயற்சி என்று எந்த நாஸ்திகரும் சொல்ல முடியாது. ஏழைகளுக்கும் அதேசமயம் செல்வந்தருக்கும் ஏற்புடையதான இதைவிட ஒரு உன்னத நடைமுறையை உலகம் தோன்றி இது நாள் வரை எந்த ஒரு மனிதனும், இயக்கமும், இஸமும் தந்துள்ளதாக எவரும் சுட்டிக்காட்ட இயலாது. பெர்னாட்ஷா கூறியது போல் இஸ்லாத்தை முறையாக செயல்படுத்த தவறும் முஸ்லிம்களைக் குற்றப்படுத்த முடியுமேயல்லாது, இறை கொடுத்த வாழ்க்கைநெறியான இஸ்லாமிய மார்க்கத்தைக் குறைகூற முடியாது.

நோன்பு:
இஸ்லாம் அடுத்து விதித்துள்ள பெருங்கடமை நோன்பாகும். வருடத்தில் குறிப்பிட்ட ஒரு மாத முழுவதும் சூரிய உதயத்திற்கு சுமார் 1 1/2 மணி நேரத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல், சுகிக்காமல் தனது இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது நோன்பாகும். உலகில் மக்களிடையே இடம்பெறும் பெரும் குற்றச் செயல்களுக்கு அடிப்படைக் காரணம் மேலே சொன்ன மூன்று காரியங்களில மனிதன் தனது இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமையேயாகும். இவற்றில் தனது இச்சையைக் கட்டுப்படுத்தும் பக்குவம் பெற்றவன் குற்றச் செயல்களிலிருந்து பெரும்பாலும் விலகி இருக்க முடியும் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த பயிற்சி முறையை வீண் முயற்சி, உலகை நஷ்டப்படுத்தும் செயல் என்று நாஸ்திகர்கள் கூற முடியாது. அதல்லாமல் நோன்பின் மூலம் மனிதனின் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைப்பதாக மருத்துவர்கள் சான்று பகர்கின்றனர். ஒரு செல்வந்தன் சகலமும் பெற்றிருந்தும் அந்த மாதத்தின் பகல்பொழுது முழுவதும் பசித்திருப்பதால், தாகித்திருப்பதால், ஏழைகள் பசியினால் அனுபவிக்கும் வேதனையை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும், அதன் மூலம் ஏழைகள் மீது இரக்கம் காட்டும் பண்பையும் நோன்பு வளர்க்கிறது. இங்கும் நாஸ்திகர்கள் எண்ணுவது போல் முஸ்லிம்கள் இவ்வுலகை நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக பேரின்பமும் பெரு வாழ்வுமே பெறுகின்றனர்.

ஹஜ் :
அடுத்து இஸ்லாம் விதித்துள்ள ஹஜ் கடமை, பரந்து விரிந்து கிடக்கும் உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களில் வசதியும், வாய்ப்பும் உடையவர்கள் வருடத்தில் ஒருமுறை உலகின் மையப்பகுதியான மக்காவில் கூடி தங்கள் சகோதர அன்பை வளர்த்துக் கொள்ளவும், உலக ஒற்றுமையை வளர்க்கவுமான வாய்ப்பையும் பெறுகின்றனர். மக்கள் மன சந்தோஷத்திற்காக உல்லாசப் பிரயாணங்கள் போவதை நாஸ்திகர்கள் மறுப்பதில்லை. அதனை வீண் வேலை என்று வர்ணிப்பதில்லை. உலகில் தங்கள் பங்கை அனுபவிக்கத் தவறி விடுகின்றனர் என்று சொல்லுவதில்லை. எனவே முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கொண்டு இவ்வுலகில் தங்களின் பங்கிலிருந்து எதனையும் இழப்பதில்லை. உலகை அனுபவிப்பதில் குறை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

இதேபோல் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான எந்தச் செயலும் அவர்களுக்கு இவ்வுலகில் எவ்வித நஷ்டத்தையும் தருவதாக இல்லை. அவர்களின் நியாயமான எவ்வித பங்கையும் இழப்பதாக இல்லை. சுருங்கச் சொல்லின் மனிதன் இவ்வுலக வாழ்க்கையை முறையாகவும், சரியாகவும், நேர்மையாகவும் முழுச் சுவையுடன் அனுபவிப்பதற்கு இஸ்லாம் கூறும் ஒரே இறை நம்பிக்கையோ, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் செயல்பாடுகளோ தடையாக இல்லை என்பதை நாஸ்திகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறோம்.

படைத்தவனே வழிகாட்ட வேண்டும்.
இங்கு ஒரு உதாரணம் கூறி விளங்க வைக்கலாம். குறைமதி படைத்த மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானக் கருவியை பிறிதொரு மனிதன் பயன்படுத்த முற்படும்போது, அதனைத் தயார் செய்தவனின் வழிகாட்டலை எவ்விதக் குறையும் இல்லாமல், தன் சொந்த யுக்தியை அதில் செலுத்தாமல் அப்படியே பின்பற்றும் போது அந்தக் கருவி எந்த நோக்கத்தோடு தயார் செய்யப்பட்டுள்ளதோ அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடிகின்றது. இதனை நாஸ்திகர்கள் மறுக்கமாட்டார்கள். அப்படியானால் நிறைமதி படைத்த இறைவன் படைத்த மனிதக் கருவியை குறைமதி படைத்த மனிதன் தன் யூகம் கொண்டு இயக்க முடியுமா? இதனை நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டும். இன்று உலகில் ஏற்பட்டுள்ள சர்வ நாசங்களுக்கும், குழப்பங்களுக்கும், அமைதியின்மைக்கும் குறைமதி படைத்த மனிதன் தானே தனது வாழ்க்கைத் திட்டத்தை அமைத்துக் கொண்டதேயாகும். மதங்களும், இஸங்களும் மனித யூகப்படி அமைந்தவையே! இவை மனித அபிப்பிராயத்தில் நலன் விளைவிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கினாலும் உண்மையில் நலன் விளைவிப்பவை அல்ல. இறைவன் படைத்த மனிதனின் வாழ்க்கை முறையை குறைமதி படைத்த மனிதன் அமைப்பது கொண்டு மனிதன் வெற்றி பெற முடியாது.

ஒவ்வொரு நபிக்கும் இறைவனிடமிருந்து நேர்வழி கொடுக்கப்பட்டது. நபிமார்கள் தங்கள் சொந்த மனித யூகத்தை மக்களுக்கு மார்க்கமாகப் போதிக்கவில்லை. இது விஷயத்தில் ஒவ்வொரு நபியும் மிக எச்சரிக்கையாக இருந்தனர். இதில் சிறிது தவறு இடம பெற்றாலும் இறைவன் உடனடியாக செய்தி(வஹீ) அனுப்பித் திருத்தினான். ஆனால் ஒவ்வொரு நபிக்கும் பின்னால் அந்த நபிமார்களைப் பின்பற்றியவர்கள் தங்கள் மனித யூகங்களை மார்க்கத்தில் புகுத்தி இறைவன் கொடுத்த ஒரே நேர்வழி பல மதங்களாக உருவெடுக்க வழி வகுத்துள்ளனர். இதனை நாஸ்திக நண்பர்கள் ஆழ்ந்து சிந்தித்து தவறு எங்கே இடம்பெற்றுள்ளது என்பதை உணர வேண்டும். அதாவது மனிதனின் வாழ்க்கை நெறியாக இறைவன் பல மதங்களைக் கொடுக்கவில்லை. இறைவன் கொடுத்தது ஒரே ஒரு வாழ்க்கை நெறியைத் தான். மனிதர்களே தங்கள் சொந்தக் கற்பனை கொண்டு பல மதங்களைத் தோற்றுவித்துள்ளார்கள். இறைவன் மனிதனிடமிருந்து ஏற்றுக்கொள்வது அவன் கொடுத்த வாழ்க்கை நெறியை மட்டுமே. இறைவன் கொடுத்த மறைவழி – நேர்வழி – மார்க்க நெறி எது? மனிதன் படைத்த மதவெறி எவை? என ஆய்ந்து பகுத்துணர்ந்து நேர்வழியை ஏற்றுச் செயல்பட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கடமைப்பட்டுள்ளனர்.

ஆணவம் கெட்டதே!
முஸ்லிம்கள் ஒரே இறை நம்பிக்கையால், அந்த ஒரே இறைவனது கட்டளைகளைச் செயல்படுத்துவதால், இவ்வுலகில் எவ்வித இழப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதை அறிந்தோம். இன்னொரு முக்கியமான ஒன்றையும் இங்கு நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். இறைவன் மீது பூரண நம்பிக்கை உள்ள ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு பெரியதொரு செயற்கரிய செயலைச் சாதித்தாலும், அது இறைவனின் அருட்கொடையால் ஆனது என அமைதி அடைகிறான். இங்கு பணிவு ஏற்படுகிறது. அகங்காரமோ, ஆணவமோ ஏற்படுவதற்கு வழியில்லாமல் போய் விடுகிறது. அகங்காரமும், ஆணவமும் மிகக் கெட்ட குணங்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். அதே சமயம் ஒரு நாஸ்திகர் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டால் அவர் மீதுதான் அவருக்கு முழு நம்பிக்கை இருக்குமேயல்லாது, தன்னை ஆட்டிப் படைக்கும் இறை சக்தி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. எனவே அவரிடம் அவரை அறியாமலேயே அகங்காரமும், ஆணவமும் குடிகொள்ளும் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது. ஒரு சாதனையின் முழுப் பொறுப்பும் தன்னைச் சார்ந்ததே, வேறு யாரும் கிடையாது என்ற மேல் எண்ணமே அவரை அகங்காரமும், ஆணவமும் கொள்ளச் செய்துவிடும். பின் எங்கே பணிவு ஏற்படும்?

நாஸ்திகர்களின் நம்பிக்கைப்படி இறைவனோ, மறு உலக வாழ்க்கையோ இல்லை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அதனால் ஆஸ்திகர்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இவ்வுலகில் எவ்வித நஷ்டமும் அடையவில்லை. அவர்களுக்குரியதை முறையாக அனுபவிக்கின்றனர். ஆனால் நாஸ்திகர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக இறைவன் ஒருவன் இருந்து, மறுமை வாழ்க்கையும் உண்டென்றால் அதனால் பெரும் நஷ்டம் அடையப் போவது நாஸ்திகர்களே என்பதையும் தெளிவாக விளக்கிவிட்டோம். எனவே இறை நம்பிக்கையற்ற நிலை இவ்வுலக வாழ்க்கையையும் பாதிக்கிறது மட்டுமில்லாமல் மறு உலகிலும் ஈடு செய்ய முடியாத பெரும் நஷ்டத்தை உண்டாக்கிறது. இதனை நாஸ்திகர்கள் உணரவேண்டும்.

நாஸ்திகர்களின் நல்லெண்ணம்!
நாஸ்திகர்களுக்கு நாஸ்திக எண்ணம் ஏற்பட அடிப்படைக் காரணமே மனித சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றேயாகும். மனித சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகள் அகன்று சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் அமைய வேண்டும். ஏழைகளின் இன்னல்கள் தீர்ந்து அவர்கள் இவ்வுலகில் சுபீட்சமாக வாழவேண்டும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் நிலை மாற வேண்டும். அதற்கு இடையூராக மதங்களின் பெயரால் மக்கள் அனுஷ்டித்து வரும் நம்பிக்கைகளும், செயல்பாடுகளும் அமைந்துள்ளன. கடவுளின் பெயராலேயே மதங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன.  எனவே கடவுளே இல்லை என்று நிலை நாட்டிவிட்டால் மதங்கள் அனைத்தையும் ஒழித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணமாகும். சமுதாய மேம்பாடு குறித்து அவர்களின் நல்லெண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. மனித சமுதாயத்தின்மீது அவர்களுக்குள்ள அக்கறையை நாம் மறுக்க முடியாது. மனித சமுதாயம் உய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே அவர்களின் இலட்சியம் என்பதிலும் ஐயமில்லை. அதன் காரணமாகத்தான் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள் எளிதாக நாஸ்திக வாதத்தால் கவரப்படுகிறார்கள். முறையான சிந்தனையற்றவர்கள் மட்டுமே மதங்களின் பெயரால் முன்னோர்களான மனிதர்களினால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளிலும், மூடச் சடங்குகளிலும் மூழ்குகின்றனர். இது வேதனைக்குரிய விஷயமே. அதே சமயம் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள நாஸ்திகர்கள் தங்களின் சிந்தனா சக்தியை முறைப்படுத்துவார்களேயானால் மனிதனால் உருவாக்கப் பட்டுள்ள மதங்களுக்கும் இறைவனால் கொடுக்கப்பட்டள்ள மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள முடியும்.

உலகிற்கு வழிகாட்ட முஸ்லிம்கள் முன்வரவேண்டும்!
நாஸ்திகர்களின் போக்கில் மாற்றம் ஏற்பட முஸ்லிம்களும் உண்மை முஸ்லிம்களாக வாழ முற்படவேண்டும். உலக மக்களுக்கு முஸ்லிம்கள் ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ வேண்டும். மாற்று மதத்தவர்கள் தங்களின் முன்னோர்களின் பெயரால் நடைமுறைப் படுத்தும் மூட நம்பிக்கைகளைப் போல் – மூடச் சடங்குகளைப் போல் இவர்களும் முன்னோர்களின் பெயரால் செயல்படுத்தும் செயல்களை விட்டும் விடுபடவேண்டும். முன்னய நபிமார்களின் நேர்வழி மனிதக் கரங்களால் கறைபட்டு பல மதங்களாக மாறியது போல் முழுமை பெற்ற இஸ்லாமிய நெறியும் மனிதக் கரங்களால் கறைபட்டு மதமாக பரிணமித்துள்ளது என்பதை உணர்ந்து திருந்த முன்வரவேண்டும். முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றாமல்- தக்லீது செய்யாமல் குர்ஆன், ஹதீஸை விளங்கிச் செயல்பட முன்வர வேண்டும்.

நாஸ்திக நண்பர்களின் சிந்தனைக்கு சில குர்ஆன் வசனங்கள்:
(மனிதர்களே) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். (7:10)

(நபியே!) நீர் கூறுவீராக! கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு (ப்பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (28:71)

கியாம நாள் வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்துவிட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள்( சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா? என்று கூறுவீராக! (28:72)

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான். (இரவு) நீங்கள் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான், இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (28:73)

கால்நடைகளையும் அவனே படைத்தான், அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள். (16:5)

அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும்போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்து விடும்போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது. (16:6)

மேலும், மிக்க கஷ்டத்துடனின்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன – நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன், அன்புமிக்கவன். (16:7)

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்:) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். (16:8)

இன்னும் நேர்வழி காட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது: (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன. மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்து விடுவான். (16:9)

அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான். அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது. அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன. (16:10)

அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம் (ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங் களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான்- நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு (த் தக்க) அத்தாட்சி இருக்கிறது. (16:11)

இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க) ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான், அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன-நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக்கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (16:12)

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பலவிதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள் போன்ற)வையுமாகும். நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள்கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. (16:13)

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான், இன்னும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள், (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு(அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (16:14)

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான், இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்). (16:15)

(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழிகாட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்), நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். (16:16)

இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக் கொண்டு வருபவையா கக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும். (30:46)

இன்னும் இரண்டு கடல்கள் சமமாக, ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது, மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் தேடிக்கொள்வதற்காக(நீங்கள் பிரயாணம் செய்யும்போது) கப்பல்கள் நீரைப் பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் -இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (35:12)

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர் சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம், மேலும், இந்நெறிநூலை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (16:89)

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்), அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான், ஆனால் நிராகரிப்பவர் களுக்கோ(வழிகெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள், அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன, அவர்களே நரகவாசிகள், அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (2:257)

Previous post:

Next post: