இஸ்லாம் காட்டித் தரும் நேர்மையான வியாபாரம்!

in 2017 செப்டம்பர்

– மண்டபம் M. அப்துல்காதிர்

இஸ்லாம் மனித வாழ்வின் வாழ்க்கை முறைகளையும் வியாபார தொடர்பான நிலைகளையும் தெளிவான முறையில் விளக்குகிறது. பொருளாதாரத்தை ஈட்டுகிறோம் என்று மார்க்கத்தின் சட்டத்திற்கு உட்படாமல், மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களை செய்து பொருள் ஈட்டுவதால் அந்த பொருளுக்கு அல்லாஹ் பரக்கத் இல்லாமல் ஆக்கிவிடுகிறான். வியாபாரம் செய்கிறோம் என்று பொய் பேசி விற்பதும், அதன் மூலம் நாம் அடைகின்ற லாபங்கள் வல்ல இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உட்பட்டதே!

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் என்று வல்ல இறைவன் கூறுகிறான். அல்குர்ஆன்: 2:42

மேலும் அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான் அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால் அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்து கொடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்கள் என்பதை மனதில் கொள்ளவில்லையா? மகத்தான ஒரு நாளுக்காக அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள் அது. ஆகவே நிச்சயமாக தீயோர்களின் பதிவேடும் ஸிஜ்ஜீனில் இருக்கிறது. அல்குர்ஆன் : 83:7

அல்லாஹ்வின் எச்சரிக்கை வசனம் :
இந்த வசனம் அனைத்து வகைகளையும் குறிக்கக் கூடியதே. கலப்படம், காலாவதியான உணவு மற்றும் மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் குறிக்கக் கூடியதே இந்த வசனத்தின் பொருளாகும்.

மேலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாவது :
அளவு நிறுவை அடிப்படையில் வியாபாரம் செய்பவர்களை நோக்கி நீங்கள் இரண்டு வி­யங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில் உங்களுக்கு முந்தைய சமுதாயத்தினர் அழிந்து போயினர். அறி: இப்னு அப்பாஸ் ரழி, நூல் : திர்மிதி.

முந்தைய சமுதாயத்தினர்கள் இத்தகைய தவறான காரியங்கள் செய்ததினால் அந்த சமுதாயமே அழிந்தே போய் உள்ளதாகவும், நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையின் மூலமும் அறிய முடிகிறது.

ஆதலால்தான் வியாபாரத்தில் பரக்கத் இருக்கிறது. ஆனால், அது நேர்மையாக இருக்க வேண்டும் என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். முந்தைய காலங்களில் நம் நாட்டுக்கு மார்க்கத்தை பரப்பிட எடுத்துரைக்க வந்த அரபிகளெல்லாம் வியாபாரிகளாகவே இருந்துள்ளனர். அவர்களின் வியாபாரத்தின் நேர்மையை யும், ஒழுக்கத்தையும் கண்டு முஸ்லிம்களாகிய வியாபாரிகள் நம்பிக்கைக்குரியவர்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு மக்கள்கள் வர்த்தகம் செய்துள்ளதாகவே வரலாறுகளில் கூறுவதுடன் அவர்களின் நேர்மையில் மார்க்கமும் வளர்ந்துள்ளது.

இன்னும் பல மக்கள் பேசிக் கொள்வது நமது காதில் தேனாக பாய்கிறது. பாய் கடையில் பொருள் வாங்கி வா! அது சரியாக இருக்கும் என்பதே! ஆக, இந்த நம்பிக்கை நம் சமுதாயத்தின் மீதும் வியாபாரிகளின் மீதும் என்றும் இருக்க வேண்டும் என்பதுவே முஸ்லிம்களுக்கு பெருமை சேர்க்கும்.
வல்ல இறைவன் அருள் புரிவானாகவும். ஆமீன்.

Previous post:

Next post: