மனித உருவில் வானவர் ஜிப்ரயீல் (அலை)

in 2017 செப்டம்பர்

ஹதீஃத் ஆய்வு – 1
மனித உருவில் வானவர் ஜிப்ரயீல் (அலை)
Dr. அம்ரைனி

ஹிஜ்ரி 8ம் வருடம் நம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டு, மதீனாவை இஸ்லாமிய அரசின் தலைநகராக்கி அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அண்ணாரின் 61 வயதில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.

அதாவது நபி(ஸல்) அவர்களின் இவ்வுலக வாழ்வின் கடைசி  நாட்களில் சுமார் இரு வருடங்களுக்கு முன் மதீனத்து மஸ்ஜிதுக் நபவியில் பற்பல நபித் தோழர்கள் குழுமியிருக்க நிகழ்ந்த நிகழ்ச்சியிது.  இந்நிகழ்வு ஓர் அழகிய வீடியோ காட்சி போல ஹதீஃத் நூல்களில் பதிவு பெற்றுள்ளதை நீங்களே காணலாம். இதனை தன் தந்தை உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களிடமிருந்து தான் பெற்றதாக அவரது மகனார் இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார்கள். மேலும் அபூஹுரைரா(ரழி) அவர்களும் இதனை மெய்பித்து கூறுகிறார்கள்.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் தனது தோழர்கள் சுற்றி சூழ அமர்ந்திருக்கையில் ஒரு மனிதர் வருகிறார். அவர் வெண்ணிற ஆடையணிந்தவராக, கருத்த தலை முடிகள் அழகாக சீவியவராக (தலையில் தொப்பியோ, தலைப்பாகையோ இல்லை) வருகிறார். அங்கு குழுமியிருந்தவர்களுக்கு அவர் யார்? என்பதை அறிய முடியவில்லை. வெளியூர்காரர்  ஆனால் அவர் பிரயாணத்தில் வந்ததற்கான களைப்பு, தவிப்பு போன்ற எவ்வித அடையாளமுமில்லை. அவர் உடுத்தியிருந்த ஆடைகளில் எவ்வித அழுக்கோ, களங்கமோ இல்லை. மிகமிக தூய வெண்ணிற ஆடையணிந்த அந்த புதிய நபர் ரசூல்(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறியவராக, நேராக அவர் முன் சென்று அமர்ந்தார்.

நம் ரசூல்(ஸல்) அவர்கள் தொழுகையின் இருப்பில் அமர்ந்திருப்பது போல் தன் இரு கால்களை மடக்கி உட்கார்ந்திருந்தார்கள். அந்த நபரும் அதேபோல நபியவர்கள் முட்டியுடன் தன் முட்டி மோத அமர்ந்து, “”தன்னுடைய சில வினாக்களுக்கு விடையளிக்கும்படி வேண்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக விடை அளிக்க தயாரானார்கள்.

இஸ்லாம் என்றால் என்ன? என்ற முதல் கேள்வியை அந்நபர் கேட்க, நபி(ஸல்) அவர்கள்:
1.அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளில்லை, முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என சத்திய பிரமாணம் செய்தல்.2. தினசரி ஐவேளை தொழுகையை நிறைவேற்றல்.3. ஜகாத்  இறை வரி  செலுத்துதல்.4. ரமழான்  மாதம்  நோன்பு  வைத்தல். 5. ஆயுளில் ஒரு முறை “”ஹஜ்” செய்தல் என ஐந்து வி­யங்களை பட்டியலிட்டு விடையளித்தார்கள். உடனே அந்நபர் “”தாங்கள் சரியாக, உண்மையை கூறினீர்கள்!” என அங்கீகரித்தார்.

இதனை நேரில் கண்ட நபித்தோழர்கள், இவர் யார்? இவர் நபியவர்களிடம் விடை அறியாதவர் போல கேள்வியை கேட்டு விட்டு, சரியான விடையை நபியவர்கள் கூறியதும் “”சரியான, உண்மையானது” என அங்கீகரிக்கவும் செய்கிறாரே! இவர் யார்? என வியப்புடன் அவ்விருவருக்குமிடையில்  தொடரும் உரை யாடலை ஆவலுடன் கவனிக்கலானார்கள்.

அடுத்து வெண்ணிற ஆடை நபர், “”ஈமான் என்றால் என்ன?” என்ற இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.  உடனே  நபி(ஸல்)  அவர்கள் 1. அல்லாஹுவை நம்புதல் 2. வானவர்களை நம்புதல் 3. அல்லாஹ்வின் திருத்தூதர்களை நம்புதல். 4. அத்தூதர்களுக்கு அருளப்பட்ட வேதங் களை நம்புதல்.  5. உலக இறுதி நாளை நம்புதல். 6. நல்லது, தீயது, நன்மை, தீமையனைத்தும் அல்லாஹுவின் விதிப்படியாகும் என நம்புதல் என்று,

ஆறு வி­யங்களை  பட்டியலிட்டு பதிலளித்தார்கள். உடனே அந்நபர், “”தாங்கள் சரியாக, உண்மையை  உறைத்தீர்கள்”  என்றார். மீண்டும் குழுமியிருந்த நபித்தோழர்களிடைய வியப்பு! ஆர்வம்! வந்தவர் யார்? எப்படிப்பட்டவர்? என்பதை அறியாத ஆச்சர்யம் கலந்த குழப்பம்! இருப்பினும் நபியவர்கள் எவரிடமும் உரையாடும் போது இடையில் குறுக்கீடு செய்யக்கூடாது. (அல்குர்ஆன்: 49:2,3) என்ற இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு அனைவரும் தொடரும் உரையாடலை உன்னிப்பாக கவனிக்கலானார்கள். அடுத்து அவ்வெண்ணிற ஆடை நபர், “”இஹ்ஸான் என்றால் என்ன” என மூன்றாவது கேள்வியே  கேட்க, “”நபி(ஸல்)  அவர்கள்: நாம் அல்லாஹுவை நேரில் பார்ப்பது போல அவனுடைய ஆணைகளுக்கு கட்டுப் பட்டு வாழ்வதாகும். நாம் அவனை பார்ப்பது போன்ற உணர்வு வரவில்லையயனினும், அல்லாஹ்  நம்மைப் பார்த்துக் கொண்டிருக் கிறான். (CCTV System) “‘என்ற உணர்வில் செயல்படுதல்” என விளக்கமளித்தார்கள். உடனே அந்நபர், “”தாங்கள் சரியான உண்மையை அறிவித்தீர்கள்” என்றார்.

மீண்டும் நபித்தோழர்களிடையே வியப்பு! ஆச்சர்யம்! ஆர்வம்! அதிகமாகிறது. எவரும் அவ்வுரையாடலில் இடையூறு செய்யாமல் ஆர்வத்துடன்  பார்க்கலானார்கள்.

அடுத்து அவ்வெண்ணிற ஆடை நபர், “” உலக இறுதி நாள் எப்போது வரும்?” என்று நான்கா வது கேள்வியைக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அடக்கத்துடன், “”இக்கேள்வியை கேட்ட வரை விட அதிகமாக நான் அறியமாட்டேன்! எனக்கு தெரியாது” என விடையளித்தார்கள். ““சரியே! என அங்கீகரித்த அந்நபர் அடுத்து உலக இறுதி நாளுக்கான அடையாளங்கள் யாவை? என ஐந்தாவது வினாவை விடுத்தார்.” உடனே நபி(ஸல்) அவர்கள்: 1. வீட்டில் பணி புரியும் வேலைக்காரி அவ்வீட்டின் வாரிசை பெற்றிருப்பாள். 2. காலில் செருப்பு அணிய தெரியாதவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள். மக்களும் அவர்களை ஏற்று அடிபணிந்து நடப்பார்கள் என்றார்கள். உடனே அந்நபர், “”தாங்கள் சரியாக கூறினீர்கள்” என சொல்லி நபியவர்களிடமிருந்து விடை பெற்று  சென்றார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில், அந்நபர் மஸ்துந்நபவியிலிருந்து வெளியேறியதும் நம் இறைத் தூதர்(ஸல்) அவர்கள் தன்னை சுற்றி குழுமியிருந்த தோழர்களைப் பார்த்து, அவர்களின் ஆச்சரியம் வியப்பு கலந்த பார்வைகளைக் கண்டு “”வந்தவர் யார்?” என்று உங்களுக்கு தெரியுமா? என வினவினார்கள். நபித் தோழர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “”இல்லை எங்களுக்கு தெரியாது அல்லாஹுவும், அவனு டைய தூதர் மட்டுமே அறிவார்கள்” என பவ்யமாக  பதில்  தந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் உடனே, “”அப்போது தான் வெளியேறிய அந்நபரை அழைத்து வரும் படி ஆணையிட்டார்கள்” உடனே சில நபித் தோழர்கள் வேகமாக ஓடி வெளியே தேடினார்கள், சிலர் குதிரை, ஒட்டகங்களில் ஏறி ஓடி சென்றார்கள். எவரது கண்ணிலும் அவ்வெண்ணிற ஆடை நபர் தென்படவே இல்லை. தங்களது  தேடும் முயற்சியில் தோல்வியுற்ற நபித்தோழர்கள் நபியவர்களிடம் “”எங்கு தேடி யும் கிடைக்கவில்லை. மாயமாக மறைந்து விட்டாரோ! என்னவோ! எனக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், “”அவர்தான் அல்லாஹ்வுடைய வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர் உங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை கற்றுக் கொடுக்க அல்லாஹ் அனுப்பினான்” எனக்  கூறினார்கள்.

அன்புள்ள வாசக சகோதர சகோதரிகளே! இந்நீண்ட நபிமொழி, ஹதீஃத், முஸ்லிம் ஹதீஃத் நூலின் முதல் அத்தியாயம், ஈமான்- இறைநம்பிக்கையின் முதல் நபிமொழியாக இமாம் முஸ்லிம்(ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். இந்நூலில் மட்டும் இந்நபிமொழி விரிவாகவோ சருக்கமாகவோ ஒருசில சொற்கள் கூடுதல், குறைவாகவோ சுமார் பன்னிரண்டு அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இதேபோல மற்ற புகாரி, அபூதாவூத், நஸயீ, திர்மிதி போன்ற மற்ற ஹதீஃத் நூல்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர் (ஸனது) களில்  இடம்  பெற்றுள்ளது.

மீண்டும் ஓரிரு தடவைகள் இதனை படியுங் கள்! ஆய்வு செய்யுங்கள். இந் நபிமொழியிலிருந்து நாம் பெறும் பாடம், படிப்பினை என்ன? இதிலிருந்து நாம் நம் அன்றாட வாழ்வுக்கான என்னென்ன சட்டங்கள், விதிமுறைகளை பெறலாம். மக்களினத்திற்கு இந்நபிமொழி காட்டும் ஒழுக்க நியதிகள் யாவை? என்பதை நம் அந்நஜாத்தின் இரு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்புங்கள். சிறந்த ஆய்வு நன்றியுடன் தொடரும் மாத இதழில் வெளி வரும்.       இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: